கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 19,057 
 
 

நேற்று இரவு நல்ல மழை. விறைகால் நெல்வயலில் நாற்றுகளை கலைத்து நட ஆள்விட்டு உள்ளதாக கௌரிசாமி அண்ணன் போன் செய்தார். வழக்கமாக அப்பா அம்மா இருவரும் வயலுக்கு செல்வதுதான் நடமுறை. அப்பாவும் அம்மாவும் சொந்தகாரர்கள் திருமணத்திற்கு சென்று உள்ளதால், நான் நாத்துநடும் சனங்களுக்கு கூலிக்கொடுக்க சென்றேன்.

காவிரிநீரில் கொள்ளிட பாசனத்தில் இருபோகம் விளைந்த நஞ்சைவயல்கள் இன்று விறைகால் ஆகிவிட்டது.

நான் மூன்றாம்வகுப்பு படிக்கும்போது ஐப்பசி மாதம் முப்பதுநாளும் மழைபெய்து குளம்போல இந்த வயல்கள் இருந்ததைப் பார்த்து இருக்கிறேன். தீபாவளிக்கு வெடிவெடிக்க முடியவில்லையே என்று மழையை கோபித்துக்கொண்டது உண்டு. இன்று ஒரு துளி மழைக்கு ஏங்காத விவசாயி யார்?

அப்பா அம்மா வயலுக்கு போவதே ஒரு சுற்றுலா அழகுதான். அம்மாவே பின்னிய ஒயர்கூடையில் சாப்பாடு, பால்பிளாஸ்க், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், நியூஸ்பேப்பர் இருக்கும். அப்பா வயலுக்கு செல்வது எல்லாம் அம்மாவைப் பார்த்துக் கொள்வதற்கு மட்டும்தான். ஆனால் அம்மாதான் அப்பாவைப் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்பா இல்லாமல் அம்மா வயலுக்கு சென்று வந்துவிடுவார்கள். அம்மா இல்லாமல் அப்பா வயலுக்குச் செல்ல விரும்புவதில்லை. செல்வதும் இல்லை.

”உங்களுக்கு எல்லாம் எதற்கு வயல்” என்று அம்மாவுக்கு மூக்குசிவக்கும் அப்பாவுக்கு புன்னகை ததும்பும். பெரும்நிலக்கிழார் என்ற சொல்லில் பெரும் பிரேமை அப்பாவிற்கு.

அப்பா வரப்பில் உள்ள மரநிழலைப் பார்த்து உட்கார்ந்துவிடுவார்கள். வேலைக்கு போரவர ஆட்களை அழைத்து பேசிக்கொண்டு இருப்பார்கள். அவசரமாக வேலைக்கு செல்பவர்கள்கூட அப்பா அழைத்தால் வேலைமறந்து உட்கார்ந்து விடுவார்கள். அம்மாதான் வேலையை ஞாபகப்படுத்தி அவர்களை அனுப்பி வைக்கும்.

அம்மா சேலையை அள்ளி இடுப்பில் செருகி சனங்களோடு இறங்கி வயலில் கலைபிடுங்கும். நண்டுவளையால் தண்ணீர் மோட்டைவழியாக ஓடும்போது அம்மா மோட்டையை காலால் மிதித்து அடைக்கும். மருந்து சரியாக கொடுத்திருக்கிறார்களா? எந்த இடத்தில் பயிர் நன்றாக வளர்ந்து உள்ளது?. எங்கு திட்டுதிட்டாக வளர்ந்து உள்ளது?. பூச்சி ஏதாவது பயிரில் விழுந்து உள்ளதா? என்று பார்ப்பது எல்லாம் அம்மாதான். மரத்திலேயே பழுத்த வாழைபழம்போல் மஞ்சல்மினுங்கும் அம்மாவின் மேனி மாலையில் நிறம்மாறிவிடும். “சொன்னா கேக்கமாட்டில்ல நீ“ என்று அப்பா கோபி்ப்பார்கள்.

அப்பா அம்மாவை “இங்க வா இங்க வா“ என்று அருகில் கூட்டி உட்கார வைத்துக்கொள்ள நினைப்பார்கள்.

“ஆயா! அய்யா மனசுபடுற பாட்ட பாரு, நீ போ நாங்க பாத்துக்கறோம்“ என்பார்கள் வயலில் நிற்கும் சனங்கள். அம்மா அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்வது இல்லை, ஆனால் நிழல் மாறும்போது “நகர்ந்து நிழலில் உட்காருங்கள்“ என்று அப்பாவிடம் கூறும் அம்மா .

“கைதான் வேலை செய்யுது, கண்ணெல்லாம் ஐயா மேலதான் ஆயாவுக்கு, சாடிக்கு ஏத்த மூடி” என்னும் சனங்களின் சிரிப்பொலி வயலில் அலையடிக்கும்.

அம்மா மாட்டையும் வயலையும் பார்த்துவிட்டால் வேறு ஒரு மனுசி. தும்பிக்கு மலர்போல அம்மாவுக்கு மாடும் வயலும், தனது சிறகுகளை விரித்து ரிங்காரித்து மோனத்தில் மூழ்கிவிடும். அம்மாவுக்கு அது ஒரு தவம்.

ஆட்களை அழைத்துவருவது தண்ணீர் வைப்பது எல்லாம் கௌரிசாமி அண்ணன் பார்த்துக்கொள்வார். நான் சென்று வயலைப்பார்த்துவிட்டு சம்பளம் கொடுத்துவிட்டு வந்தால் போதும். கையில் ஒரு புத்தகத்தை எடுத்துச்சென்று பேருந்தில் படித்துக்கொண்டே போயி படித்துக்கொண்டே வந்துவிடுவேன்.

காட்டுமன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறி திருநாரையூர் நிறுத்தத்தில் இறங்கி செங்கழநீர்பள்ளம் வயலுக்கு வாடகை மிதிவண்டியில் செல்வேன். அப்பாவுக்கு முதன்முதலில் வேலைகிடைத்தபோது வாழ்ந்த ஊரில் வாங்கிய நிலம் அது.

நான் வயலுக்கு போகும்போதும் கதை புத்தகம் எடுத்துச்செல்வதால் அம்மாவிற்கு “பொறுப்பு இல்லாமல் இருக்கிறானே“ என்ற கோபமும் இருக்கும். வயலில் இறங்கி கஷ்டப்படக்கூடாது என்ற அன்பும் இருக்கும். அம்மாவுடன் இறங்கி நானும் கலைப்புடுங்கும்போது “நீ வரப்பில் ஏறு. நீ வரப்பில் ஏறு.” என்று சொல்லிக்கொண்டே இருக்கும். அப்பாவும் அம்மாவிடம் இதைத்தானே சொல்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். அன்பு என்பது எல்லார் இதயத்திலும் ஒரே வடிவம்தான்.

இருபக்கமும் நெல்வயல்கள், நடுவில் ஒரு பேருந்து மட்டும் செல்லும் அகலத்தில் உள்ள சாலை. கருவேல மரத்தடியில் வாடகை சைக்களை தள்ளி நிறுத்தினேன். காலின் அருகில் சென்ற ஒரு சிவப்பு மரவட்டை நகர்ந்துபோய் வட்டமாக சுருண்டு சங்குசக்கரம்போல் கிடந்தது. சாலையின் குழிகளில் மழைநீர் காப்பிநிறைந்ததுபோல் கிடந்தது. வயலைப் பார்த்தேன். எங்கள் வயலில் ஐந்து பெண்கள் நாற்று நட்டுக்கொண்டு இருந்தார்கள். இரண்டு ஆண்கள் நாற்றுகளை பிடிங்கி முடியாக்கி கலைத்துப்போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

பக்கத்து வயலில் இருவர் மருந்து தெளிப்பான்களை சுமந்துக்கொண்டு மருந்து தெளித்தார்கள். வயலின் மரகதமுடிகளில் பால் அபிஷேகம் செய்வதுபோல் இருந்தது. இரண்டு வயல்களுக்கு இப்பால் இருக்கும்போதே டமக்கரான் மருந்துநெடி மூக்கை சுளிக்கவைத்தது.

காலில் கிடந்த பாட்டா செருப்பை வரப்பு முனையில் கழட்டிவிட்டு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வரப்பில் நடந்தேன். நத்தை ஒன்று தனது கொம்பு உள்ள முகத்தை திருப்பி நீட்டி முதுகு சுமையை இழுத்துப்போனது.

வரப்பின் ஓரத்தில் வளர்ந்து இருந்த நாணல்கள் கைகளை கிழிக்காமல் இருக்க, நீண்டிருக்கும் நாணல்களை வணங்குவதுபோல வளைந்து குனிந்து நடந்தேன். வரப்பின் விளம்பில் அருகம்புல் கிராப்வெட்டிக்கொண்டு நின்றது. அங்காங்கே முசுமுசுக்கை செடி படர்ந்து ஓடியது. சிவப்பு மணிபோல பழங்களும், பச்சைக்காய்களும் கண்களை கவர்ந்தது. . கீழே குனிந்து கொஞ்சம் பழங்களையும் காய்களையும் பிய்த்து வாயில் போட்டு மென்றுக்கொண்டே வரப்பில் நடந்தேன். வரப்பில் உட்கார்ந்து இருந்த தவளை ஒன்று தாவி வயலில் குதித்து ஒலி எழுப்பியது. தவளை தவாவும்போது அதன் பின் பக்கத்தில் நீர் பிறிட்டு அடித்தது. தவளை குதித்ததில் நண்டு ஒன்று குடுகுடு என்று ஓடிவந்து வளையில் நுழைந்து கொண்டது. மேலே பறந்த கொக்குகூட்டம் அடுத்த வயலில் தவழ்ந்து வெள்ளைக்கொடிபோல இறங்கியது.

தூரத்தில் இருந்த அண்ணன் என்னைப்பார்த்ததும் தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து தோளில் போட்டுக்கொண்டு அருகில் வந்தார். கறுத்த உடல் வேர்வையில் மின்னியது.

அம்மா அப்பாவின் நலத்தை விசாரித்தார். வயலைப்பற்றியும் மழையைப்பற்றியும் நாற்று கலைத்து நடுவதைப்பற்றியும் அண்ணன் என்னிடம் விளக்கினார். அண்ணனிடம் கூலி பணத்தைக் கொடுத்துவிட்டு வயலை சுற்றிப்பார்த்தேன்.

நாற்றுநடுவதை முடித்துக்கொண்டு பெண்கள் கரையேறி கைகால் கழுவ வடக்கு கண்ணியைநோக்கி சென்றார்கள். .

அண்ணனிடம் விடைப்பெற்றுக்கொண்டு நான் மிதிவண்டி இருக்கும் இடத்திற்கு திரும்பினேன். சாலையில் மிதிவண்டியில் ஒருவர் போய்கொண்டு இருந்தார்.

பார்த்த ஞாபகம்.

சின்னசார் முகம் நினைவில் எழுந்தது.

வேட்டியை மடித்து பிடித்துக்கொண்டு வரப்பில் குடுகுடுவென்று ஓடி சாலையை நெருங்கிப்பார்த்தேன். அவர் யாரோ? என்னைப்பார்க்கவில்லை. போய்கொண்டே இருந்தார்.

காஞ்சவாய்க்கால் எனப்படும் கான்சாகிப்கால்வாயின் மேற்குகரையில் உள்ளது செங்கழநீர்ப்பள்ளம். வடக்கே அடுத்து உள்ள நடுத்திட்டு கிராமத்தின் குளக்கரையில் அமைந்த கீற்றுவேய்ந்த தொடக்கப்பள்ளிக்கூடத்தில் படித்தேன்.

முப்பது குடும்பம் உள்ள எங்கள் கிராமத்தில் இருந்து ஏழுபேர்தான் பள்ளிக்கூடம்போவோம். பெண்பிள்ளைகள் யாரும் வரவில்லை.

வடக்கே ஊர் முடிந்ததும் காடு தொடங்கிவிடும். காடு என்றால் யானை மறையும் காடு இல்லை. ஆள் மறையும் காடுதான். மரமும் செடியும் கொடியும் நிறைந்த காடு. வாய்க்கால்கரை காடு. காட்டுக்கு மேற்கே நெல்வயல்கள். இரண்டுபோகம் விளையும், மரகதம் விரிக்கும் நாற்றுப்பயிர்கள். பொன்மணியாகிய நெல்மணிகதிர்கள்.

காட்டுக்குள் ஒற்றையடிப்பாதை. பனைமரம், கருவேலமரம், விலாமரம், புளியமரம்,தூங்குமூஞ்சிமரம், கொடுக்காபுளிமரம், இலந்தைமரம், நுணாமரம், பூவரசு மரம், ஆத்துபூவரசு, வேம்பு, வாகைமரம், பொன்கொன்றைமரம், மணத்தக்காளி செடி, கோவைசெடி, வாய்கால் கரைமுழுவதும் அருகம்புல், கோரை, சேப்பங்கிழங்கு, கரிசலாஞ்கண்ணி, பொன்னாங்கண்ணி, தண்ணீர்மீது மிதக்கும் நீர்பசலைக்கொடி. கொட்டைவாழைசெடி. வாய்க்காலிலும் வயலிலும் கொக்கு நாரைகள் மீன்பிடிக்கும்.

வாய்கால் ஓரத்தில் ஆத்துநொச்சி மரம். அதன் வேர்அடியில் மேயும் இறள்மீன் தெரியும் தெளிந்த தண்ணீர். குமார் அதைப்பார்த்துவிட்டால் சட்டையோடு வாய்க்காலில் குதித்துவிடுவான். நீரில் சில இடங்களில் இளம்சிவப்பு பூவிதழ்கள் வட்டமாய் மிதப்பது ஒருபெரும் பூப்போல கண்மயக்கும். . உற்றுப்பார்த்தால் மீன்குஞ்சுகள். விறால்மீன் குஞ்சுகள். அதற்கு அடியில் அதன் தாய் நீராழத்தில் இருக்குமாம். ஒரு சின்ன சத்தம் கேட்டால் போதும், ஒரு பெரிய பூவை அசைக்காமல் நீருக்குள் இழுத்து மறைத்ததுபோல் மறைந்துவிடும். அந்த இடத்து நீர் மட்டும் சலனமின்றி கருப்பாக மாறித்தெரியும்.

நிதமும் பனம்பழம், கோவைப்பழம்,கொடுக்காபுளி பழம், விளாம்பழம் என்று ஏதோ ஒன்றை தின்றபடியே செல்வதால் வாயில் பழம் மணக்கும். வாத்தியாரிடம் காலதாமதமாக வந்ததற்கு அடிவாங்க கைநீட்டும்போது கையும் மணக்கும். கையை கால்சட்டை பின்பக்கத்தில் துடைத்ததில் கால்சட்டையும் மணக்கும். இதனால் கால்சட்டையை எலி இழுத்துப்போய் கடித்து வைக்கும்.

ஒருநாள் துரையின் அப்பா வைத்திருக்கும் கடையில் கிடந்த துண்டுபீடிகளை பொறுக்கி வந்த ரமேஷ் உடன் சேர்ந்து நடுகாட்டில் வைத்து எல்லோரும் பீடிக்குடித்தோம். மாடுமேய்க்கும் பெரியகாளை அப்பாவிடம் சொல்லிவிட்டான்.

அப்பா “பீடிக்குடித்தாயா?“

தலையை குனிந்து சத்தமில்லாமல் “ஆமாம்” என்றேன். எப்படியும் அடிவிழும் என்ற உள் நடுக்கம். அப்பா அருகில் அழைத்து தலையை அழுத்தி தடவி விட்டு “இனி பீடி குடிக்ககூடாது, என்னைபோல பெரிய ஆளவளர்ந்தபிறகு குடித்துக்கொள்ளலாம்” என்றார்கள்.

அடிக்காமல் புரிய வைத்த எத்தனை பெரிய வாழ்க்கை பாடம் அது. அடிப்பதால் மட்டும் குழந்தைகள் திருந்திவிடுவார்களா?

கொடுக்காபுளி மரத்தில் இருந்து குயில்கள் பாடும். விலாமரத்தில் செம்போத்துக்கள் அழைக்கும், பனம்பழம் கொத்தும் காகம், மீனுக்கு காத்திருக்கும் கொக்கு, சிறுசிறு கிளைகளில் தாவும் மைனா, பூக்களில் முகம் பார்க்கும் தேன் சிட்டு என்று பறவைகளின் இனிய இசை கலவைக்குள்தான் எங்கள் பள்ளிப் பயணம். இடை இடையே மாடுகள் ஆடுகள் செடிகளை உரசும் ஓசை பயப்படவைக்கும். சரசரத்து ஓடி முகம்தூக்கி பார்க்கும் கீரிப்பிள்ளை

ஒருநாள் மரம்போல் உயர்ந்து இருந்த திருகுக்கள்ளி செடிபுதரில் ஒரு நல்லப்பாம்பு ஊர்ந்துபோனது, அதன்பின்பு அந்த பாம்பை பார்க்கவே இல்லை ஆனால் ஒவ்வொருநாளும் அந்த இடத்தில் பாம்பு நெளியும் பயம் மனதில் .

தேங்காய் எண்ணெய் தடவி முன்னால் நெளிவைத்து தூக்கி சீவிக்கொண்டு பள்ளிக்கு செல்வேன். நெற்றிமறைக்க முன்னாடி முடியை இறக்கிவிட்டுக்கொண்டு செல்லத்தான் ஆசை. அப்பா நெற்றியை மறைக்கக்கூடாது என்று எப்போதும் தூக்கி சீவிவிடுவார்கள். அம்மா “உங்களை மாதரி ஏன் பிள்ளையையும் கிழவனாக்கிறீங்க“ என்று சிரிக்கும்.

“கிழவன்“ என்று அப்பா அம்மாவைப்பார்த்து சிரிப்பார்கள். அப்பாவின் சுருண்டமுடி அழகோ அழகு.

அம்மா, அப்பா கையில் இருக்கும் சீப்பை பிடுங்கி, அப்பா வழித்து சீவியதை மாற்றி முன்னால் நெளிவைத்து விடுவார்கள். அது எனக்கு பிடிக்கும். அம்மாவிற்கு ஏன் சுருட்டை முடியில்லை என்று நினைத்துக்கொள்வேன். அம்மாவிற்கு சுருட்டை முடியிருந்தால் தனக்கும் இருந்து இருக்கும் என்ற நினைப்பு எழும்.

சில்வர் குண்டானில் வெள்ளைப் பசுமாட்டு மோர்விட்டு பிசைந்த பழையதை பழைய குழம்பை தொட்டுக்கொண்டு வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு, மோரை குடித்துவிட்டு எழுவேன். கடைசிவாய் மோர் மிகச்சுவையாக இருக்கும். ஏன் இந்த கடைசிவாய் மோர்மட்டும் சுவையாக இருக்கிறது?

சொர்ணம் ஜவளிக்கடை மஞ்சள் பையில் பாடபுத்தகம் நோட்டு எடுத்துச் செல்வேன். காலை ஏழரைமணிக்கு கிளம்பி ஒவ்வொரு பையன் வீட்டுக்காக சென்று அவர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடம்போய் சேரும்போது பத்துமணிக்குமேல் ஆகியிருக்கும்.

“வாங்க ராசா, இப்பதான் விடிந்ததா?” என்பார் பெரியசார்.

சின்னசார் மேசையில் இருக்கும் கழியை கைகளில் எடுத்துக்கொண்டு நிற்பார். அவர் காலடியில் யாராவது ஒருவன் முட்டிப்போட்டுக்கொண்டு இருப்பான். அவன் கைகள் சிவந்திருக்கும். கைகளை உதறிக்கொண்டும் மூக்கை உறிஞ்சிக்கொண்டும் முட்டியில் நின்றபடி சிலேட்டில் எழுதிக்கொண்டும் இருப்பான்.

அவரைப் பார்த்ததும் மூத்திரம் முட்டிக்கொள்ளும். நாங்கள் அருகில் வந்ததும் கழியை மேசையில் வைத்துவிட்டு “ஏன்டா லேட்“ என்பார். அவர் பார்வை உள்ளுக்குள் இறங்கி ஒரு திருகுதிருகிவிடும். நாங்கள் தானகவே கைகளை கட்டிக்கொண்டு வரிசையாக நிற்க தொடங்கிவிடுவோம்.

“சொல்லுங்கடா” என்பார். சத்தம் உயர்ந்து கண்கள் விரிந்துவிடும். மீசையும் காதில் இருக்கும் முடியும் முகத்தை பெரிதாக்கிக்காட்டும்

ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்வோம். “போதும்“ என்பார். மேசையில் இருந்த பிரம்பை வலது கையில் எடுத்து இடது கையால் உறுவுவார். இடது கை கோல்ட் வாட் பளபளக்கும் எங்களுக்கு வலிக்கதொடங்கிவிடும். ஒருவனை அடித்தாலே பாண்டியன் பிரம்புபோல் எங்கள் எல்லோருக்கும் வலியை உண்டாக்கிவிடும். நாங்களாகவே கைகளை நீட்டத்தொடங்கிவிடுவோம். ஒரே அடிதான். நெருப்புக்கோலால் இழுத்ததுபோல் சுரீர் என்றிருக்கும். கையை இழுத்தாலோ, நகர்ந்தாலோ எத்தனை அடிவிழும் என்று தெரியாது. கால்சட்டை நனைந்துவிடும்.

சில நாட்கள் காதை திருகி நிமிண்டிவிடுவார். காது அவர்கையில் மாட்டியவுடன் கால்நுனிவிரலில் நின்று அவர் கையில் நெளிவோம்.

பெரிய சார் எப்போதும் சந்தனகலரில் வழவழப்பான சட்டைப்போட்டு வருவார். பெரியசார் உயரமாக அகலமாக இருப்பார் ஆனால் குண்டுபோல் தெரியமாட்டார். தலைமுடி வெள்ளையாக இருக்கும். மீசை இல்லாமல் வெந்தய வண்ணத்தில் இருப்பார். எப்போதும் சிரித்தமுகம். அவர் பையன்களை அடித்துப்பார்த்தது இல்லை.

சின்னசார் உயரத்தில் கனத்தில் நடுத்தரமாக இருப்பார். கறுப்பாக இருப்பார். இறுகிய முகம். அதுவே அவரை கோபம் உடையவராக காட்டும். வெள்ளை சட்டையும் கோல்ட் வாட்சும் அவருக்கு எடுப்பாக இருக்கும். பொறுமையாக சொல்லித்தருவார். குண்டு குண்டாக அழகாக எழுதுவார்.

“ழ“வை “ழு”போல எழுதி நான் வாங்காத நாள் இல்லை. ஒரு நாள் தனது அருகில் நிற்க வைத்து கையைப்பிடித்து “ழ“போட கற்றுக்கொடுத்தார். மதிய சாப்பாட்டு நேரம்வரையும் அங்கேயே நிற்கவைத்து “ழ“போடவைத்தார். இன்று நான்போடும் “ழ“ அவர் போட்ட “ழ“தான். அசையாமல் உட்கார்ந்து இருப்பார். முகம் திருப்பாமல் பார்ப்பார்.

பையன்கள் எழுதிக்கொண்டு இருக்கும்போதே சாக்பீஸ்துண்டு காதுமடலில் சுளிர் என்று சூடுவைத்து துளிப்போகும். அடிப்பட்டவனுக்கு தெரியும் அவன் செய்த தப்பு. பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுகம்கும் இடையில் இடையில் சாக்பீஸ்துண்டை வைத்து அவர் சுண்டும்போது அது இலக்கை தாக்கியே திசைமாறும். பெரும்பாலும் அது பையன்களின் காதுமடல்களையே குறிவைக்கும். அடுத்தவன் பொருளை சொல்லாமல் எடுத்துமறைத்துவிட்டால் திருடினால் முட்டிப்போடவைத்து உள்ளங்காலை பழுக்க வைத்துவிடுவார். அதோடு அவன் பள்ளிக்கூடம் பக்கமே திரும்பமாட்டான். அவன் அப்பாவை வரச்சொல்லி தினம் பள்ளிக்கு அழைத்துரச்சொல்லி படிப்பு சொல்லித்தருவார். அதனால் அப்பாவிடமும் அவனுக்கு அடிகிடைக்கும்.

மிருதங்கத்திற்கு கைப்பிடி வைத்ததுபோல் இருக்கும் பிலாஸ்டிக் டப்பாவிற்குள் அடைக்கப்பட்டுவரும் மதிய உணவு கோதுமை உப்புமாவை காக்காவிற்கு உருண்டிப்போட்டுக்கொண்டே சாப்பிடுவோம். நாங்கள் தூக்கிப்போடும் உருண்டை மண்ணில் விழுவதற்குள் காக்கா பறந்து கொத்திவிடும்.

மதிய சாப்பாட்டை அவசரமாக சாப்பிட்டுவிட்டு பக்கத்திலேயே இருக்கும் அல்லிக்குளத்தில் ஆலமரத்தில் ஏறி குதித்து விளையாடுவோம்.

ஒருநாள் குளித்துவிட்டு மதியவகுப்புக்கு போகும்போது குளக்கரையின் புல்வெளியில் ஏதோ மின்னுவதைப்பார்த்தேன். பச்சை கேமலின் இங்கு பேனா. அதே தெருவில் இருக்கும் ஐந்தாம் வகுப்பு பாரதி வைத்திருந்தது. புதியபேனா, இரண்டு நாளுக்கு முன்னால்தான் அவனுடைய அப்பா வாங்கி தந்தார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.

என்னுடன் குளித்த பையன்கள் முன்னால் சென்று கொண்டு இருந்தார்கள். யாரும் என்னைப் பார்க்கிறார்களா? என்று சுற்றி பார்த்துவிடடு குனிந்து பேனாவை எடுத்து கால்சட்டைப்பையில் போட்டுக்கொண்டேன்.

மனம் குதுகளித்தது. பெரிய புதையல் கிடைத்த பரவசம். அடைய முடியாத ஒன்றை அடைந்துவிட்ட ஆனந்தம். நான் மட்டும் தனியாக மேலே பறப்பதுபோன்ற உணர்வு. நெஞ்சுக்கூடு விரிந்தது.

பள்ளிக்கு நடக்கத் தொடங்கினேன் கனவு கலைந்தது. சின்னசார் ஞாபகத்தில் வந்தார். கையும் காலும் சுரீர் சுரீர் என்று சுடுப்பட்டது. உடல்பதற பையில் இருந்த பேனாவை எடுத்து குளக்கரையின் ஓரத்தில் முளைத்திருந்த கொட்டைவாழை செடியின் புதரில் மறையவைத்துவிட்டு ஓடிப்போய் பையன்கள் உடன் சேர்ந்துகொண்டேன்.

மனம் பேனாவுடன் குளக்கரையிலேயே நின்று விட்டது. உடல் பதட்டம் இன்னும் தனியவில்லை. இதயம் வேகமாக துடித்தது. கண்கள் என்னைமீறி அலைந்தது.. யாரும் பார்த்திருப்பார்களோ? கேட்டால் என்ன சொல்வது? யாரையும் நேராக பார்க்கமுடியவில்லை, தலையை கவிழ்ந்து பையில் எதையோ தேடுவதுபோல் விழியை சுழற்றி சுழற்றிப்பார்த்தேன். பிறருடைய பார்வைகளை தவிர்த்தேன். வெளியில் அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் அமைதியில்லை, நடுக்கமாக இருந்தது. நெஞ்சில் பாரம் ஏறியது. கரும்பலகையின் முன்னால் சிலேட்டை எடுத்துக்கொண்டு எழுதுவதுபோல் உட்கார்ந்து கொண்டேன்.

சின்னசார் மேசையின் மீது ஒரு புத்தகத்தை வைத்துப்படித்துக்கொண்டு இருந்தார். அதன் அருகில் இருந்த பிரம்பை பார்த்தேன். கண்களில் நீர் ஊறியது. அழுகை வந்துவிடும்போல் இருந்தது.

என்னால் வகுப்பில் உட்கார முடியவில்லை. பேனாவை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு ஓடவேண்டும்போல் தோன்றியது. பேனாவை யாரும் எடுத்துச்சென்றுவிட்டால் என்ன செய்வது?. ஒண்ணுக்கு வருதென்று கூறி வெளியே போய் பேனாவை எடுத்து வந்துவிடலாமா? யாராவது பார்த்துவிட்டு சாரிடம் சொல்லிவிட்டால் சார் கொன்னுடுவார். சாரின் பிரம்பை மீண்டும் பார்த்தேன் அது எனக்காகவே அங்கு பாம்புபோல் படுத்திருந்தது பேனாவை எடுத்துவந்து சாரிடம் கொடுத்துவிடலாமா?

இல்லை,

வேண்டாம்.

எனக்கு அந்த பேனா வேண்டும். நான் வீட்டுக்கு எடுத்துச்சென்று வைத்துக்கொள்வேன். ஐந்தாம்வகுப்பு செல்லும்போது நான் அதால எழுதுவேன். நான் திருடவில்லை, கீழே கிடந்துதானே எடுத்தேன். சாமிக்கொடுத்தது.

சார் கொடிக்காத்த குமரனைப்பற்றி கதைச்சொன்னார்கள். கதை நன்றாக இருந்தது. மற்ற நாளாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக கேட்டிருப்பேன். உடம்பு சுட்டது, சுரம் அடிப்பதுபோல் இருந்தது. வாட்டமாக இருந்தேன். மனம் முழுவதும் பயம் அழுத்தியது. தலை பாரமாகியது. நாக்கு வரண்டது. தண்ணீர் குடிக்கனும்போல் நெஞ்சு தவித்தது.

வீட்டுமணி அடித்தது. விடுதலை அடைந்ததுபோல் மனம் அழுத்தத்தில் இருந்து விடுபட்டது. வழக்கமாக முதலில் எழுந்திருக்கும் நான் எல்லோரும் எழுந்தபின்பு கடைசியாக எழுந்தேன்.

ஐந்தாம் வகுப்பு பாரதி, பெரியசார் பக்கத்தில் நின்று அழுதுகொண்டு இருந்தான். அவன் கன்னத்தில் கண்ணீர் கோடாக ஓடியது. பெரியசார் “எல்லாரும் வருசையாக நில்லுங்கடா” என்றார்.

ஐந்தாம் வகுப்பில் இருந்து ஒன்றாம் வகுப்புவரை எல்லோரும் ஒரே கோடா நின்றோம். நான் மூன்றாம்வகுப்பு வரிசையில் மத்தியில் நின்றேன்.

சின்னசார் தனது கழியுடன் பெரியசார் இடம் போனார்.

பெரியசார் “இவனோட கேம்லின் பேனா தொலைந்துவிட்டது என்று அழுறான் சார்” என்றார்.

சின்னசார் ”யாராவது பார்த்திங்களடா? எடுத்திருந்தால் கொடுத்துவிடுங்கள். நான் தேடி கண்டுபிடித்தால் தோலை உரித்துவிடுவேன்” என்று கையில் இருந்த பிரம்பை சுழற்றி தனது இடது உள்ளங்கையில் லேசாக தட்டியபடி எல்லோரையும் சுற்றி நடந்து நோட்டம் விட்டார். எனக்கு முன்னால் நின்றவன் தலையில் மறைந்து அவர் கண்களைப்பார்த்தேன். நடுங்கவைத்தது அந்த பார்வை துளைப்பதுபோல் இருந்தது. அவர் கண்கள் வெப்பம்கூடி சிவந்தது. இயல்புநிலைமாறி ஒரு விறைப்பு நிலையில் முன்னால்போய் நின்றார். கொத்திவிட தலைதூக்கிய நாகத்தின் படவிரிப்பு போன்ற முகம்.

எனது கால்கள் கால்சட்டைக்குள் நடுங்கியது. மாணவர்கள் அனைவரும் ஒரு மணிச்சரம்போல முன்னால் நகர்ந்தார்கள்.

சின்னசார் ஒவ்வொருவனாக தனியே வரச்சொல்லி புத்தக பையையும் கால்சட்டை பையையும் காட்டச்சொல்லி பார்த்து அனுப்பிக்கொண்டு இருந்தார். எனது நெஞ்சு அடித்துக்கொண்டது. கண்கள் கலங்கின. கைகள் நடுங்கியது. அழவேண்டும்போல் இருந்தது.

மனதிற்குள்“பயப்படக்கூடாது, நான் திருடவில்லை, கண்டெடுத்தது“ என்று கைகளை அழுத்தி மூடிக்கொண்டேன். உள்ளங்கை வேர்த்தது. எனது பைகளை காட்டும்போது பள்ளிக்கூடம் மறைந்து பையன்கள் மறைந்து நான் ஒரு புள்ளியாக மட்டும் இருந்தேன் ஆனால் அது மிகநீண்ட நாழிகையாக கனமானதாக இருந்தது. மூச்சு நின்று வந்தது. வெளியே வந்தபோது மூச்சு வேகவேகமாக வந்தது. கால்கள் இல்லாமல் நெஞ்சு மட்டும் இருப்பதுபோல் இருந்தது. வானத்தைப்பார்த்து மூச்சை இழுத்துவிட்டேன்.

பாரதி அழுதுக்கொண்டே வீட்டுக்கு சென்றான். பாரதியின் பேனா கிடைக்காது என்பது எனக்கு மட்டும் தெரியும். சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டேன். வீட்டுக்கு நடந்தேன் கொஞ்சதூரம் போனதும் மனதில் வருத்தம் தோன்றியது. கால்கள் சோர்ந்தன.

பேனாவை எடுத்து கொடுத்துவிடலாமா? கொடுத்தால் வாத்தியார் அடிப்பாரே. மீண்டும் பயம் நடுக்கம். பாரதியிடமே கொடுத்து சாரிடம் சொல்லாதே என்று கெஞ்சலாமா? வேண்டாம். அவன்சொல்லிவிடுவான். நான் திருடவில்லை. நான் கண்டு எடுத்தது. யார் கண்ணிலும் படாமல் ஏன் எனது கண்ணில் அது பட்டது?. சாமி எனக்கு கொடுத்தது. அது எனக்குதான் சொந்தம்.

பேனாவை எடுக்காமலே நான் வீட்டிற்கு நடக்க தொடங்கினேன். வீதியின் பாதி தூரம்வந்துவிட்டேன். என்கால்கள் தயங்கி நின்றது. மனம் தவித்தது. திரும்பி பள்ளிக்கூடத்தின் பின்பக்கமாக ஓடி குளக்கரையில் மறைத்து வைத்திருந்த பேனாவை எடுக்கொண்டு பள்ளிக்கூட வாசலுக்கு வந்தேன். அழுதுக்கொண்டு இருந்தேன். கண்களில் கண்ணீர் ஒழுகி கண்ணை மறைத்தது. சின்னசார் தனது சைக்கிளில் எனக்கு முதுகாட்டி தனது வீட்டுக்கு போய்கொண்டு இருந்தார். தண்ணீரில் பிம்பம் அலைவதுபோல அவர் காற்றில் அலைவதாக தெரிந்தது. கண்களை தோள்படையில் அழுத்தி துடைத்துக்கொண்டேன்.

நான் கையில் பேனாவைப்பிடித்தபடி அவர் பின்னால் ஓடினேன். அவர் போய்க்கொண்டே இருந்தார். நான் ஓடிக்கொண்டே இருந்தேன். கூப்பிட தோனவில்லை. தெருமுடிந்து சாலைதிரும்பியபோது அங்கிருந்த வைக்கோல் போரில் மறைய போகின்றார், நான் ஓடிக்கொண்டே இருந்தேன், எதேச்சியாக திரும்பியவர் என்னைப்பார்த்து சைக்கில் பிரேக்கைபிடித்து ஒருகாலை ஊன்றியபடி நின்று “என்னடா?” என்றார் கோவமாக.

நான் கையை உயர்த்தி பேனாவைக் காட்டினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *