கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 13,737 
 
 

நகரத்திற்கே உரித்தான பரபரப்பு . மாலைச் சூரியனின் மரண அவஸ்தை .

நான் போக வேண்டிய இடத்திற்கு பஸ் இன்னும் ஒருமணி நேரம் கழித்துத்தான் . என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாளும் இப்படி பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் மாலை நேரம்தான் வாழ்வின் நிஜங்களைத் தரிசிக்கும் கணங்கள்.

காகிதங்களுடனும் , எண்களுடனும் அலுவலகத்தில் கழியும் ‘வயிற்றுக்காக ‘ நேரத்திற்கும் , காற்றில்லாத அறையின் அவலத்தில் ஸார்த்தரின் எழுத்துக்களோடு உறவாடும் ‘ மனதிற்காக ‘ நேரத்திற்கும் இடையில் உள்ள இந்த நேரம்தான் மனித மனத்தின் நிஜமான பக்கத்தைக் காட்டும் புத்தகம் .

எதிரே தெரிகின்ற உயர்ந்த கட்டிடம் . பின்புறம் ஓடும் கழிவுநீரின் கரைகளில் முடங்கியிருக்கும் குடிசைகள் – அதனைச் சுற்றி உழலும் ஒரு தனி உலகம் .

எதிர்ச் சுவரில் பெரிய போஸ்டர் . உடைகளைப் பற்றிக் கவலைப் படாத கதாநாயகி . அவளை விடப் பெரியதான A . அந்தப் படங்களைப் போடுவதற்கென்றே சில தியேட்டர்கள் . அந்தப் போஸ்டர்களை ஒட்டுவதற்காகவே சில சுவர்கள் .

பக்கத்தில் சிறிதாக பகல் காட்சியில் ‘ 7வது மனிதன் ‘ . பிழைக்கத் தெரியாத டைரக்டர் .

பெரிய சதுரத்தை நிற்க வைத்து வர்ணங்களை இறைத்தாற்போல பெட்டிக்கடை . எத்தனை பத்திரிகைகள் ! இலக்கிய ஆர்வம் வளர்கிறது என்ற பெருமித்த்தைக் கொல்வதற்காகவே அவற்றின் பின்னால் கயிற்றில் தொங்கும் சில பத்திரிகைகள் . அவற்றின் அட்டையில் போஸ்டர் கதாநாயகியின் சிறு பதிப்புகள் . பெண்மைக்கு அவை அளிக்கும் விளக்கம் மனதைச் சுடுகின்றது .

திருப்தி அளிக்கும் சிகரெட்டின் பெரிய விளம்பரப் பலகை . உடல் நலத்திற்கு கெடுதி விளைவது பற்றிய உபயோகமற்ற எச்சரிக்கை அதன் மூலையில் .

தினம் தினம் காணும் அசைவில்லாத காட்சிகள் . அவற்றைவிடச் சுவையானவை அவற்றின் பின்னணியில் உலவும் மனிதர்கள் .

பஸ் ஷெல்டரின் மூலையில் இருக்கும் கம்பத்தில் சாய்ந்து நிற்கும் பச்சைப் புடவை . இளம்பெண் .கல்லூரிப் பெண் . அருகில் நின்று கொண்டு வலது கை அவள் தோளில் உரச கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் வாலிபன் . அவர்களுக்கிடையே மெல்லிய குரலில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் முடிவில்லாத உரையாடல் . இடை இடையே பிறக்கும் அடங்கிய சிரிப்பு .

அடிக்கடி அவர்களைத் திரும்பிப் பார்த்தவாறே தனக்குள் எதோ பேசிக் கொள்ளும் வயதானவர் . கையில் குடை , மாத ஜோதிடம் . ரிட்டையர்ட் லைஃபைக் காட்டும் முகம் . அவரிடம் ஏற்படும் உணர்ச்சிகளின் பரிமாணம் எனக்குப் புரியவில்லை .

தலைமுறை வித்தியாசம் உருவாக்கிய வெறுப்பாக இருக்கலாம் . அவள் வயதில் தனக்கிருக்கும் மகள் இதே நேரம் இதே போல எவனுடனாவது நின்று கொண்டிருப்பாளோ என்ற பயமாக இருக்கலாம் .

பார்வையைத் திருப்புகின்றேன் .

வாரப்படாத தலைமுடி , ஷேவ் பண்ணாத தாடி , மீசை , டெனிம் , அலட்சியமாக ஜீன்ஸூள் செருகப் பட்டிருக்கும் சட்டை , கண்களில் ஒளியில்லாத விரக்தி , கையில் ‘ நீட்ஷேயின் கடிதங்கள் ‘ . தன் மீது மோதி திரும்பும் பார்வைகளின் வெறுப்பைக் கண்டு கொள்ளாமல் இடைவிடாமல் புகையும் சிகரெட்டோடு , உடம்பை தளர்த்தி சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருக்கும் இவனை கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த நாளிலிருந்தே இந்த பஸ் ஸ்டாப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .

அப்போதெல்லாம் ‘ ரேமன்ஸ் ‘ விளம்பரத்தில் இருந்து கிளம்பி வருவது போல இருப்பான் . கவலைப் படுவது எப்படி என்று ஒரு ஸிம்போஸியமே நடத்தினால் கூட அவனுடைய மகிழ்ச்சி குறையாது என்பதைப் போல அவ்வளவு கலகலப்பாக இருப்பான் .

அவனுடைய மாற்றத்தை விடாமல் கவனித்துக் கொண்டுவரும் எனக்கு அவன் மனதின் பிரளயம் நன்றாகப் புரிகின்றது .

” என்ன மச்சி ! நேத்து இண்டர்வியூவிற்குப் போனியா ? “ இந்தக் கேள்வி அவனிடம் கேட்கப்படுவதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன் .

“ எஸ் “ அமைதியான பதில் . இதுவும் வழக்கமானதுதான் .

“ இப்படியேவா போனே ? “

பதிலாக வரும் அவன் வார்த்தைகள் சுற்றி நிற்பவர்களைப் பாதிக்கின்றது . தங்களது சமூக நியதிகளை அவன் தாண்டி ஓடுவதைப் போல அவனைப் பார்க்கிறார்கள் .அப்படி ஓடத்தான் விரும்புகின்றேன் என்பதைப் போல அவன் அதே அலட்சியத்துடன் புகையை உள்ளே இழுத்து வெளியே விடுகின்றான் .

நான் பார்வையைத் திருப்புகிறேன் .

கடந்த காலத்தை மறைக்க முயலும் மலிவான அலங்காரங்களோடு , உடம்பின் வளைவுகளாலும் செயற்கை சிரிப்பாலும் தனது தொழிலுக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும் பெண் . அவளைப் பொறுத்த வரையில் இரவு – பகல் என்பதெல்லாம் அர்த்தமில்லாத வார்த்தைகள். வாழ்வில் வயிற்றின் பங்கை நன்கு உணர்ந்தவள் .

சில சமயங்களில் அவள் கண்களில் தெரிவதைப் படிக்க முயல்வதுண்டு . தெரிவதெல்லாம் அவற்றில் பளிச்சிடும் அழைப்புதான் .

நான் பார்வையைத் திருப்புகிறேன் .

“ ஹலோ , என்னது இது ? மிஸஸ் துர்க்காராம் பஸ்ஸிற்காக நிற்பது ஆச்சரியமா இருக்கே ! வண்டி என்னாச்சு ? “

நான் மிஸ்ஸ் துர்க்காராமைப் பார்க்கிறேன் . வயதின் மேல் ஏற்பட்ட பயம் அவள் அலங்காரத்தில் தெரிகிறது . பஸ்ஸின் மீது ஏற்பட்ட கோபத்தில் பல்லவனைத் திட்டுவது புரிகின்றது .

நான் பார்வையைத் திருப்புகிறேன் .

ஒரு மாற்றம் என் மனதை நெருடுகின்றது .

அந்த பஸ் ஷெல்டரின் மூலையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பூட் பாலிஷ் முருகன் அந்த இடத்தில் இல்லை . பதிமூன்று வயதுதான் இருக்கும் . தன் உழைப்பால் வாழ்கிறோம் என்ர பெருமிதத்தில் வறுமையை மறைக்க முயலும் முகம் . நான் அவனது வாடிக்கைகளில் ஒருவன் .

இன்று அவனை வழக்கமான இடத்தில் காணாதது ஏதோ போல் இருக்கின்றது .என்னவாயிற்று அவனுக்கு ?

மனதினுள் ஒரு நெருடல் .

நான் தினம் தினம் காணும் மனித சித்திரங்களில் அவன் சற்று வித்தியாசமானவன் . அழகற்ற கான்வஸில் வரையப்பட்ட அழகான ஓவியம் . சத்தியசோதனையைப் படிக்காமலே வாழ்க்கையை நேர் கோடு ஆக்கிக் கொண்டிருப்பவன் .

“ குட் ஈவினிங் ஸார் ! “

திரும்புகிறேன் . இடது கையில் கூடை . வலது கையில் ஒரு கடலைப் பொட்டலம் . ராமு – ஒவ்வொரு மாலையும் நான் சந்திக்கும் இன்னொரு நேர்கோடு . சின்ன வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கடலைக் கூடையோடு நகரத்தின் மூலைமூலையாகச் சுற்றிக் கொண்டிருக்கும் இவனை நம்பி ஒரு குடும்பம் . சின்ன வயதில் எத்தனை பொறுப்புகள் .

அவன் நீட்டுகின்ற கடலையை வாங்கிக் கொள்கிறேன் .

“ முருகன் எங்கே ? “

“ காலைல போலீஸ் புடிச்சிட்டுப் போயிட்டாங்க ஸார் . “

“ நிஜமாவா ? “ என் மனதின் நெருடல் விரிகின்றது .

“ ஆமா ஸார் . ஒரு வாரமா வருமானமே இல்லைன்னு சொல்லி அழுதான் . பிக்பாக்கெட் அடிக்கப் போறேன்னான் … எவ்வளவோ சொல்லியும் கேட்கல . “

ராமு டெனிம் ஜீன்ஸிற்கு கடலையோடு புன்னகையையும் சேர்த்துக் கொடுக்கிறான் . இன்னொரு கஸ்டமர் .

“ தாங்க்ஸ் ராமு ! “ டெனிம் ஜீன்ஸ் காசோடு நன்றியையும் அளிக்கிறான் .

ராமுவின் பார்வை மிஸஸ் துர்க்காராம் மீது பதிகின்றது . நகர்கிறான் .

“ கடலை சாப்பிடுங்கம்மா . “

“ நீ விற்கிற கடலையையா ? இப்படி பிளாட்பாரத்தில் விற்பதை எல்லாம் வாங்கித் தின்னா ஊர்ல உள்ள வியாதியெல்லாம் வரும் . கொஞ்சங்கூட சுத்தமில்லாதவங்க . “

ராமு நகர்கிறான் . இளம் கால்களில் வேகம் .

அவனை வெறுப்பாகப் பார்த்துவிட்டு மிஸஸ் துர்க்காராம் காலியாக வரும் ஆட்டோவை கை காட்டி நிறுத்துகிறாள் .

மாற்றத்திற்காக பஸ் பயணம் செய்ய வந்து , பொறுமை இழந்து போய் விட்ட நிலையில் அவசரமாக ஆட்டோவை நோக்கி விரைகின்றாள். ஆட்டோவில் ஏறப் போகும் நேரத்தில் அவளை நோக்கி இரண்டு மெல்லிய கைகள் நீளுகின்றன . வறுமை உடம்பெங்கும் தெரிய நிற்கும் இந்நாட்டு செல்வம் ஒன்று . சகோதர இந்தியன் !

சுண்டி விடப் பட்ட நாணயம் ஒன்று உருண்டோடுகிறது . முழு நாலணா . மிஸஸ் துர்க்காராமின் அலட்சியம் நாணயத்தின் ஒலியில் தெரிகின்றது . குனிந்து பொறுக்கும் விரைவில் அந்தச் சிறுவனின் இல்லாமை தெரிகின்றது .

அந்த நாணயம் பொறுக்கப் படுவதற்கு முன்பே மிஸஸ் துர்க்காராமை நோக்கி நீளும் மற்றொரு கை . மீண்டும் ஒரு நாணயத்தின் உருளல் . ஆட்டோ புறப்படுகின்றது . திரும்பி சாலையின் வாகன வெள்ளத்தில் கலந்து மறைகின்றது .

என் மனதில் நெருடல் அதிகமாகின்றது . சட்டத்தின் பிடியில் முருகன் தெரிகின்றான் . தூரத்தில் நேர்கோடாகச் சென்று கொண்டிருக்கிறான் ராமு. இந்த நேர்கோடும் உருவம் மாறிவிடலாம் , இல்லை மாற்றப்பட்டு விடலாம்.

பிறரின் இரக்கத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் வரிசையைப் பார்க்கிறேன் . மிஸஸ் துர்க்காராமிடம் நாலணா பெற்ற சகோதர இந்தியர்கள் , வலது கையில் பாதி இல்லாத ஒருவன் , கடந்த காலத்தின் சுவடுகள் முகத்தில் புண்களாக மாறிய பெண் , எதிரில் விழும் நாணயங்களையும் பக்கத்தில் வரும் மனிதர்களையும் மட்டுமே பார்க்க முடிகின்ற ஒரு குருடன் . வரிசை நீள்கின்றது . பின்னால் சுவரில் ஏதோ ஒரு ஆண்டின் இலட்சிய வரிகள் நிறம் மாறித் தெரிகின்றது . ’இவர்களுக்குத் தேவை ஊக்கம் , இரக்கம் அல்ல .’

முருகனும் அந்தப் பெண்ணும் இவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டுத் தெரிகிறார்கள் . அவர்கள் உரு மாறியவர்கள்தான் . ஆனால் சமூகத்தின் இரக்கத்தை நம்பி வாழாமல் தங்கள் மன வலிமையால் வாழத் துணிந்துவிட்ட சுயமரியாதைக்காரர்களாகத் தெரிகிறார்கள் . எங்கோ படித்த வரிகள் நினைவில் மோதுகின்றன . சமுதாயம் குற்றங்களை உருவாக்குகிறது . குற்றவாளிகள் அவற்றை செய்து முடிக்கிறார்கள் .

உண்மைதான் . இவர்கள் உருவாகவில்லை . உருவாக்கப் படுகிறார்கள் .

“ ஏ சமுதாயமே ! உன்னிடம் இருந்து உருண்டோடும் நாணயங்கள் உண்மை உழைப்பிற்கு கூலியாக மாறட்டும் . சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்கும் போலி கௌரவமாக இருக்க வேண்டாம் . “

மனதின் குரல் வலியை ஏற்படுத்துகிறது .

“ உன் வக்கிர எண்ணங்களால் நேர்கோடுகளை உருமாற்றி சிதைத்து விடாதே . அவர்களும் மனிதர்கள்தான் . சத்திய சோதனையை வாழ்க்கையாக்கிக் கொள்ள அவர்கள் மகாத்மாக்கள் இல்லை . “

டெனிம் ஜீன்ஸ் கையில் சிகரெட்டோடு அப்படியே நின்று கொண்டிருக்கிறான் . மனதின் குமுறல் சிகரெட் புகையாக வெளியேற வெறித்த பார்வையோடு நின்று கொண்டிருக்கிறான் .

அன்றைய வருமானத்தை அளிக்கப் போகும் எவனோ ஒருவனுடன் அந்தப் பெண் பக்கத்துச் சந்தில் மறைகிறாள் . நான் வந்து நிற்கும் பஸ்ஸில் ஏறிக் கொள்கிறேன் .

– “வட்டங்கள் – சதுரங்கள் – முக்கோணங்கள் “ என்ற தலைப்பில் நடத்தப் பட்ட சிறுகதைப் போட்டியில் பிரசுரத்திற்கு தேர்வாகி 20. 05 .1983 தேதியிட்ட தினமணி கதிர் வார இதழில் வெளிவந்த சிறுகதை .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *