கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 16,532 
 
 

ஐப்பசி மாதத்து அமாவாசை. அந்தியில் பிடித்த மழை விடாமல் ஒரே மாதிரியாக அடித்துப் பெய்துகொண்டிருந்தது.

நல்ல நிசிவேளை. இடியும் மின்னலுமான அந்த அடை மழையிலும் சாரதா, தன் அறையின் ஜன்னல்களையும் கதவையும் திறந்துபோட்டு விட்டுத் தூக்கம் கொள்ளாமல் மறுகும் மனவேதனையை வெளியுலகத்து ஆர்பாட்டத்தோடு கலந்துகண்டு கொண்டு சாய்மானத்திலேயே கிடந்தாள். இன்னும் பலமான மழை வலுக்கவே அவள் மீது சாரலடித்தது. எழுந்தும் ஜன்னலை மூடும் சமயம் வாசற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

நின்று கேட்டாள். ஒரு தடவை, மறுதடவை, பிறகு தொடர்ந்து தட்டுவது கேட்டது. சரி நமது வீட்டுக் கதவுதான் என்று மாடியிலிருந்து இறங்கிவந்து கதவருகில் நின்று, கதவைத் திறக்காமலேயே ‘யாரது?’ என்று கேட்டாள்.

”நான்தான் சாரதா, திற”

குரலைக் கேட்டதும் அப்படியே நின்றுவிட்டாள். ஒரு காலத்தில் அமுதச் சுவையாக இனித்த அந்தக் குரல். இன்று கர்ணகடூரமான த்வனியாகக் கேட்டது. உள்ளே இருந்து பதிலுமின்றி, கதவும் திறக்கப்படாதது கண்டு மறுபடியும், ”சாரதா, கதவைத் திற, நான்தான்” என்றது மறுபடி வெளியிலிருந்து குரல்.

தாழ்ப்பாளை நீக்கிவிட்டு உள்ளே வந்துவிட்டாள் சாரதா. கதவைத்திறந்து கொண்டு நடராஜன் அவள் பின்னாலேயே கூடத்திற்கு வந்து நின்றான். சாரதா திரும்பி நின்று வந்தவனைப் பார்த்து ”வாருங்கள் ராஜா, சௌக்யா?” என்று பதபாகமான தொனியில் கேட்டவுடனேயே நடராஜனின் நம்பிக்கையில் ஒரு பாதி செத்துவிட்டது.

அந்த அதிர்ச்சியினால் தூண்டப்பட்டவனாக மெய்மறந்து போய் அவளை நோக்கிப் பாய்ந்தான். சட்டென்று இரண்டடி பின்வாங்கி நின்று கொண்டாள் சாரதா. கூரிய சிரிப்பொன்று சிரித்துக் கொண்டு, ”இவ்வளவு பிரேமை உங்களுக்கு எப்போது உதித்தது?” என்று அவனைப் பார்த்து கொண்டே கேட்டாள். அவளுடைய அந்த தீஷண்ய வகசிதமான சிரிப்பு பாணம் போல நடராஜனின் உள்ளத்தில் தைத்தது. ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நின்று, பிறகு தெளிவடைந்து, ”சாரதா உன் தயாளத்தை நம்பி எனது தவறை உன் முகத்தின் முன் ஒப்புக்கொண்டு, உனது மன்னிப்பையும் உன்னையும் கேட்கிறேன். என்னை ஏமாற்…”

எட்டிக் கசப்பை விழுங்குவது போல அந்த வார்த்தைகளை வாங்கிக் கொண்ட சாரதாவின் தோற்றத்தைக் கண்ட நடராஜன் மேலே பேசத் தெரியாமல் திகைத்து நின்றான்.

நிலைமையைச் சமாளித்துக்கொண்டு சகஜ பாவத்துடன் சாரதா, ”உட்காருங்களேன். தீர்த்தம் வேண்டுமா?” என்றாள் உபசாரமாக, ”வேண்டும். கொண்டு வா” என்றான். வந்ததும் வாங்கிக் குடித்தான். உட்கார்ந்து கொண்டான், பேசாமல் எதிரே சிலை போல நிற்கும் மனைவியை உற்றுப் பார்த்தான் ஐந்து நிமிஷம். ஐந்து வருஷங்களுக்கு முன்பு எந்தக் கம்பீர ரூபத்தையும். ஞான சோபைபையும் கண்டு தன் உள்ளத்தைப் பறிகொடுத்தானோ… அதே கம்பீர ரூபமும் தேஜஸும் அவளுடைய தோற்றத்தை மறுமுறையாக அதுவும் ஸ்பஷ்டமாகக் கண்டான். மனம் படாதபாடு பட்டது. தத்தளித்து உருகினான். அதே அளவில் குரலும் கெஞ்ச, ”சாரதா. வா இப்படி உட்காரு என் பக்கத்தில். மாட்டாயா?” என்று விம்மினான்.

Image

ஒரு காலத்தில் மெழுகு போன்ற சுபாவமாக இருந்த சாரதா இன்று இரும்பு வன்மை பெற்ற தன்மையுடன் தீர்க்கமான குரலில், ”இருக்கட்டும். இந்திராவும் குழந்தையும் சௌக்யம்தானே?” என்று கேட்டுக்கொண்டே நின்ற இடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள்.

கேள்விக்கு செவிகொடாதவனாக இரு கைகளையும் ஒரு நெற்றியில் ஊன்றிக்கொண்டு பூமியை நோக்கினான். அவனுடைய இரு கண்களிலிருந்தும் நீர் கொட்டிக்கொண்டிருந்தது.

அப்படியாக அரை மணி நேரம் சென்றது. வேகம் தணிந்து அவன் தலை நிமிரும் வரையிலும் சாரதா கல் மாதிரி உட்கார்ந்திருந்தாள்.

பிறகு அவனாக ஓய்ந்து தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான். நீர் வழியும் கண்களுடன் தேம்பிக்கொண்டு, ”சாரதா, போதும், இரங்கு எனக்கு” என்றான் பரிதாபமாக.

”நீங்கள் என்ன சிறு குழந்தையா? ஆண் பிள்ளைகளுக்குக் கண்களில் ஜலம் வரக்கூடாது. அது கோழைத்தனத்தின் அறிகுறியல்லவா? அந்த வகையில் நான் உங்களை மதிப்பிட மாட்டேன். முதலில் கண்களைத் துடைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

”நானா துடைத்துக்கொள்ளவேண்டும், சாரதா? உன் மனதை எவ்வளவு இறுக்கிவிட்டேன் பாபி! என் கண்ணே! உனது அன்பு எங்கே! அதை என் மீது சொரி, இல்லாவிட்டால் உயிர் வாழ என்னால் சாத்தியமில்லை… சாரதா…”

”ராஜா! கொஞ்சம் பொறுங்கள். இருந்த அன்பையெல்லாம் அன்றே உங்களுக்கு அளித்துவிட்டேன். பாக்கி வைத்திருக்கவில்லை, இன்று கொடுக்க! ஆண்களின் அன்புக்கும் பெண்களுக்கும் இதுதான் வித்தியாசம். உங்களுக்குத் தெரியாத தத்துவமா இது?”

”ஆமாம், உண்மை, நிஜமான வார்த்தை, பிறந்து பிறந்து மாய்வதும் நிமிஷத்தில் மாறுதலடைந்து விடும் சபல சித்தமும்தான் ஆண்களின் அன்பு என்று சொல்லுகிறாய்! வாஸ்தவம். இதே வீட்டில் முதல் முதலாக உன்னைக் கண்டதுமே உனது கம்பீர உருவமும் நளினமான சுபாவமும் என்னை ஆட்கொண்டது. உன்னை எனது மனைவியாக்கிக் கொண்டேன். நான் புருஷன், நீ மனைவி, எனது கட்டளைப்படி நீ நடக்கவேண்டியது என்ற நினைப்பில் என் மனம்போன போக்கிலெல்லாம் உன்னை நடத்தினேன். எதனால்? மனைவி என்பவள் கணவனுடைய அடிமை என்ற ஆவேசத்தில். உனக்கும் ஒரு மனம், அபிலாஷைகள், உணர்ச்சி என்பதிருக்கிறது என்ற ஞாபகமே இன்றி உன்னை எனது இஷ்டப்படி ஆட்டுவித்தேன். அது மட்டுமல்ல, என்றாவது ஒருநாள் உனது உயர்வை நீ சூசகமாக நினைவூட்டுவதுகூட எனக்கு விஷயமாக இருந்தது. ரொம்ப சாதாரணமாக அதைச் சகித்துக்கொண்டு போனாய். எனது போதாத காலத்தின் விளைவாக உன்னை மாதக் கணக்காகத் தனிமையில் திணறவிட்டுவிட்டு, வாட்டி, வதக்கி, உன்னால் எனக்குச் சுகமே கிடையாது என்று நேருக்கு நேராக நின்று முகத்தைப் பார்த்துக் கேட்டேன். அதையும் பொறுத்துக்கொண்டாய். தவறு என்னுடையதாக இருக்க உன்னை மலடு என்று மனம் துணிந்து கூறி எனது உதாசீனத்தைக் காட்டி எனது திருப்திக்கு உன்னை இரையாக்கிக் கொண்டேன். அதையும் சகித்துக்கொண்டு வாய் திறவாமல் எனக்கு மறுமணம் செய்வித்து – அந்தச் சிறுமைப்படுத்தி – எனக்களித்துவிட்டு அப்போதும் உனது தன்மை மாறாது, என் வீட்டில் ஒரு வேலைக்காரியின் நிலைமையில் இருந்தாய்! சாரதா, ஆண்டவன் உன் பக்கத்தில் இருந்து அதே சமயத்தில் எனது கொடிய சித்தவிருத்தியை விளம்பரம் செய்ய உன்மூலம் எனக்கு ஒரு மகனையளித்தார். அதுவும் என் குழந்தை என்ற நினைவே எனக்கு இல்லாமல் போய் – அவளுக்குப் பிறந்த குழந்தையைக் குலாவி உனது குழந்தையை வெறுத்தேன். எனது வெறுப்பையும் வேண்டாமையையும் அங்கீகாரம் செய்து அந்த என் மாணிக்கத்தை மண்ணுக்கு இரையாக்கிவிட்டு அதன் பிறகும் மனோதிடத்துடன் என் வீட்டில் இருந்தாய்…”

”ராஜா, அதே மனதிடம் இன்னும் என் மனதிலிருக்கிறது, இருங்கள். பிற்பாதியை நான் முடித்து விடுகிறேன். நீங்கள் என்னை நடத்திய விதம் என்னை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. எனது லோகானுபத்தை விருத்தி செய்தது! அதையெல்லாம் பற்றி இப்போது என் மனதில் ஒருவித நினைவும் இல்லை! ஆமாம், இன்று கேட்கிறேன் சாவகாசமாக. குழந்தை இறந்த அன்று என்னை வந்து துக்கம் விசாரித்தீர்களே, அதன் அர்த்தம் என்ன?”

”ஒரு தரமல்ல, லட்சம் தரம் கேள். நான் அபராதி. அது நீ ஈன்ற குழந்தைதானே! அந்த நினைப்பில் கேட்டிருக்கிறேன். எனக்குப் பாத்தியம் என்ற நினைவு இருந்தாலன்றோ நான் துக்கப்பட! சாரதா, அந்தப் பாதகச்செயலுக்காக ஒவ்வொரு நிமிஷமும் என்னை நான் தண்டித்துக்கொண்டிருக்கிறேன். உனக்காக இதை நான் சொல்லவில்லை….”

”சரி, அது இருக்கட்டும், சந்துரு நன்றாகப் பேசுகிறானா?”

”வா சாரதா, வந்து பார் அவனை.”

”சௌக்யமாக இருக்கட்டும். எனது பாபக் கண்களால் அவனைப் பார்க்கவேண்டாம்.”

”யாருடையது பாபக் கண்கள்? சுகத்தையும் துக்கத்தையும் சமதிருஷ்டியுடன் பார்க்கும் உனது கண்களா பாபக்கண்கள்? சாரதா, உனது சுபாவத்தின் மேன்மையை முதலிலும் முடிவிலும் கண்ட நான், நடுவில் ஏன் காணவில்லை?”

”அதிசயமென்ன இருக்கிறது இதில்? விதியாகிய படுதா நம்மிருவருக்கும் நடுவில் இருந்தது.”

”இப்போது இல்லை. சாரதா. வா, என்னருகில்.”

”இனி அதற்குத் தேவை இல்லை.”

”எனக்கு இருக்கிறது. வா, நீ இல்லாமல் வீடு நன்றாக இல்லை.”

நடராஜன் இந்த வார்த்தையைச் சிந்தியதுதான் தாமதம். சாந்த ஸ்வரூபமாக நின்ற சாரதா வினாடியில் சீறியெழுந்தாள். அவளுடைய கண்கள் தணலாக ஜொலித்தன.

”என்ன சொன்னீர்கள்? நானின்றி வீடு நன்றாக இல்லையா?”

”ஆமாம், நன்றாக இல்லை. எல்லாம் மறந்துவிடு. நமது கஷ்ட காலம் நீங்கிவிட்டது.”

”என்றோ நீங்கிவிட்டது – இன்றல்ல!”

”எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லு. சாரதா, உன் வீட்டுக்கு நீ வர வேண்டாமா?”

”என் வீடா! அதெங்கிருக்கிறது? அந்த வீட்டில் உங்கள் குழந்தைக்கே அன்னமும் இடமும் இல்லை என்றால் எனக்கு எங்கிருந்து கிடைக்கும்? ஒரு காலத்தில் உங்களுக்கு இந்தக் கழிவிரக்கம் தோன்றாமல் இருக்காது என்பது எனக்குத் தெரியும். எனக்குப் பதிலாகத்தான் இந்திரா இருக்கிறாளே! நீங்கள் கருதியபடி மலடியாக நின்று விடாமல் காத்த கடவுள் கருணாநிதி! அது போதும் என்ற திருப்தியுடன் உங்களுக்குப் பாரமாக அங்கிருந்துகொண்டு என்ன பயன்? வந்துவிட்டேன்! எனது பர்த்தா சுகமடைய வேண்டி அதற்கானதைச் செய்து எனது ஆயத்தை நான் நிறைவேற்றிவிட்டேன். நான் அவளுக்குக் கற்றுக் கொடுத்த பதி சேவையை அவளே எனக்குப் போதிக்கும் அளவில் உயர்வடைந்து விட்டாள். என் வேலை சித்தியாகி விட்டது. எனது துயரமும் இன்றோடு நிவர்த்தி. உங்களையும் மறுமுறையாகக் கண்டுவிட்டேன். துயரம் தீர்த்த தங்களுடைய பாதங்களுக்கு நமஸ்காரம்!”

”நிஜம்தானா, சாரதா, இது?”

”எனது சுபாவம் என்றும் ஒரே மாதிரிதான், சுயநலமற்றது என்று நிமிர்ந்து சொல்ல இடம் வைத்துக்கொண்டுதான் நான் மனிதர்களுடன் பழகுகிறேன். எனது முடிவில் தவறுதல் ஏற்பட இடமே கிடையாது”

”மிஞ்சி விட்டாயா உன் கணவனை?”

”ராஜா, அது விதியின் கூற்று. என்னதல்ல. இந்த ஞானமில்லா விடில் நான் என்றோ தற்கொலை புரிந்துகொண்டிருப்பேன்” என்றாள் சாந்தமாக.

சாரதாவின் பதிலில் ஆழ்ந்தபடியே வெளியுலகைப் பார்த்தான் நடராஜன்.

வெளியே நிகழும் ஆர்ப்பாட்டம் அவனுடைய உள்ளப் போராட்டத்திற்கு எவ்விதத்திலும் குறைந்திருக்கவில்லை.

கு.ப.சேது அம்மாள் (1908 - நவம்பர் 5, 2002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை. வாழ்க்கைக் குறிப்புசேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *