கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 8, 2022
பார்வையிட்டோர்: 15,883 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எனக்கு பள்ளிக்கூடம் போக விருப்பந்தான். அப்ப ஏன் போகலையாமுன்னு கேட்கிறீங்களா? விருப்பம் மட்டும் இருந்தா பள்ளிக்கூடம் போக முடியுமா? நான் பள்ளிக்கூடம் போயிட்டா அம்பிப் பயலை யாரு பாத்துக்கிறதாம்?… மலைக்குத் தேத்தண்ணி கொண்டு போறது யாராம், கேக்கிறேன்!”

“நாலெழுத்துக் கத்துக்கிட்டா தேவலை ஆம்பளபுள்ள நாளைக்குப் பின்ன ஒருத்தன் முன்னுக்கு வெரல நீட்டிக்கிட்டு நின்டா நல்லாவா இருக்கும் எப்ப பார்த்தாலும் அம்மா இப்படியேதான். சொல்லுது எந்த நேரமும் இதே கதைதான் பாட்டாபாடுது, நான் ஒன்னும் அப்படி மக்கு இல்ல. இந்த அம்மாதான் மக்கு. எனக்கு நல்லா பேர் எழுத தெரியும். என் பேரு அம்மா பேரு அம்பி பய பேரெல்லாம் கூட எழுதியிருவேனே? லயத்துக் கோடியில பந்தம் பிடிக்காதே’ன்னு பெருசா எழுதி சாணியால அழிச்சி மறைச்சிருக்கு இல்லையா…… அதற்கு கீழே ஒரு ஓரத்தில்ல கோழி(ள்) சொல்லாதேன்னு’ சிறுசா கரிக்கட்டயால எழுதிவச்சிருக்கிறது யாராம்… ஓ… அது நான்தான்!

எழுதமட்டுமா! வாசிக்கவும் தெரியும். தமிழ்மலர் கடைசிப் பக்கத்தில உள்ள ஆத்திசூடி, கொன்றைவேந்தன் எல்லாம்கூட தண்ணிப் பாடம் இப்ப கேட்டாலும் கூட கடகடன்னு சொல்லுவேன்.

மேட்டு லயத்திலிருந்து ராசு வந்தான். சிகப்பு வார் கட்டின கெற்றப் போல் வச்சி இருந்தான். வாடா சுப்பு, குருவி அடிக்கப்போவோம்னு கூப்பிட்டான். போ…. நான் வரமாட்டேன்னு சொல்லிப்புட்டேன். இன்னைக்கு மட்டும் வாடா … வாடா’ன்னு கூப்பிட்டான்.

ஐயோ! நான் போகவே மாட்டேன். அம்மா கண்டால் தோலை உரிச்சுப் போடும்.

ச்சீ… இந்த ராசு பெரிய மோசம், பள்ளிக்கூடத்திற்குப் போகாம ஒழிஞ்சு திரியுறான். ஆனால் கெற்றப்போல் மட்டும் நல்லா லெக்கு வச்சு அடிப்பான். பெரிய ஆளாக வந்தோடன தோக்க எடுத்துக்கிட்டு ஸ்டோருக்கு காவல் பார்க்கப் போவானாம்! பெருசா….. கறுப்பா மீசை இல்லாம எப்படி காவல் வேலை பார்க்கிறதாம்! இவன் இப்படித்தான் எப்ப பார்த்தாலும் பொய் பொய்யாகச் சொல்வான்.

ராசுவுக்கு அம்மா….. அப்பா…. அண்ணா .. அக்கா, தம்பி, தங்கச்சி எல்லோரும் இருக்காங்க. என்கூடப்பிறந்தவன் தம்பி மட்டுந்தான். அவன்பேரு தம்பிப்பிள்ளை. நான் அவனை அம்பியன்னுதான் கூப்பிடுவேன். ராசுவைப் போல எனக்கும் வீட்டு வேலைக்கு ஆள் இருந்தா நான் தினமும் பள்ளிக்கூடம் போவேன்.

ஒழுங்கா பள்ளிக்கூடம் போயிருந்தால் இந்த வருஷம் நாலாம்கிளாசுக்குப் பாஸ் பண்ணி இருப்பேன். கோபால் இப்ப டவுண் இஸ்கூல்ல நாலாம் கிளாஸ்தான் படிக்கிறான். போனவருஷம் நானும் அவனும் மூணாம் கிளாஸ்தான் படிச்சோம்.

கோபாலுவுங்க அப்பா கங்காணி வேல பாக்குது. நானும் அம்மா கிட்ட கோபாலுக்கு மாதிரி எனக்கும் தொப்பி, சாப்பாத்தெல்லாம் வாங்கித்தாம்மான்னு கேட்டேன். இப்ப சல்லி இல்ல சம்பளத்திற்கு வாங்கித் தாரேன்னு சொல்லிச்சி சம்பளத்திற்கு கேட்டா அடுத்தமாசம் பாப்போம்னு சொல்லும்.

எனக்கு அப்பா இல்ல. இஸ்டோருக்கு அடுப்புக்கு சவுக்கு மரம் வெட்டுகிற போது, “வாது அடிச்சி அப்பா செத்துப்போச்சு. அப்பா இருந்தால் எனக்கும் சப்பாத்து வாங்கித்தாப்பான்னு கேப்பேன்.

‘டவுண் பள்ளிக்கூடத்தில் புள்ளைகளுக்கு பால், இசுக்கோத்து எல்லாம் கொடுக்கிறாங்களாம். கோபாலுதான் சொன்னான். எங்க தோட்டத்து பள்ளிக் கூடத்திலேயும் கொடுத்தா என்னவாம். எங்களுக்கும் கொடுத்தால் நான் பாலைக் குடிச்சிட்டு இசுக்கோத்த அம்பிபயலுக்கு கொண்டாந்து கொடுத்திடுவேன்.”

அம்பிப்பய தொட்டியில இருந்துகிட்டு அழறான். நான் போய் அவனுக்கு மல்லித்தண்ணிய பருக்கிவிட்டுட்டு தூங்க வைக்கணும். இல்லாட்டி அம்மா வந்து ஏன்டா தம்பி அழுது இருக்கான் தம்பியை பார்த்துகிட்டு இருக்காம லயஞ்சுத்தப் போனியா..’ இனிமே போவியா…? போவியான்னு அடிக்கும். மெதுவாத்தான் அடிக்கும். அப்புறம் தேத்தண்ணி ஊத்தி கொடுக்கும். கருப்பட்டியும் கொடுக்கும். நான் கடிச்சிக்கிட்டே குடிப்பேன். அம்மாவுக்கு தெரியாம கருப்பட்டி எடுத்துத் தின்னா அடிக்கும்.

ஆராரோ ஆரிரரோ….ஆராரோ ஆரிரரோ…ஆரடிச்சி நீயழுர…

இந்த அம்பிப்பய ரொம்ப மோசம். எப்ப பார்த்தாலும் வீல்… வீல்ன்னு கத்துறான். அதுதான் அம்மா கிட்ட, தகப்பன் தின்னிப்பயலே எந்த நேரமும் கரையாதடா’ன்னு நல்லா ஏச்சு வாங்குறான். இரு… இரு… ஒனக்கு ஒரு நல்ல பாட்டா படிக்கிறேன். தோட்டத்தில் போட்ட ஏழையின் வெற்றி அல்லது நீதி வெல்லும் நாடகத்தில் வீரமுத்து பாடுன பாட்டு இது.

விவசாயி… விவசாயி

விவசாயி… கடவுள் என்னும்

முதலாளி….

தொட்டியை ஆட்டி விடறபோது மேலே முகட்டில இருந்து ஒட்டரை ஒட்டரையா கொட்டுது. வீட்டு உள்ளுக்கு தொட்டியை மாத்திக் கட்டுறதுக்கு வேற இடம் இல்ல. அந்தப்பக்கம் அடுப்பு, விறகு அட்டலெல்லாம் இருக்கும். அங்க இருந்து புகை வரும்.

அப்பா…. ஒரு மாதிரியா அம்பிபய தூங்கிட்டான் அவன் முழிச்சி எழும்புறதுக்கு முந்தி ஓடி ஒரு வாளி தண்ணி கொண்டாந்து வச்சிடனும். அப்புறம் மலைக்கு சோறு கட்டி கொடுத்திட்டு மிலாறுக்குப் போற பொடியன்களோட போயிட்டு ஒரு கட்டு மிலாறு கொண்டாந்து வச்சிட்டா, என் வேலை எல்லாம் முடிஞ்சிடும்….. ஓல்ரைட்.

வெள்ளிக்கிழமை அந்திக்கு ஸ்டோர்ல மணி அடிச்சாங்க. நான் ராமு, ராசு எல்லோரும் அரிசி புடிக்கப்போனோம். ‘நீ இனிமே பள்ளிக்கூடத்துக்கு வர மாட்டியா’ன்னு ராமு கேட்டான். நாம் அப்பிப்பய பெரிய ஆளாக வந்தோடன வருவேன்னு சொன்னேன்.

ராமு சொன்னான், ‘உங்களுக்கெல்லாம் சேரு நல்ல வேலை செய்யப் போறாராம்? என்ன செய்யப் போறாரு….?

“அது என்னமோ… எனக்குத் தெரியாது அடுத்த வாரம் சோதனை இருக்காம். நாளைக்கு கட்டாயம் வராத புள்ளைகளையெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு கூட்டிக்கிட்டு வரச்சொன்னாரு”

“வேற ஒன்னும் சொல்லலியா….? “வேற ஒன்னும் எங்க கிட்டச் சொல்லல்ல. டீச்சர் கிட்டதான் மெதுவாச் சொன்னாரு

“என்னா?”

“மகள்! வரவு ரொம்ப விழுந்துப்போச்சி. இன்ஸ்பெக்டர் வேறு அடுத்த வாரம் சோதனைக்கு வாராராம். இதை இப்படியே விட்டு வைச்ச மென்றால் ஒரு ஆள் வீட்டதான் போகவேண்டிவரும். புதுக்க வந்து சேர்க்குலரை பார்த்தாபயமா இருக்கு”

அரிசிக் காம்பராவை சுத்தி புள்ளைகளெல்லாம் கூடைப் பெட்டி, குட்டிச்சாகு எல்லாத்தையும் வச்சிக்கிட்டு நிற்குதுக, ஐயா பேரு வாசிக்க வாசிக்க ஒரு ஆளு அளந்து போடுவான். அரிசி மூட்டை மாவு மூட்டையெல்லாம் சுவத்தோரமா அடுக்கி இருக்கும் திண்ணையில் பள்ளிக்கூடத்தில் உள்ள போட்பலகை மாதிரி ஒருபலகை சுவத்தில் தொங்க வச்சியிருக்காங்க. அதுல அரிசி மாசியின்னு எல்லாம் எழுதியிருக்கு.

ராசு கூடைப்பெட்டியை என்கிட்ட கொடுத்திட்டு பங்களா மரத்திற்கு மாங்காய் பொறக்க போயிட்டான். நானும் ராமுவும் ஜன்னல் கண்ணாடியில எட்டிப்பார்த்தோம். உள்ளுக்கு ஐயாவுக்கு பக்கத்தில் சேரும் உக்கார்ந்து கிட்டு, கையை ஆட்டி ஆட்டி என்னமோவெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கிறாரு. ஒரே… பயம் ஜன்னலை விட்டு மெதுவா நகர்ந்திட்டேன்.

அரிசி புடிச்சி கிட்டு வீட்டுக்குப்போற புள்ளைகளெல்லாம் கண்ண துடைச்சிக் கிட்டு போவுதுக, வழமையா அரிசி போடற பிச்சைக் காரங்களுக்குகூட அரிசி போடல்ல. என்னா? என்னான்னு கையால சாட கேட்டா ஒன்னும் பதில் சொல்லுதுக இல்ல. அரிசி போடற இடத்தில் சத்தம் போட்டு கதைக்க ஏலாது. சத்தம் போட்டா வெறட்டுவாங்க.

செங்கான் நல்லமுத்து எட்டுக்கொத்து கிச்சான் அளந்து போட்ட அரிசியை வாங்கிக்கிட்டு போறான்.

“ரெண்டாவது மாரியாய் நாலு கொத்து”

அம்மா பேரு வாசிச்சோடன நான் கூடைப் பெட்டியை எடுத்துக்கிட்டு உள்ளுக்குப் போறேன். ஐயா என்னமோ கேக்கிற மாதிரி சேர் முகத்தை பார்க்கிறாரு. சேர்க்கையில வச்சியிருந்த காகிதத்துண்டை வாசிச்சுப் பார்த்துப்புட்டு பையன் எப்சண்டு’ன்னு சொல்றாரு.

ஐயா கால் சட்டை சேப்புல கையவிட்டு கைலேஞ்ச எடுத்து கண்ணாடியையும் முகத்தையும் தொடச்சிக்கிட்டே உங்களுக்கெல்லாம் ஒழுங்கா ஸ்கூலுக்கு போய் படிக்க ஏலாதா? தெரியாமலா வெள்ளக்காரன் இஸ்கூல் கட்டிப் போட்டிருக்கிறான். நாளைக்கு பேர் பதிஞ்சி வேலைக்குப் போகியின்னா எப்புடிடா கொழுந்து றாத்தல் கணக்கு வச்சிக்கிற போற? அட.. இத்தனை நாள் வேல செஞ்சிருக்கோமுன்னு பேரு கணக்கு சரி ஞாபகம் வச்சிக்கிற வேண்டாமா?”

எனக்குப் பயமா… இருக்கு ஒன்னுமே பதில் பேசல்ல. தலையை குனிஞ்சு கிட்டு கால் பெருவிரல் நகத்தால் சிமிந்தியை தேச்சிக்கிட்டு இருக்கிறேன்.

“பாருங்கோ ஐயா இதிலிருக்கின்ற வில்லங்கத்தை, ஆசிரிய தொழில் என்றால் மகத்தானது அல்லோ! நான் சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான். இந்த துறையை தெரிஞ்சன் பாருங்கோ! என்னிலும் படிப்புக் குறைஞ்ச என்ர ஒன்றுவிட்ட தமையன் பிஸ்னஸ்ல இறங்கி இன்றைக்கு லட்ச லட்சமாய் சம்பாதிச்சுப் போட்டான். எனக்கும் அப்படி செய்திருக்க இயலாதோ. இப்பவும் பாருங்கோ எவன்படிச்சாலென்ன படிக்காவிட்டாலென்ன என்று சம்பளத்தை வாங்கிக் கொண்டு மற்ற வாத்திமாரைப் போல லாத்தி திரிய ஏலாதே…”

“நீங்க கவலைப்படாதீங்க மாஸ்டர்” இப்ப அடிச்சியிருக்கிற துரும்பு அருமையானது. நாளைக்குப் பள்ளிக்கூடத்திற்கு போய் பாருங்களே, நீங்கள் மலைலச்சு போவீங்க. சரி கருப்பையா கூடப் பெட்டிக்கு ரெண்டு போடு”

ஐயா சொன்னோடன அரிசி போடுற ஆளு ரெண்டு கொத்து அளந்து போட்டிட்டு சொல்றான். “இஸ்கூலுக்குப் போவாத புள்ளைகளுக்கெல்லாம் அசிரி நிற்பாட்டி இருக்கு . இனி இஸ்கூலுக்கு போனாதான் அரிசி கெடைக்கும்.

நான் வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட சொன்னேன். அம்மா அழுதிச்சு. இந்த அம்மா பெரிய மோசம், எப்ப பார்த்தாலும் அழுகைதான்.

“பாவிப்பயலுக ஒரு புள்ள காம்பிரா கட்ட மாட்டேங்கிறானுகளே… தொரை தலைவர் மாருக்கு ஒதவி செஞ்சி கைக்குள போட்டிட்டாள் ” அம்மா. என்ன சொல்லுதோ தெரியல எனக்கு விளங்கல……..

“அப்ப ஒன்னுமே சொல்லல்ல. அடுத்த நாள் வேலை விட்டு வருகிற நேரம். அஞ்சாறு வாகைக்கம்பை பலகை மாதிரி சீவி எடுத்துக்கிட்டு வந்திச்சி, அப்புறம் இஸ்தோப்புல நாலு கட்ட கம்ப, நட்டு பலகை மாதிரி சீவிக்கிட்டு வந்த வாகைக்கம்ப சுத்திவரவச்சி அடிச்சிருச்சி இப்ப பாத்தா, கூடுமாதிரி இருக்கு. ரெண்டாம் புத்தகத்தில் புலியும் பிராமணனும் பாடத்தில் புலியின் சொல்லை நம்பி பிராமணன் திறந்து விட்டானே கூடு; அந்தப்படம் மாதிரியே இருக்கு.

நான் மெதுவாக கூட்டு உள்ளுக்குப் போனேன். கால் லேசா தட்டுப்பட்டு “படக்கின்னு” சத்தம் கேட்டிருச்சி.

நீ அதுல வெளையாடி ஒடைச்சுப்புடாத. அது ஒனக்கு இல்ல. அம்பிப்பயலுக் குத்தான். காலையில் தம்பியை உள்ளுக்கு விட்டுட்டு பள்ளிக் கூடத்திற்குப் போ.

அம்மா சொன்னோடன்ன நான் மெதுவா தாண்டி வந்துட்டேன். ஆனால் தம்பி பயலுக்குத் தாண்டிவர ஏலாது. நுழைஞ்சும் வர ஏலாது.

காலையில கூட்டுள்ளுக்கு சாக்கைவிரிச்சி அம்பிப்பயல படுக்க வச்சிட்டு, பள்ளிக்கூடத்திற்குப் போனேன். மேகணக்கு, டொப்டிவிசனிலிருந்தெல்லாம் புள்ளைகள் வந்திருந்தாங்க. எங்களையெல்லாம் கண்டோடன சேரும் டீச்சரும் பெருசா சிரிச்சாங்க.

“தெரியாமலா சொன்னான். எல்லா பிரச்சினைகளும் பொருளாதார பிரச்சினைதான்னு பொருளாதாரம்னா என்னா வயிறுதான்! வயிற்றில் கைவக்க…இங்கபள்ளிக்கூடம் இடம் காணல்ல…ஹா..ஹ…”

சேரு சிரிக்கிறாரு. அவருக்கென்ன சிரிப்பாரு. நாங்கள் எல்லாம் அழுவுறோம்.

புள்ளைகளெல்லாம் ஓரெண்டு ரெண்டு படிக்குதுக. “மகள் இங்க ஒருக்கா வாங்கோ” சேரு டீச்சரைக் கூப்பிட்டாரு “என்னப்பா கூப்பிட்டனீங்களே” “கையோட அந்த ஸ்கூல் இன்ஸ்பெக்டருடை பைலை எடுங்கோ. ரெண்டு பேருக்கென்ன மூன்று பேருக்கென்டாலும் எவரேஜ் இருக்கு. குறித்தபடி அடுத்த வாரமே சோதனைக்கு வரலாம் என்று கடிதம் போட்டிடவேணும்”

“இந்தச் சனியன் பிடிச்சதுகளெல்லாம் கடைசி நேரத்தில வந்து நிற்குதுகளே, அடுத்த வாரம் இன்ஸ்பெக்டர் வந்தாப்போல என்னென்று பதில் சொல்லப் போவுதுகள்…!”

அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எவரேஜ் சரியா இருந்து கிராண்ட் குறையாமல் ஒழுங்கா வந்தால் போதும். இவன் இன்ஸ்பெக்டர் இல்லை. எந்தக் கொம்பன் வந்தாலும் பயப்படுகிற நானே.? அந்தக் கம் போத்திலை ஒருக்காக இப்புடி தாங்கோ கையோட கடிதத்தை அனுப்பிடுவோம்”

“மகள் நம்மட விக்னேஸ்வரனுக்கு இந்த ஊர் சுவாத்தியம் ஒத்து வருமா….?”

“விக்னேஸ்வரனா…யார் அது…” என்ன பிள்ளை தெரியாது போல கேட்கிற நீ. அவன்தான் உன்ர மாமியின்ர மகன். சோதனை பாஸ் பண்ணிப்போட்டு அங்கை கொடிகாமத்தலை சுருட்டுக் கடையில் நின்டவன்…?”

“ஓம்… ஓம்..புக்கரசி மாமியின்ர மோனை சொல்லுற னீங்களா…? அதுக்கென்ன இப்ப..?”

“அதில்ல புள்ளை, ஆளைகடித மெழுதி ஒருக்காக வரச்சொன்னால் நல்லம். அடுத்த வருடம்தான் நான் பென்சன்னால போறேன். எண்டாலும் ஆளை இப்ப இருந்தே இங்க எக்டிங்ல போட்டு வந்தால் தான் சரிவரும். இங்கையும் தோட்டத்தில சோதனை பாஸ் பண்ணின பொடியள் இரண்டொருத்தர் இதுல கண்வச்சி இருக்கினமாக்கும் சரி…. சரி…. பாக்கிறன்”

சேரும் டீச்சரும் கதைச்சிக்கிட்டே இருக்காங்க. நான் வெளிய எட்டிப் பார்த்தேன். துவராத்தில மலைகளெல்லாம் ஒட்டகம் மாதிரி வளைஞ்சி வளைஞ்சி இருக்கு. மேகமெல்லாம் ஓடிப்பிடிச்சு விளையாடுதுகள்.

வெள்ளை மேகம் தோத்து தோத்து ஓடுது. கறுப்பு மேகம் அதை அப்படியே போட்டு அமுக்கி மறைக்கிறது…இப்ப எங்கே பார்த்தாலும் கறுப்பு மேகமாத்தான் தெரியுது. மழையும் வரும் போல இருக்கு.

எனக்கு படிக்கவே நினைவுவரல்ல. தம்பிபய திண்ணையில் கூட்டுல கிடந்துக்கிட்டு அழுவானே ஒன்டுக்கு ரெண்டுக்கு இருந்திட்டா யாரு மாத்திப் போடுறது. மழை பெய்தால் சாரல் அடிச்சி மேலெல்லாம் நனைஞ்சிறுமே… கூட்டுல இருக்கிற ரொட்டித் துண்டு திங்கிறேன்னு அடுத்தவீட்டு ஜிம்மி நாய் கடிச்சாலும் கடிச்சிறும்.

நான் உடனே ஓடிப் போய் அவனைப் பார்க்கனும். அப்படியே தூக்கி வச்சிக்கிட்டு கொஞ்சனும் போல இருக்கு…

(வீரகேசரியும் மலையக எழுத்தாளர் மன்றமும் நடத்திய நான்காவது சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை)

– 1971 வீரகேசரி, அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *