கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 14,796 
 
 

லண்டன் 1999

‘ஏப்ரல்மாதத்திலும் இப்படி ஒரு குளிரா?’ஜெனிபர்,அந்தப் பஸ்சின் கொண்டக்டர்,மேற்கண்டவாறு முணுமுணுத்துக்கொண்டு பஸ்சில் ஏறிய ஒரு முதிய ஆங்கிலப் பெண்ணுக்குக் கைகொடுத்து அவள் பஸ்சில் ஏற உதவி செய்தாள்.

அந்த ஆங்கிலேய மூதாட்டி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்,அவளுக்கு எழுபது வயதாகவிருக்கலாம். சுருக்கம் விழுந்த முகத்தோற்றம். மழையோ குளிரோ,வீட்டுக்கு வெளியே போகும்போது,ஆங்கிலேயப் பெண்கள் எந்த வயதிலும்,தங்களை அலங்கரித்துக் கொள்ளத் தவற மாட்டார்கள். அந்த ஆங்கில மாதும் தனது தளர்ந்த முகத்திற்குத் தகுந்த விதத்தில் மேக் அப் போட்டிருந்தாள்.கையில் ஒரு கறுப்புப் பையுடன் தள்ளாடியபடி,ஜெனிபரின் உதவியுடன் ஒருவாறு ஏறியுட்கார்ந்தாள்.

அவளைத் தொடர்ந்து பஸ்சில் ஏறியவன்,ஒரு கறுப்பன். பஸ் புறப்படும்போது அவசரமாக ஓடிவந்து ஏறியதால் அவன் முச்சிளைத்துக்கொண்டிருந்தான். அவன்கையில் அவனளவு ஒரு பெரிய தூக்கற் பெட்டியுடன். கித்தார்ப் பெட்டியாகவிருக்கலாம் அவனளவு உயரத்திலிருந்தது. அவனையும் அந்தப் பெடடியையும் மாறி மாறிப் பார்த்தாள் பஸ் கொண்டக்ரான ஜெனிபர்.

அவன் அவளைத் தாண்டிப்போய்த் தன் பெட்டியுடன்; ஒரு இருக்கையிலமர்ந்தான். அவன் போய் அந்த ஆசனத்தில் அமரவும் பஸ் புறப்பட,அந்தக் குலுக்கலில் அவனது மடியிலிருந்த கித்தார்ப் பெட்டி முன் சீட்டிலிருந்த,தொப்பியும் சூட்டும் கோர்ட்டும் போட்டிருந்த பயணியின் தலையைப் பதம் பார்த்தது.

முன்னாலிருந்தவர் திரும்பிப் பார்த்தார் அவர் ஒரு ஆங்கிலேயர்.அடிபட்ட தன்தலையைத் தான்போட்டிருந்த தொப்பியைக் கழட்டிவிட்டுத் தடவி விட்டுக் கொண்டு பின்னால் இருந்தவனை முறைத்துப்; பார்த்தார்.

கித்ததர்ப் பெட்யுடனிருந்த.கறுத்த, திடகாத்திரமும் வாட்டசாட்டதுமான முகத்தைக் கண்டதும் அவர் முகபாவம் மாறியது. எரிச்சலுடன் ஏதோ முணுமுணுத்துக்கொண்டார் அந்த ஆங்கிலேய வயோதிபர்.

பஸ் போய்க் கொண்டிருந்தது. வழியில் பெருமழையும் பயங்கரமான காற்றும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு பஸ் ஜன்னல்களைத் தாக்கிக் கொண்டிருந்தன.

ஜெனிபர்,முன்வரிசைக்குப்போய் அங்கு பஸ் டிக்கட் விநியோகித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த தரிப்பில் பஸ் நின்றதும்,கித்தார்ப் பெட்டிக்காரனுக்கப் பக்கத்தில் இருந்த பிரயாணி இறங்க முயற்சிக்கும்போது, அவனுக்கு வழி விடச்சாடையாக அவன் நகர்ந்தபோது கறுப்பு இளைஞனின் கித்தார் ஆங்கிலேயக் கிழவரின் தொப்பித்தலையை இன்னொரு தரம் பதம் பார்த்தது.

‘அட என்னையா, இந்தப் பஸ்ஸில் வைத்து என்னைக் கொலை செய்வது என்பது உனது திட்டமா’ ஆங்கிலேயக் கிழவர் கறுப்பு இளைஞனைப்பார்த்து இரைந்தார்.

‘ஐயாம் சாரி.மன்னிக்கவும்,தயவு செய்து மன்னிக்கவும்’ உண்மையாகவே மன்னிப்புக் கேட்கும் பாவனையில் கறுப்பு இளைஞன் ஆங்கிலேயப் பெரியவரிடம் பேசினான்.

அலங்காரம் பண்ணிக் கொண்டு வந்து பஸ்சில் ஏறியிருந்த ஆங்கிலேய மூதாட்டி கறுப்பு இளைஞனை முறைத்துப் பார்த்தாள்.

அதே நேரம் அடுத்த தரிப்பில் பஸ் நின்றதும் ஒரு நடுத்தர வயது வெள்ளையன் ஒரு பெரிய கார்ட்போர்ட்  பெட்டியுடன் ஏறினான். அவன் வைத்திருந்தது,ஓட்டை போட்ட,ஆனால் பெரும்பாலும் மூடப்பட்ட,கைப் பிடி போடப்பட்ட,கார்ட்போர்ட் பெட்டி. ஆங்கிலேயர்கள்,அதுமாதிரிப் பெட்டிகளில் தங்கள் செல்லப் பிராணிகளான நாய்,பூனை,பறவைகளை அடைத்து வைத்துக் கொண்டு மிருக வைத்தியரிடம் கொண்டுபோவார்கள்.அவனும் அப்படித்தான் தனது செல்லப் பிராணியொன்றை மிருக வைத்தியரிடம் கொண்டு செல்கிறான் என்று பட்டது.அவனுக்கருகில் வந்திருந்த,அழகிய ஆங்கிலேயப் பெண், ஏதோ சந்தோசமான விடயத்தைப் பற்றி யாரோ ஒருத்தருடன் பேசிவிட்டு வந்த முகமலர்ச்சியுடன் வந்தமர்ந்தாள்.

அவர்களைத்; தொடர்ந்து, ஒரு வெள்ளையினத் தாய் ஒரு இரட்டைத்தள்ளுவண்டியில் இரு பிள்ளைகளுடன் வந்து ஏறினாள். அந்தப் பிள்ளைகளுக்கு இரண்டு வயதாகவிருக்கலாம். அவர்களை இறக்கிவிட்டு, தள்ளுவண்டியை மடித்து பஸ்ஸில் அதற்குரிய இடத்தில் வைக்க ஜெனிபர் உதவி செய்தாள்.

அதைத் தொடர்ந்து இரண்டு கறுப்பு இனப் பெண்கள் தங்கள் கைகளிற் பெரிய ஷொப்பிங் கூடைகளுடன் பஸ்சில் ஏறினார்கள். ஏதோ ஆபிரிக்க மொழியில் பேசிச் சிரித்துக்கொண்டு வந்தார்கள். ஏராளமான பிரயாணிகளின் வருகையால் அந்த பஸ் கிட்டத் தட்ட நிறைந்து விட்டது.இளைஞர்களிற் பெரும்பெலோர் பஸ்சின் மேற் தட்டில் ஏறிக் கொண்டார்கள்.

அதன் பின் அடுத்த ஸ்ரொப்பில் அந்த பஸ்சில் ஏறியவர்கள் நின்று கொண்டு வந்தார்கள்.

அந்த பஸ் 38ம் இலக்க பஸ் லண்டனின் கிழக்குப் பாகமான டால்ஸ்ரன் என்ற இடத்திலிருந்து,லண்டனின் மிகப் பெரிய மத்திய இடங்களிலொன்றான விக்டோரியா என்ற இடத்தில் போய் நிற்கும்.பஸ் இஸ்லிங்ரன் என்ற இடத்தைத் தாண்டும்போது பஸ்சில் இனியாரும் ஏறமுடியாதவு நெருக்கமாகவிருந்தது.

அப்போது காலை ஒன்பது மணியாயிருந்ததால், பாடசாலைக்குப்போகும்,மாணவர்கள் தொகை, ஆபிசுக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து,கடை கண்ணி,சோசியல் சேர்விஸஸ்,ஆஸ்பத்திரி,என்று போவோரின தொகைதான் கூடியிருந்தது.

பஸ் இஸ்லிங்ரன் பெரிய வீதியைத்தாண்டி,றோஸ்பரி அவனியு என்ற றோட்டில் திரும்பியது. பஸ் திரும்பியபோது,எதிர்த்திசையில் வந்த பெரிய லொறிக்கு வழிகொடுக்க,பஸ் அவசரமாகத்; திரும்ப அந்தச் சட்டென்ற குலுக்கலில் பஸ் ஒரு பக்கம் சரிந்தது.

அந்தக்குலுக்கலில் செல்லப் பிராணியை வைத்திருந்தவனின் பெட்டி ,அவனின் மடியிலிருந்து தரையில் அடிபடமுதல் அவன் சட்டென்று பெட்டியைக் கட்டிக்கொண்டான்.தாயின் மடியில் ஒன்றும் அவளுக்குப் பக்கத்தில் அவளை அணைத்துக்கொண்டுமிருந்த இரட்டைப் பிள்ளைகள் தங்கள் நிலை தடுமாற,அந்தப் பீதியில் அலறத் தொடங்கி விட்டார்கள்.அவர்களை அந்தத் தாய் அன்புடன் அணைத்துக்கொண்டாள்.

பெரிய ஷொப்பிங் பைகளுடன் வந்திருந்த ஆபிரிக்க மாதர்களின் பைகள் அவர்களின் பிடியிலிந்து நழுவியதால் பையிலிருந்த பொருட்களான மீன்கள் பஸ்சில் அங்குமிங்மாகத் தெறித்து விழுந்தன.ஒரு சிலர் அருவருப்புடன் முகத்தைச் சுழித்துக்கொண்டனர். ஓரு சிலர், தங்கள் காலடி,காலணிகளில் வந்து விழுந்த மீன்களைப் பொறுக்கிக் கொடுத்தனர். ஓரு சிலர் பல தரப்பட்ட மீன்வகைகளின் சிதறலையும் ஆபிரிக்க மாதர்களின் பதட்டத்தையும் வேடிக்கை பார்த்தனர்.

காட்போர்ட் பெட்டிக்காரன், தனது மடியிலிருந்த பெட்டியின் ஓட்டையில் தனது முகத்தைப் பதித்து, ‘ஓ பேபி, நீ பயப்படாதோ, நான் உன்னை நழுவ விடமாட்டேன உச் உச்’ என்று பெட்டியிலுள்ள தனது ‘செல்லத்துடன்’; கிசுகிசுத்தபடி முத்தம் கொடுத்தான்.

‘பெட்டியில் என்ன வைத்திருக்கிறாய்?’ அவனுக்கு அருகிலிருந்த,அந்த மலர்ந்த முகத்துக்குரிய அழகிய ஆங்கிலேயப் பெண் பெட்டிக்காரனை ஆச்சரியத்துடன்; கேட்டாள்.

கார்ட்பெட் பெட்டிக்காரன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். இவளிடம் உண்மையைச் சொல்லலாமா என்பதுபோல் ஒரு கணம் யோசித்தான்.மற்றவர்கள் விடயத்தில் ஆங்கிலேயர் அக்கறைப் படுவதில்லை. பெட்டிக்காரன் தனது பெட்டியை இன்னும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு அவளுக்கு மறுபொழி சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

‘உன்னுடைய மனைவியடன் சண்டைபோட்டக்கொண்டு உனது பிள்ளையைக் கடத்திக் கொண்டு போகிறாயா?’ அந்த அழகி குறும்பாகக் கேட்டாள்.

‘வாட் ஆர் யு சேயிங் (என்ன நீ பேசுகிறாய்)?’ கார்ப்போர்ட் பெட்டிக்காரன் அவளைப் பார்த்துச் சீறினான்.

‘ஓ பேபி கவலைப் படாதே என்று கொஞ்சினாயே அதுதான் கேட்கிறேன்.உனது காதலியின் தலையை வெட்டிப் பெட்டியில் வைத்திருக்கிறாயா?’ அவள் சீண்டும் குரலில் கேட்டாள்.

‘வை டோன்ட் யு பிளடி மைன்ட் யுவர் பிசினஸ்? (;உனது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க உன்னால் முடியாதா)’ கார்ட்போர்ட் பெட்டிக்காரன் எரிச்சலுடன் தலையைத் திருப்பிக் கொண்டான்.

அதே நேரம் கித்தார்வாhத்தியப் பெட்டிக்காருனக்கும் தொப்பி போட்ட ஆங்கிலேயக் கிழவருக்குமிடையில் பெரிய தர்க்கம் நடந்து கொண்டிருந்தது.

‘வயது போன எனது தலையை உனது பெட்டியால் மூன்று தரம் இடித்து விட்டாய்’ கிழவர்,தொப்பியைக் கழட்டிக்கையில் வைத்துக்கொண்டு, மற்றக்கையால் தனது தலையைத் தடவிக் கொண்டு ஆத்திரத்துடன் முழங்கிக் கொண்டிருந்தார்.

‘மன்னித்துக் கொள்ளுங்கள்,நான் வயது போன மனிதர்களை எனது வாத்தியப் பெட்டியால் தாக்கிக் தொலைக்க வேண்டும் என்ற திட்டத்தில் பஸ்சில் ஏறவில்லை. பஸ் எக்கச் சக்கமாகத் திரும்பும்போது,எனது பெட்டி உங்கள் தலையில் தவறுதலாக அடிபட்டு விட்டது. அதற்காக ஏன் இப்படி அலட்டிக் கொள்கிறுர்கள்?’ கித்தார்ப் பெட்டிக்காரக் கறுப்பு இளைஞன் தயவுடன் வெள்ளைக் கிழவருக்குப் பதில் அளித்தான்.

‘ஆமாம், கொலை செய்து விட்டும் அது தற்செயலாக நடந்தது என்று சொல்வாய் போல இருக்கிறது’.

இவர்களின் தர்க்கக் குரல்களையும் தாண்டிய விதத்தில்,முன்வரிசையிலிருந்த இரட்டைக் குழந்தைகள் அலறி, தாள ராக,பல்லவி வாசித்து பஸ்சை இரண்டு படுத்திக் கொண்டிருந்தார்கள்.குழுந்தைகளின் தாய்,அவளுக்கு இருபது வயதிருக்கும், தன் குழந்தைகள் செய்யும் கலாட்டாவைத் தணிக்க, அவர்கள் வாயில் ஏதோ இனிப்பைத் திணித்துச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

மீன்கள் தரையிற் கொட்டப்பட்டதால் அதை இன்னும் தேடிப் பொறுக்கும் ஆபிரிக்க மாதர்கள், பயணிகளின் பாத இடுக்குகளில் தொலைந்த மீன் தேடியலைந்து,பலரின் எரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.

கித்தார் வாத்தியப் பெட்டிக்காரக் கறுப்பு இளைஞனும்,ஆங்கிலேயக் கிழவரும் இப்போது தங்கள் குரலை உயர்த்தி மிகவும உரக்கத் தர்க்கம் செய்வது எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது.

இவற்றையெல்லாம் பார்க்க பஸ் கொண்டக்டர் ஜெனிபருக்குச் சோகமும் கோபமும் வந்தது.
அவள் காலையில் வேலைக்கு வரும்போது மிகவும் வருந்திய மனச் சோர்வுடன் வந்திருந்தாள்.அவளுடைய கணவன் மார்ட்டின் இரவு நல்ல வெறியில் நடுச் சாமத்தில் வீட்டுக்கு வந்தான்.

அவனின் இரவுச் சாப்பாட்டை,வழக்கம்போல் ‘ மெல்லிய சூட்டில் ‘ஓவர்னில்’ வைத்து விட்டுத் தூங்கப் போனாள்;. அது சூடாகவிருக்கவில்லை அவன் ஜெனிபரைக் கண்டபாட்டுக்குத் திட்டினான்.

அவள் காலை எட்டுமணிக்கு வேலை தொடங்குபவள். காலையில் ஏழுமணிக்கு எழும்பி,பாடசாலைக்குப்போகும் பன்னிரண்டு வயது மகனை எழுப்பி,( பாடசாலை நாட்களில்,அது கிட்டத்தட்ட இருபது நிமிடம் நடக்கும் போராட்டம) அவனுக்குச் சாப்பாடு செய்து கட்டிக் கொடுத்து,கணவன் மார்ட்டினுக்குக் காலைச் சாப்பாடு செய்து.விட்டு மார்ட்டினை எழுப்புவாள்.

மார்ட்டினின் சாப்பாடு ஆங்கிலேயக் காலைச் சாப்பாடுகளான,நான்கு சொசேச்சர்ஸ்,இரண்டு முட்டைகளிற் செய்த ஆம்லெட்,பொரித்த மூன்று பேக்கன் துண்டுகள், நான்கு றோஸ்டுகள்,பெரிய டம்ளரில் காப்பி, இவ்வளவையும் செயது விட்டு மார்ட்டினை எழுப்புவாள்.

மார்ட்டின் ஒரு பிரைவேட் கொம்பனியில்,சாமான்கள் ஏற்றியிறக்கும் தொழிலாளியாக வேலை செய்கிறான்.வேலையாற் திரும்பும்போது,மிகவும் களைத்துப்போய் வருவான.அவன்; வேலை செய்கிறான். மிகவும் மிகக் கடினமான வேலையால்க் களைத்துப்போய் வருவதால், வாரத்தில் மூன்று தரம் குடிக்கப் போவான். சில வேளைகளில் நல்ல வெறியில் வந்து யாரையோ அல்லது எதையோ திட்டிக் கொண்டிருப்பான்.

நேற்றிரவு, அவன் கறுப்பு இன மக்களைத் திட்டிக் கொண்டிருந்தான்.இங்கிலாந்திலுள்ள கோடிஸ்வரர்கள்pன் தொகையில்,ஆசிய நாட்டாரான,இந்தியர்,பாகிஸ்தானியர், பங்களதேசியரின் தொகை இருநாற்றுக்கு மேல் வந்து விட்டது என்று வானொலிச் செய்தி சொன்னதாம் என்று மார்ட்டின் கத்தினான்.

‘இங்கிலாந்துத் தெருக்களைச் சுத்தம் செய்ய வந்தவர்கள், ஆஸ்பத்திரியில் மலசலச் சட்டி தூக்க வந்தவர்கள்,இன்று கோடிஸ்வரர்களாக தொகையில் மூன்றாம் இடத்தை எடுப்பதா?’ மார்ட்டின் வேங்கைபோற் கத்திக் கொண்டிருந்தான்.

மார்ட்டினின் கோபத்துக் காரணம் ஜெனிபருக்குப் புரியவில்லை. அவளுக்கு நாற்பத்தி ஐந்து வயது. லண்டனிற் பிறந்து வளர்ந்தவள். கறுப்பு மக்களுடனும் ஆசிய மக்களுடனும்; படித்தவள்.விளையாடியவள். விவாதம் பட்டுக்கொண்டவள், சினிமாவுக்குப் போனவள். கடந்த இருபது வருடமாகக் கறுப்பு, ஆசிய மக்களுடன தொடர்ந்து அவள் வேலை செய்கிறாள்.

அவள் சிறுவயதாகவிருக்கும்போது,பலவிதமான வேலைகளைச் செய்திருக்கிறாள்.சாப்பாட்டுக் கடையில் வெயிட்டராகப் பல நாட்டு மக்களுடனும் பழகியிருக்கிறாள்.ஆஸ்பத்திரியில் கழுவித்துடைக்கும் வேலை செய்யும்போதும்; அப்படியே பலருடன் வேலை செய்திருக்கிறாள்.வெளி நாட்டிலிருந்து இங்கு பிழைக்க வந்த சிறுபான்மை மக்கள் மாதிரியே,லண்டனிற் பிறந்து வளர்ந்த ஆங்கிலேயப் பெண்ணான ஜெனிபரும் ஒரு தொழிலாளி.

வாழ்க்கையைக் கொண்டு நடத்தக் கஷ்டப் பட்டு வேலை செய்வோரில் அவளுமொருத்தி. ஏன் மார்ட்டின் இருந்தாற்போல் தேவையில்லாமல் யாரையோ பேசுகிறான் என்ற அவளுக்குப் புரியவில்லை.
அவனுக்கு மிகவும் அதிக வேலைப்பழுவாகவிருக்கும் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்வதை விட வேறோன்றும் அவளுக்குப் புரியவில்லை.

அவள் கொண்டக்டராகவிருக்கம் 38ம் இலக்க பஸ்சில் பிரயாணம் செய்பவர்கள் பலரும் கறுப்பு, ஆசிய மக்களாகும் அந்த இனங்கள் வாழும் ஹக்கினி என்ற கிழக்கு லண்டனிலிருந்து இந்தப் பஸ் வெளிக்கிடும். அதில் பல தரப் பட்ட மக்கள் பல தரப் பட்ட அனுபவங்கள். அது அவள் வேலையில் தவிர்க்க முடியாதவை.

ஏன் மார்ட்டின் கறுப்பு மக்களைத் திட்டுகிறான் என்று ஜெனிபர் அவனைக் கேட்டாள்;. அப்படி அவள் கேட்டபோது அவன் கோபம் தலைக்கு மேற் போய்விட்டது.

‘நான் கறுப்பன்களைத் திட்டினால் உனக்கென்ன கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? அந்த நாய்களுடன்; சரசம் செய்து விளையாடுகிறாயா?’ குடித்த கண்கள் கோபத்திற் சிவக்க அவன் சீறி விழுந்தான்.

சிறுபான்மையின  மக்களுக்கு, பல வகைகளிலும் நடக்கும் அநீதிகளை அவனுக்குச் சொல்ல நினைத்தாள்.ஆனால் அவன் வெறியுடனிருக்கும்போது பேசிப் பிரயோசனமில்லை.

மார்ட்டின் வெறியாயிருக்கும்போது மவுனம் காப்பது நல்லதுத என்பது அவள் கணிப்பு.
நேற்று வெறியில் வந்தவன் ஜெனிபர் வைத்திருந்த இரவுச் சாப்பாடு ஆறிப் போய்விட்டதாகக் கத்தினான்.
இதெல்லாம் ,அவள் வேலை செய்வதால் வந்த கர்வத்தின் எதிரொலிப்பான வேலைகள் என்ற அதிகாலையிற் திட்டினான்.

முழுநேர வேலையை விட்டுத் தொலைத்து விட்டு ஏதோ பார்ட் ரைம் வேலை செய்ய அவளுக்கு ஆசைதான். ஆனால் குடும்பப் பொறுப்பு அதற்கு இடம் கொடுக்க வில்லை.

மார்ட்டினுடன் பட்ட தர்க்கத்தின் காரணத்தால் மனம் சலித்து வந்தவளுக்கு இந்த பஸ்சில் இப்போது நடக்கும் தர்க்கங்கள் எரிச்சலைத் தந்தன.

தள்ளாடிய நடையுடன் பஸ்சில் ஏறிய ஆங்கிலேய மூதாட்டி இப்போது,தொப்பி போட்ட ஆங்கிலேயக் கிழவனின் பக்கத்தில் இணைசேர்ந்து, கித்தார்வாத்தியப் பெட்டிக்காரனான கறுப்பு இளைஞனுடன் வாக்குவாதப் பட்டுக் கொண்டிருந்தாள்.

‘ஆமாம் மக்களின் தேவைக்காக நடத்தப்படும் பஸ்சில் எதைக் கொண்டு வருவது, எதைக் கொண்டுவரக்கூடாது என்ற பண்பு கிடையாது. எதையும் கொண்டு வந்து எங்களைக் கொலையும் செய்து விடுவார்கள்.’ ஆங்கிலேயக் கிழவி அடுக்கிக் கொண்டுபோனாள்.

‘இன்னொருதரம் உன்னுடைய வாத்தியப் பெட்டி என் தலையில் அடித்தால் என்தலை பிழந்துபோவது நிச்சயம”ஆங்கிலேயக் கிழவர் சோதிடம் சொன்னார்.

பஸ் போய்க்கொண்டிருந்தது.தாள ராகம் போட்டழுத குழந்தைகள் அவர்களின் தாய் கொடுத்த இனப்பில் அடங்கி விட்டார்கள்.

பஸ்சில் இருந்தவர்களின் இருக்கைகளுக்குக் கீழே,தாங்கள் தொலைத்த மீன்களைத்தேடிய ஆபிரிக்கப் பெண்களை அந்தக் கிழவன் முறைத்துப் பார்த்தார்.

‘என்ன பாhக்;கிறாய் கிழவா, தொலைந்து விட்ட மீனை நான் கீழே தேடுகிறேன். உன்னுடைய சாமான்களை எடுத்தவிட்டேன் என்று எங்களைப் போலிசில் பிடித்துக் கொடுக்கப்போகிறாயா?’

பெரிய மார்மகங்களைக் கொண்ட அந்த ஆபிரிக்கப் பெண் ஆங்கிலேயக் கிழவருடன் தர்க்கம் செய்தாள்.
‘அபாயமான பொருட்களை பஸ்சில் கொண்டுவருவது சட்டப்படி குற்றம்’ கிழவர் தனது கையையாட்டி உறுமினார். அவர் ரிட்டை பண்ணிய வழக்கறிஞராகவிருக்கலாம்.

”பார்க்கத் தெரியவில்லையா இது ஒரு கித்தார்ப் பெட்டிஎன்று’  மீன்காரப் பெண் தனது பெரிய முலைகளாடப் பெரியவரைப் பார்த்து ஆவேசமாகக்; கேட்டாள்.

‘ஆமாம் ஒரு தரம் அது சங்கீதப் பெட்டி என்பீர்;கள்,அடுத்த தரம் அபாயகரமான மந்திரப் பெட்டி என்பீர்கள்…உங்களை இந்த நாட்டுக்கு வரவிட்டதே பெரிய பிழை’ அலங்காரம் செய்த கிழவி,மீன்காரியைப் பார்த்து ஆரவாரித்தாள்.

‘ஆமாம் நாங்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தால் உங்கள் ஆஸ்பத்திரிகள், வீதிகள், வேலைத்தளங்கள்,பாதாள ரெயின்களெல்லாம் எல்லாம் நாற்ற மெடுக்கும்’

‘நீங்கள் வந்துதான் உங்களின் பழக்கவழக்ங்களால் எங்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நாறப் பண்ணியிருக்கிறீ;கள்’ கிழவனும் கிழவியும் போட்டி போட்டுக்கொண்டு வாதம் செய்தார்கள்.

;தயவு செய்து சத்தம் போடாமலிருங்கள்’ கார்ப்போர்ட் பெட்டிக்காரன் மெல்லிய குரலில் எல்லோரையும் பார்த்துச் சொன்னான்.

அடுத்த பஸ் தரிப்பு சாட்லஸ்வேல்ஸ் தியேட்டருக்கு அண்மையிலுள்ளது.

பஸ் நின்றது.

சுட்லஸ்வேஸ் தியேட்டரில்,வெளிநாட்டுக்கொம்பனி ஒன்று நடத்தும் ‘பாலே’ நாட்டிய நாடகத்தின் விளம்பரம் பிரமாண்டமாகத் தெரிந்தது.

ஜெனிபர், பஸ் ட்ரைவரிடம் வந்தாள். பஸ்சில் தொடரும் வாக்குவாதச் சண்டை பற்றிச் சொன்னாள். வாய்த்தர்க்கம் கைகளின் கலகலப்பில் முடிவதை அவள் விரும்பவில்லை.

பஸ் ட்ரைவர் ஒரு சீக்கியன், மஞ்சள்த் தலைப்பகையுடனிருந்தான் ஜெனிபருடன் பலகாலம் வேலை செய்கிறான். பஸ்சில் சிலவேளைகளில் நடக்கும் புல தரப்பட்ட சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்தவள். அவள், தற்போதைய நிலை கண்டு பயப்படுகிறாள். சீக்கிய ட்ரைவர் தலையைத (தலைப்பாகையைத்) தடவிக்கொணடு யோசித்தான்.

‘சண்டை பிடிப்பவர்களில் யாரோ ஒருத்தர் இறங்காவிட்டால் நிலைமை மோசமாகலாம்’அவள் அலுப்புடன் முறையிட்டாள்.ஜெனிபர் மிகவும் இளகிய மனம் படைத்தவள்.அவள் அந்தச் சூழ்நிலையைக் கண்டு பயப்படுவதை ட்ரைவர் விரும்பவில்லை.

டிரைவர் தன் இருப்பிடத்தை விட்டு இறங்கி வந்தான்.

‘நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால் நான் இங்கிருந்து பஸ்சை எடுக்கப் போவதில்லை’ சீக்கிய ட்ரைவர் கடுமையான தொனியில் பஸ்சில் உள்ள பயணிகளைப் பார்த்துச்சொன்னான்.

‘நான் என்ன சொல்லி விட்டேன். அந்தக் கறப்பன் என்தலையிலடித்தது பிழை என்றுதானே சொன்னேன் அது எப்படிப் பிழையாகும்?’கிழவர் நியாயம் கேட்டார். ‘அவன் என்ன வேணுமென்ற உன்னைத் தாக்கினானா?’ மீன்கார ஜோடியில் ஒன்று கிழவனை விசாரித்தது.

‘நாத்தம் பிடித்த உன்வாயை அடக்கிப் பேசு’ அலங்காரக் கிழவி ஆரவாரித்ததுதான் தாமதம், மீன்காரப் பெண் ஒருத்தி,ஆத்திரடத்தடன்; கிழவியின் தலைமுடியுpற் கைவைத்து விட்டாள்.

ஜெனிபர் ஓடிவந்து இருவருக்குமிடையில் புகுந்திருக்காவிட்டால் மீன்காரப் பெண் கிழவியின் பற்களை உடைத்திருக்கலாம்.(கிழவியின் வெண்பற்கள் செயற்கையாகத் தெரிந்தன!).

‘நான் சொன்னேனே,இவர்களை அடக்கமுடியாது என்று’ ஜெனிபர் அழாக்குறையாக ட்ரைவரைப் பார்த்தாள்.
‘என்ன நாடகமிது? நான் மிருக வைத்தியரிடம் அவசரமாகப்போகவேண்டும்’ கார்ப்போர்ட் பெட்டிக்காரன் கெஞ்சும் குரலிற் கேட்டான்.

‘நான் எப்படி இந்த பஸ்சை ஓட்டமுடியும்? இவர்கள் போடும் சண்டை அளவு மீறிப்போனால்; நாங்கள் எல்லோரும் பொலிஸ் ஸரேசனிற்தான் போய் நிற்கவேண்டும. இவர்களின் சண்டை ஓய்வதாயுமில்லை பஸ்சை விட்டு யாரோ ஒருத்தர் இறங்குங்கள் என்றால் அதையும் செய்கிறார்களில்லை’.

சீக்கிய ட்ரைவர் பஸ்சில் உள்ளோரை முறைத்துப் பார்த்தான்.

மழை சாடையாகத் தூறிக் கொண்டிருந்தது. காற்றும் பஸ்சில் நடக்கும் போருக்குப் பயந்து அமைதியாகி விட்டது போலிருந்தது.

அதே நேரம், அந்த வழியால் எழுபத்தி மூன்றாம் நம்பர் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் ரொட்டனாம் என்ற பகுதியிலாரம்பித்து,விக்டோரியாவுக்குத்தான் போகிறது..ஆனால் போகும் வழிகள் வித்தியாசம்.

விக்டோரியாவுக்குப் போகவேண்டியவர்கள் அவசரமாக இறங்கி ஓடிப்போய் அந்த பஸ்சில் ஏறிக் கொண்டார்கள்.
ஓரு கொஞ்ச நேரத்தில் பத்தொன்பதாம் இலக்க பஸ் வந்தது. பின்ஸ்பரிபார்க் என்ற இடத்திலிருந்து வரும் அந்த பஸ், இவ்விடமிருந்து கொஞ்தூரம் இவர்கள் போய்க்கொண்டிருக்கும் பஸ்சின் வழியாகப்போகும்.

அந்தத் தூரம் வரைக்கும் போவோர்களும் ஓடிப்போய் அந்த பஸ்சில் ஏறிக் கொண்டார்கள்.

சண்டை போட்ட பஸ்சில் இருந்தவர்களில் சண்டைபோடுபவர்களும் இன்னும் சிலரும் மட்டுமிருந்தார்கள். சண்டையிற் தொடர்பற்ற பலர் இறங்கிவிட்டார்கள்.

‘இப்படியான அபாயகரமான பெட்டிகளுடன் பிரயாணம் செய்யக் கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும்’ கிழவர் இன்னும் தொடர்ந்து சமர் செய்யும் தோரணையிற் பேசினார்.

‘சட்டம் வரமுதல் நாங்கள் செத்துப்போவம்.’ கிழவி பெருமூச்சு விட்டாள். ‘உங்களில் ஒருத்தர் இடம் மாறியிருக்க முடியுமா’ ஜெனிபர் சமர் செய்யும் கூட்டத்தைப் பார்த்துக்கோட்டாள்.

வாத்தியப் பெட்டிக் கறுப்பன் அவளை தர்மசங்கடத்துடன் பார்த்தான்.அவன் எழும்பும்போது,இன்னொருதரம் கிழவரின் தலையைத் தாக்க விரும்பவில்லை

‘ஆமாம் உங்கள் தரவழிப் பெண்கள் எப்போதும் கறுப்பனைத்தானே ஆதரிப்பீர்கள்?’ கிழவி இரடடைக்கருத்தில் விண்ணாணமாகச் சொன்னாள்.

‘மேல்த்தட்டில் நிறைய இடமிருக்கிறது.நீங்கள் போகலாம்தானே’ ஜெனிபர் கிழவனிடம் கெஞ்சிக் கேட்டாள்.
‘நான் கிழவன் ஏன் படியேறவேணும்? நான் பிறந்த நாட்டில் நான் எங்கே வேண்டுமானாலும் இருக்க எனக்கு உரிமையில்லையா?’ கிழவன் பரிதாபமாகக் கேட்டான்.

‘ஐயையோ எனக்கு நேரமாகிறது, மிருக வைத்தியரைப்பார்க்க எடுத்து நேரம் வந்து கொண்டிருக்கிறது’ கார்ப்போர்ட் பெட்டிக்காரன் சத்தம் போட்டான்.

‘ஏன் உனது செல்லப் பிராணிக்குப் பசி வரப்போகுதா?’ ஆங்கிலேய அழகிய இளம் பெண் பெட்டிக்காரனைச் சீண்டினாள்.

அவன் கோபத்துடன் அவளை முறைத்துப் பார்த்தான்.

‘ஆமாம், எனது பிராணிக்குப் பசிவந்தால் தாங்காது.எங்களில் யாரையாவது விழுங்கப் பார்த்தாலும் ஆச்சரியமில்லை’ அவன் ஆத்திரத்துடன் கத்தினான்.

‘அப்படி என்னத்தைப் பெட்டியில் வைத்திருக்கிறாய்? முதலையா மலைப்பாம்பா,?’அழகி விடாப்பிடியாத கிண்டலுடன் அவனைக் கேட்டாள்.

‘பாம்பு..மலைப்பாம்புக்குட்டி.. ஐந்தடி நீளம்,இந்தப் பெட்டியிற் சுருண்டு கிடக்கிறது.பார்க்கப் போகிறாயா’ பெட்டிக்காரன் ஆறுதலாக அவளைச் சீண்டினான்.

‘ஐயோ பாம்பு’ அழகி விழுந்தடித்துக்கொண்டு பாய்ந்தோடினாள்.

மற்றவர்களும் அடித்துக்கொண்டு அவசரத்துடன் எழுந்தார்கள்

‘எங்கே பாம்பு?’ பல குரல்கள் ஒரே தரத்தில் கேட்டன.

இங்கிலாந்தில் பாமபுபகள் மிகக் குறைவு.எங்கேயோ புதர் பற்றைகள் இருக்குமிடத்தில் வாழும் ‘அடர்’ என்ற விஷமற்ற பாம்பு எப்போதாவது இருந்து மக்களுக்குத் தரிசனம் கொடுக்கும். அதைப் பெரிய செய்தியாகப் பத்திரிகைகள் பிரசுரிக்கும்.

ஆனால் பிரித்தானியர் பலர் பல தரப்பட்ட பாம்புகளை உலகமெங்கும் தேடிப்போய் எடுத்துத் தங்கள் வீட்டில் வைத்துச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பது ஆச்சரியமல்ல.

‘எங்கோ பாம்பு’ ஜெனிபர் வெடித்தாள்.

‘எனது கார்ட்போர்ட் பெட்டியில், என் செல்வப் பிராணிகளை பஸ்சில் கொண்டுபோகக் கூடாது என்று ஏதும் சட்டமில்லையே’அவன் திமிராகக் கேட்டான்.

இங்கிலாந்தில் மிருக பாதுகாப்புச் சட்டங்கள் மிக மிக முக்கியமானவை.

கார்ட்போர்ட் பெட்டிக்காரன் ஜெனிபரைக்கேள்வி கேட்ட முடிவதற்கிடையில் பலர் பஸ்சைக் காலி செய்து விட்டார்கள்.

கறுப்பு இளைஞனின் வாத்தியப் பெட்டியிலடிபட்டுக்கொண்ட கிழவர் இறங்கி ஓடினார்.

இப்போது அவர் சத்தம் போடவில்லை. பாம்பிலிருந்து தப்பினாற் போதுமென்ற அவசரத்தில் ஓடிக்கொண்டிருந்தார்.

கிழவி தள்ளாடியபடி இறங்கிக் கொண்டாள். இரட்டைக் குழந்தைகள் ஜெனிபரின் உதவியுடன் தள்ளு வண்டியில் ஏற்றப் பட்டன.

மீன்கார ஜோடி எப்போதோ மறைந்தோடி விட்டார்கள்.அவர்களின் பையிலிருந்து தவறி விழுந்த மீன் ஒன்று பாம்புப் பெட்டிக்காரனின் காலடியிற் கிடந்தது.

கித்தார் வாத்தியப்பெட்டி, தன் சொந்தக்காரனுடன்,அந்தப் பக்கம் வந்த இன்னுமொரு முப்பத்தி எட்டாம் இலக்க பஸ்சில் ஏறிக் கொண்டது.

பஸ்சின் கீழ்த்தட்டில் இப்போது பாம்புபு; பெட்டிக்காரனைத் தவிர எந்தப் பயணிகளுமில்லை.

‘நீ இறங்க மாட்டாயா’ ஜெனிபர் பாம்புக்குப் பயந்தவள். பாம்புக்காரனைக் கேட்டாள். அவன் வைத் திருப்பதோ வெறும் பாம்பில்லை. மலைப்பாம்பு!

‘இல்லை,நான் இறங்க இன்னும் இரண்டு தரிப்புக்கள்தானிருக்கிறது. அதற்கிடையில் ஏறியிறங்கி ரோனியை- சாரி, என் செல்லத்தைத் (பாம்பை) தொல்லை படுத்த விரும்பவில்லை’.

சீக்கிய ட்ரைவர் ஜெனிபரைப் பார்த்துச் சிரித்து விட்டு பஸ்சை ஸ்ராட் பண்ணினான்.

‘ஜெனிபர், உனது ஆங்கிலேயர்கள் விசித்திரமான மனிதர்கள். மனிதர்களை வெறுப்பார்கள் பாம்பைக் கொஞ்சுவார்கள்’ என்று சொல்லிச் சிரித்தான்.

ஜெனிபர் அந்த பஸ்சில் பாம்புடன் பயணம் செய்கிறாள்.

‘என்ன வாழ்க்கையிது, எத்தனை விதமான பயணிகளைக் கட்டி மாரடிக்க வேண்டியிருக்கிறது?அவளைத் திட்டும் கணவன், அவளைத் திட்டும் பயணிகள்,போதாக் குறைக்கு அவளுடன் பயணம் செய்யும் பாம்பையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

ஜெனிபர் பெருமூச்சு விட்டாள்.

அடுத்த தரிப்பில் பல பயணிகள் பஸ்சில் பாம்பு இருப்பது தெரியாமல் ஏறிக்கொண்டார்கள்.

பஸ் விக்டோரியாவை நோக்கி ஓடிக்கொஒ;டிருக்கிறது!

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *