நான் நீங்கள் மற்றும் சதாம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 17,582 
 
 

விழிப்படலத்தின்மீது கருமுழிபோல் சுழன்று கண்மூடவிடாது உறுத்திக்கிடந்த பூமியுருண்டையை தூக்கியெறிந்த மாயத்தில் உறக்கமென்ற பேரானந்த அமைதி தழுவிக்கொண்டது. தான் கண்டுபிடித்த கடிகாரத்திடம் இரவையும் பகலையும் ஒப்புக்கொடுத்துவிட்டு அந்த முள்ளின் நொடிப்பில் வாழப் பழகிவிட்ட நடப்புலக மனிதனில்லை நீ… தூங்கு மகனே… தூங்கு.. என்றபடி தனது றெக்கையின் பொன்னிற இறகுகளால் வருடியபடியே கடலுக்கும் வானுக்கும் ஒய்யாரமாய் தாலாட்டினாள் தேவதையொருத்தி. செகன்ட்ஷிப்டின் அலுப்பை தூங்கியே போக்கிக்கொள்ள வேண்டியதை அறிந்திராத அந்த கடிகாரஎந்திரம் பனிரெண்டு அடித்து யாருக்கும் பிடிபடாத காலம் எனக்கும் நழுவிப்போயிருந்ததை உணர்த்தி நகர்ந்தது. தாய் வயிற்றிலிருந்து பிரியும் துக்கத்தோடு எழுந்து கதவைத் திறந்தால் தாரக்நாத் நிற்கிறான்.

மாதமிரண்டு ஆகியிருந்தது நாங்கள் சந்தித்து. மெலிந்திருந்தான் முன்பிலும். சோர்வின் பிடியில் வாதையுறும் கண்களில் பீளையாய் தங்கியிருந்தது தூக்கத்தின் ரேகை . பதுங்கிடம் கிடைத்ததும் ஒளிந்து கொள்ளும் நிம்மதியின் பாவனை துளிர்க்கிறது இப்போது முகத்தில். கெண்டைச்சதை திரளும் துடியான நடை ஓடிப்போயிருந்தது. கொட்டிவிட்ட நீரைப்போல் ஓசையற்று உள்நுழைந்தான். எப்போதும் உட்கார தேர்ந்தெடுக்கும் மோடாவை தவிர்த்து சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டி தரையிலேயே உட்கார்ந்துகொண்டான். உபசரிக்குமளவு அன்னியனில்லை அவன். நானெதுவும் சொல்லவில்லை.

தாடி இப்போது நீண்டு வளர்ந்திருந்தது கொசகொசத்து. கோயிலுக்கா என்றேன் சைகையில். அங்கே என்னயிருக்கு போக என்றான். கோயிலே கதி என்றிருந்தவன் இப்படி தீவிர சார்வாகம் பேசுகிறானே…? சிரித்துக்கொண்டேன். சிரிப்பின் உட்பொருள் அவனுக்கா புரியாது? பொருட்படுத்தாதிருப்பதாய் காட்டிக்கொள்வதன் மூலம் தனது சமநிலை குலையவில்லை என்று தெரிவிப்பனாக தாடியை மெல்ல வருடிக்கொண்டான்.

குளித்து தயாராகி வருவதற்குள் இரண்டு சிகரெட்டுகளை முடித்து மூன்றாவதை பற்றவைத்திருந்தான். நெளிந்தலையும் புகையூடே எதையோ தேடுபவனாக கவனங்குவிந்திருந்தது. பூப்போல சாம்பல் துளிர்ந்து கிடக்கிறது. அமைதியில் கரையவிட்டவனைப் போன்றிருந்தவனின் தோள்தட்டி உசுப்பினேன். சலனமற்ற பார்வையில் எந்த செய்தியுமற்று எழுந்துகொண்டான். அந்த கரிமண்டி மிஷினில் அரைபட இத்தனைநேர அலங்காரமா உனக்கென்னும் அவனது வழக்கமான கொச்சைத்தமிழ் கிண்டலில்லை இன்று. பூட்டிக்கொண்டு சாப்பிடக் கிளம்பினோம்.

நான் மட்டுமே சாப்பிட வேண்டியதாயிருந்தது. காபியோடு நிறுத்திக்கொண்டான் அவன். இதுபோன்ற ஓட்டல்கள் தேர்வுடையதாயில்லை எப்போதும் அவனுக்கு. கை கழுவுமிடத்திலிருக்கும் ஒடுங்கிய ஈயத்தம்ளரிலிருந்து எதுவுமே அவனுக்கு ஒம்பவில்லை. ஒரு இடத்தில் சாப்பிடவும் மறுக்கவும் அனந்தமான காரணங்களை அடுக்கமுடியுமா ஒருவனாலென்று ஆச்சர்யம் கொள்வேன். சுத்தமில்லாத இடத்தில் ருசியுமிருக்காது என்று தீவிரமாக நம்பினான். எதுவொன்றின் சுத்தமும் ருசியும் அதற்குள்ளேயே இருக்கும். அதை உன் மனசிலிருக்கும் சுத்தத்திலும் ருசியிலும் கலக்காதே என்பதை ஏற்பதில்லை அவன். கழுத்துக்கு கீழே போனால் நரகல், அதற்கெதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்… பசியின் காந்தலாற்ற அப்போதைக்கு எதையாவது கொட்டிக்கொள்வதைத் தாண்டி உணவுக்கொள்கை ஏதுமில்லை எனக்கு. நடக்கமாட்டாதவன் சித்தப்பன்வீட்டில் பெண்ணெடுத்தக் கதையடா உன்னுடையது என்று பரிகாசம் செய்வான். இருக்கட்டுமே, இந்த சித்தப்பன் பெரியப்பன் அத்தை சித்தி உறவெல்லாம் ஆதியிலேயே மனுசனோடு இருந்ததில்லை என்பேன். தலையிலடித்துக் கொள்வான்.

என் வசிப்பிடமும் அவனுக்கு அசூயையால் நிரம்பியதே. காத்து கிடையாது. வெளிச்சமில்லை. பாச்சை மிலுமிலுக்கும் பொந்தென்று முகஞ்சுளிப்பான். வந்தாலே இருப்பின்றி தவிப்பான். சுவற்றில் காய்ந்து கிடக்கும் மூட்டைப்பூச்சி ரத்தம் இப்போதும் ஈரத்தோடு பொங்குவதான பதற்றம் கொள்வான். கிளப்பிக்கொண்டு வெளியில் போவதிலேயே குறியிருக்கும். ஏரிக்கரையிலோ ரயில்வே ஸ்டேசன் மரத்தடியிலோ வந்து உட்கார்ந்த பின்தான் சற்றே இயல்பு திரும்புவான். அம்பது நூறு அதிகமானாலும் அக்கம்பக்கம் படித்த நாகரீகமானவர்களுக்கு மத்தியில் நீ குடியிருக்கவேண்டும் என்பான் அடிக்கடி. நீலப்படம் எடுத்த டாக்டர் பிரகாஷ் கைநாட்டா? நாட்டையே திவாலாக்கின ஹர்ஷத் மேத்தாவும் டெல்ஜியும் படிக்காதவங்களா? லவ்வரைக் கொன்னு தந்தூரியடுப்புல எரிச்ச சுசீல் சர்மாவும் ஐம்பத்திநாலு பேரை ரயிலில் எரிச்சவங்களும் பதினாலுபேரை பெஸ்ட் பேக்கரியில உயிரோடு கொளுத்தினவங்களும் படிப்பறிவில்லாத பாமரர்களா? என்று எப்போதாவது நானும் எகிறுவதுண்டு. நாகரீகமானவங்கன்னு நான் சொன்னதை வசதியா மறந்திட்டு நீ பேசறே என்று வாதாடுவான். அப்படியானால் படிப்புக்கும் நாகரீகத்துக்கும் சம்பந்தமில்லேன்னு ஒத்துக்கோ என்பேன். வாதம் நீண்டு மனஸ்தாபமாகிவிடுமோ என்கிற எச்சரிக்கை இருவருக்குமே இருந்தது.

பத்துநிமிட சைக்கிள் மிதிப்பில் கம்பனிக்குப் போய்வர ஏதுவான தூரத்தில் இவ்வளவு குறைவான வாடகையில் ஓரிடம் கிடைப்பதே பெரும்பாடு. லாட்ஜ் போலுமில்லாமல் வீட்டுக்கான லட்சணங்களுமற்று ஒரு பெரிய ஹாலை குறுக்குச் சுவரெழுப்பி தடுத்ததுபோலிருந்ததில் ஆறுகுடும்பங்கள். மூன்று கழிப்பறைகளும் இரண்டு குளிப்பறைகளும் பொதுவிலிருந்தன. என் ரூம் தான் கடைசியில். அண்டையில் வாழ்பவர்கள் சுத்தபத்தமாக இல்லை என்பதே அவனது அதிருப்திக்கும் அசூயைக்கும் காரணம் என்பதை நானறிவேன். ஆனால், இயல்பிலேயே சுத்தபத்தமாகவும் இணக்கமாகவும் வாழ்வதன்வழியாக அவனது அபிப்ராயங்களை பொய்யாக்கிக் கொண்டிருந்தனர் எனது அண்டைவீட்டார்கள் என்பதிருக்கட்டும் ஒருபுறம். அவர்களென்ன ஆபீஸ்வேலைக்கா போய்வருகிறார்கள், மினுக்கும் தளுக்கும் குறையாதிருக்க…? சைக்கிள்ஷாப், லேத் பட்டறை, லாடமடிப்பது, குடைரிப்பேர், தோல்வியாபாரம், கறியறுப்பது…. என்று அழுக்கின் நியமத்தில் புழங்கியாக வேண்டியவர்களிடம் இன்னதுதான் சுத்தமென்று இவனாக எதிர்பார்ப்பது எத்தகைய அராஜகம்….? அதுவுமில்லாமல் சுத்தமென்றால் என்னவென்று வரையறுத்தாகிவிட்டதா…? யார் பார்வையில் எது சுத்தம்…? காலகாலமாய் நடந்துகொண்டிருக்கும் ஒரு விவாதத்தின் மீது உடனடியாய் தீர்ப்பெழுதும் அதிகாரம் யாருக்கிருக்கிறது…? எப்போதோ ஒன்றின்மேல் எதற்காகவோ உருவான கருத்தை எல்லாக்காலத்திற்கும் நீட்டிப்பதாயிருந்தது அவனது பிடிவாதம்.

அவனிருப்பது மத்திகிரி பிரிவு ரோட்டில். இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி. அங்கும் ஊருக்குள் இல்லை. வெளியொதுங்கி ஜனசஞ்சாரமற்ற காடு அது. பகிரங்கமற்ற வழிபலதிலும் கொள்ளை தீட்டிய பணத்தில் பெங்களூரிலிருக்கும் வடக்கத்தியான் ஒருவன் இந்தக் காட்டுக்குள் உருவாக்கியிருக்கும் பண்ணைவீட்டின் மேனேஜர், கேர்டேக்கர், பலநேரங்களில் வாட்ச்மேன் என்று சகல பதவிகளையும் ஒருசேர வகிக்கும் அந்தஸ்து ரேகையோடியது தாரக்நாத்தின் ஜாதகத்தில். வருடத்தில் ஓரிரு நாட்கள் தவிர எஞ்சிய காலத்தில் முதலாளியெனும் மகுடத்தையும் அவனே சுமக்கவேண்டியிருந்தது.

பெருஞ்சாலையின் சந்தடிகளில் அலுப்புறும்போது முதலாளி மனைவியுடனோ மனைவிபோல் யாருடனோ வந்து ஓரிருநாட்கள் தங்கிப்போவதுண்டு. முதலாளிச்சியும் வருவதுண்டு அதேரீதியில். அப்போது மட்டுமே வேலை முறியும் இவனுக்கு. மற்றநாட்களில் அவசியமேயற்ற டெலிபோனுக்கு பில் கட்டுவது, கழுதையுயர நாய்க்கு மாட்டெலும்பும் கறியும் வாங்கிவந்து தின்னடிப்பது, மிஞ்சியப்போதுகளில் அந்த செடியில் ஏன் பதினோரு பூ…இந்த மரத்தில் எப்படி நாற்பத்திரண்டு பழம் என்பதான யோசனைகளில் ஆழ்ந்துவிடுவான். காய்கனி வர்க்கங்கள் மிகும் காலங்களில் பக்குவம் பண்ணி பெங்களூரில் முதலாளி வீட்டில் சேர்ப்பது, அப்படியே பருத்த ஸ்தனங்களின் மேல்வெட்டு தெரிய மூடாக்கில்லாத சுடிதாரில் வெறிக்க வெறிக்க வளையவரும் முதலாளிச்சியை பார்த்துவிட்டு வந்து பொம்பளையா அவளென்று திட்டிக்கொண்டிருப்பதாக அவனது நித்யகர்மங்கள் தீர்மானமாகியிருந்தன. இப்படியான வேலைகளில் சலிப்புத் தட்டுமானால் ஓட்டை மொபட்டை துடைத்தெடுத்துக் கொண்டு என்னை பார்க்கவருவான். அல்லது இங்கு வந்த மூன்றாம் மாதத்திலேயே வாங்கிய முப்பதுநாளில் தமிழ் கற்பிக்கும் புத்தகத்தை புதிதெனக் கருதி படிப்பான்.

ஆனாலும் எட்டுமணிநேர வேலை, நாலுமணிநேர கட்டாய ஓ.டி என்று என்னைப்போல் அவதியுற வேண்டியதில்லை. இன்னவேலையை இப்போதே செய்தாக வேண்டுமென்று மிரட்டவும் அதிகாரம் கொள்ளவும் யாருமில்லை. வாங்கும் சம்பளத்தில் நயாபைசாவையும் செலவழிக்க வேண்டிய தேவையேதுமில்லை. ஆனால் காலியாகிவிடும். வாச்சாத்தி பெண்களின் வழக்கு செலவிற்கு, பம்பாய் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஹரியானாவில் அடித்துக்கொல்லப்பட்ட ஐந்து தலித் குடும்பங்களுக்கு, அதற்கு முன்பு தாமிரபரணிக்குள் மூழ்கடித்து கொல்லப்பட்ட மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் குடும்பங்களுக்கு, இலங்கை அகதிகள் முகாமின் குழந்தைகளுக்கு என்று சேமிப்பை செலவழித்துக் கொண்டிருக்கிறான். இப்படியான அவனது உதவிகள் அநேகமாய் என்னைத்தவிர பிறத்தியார் யாருக்கும் தெரிந்தவிடக்கூடாது என்பதில் வெகுகவனமாய் இருந்தான். படிப்பதற்கோ மருத்துவ சிகிச்சைக்கோ நிதியுதவி கோரும் எத்தனையோ வேண்டுகோள்களை பத்திரிகைகளில் தினசரி பார்க்க நேர்ந்தாலும் அதை பொருட்படுத்தமாட்டான். அவர்களுக்கு உதவிட வெறும் தயாளகுணமோ அல்லது குறைந்தபட்சம் டை கட்டிக்கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளுமளவுக்காவது விளம்பரப் பிரியமோ உள்ள ஏராளமான தனிநபர்கள், அமைப்புகள் முன்வரக்கூடும். ஆனால் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு முன்னிபந்தனையாக ஒருவன் தன் சாதியை மதத்தை மொழியை இனத்தைமீறுகிற முடிந்தால் கைகழுவுகிற அரசியல் முடிவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மட்டுமல்லாமல் கலவரங்களுக்கு காரணமான அதிகாரத்தை எதிர்க்கிற நடவடிக்கையின் ஒருபகுதியாகவுமே இப்படியான நிதியுதவியை கருதுகிறான்.

சுத்தமான காற்று… மாசுபடாத தண்ணீர்… இரைச்சலற்று அமைதியில் திளைக்கும் அந்த வீட்டிற்குள் வாழ்கிறோம் என்ற நினைப்பே போதுமானது ஒருவன் சந்தோசம் கொள்ள. எத்தனை இருந்துமென்ன, தனிமை பேரெதிரியாகி அவனை வாட்டியது. முளையடித்த மாடுபோல் இந்த அநாதிக்காட்டுக்குள் உளைவது எத்துணை வாதையானது என்பதை நீ அறிய நேரவில்லை என்பான்.

அவன் சொல்வதைப்போல் அது அநாதிவெளி தான். நூறு ஏக்கருக்கு மேலான விஸ்தீரணத்தில் காட்டுமரங்களின் முரட்டுவாசத்தோடு மலையடிவாரத்தில் பரவிக்கிடந்தது பண்ணை. மையத்தில் வெளிநாட்டு மோஸ்தரில் அரண்மனைப் பாங்கிலானது வீடு. ஆள்மயக்கும் நீச்சல்குளமும் உண்டு. கிழமேலாய் பிரியும் பாதைகளின் மருங்கிரண்டிலும் நெடிதுயர்ந்த மரங்கள். உலகின் மாறுபட்ட மண்பாகங்களிலும் விளைகிற தாவரஜாதிகள் யாவும்கூடி பண்ணை வினோத வண்ணத்தில் இரவும்பகலும் ஒளிர்ந்து கிடந்தது மாயலோகமாய். வேலியடைத்தாற்போல் சீரான இடைவெளியில் தென்னையும் கமுகும். வீட்டின் பின்வெளியில் படர்ந்திருக்கும் புல்வெளியிலிருந்து தொடங்கும் பழத்தோட்டம். பலா, முந்திரி, கொய்யா, மாதுளை, மா, சப்போட்டா…என்று சடைசடையாய் காய்ப்பிருக்கும். பழங்களுக்காகவே கூடிக்களிக்கும் பறவைகளின் உல்லாசமொழியைக் கூட ரசிக்கமுடியாதபடி தான் இறுகிவருவதாக அவன் பயம்கொண்டிருப்பதை சொல்கையில் குரல் உடைந்து அழுகையில் தோயும். பகலின் ஆரவாரம் சூரியனோடு அடங்கிப்போகும் இரவின் அந்தகாரத்தில் தூக்கமின்றி பைத்தியம்போல் அறைக்குள் உழன்று தவிக்கும் அவனுக்கு சுபிட்சத்தின் மார்க்கத்தை எந்த விடியலும் கொண்டுவரப்போவதில்லை என்று நம்பியிருந்தான்.

கர்நாடக தமிழக ஆந்திர எல்லையில் இருப்பதால் அந்தந்த மாநிலங்களில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படுபவர்கள் அண்டைமாநிலத்தின் பரப்பொன்றுக்குள் தப்பி ஒளிந்துகொள்வது எளிதாயிருந்தது. அப்படியானவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதுகாப்பான மறைவிடங்களாக இப்படியான பண்ணைவீடுகளிருந்தன. பகலிலும் இருள்மண்டியிருக்கும் அடர்ந்த புதர்களும் பம்மிப் படர்ந்திருக்கும் மரங்களும் அவர்களது நோக்கத்திற்கு எப்போதும் உதவியாயிருந்தன. இரண்டுமாதங்களுக்கு முன்னான அமாவாசைக்கு பிந்தைய இரவில் இவனது பண்ணையின் ஒரு புதருக்குள் வீசப்பட்டிருந்த பெண்ணொருத்தியின் சடலத்தை காலையிலேயே காகங்களும் கழுகுகளும் நிறக்கப் பறந்து கண்டெடுத்தன. இரவில் ஏமாந்துவிட்டதை மறைப்பதற்காக தனக்கு றெக்கையில்லாததையும் மறந்துவிட்டு அண்ணாந்து எகிறியபடி குரைத்துக்கொண்டிருந்தது நாய். இந்தப்பகுதியின் காடுகளிலும் ஏரிகளிலும் இப்படியான பிணங்கள் கண்டெடுக்கப்படுவது பரபரப்புக்குரிய விசயமில்லை. ஆனால் குரூரமாய் கொலையுண்ட பிணமொன்றும் தானும் ஒரேயிடத்தில் இருந்திருக்கிறோம் என்ற நினைப்பே அவனை திகிலடைய வைத்திருக்கும் போல. போலிஸ் வந்து பிரேதத்தை எடுத்துக் கொண்டு போய்விட்ட பிறகும் ஒன்பதாண்டு பழக்கத்தில் நான் ஒருநாளும் கண்டிராத பதற்றம் கொண்டிருந்தான் தாரக்நாத்.

ஆசுவாசம் கொள்ளவைக்கும் பொருட்டு அவனை மாந்தோப்புக்குள் அழைத்துவந்து சிகரெட்டை நீட்டினேன். வாங்கும்போது கை நடுங்கியது. பற்ற வைத்துக்கொள்ளாமலே வெறித்துப் பார்த்திருந்தவன் ‘காலையிலிருந்து ரெண்டு பாக்கெட்டாகிவிட்டது. தொண்டை எரியுது’ என்றான் கம்மியக் குரலில். பின், பசியில் தின்பவனைப்போல் நகம் கடித்தபடி ராத்திரிக்கு உன் ரூமில் வந்து படுத்துக்கட்டுமா என்றான். அன்றிரவு அவனுடனேயே பண்ணைவீட்டில் தங்கி தைரியம் சொல்லி தேற்றிக் கொண்டிருந்தேன். அவன் தூங்குவதைத் தவிர்க்க பிரயாசை கொள்பவனாகி என் கால்மாட்டில் வந்து அமர்ந்து கொண்டான் மௌனமாக. அயர்ச்சி மீதுற தூக்கத்திற்குள் விழுந்து கொண்டிருந்த என்னை உலுக்கி ‘நான் போலிசில் சரணடைந்துவிடட்டுமா’ என்றான். எனக்கு ஒடுங்கிவிட்டது சர்வமும்.

‘அந்தப் பொண்ணை நீயா கொன்றாய்?’

‘இல்லை….’

‘அப்புறமெதுக்கு சரணடையனும்?’

அமைதியாய் இருந்துவிட்டு, ‘யார் எவரென்று தெரியாத ஒரு பெண்ணின் கொலையைக் கண்டு இத்தனை பதற்றமடையும் நான், என்னோடு உறவாடி வாழ்ந்த எட்டுப்பேரை குத்திக் கொன்றேனே அதற்காக…’

‘முட்டாள்… என்ன உளறுகிறாய்…?’

‘உளறவில்லை. உண்மை. இத்தனை நாளும் உனக்கும் உலகத்துக்கும் சொல்லாத உண்மை.யாருக்கும் தெரியக்கூடாதென்று எனக்குள்ளேயே மறைத்துவைத்த உண்மை. எனக்குள்ளிருந்து என்னை வதைத்துக் கொல்லும் உண்மை.’

‘பிணத்தைப் பார்த்த அதிர்ச்சியில் புத்திபேதலித்துவிட்டதா உனக்கு…?’

‘ஆமாம். புத்தி பேதலிக்கும்போதுதான் பொய்சொல்லும் சாதுர்யம் மறைந்து உண்மை மேலெழுந்து வருகிறது.’

என்னால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. விரக்தியான சிரிப்போடு ‘ஆமாம், நீ நம்பித்தான் ஆகவேண்டும்… நானொரு கொலைகாரன்’ என்றான். இப்போது அவன் குரலில் பிசிறில்லை.

‘யாரவர்கள்…?’

‘எனது அண்டைவீட்டுக்காரரும் அவரது மனைவியின் வயிற்றிலிருந்த எட்டுமாத சிசு உள்ளிட்ட அவரது குடும்பத்தாரும் இன்னும் சிலரும்.’

இப்போது அவனைப் பார்க்க அச்சமாயிருந்தது. கண்களை மூடியபடி மௌனத்தில் மூழ்கியவன் ‘எதற்காக சாகிறோம் என்பதும் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. உண்மையில் அவர்கள் ஒருபாவமும் செய்யாத அப்பாவிகள்… ஆனால் அவர்கள் திரும்பிவரப்போவதில்லை…’ என்றான்.

‘அந்த அக்கா எவ்வளவு பிரியமானவள் தெரியுமா… என்னைவிட நாலைந்து வருடம் மூத்தவளாக இருக்கலாம். கல்யாணம் முடிந்து குடித்தனம் வந்த அன்றே எனக்கு பிடித்துப்போனது அவளை. பள்ளிக்குச்செல்லும் என் தங்கைக்கு அவள்தான் தினமும் சடை பின்னிவிடுவாள். அம்மாவுக்கு கண் ஆபரேஷன் செய்திருந்தபோது அவள்தான் எங்கள்வீட்டை பார்த்துக்கொண்டாள். அம்மா குணமாகி சமையல்கட்டில் புழங்க வரும்வரை அவங்க வீட்டிலிருந்துதான் சாப்பாடு வரும். அவளது கைப்பக்குவம் எப்படியான ருசி கொண்டது தெரியுமா?

தலைப்பிரசவத்தின்போது அம்மாதான் அவளுக்கு உடனிருந்து பார்த்துக்கொண்டாள். குழந்தையை தண்ணீர் வைத்து துடைத்துக் கிடத்தியிருந்தார்கள். ரோஸ் நிறத்தில் மிருதுவாயிருந்த உள்ளங்கையில் நான்தான் முதல்முத்தம் கொடுத்தேன். களங்கமற்றது அதன் சிரிப்பு. ஒரு கொலைகாரனைப் பார்த்து குழந்தையால் மட்டும்தான் சிரிக்கமுடியும். அந்த சிரிப்பில் சொக்கிப்போய்த்தான் மாலையில் நடக்கும் ஷாகாவுக்குப் போகாமல் பள்ளியிலிருந்து நேராக வீட்டுக்குவரத் தொடங்கினேன். எனது மாலைப்பொழுதுகளும் விடுமுறைகளும் அவனுக்குரியதாயின. தூக்கத்திலேயே உயிர் பறிபோவதற்கு நான்குதினங்களுக்கு முன்புதான் அவனது ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தோம்.

ப்ளஸ் டூவில் பெயிலாகி தாறுமாறாய் யோசனையோடிய காலத்தில் அவளது அருகாமையும் ஆறுதலும் தான் தற்கொலை மனோபாவத்திலிருந்து என்னை மீட்டெடுத்தது. அவள் என்னை அப்போதே சாகவிட்டிருக்கலாம். அவளைக் கொல்வதற்காக சாவிலிருந்து என்னை மீட்டெடுத்து போஷித்துவந்தாள். அருள் நிரம்பிய அவளது கண்கள் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. அவளது வயிற்றில் கத்தியைப் பாய்ச்சும் போது கூட கண்ணா என்று கத்திக்கொண்டு சாய்ந்தவளின் கண்ணில் அந்த அருள் மருளவேயில்லை….’ விசும்பல் மீறி அழுகையில் கரைந்தான்.

தெய்வமெல்லாம் உங்க கட்சி மெம்பராடா.. கோயில்ல கொண்டாந்து கொடி கட்றீங்களே… நிம்மதியா போய் சாமி கும்புட்டுட்டுத் திரும்ப முடியல. எந்நேரமும் கோயில் வாசல்ல குண்டாந்தடியோடு… உன் சேர்க்கையே சரியில்லை … நெற்றியில் ரிப்பன் கட்டிச்சுற்றும் அந்த ரவுடிக்கும்பலோடு சுத்தறதை நிறுத்து… என்று ஓயாமல் சொல்லிக்கொண்டேயிருப்பாள் அம்மா.

நாங்க அப்படி காவலில்லேன்னா அவங்க கோயிலை இடிச்சிருவாங்கம்மா…

பொய் சொல்லாதடா… அவங்கக் கோயிலை இடிக்கணும்னு நீங்கதாண்டா வீட்டுவீட்டுக்கு கடப்பாறை கொடுக்கறீங்க… சும்மாகிடந்தவங்கள வம்பிழுத்துட்டு இப்ப அவங்க இடிச்சிருவாங்கன்னு பூச்சாண்டி காட்றீங்க… கோயிலுக்கு ஆபத்துன்னு சாமி கும்பிட வர்றவங்களையெல்லாம் உங்க கட்சியில சேத்துடலாம்னு நடக்குது இந்த சூதாட்டம்… என்று கிளிப்பிள்ளைக்கு சொல்றமாதிரி அம்மா புத்தி சொன்னாள். எனக்குத்தான் எதுவுமே மண்டையில் ஏறவில்லை அப்ப.

துணைக்கு யாருமற்று தனிமைப்பட்டதைப்போல் உணர்ந்தவன் நடுங்கும் கைகளால் சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டான். பொங்கிவரும் பேச்சை புகைமூலம் தடுக்கநினைத்து ஆழ்ந்து உள்ளிழுத்தான். நான் அவனது முகத்தையே பார்த்திருந்தேன். ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடி தொடர்ந்தான்.

அன்று முன்னிரவிலேயே தெருவில் நடமாட்டம் குறைந்துவிட்டிருந்தது. நடமாடிய ஓரிருவரும் கூட போலிஸ் விசாரிப்புக்கு பயந்து அடையாளம் காணமுடியாதபடி கம்பளியாடைகள் தரித்து வேகமாய் கடந்து மறைந்தனர். நேற்று மதியம் ரவுண்டானா அருகில் வெடித்தக் கலவரமும் அதையொட்டி நடந்த துப்பாக்கிச்சூடும் எங்கும் திகிலை பரப்பியிருந்தது. ரதயாத்திரையை வரவேற்க திரண்டிருந்தவர்களுக்கும் இன்னொரு பிரிவுக்குமிடையே மூண்ட கலவரத்தில் ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கலவரத்தையடக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் பதினாலுபேர் என்று போலிஸ் சொன்னாலும் கூடுதலாயிருக்கும் என்றே பேசிக்கொண்டார்கள்.

துள்ளத்துடிக்க ஏராளமானவர்களை ஜீப்பில் தூக்கிப்போனதாகவும் அவர்கள் இப்போது ஆஸ்பத்ரியிலும் இல்லையென்பதால் அனேகமாக போகும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட போலிசே எங்காவது குவித்து எரித்திருக்கும் என்றும் ரகசியம்போல் பேசிக்கொண்டனர் ஊர்மக்கள். கூட்டத்தில் என்பக்கத்திலேயே இருந்த மங்கத்ராம் நெற்றியில் குண்டடி பட்டு கீழே சாய்வதை நானே பார்த்தேன். ஆனால் அதற்கப்புறம் அவன் எங்குமே காணவில்லை. சேதியறியாத அவனது தாயோ அவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது திரும்பி வந்தவிடுவான் என்று சொல்லிக்கொண்டு சகஜமாயிருக்க பட்டபாடு மிகுந்தத் துயரமானது.காணாமல் போன தங்கள் வீட்டாள்கள் என்னவானார்கள் என்று மறைந்து மறைந்து தேடிக் கொண்டிருந்தனர். என்னதான் போலிஸ் குவிந்திருந்தாலும் இன்னொரு பெரிய கலவரம் மூளக்கூடும் என்று இருதரப்பிலும் பீதி நிலவியது.

நான் அவள் வீட்டுக்குப் போனபோது அவளும் ஊரிலிருந்து வந்திருந்த அவளது தங்கையும் இரவுச்சாப்பாட்டுக்கான தயாரிப்பிலிருந்தார்கள். ‘எங்கடா போய்த் தொலைஞ்சே நாலைந்து நாளாய்… அம்மாக்கிட்டயாச்சும் எங்கயிருக்கிறேங்கிற தகவலைச் சொல்லியிருக்கலாமில்ல… என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதறிப்போயிட்டோம் தெரியுமா… ‘ என்று கோபமும் கரிசனமுமாய் விசாரித்தாள். திட்டி முடித்ததும் ஆசுவாசம் கொண்டவளாகி ‘நீ இல்லாம உன் தோஸ்த்துக்கு ரொம்ப போரடிச்சிருச்சு. சாப்பிடாமக்கூட தூங்கிட்டான். அவனை எழுப்பு. நீயும் கை கழுவு சாப்பிடலாம்’ என்றாள்.

‘மாமா இன்னம் வரலையாக்கா…’

‘மாடியில என்னவோ எழுதிக்கிட்டிருக்கார். இரு கூட்டியாறேன். அவரும் கூட உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொல்லிக்கிட்டிருந்தார்.’

‘நீ இருக்கா, நான் போய் கூட்டியாறேன்…’

டிசம்பர் ஆறாம் தேதி நடக்கவிருக்கும் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சியில் பேச குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் மாமா. உள்ளூர் கல்லூரியில் பேராசிரியர். ஊரிலும் மாணவர்களிடமும் நல்ல மரியாதை பெற்றவர். என்னைப் பார்த்ததும் எழுதுவதை நிறுத்திவிட்டு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். இத்தனை பேரைக் கொன்று கட்டப்படுவது கடவுளுக்கான கோயிலாயிருக்க முடியாது… சாத்தானின் வதைக்கொட்டடியாகத்தான் இருக்கும்… என்ற வரியோடு நின்றிருந்தது அவரது குறிப்பு. நீ எதிலும் மாட்டிக்கலையே கண்ணா என்று பதற்றத்தோடு விசாரித்தார். சில அமைப்புகளோடு எனக்கிருக்கும் தொடர்புகளை அவரறிவார். அவற்றின் பிரதிநிதியாக என்னை பாவித்து நீதிகேட்டு முறையிடும் தொனியில் ‘யாரோ எவரோ முன்பின் தெரியாத கொடியவர்கள் கையால் இன்றோ நாளையோ சாவதைவிட என்வீட்டில் ஒருவனாயிருக்கும் நீயே எங்களைக் கொன்றுபோடு….நிம்மதியாகவாவது செத்துப்போகிறோம்’ என்றார் உடைந்த குரலில். அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் என்பதை சொல்லமுடியவில்லை என்னால்.

மாமாவுக்கு பசியில்லையாம்… உங்களை சாப்பிடச் சொன்னார் என்றேன் படியிறங்கியபடியே. இதைக் கேட்டு வரவா இவ்வளவு நேரம்… சரி வா… நீயும் உட்கார் என்றாள் அக்கா. அவசரமாய் மறுத்தேன். வலுக்கோலாய் உட்காரவைத்தாள். இதென்னடா மாடியேறி இறங்கினதுக்கா உனக்கு இப்படி வேர்க்குது. ஸ்வெட்டரை கழட்டிட்டு சாப்புடு… என்கிறாள். எனக்கு நிலை கொள்ளவில்லை. ஐயோ… தன் புருசனை கொன்றுவிட்டு வந்திருக்கும் பாதகனை பாசத்தால் தண்டிக்கிறாளே புண்ணியவதி…. அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. கவனித்துவிட்டாள். ஏண்டா எதுவும் பிரச்னையா… மாமா எதுவும் திட்டினாரா… தலையை ஆதுரமாக கோதிக் கொடுக்கிறாள். அவளது நிறைவயிறு இரைகிறது. ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மன்னிப்பு இல்லையக்கா… என்று சொல்லிக்கொண்டே……..

கதவைச் சாத்திக்கொண்டு நான் வெளியே வருவதைப் பார்த்ததும் ஆங்காங்கு பிரிந்து மறைந்திருந்த மூவரும் சமிக்ஞை ஒலியெழுப்பியபடி மாந்தோப்புக்கு விரைந்தனர். திட்டத்தின் அடுத்த பகுதி அங்கே சந்தித்து நிலையை பரிசீலிப்பதுதான்.

என்ன சகோதரா… வீட்டாள்கள் எல்லாரும் இருக்காங்களான்னு பார்த்துவர இவ்வளவு நேரமா… லேட்டாக ஆக டென்சனாயிருச்சு… என்று சலித்துக்கொண்டான் தாராசிங். அவன்தான் இங்கு தலைவன். நான் ரத்தத்தின் பிசுபிசுப்போடிருந்த கத்தியை நீட்டினேன். அவசரப்பட்டுட்டியே சகோதரா… அவங்களை மிரட்டி வச்சாப் போதும்னு நினைச்சேன். வீட்டில் பெண்களும் குழந்தைகளும் இருக்கும்போது பக்குவமா மிரட்டினால் அந்தாளு கொஞ்சம் அடங்கி மத நல்லிணக்கக்குழு அதுஇதுன்னு போகாமயிருப்பான்னுதான் எல்லாரும் இருக்காங்களான்னு பார்த்துவரச் சொன்னேன்… அதுக்காகத்தான் அவங்களுக்கு ரொம்ப வேண்டிய உன்னை அனுப்பினேன்… என்றான்.

பொய்… பசப்பாதே… உன்னோட ஹிட்டன் அஜென்டா என்னன்னு எனக்கு தெரியும். நான் தோது பார்த்து வந்ததற்கு பிறகு கும்பலாய் நீங்கள் வீட்டுக்குள் புகுந்து சூரத்தில் செய்தமாதிரி அவங்களை நிர்வாணமாக்கி தெருவிலே ஓடவிட்டு வீடியோ எடுத்துட்டு அப்புறமா சூலத்தால் குத்தி கொல்லணும்னு நீயும் கோபாலனும் போட்ட வக்கிரத் திட்டத்துல அவங்க மாட்டிக்கக் கூடாதுன்னுதான் எல்லாரையும் கொன்னுட்டேன்…

நாலுநாள் ஓசி பிரியாணி சாப்பிட்டதுக்கே இவ்வளவு விசுவாசம் காட்டுற நீ உன் தாய்நாட்டுக்கு நல்லது பண்ண தயங்கிட்டியே என்றவன் அவன் கொழுந்தியாளையாவது நீ எங்களுக்கு விட்டுவைத்திருக்கலாம் என்று ஓநாயைப்போல இளித்தான். அவர்கள் மூன்றுபேரும் ஒருவாகாய் நிற்க நான் எதிரில். வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறும்போது அவர்களையும் கொல்வதைத் தவிர எனக்கு வேறுமார்க்கம் தெரியவில்லை.

விடிய விடிய கால்போன திசையில் நடந்தேன்.வெகுவாகப் பயின்று தேறியதொரு தொழில்முறை கொலைகாரனைப்போல் எட்டுபேரைக் கொன்றவனை பிணங்கள் தேலிவரும் இந்த கங்கை மட்டும் தூய்மைப்படுத்திவிட முடியுமா என்ற யோசனையற்று ஆற்றில் முங்கியெழுந்தேன். கவனமாய் கத்தியை கங்கைக்குள் வீசினேன் அதன் கறையாவது கழுவப்படட்டுமென்று. அதன்பின் தப்பியோடும் எண்ணம்கூட எனக்கில்லாமல் போய்விட்டது. கரையெங்கும் நிறைந்திருந்த கோயில்கள் தான் என்னை பீதியடைய வைத்தன. எத்தனைப்பேரின் உடல்களை சதுரித்து செங்கல்லாய் அடுக்கி கட்டப்பட்டிருக்கிறதோ என்ற பயம் விரட்டியது என்னை வேறுபக்கம். இலக்கின்றி ரயிலேறி ஊர்ஊராய் அலைந்து திரியும்போதுதான் ஜோலார்பேட்டை ஜங்ஷனில் உன்னை சந்திச்சேன்….

தனது நெடிய கதையை சொன்ன களைப்பும் துயரமும் தந்த ஆயாசத்தில் கண்மூடி தரையிலேயே படுத்துக்கொண்டான் . பொத்திவைத்திருந்த ரகசியங்களை வெளிக்கொட்டிவிட்டதில் ரத்தமற்று சோகை பீடித்தது போலிருந்தது முகம்.

நான் ஜோலார்பேட்டையில் சந்திக்கும் போதும் இதேபோல் தானிருந்தான். வண்டி மாறுவதற்காக நான் காத்திருந்த சமயத்தில் வடநாட்டிலிருந்து வந்த ஒரு வண்டியிலிருந்து டிக்கெட்டில்லாமல் பயணம் செய்வதற்காக இறக்கிவிடப்பட்டான். ரயில்வே போலிஸ்காரன் அடித்தபோது என்னையும் விட்டுவிட்டால் நீயும்தான் யாரை அடிக்கமுடியும் என்று இரக்கம் கொண்டவனைப்போல அடிக்கத் தோதாக உடம்பை காட்டிக்கொண்டு நின்றான். அவனது ஒத்துழைப்பினால் அவமானம் கொண்ட போலிஸ்காரனுக்கு அடிக்கமுடியவில்லை. திமிறும் குற்றவாளியை எகிறியடிக்கப் பழகியிருந்த போலிஸ்காரன் இவனை என்ன செய்வதென்று தெரியாத ஆத்திரத்தில் ஓடு ஓடு என்று லத்தியை வீசி விரட்டினான். அங்குமிங்குமாய் போக்குகாட்டி மறைந்தவன் எங்கிருந்தோ ஓடிவந்து நானிருந்த பெட்டியில்தான் ஏறினான். கிளம்பிவிட்ட வண்டியில் இத்தனை லாவகமாய் ஏறுமளவுக்கு அவன் பழகியிருப்பான் போலும்.

கழிப்பறைக்கு பக்கத்தில் ஒடுங்கி நின்றிருந்தான். அவனது ஏதோவொரு அம்சம் என்னை கவருவதாயிருந்தது. இன்னதென்று திட்டவட்டமாய் சொல்லத் தெரியவில்லை. பேச்சுக் கொடுத்தேன். அவனுக்கு தமிழ் தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஓரளவே தெரிந்திருந்த இந்தியைக் கொண்டு பேசிக்கொண்டோம். வீட்டைவிட்டு ஓடிப்போக நாலைந்துமுறை முயன்றும் தப்பிக்கமுடியாமல் பிடிபட்டுப்போன எனக்கு எங்கோ வடநாட்டிலிருந்து தப்பி இங்குவரைக்கும் வந்துவிட்ட அவனைப் பார்க்கும்போது பெரிய சாகசக்காரனாய் தெரிந்தான்.

எதையாவது திருடிக்கொண்டு ஓடிவிடுவானோ என்று உள்ளூர பதைத்துக்கொண்டே தான் அவனை ரூமுக்கு அழைத்துவந்தேன். குளித்தபின் எனது துணிகளை உடுத்தக் கொடுத்தேன். இந்திக்காரன் என்பதாலேயே இந்த பண்ணைவீட்டின் வாட்ச்மேனாக சேர்ந்துவிட முடிந்தது அவனால். நாளாவட்டத்தில் நம்பிக்கை கொண்ட முதலாளி அவனுக்கு மற்ற பொறுப்புகளையும் தந்தான். ஒன்பது வருசம் கழித்து இப்போது நானொரு கொலைகாரன் என்று சொல்லி அழுபவனை என்ன செய்வது?

என்னால் அவன்மீது எந்த அபிப்ராயத்துக்கும் வரமுடியவில்லை. சட்டப்படி அவன் கொலைகாரன் தான். கொலைகாரர்கள் எல்லோருமே தண்டிக்கப்பட்டுவிட்டார்களா? ஆயிரக்கணக்கானவர்களைகி கொன்றவர்களெல்லாம் இன்று அந்தஸ்தான பதவிகளில் இருக்கிறார்களே… தவிரவும் நோக்கத்தை வைத்து தீர்ப்பிட்டால் இவன் செய்தவை கொலைகள்தானா என்ற கேள்வியும் எனக்கிருக்கிறது. உன்னை யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை. பயப்படாமலிரு… என்றேன். நான் யாருக்கும் பயப்பட்டு சரணடையும் முடிவுக்கு வரவில்லை. மறைந்து வாழ்கிறோம் என்ற நினைப்பே கொடுந்தண்டனையாய் வாட்டுகிறது. குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை அனுபவிக்கும் போதாவது என்னால் நிம்மதியாக இருக்கமுடியும் என்று நினைக்கிறேன்…என்றான். ரொம்பவும் பதட்டமாயிருக்கிறாய். இப்போ எடுக்கும் எந்த முடிவும் சரியாயிருக்காது… என்றேன். நான் நன்றாக யோசித்துவிட்டேன் என்றான். அப்படியானால் உனக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக நானும்தான் உன்னோடு கம்பி எண்ண வரவேண்டும் என்றேன். பிறகு விடியும்வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை. உண்மையில் நான்தான் பேச்சை தவிர்த்தேன். ஆனாலும் எந்நேரத்திலும் அவன் காவல்நிலையத்திற்கு ஓடி சரணடையவோ அல்லது சுயவாதை பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்ளவோ முயலக்கூடும் என்ற அச்சம் வாட்டியது என்னை.

அதற்குப் பிறகு போனில் பேசிக்கொண்டோம் ஓரிருமுறை. இரண்டுமாதம் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறான். என்ன குண்டு கை வசமிருக்கிறதோ தெரியவில்லை.

சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தவன் வெளியே வந்ததும் சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். சதாம் உசேனை கைது பண்ணிட்டோம்னு அமெரிக்காக்காரன் சொல்றதை நீ நம்பறயா…என்றான்.

அதான் டிவியில் காட்டினாங்களே… நீ பாக்கலியா… ?

பாத்தேன். என்னால நம்பமுடியல.

ஏன்?

அமெரிக்காக்காரனோட தில்லுமுல்லு தெரிஞ்சதாலத்தான். நிலாவுக்கே போகாம செட் போட்டு படமெடுத்து உலகத்தையே நம்ப வச்சிட்டதா அமெரிக்காவிலயே ஒரு விவாதம் நடந்துக்கிட்டிருக்குது தெரியுமா.. இன்னைக்கு கிராபிக்ஸ் அதுஇதுன்னு டெக்னாலஜி வளர்ந்திருக்கிற நிலையில சதாமை பிடிச்சிட்டோம்னு காட்டறது ரொம்ப ஈஸிதானே… அதிலும் மீடியா பூராவும் அவன் கையில ஸ்ட்ராங்கா இருக்கும்போது நம்பவைக்கிறது சாத்தியம் தான்.. என்றான்.

என்னாச்சு இவனுக்கு, இப்படி திடீரென்று துப்பறியக் கிளம்பிட்டான் என்ற யோசனை வந்துவிட்டது எனக்கு. அப்படியெல்லாம் நடந்துடக்கூடாதுன்னுதானே அவங்க டிஎன்ஏ சோதனையெல்லாம் பண்ணினாங்க…

என்ன பெரிய சோதனை… குளோனிங் மாதிரி ஆயிரத்தெட்டு டெக்னாலஜி வளர்ந்திட்ட காலத்துல…

பொழுதுபோகாமல் நிறைய யோசித்திருப்பான் போல. தன்னை நினைத்து உழப்பிக்கொள்ளாமல் அவன் இன்னொன்றை யோசித்திருப்பது நல்லதுதான் என்று திருப்திகொண்டவனாகி ‘அப்படின்னா, நான் அமெரிக்காகிட்ட பிடிபடலேன்னு சதாம் உசேன் சொல்லவெண்டியதுதானே…’

எதுக்கு சொல்லணும்… இப்ப என்னையே எடுத்துக்க… நான் காணலேன்னதும் அந்தக் கலவரத்துல நான் செத்துட்டதாகவோ அல்லது போலிஸ்கிட்ட மாட்டி அவங்க கொன்னு எறிஞ்சிருப்பாங்கன்னோ தானே ஊரும்உறவும் நம்பிக் கிடக்கும்… ஆனா நான் இங்கே செட்டிலாயிட்டேன் பாத்தியா.. என்னாலயே ஒளிஞ்சு வாழமுடியும்கிறப்ப ஒரு நாட்டையே ஆண்ட ராஜதந்திரியால தப்பிக்க முடியாதா…
தப்பிப்போகலையே… அதான் வகையா குழிக்குள்ள இருந்து மாட்டிக்கிட்டாரே.
இல்லை. அவங்களை திசைதிருப்ப சதாமே அவராட்டம் ஒருத்தரை தயார் பண்ணி மாட்டவிட்டிருக்கார்.

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. என்னவோ சதாம் உசேனே உன்னைக் கூப்பிட்டுச் சொன்னது மாதிரி பேசறே என்றேன்.

உண்மைதான். அவரே என்கிட்ட சொன்னதுதான். எப்ப… ராத்திரி தூங்கறப்பவா… என்ற எனது கேலியை பொருட்படுத்தாமல் ‘இல்லை. அவர் இப்போ என்கூட பண்ணைவீட்டில்தான் இருக்கார்..’ என்றான் உறுதியான குரலில். அறையலாம்போல் கோபமும், புத்தி பேதலித்துவிட்டதா இவனுக்கு என்ற பதட்டமும் வந்துவிட்டது எனக்கு. நீ நம்பமாட்டேன்னு எனக்குத் தெரியும். அதனால்தான் கையோடு கூட்டிப்போக வந்தேன். கம்பனிக்கு லீவ் சொல்லிட்டு வா பண்ணைக்கு போகலாம் என்றான்.

இவனது பைத்தியக்காரத்தனம் எல்லையற்றதாக விரிந்தவிட்டதென்று தோன்றியது.அதற்குள் என்னையும் இழுத்து வீழ்த்தப் பார்க்கிறான் என்ற அச்சம் கிளம்பி தப்பியோடிவிடுமாறு விரட்டியது. இப்போதைக்கு பக்குவமாய் கழன்று கொள்ளும் வழியெதுவும் பிடிபடவில்லை. திடீரென்று லீவ் கிடைக்காது. நான் நாளைக்கு வருகிறேன் என்றேன். அவன் சமாதானம் கொள்ளவில்லை. வற்புறுத்தும் பாவனையில் நின்றிருந்தான். கட்டாயம் நாளைக்கு வந்திடுவே தானே.. என்றான் கொஞ்சநேரம் கழித்து.

தேற்றியனுப்பி வைத்தபிறகு எனக்கு பதட்டம் கூடிவிட்டது. இவனை என்ன செய்வது என்ற குழப்பத்தில் வேலைக்குப்போக பிடிக்காமல் ரூமுக்கு வந்து கதவை தாளிட்டுக்கொண்டு படுத்துவிட்டேன். தூக்கம் வரவில்லை. யோசிக்க யோசிக்க அவன் மீதிருந்த கோபம் வடிந்துபோனது. அவனை அழைத்துப்போய் மனநல மருத்துவர் ஒருவரிடம் காட்டுவதுதான் உடனடியாய் செய்தாக வேண்டியக் காரியம் என்று தோன்றியதும் பண்ணைக்கு கிளம்பினேன்.

முதலாளி வந்து தங்கியிருக்கும் காலங்களைத் தவிர மற்றநாட்களில் மூடப்பட்டேயிருக்கும் பண்ணையின் பிரதான வழி வழக்கத்திற்கு மாறாக திறந்திருந்தது. வெயிலை உச்சியில் தாங்கிக்கொண்டு நிழலை விரித்திருந்தன மரங்கள். குளுங்காற்றில் பூக்களின் வாசனை நிரம்பியிருந்தது. பின்வேலிக்கருகிலிருந்து குரைத்துக் கொண்டே வந்த நாய் கிட்டத்தில் வந்ததும் அடையாளம் கண்டு செல்லமாய் வாலாட்டிக்கொண்டு வினோதமான ஒலியுடன் குழைந்தது. வழிகாட்டுவதைப்போல் முன்னோடிய நாய் வீடு சமீபித்ததும் இனி உன்பாடு என்பதுபோல் பின்பக்கம் ஓடிவிட்டது. அவனைக் காணவில்லை. இங்கேதான் சுற்றிக்கொண்டிருப்பான். வரட்டுமென்று வராண்டாவில் உட்கார்ந்தேன்.

செய்தித்தாள்களும் வாரப்பத்திரிகைகளும் இறைந்துகிடந்தன. எல்லாவற்றிலுமிருந்து சதாம் உசேன் பிடிபட்ட படங்களையும் செய்திகளையும் கத்தரித்து ஒரு உறைக்குள் போட்டுவைத்திருந்தான். சிலதின் மீது குறிப்பெழுதியிருந்தான். ஏராளமான தாள்கள் கசக்கி எறியப்பட்டிருந்தன மேசையைச் சுற்றி. நான், சதாம் உசேன் வந்திருக்கிறேன் என்று தலைப்பிட்டு எழுதி அடித்துத் திருத்தி கசக்கி எறிந்திருந்ததை படிக்….

மடப்பயலே.. என்னடா ஆச்சு உனக்கு… கத்திக்கொண்டே ஒதிய மரத்தடிக்கு ஓடினேன். படுத்திருந்த நாய் விருட்டென்று எழுந்து ஓடியது வேறுபக்கம். மூடப்பட்டிருந்த இலைதழைகளை அப்புறப்படுத்தியதும் தெரிந்த மூங்கில்படலை நீக்கியதும் அதிர்ந்துவிட்டேன். ஆள் மறைக்குமளவு ஆழத்தில் குழி. பக்கவாட்டில் குடைந்தெடுக்கப்பட்ட வளையின் இருளில் கரைந்துவிட்டவனைப் போல ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். என்னைக் கண்டதும் போலிசும் வந்திருக்கிறதா என்று நடுங்கும் குரலில் கேட்டான். இல்லை, எழுந்து வா… என்றேன். இப்படி பதுங்கியிருந்ததால் தான் சதாமை பிடிச்சார்களாம்… நானும் இங்கேயே காத்திருக்கிறேன்… என்னை பிடிக்க ஏன் வரவில்லை என்று அழத் தொடங்கிவிட்டான். நீ வெளியே வா… நாமே அவர்களிடம் போகலாம் என்றேன். வந்த பிறகு அன்னிக்கு மாதிரி குழப்பக்கூடாது…. சரியா … என்று திரும்ப திரும்ப சொல்லியபடியே வெளியே வந்தான். ஓடியும் பதுங்கியும் களைப்புற்றிருந்த சதாமின் பரிதாபத்திற்குரிய தோற்றம் ஒருகணம் மின்னி கலைந்தது அவனில். வளைக்குள் நுழைந்ததில் உடம்பெங்கும் சிராய்த்து ரத்தம் காய்ந்திருந்தது. நான் மேலேறி குனிந்து அவனுக்கு கை கொடுத்தேன். அவன் குழிக்குள் இழுப்பதுபோல் கைநீட்டினான்.

– ‘பதிவுகள்’/ ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுச் சிறுகதைபோட்டி 2004 – இரண்டாம் பரிசு!

Print Friendly, PDF & Email

1 thought on “நான் நீங்கள் மற்றும் சதாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *