கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 14,556 
 
 

தெய்வான வந்தாளா. அரக்கோட்ட நெல்லு இருக்கு. குத்தணும்.

பாத்தேன்னா நான் வரச்சொன்னேன்னு சொல்லு. சப்பா என்ன வெக்க. அப்பளம் சுடற மாதிரி கால் ரெண்டும் பொத்து போச்சு. புலம்பிக்கொண்டே உள்ளே நுழைந்தார் சங்கரம்பிள்ளை.

யாரு வெளில கோட்டி ஆச்சியா. ஒழுங்கா சொல்லுவியா. எங்க திருப்பி சொல்லு. ஆத்தா கிட்ட என்ன சொல்லுவ. சங்கரம்பிள்ளையின் மனைவி பார்வதி கேட்க

பாததி தெதுல நெல்லு துத்த போ. பாவதி அம்மா தொல்லிச்சு. வாய்குழறி சொன்னாள் கோட்டி ஆச்சி.

என்ன பாவம் செஞ்சாளோ. வாய் இழுத்துக்கிச்சு. மனசுல ஒரு வெனம் கிடையாது. சொன்னத செய்யும். கொடுத்துத வாங்கிட்டு போகும். சம்பள நெல்லு வந்தாச்சு. இன்னிலேந்து ஒருவாரம் பொழுது போகும்.

தெய்வானய நாங்கல்லாம் ஆத்தா னு தான் கூப்பிடுவோம். இங்க பெரும்பாலானவங்க வாழ்க்க சிவங்கோவில நம்பிதான். எந்த ராசா கட்டினானோ அவனுக்கு புண்ணியமாப் போகும். கோவிலயும் கட்டி தானமா நாலு கிராமத்தையும் எழுதி வச்சிட்டுப் போயிட்டான். கோவிலுக்குபக்கத்திலிருக்குற பாரதி தெருல தான் எங்க வீடு. கடைத்தெருக்கு அந்த வழில தான் போகணுங்கறதால எப்போதுமே தெரு கலகலப்பாவே இருக்கும். வேலைய முடிச்சிட்டு வாசத் திண்ணைல உக்காந்தா போதும். பொழுது போகறதே தெரியாது. கோவில் மடத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடம், கல்லூரில தான் பசங்க எல்லாம் படிச்சதால மொதல்லேந்து செலவுனு பெரிசா ஒண்ணும் இல்ல. தொடக்கத்துல கால் கோட்ட நெல்லும் நூறு ரூபாய் பணமும் சம்பளம். இப்போ ஒசந்து அரைக்கோட்ட நெல்லும் ஆயிரம் ரூபாயும் கெடைக்குது. வெறும் பால் மட்டும் தான் காசு கொடுத்து வாங்கணும்.

காலை நைவேத்தியம் பத்து மணிக்கு கோவில் பிரசாதம் வந்துரும். பச்சரிசி தோசையோ , பொங்கலோ ஏதோ ஒண்ணு. மதியம் ஒரு மணிக்கு அன்னதானச் சாப்பாடு. கோவில்ல வேல பாக்கறவங்க பாத்திரம் கொண்டு போய்வீட்டுக்கு எடுத்துட்டு வரலாம். ராத்திரிக்கு அதுல மிச்சம் மீதி இருக்கறதயே சாப்பிட்டுக்க வேண்டியதுதான். சம்பள நெல்லு குத்தி வந்தஅரிசிய வச்சி எப்பவாது சாப்பாடு செய்யறதுதான். இப்படியே எத்தனையோ வருசம் கழிஞ்சு போச்சு. பசங்க எல்லாம் வேல , கல்யாணம் னு வெளியூருல செட்டில் ஆயாச்சு. அவுங்க வாங்கிக்கொடுத்த டிவி இருக்கு. அத பாக்கற அளவு பொறும இல்ல. மனதில் அசை போட்டுக்கொண்டேபூசை அறையை சுத்தம்செய்து கொண்டிருந்தாள் பார்வதி பாட்டி.

பத்து மணிக்கு இன்னிக்கு பேரன் வரான். ஞாபகப் படுத்தினார் சங்கரம்பிள்ளை.

எல்லாம் இருக்கு. அதான் நேத்திக்கே ஆட்டுக்கல்லுல இட்லி மாவு அரைச்சேனே. அவனுக்கு கோவில் சாப்பாடு புடிக்குமோ புடிக்காதோ. மதியானத்துக்கும் வீட்லயே பண்றேன். பாவம் அவன் இருக்கப் போறது ரெண்டு நாள் தானே. எல்லாத்துலயும் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லக்கூடாது.

கூடவே யாரையோ கூட்டிகிட்டு வேற வரானாம்.

ஆத்தா வந்து விடவே. நெல்மூட்டை இருக்கும் இடத்தைக் காட்டினாள் பார்வதி பாட்டி. கூட வந்த நபரின் உதவியுடன் அதை சைக்கிளின் பின்புறத்தில் ரப்பர் டியூபால் கட்டி மில்லுக்கு எடுத்துச்சென்றாள் ஆத்தா. நாளைக்கு பதினோரு மணிக்கு நாலு பக்கா அரிசி கொண்டு வரேன். இப்போத்தய செலவுக்கு. மீதத்த அப்பறம் பாக்கலாம். அவளே முடிவெடுத்து சொல்லிவிட்டுச் சென்றாள்.

சிறிது நேரத்தில் பேரன் வந்து விடவே வீடு கலகலப்பானது. வருண் தன்னுடன் வேலைபார்க்கும் சோனியாவையும் கூட்டி வந்திருந்தான். உள்ளே நுழைந்தவுடனேயே அவளை தாத்தா பாட்டி இருவரிடமும் அறிமுகப்படுத்தியவுடன் அவள் இருவரின் கால்களை தொட்டு கும்பிட்டாள். பாட்டிக்கு ஒரே ஆச்சர்யம்.

டேய் யாருடா இது. உண்மைய சொல்லு. பொண்ணு பாக்க லட்சணமா இருக்கா. என்ன குலம். எந்த ஊர் பொண்ணு.

நான்தான் சொன்னேனே பாட்டி. இவ எங்கூட வேல பாக்கறவ. அவ்ளோ தான். ஆனா இவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதயாவே இரு. சொல்லிவிட்டு குளிக்கப் போய்விட்டான்.

என்னவாக இருக்கும். இவளுக்கு திருட்டு புத்தி இருக்குமோ. சே.. சே.. பாத்தால் அப்டி ஒண்ணும் தெரியல. இங்க என்ன வைர வைடூரியமா பாழா போகுது. சமயல் கட்டுக்குள்ள புளிப் பானை , உப்புப் பானை, நாலைந்துஊறுகா பரணி. பத்து பதினைஞ்சு பாத்திரம். அவ்ளோ தான். ஹால்ல ரெண்டு கோரப்பாய். பிளாஸ்டிக் சாக்குப்பைக்குள்ள பழைய துணிய அடைச்சி தைச்ச மூணு தலகாணி. ரெண்டு ஓல விசிறி. கிணத்தடில ஒரு பித்தளத் தோண்டி. ஒரு இரும்பு வாளி. மொத்த சொத்தே இவ்ளோ தான்.

வருண் ஒரு கிருக்கப்பய. அப்டியே எம் புள்ளய உரிச்சு வச்சிருக்கான். அவன்தான் யாரையும் அவ்ளோ சுலபமா நம்ப மாட்டான்.

வாசற் பக்கம் சோனியா தாத்தாவுக்கு தன்னோடு கொண்டு வந்த நியூஸ் பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தாள். பாட்டியைப் பார்த்தவுடன் எனக்கும் கிச்சன்ல ஏதாவது வேல குடுங்க. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். சொன்னதோடு நிற்கவில்லை. செய்ய ஆரம்பித்து விட்டாள்.

குளிச்சப்பறம் தான் கிச்சன்ல வேல பண்ணணும். சொன்னவுடன் மறுக்காமல் வெளியே வந்து குளிக்க ரெடியானாள். ஒருவித முகச்சுளிப்பும் இல்லாமல் வெகுநாள் பழக்கம் போல் பழகியது பாட்டிக்கு சந்தோசம். குளித்து விட்டு வெளியே வந்த வருணிடம் சோனியா நல்ல பொண்ணுடா ….

சொன்னதை அவன் காதில் வாங்கியதாக தெரியவில்லை.

அன்று முழுவதும் பாட்டிக்கு பிடித்த மாதிரியே அவள் பேசினாள், நடந்து கொண்டாள். ஆனால் வருண் மட்டும் இடையிடையே அவளைப் பற்றி ஏதோ சொல்ல முற்பட்டதை தெரிந்து கொள்ள முடிந்தது. எப்போதும் சோனியா பாட்டியை பிரியாமலேயே இருந்ததால் அவனால் எதுவும் பேச முடியவில்லை.

சாயங்காலம் சாவகாசமாக திண்ணையில் உட்கார்ந்த பின் நாலு வீடு தள்ளி இருக்கும் அமிர்தா மாமியும் வந்துவிட்டாள்.

அம்பி வருண் உன் ப்ரெண்ட் ரொம்ப கெட்டிக்காரி. சுறுசுறுப்பு. அவகிட்ட கத்துக்க வேண்டிய விஷயங்கள் நெறைய இருக்கு. வருண் எழுந்து போவதைப் பார்த்த பார்வதிப் பாட்டிக்கு அவனுக்கு அமிர்தா மாமி சொன்னதில் உடன்பாடு இல்லை என தோன்றிற்று.

ராத்திரி எந்த மொனகலும் இல்லாமல் கோரைப்பாயில் படுத்துத் தூங்கினாள் சோனியா. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் தாத்தாவுடன் ஆற்றங்கரை வரை வாக்கிங் சென்று சுற்றிப்பார்த்து விட்டு வந்தாள். வருண் அவர்கள் திரும்ப வரும்வரை முகத்தை மூடி தூங்கிக் கொண்டே இருந்தான்.

தினசரி வேலைகளிலும் பாட்டிக்கு உதவியாக இருந்த சோனியா ஆத்தா வந்தவுடன் அவள் கொண்டுவந்த நாலு பக்கா நெல்லை புடைத்து உமி தட்டுவதை கண் கொட்டாமல் பார்த்து கடைசி முறத்தை தான் வாங்கிப் புடைத்தாள். அரிசியையும் , குருணையையும் பிரிப்பதிலயும் ஆத்தா கூடவே நின்றதால் அவளுக்கு சோனியாவை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.

அம்மா உங்க பேரனுக்கு இந்த புள்ளய கட்டி வச்சிர வேண்டியதுதானே. அவள் கேட்டே விட்டாள். அன்று இரவு இருவரும் கோயம்புத்தூர் செல்ல வேண்டும். பாட்டிக்குஇருப்புகொள்ளவில்லை.

சாயங்காலம் அமிர்தா மாமியுடன் சோனியா கோவிலுக்கு புறப்பட்டது வசதியாகப் போயிற்று. பாட்டி பின்னாலேயே வருவதாகச் சொல்லிவிட்டு வருணுடன் பேச ஆரம்பித்தாள்.

ஏண்டா அந்தப்பொண்ணுக்கு என்ன கொறச்சல். வருண் இடையிலேயே அவளை தடுத்தான். பாட்டி நீங்கல்லாம் எளிமயா வாழறீங்க. நேர்ல பாக்கறத அப்டியே நம்பறீங்க. அவளோட குணம் வேற. இங்க வந்திருக்கறதால உங்க எல்லாருக்கும் ஏத்த மாதிரி நடந்துக்கறா. இந்த மாதிரி டவுண்ல வாழற பெரும்பாலானவங்க வெளில வந்த இடத்துல, வேற மாதிரி நடந்துக்குவாங்க. எல்லாரும் அவங்கள எப்போதுமே நல்லவங்க னு சொல்லணும். அதுதான் அவங்களோட குறிக்கோள். அதுக்காக அவுங்க எந்த லெவல் கு வேணும்னாலும் நடிப்பாங்க. சொந்த வாழ்க்கைல வீட்டுக்குள்ள அவங்க வேற மாதிரி. இதெல்லாம் உனக்கு புரியாது.

டேய் போடா. எல்லா எடத்துலயும் மனுசங்க தானே வாழறாங்க. இங்கயும் இந்த மாதிரி ஆளுங்க இருக்காங்க. என்ன பட்டப் பெயர வச்சி அவங்கள கண்டு பிடிச்சிடலாம். இப்போ போறாளே அமிர்தா அவ பேரு ரேடியோ அமிர்தா. ஒருவிசயத்த சொன்னா போதும் வீடு வீடா போய் பரப்பிடுவா. பக்கத்து வீட்டு சியாமளா பேரு வம்பி. யாரப் பத்தி நாம சொல்றோமோ அடுத்த நாள் அவங்க கிட்ட போய் போட்டுக்குடுத்துட்டு வந்துருவா. மனசுல எதுவுமே வச்சிக்காம எல்லாத்தையும் சொல்றவ பைத்தியம். அதனால அவ கோட்டி ஆச்சி. வெளில பெரிசா பேசிட்டுத் திரியற ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லாதவங்கள வெத்து வேட்டு, அடுத்தவன்என்ன செய்யறான்னே எரிஞ்சு சாகற சன்மங்கள தீசல் னும், சொல்லுவோம்.

இதோ போறாளே இந்திரா. இவ பேரு கோள் மூட்டி. மனுசன் முன்னால நின்னா நல்லவ மாதிரி பேசி விசயத்த கறந்துட்டு அதுகூட இல்லாததையும் பொல்லாததையும் சேத்து அவங்க போனவுடனே சண்ட மூட்டி உட்ருவா.

நேத்து மாமி சொல்லலையா. நீளக்கை நாதன் வரான். உள்ள வந்தா சாமான் பத்திரம் னு. உனக்கு புரியல. அவன் வந்துட்டுப் போனா எதையாதவது திருடிட்டு போயிருவான். அதனாலதான்.

எவ்வளவு யதார்த்தமாக எல்லாரையும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் வருணுக்கு ஆச்சர்யம்.

பாட்டி சொன்ன அத்தனை விதமான நபர்களும்தான் என் அலுவலகத்துலயும் இருக்காங்க. என்ன நாகரீகமா உடை உடுத்தி நடமாடுறாங்க அவ்வளவுதான். இவங்கள எப்படி சமாளிக்கறது னு பாட்டிகிட்ட கேட்டு கத்துக்கணும்.

என்னடா யோசனை. இப்போ விசயத்துக்கு வா. இந்த பொண்ண பத்தி சொல்லு. பாட்டி இடை மறித்தாள்.

அதான் பாட்டி ரோட்ல போறவங்கள பத்தி சொன்னயே. அந்த கோள் மூட்டி கொணம் இவகிட்ட உண்டு. அது தாண்டியும் ஆளுக்கு ஏத்தா மாதிரி நல்லா நடிப்பா. உங்க ஊர்ல இவள மாதிரி ஆள் இல்ல போல.

ஆளுக்கு ஏத்தா மாதிரி நடிச்சி கோள் மூட்டி , எடத்துக்கு ஏத்தா மாதிரி தேனொழுக மாத்தி மாத்தி பேசி மயக்கறவங்கள பசப்பி னு சொல்லுவோம். புதுசா பாக்கறவங்களால அவுங்க பேச்சுல தப்பே கண்டுபிடிக்க முடியாது. கரையான் அரிக்கிற மாதிரி இருக்குற எடம் தெரியாம சத்தமில்லாம அடுத்தவங்குடிய கெடுத்துட்டு போயிருவாங்க..

பாட்டி அதுதான். இப்போ சொன்னியே. சோனியா ஒரு பசப்பி தான். என்னய பத்தி ஆபீஸ்ல போட்டுக் குடுத்துட்டு என்னோட எதிரிகூடவே சுத்திட்டிருந்தா, இப்போ நான் புதுசா பிராஜக்ட் பண்ணப்போறேன் எனக்கு பதவி உயர்வி கெடச்சது னு தெரிஞ்சவுடனே நல்லவ மாதிரி நடிச்சி எங்கூடவே ஒட்டிட்டு அலையறா. நல்ல வேள. நீயாவது சரியா புரிஞ்சுக்கிட்டயே. இனிமே அவளப் பத்தி சொல்லும்போதெல்லாம் பசப்பி வந்தா போனான்னுதான் சொல்லுவேன்.

எனக்கும் டென்ஷன் கொறையும்.

வேலில போற ஓணான எடுத்து முதுகுல கட்டிக்கிட்ட மாதிரி கூடவே பசப்பிய கட்டிட்டு அலையப் போற. பாத்து. எதுன்னாலும் பாட்டிட்ட சொல்லு. கவலப் படாத. பேசிக்கொண்டிருக்கும்போதே சோனியா வந்ததால் பாட்டி பேச்சை நிறுத்தினாள். .

இருவரும் ட்ரெயினுக்கு கிளம்பி வெளியில் சென்றவுடன் தாத்தா கையை அசைத்து அசைத்து பசப்பியை வழியனுப்பிக்கொண்டிருந்தார்.

– இச்சிறுகதை முத்துக்கமலம் மின்னிதழில் வெளியிடப்பட்டு (15 பிப்ரவரி) நெல்லை கவிநேசன் அவர்களிடமிருந்து சிறந்த படைப்பிற்கான புத்தகப் பரிசைப் பெற்றது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *