மெதுவாகத் திறந்து அரைக்கண்ணால் பார்த்தேன்.. அவன் இன்னமும் என் எதிரில்தான் நின்றுக் கொண்டிருக்கிறான்..ஆனால் சற்று தள்ளி.. இது நடுநிசி நேரம். பவுர்ணமி நிலவு பால்போல் காய்கிறது. வந்திருப்பவன் திருடன்தான். அந்த நினைப்பே எனக்கு மூச்சடைத்தது. கூட யாரும் இல்லை. தனியாகத்தான் வந்திருக்கிறான் போல. படு குள்ளன்,நாலடி உயரம்தான் இருப்பான், ஒல்லிப்பிச்சான்வேற. நான் இருக்கிறதுக்கு சுலபமாய் அவனை சாய்த்துவிடலாம். ஆனால் என்னால் முடியாது சாமீ.. தைரியம் பத்தாது. கையில் ஆயுதம் இல்லாமலா வந்திருப்பான்?..நமக்கு பூஞ்சை உடம்புசார்.இதற்கெல்லாம் பழக்கப்பட்டதில்லை. இப்பவே கைகள் என்னமாய் உதறுகின்றன பாருங்கள். அதீதமான அட்ரினலின் சுரப்பில், மூச்சடைக்கிறது, வியர்வையில் உள்ளாடைகள் தொப்பலாய் நனைந்து விட்டன.
உரக்க கூக்குரல் போட்டு ஊரைக் கூட்டிவிடலாம் என்றால் நோ சான்ஸ்.இது அத்துவானக் காடு. இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் காலூன்றிக் கொண்டிருந்தன.காதில் விழுந்தாலும், என்னவோ ஏதோவென்று இரட்டைத்தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளும் மனிதநேய ஜீவன்கள்தான் இங்கிருப்பவர்கள். சரி எழுந்து ஒரே பாய்ச்சலாய் ஓடிவிடலாம்தானே?. ஆனால் அதற்கும் சான்ஸ் இல்லை. படுத்திருப்பது மொட்டை மாடியில். எழுந்தோடி,உள் நிக்கர் ஜேபியிலிருக்கும் சாவியை எடுத்து மாடிக்கதவின் பூட்டில் நுழைத்து, திறந்து,ஊஹும்! அதற்குள் சதக்…சதக்…ஐயோ! எனக்கு வாய்ச்ச மூதேவியின் பேச்சைக் கேட்டு, இங்க வந்து இடம் வாங்கி வீட்டைக் கட்டினேன் பாரு. புரோக்கர் பாவி தண்ணீர், இளநீரு மாதிரின்னு சொன்னானே. மினரல் வாட்டரை சொல்லியிருக்கான்னு அப்புறம் தானே தெரியுது.
இப்படியே எவ்வளவு நேரம்தான் அசையாம கிடக்கிறது?.. எதிர்ப்பில்லாததினால் குடும்ப சகிதமாய் கொசுக்கள் வந்து சாவகாசமாய் தத்தம் லஞ்ச்சை முடித்துவிட்டு போகிறதுகள்..இனிமேல் முடியாது. அவனை சமாளிக்கும் திட்டமேதுமின்றி விலுக்கென்று எழுந்தேன்.
“டாய்! டாய்!..யார்றா நீ?. டாய்!.”
அவன்..அவன்..என்னை நோக்கி ஓடி வருகிறான்.
“ஐயய்யோ! திருடன்…திருடன்…டாய்!…டாய்!…வாணாம்….வாணாம்…என்னை ஒண்ணுஞ்செஞ்சிடாதே. இந்தா சாவி, வேணுன்றத போய் எடுத்துக்கோ. என்னை விட்ரு.”
ஆனால் அவன் ஓடிவந்து ஒரே அமுக்கு., கோழிக்குஞ்சு போல என்னை அமுக்கிப் பிடித்துக் கொண்டான். இந்த ஒல்லிப்பிச்சான் குள்ளனுக்குள்ளே இவ்வளவு பலமா?. அப்படி இப்படி ஒரு இஞ்ச் அசையமுடியவில்லை. பயத்தில் நான் போட்ட கூச்சல் எப்படியும் நூறு டெஸிபல்களைத் தாண்டியிருக்கும். சட்டென்று என் பிடரியில் கைவைத்தான். என்ன செய்தான்னு தெரியவில்லை.பின்பக்கம் எங்கியோ ஒரு விரலால் அழுத்தியமாதிரி உணர்ந்தேன்.அவ்வளவுதான், கண்ணுக்குள் பளீரென்று ஒரு மின்னல்கீற்று. உடனே நாக்கு இழுத்துக் கொண்டது. பேச்சு வரவில்லை .உஷ்..உஷ்..உஷ்!.. .காற்றுதான் வருகிறது. என் வலிமையை எல்லாம் திரட்டி, அவனை அடிக்க முயற்சித்தேன். ஊஹும்! தன் ஒரே கையால் என்னை செயலிழக்கச் செய்துவிட்டான்..வேறு வழியில்லை. அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினேன். படுபாவி ஒரு ரியாக்ஷனுமின்றி கல்லாட்டம் நிற்கிறான் பார். ஒரு வேளை ஊமையோ?. இப்போதுதான் அவனை மிக நெருக்கத்தில் பார்க்கிறேன்.ஆ! என்னால் நம்பமுடியவில்லை.ஐயய்யோ! என்ன இது?.ஆள்மாதிரியும் இருக்கு, அப்படி இல்லாதது மாதிரியும் இருக்கு.சம்திங் ஸ்ட்ரேஞ். மேலே புடைத்திராமல் கன்னத்துடன் ஒட்டியபடி சின்னதாய், காதுகள். தலை?,சற்று சராசரிக்கு சற்று பெருசு. முன்நெற்றி புடைத்திருக்க, சற்று விகாரமாய் இருந்தான். ஒருவேளை ரேடியேஷன் பாதிப்பில் பிறந்தவனோ?,பொக்ரேன் பக்கத்து ஆளோ?.
“டாய்! நீ யாரு மேன்?.
அவன் முதன்முறையாக வாயைத் திறந்தான்.
”ம்..ம்..உங்களை பேச்சில் கண்டுபிடித்து விட்டேன். நீங்கள் தமிழ்தானே?.”
உஷ்..உஷ்..உஷ்…வாயைத் திறந்தால் காத்துதான் வருகிறது.இப்போது அவன் என்னை நெருங்கி, என் பிடரியை நீவி விட்டு நறுக்கென்று கிள்ளினான்.. ஒரு நிமிடம் கீழ்மேலாய் தட்டாமாலை சுற்றியது.
“அடேய்!…டாய்..”— ஆஹா எனக்கு பேச்சு வந்துவிட்டது.. ஐயய்யோ இவன் வர்மம் தெரிஞ்ச ஆளாட்டமிருக்குடா சாமீ. இவன்தானா, இதுவா?., வாய் உலர்ந்து விட்டது.
“ ப்ளீஸ்! என்னை விட்ரு…ப்ளீஸ்!.
“நான் கேட்டதற்கு உங்கள் பதில்?.”
“ஆமாய்யா…ஆமாம். தமிழ்தான். அதுக்கு என்ன இப்போ.”
“ம்..ம்.. உம்! தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம், என்று இருந்ததாமே. அது உங்க மொழிக்குத்தானே?..”
எனக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“அட பாதகா! இப்படி நடுராத்திரியில வந்து, என்னை எழுப்பி, இப்படி குண் டக்க மண்டக்கன்னு கேக்கிறீயே, நீ யாரு மேன்?. கமான் டெல்மி ஹூஆர்யூ?,சொல்றா. ஒய் யூ கேம் ஹியர்?. சொல்றா.”
“என்ன…என்ன..முரண்பாடு ? நீங்களெல்லாம் தமிழ்மொழி என்று சொல்லிவிட்டு இப்படி வேற்று மொழி கலந்துதான் பேசுவீர்களோ?.”—–அடி நச்சென்று இறங்கியது.
“சரி…சரி..உனக்கு என்ன வேண்டும்?.”
“என்னிடம் பயம் வேண்டாம்,நட்புடன் வந்திருக்கிறேன்.”
“ஒரு நிமிஷம் இரு.”.—ப்ளாக்கியின் நினைவு வர,கதவைத் திறந்துக் கொண்டு கீழே ஓடினேன். போர்டிகோவுக்கு விரைய, ஐயோ!..ப்ளாக்கீ!…ப்ளாக்கீ!…ப்ளாக்கி செத்துக் கிடந்தது. என் செல்ல நாய். டாபர்மேன் ரகம். இடுப்பு உசரத்துக்கு சும்மா கிண்ணென்று நிற்கும்,பாய்ந்தால் கொத்து சதையை தனியே எடுத்துவிடும்.ஐயோ ப்ளாக்கி! தரையில் ரத்தம் குட்டையாய் உறைந்திருக்க,மூளை வெளியே வந்துவிட்டிருந்தது.
“பாவி!..படுபாவி! என் ப்ளாக்கிய ஏண்டா கொன்னே?. சொல்றா கிராதகா. குழந்தை மாதிரி வளர்த்தேனே. டாய்! இந்த பாவம் உன்னை சும்மா விடாதுடா..”
“மன்னித்துக் கொள்ளுங்கள்.அதிகம் சத்தம் போட்டது.”
எனக்கு உள்ளே லேசாக கிலி பரவியது.. ஒரு கொலையை என்ன சாதாரணமாய் சொல்றான்?.
“போவட்டும், இப்ப சொல்லு. பார்த்தா நீ திருட வந்தவன் மாதிரி தெரியல. சொல்லு யார் நீ?. எதுக்காக வந்திருக்கிற? மொதல்ல எப்பிடி உள்ளே வந்தே?.”
“மேலேயிருந்து.”
“அப்பிடீன்னா?.”
மேலே கைகாட்டி சிரிக்கிறான். சரியில்லையே. ஒரு வேளை பைத்தியமோ?..ஐயய்யோ தனியா மாட்டிக்கிட்டேனே .வேர்த்துக் கொட்டியது.
“ஐயா! தயவுசெய்து சரியாச் சொல்லு. கீழே எல்லாம் பூட்டியது பூட்டியபடி இருக்க எப்படி மேலே வந்தே?.”
“தாமதியுங்கள். உங்களுக்குப் புரியும்படி சொல்ல வார்த்தைகளை அமைத்துக் கொள்ளுகிறேன்..”—-சற்று நேரம் கண்மூடியிருந்தான்.
“ம்…ம்…சொல்கிறேன்.நான் ப்யூப்பிஸ் நட்சத்திரக் கூட்டத்திலிருந்து வருகிறேன்..”
“என்ன…என்ன?.நட்சத்திரக் கூட்டமா?. அப்ப நீ ஈ-.டி. மாதிரி வேற்றுகிரக ஜீவராசியா?”—என் வாய் உலர்ந்துவிட்டது.
“ஆமாம். உங்களின் கணிதப்படி 90 ஒளியாண்டுகள் தூரம்.”
“ டுபாக்கூரு! எனக்கும் அஸ்ட்ரானமி கொஞ்சம் தெரியும். சும்மா பீலா விடாதே. இந்த அண்டத்தில் இன்னொரு பூமி கிடையாது.”
“ டுபாக்கூரு, பீலா, அர்த்தம் தெரியவில்லை. சரி உங்களுகோ, உங்கள் இனத்திற்கோ உங்கள் சூரிய குடும்பத்தில் இருப்பதாவது முழுசாத் தெரியுமா?.”
“வோய் நாட்?”
“அப்ப சொல்லுங்கள்.உறுதியாய் சொல்லுங்கள்,செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா?.”
“ அதன் மேற்புறத்தில் ஒரு காலத்தில் கால்வாய்கள் இருந்தன என்று சொல்லும்படி தண்ணீர் ஓடிய..”
“ஒரு வார்த்தையில், இருக்கிறது இல்லை.”
“அது…அது…”
“தெரியாதில்லையா? அப்புறம் மற்ற நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?. நம்புங்கள் எங்கள் பூமியின் பெயர் கரகி—5. ப்யூப்பிஸ் நட்சத்திரக் கூட்டத்தில் ஒன்றை மையமாக வைத்து சுற்றும் எங்கள் பூமியின் குறுக்களவு—25818 கிலோ மீட்டர்கள். எங்களின் ஒரு நாள் என்பது 33 மணி நேரமாகும். ஒரு வருஷம் என்பது 501 நாட்களைக் கொண்டது. பருவகாலங்கள் உங்களுடையதில் 1.37 மடங்கு அதிகம்.. விடுபடு வேகம்-15.3..கிலோமீட்டர்/ செகண்டு. போதுமா?.”
எனக்கு தலை சுற்றியது. இந்த நடு ராத்திரியில் எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?. இருப்பினும் அவன் / அது சொன்னது எதுவும் உண்மையாக என் மனசுக்குப் படவில்லை. என்னவோ ப்ளானோடுதான் வந்திருக்கிறது..
“ஆமா வேற்றுகிரக ஜீவராசின்றீயே, எங்களைப் போலவே இருக்கியே அது எப்படி? இது உனக்கே அபத்தமா படல?.”
“என்ன அபத்தம்? உங்கள் பூமியைப் போலவே சீதோஷ்ணம், வளிமண்டலம்,மண்ணின் தன்மை அமையுமானால், உயிர்கள் தோற்றமும் இந்த பூமியில் நடந்த அதே வரிசையில் அமையலாம்தானே?. மீத்தேன்,அமோனியா,கர்பண்டையாக்ஸைடு சேர்க்கையில் தொடங்கி, ஒரு சில சிக்கலான கட்டங்களைக் கடந்து,, பாலிமர்களாகி, அதிலிருந்து டி.என்.ஏ, ஆர்.என்.ஏ. உயிர்சத்துக்கள் தோன்றி, பின் ஒரு சரியான தருணத்தில் ஒரு செல் உயிரினங்கள் தோன்றி, அப்புறம் அதன் பரிணாம வளர்ச்சியின் இறுதியில் மனிதன். சரியா?.. இந்த வரிசைப்படியேதான் எங்கள் இனத்திலும் நடந்தது.”
இது பெரிய ஆள்தான். ரொம்ப படிப்ஸ் போல. நிறைய விஷயம் தெரிஞ்சி வெச்சிருக்கு… நம்பறமாதிரி சரடு வேற விடுதே…
“ஓகே! அப்ப நீ எங்களின் டிட்டோ என்கிறாய்.”
”இல்லை நீங்கள்தான் எங்களின் நகல். உங்களுக்கு மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே எங்கள் இனம் அங்கே தோன்றிவிட்டது. சாதி,மதங்களின் பெயரால் நீங்கள் துவேஷங்களை வளர்த்துக் கொண்டு, சதா சண்டையிட்டு அழிந்துப் போவதற்கும் உங்களின் அறிவுக் குறைவே காரணம்.”
“ஓஹோ! நீங்கள்லாம் மகாத்மாக்கள், உங்களுக்குள் சண்டை என்பதே கிடையாது.அப்பிராணிகள். அப்படித்தானே?. த்தூ! வாயைப் பொத்து. என் ப்ளாக்கி சாவு ஒண்ணே போதும் நீ எவ்வளவு வன்முறை ஜந்துன்னு சொல்ல. என்ன கொடூரம்?.”
“நண்பரே! எங்களிடம் வன்முறை இல்லாமலில்லை. தினந்தினம் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது, எங்களுக்கும் இயந்திரங்களுக்கும். அதற்கு முடிவு கட்டவே இங்கே வந்திருக்கிறேன். சுயமாய் சிந்திக்கவும், கற்றுக் கொள்ளவும் தெரிந்த இயந்திர மனிதர்களை படைத்துவிட்டு திணறிக் கொண்டிருக்கிறோம். மாலிக்யூலர் கம்ப்யூட்டிங்கில் பல படிகளைக் கடந்து, பாரலல் ப்ராஸஸிங், சூப்பர் சென்ஸிங் என்று அவைகளை அஷ்டாவதானிகளாக ஆக்கிவிட்டோம். இன்றைய தேதியில் அவைகள் எவராலும் அடக்கமுடியாதபடியான மாபெரும் சக்திகள், தோற்றோடிக் கொண்டிருக்கின்றோம்..”
நான் அதை நக்கலாய் பார்த்து சிரித்தேன்.
“என்னா கற்பனை வளம் உனக்கு?.எங்க தமிழை கத்துக்கிட்டு பேசறே சரி. மீத்தேன், டி.என். ஏ, ஆர்.என்.ஏ., பாரலல் ப்ராஸஸிங்…இதெல்லாம் இங்லீஷ் மொழி. ,தமிழ் இல்லை. எப்படித் தெரியுமாம்.?.”
“தமிழ் உட்பட எட்டு மொழிகளின் அகராதிகள், கலைச்சொற்கள், லேட்டஸ்ட் என்ஸைக்ளோபீடியா வரை எல்லாம் இங்கே பாடமாகி இருக்கு.”—-மார்பைத் தொட்டு காட்டினான். ஊஹும்!, இது சரியில்லை. என்னவோ தப்பு இருக்கு. பாடமாயிருக்குன்னு மாரைக் காட்டுதே. அங்கியா மூளை இருக்கு.?.
“ இன்னும் நம்பிக்கை வரவில்லையா?..”—வேகமாக வந்து என்னை கட்டிப் பிடித்தது…
“ஏய்!…ஏய்!…விடு, என்னை விடு என்ன பண்ற?.”—நான் அதனிடமிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கும் போதே ஒரு விஷயம் உறைத்தது. அதனுடன் நானும் பலூன் போல மெதுவாக மேலெழும்ப ஆரம்பித்திருந்தேன்.. என்ன செய்றதென்று புரியவில்லை. ஐயய்யோ! இது அசாதரமானது, அபாயகரமானது..,கடவுளே! என்ன ஆகப்போகுதோ?.. இல்லையில்லை பயப்படக்கூடாது. அறிவுபூர்வமாய் திங்க் பண்ணணும். இது ஏதோ கண்கட்டு வேலை. இட் ஈஸ் இம்பாஸிபிள். எப்படி எதுவுமே இல்லாம மேலெழும்ப முடியும்?. அழிக்கமுடியாத புவிஈர்ப்பு விசை என்னாயிற்று?.எந்த உபகரணங்களும் இதனிடம் இல்லை.,ஐயாம் ஷ்யூர்.. தைரியத்திற்காக ஒரு ஐந்து நிமிடம் கண்மூடி கந்தர்சஷ்டி கவசம் பாராயணம் பண்ணி முடித்தேன். கண்ணைத் திறந்தால் ஐயய்யோ எப்படியும் ஒரு மூவாயிரம் அடிக்கு மேலே வந்துவிட்டிருக்கிறோம்.. இது நிஜந்தானா?.சினிமா கிராஃபிக்ஸ் ல சாத்தியமாவதெல்லாம் எப்படி நிஜத்தில் முடியுது?.ஒரு வேளை எல்லாம் கனவோ?. கிள்ளிப் பார்த்தேன், வலித்தது. குப்பென்று வியர்த்துக் கொட்டியது.
” கரகி—5 உயிரினமே! என்னை விட்ரு.வாந்தி வர்றாப்பல இருக்கு.,தலை சுத்துது.. நான் உனக்கு என்ன செய்யணும்னு சொல்லு உடனே செஞ்சிட்றேன். ஐயோ! கேக்கமாட்டேன்னுதே. ,வேணுகோபாலா! வெங்கட்ரமணா! அனந்தகோடி தேவாதிதேவர்களே! யாராவது என்னை காப்பாத்தமாட்டீங்களா/.”
. இப்போது அது தன் உடம்பை ஒருமாதிரி முறுக்க, திடீரென்று எங்கள் வேகம் கூடியது. நிமிஷத்தில் ஐயாயிரம் அடியைத் தொட்டுவிட்டோம். குளிர் கவ்வுகிறது, மயிரைப் பிடுங்கும் பேய்க்காற்று முகத்திலறைகிறது.. இப்போது என் முடிவு எனக்குத் தெரிந்துவிட்டது.
‘ஐயோ! நான் நம்பறேன். நீ வேற்றுகிரக ஜீவராசிதான்,கரகி—5 பூமியின் உயிரினம்தான். என்னை விட்ரு. உன் பூமிக்கு என்னை கடத்தப் போறேன்னு புரியுது.,வேணாம், நான் இல்லேன்னா என் பொண்டாட்டி இங்கே செத்திடுவா. உலகம் தெரியாது அவளுக்கு. அவ அண்ணன் வீட்டுக்கு காஞ்சீபுரம் பக்கம் திருமுக்கூடலுக்கு போயிருக்கா..அடீ சங்கரீ! மூணும் பொண்ணுங்களாச்சே. எப்பிட்றீ கரை சேர்க்கப் போற?. என்னை இது விடாதுடீ.. நான் போறேன்.குழந்தைகளை படிக்கவையி.”—எனக்கு அழுகை வந்துவிட்டது.
“நண்பரே! உங்களைக் கடத்த உத்திரவு இல்லை.எங்களைவிட அறிவு குறைந்த இனங்களை எங்கள் உலகத்தில் சேர்க்கமாட்டோம். தவறான கலப்பினம் எற்பட்டுவிடும்.”
“ஆஹா அப்படியா?அப்பா போன உயிர் வந்தது. மனசு லேசாகிவிட வாய்விட்டு சிரித்தேன்.
“சங்கரீ! உன் தாலி கெட்டிடீ.எப்ப பாரு எனக்கு புத்திசாலித்தனம் போதாதுன்னு சொல்லிக் காட்டுவியே. அதுதாண்டீ இப்ப உன் தாலிய காப்பாத்தியிருக்கு..”—வாய்விட்டு சிரித்தேன்.
இப்போது என்னைச் சுற்றிலும் காட்சிகளை நிலவொளியில் பார்த்து ரசிக்க முடிகிறது. ஆஹா1 வெண்பஞ்சு பொதிகளாய் ஸிர்ரஸ் மேகங்கள். பறவைகளாய் அதில் நீந்திக் கொண்டிருக்கிறோம். பிளேனில் கூட பறக்கலாம், ஆனால் இது போன்ற அனுபவம் யாருக்கும் கிட்டாது. இங்கிருந்து கீழே பார்க்க, மின் விளக்குகள் எரிவது அச்சு அசலாய் நட்சத்திரக் கூட்டங்கள் போல தெரிகிறது. அதோ ஓரியன் கூட்டம்,. இது ஆல்ஃபா ஓரியன்ஸ், இது ஆல்ஃபா வர்ஜினிஸ், இதோ ஸிரியஸ். எங்கள் கால்களுக்கடியில் மாதிரி நட்சத்திரக் கூட்டங்களும், சென்னை மாநகரமும் விரிந்துக் கொண்டே செல்கின்றன.. சுமார் ஒரு மணி நேரம் பறந்திருப்பேன்.. மகாபலிபுரம் வரை பறந்து திரும்பினோம். திரும்பவும் என் வீட்டு மொட்டைமாடியில் பறவைபோல் லேண்ட் ஆகும்போது இரவு மூன்று மணி. வித்தியாசமான அனுபவம். ப்யூப்பிஸ் நட்சத்திரக்கூட்டம்,கரகி—5 ன் உயிரினம், அதனுடன் வான்வழிப் பயணம்,–வெளியே சொன்னால் ஒரு பயல் நம்பமாட்டான்..
’” ஒரு மிஷினும் இல்லாம சூப்பர்மேன் மாதிரி எப்படி மேலே பறக்க முடியுது?. புவிஈர்ப்புவிசை என்னாச்சு?.”.
” சொன்னாலும் இப்போதைக்கு உங்களுக்குப் புரியாது. சில அடிப்படை சித்தாந்தங்கள் இன்னும் உங்களிடம் அறிமுகமாகவில்லை.. ஆயிரம் வருஷங்களுக்கப்புறம் நீங்களும் இப்படி பறப்பீர்கள்..”
“ப்ளீஸ் நண்பா! எனக்குமட்டும் அந்த சூட்சுமத்தை சொல்லிக் குடேன். என் புல்லட்டுக்கு பெட்ரோல் போட்டு கட்டுபடியாவலப்பா.2000 மாடல். ஏகத்துக்கு பெட்ரோல் குடிக்குது. பைசா செலவில்லாமல் இங்கிருந்து ஒரு எக்கு, ஆபீஸுக்குப் போயிடுவேன். மாமியார் வீட்டுக்குப் போவணுமா?. பஸ் நெரிசல்,நசுங்கல்,வியர்வை, எந்த அவஸ்தையுமில்லை. சங்கரியை கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒரு எக்கு, குடியாத்தம் போயிடலாம்.ப்ளீஸ்!.”
“இல்லை, முடியாது. சொல்ல எனக்கு உத்திரவு இல்லை..”
“ஓகே1 பரவாயில்லை நண்பா தலை வணங்குகிறேன். உங்க அறிவுக்கு முன்னால நாங்க எவ்வளவோ பின் தங்கியிருக்கிறோம் என்பதே என் வருத்தம். உன்னிடம் இருக்கும் இந்த அற்புத சக்திகள் வெளியே பரவி, உன் புகைப்படம் ஒன்றும் எங்களுக்கு கிடைக்குமானால், அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு நீதான் எங்கள் கடவுள். புதிய மதம் தோற்றுவிக்கவும், அதை போற்றி புகழ் பாடவும், கும்பல் சேர்க்கவும்,,அதை வைத்து வெறி கொள்ளவும்,, அதற்காக போரிடவும், அழிக்கவும்,அழிந்து போகவும், நாங்கள் தயார்.என்ன ஏற்பாடு செஞ்சிடலாமா?. சிம்பிளா ஒரு பிரஸ்மீட் போறும்..”
” இல்லை நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும்.அங்கே என் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். காப்பாற்ற வேண்டும். எங்கள் எதிரிகளை அழிக்கவேண்டும்.அதற்கு நீங்கள்தான் உதவப் போகிறீர்கள். இல்லை நீங்கள்தான் அழிக்கப் போகிறீர்கள்.
“என்ன…என்ன?.”
“ஆமாம் எங்கள் இனத்தை காப்பாற்றப் போகிறீர்கள்..”
“என்னடா அதிசயம்? சூப்பர் புத்திசாலிகளுக்கே தண்ணி காட்டும் எதிரிகளை சம்ஹாரம் செய்யப் போகிறேனா? குஷியா இருக்கு. ஆமாம் அப்படி என்ன திறமை என்கிட்ட. ?.”
“நாங்கள் செய்த முட்டாள்தனமான காரியம் சுயமாய் சிந்திக்கவும்,கற்றுக் கொள்ளவும் கூடிய நேனோ சர்க்யூட்டுகள் விதைத்த சுமார் எட்டு கோடி இயந்திர மனிதர்களை உருவாக்கி புழக்கத்தில் விட்டதுதான்..”
“அதையெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டாய், விஷயத்துக்கு வா.”
“ எங்கள் பூமியில் இல்லாத, இங்கே மட்டும் இருக்கும் ஒரு வஸ்து. வெளியிலிருந்தால் உயிரற்றது, உடலுக்குள் புகுந்தவுடன் உயிர் பெறும் அசுரன். மளமளவென்று பெருகி, தானிருக்கும் உயிரினத்தையே அழித்துவிடக்கூடியது. எங்கள் கிரகத்தில் இல்லாத அது, உங்கள் பூமியில் மட்டும் இருக்கிறது..’
“உயிர் போவுது. இதென்ன புதிரா, விடுகதையா?. நான் கண்டுபிடிக்கணுமா?.”
“இங்கே அதன் பெயர்—வைரஸ். அதை வைத்துத்தான் எங்கள் எதிரிகளை அழிக்கப் போகிறோம்.”
“நீ என்ன முட்டாளா?. இல்லை நடிக்கிறியா.?.உயிரினங்களின் மீதுதான் வைரஸ்களால் செயல்பட முடியும். உங்க டார்கெட் இயந்திர மனிதர்கள். அதுங்க கிட்ட எதுவும் கிழிக்க முடியாது. வைரஸ்கள் நிச்சயம் உங்க இனத்தைத்தான் காலி பண்ணிடும்.”
“வைரஸ்களிடமிருந்து தப்பிக்கும் வழி எங்களுக்குத் தெரியும், அவைகளுக்குத் தெரியாது.இந்த விஷயத்திலதான் எங்களின் மேலாதிக்கம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.”
“வைரஸ்களால் மெஷின்கள் செத்துப் போகிறதா?,கிரேஸி.”
“சொல்கிறேன்.இயந்திர மனிதனின் மூளையான நேனோ சர்க்யூட்டுகளை உருவாக்கி, அதை தலைக்குள்ளே கூழ் போன்ற ஒரு கரிமக் கூட்டுப் பொருளில் பொதித்திருக்கிறோம். கரிமக்கூழ் கெடாதிருக்கும் வரைதான் இயந்திரமனிதன் செயல்படுவான்.. ஒரு குறிப்பிட்ட வைரஸ்கள்.காற்றில் பரவி தாக்கினால் அந்த கரிமக் கூட்டுப் பொருள் கெட்டுவிடும் என்பதை கண்டுபிடித்து விட்டோம். அந்த வைரஸ்களை வைத்துதான் இயந்திரமனிதர்களை ஒட்டுமொத்தமாய் அழிக்கப் போகிறோம். இந்த இடத்தில்தான் நீங்கள் வருகிறீர்கள்.”
“எப்படி?.”
“நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?.”
அது எங்கே வருகிறது என்று புரிந்துவிட்டதால், அதை சொல்ல எனக்கு தயக்கமிருந்தது.
“சொல்லுங்கள்.”
“டிபார்ட்மெண்ட் ஆஃப் வைராலஜியில் டெக்னீஷியனாக இருக்கிறேன்..”
“அந்த வைரஸ்களை ஆய்வகத்திலிருந்து நீங்கள்தான் கிளப்பிக் கொண்டுவரப்போகிறீர்கள்.”—-ஒரு கார்டை எடுத்து நீட்டியது..அதில் ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் என்று எழுதியிருந்தது.. மூளைக்காய்ச்சல் நோயை உண்டாக்கும் வைரஸ் அது..
“நோ இம்பாஸிபிள். என்னால் முடியாது. குளிர்பதன லாக்கரில் பாதுகாப்புடன் இருக்கு.கம்ப்யூட்டர் சிஸ்டம். பாஸ்வேர்ட் இல்லாம நுழைய முடியாது.டைரக்டருக்கு மட்டும் தான் அது தெரியும்.நோ சான்ஸ். நானெல்லாம் கிட்டவே நெருங்கமுடியாது.”
“முடியும், முடியணும்.நாளை நடுப்பகல் என் கைக்கு வரணும். உங்கள் ப்ளாக்கியின் கதி என்னாச்சின்னு யோசியுங்க.”
அதன் குரலில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. வர்மத்தட்டு,மேலே பறந்த அதிசயம், ப்ளாக்கியின் மரணம், எல்லாம் நினைவில் வந்து போயின.வயிறு பிசைந்தது.
“ஒரு விஷயம். என்னைப் பற்றி வெளியே சொல்லக் கூடாது மீறி சொன்னால், சொன்னவுடனே எனக்குத் தெரிந்துவிடும். ஜாக்கிரதை.”
மறுநாள் மதியம் ஐஸ் பாக்ஸில் மூளைக்காய்ச்சல் வைரஸுடன் என் வீட்டிற்குள் நுழைந்தேன்.அதை எப்படி திருடினேன்?, என்று சொல்லப் புகுந்தால் அது ஒரு குறுநாவலுக்கான விஷயமாகிவிடும்.. எரிச்சலுடன் கொடுத்தேன்.
“நன்றி.உங்களால் எங்கள் கிரகத்தில் என் இனம் காப்பாற்றப்படப் போகிறது. எதிரிகள் ஒட்டுமொத்தமாய் அழிக்கப்படுவார்கள் கிளம்புகிறேன்.”
“ஓகே! கரகி—5 ன் உயிரினத்துக்கு என்னால் முடிந்த உதவி. எந்த சூழ்நிலையிலும் மெஷின்கள் நம்மை ஆளக்கூடாது. ஆமாம் எப்படி போவாய்?.”
‘இங்கிருந்து எட்டுகிலோமீட்டர் உயரத்தில் எங்கள் ஊர்தி காத்திருக்கிறது.நல்லது நண்பரே! என்னைப் பற்றி இனிமேல் வெளியே சொல்லிக் கொள்ளலாம். ஆனால் பாவம் நம்புவதற்குத்தான் யாரும் கிடைக்கமாட்டார்கள்..”
அது மேலெழும்ப வேகமாய் திரும்பிய ஒரு கணத்தில், அந்த நிஜம் பளீரென்று என்னைத் தாக்கியது. பெரும் அதிர்ச்சி..
”டாய்!…டாய்!…போகாதே நில்லு..டா..ய்ய்ய்ய்!.”
அதைத் தடுக்க ஆவேசத்துடன் பாய்ந்து, முடியாமல் கீழே விழுந்தேன். அதற்குள் ஒரு இருபதடி மேலே போய்விட்டது. ஐயோ! ஏமாந்துட்டேனே. என்னா பேச்சி.?.. தப்பு பண்ணிட்டேனே. கூழ் மாதிரி கரிமக்கூட்டு, அதுக்குள்ள நேனோ சர்க்யூட்டு.சே! என்னா பொய் சார்.. இதுக்கு பொய் பேசக்கூட தெரியுதே.என்னது?. என்னான்றீங்களா? என்னான்னு சொல்றது?. அது மேலே பாயறப்போ மேலாடை விலகி…..? அப்பத்தான் அதை பார்த்துட்டேன் சார்!. அதுக்கு தொப்புள் இல்லை சார். அங்க ரெண்டு ஸ்க்ரூ முடுக்கியிருந்திச்சி.ச்சே! இப்ப நான் உதவி செய்ஞ்சிருப்பது இனப் படுகொலைக்கு சார்…