கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 7,423 
 
 

துரைசாமிக்கு அவர் ஓய்வு பெறுவதையொட்டி பாராட்டு விழா நடத்துவது பற்றி அந்த அலுவலகத்தில் சுற்றறிக்கை வந்திருந்தது. முப்பத்தியெட்டு வருஷ நீண்ட சர்வீஸ். யாரைப் பிடித்து எவ்வளவு லஞ்சம் கொடுத்து சேர்ந்தாரோ அல்லது அந்தக் காலத்தில் வலிந்துக் கூப்பிட்டு கொடுத்தார்களோ. ஏறக்குறைய மொத்த சர்வீஸையும் இந்த அலுவலகத்திலேயே கழித்து விட்டார். இடையில் ஒரு நாலு வருஷம் தலைமை அலுவலகத்தில் இருந்திருக்கிறார். கேட்டால் முப்பத்தி நாலு வருசம் இதே ஆபீஸ்தான் இருந்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவாரு. அரசுப் பணியில் இப்படியெல்லாம் கூட முடியுமா?. முடிந்திருக்கிறதே. தினக்கூலியாக நுழைந்து, ப்யூனாகி, ஓ.ஏ. வாகி கடைசியாக இன்று ஓய்வு பெறுகிறார்.

இன்று மாலை ஊழியர்கள் கூட்டம் நடந்தது. தலைக்கு முந்நூறு ரூபாய் போட்டு விழா நடத்தலாம் என்று ஏகமனதாக முடிவு செய்யும் நேரம், ஆடிட் செக்சன் குப்புசாமி வில்லங்கத்துடன் எழுந்தான். அவனை எல்லோருக்கும் தெரியும். லஞ்சம் பெயராத எந்த வேலைகளையும் சட்டத்தின் துணை கொண்டு தடுத்திடுவான். பணம் கைக்கு வந்து விட்டால் மறு வினாடியே அதன் ஓட்டைகளை சாதகமாக்கிக் கொள்வான்.

“ஏற்கனவே ரெண்டு பேர் இந்த வருசத்தில ரிடையர் ஆயிருக்காங்க. ஆளுக்கு இருநூற்று முப்பதுதான் போட்டோம். இப்ப மட்டும் முந்நூறு ஏன்?. துரைசாமி எனக்கும் நண்பர்தான். அதுக்காக சட்ட சம்பிரதாயங்களை மீறக்கூடாது.”

“அட! இதுக்குக் கூட ஜீ.ஓ. பாஸ் பண்ணியிருக்காங்களாடா தாமு?.”—— ஏ3 பாண்டு நக்கலடித்தான். ஒரு சாரார் குப்புசாமிக்காக பரிந்துக் கொண்டு வந்தார்கள். வாதப் பிரதிவாதங்கள் சூடேறின. எங்கள் அலுவலகம் என்பது மாதிரி இந்தியா போல. முப்பதே பேர், அதற்குள் முப்பது விதமான பிரிவினைகள். அதிகாரிகளுக்கு ஒற்று வேலை செய்வதில் சமர்த்தர்கள். துரைசாமி பாவம் சங்கடமாக நெளிந்துக் கொண்டிருந்தார். அவரை வைத்துக் கொண்டே இப்படி பேசுவது அநாகரீகம். நான் எழுந்தேன்.

“துரைசாமி முப்பத்திநாலு வருசம் இதே ஆபீஸ்ல வாழ்ந்து முடிச்சவர். நம்மில் பலருடைய வயசும், அவருடைய சர்வீஸும் ஒண்ணு. பணி செய்ய ஆரம்பித்த காலத்திலிருந்து ஓய்வு பெறும் இன்னைக்கு வரை தன் பணியில் நேர்மையாக வாழ்ந்து முடித்தவர். அவருடைய பிள்ளைகள் எல்லாம் இன்று பெரிய பெரிய பதவியில் இருந்தாலும், அதன் கர்வம் துளியுமில்லாமல் பணிவும், சக ஊழியர்களின் சுக துக்கங்களில் அக்கறையும் கொண்டவர். ப்ளீஸ்! நாம் எதையும் வாதிட்டுக் கொண்டிருக்காமல் முடிவெடுப்போம். ஆளுக்கு முந்நூறு போட்டு சிறப்பாகச் செய்து அனுப்புவோம்.”

என்பேச்சு முத்தாய்ப்பாக அமைந்து விட, அத்துடன் ஏகமனதாக என் கருத்துக்கள் ஏற்கப்பட்டு விட்டன. மாலை சிற்றுண்டி, சந்தன மாலை, மரியாதை, போட்டோவுடன் கால் சவரன் அன்பளிப்பு என்று முடிவானது. இந்த பாராட்டு விழாவுக்கு சென்னையிலிருந்து இணை இயக்குனரும் வந்து கலந்துக் கொள்வதாக தகவல் வர, எல்லோரும் சுறுசுறுப்பானோம். இங்கே பக்கத்தில் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் அரசூர் என்ற குக்கிராமம்.அதுதான் இணை இயக்குனரின் சொந்த ஊர். ஒரே கல்லில் இரண்டல்ல மூன்று மாங்காய் அடிக்க ப்ளான் பண்ணிட்டார் போல. சொந்த ஊருக்கும் போனாப்பல, துரைசாமிக்கு பாராட்டு விழாவிலும் கலந்துக் கொண்டாப்பல, கூடவே ரெண்டொரு ரிஜிஸ்டரில் பார்வையிட்டாப்பல கையெழுத்து போட்டு விட்டு இன்ஸ்பெக்சன் என்று பயணப் படியையும் வாங்கிடுவார். துரைசாமி இப்போதிருக்கும் இயக்குனரிலிருந்து ஏறக்குறைய டிபார்ட்மெண்ட்டில் பல அதிகாரிகளிடம் வேலை செய்திருக்கிறார். அலுவலகத்தில் மட்டுமில்லை, விட்டில் எடுபிடியாக, அம்மாவுக்கு ஒத்தாசையாக வேலைகளை இழுத்துப் பொட்டுக் கொண்டு முகஞ்சுளிப்பு இல்லாமல் செய்வார்.

இன்று மாலை ஐந்து மணிக்கு விழா. இணை இயக்குனர் வருவதால் அலங்காரங்கள் கூடுதலாக இருந்தன. சிற்றுண்டி ஐட்டங்களும் குடுதலாக்கப் பட்டிருந்தன. எல்லோரும் விழா நடக்கவிருக்கும் ஹாலில் சேர்களை

ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். நான் என் அறையில் இந்த மாதத்தின் வரவு செலவுகளை சரிபார்த்து கையொப்பமிட்டுக் கொண்டிருந்தேன். வாசலில் நிழலாடியது. துரைசாமி. “உள்ளே வாய்யா!.” —-அவருக்கு கண்கள் உப்பலாய் தெரிந்தது. “என்ன அழுதீங்களா?.” —–குபுக்கென்று உடைந்து போய் முகத்தைப் பொத்திக் கொண்டார்.

“ஓகே…ஓகே… ரிலாக்ஸ். ரிடையர் ஆவறப்போ எல்லாரும் இப்படி உணர்ச்சி வசப்பட்டு அழுவறதுதான். துரைசாமி எல்லாருடைய வாழ்க்கையிலும் இது ஒரு காலகட்டம், கடந்துப் போய்தான் தீர வேண்டும். இதுவரைக்கும் இங்கே உழைச்சது பொதும். இனிமேல் உங்க குடும்பத்திற்காக உழையுங்கள். பேரன் பேத்திகளுடன் நேரத்தைச் செலவிடுங்க. உங்களைச் சுற்ரி இருப்பவர்களின் பிரச்சினைகளுக்கு முடிந்தவரைக்கும் உதவி செய்யுங்க. கண்டிப்பாய் செய்வீங்க எனக்குத் தெரியும். இங்கே தடம் மாறிப் போகவிருந்த எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை ஒரு நலம் விரும்பியாய் இருந்து புத்திமதி சொல்லி திருத்தியிருக்கீங்க. ஏன்?, நம் ஏ5 ரவியின் வேலையைக் கூட ஒத்தை பைசா செலவில்லாமல் ஆபீசர் கிட்ட கெஞ்சி நீங்கதான் வாங்கிக் கொடுத்திருக்கீங்க. எந்த பிரதிபலனுமில்லாமல். ரியலி யூ ஆர் கிரேட்.”

“ஐயய்யோ! சார்! பெருசா ஒண்ணுமில்ல சார். எங்க ஊருல வாழ்ந்துக் கெட்ட குடும்பம் அவங்களுடையது. ரவியின் அப்பா தர்மவான். பிறத்தியார் பசியை பொறுக்கமாட்டார். அந்தம்மா அவருக்கு மேல,புண்ணியவதி. இன்னைக்கு அந்த குடும்பம் ஏழ்மையில கெடக்குது. அதான் ஏதோ என்னால ஆனது. அப்ப பஞ்சாபகேச அய்யர்தான் இங்க ஆபீசர். ரொம்ப நேர்மையான மனுசன். அந்தக் குடும்பத்தைப் பத்தி சொல்லி டெம்ப்ரரியா சேர்த்து விட்டேன். விதை பொட்டது இன்னைக்கு விருட்சமா வளர்ந்திருக்கு, பட்டுப் போவல. நமக்கு அதானுங்க வேணும்?.”

சே! என்ன மனுஷ்ன் இவன்?. எதைப் பற்றியும் அலட்டிக்காமல். நேத்து இருநூற்று முப்பது ரூபாயா?,இல்லே முந்நூறு ரூபாயான்னு பேசிய ஆடிட் குப்புசாமியை முழுசா சப்போர்ட் பண்ணியவர்களில் A5 ரவி முக்கியமானவன் என்று தெரிந்தும் எப்படி இவர் அதை ஜீரணிக்கிறார்?.

“சார்! ஒரு விண்ணப்பம்.”

“அதென்ன விண்ணப்பம் கிண்ணப்பம்னு சும்மா சொல்லுங்க துரைசாமி.”

“இங்கே ஃபங்ஷன் முடிஞ்சதும் நீங்க எல்லாரும் அப்படியே என் வீட்டுக்கு வரணும். ஏதோ என்னால முடிஞ்சது சிம்பிளா டிபனுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.”——பவ்வியமாக வணங்கி நின்றார். ஆவலும், ஏக்கமும் கண்களில் தெரிகிறது.

“நம்ம ஆபீசர் கிட்ட சொல்லிட்டீங்களா?”

“உம்..அவரால வரமுடியாதாம். சாரி சொல்லிட்டார் சார். நீங்களும் அப்படி சொல்லிடாதீங்க. இது என் ஆசை சார். ரொம்ப நம்பிக்கையா ஏற்பாடு செஞ்ச்சிருக்கேன்.”.

“என்ன துரைசாமி?, ஓகே நிச்சயமா வர்றோம். எப்படி திரும்பி வர்றதுன்னுதான். நம்ம ஏ.டி.தான் வர்றாரே, அவர் வேனையே கேட்டுப் பார்ப்போமா?. போகவர வசதியாக இருக்கும்.”

“ஏ.டி. எனக்குன்னா கண்டிப்பாகத் தருவாரு சார். ரொம்ப சந்தோசம் சார். அப்புறம் முந்திரிபர்பி ஸ்வீட், சிப்ஸ்,இட்லி, வடைகறி,சட்னி, சாம்பார், வடை, ஊத்தப்பம். குடிக்கிறதுக்கு பெப்ஸி, ஃபன்டா. போதுமில்லையா சார்?.”—ஒவ்வொன்றையும் பெருமையுடன் சொல்லிக் கொண்டே வந்தார்.

எல்லோரும் ஏ.டி.யை எதிர்பார்த்து வெளிவாசலில் நிற்கிறோம். விதவிதமான நிறங்களில் தோரணங்கள், மலர் மாலைகள், சால்வைகள், எல்லாமே ஏ.டி.க்குத்தான். நான் துரைசாமிக்காக என்று ஜெயகாந்தனின் தொகுப்பு ஒன்றை வாங்கி வைத்திருந்தேன். இன்னொரு முகத்தில் அவர் ஒரு நல்ல வாசகர் என்று தெரியும். மூன்று மணிக்கெல்லாம் ஏ.டி.யின் வேன் வந்து விட்டது. எல்லோரும் ஓடினார்கள். ஒவ்வொருத்தரும் அவரவர்கள் தகுதிக்கு ஏற்ப மாலை, சால்வை, பழம், ஸ்வீட்போன்ற அன்பளிப்பு பொருட்களை வைத்திருந்தார்கள். எங்கள் அதிகாரி இணை இயக்குனருக்குப் போடும் முதல் மாலை தனதாய் இருக்க வேண்டுமென்ற அவசரத்தில் மாலையுடன் ஓடினார். சே! அதற்குள் ஏ6 கதிரேசன் முந்திக் கொண்டு தன் சந்தன மாலையைப் போட்டுவிட, ஆபீசர் கடுகடுவென்று முறைத்தார். முதல் மரியாதை யாருக்கு?. நாளைக்கு இருக்கிறது கதிரேசனுக்கு ஆப்பு. அவருடைய பி.ஆர்..துருவித் துருவி சோதிக்கப் படும். தொட்ட்துக்கெல்லாம் மெமொ கிடைக்கும். பயணப்படி பில் அநியாயத்துக்கு சுழிக்கப்படும். தற்செயல் விடுப்பு கூட சுலபத்தில் கிடைக்காது.

எல்லோரும் ஐயா…ஐயா! என்று ஓடி ஓடி குழைந்தார்கள். எனக்கு இந்தக் கலைகள் பிடிப்பதில்லை. ஒரு ஓரமாய் நின்று பணிவாய் வணக்கம் மட்டும் சொன்னேன். ஏ.டி. சுற்றும்முற்றும் தேடிவிட்டு துரைசாமியைக் கேட்க, துரைசாமி!…துரைசாமி!…என்று சிலர் உள்ளே ஓடினார்கள். உள் அறையில் துரைசாமி ஏ.டி. வந்ததே தெரியாமல் தலை கவிழ்ந்து உட்கார்ந்துக் கிடந்தார். உள்ளே துக்கம் அலையடித்துக் கொண்டிருக்கிறது. அஃப்கோர்ஸ் முப்பத்தியெட்டு வருஷ அலுவலக வாழ்க்கை இன்று மாலை ஐந்து மணியுடன் முடிந்து போகிறது. நாளைக்கு இவர் யாரோ, அவர்கள் யாரோ. உள்ளே நுழைவதற்குக் கூட அனுமதி பெற்றாக வேண்டும். வலியின் தீட்சண்யம் அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். ஏ.டி.யே துரைசாமியை தேடிக் கொண்டு வந்து விட்டார். நானும் கூடவே சென்றேன். “துரைசாமி….!.”— ஏ.டி.யின் குரைலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவரின் கையை ஏ.டி. பற்றிக் கொண்டார். “ஐயா….!”—–துரைசாமி பொலபொலவென்று கண்ணீரை உதிர்த்து விட்டார். சுற்றிலும் சக ஊழியர்கள். ஏ.டி. அவர்களை கடுகடுவென்று பார்த்தார்

“எல்லாரும் இங்க ஏன்யா நிக்கிறீங்க?. ஹாலுக்குப் போங்க. உம்..உம்..”—ஏ.டி. யின் உறுமலில் கும்பல் சிதறியது. கிளம்பிய என்னை மட்டும் ஏனோ தடுத்து நிறுத்திக் கொண்டார்.

“துரைசாமி! அழாதீங்க. சிறப்பா சர்வீஸ் பண்ணீயிருக்கீங்க. இங்க வேலை செஞ்ச ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் உங்களுடைய உழைப்பும் ஒத்தாசைகளும் இருக்கு. உன்னை கும்பிட்றேன் துரைசாமி. எதையும் நான் மறக்கல.”

“ ஐயா…!ஐயா…!..”—துரைசாமி பதட்டத்துடன் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“துரைசாமி! ஏதோ முகஸ்துதிக்காகச் சொல்ற வார்த்தை இல்லை இது. என் குடும்பமே உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்குது. அதனாலதான் உனக்கு பாராட்டுவிழான்னதும் ஓடி வந்தேன். டீன் ஏஜ் பருவத்தில தன்னுடைய வாழ்க்கையையே தொலைக்க இருந்தாள்: என் மகள். அவளை மீட்க ஆட்களோடு போயி சண்டை போட்டு அதனால அடிவாங்கி, தோள்பட்டையில மூட்டு விலகி ஒரு மாசம் படுத்த படுக்கையாய் கிடந்தியேப்பா. இன்னைக்கு நல்லா வாழறா. எல்லாம் நீ கொடுத்தது.”

“ஐயா!த்சு…ச்சூ!…எங்க என்ன பேசறீங்க?.உஷ்!.—–துரைசாமி முகத்தில் அச்சம் பரவ, கண்களால் என்னைக் காட்டி எச்சரிக்கை செய்தார். அட! உண்மை ஊழியன்.

“பரவாயில்லை. இவருக்கு எல்லாம் தெரியும். உன்னைப் பொலத்தான் இவரும் எனக்கு.”

ஏ.டி. எல்லோரும் கைத்தட்ட துரைசாமியின் கையைப் பற்றி மேடைக்கு அழைத்துச் சென்றார். எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நல்ல மனுஷனுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய பராட்டுதல்கள். மேடையில் பிரதானமாய் உட்கார வைக்கப் பட்டார். விழா ஆரம்பித்தது. ஒவ்வொருத்தராய் வந்து சால்வை போர்த்தி, கைகுலுக்கி, அவருடைய நல்லியல்புகளை பாராட்டிப் பேசி……ஏ5 ரவி மேடையில் அவருடைய காலில் விழுந்து கும்பிட்டு விட்டு இறங்கினான். துரைசாமி உணர்ச்சி மிகுதியில் மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தார். எல்லோரும் பேசி முடித்து, மாலைகள் போட்டு போட்டோ எடுத்துக் கொண்டு, ஏ.டி.யின் கரங்களால் அவருக்கு மோதிரம் அணிவித்து, சிற்றுண்டி முடிக்க மாலை ஆறரை ஆகிவிட்டது. இடையில் துரைசாமியின் ஆசையை ஏ.டி.யிடம் சொன்னேன். எங்க அதிகாரியும் தன் பங்குக்கு துரைசாமியை அனுப்பி வைக்க ஏ.டி.யின் வேனை ஒரு இரண்டு மணி நேரத்துக்கு கொடுத்து உதவுமாறு சிபாரிசு செய்தார்.

“அப்படியா?. அடடா. நாளைக்கு என் மச்சான் பிள்ளைக்குக் கல்யாணம்யா. காலை 4-30—6-00 முகூர்த்தம். சொந்த மச்சான், பெண் அழைப்புக்குப் போவலேன்னா தப்பாயிரும். சரி துரைசாமிக்கு இல்லாத வேனா?. ஓகே! நான் சைக்கிளில் போய்க்கிறேன். ஆறு மணி பஸ் விட்டால், இதுக்கப்புறம் பஸ் கிடையாது. ஓகே! சைக்கிள் எனக்குப் பழக்கந்தான். என்ன எட்டு கிலோமீட்டர்னா நுரை தள்ளிடும். பரவாயில்லை சமாளிச்சிக்கிறேன்.”

“ஐயய்யோ! ஐயா…ஐயா…”—துரைசாமி பதறிப் போயி குறுக்கிட்டார். துரைசாமியைப் புரிந்தே போட்ட அஸ்திரம் இது. மூணு மாங்காய் அடிச்சிட்டாருன்னு நினைச்சேன். இல்லை நாலு மாங்காய்கள். மச்சான் விட்டுக் கல்யாணமும் ஒண்ணு.

“எங்க ஊர் இங்கிருந்து நாலு கிலோமிட்டர்தான் அய்யா!. டவுன் பஸ் இருக்குது. கார்ல போவணும், வேன்ல பொவணும்னு எல்லாம் எனக்கு ஆசை இல்லய்யா. இத்தனை நாள் எங்கூட வேலை செஞ்சவங்க எல்லாரும் கூடவே என் வீட்டுக்கு வந்து ஊர் பார்க்க என்னை விட்டு விட்டு, என் வீட்டில சின்னதா ஒரு சிற்றுண்டி. சாப்பிட்டு விட்டு திரும்பணும். இதான் என் ஆசைய்யா.”—–அப்பொது மற்ற ஊழியர்கள் குறுக்கிட்டார்கள்.

“ஐயா! துரைசாமி ஊருக்கு அரை மணிக்கு ஒரு பஸ் இருக்கு. நாங்க எல்லாரும் கூடவே போயி, ஜாம் ஜாம்னு விட்டுட்டு வர்றோம். நாங்க கவலைப் படாம கல்யாணத்துக்குக் கிளம்புங்க.”

“அப்படீன்றீங்க?. என்ன துரைசாமி! வரட்டா?. உடம்பைப் பார்த்துக்கோ. என்ன உதவின்னாலும் தயங்காம வா. நானிருக்கேன்.”

வேன் கிளம்பியது. துரைசாமி பணிவுடன் வணங்கி வழியனுப்பி வைத்தார். எல்லாம் இனிதே முடிந்தது.. அதிகாரி துரைசாமியை உட்கார வைத்து சற்று நேரம் இனிமையுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு, பணமாகி வந்திருந்த நிலுவை ஈட்டிய விடுப்பு பணத்தையும், பிராவிடெண்ட் ஃபண்டு பணத்தையும் அவருக்குப் பட்டுவாடா செய்து விட்டு வழியனுப்பி வைத்தார். பாராட்டுகளில் மனுஷன் உற்சாகமாய் இருந்தார். ஏழுமணி பஸ்ஸுக்குக் கிளம்பலாம் என்று கிளம்பி வெளியில் வந்தோம். அதிர்ச்சி. துரைசாமி ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்து விழித்தார். ஜாம் ஜாம்னு போய் விட்டுட்டு வர்றோம்னு சொன்னவர்களில் முக்கால்வாசி பேர் மாயமாகி விட்டிருந்தனர்.

“என்னாச்சி?.” “தெரியல சார்! எப்ப போய்வர்றதுன்னு பேசிக்கிட்டாங்க. அப்புறம் என்னமோ சொல்லி சிரிச்சிக்கிட்டே போயிட்டாங்க.”—டெஸ்பேட்ச் ஆறுமுகம் சொன்னான்.

வெற்றிலை குதப்பி எச்சிலை துப்பப் போவது போல வெளியே போய் அப்படியே அந்தர்தியானமானவர்கள் சிலர். புகைப்பிடிக்க வெளியே போய் அப்படியே புகையாய் மறைந்தவர்கள் சிலர். சே!. இறுதியில் மிஞ்சியவர்களை எண்ணினேன். முப்பது பேர் வெலை செய்யும் இடத்தில், என்னையும், துரைசாமியையும் சேர்த்து எட்டு பேர். சே! என்ன மனுஷங்க இவங்க?. கிளம்பும் போது குப்புசாமியும் ஆறுமுகமும் ஓடி வந்தார்கள். எனக்குத் தெரியும் இவர்களும் வரப்போறதில்லை.

“துரைசாமி சார்! வெரி சாரி. எங்களுக்கு ஒரு அவசர வேலை இருக்கு. இன்னொரு நாள் கண்டிப்பாய் வர்றோம். தப்பாய் நினைக்காதீங்க.”

துரைசாமியின் முகத்தில் சந்தோஷம் துப்புரவாக வடிந்து விட்டது. எதுவும் பேசாமல் நடந்தார். பஸ்ஸில் கூட யாருடனும் பேசவில்லை. உள்ளே உடைந்து போயிருப்பார். எனக்குத்தான் அவரைத் தேற்ற வழி தெரியவில்லை. இரண்டாவது கிலோமீட்டரில் மிஞ்சியிருந்த ஆறில் இரண்டு பேர் இறங்கிக் கொண்டார்கள். விட்டில் குழ்ந்தைக்கு ஜுரமாம், டாக்டர் கிட்ட போகணுமாம். சிறுவிடுப்பு காரணம் மாதிரி அடுத்தவன் பாட்டி செத்துட்டாள்னு சொல்லப் போறானோ?. துரைசாமிக்காகத்தான் வருகிறார்கள் என்றிருந்தேன். இப்போதுதான் புரிகிறது. இவர்கள் ஊர் வழியிலேயே இருக்கு. பாவம் அங்கே தடபுடலாய் விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு துரைசாமியோடு சேர்த்து நாலு பேர் போய் நின்றால்..?. எத்தனை அவமானம்?. துரைசாமியின் ஊர் எல்லையில் பஸ் எங்களைத் துப்பிவிட்டு நகர்ந்தது. அவருடைய கிராமத்துக்குப் போக ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும். பாண்டியன் ஆகிய நான், துரைசாமி, ப்யூன் கண்ணன், ஏ2 செக்சன் ஆல்பின் ஆக நாலேபேர். தெய்வம் மாதிரி என்று துரைசாமியின் காலில் விழுந்து கும்பிட்ட ரவி கூட வரவில்லை. என்னுள்ளே குப்புசாமியும், ஆறுமுகமும் ரகசியமாய் பேசிச் சிரித்த அமிலச் சொற்கள் வந்து போயின. தாங்க முடியாத துக்கத்திலிருக்கும் துரைசாமியைக் கிளறி, ஆற்றுப் படுத்தி சகஜ நிலைக்குக் கொண்டு வரவேண்டும். அவமானத்திலும், கோபத்திலும் அவருடைய முகம் சூம்பியிருந்தது.

“இந்த நாளை எப்படியெல்லாம் கற்பனை செஞ்சி வெச்சிருந்தேன் தெரியுங்களா?. ஆபீஸ்…ஆபீஸ்னு முப்பத்தியெட்டு வருசம் சர்வீஸ் பண்ணதுக்கு, அவங்க கூட்டமா வந்து எனக்குத் தர்ற மரியாதையைப் பாருங்கடான்னு என் புள்ளைங்களை வரவழிச்சிருக்கேன் சார். இப்படி பண்ணிட்டாங்களே?. ஆபீஸே தெரண்டு வரப் போவுதுன்னு வீடியோ, போட்டோன்னு புள்ளைங்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க.”

நான் சத்தமாய் சிரித்தேன். மற்றவர்கள் புரியாமல் என்னைப் பார்த்தார்கள்.

“அட மட துரைசாமியே! அவங்க ஏன் வரலேன்னு இன்னுமா புரியல?. இல்லே நடிக்கிறியா?. இந்த முப்பத்தியெட்டு வருஷ சர்வீஸ்ல இந்த மனுஷங்களைப் பத்தி என்னதான்யா தெரிஞ்சி வெச்சிருக்கே?. ரவி உன்னை தெய்வமாய் நெனைச்சி காலைத் தொட்டு கும்பிட்டான்னு பார்த்தியா?. இல்லய்யா நடிச்சான். என் பொண்ணு வாழறதே உன்னாலதான். நன்றிக்கடன் பட்டிருக்கேன், துரைசாமிக்கு இல்லாத வேனா?. இப்படி திருப்பித் திருப்பி வேப்பிலை அடிச்சே கவுத்துட்டார் பாரு அந்த பெரிய மனுசன். ஒரு ரெண்டு மணி நேரம் உனக்காக தன் வேனை கொடுக்கக் கூட அவர் தயாரில்லை. விடுய்யா. வராத அவங்களை நெனைக்கிறதை விட, உனக்காக வந்திருக்கிறவங்களைப் பாரு, எங்களைக் கவனி, சாப்பாடு போடு, போட்டோ எடு வீடியோவில் கவர் பண்ணு.”

துரைசாமி நகராமல் நின்றார். “ஐயா! ஏன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. சொல்லுங்க ஏன் வரல?. என்ன தப்பு செஞ்சிட்டேன்னு புரியல. எல்லாருக்கும் ஒத்தாசையாகத்தானே வாழ்ந்தேன்?. சொல்லுங்க. என்ன காரணம்?.”

“இப்பத்தான் ஆபீஸ் பார்ட்டியில சாப்பிட்டோம், மறுபடியும் துரைசாமி வீட்டில சாப்பிடணும்னா வயிறு கொள்ளாதுன்னு அவாய்ட் பண்ணியிருக்கலாம். விட்ரு.” “இல்லை வேற எதுவோ காரணம் இருக்கு மறைக்கறீங்க..”

“அவங்களுக்கு மனசில்லேன்னு வெச்சிக்கோயேன்.”

“அதான் ஏன்?.”

இந்த சமூகத்தின் மீது எழுந்த என் ஆத்திரம், துக்கமாக வெளிப்பட்டது. குப்புசாமியும்,ஆறுமுகமும் கக்கிய அமில வார்த்தைகளில் மனசு வலித்தது. துரைசாமியின் முப்பத்தியெட்டு வருஷ நட்பு பொய்யாய் போனது. பணிபுரிந்த சேவை பொய்யாய் போனது, ரவிக்கு வலிந்து சென்று வேலை வாங்கிக் கொடுத்தாரே அந்த உதவிகூட பொய்யாய் போனது, தொலைந்து போகவிருந்த இளம் பெண்ணின் வாழ்க்கையை மீட்டுக் கொடுத்து அதன் பொருட்டு உதைபட்டாரே அந்த உதவி பொய்யாய் போனது. ச்சே! ஆனால் இது மட்டுமே மெய்யாய் நின்று அவரை கிழிக்கிறதே த்தூ!

“சொல்லுங்க சார் ஏன்?.” —- இவருக்கு என்ன பதில் சொல்வது?. மனசு கனத்துக் கொள்கிகிறது..

“நீ என்ன சாதிய்யா?.”

– கலைஞர் தொலைக் காட்சியில் ஒன்றே சொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் திரு.சுப வீரபாண்டியன் அவர்களால் அலசப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *