வாக்குச்சாதுர்யம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 10,798 
 

அந்த குறுகலான தெருவில், சாலையை ஆக்ரமித்துப் போடப்பட்டிருந்த சிறு கடைகளையும், சாலையின் ஓரத்தில் படுத்திருந்த எருமை மாடுகளையும், அவைகளின் மீது விழுந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்களையும், நடுத் தெருவில் நடந்து கொண்டிருந்த மனிதர்களையும் லாவகமாகத் தவிர்த்து, வளைந்து நெளிந்து தன் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தான் பாலு. 12, 13 வயதிருக்கும். பக்கத்து நகரிலிருந்து இந்த நகரில் வசிக்கும் தன் நண்பனைப் பார்க்க சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். எட்டு வயதில் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டவன், இப்போது சூப்பராக ஓட்டுவான். எங்கு வேகமாக ஓட்ட வேண்டும், எங்கு மெதுவாகப் போக வேண்டும் என்பது தெரிந்தவன்.

அந்தத் தெருவின் முனையில் மணியை அடித்துக்கொண்டே இடது பக்கத் தெருவுக்கு சைக்கிளைத் திருப்பினான். தெருமுனை வீட்டிலிருந்து ஒரு கோழி பறந்து வந்து மிகச் சரியாக அவன் சைக்கிள் முன் விழுந்தது. சடன் பிரேக் போட்டான். நான்கடி தள்ளிச் சென்று தான் சைக்கிள் நின்றது. கீழே விழுந்த கோழியின் இறக்கை சைக்கிள் சக்கரத்தில் சிக்கியதும், அந்தக் கோழி அபத்தமாகத் தப்பிக்க முயற்சித்தபோது, அதன் கழுத்தும் சக்கரக் கம்பிகளில் எக்குத் தப்பாக மாட்டிக் கொண்டது. அது போட்ட சத்தத்தைக் கேட்டு, வீட்டின் உள்ளிருந்து ஓடி வந்த பெண், கோழி சக்கரத்தில் சிக்கி இருப்பதைப் பார்த்து ஓவென்று அலறினாள். வேகமாக வந்து பாலுவின் சட்டையைப் பிடித்துக் கொண்டாள். பாலுவிற்கு பயமாக இருந்தது. “நான் ஒன்னும் செய்யல. அதுவா தான் வந்து என் சைக்கிள் முன்னால் விழுந்தது” என்றான். அதற்குள் இவர்களைச் சுற்றிக் கூட்டம் கூடி விட்டது.

கூட்டத்திலிருந்த சிலர் கோழியை சைக்கிள் சக்கரத்திலிருந்து விடுவிக்க முயன்றனர். இறக்கையும் கழுத்தும் நன்றாகக் கம்பிகளில் மாட்டிக் கொண்டதால், அது துடித்துக் கொண்டிருந்தது. “அடப் பாவி, என் வீட்டுக் கோழியை சிதச்சிட்டியேடா” என்று அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள். கூடியிருந்தவர்கள் சேர்ந்து கொண்டு “கண்மண் தெரியாம வண்டி ஓட்டிட்டு வரானுங்க இந்தப் பசங்க. எதிர்ல வர்றது எதுவும் தெரியாது. சர்க்கஸ்ல வித்தை காட்ற மாதிரி சைக்கிள் ஓட்றானுங்க” என்றார்கள்.

“டேய், நீ யாரு? இந்த நகர் பையனாட்டம் இல்லியே, எங்கிருந்து வர்றே? என்றார் ஒரு மீசைக்காரர். “என் பேர் பாலு. பக்கத்தில் காமாட்சி நகர்லே இருந்து வரேன். இங்க அடுத்த தெருவுலே இருக்கற என் ப்ரெண்ட் பாஸ்கர் வீட்டுக்கு வந்தேன். நான் ஒழுங்கா பார்த்து தான் சைக்கிள் ஓட்டிட்டு வந்தேன்” என்றான் பாலு.

அதற்குள் ஆளாளுக்கு சக்கரத்தில் சிக்கி இருந்த கோழியை, இப்படியும் அப்படியுமாக இழுத்து அதன் நிலைமையை இன்னும் மோசமாக்கினர். அதன் அவலக் குரல் தேய்ந்து தீனமானது. அந்தத் தெருவிலிருந்த கறிகடைக்காரர் “இப்படியே விட்டா, கோழி செத்துடும். பேசாம இறக்கையையும் கழுத்தையும் வெட்டி எடுத்துட்டா சமைச்சு சாப்பிடவாவது உதவும். யோசிச்சுக்குங்க” என்றார். அந்த பெண் மரர்பில் அடித்துக் கொண்டு அழுதாள். “அழாதம்மா, அது எக்குதப்பா மாட்டிக்கிச்சி. பொழக்கறது கஷ்டந்தான். வெட்டி எடுத்துட்டா, சமைச்சி சாப்பிடலாம். இன்னா சொல்ற?” என்று கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் கேட்டார். கீழே உட்கார்ந்து அழுது கொண்டிருந்த அந்தப் பெண் எழுந்து பாலுவை அடிக்க வந்தாள். நடந்தது அனைத்தையும் அங்கு ஓரமாக நிறுத்தி வைத்திருந்த சைக்கிள் ரிக்க்ஷாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரிக்க்ஷாக்காரர் வந்து அந்தப் பெண்ணைத் தடுத்தார். “இவனை அடிச்சா, கோழி பொழச்சிக்குமா? மொதல்ல கோழி காரியத்தை பாரு” என்று சொன்னார். கறிகடைக்காரரைக் கூப்பிட்டு கத்தியால் கோழியின் கழுத்தையும், இறக்கையையும் வெட்டி, சக்கரத்திலிருந்து அதை விடுவித்தார்கள். அந்தப் பெண் “ஆசையா வளத்த கோழியை அநியாயமா கொன்னுட்டியடா பாவி” என்று பெருங்குரல் எடுத்து அழுதாள். கூட்டம் அவளுக்காக அனுதாபப் பட்டது. பாலு அமைதியாக தலை குனிந்து நின்று கொண்டிருந்தான். “டேய், உன்னால தான் கோழி செத்துச்சி. அதுக்குரிய பணத்தை நீ தான் தரணும். எவ்ளோ வச்சிருக்கே?” என்று கேட்டுக்கொண்டே அந்த ஏரியா மைனர் மாதிரி இருந்த ஒருவன் பாலுவை நெருங்கினான்.

பாலுவிற்கு கோழியை வெட்டி எடுத்தது வருத்தமாக இருந்தாலும், தான் எந்தத் தப்பும் செய்யவில்லை, நடந்ததற்குத் தான் பொறுப்பல்ல என்ற எண்ணம் மீதோங்கி இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அந்தக் கூட்டத்தைப் பார்த்து கை கூப்பிக்கொண்டே, “இங்க பாருங்க, எம்மேல எந்தத் தப்பும் இல்லே. நான் ஒழுங்கா பார்த்து தான் சைக்கிள் ஓட்டிட்டு வந்தேன். அந்தக் கோழிதான் வீட்டுக்குள்ளே இருந்து பறந்து வந்து என் சைக்கிள் முன்னாடி விழுந்தது. அந்த ரிக்க்ஷாக்காரர் அங்கேயே தான் இருந்தார். அவரைக் கேட்டுப் பாருங்க” என்றான்.

அதற்குள் அந்த மைனர் பாலுவின் சட்டைப் பையில் கை வைத்தபடி “இன்னாம்மா, எவ்ளோ வேணும் அந்த கோழிக்கி, 200 ஆ, 300 ஆ” என்றான் கண் சிமிட்டியபடி. “சாமிக்கி வேண்டிக்கினு வளத்த கோழி, பொத்தி பொத்தி வளத்தேன். ஒரு 500 ரூபா தேறுமா பாருண்ணா” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டே பேரம் பேசினாள் அந்தப் பெண்.

“நான் ஏன் பணம் தரணும். என் கிட்டே காசில்லை. அவங்க வீட்டுக்கு உள்ளே போய் அவங்க கோழிமேலே நான் ஒன்னும் என் சைக்கிளை ஏத்தலே. அதுவே உள்ளே இருந்து பறந்து வந்து என் சைக்கிள்ளே மாட்டிக்கிச்சி. நான் செய்யாத தப்புக்கு பணமெல்லாம் தரமுடியாது”. என்றான் பாலு.

அந்த மைனர் அவன் தலையில் தட்டினான், “யார்றா நீ, கோழியை கொன்னுட்டு எதுத்து வேறே பேசறே, உங்கப்பா இன்னா பண்றாரு? அவரை கூப்புடு, பணம் குடுக்காம இந்த எடத்தை விட்டு நீ நவுர முடியாது” என்று சொல்லிவிட்டு சைக்கிளை பாலுவிடமிருந்து இழுத்தான். சைக்கிளை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த பாலுவிற்கு முகம் சிவந்தது. கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. “எங்கப்பா ஸ்கூல் வாத்தியாரா இருக்கார். கண்டிப்பா பணம் தரமாட்டார். ஏன் தரணும்? இந்த குறுகலான தெருவுல இத்தனை பேரு நடந்துகுனு இருந்தாங்க, எருமை மாடுங்க, நடுவுல பள்ளம், அதோ சண்டை போட்டுட்டு இருக்கற நாய்ங்க, நிறுத்தி வச்சிருக்கற வண்டிங்க, இதுலே எது மேலயாவது மோதினேனா? இல்லியே. சரியாத் தானே ஓட்டிட்டு வந்தேன். செய்யாத தப்புக்கு நான் ஏன் பணம் தரணும். உண்மையாப் பார்த்தா கோழியை கூடை போட்டு மூடி வச்சிருக்கணும் அல்லது வீட்டு கதவையாவது மூடி வச்சிருக்கணும். அது வெளியிலே வந்து விழுந்ததுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்?” என்றான். கூடியிருந்தவர்கள் அவன் சொன்னதிலிருந்த உண்மையை உணர்ந்து ஆமோதித்தனர். “அட்ரா சக்கை, இன்னா பேச்சு பேசுது பார் இந்த வயசுல” என்றார் ரிக்க்ஷாக்காரர்.

“இன்னாடா, லா பாயிண்ட் பேசறே, 500 ரூபா பணத்தை குடுத்துட்டு சைக்கிள எடுத்துட்டு போ” என்று மைனர் சைக்கிளை இழுத்துச் செல்ல முயன்றான். “முடியாது” என்று சைக்கிளை நகர விடாமல் பிடித்துக் கொண்டான் பாலு. அவனை அறைய கை ஓங்கிய மைனர் மேல் சைக்கிளைத் தள்ளி விட்டு, “என்னய்யா பெருசா நீ வந்து என் சைக்கிளை எடுக்கறது, நானே தரேன். இந்தா. இந்த சைக்கிளை நீ ஒட்டு. பறக்கற ஒத்தை கோழியை நான் தெருவிலே வுடறேன். சைக்கிளை ஒட்டி அது மேலே ஏத்தி காமியா பாக்கலாம். அதை கையாலே கூட பிடிக்க முடியாது. அது மேலே சைக்கிள ஏத்த முடியுமா? நீ ஏத்திட்டீன்னா, 500 ரூபா என்னய்யா, இந்த சைக்கிளையே நீ எடுத்துக்கோ” என்று சவால் விட்டான் பாலு. கூடியிருந்த அனைவரும் வாயடைத்துப் போயினர். மைனர் திகைத்துப் போய் நின்றான். “பையன் கில்லாடிப்பா” என்றபடி கூட்டம் கலைந்தது. அமைதியாக மைனரும் அந்த இடத்தை விட்டு நழுவினான்.

கீழே விழுந்திருந்த சைக்கிளை எடுத்து பாலுவிடம் கொடுத்து விட்டு, ரிக்க்ஷாக்காரர் “அல்லாத்தையும் நான் பாத்துகினுதான் இருந்தேன். இன்னா ஆவுது பாக்கலாம்னு. அழுதுபுழுது ஆர்ப்பாட்டம் பண்ணாம, தப்பு பண்ல, அதனால நான் பணம் தரமாட்டேன்னு சொன்ன பார், அங்க நின்ன கண்ணு நீ. வாய் சவடால் பேசாம, சாமார்த்தியமா சவால் உட்டியே, நீ பொழச்சிப்பே. இந்தா உன் சைக்கிள், பத்திரமா போ”, என்று பாலுவை அனுப்பி வைத்தார். கோழியை இழந்த பெண் “என் கோழியை கூறு போட்டுட்டு எல்லாரும் இப்படி கெளம்பிட்டா எப்டி?” என்றாள். அந்த பெண்ணிடம், “இந்தா 100 ரூபா, கூறுபோட்ட கோழியை கவர்லே போட்டு கொண்டா, இன்னிக்கி ராத்திரி க்வாட்டருக்கு, எனக்கு உன் வூட்டுக் கோழி வறுவல் தான் சைட்டிஷ்” என்றார் ரிக்க்ஷக்காரர். பணத்தை வாங்கிக் கொண்ட அந்தப் பெண் “அந்த பையனை அப்படியே உட்டுட்டீங்களே?” என்றாள்.

“அவம்மேலே தப்பில்லே, வுடு. அவன் பெரியவனானதும் பாரு, பெரிய அரசியல்வாதியாவோ, அல்லது ஊழல் கேசுலே மாட்டிகிட்ட அரசியல்வாதிக்கி ஆஜராவப் போற வக்கீலாவோ வரப்போறான் பாரு” என்று சொல்லி சிரித்தபடி பீடியை எடுத்து பற்ற வைத்தார் அந்த ரிக்க்ஷாக்காரர்.

பி.கு: சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் டாக்டர். பிரம்மானந்தம் அவர்கள் சொன்ன ஒரு நிகழ்ச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *