லேசாக தூறல் ஆரம்பித்தது.மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்று விடலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன். அவசரம் புரியாமல் செருப்பு வார் அறுந்து காலை இழுத்தது.இந்த ஊருக்கு ஆறு வருடம் கழித்து இப்போதுதான் வருகிறேன். சுற்றி முற்றி பார்க்கிறேன்… செருப்பு கடை எதுவும் கண்ணில் தென்படவில்லை. தூரத்தில் ரோட்டோரம் குடையை விரித்து கடை போட்டு அறுந்த செறுப்புகளை ஒருவன் தைத்துக்கொண்டிருந்தான்.
சமாளித்து நடந்து,
“ஏம்ப்பா… இந்த செருப்பை கொஞ்சம் தைச்சிடுப்பா… ஸ்கூலுக்கு நேரமாகுது…” கால்களை விட்டு கழற்றினேன்.
நிமிர்ந்து பார்த்தவன், சட்டென்று என் கால்களை தொட்டு வணங்கி எழுந்து நின்று, “ கண்ணன் சார்…என்னை தெரியலையா? நாந்தான் உங்க மாணவன் செங்கோடன்….”
“ அட செங்கோடனா? பார்த்து ரொம்ப நாளாச்சு இல்ல… அதான் அடையாளமே தெரியலை.. இங்க எப்படி? என்ன செய்யறே? கேள்விகள்தான் என் உதட்டிலிருந்து புறப்பட்டது.
நினைவு ஆறு வருடங்களுக்கு முன் சென்றது….
என் அப்பாவும் ஆசிரியர்தான்.அவரிடம் படித்த மாணவர்கள் நிறைய பேர் நான் இன்னவாக இருக்கிறேன் என்று பெருமையாக சொல்லி இனிப்பு தந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள்.
அதை பார்க்கும் போதெல்லாம் ஆசிரியர் பணி மேல் ஒரு மரியாதை. நானும் ஆசிரியராக வேண்டுமென்றே ஆசிரிய பயிற்சி முடித்தேன். அப்போது புதுக்கோட்டை அரசு பள்ளியில்தான் முதல் பணியாக சேர்ந்தேன்.
டவுனை விட்டு ஒரு கிராமத்திலிருந்தது அந்த அரசு பள்ளிக்கூடம். அரசு பள்ளிக்கூடங்கள் என்றால் ஏழைப்பிள்ளைகள் மட்டும் படிக்கும் இடமாகிவிட்டது. அந்த ஊரில் தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் தொலைவு என்பதால் ஓரளவு வசதியுள்ள பிள்ளைகளும் அங்குதான் படித்து கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு வகுப்பிலும் ஏழை மாணவர்களை தீண்டத்தகாதவர்களை போல் ஒதுக்கி வைத்திருந்தார்கள். அப்படித்தான் என் வகுப்பில் இந்த செங்கோடனிடம் யாரும் பேசுவதில்லை.
முதல் நாள் வகுப்பில், எல்லா மாணவர்களின் பெயரை கேட்டு, நட்பாக கை குலுக்கி வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டிருந்தேன். கடைசி பெஞ்சில் இருந்த அந்த மாணவன் மட்டும் தயங்கி நின்று கொண்டிருந்தான். எண்ணெய் காணாமல், வறண்ட தலைமுடியுடன் அழுக்குச் சட்டையுடன் என்னிடம் வர தயங்கி கொண்டிருந்தான்.
“ வாப்பா… தம்பி உன் பேர் என்ன..?”
பக்கத்திலிருந்த சில மாணவர்கள்,” அய்யய்யே… சார்… அவனுக்கு கை கொடுக்காதீங்க அவன் குளிச்சே இருக்கமாட்டான்…..”
நான் அதை காதில் வாங்காமல் அவனை பார்த்து புன்னகைத்து, “ இங்க வாப்பா… உன் பேரை தயங்காம சொல்லு….”
“ செங்கோடன் சார்…”
அவன் கையை பிடித்து குலுக்கி, “ குட்… நல்லா படிக்கனும், பாடம் புரியலைன்னா எப்ப வேணா எங்கிட்ட சந்தேகம் கேட்கலாம். வகுப்பு முடிஞ்சதும் என்னை வந்து பாரு…”
தலையாட்டினான்.வகுப்பு முடிந்ததும் ஓய்வு அறையில் இருந்த என்னிடம் வந்தான்.
“செங்கோடா பள்ளிக்கு வரும்போது தினமும் குளிக்கனும். குளிச்சாதான் சுகாதாரமா இருக்க முடியும் என்ன…?”
“சார் குளிச்சிட்டுதான் வர்றேன்.சோப்பு போட்டு குளிக்காததால் அப்படி தெரியுது. அம்மா கிட்ட கேட்டா இப்ப வாங்கித் தர்றேன்… அப்ப வாங்கித் தர்றேன்னு திட்டுவாங்க…”
“உங்க அப்பா என்ன வேலை செய்யுறார்?”
“ சார், அப்பா ரோட்டோரமா அறுந்த செருப்பெல்லாம் தைப்பார். லீவு நாள்ல நானும் செய்வேன். அம்மாவுக்கு காலையில் தோட்டத்துல பூ பறிக்கிற வேலை. என்னையும் தம்பியையும் கூடவே அழைச்சிகிட்டு போவாங்க, நாங்க பறிச்சாதான் அம்மா இட்லி, தோசைன்னு ஆயா கடையில் வாங்கி தந்து ஸ்கூலுக்கு அனுப்புவாங்க….”
“சரி, சரி, இனிமே நல்லா படிக்கனும், நல்ல மார்க் வாங்கி உத்தியோகத்துக்கு போய் அப்பா, அம்மா கஷ்டத்தை போக்கனும் , என்ன…?”
“ சார் நல்லாத்தான் படிக்கிறேன்… அம்மா காலையில் தோட்டத்துக்கு கூட்டிக்கிட்டு போகாம இருந்தா இன்னும் படிச்சி முதல் ரேங்க் வாங்குவேன் சார்….”
செங்கோடன் ரேங்க் கார்டை எடுத்து பார்த்தேன். எல்லா தேர்வுகளிலும் முதல் ஐந்து ரேங்குக்குள் பெற்று இருந்தான்.
மறு நாள் இரண்டு குளியல், துணி சோப்புகளையும், எண்ணை, பவுடர் வாங்கி வைத்து செங்கோடனை அழைத்து தந்தேன்.” இனிமே துணியெல்லாம் அழுக்கு போக துவைச்சி போட்டுட்டு வரனும். நாளைக்கு உங்க அம்மாகிட்ட பேசி உனக்கு படிக்க தடையில்லாம செய்யுறேன்… சரியா?” என்றேன்.
வாங்க கூட்டப்பட்டவனை வற்புறுத்தி திணித்தேன். கண்கள் கலங்கி , “ ரொம்ப தேங்க்ஸ் சார் “ என்றான்.
சக ஆசிரியரான விஸ்வம், “ என்ன சார் இதுங்க கிட்ட எல்லாம் வெச்சிகிட்டு… ஒண்ணுத்துக்கும் படிப்பு ஏறாது. யூஸ்லெஸ் பசங்க. கிளாஸ்ல பேனும் இல்ல, இவனுங்க குளிக்காம வர்ற ஸ்மெல்… இது எல்லாம் சகிச்சிக்கிட்டு இந்த வில்லேஜ்ல வேலை பார்க்கிறதே பெரிய விஷயம். நானே எப்படியாவது ட்ரான்ஸ்பருக்கு ட்ரை பண்ணிட்டிருக்கேன். இதை எல்லாம் கண்டுக்காதீங்க…”
எனக்கு அவர்மேல் கோபம் வந்தது. என்னமோ தர்மத்துக்கு வேலை செய்வது போல் நினைக்கிறாரே, பெற்றோர்கள் எதுவும் கேட்க போவதில்லை என்பதால், பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பில் ஒன்றுமே நடத்தாமல் காலத்தை போக்கி கொண்டிருந்தார்கள். இவர்கள் கடமையை செய்யாமல் மாணவர்களை குறை கூறுகிறார்கள். இதுபற்றி தலைமை ஆசிரியரிடம் பேசி அவர் தனிப்பட்ட முறையில் அறிவுரை சொல்ல வைத்ததால் , என் மீது மற்ற ஆசிரியர்களுக்கு கோபம்.
வகுப்பில் ஒரு உண்டியல் வைத்தேன்.
“இருக்கிறவங்க முடிஞ்சதை இந்த உண்டியல்ல போடுங்க. ஒரு மாதம் சேர்ந்ததும் அதில் இருக்கிற காசுக்கு எண்ணை, பவுடர் வாங்கி ஷெல்பில் வச்சுடனும். என்ன சரியா…?”
“ சரி சார்…”
குழந்தைகளுக்கு வழி நடத்த ஆள் இருந்தால் போதும், இந்த சமுதாயத்தையே புரட்டி போடுவார்கள். மாதம் தோறும் வகுப்பில் எண்ணை, பவுடர் , ரொட்டி என்று வாங்கி வைத்தார்கள். ஏழை மாணவர்கள் சுத்தமாக தலை வாரி, பசிக்கும் போது பிஸ்கெட்டை எடுத்து கொண்டார்கள். காலையில் வந்தவுடன் ஒவ்வொரு நாள் ஒருவர் வகுப்பை தூய்மை செய்து , நாள் தோறும் ஒரு குறளை போர்டில் எழுதி வைத்தார்கள்.
இன்று அண்ணா பிறந்த நாள்… இன்று மகாத்மா பிறந்த நாள்… என்று ஒவ்வொரு தலைவர்களின் பெயரையும் சொல்லி , அன்று ஒரு மரக்கன்றை நட செய்து, அந்த மரத்திற்கு அருகில் பெயிண்டில் தலைவர்கள் பெயரையும் மாணவர்களை கொண்டு எழுதினேன். ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு குரூப் நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்.
கிட்டத்தட்ட ஆறுமாதத்திற்குள்ளயே அந்த பள்ளி நந்தவனமானது.செங்கோடன் முதல் மதிப்பெண் பெற்று நன்றாக படித்துக்கொண்டிருந்தான். சக மாணவர்களும் வேற்றுமை மறந்து அவனுடன் நட்பு பாராட்டியும், சந்தேகங்களை அவனிடம் கேட்டும் படித்து கொண்டிருந்தனர்.மாணவர்களின் தேர்ச்சி நூறுசதவீதமாய் ஆனதில் தலைமை ஆசிரியர் பெரிதும் மகிழ்ந்தார்.
அன்று எனக்கு பிறந்த நாள் தலைமை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்ட மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து வகுப்பு அருகே ஒரு வேப்பங்கன்றை நட்டு , “ கண்ணன் சார் பல்லாண்டு வாழ்க என்று எழுதி வைத்தார்கள்.
அன்று மதியம் செங்கோடன் என் ஓய்வு அறைக்குள் வந்து, தயங்கியபடி ஒரு பார்சலை நீட்டினான், “சார் தப்பா நினைச்சிக்காதீங்க…என்னால் முடிஞ்சது….”
குழப்பத்துடன் வாங்கி பிரித்துப் பார்த்தேன், புத்தம் புதிய செருப்பு ஒரு ஜோடி!
“ சார் அப்பா தைச்சதுதான்..”
அவனை கட்டியணைத்து பரிவாக, “ செங்கோடா.. நான் இதை மறுக்கிறேன்னு வருத்தப்படக்கூடாது.இதை அப்பா வித்தா நூறு ரூபாயவது கிடைக்குமில்லையா? இதை அப்பாவிடமே தந்து விடு… நீ படித்து வேலைக்கு போன பின்னாடி, உன் உழைப்பில் எது வாங்கிதந்தாலும் வாங்கிக்கிறேன்… சரியா?”
முகம் கொஞ்சம் ஏமாற்றமடைந்தாலும், “ சரி சார், நான் நல்லா படிச்சி டாக்டராகி, நீங்க எங்க இருந்தாலும் தேடி வந்து பார்ப்பேன்….” கண்களில் உறுதியோடு சொன்னவனை சாதனைச்சுடராய் பார்த்தேன்.
மாணவர்களை புத்தகம் படிக்கும் எந்திரங்களாக மட்டும் ஆக்காமல், நல்ல மனித சமுதாயமாக வளர என் வகுப்பை பயன் படுத்தி கொண்டேன்.
“ இந்த வகுப்பில் யாரெல்லாம் பொய் சொல்றவங்க… கையை உயர்த்துங்க…..?”
செங்கோடன் மட்டும் கையை உயர்த்தினான்.
“வெரிகுட் ! என்ன எல்லோரும் பார்க்கிறீங்க? பொய் சொல்றதுக்காக நான் அவனை பாரட்டலை.அதை உண்மையாக ஒத்து கொண்டானே அதுக்காகத்தான். ரைட்… நீ என்ன பொய் பேசுவ செங்கோடா?”
“ நான் எழுதும் போதே அம்மா கடைக்கு அனுப்பும். நான் கால் வலிக்குதுன்னு பொய் சொல்லி உட்கார்ந்துடுவேன்.”
“ம்… எழுதற வேலை கெட்டுடாக்கூடாதேன்னு சின்ன பொய் சொல்லியிருக்கான்…இதைப் போலத்தான் சின்ன சின்ன விஷயங்களுக்கு நீங்களும் பொய் சொல்லியிருப்பீங்க. ஆனா, அந்த பழக்கம் பிற்காலத்துல ஒரு தீய செயலுக்கும் சொல்ல வைக்கும். மாணவர்களே, முதல்ல நம்மை உண்மையா வெச்சிக்கணும் சரியா? ஒரு நோட்டை எடுத்து நம்ம கிட்ட மத்தவங்களுக்கு நன்மை தர்ற குணம் என்னென்ன…. தீமை தர்ற குணம் என்னென்ன இருக்குன்னு ஒரு லிஸ்ட் போட்டுக்கங்க. இப்ப தீமை தர்ற குணங்களை சரி பண்ணிடலாம்.”
“ சார் எங்களுக்கே தெரியாம இத்தனை விரும்பத்தகாத குணங்கள் இருந்திருக்கு…இனி மாற்றிக்கொள்வோம்.!” ஒவ்வொருவராய் நோட்டை நீட்டி உறுதி மொழி எடுத்து கொண்டார்கள்.
மாணவர்களிடத்தில் உண்மையும், நேர்மையும் விதைக்கப்பட்டுவிட்டது.இது போன்ற மாணவர்களால் இந்தியாவை வல்லராசாக்க முடியும் என்ற நம்பிக்கையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கனவுகளை உருவாக்கினேன்.
“ நீங்க எதிர்காலத்துல சமுதாயத்திற்கு என்ன செய்ய போறீங்க?”
“ சார் நான் நவீன விஞ்ஞானம் படிச்சு விவசாயத்தில் சிறந்த நாடா நம்ம நாட்டை கொண்டு வருவேன்…”
“ நான் அரசியல் படித்து நேர்மையான அரசியல் செய்யப்போறேன்…”
“ கலெக்டராகி மக்கள் துயரை துடைப்பேன்….”
“ சார் , நான் மருத்துவராகி, என்னை மாதிரி ஏழை மக்களுக்கு இலவசமா புனித பணியா செய்வேன்….” செங்கோடன் குரலில் உறுதி தெரிந்தது.
அந்த பள்ளியிலிருந்து மூன்று வருடங்களுக்கு பிறகு, பணி உயர்வில் என்னை வேறு ஊருக்கு மாற்றி விட்டார்கள். செங்கோடன் ஒன்பதாம் வகுப்பு வந்துவிட்டிருந்தான். அன்று கடைசி வகுப்பில் பிரிய மனமில்லாமல் கலங்கி அழுதான். எல்லா மாணவர்களுக்கும் நல்ல நம்பிக்கையை விதைத்து விட்டு கிளம்பினேன்.
ஆறு வருடங்களுக்கு பிறகு , இதே ஊருக்கு மாறுதல்…..
“ ஐயா…. நான் டாக்டராகி, உங்களை எங்கிருந்தாலும் பார்ப்பேன்னு சொன்னேன்.. திடீர்னு அப்பா செத்துப் போயிட்டார்யா… எனக்கு வேற வழி தெரியலை. அம்மாவையும், தம்பியையும் நாந்தான் பார்த்துக்கிறேன். தம்பியை மட்டும் ஸ்கூலை விட்டு நிறுத்தாம படிக்க வெச்சிட்டிருக்கேன். எப்பாடு பட்டாவது அவனை நல்லா கொண்டு வந்துருவேன்யா….”
மரமாகி விழுது பரப்பும் என்று நினைத்திருந்த சில கன்றுகள், முளையிலே சிதைந்து போன காலத்தின் கொடுமைகளை நினைத்து என் கண்கள் கலங்கியது.
என் கண்ணீரைப் பார்த்தவன்,” எனக்கு இது கூட பிடிச்சுத்தான் இருக்கு ஐயா… தம்பி படிச்சிட்டான்னா, ஒரு கடை திறந்திடுவேன்….” கண்களில் தேக்க முயன்று தோற்று போய் வழிந்த நீரை துடைத்து கொண்டான்.
வறுமை வளைத்து, மீண்டும் அப்பாவின் தொழிலுக்கே வந்துவிட்ட அவனுக்கு என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை. “ உழைத்து பிழைக்கும் எந்த வேலையும் குறைவு இல்லப்பா.. உன் தம்பி நிச்சயம் உன் கனவுகளை நிறைவேத்துவான்….” நூறு ரூபாயை நீட்டினேன்.
“ சார் பதினைந்து ரூபாதான் ஆச்சு…” மிச்சம் தந்தான்.மிச்சம் வாங்க மனசில்லை.அவன் தன்மானத்திற்கு பங்கம் வரக்கூடாதென்று வாங்கிக்கொண்டேன்.
“சார் ஒரு நிமிஷம்….”
திரும்பினேன். புத்தம் புதிய ஒரு ஜோடி செருப்பை ஒரு கவரில் போட்டு, “ இது என் உழைப்பில் கொடுக்கிறதுதான் சார்… ஆசையா கொடுக்கிறேன்… எனக்காக இதை வாங்கிக்கணும்…”
இந்த முறை என்னால மறுக்க முடியவில்லை. வாங்கிக்கொண்டு கிளம்பினேன். இரண்டடி நடந்ததும் மீண்டும் திரும்பி பார்த்தேன். என்னையே பார்த்து கொண்டிருந்தவன் கையெடுத்து கும்பிட்டு தலையாட்டினான்.
மீண்டும் பள்ளிக்குள் நுழைகிறேன். மகாத்மா, அண்ணா, காமராஜர் என்று நெடிதாக வளர்ந்திருந்தன மரங்கள்.
‘கண்ணன் சார்’ பெயர் தாங்கிய அந்த மரம் பெரிய கிளைகளை பரப்பி அந்த இடம் முழுதும் நிழலை பரப்பி இருந்தது.
இன்னொரு செங்கோடனின் கனவுகள் இந்த பூமியில் சிதையக்கூடாது இறைவா….. பிரார்த்தனையுடன் நுழைகிறேன்.
– டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.
அருமையான கதை. ஆசிரியர்கள் பாரபட்சமில்லாமல் நடத்தினால், வசதி குறைந்த மாணவர்கள் அனேகர் முன்னேறலாம். இவர்கள் வீட்டிலும், பள்ளியிலும் வசவு மட்டுமே வாங்குவதால், ஒரு ஆசிரியராவது அன்பாக நடத்தினால், முன்னேற வாய்ப்புண்டு.