கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 30,793 
 

இந்த ஃபிரெண்டு தொல்லை தாங்க முடியலை. டிக்கட் இல்லை, ஃபுல்.

ஆஃபீஸ்ல லீவ் வேற இல்லை.

உடம்பு ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு.

நெறைய வேலை அப்படியே கிடக்கு. என்னையே ஏன் புடிச்சி எல்லாரும் தொல்லை பண்றாங்கன்னு தெரியலை.

அங்க வேற ஒரே குளிராம், மழையாம்… வெளியில தலை காட்ட முடியாதாம், காட்டேஜஸ் ஹவுஸ்ஃபுல்லாம்.

என்னதான் செலவு எல்லாம் அவன் பண்றதா சொன்னாலும் நம்ம வேலைய யாரு செய்வா?

ஆனாலும் வேற வழியே இல்லை. ரொம்ப வற்புறுத்துறான், கடுப்பா இருக்கு. இவனுக்காக கோவா போய்தான் தொலையணும் போல இருக்கு செல்லம்.

நள்ளிரவின் நடனங்கள்சாந்திக்கு தெளிவாகத் தெரிந்தது, புளுகு மூட்டையை வாந்தி எடுக்கிறான் என்று. முடிவு எடுத்து விட்டான். ஆமாம் பூசாரி போட்டுத்தான் ஆகவேண்டும். மறுத்துப் பேசினால் பெரிய சண்டை ஆகும். வீடு சுத்தத்திலிருந்து ஆரம்பித்து, சமையல், குழந்தை வளர்ப்பு, அவன் ஏற்கனவே சொல்லிய வேலைகள் என மேலும் மேலும் யோசித்து சண்டை வளர்ப்பான். கடைசியில் தான் அழுதுகொண்டு மூலையில் அமர்ந்திருக்க, சில ஆயிரம் ரூபாய்களை முட்டிக்கால் மீது விட்டெறிந்து விட்டு, விர்ரென கோவா கிளம்பிப் போய்விடுவான். மெலிதாக நிமிர்ந்து பார்த்தாள்.

சரிங்க, என்ன பண்றது போய்ட்டுத்தான் வாங்க என்றாள். குழந்தை மடியில் உச்சா போய்க் கொண்டு இருந்தான்.

சரி செல்லம் டெய்லி கால் பண்றேன். நாலு நாளில் வந்துடறேன் என்றான்.

சென்னை விமான நிலையத்திலேயே உற்சாகம் தொற்றிக் கொண்டது. நியூ இயர் சீசனில் டிக்கட் விலை கோவாவிற்கு 25000 ரூபாய் வரை விர்ரென ஏறும் என்பதால், மூன்று மாதங்களுக்கு முன்பே டிக்கட் எடுத்திருந்தனர் கமலக்கண்ணன் அண்ட் குழுவினர். கோவாவிலேயே அழகான கடற்கரையான வகதூரில் பீச் ரிஸார்ட்டையும் மூன்று மாதங்களுக்கு முன்பே புக் செய்து விட்டனர். வகதூர் – கோவாவில் அழகான சின்ன கிராமம். கடற்கரை ஓரமாக சின்ன மலை, சப்போரா கோட்டை, தென்னை மரம், இயற்கையிலேயே தானாக ஒரு இடத்தில் மட்டும் கடல் உள்வாங்கியதால் உண்டான நீச்சல் குளம் போன்ற அமைப்பு என சொர்க்கத்தின் உள்ளே ஒரு பிரைவேட் சொர்க்கம். பெரும்பாலும் ரஷ்ய யுவதிகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். ரஷ்ய கிடா மாடுகளும் அதிகம் திரிவார்கள் எனினும் அவ்வளவாக கண்ணில் படுவதில்லை. வெளிநாட்ட்டில் உள்ள ஒரு சிற்றூருக்கு வந்து விட்டது போன்ற ஒரு உணர்வைத் தரும்.

விமானம் கிளம்ப இன்னும் நேரமிருந்தது. தெலுங்கு சினிமாவின் பாடல் காட்சியில் முதல் வரிசையில் ஆடுபவளைப் போல் இருந்த ஒருத்தி கமலக்கண்ணனின் பக்கத்து சீட்டில் தன் லக்கேஜை வைத்தாள். ஹை ஹீல்ஸ் போடாமலேயே, ஹை ஹீல்ஸ் போட்டிருப்பதை போலல் நின்று கொண்டிருந்தாள். குறைந்தபட்சம் அங்கிருந்த நாற்பது பேர் அவளிடம் பேசத் துடித்தனர். பேச என்ன பேச… அவளை கரெக்ட் செய்யத் துடித்தனர். அந்த சங்கல்பம் மனதுக்குள்தானே? வெளியே பான் கீ மூனைப் போல் முகத்தை இறுக்கமாக வைத்தபடி தொப்பையை இழுத்துப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.

கமலக்கண்ணன், ஹாய் என்றான்.

அவள், யாஹ் எனப் பார்த்தாள் . பல கேள்விக்குறிகள் அவள் கண்களிலிருந்து சங்கிலித்தொடராய்க் கீழிறங்குவது போல் தோன்றியது கமலக்கண்ணனுக்கு. ஆர் யூ எ ஹீரோயின்? ஆம் நாட் சோ ஃபெமிலியர் வித் இண்டியன் மூவிஸ் என்றான்.

ஒருக்கணம் மலர்ந்து, பின் “நோ” எனத் தீர்மானமாகக் கூறி விட்டு, ஹெட்போனை மாட்டிக் கொண்டாள். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டது, கமலக்கண்ணனின் 3 மூன்று நண்பர்கள் மற்றும் சுற்று வட்டார 50 மீட்டர் தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் இறைவனின் திருவடியைக் கண்டது போல் ஒரு பரம திருப்தி ஏற்பட்டது. கமலக்கண்ணன் வெட்டியாக யாருடனோ போனில் பேசினான். விமானம் கிளம்புவதற்கான அறிவிப்பு வெளியானது.

பின் மதிய நேரத்தில் மட்காவோனில் துப்பியது விமானம். மட்காவோன் என்ற இடத்தில் இருந்து வகதூர் செல்ல 40 கிமீ. பரபரப்பாக வெளியே வந்தனர் கமலக்கண்ணன் குழுவினர். தெலுங்குப் பாட்டு முதல் வரிசைக்காரியும் வேகமாக வெளியே வந்தாள். இப்போது கண்களில் கூலர்ஸ் ஏறி இருந்தது. ஜீன்ஸ் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தது. இடையில் டாட்டூ தெரிந்தது. அதில் K I என இரண்டு ஆங்கில எழுத்துக்கள் மட்டும் தெரிந்தன. மீதி உள்ளே. கமலக்கண்ணன் திரும்பவும் கடைசி முயற்சியாக ஏதோ பேச யத்தனிக்கையில், அவள் ஒருவனைப் பார்த்து வேகமாகக் கையை ஆட்டியபடி ஓடினாள். அந்த ஆளைப் பார்த்து பிம்ப் டா என்றான் கமலக்கண்ணன் தன் நண்பர்களிடம்.

ரிஸார்ட்டிற்குப் பின்புறம் பீச்சில் குடை நட்டிருந்தார்கள். ரிஸார்ட், பீச்சில் இருந்து 300 அடி உயரத்தில் இருந்தது.

1200 ரூபாய் டாக்ஸிக்கு ஓகே, ஏர்போர்ட்டில் இருந்து இங்க வரதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்னு நினைக்கலை, காட்டெஜ் பீப்பிள் பரவாயில்லை, ஃப்ரெண்ட்லியா இருக்காங்க, வழியெல்லாம் பாக்கறதுக்குக் கொஞ்சம் கேரளா போல இருக்கு. வழியில் வைன் ஷாப்பில் சரக்கு வாங்கிய இடத்தில் ஃப்ரெண்ட்லியாக உதவிய கடைக்காரன் என பேசிக் கொண்டு இருந்தனர்.

இன்னிக்கு என்னா பிளான் என ஆரம்பித்தான் கமலக்கண்ணன். அவனே வழக்கமாக பதிலும் சொல்வான் என்பதால் அனைவரும் கம்மென்று இருந்தனர்.

இன்னிக்கித்தான் வந்திருக்கோம், அதனால ரொம்ப ஆட வேண்டாம். டயர்டா வேற இருக்கு. வகதூர்லயே ஏதாவது பார் & ரெஸ்டாரண்ட்ல செட்டில் ஆயிடுவோம். நாளையில் இருந்து மத்ததைப் பாத்துக்கலாம் என கண் சிமிட்டினான்.

கண் சிமிட்டலில் உற்சாகமானார்கள் நண்பர்கள்.

ரஷ்யன் ஒருவன் கடலில் சர்ஃபிங்க் செய்தபடி இருந்தான். ஒரு ரஷ்யன் மார்பளவு ஆழமுள்ள கடலில் உதட்டோடு உதடு பொருத்தி ரொம்ப நேரம் முத்தமிட்டபடியே இருந்தான்.

ரிஸார்ட்டுக்குத் திரும்பி ஆளுக்கொரு மூலையில் ஒதுங்கி பெண்டாட்டிகளுக்கு போன் செய்து பேச ஆரம்பித்தனர். இன்று மதியம் வீட்டை விட்டுக் கிளம்பியவர்கள், மாலையில் பேசுவது, ஏதோ மூன்று மாதம் பிரிந்திருந்தவர்கள் பேசுவதைப் போலிருந்தது. ஒருவழியாய் பேசி முடிச்சுட்டேன் மச்சி என்றவாறே கடைசி நண்பன் அறையில் நுழைந்தான். சீக்கிரம் கிளம்பு என அவனை அவசரப்படுத்தினர் மற்றவர்கள்.

மேங்கோ ட்ரீ ரெஸ்டாரண்ட். அழகான மரங்கள் அடர்ந்த ஒற்றை ரோடு. ரோட்டை ஒட்டி ரெஸ்டாரண்ட். வெளியே ஒரு பெரிய மாமரம். மாமரத்திற்குக் கீழே பல மேஜைகள். உள்ளேயும் மேஜைகள். 80 சதவீதம் வெளிநாட்டுக்காரர்களால் நிரம்பி வழிந்தது. வெளியே சில ரஷ்யர்கள் கஞ்சாவோ வேறு ஏதோ புகைத்துக் கொண்டு இருந்தனர். ஒருவன் கிடார் இசைத்துக் கொண்டிருந்தான். அவனருகே இரண்டு பெண்கள் மினி ஸ்கர்ட்டில் மெலிதாக இடுப்பை ஆட்டியபடி இருந்தார்கள். சிலர் செஸ் ஆடிக் கொண்டு இருந்தனர். ஒரு இந்தியன் கர்ம சிரத்தையாக ஃபேஸ்புக்கை நோண்டிக் கொண்டு இருந்தான்.
கமலக்கண்ணன் குழுவினர் உள்ளே நுழைந்து ஒரு டேபிளில் அமர்ந்தனர். இரண்டு வெளிநாட்டு ஜோடிகள் உள்ளே நுழைந்தனர். சிலர் ஹோ எனக் கத்தியபடி அவர்களை வரவேற்றனர். கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

இரண்டு ரவுண்ட் உள்ளே சென்றதும்,
மாப்ள வெளியில போய் உட்காரலாம், செம ஹேப்பனிங்கா இருக்கு, வெளியில பைக்ல போற குட்டிங்களையும் சைட் அடிக்கலாம் என்றான் ஒரு நண்பன். வெளியில் டேபிள் காலியாக இல்லை என எடுத்துச் சொல்லியதும், இன்னொரு ரவுண்டு போடு, அதை எடுத்துட்டுப் போய் வெளில நிக்கிறேன், டேபிள் காலியானதும் புடிச்சிடறேன் என்றான். ரவுண்டை ஊற்றிக் கொண்டு வெளியே சென்று, டேபிளைப் பிடித்து பின், அவன் அழைத்தது – ரெஸ்டாரண்ட் உள்ளே உள்ள அனைவரையும் வெளியே அழைப்பது போலிருந்தது.

வெளியே வந்து அமர்ந்தனர்.

வெளிநாட்டு ஜோடி வருவதும் இரண்டு ரவுண்ட் போடுவதும், வெளியேறுவதுமாக இருந்தனர். ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வந்தார்கள்தான் எனினும் அது மிகவும் அபூர்வமாகவே இருந்தது. இரண்டு ரஷ்யப் பெண்கள் தனியாக ஒரு வாடகை பைக்கில் வந்து ரெஸ்டாரண்ட் முன்புறம் ஏற்கனவே இருந்த வரிசையில் பார்க் செய்தனர். கமலக்கண்ணன் குழுவுக்கு ஜிவ்வென இருந்தது. ஒருத்தி மெலிதாக மேல்தட்டு தேவதையைப் போல சின்ன உதட்டுடன் இருந்தாள். இன்னொருத்தி கொஞ்சம் கட்டையாக இருந்தாள்; ஆனாலும் முகம் மற்றும் முன்னழகில் அனைவரையும் வென்றெடுத்தாள்.

பெண்கள் இரண்டு ரவுண்ட் போனார்கள். கமலக்கண்ணன் குழுவினர் நான்கு ஐந்து என ரவுண்டை ஏற்றிக் கொண்டே சென்றனர்.
மெலிந்த தேவதையை எப்படியாவது இன்று இரவுக்குத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என கமலக்கண்ணன் குழுவில் மெஜாரிட்டி நண்பர்கள் நினைத்தனர் எனில், முன்னழகு முத்தம்மாவை எத்தனை பேர் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்தனர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஒழுங்காகச் சொல்பவர்களுக்கு ஒரு ரவுண்ட் டக்கீலா. வாயைப் பிளந்து கொண்டு கவனமாகக் கதையைப் படிக்காதவர்களுக்கு 80 வயது ரஷ்யக் கிழவியோடு டேட்டிங்க்.
நம்மூரூப் போன்ணூங்கா போலத் தான்ன்ன்னே உலகப்ப் போண்ணுங்களும்? ம்? என்னா ? நம்மூரூப் போண்ணூங்கா போலத்தான்ன்ன்னே உலகப்ப்போண்ணுங்களும்? சீ ஆல்ப்பொண்ணுங்களும் ஒண்ணுதான்… ஓகேவா? பொண்ணுன்னா பொண்ணு மச்சி, புரீயுதா? மாப்ளா போண்ணுன்னா கன்ஃபியூஸ் ஆவக் கூடாது மச்சி… க்ரெக்டா ப்ளான் போட்டா கரெக்டா பிளான் செய்யலாம். என்னா மச்சீ? என்றான் ஒருவன்.

மற்ற மூவரும் பேச போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர். உதடு துடித்தது. போதை, சொற்களை உருவாக்கித் தள்ளிக் கொண்டேயிருந்தது. உடனே வெளிக் கொட்டி விட வேண்டும். இல்லையெனில் மறந்து போகும் என்கிற அவஸ்தையில் அனைவரும்,

கொஞ்சம் இரு மச்சி, ஒரு நிமிஷம் மச்சி, நான் ஒண்ணு சொல்லிடறேன் மச்சி, இதைக் கேளேன், ஒண்ணே ஒண்ணு சொல்லிடறேண்டா, அதான் நானும் சொல்றேன், என்ன பேச விட்டாத்தானே என மாறி மாறி கத்திக் கொண்டிருந்தனர்.

கமலக்கண்ணன் எல்லோரையும் கஷ்டப்பட்டு கையமர்த்தி விட்டு, ஒரு பிளான் சொல்றேன் கேளுங்க. அவங்க பைக் நிக்கிற இடத்தைப் பாருங்க, ஒரு பெரிய என்ஃபீல்டு புல்லட் மறைச்சாப்ல நிக்கிது. அவங்களால அதை எடுக்க முடியாது. நாம போய் ஹெல்ப் பண்றாப்ல பேசலாம். ஆனா யாராவது ஒருத்தர்தான் பேசணும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே இரண்டு பெண்களும் பைக்கை நோக்கி நடந்தனர்.

கமலக்கண்ணன் அவர்களின் பின்னாலேயே நடக்க, மற்ற மூவரும் பின் தொடர்ந்தனர்.

கமலக்கண்ணன் புல்லட்டை நகர்த்தி வைத்து அவர்களின் பைக்கை எடுத்துக் கொடுத்தான்.

தேங்க் யூ.

வெல்கம், வேர் ஆர் யூ ஃப்ரம்.

ஃப்ரம் ரஷ்யா.

ஆம் ஃப்ரம் இந்தியா.

யாஹ் யாஹ்.

ஆம் கேம் ஃபார் செலிபரேட்டிங்க் நியூ இயர்.

ஓஹ் கிரேட்.

நடுவில் புகுந்தான் ஒரு நண்பன்.

ஆக்சுவலி வீ ஆர் ப்ளானிங்க் டு செலிபரேட் நியூ இயர். வீ ஆர் இஞ்சினியர்ஸ், வீ ஆர் ஸ்டேயிங்க் இன் தி ரிஸார்ட் நியர் பை ஒன்லி. வீ ஆர் ஃபோர் பர்சன்ஸ். கேன் யூ ஜாயின் வித் அஸ் என்றான்.

ஓஹ் சாரி, வீ ஹேவ் எ ஃப்ளைட் டுநைட் டூ அவர் கண்ட்ரி. வீ நீட் டூ ரஷ். எஞ்சாய் தி ஹாலிடே என சொல்லிப் பறந்து விட்டனர்.

அதற்குப் பின் நண்பர்களுக்குள் நடந்த சண்டை காலையில் பெரிதாக யாருக்கும் நினைவில்லாததால் பெரிய பிரச்சனை எதுவும் ஆகவில்லை. பில் செட்டில் செய்து விட்டு, சிகரட் அடித்துக் கொண்டே நடந்து வந்ததும், ரிஸார்ட்டில் தொண்டை எறிய எறிய சிகரட் குடித்துக் கொண்டே இருந்ததும் மட்டும் நினைவிருந்தது.

மறுநாள் மதியம் வரை நான்கு டீ, டிஃபன் மற்றும் ஹெவியான லன்ச்சை ரிசார்ட்டிலேயே முடித்து விட்டு மயங்கிக் கிடந்தனர். இரவு கர்லீஸ் பீச் நைட் பார்ட்டிக்கு போகலாம் என திட்டம். கர்லீஸ் பீச் பார்ட்டி வாசல் வரை ஒன்றாகப் போகலாம். உள்ளே நுழைந்ததும் பிரிந்து விட வேண்டும். அப்போதுதான் ஃபிகரை மடக்க வசதியாக இருக்கும் என கமலக்கண்ணன் கூறி விட்டான். பார்ட்டி நைட்தான் சூடு பிடிக்கும் என்பதால் அதுவரை ஒவ்வொரு பார் ஆகச் சென்று ஒரு ரவுண்ட் மட்டும் அடிக்கலாம் என்பதும் கமலக்கண்ணனின் கில்லாடித் திட்டம். ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நான்கு பார்களில் பில் செட்டில் செய்து விட்டு கர்லீஸ் பீச் பார்ட்டிக்கு வரும்போது இரவு பதினோரு மணி. ஆளுக்கு எத்தனை ரவுண்டு குடித்திருப்பார்கள் என சொல்லுங்கள் பார்க்கலாம்? நாலு ரவுண்ட் என சொல்பவர்களை குஜராத்திற்கு மாநிலம் கடத்தக் கடவது. அந்த நான்கு பார்களிலும் அடித்த கூத்துக்களை இங்கே எழுதினால் குறுநாவலாகிவிடும் என்பதால் தனியாக நான்கு பார்கள் என்ற தலைப்பில் தனிச் சிறுகதையாக இன்னும் சில மாதங்களில் வெளியாகும்.

தன் மூன்று நண்பர்களையும் முதலில் உள்ளே அனுப்பி விட்டான் கமலக்கண்ணன். நுழைவுக் கட்டணம் ரூபாய் 1000 /- சில வெளிநாட்டு ஃபிகர்கள் தனியாக வந்து நுழைவுக் கட்டணம் ஆயிரம் ரூபாய் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்து திரும்பச் சென்றனர். மிதமான போதையில் இருந்தனர். அவர்களில் யாரையேனும் தான் பணம் போட்டு உள்ளே அழைத்துச் செல்லலாம் என யோசித்தான் கமலக்கண்ணன்.

அப்படித் திரும்பிச் சென்ற நீல நிற ஸ்கர்ட்டும் வெள்ளை நிற கவுனும் அணிந்த பெண்ணை ஹாய் என்றான். எனக்கு உன்னை உள்ளே அழைத்துச் செல்வதில் மிக்க மகிழ்ச்சி. நீ என்னுடன் வந்தால் இந்த நாள் எனக்கு மிக அதிர்ஷடமான நாள் என்றான்.

அவள், வாட் என முகத்தை 47 டிகிரி சாய்த்துக் கேட்பதற்கும், பவுன்ஸர்ஸ் அருகில் வந்து, யாஹ் ஹௌ கேன் வீ ஹெல்ப் யூ எனக் கேட்பதற்கும் சரியாக இருந்தது.

கமலக்கண்ணன் கடுப்பாகத் திரும்பி நடந்தான். அழகான பெண் யாரேனும் தனியாக உள்ளே நுழையக் காத்திருந்தான். இரண்டு பெண்கள் மிக மெல்லிதாக ஒரு சிகரட் பிடித்தபடி உள்ளே நுழைய, கமலக்கண்ணனும் நுழைந்தான். அவர்கள் நேராக “க்ளப்பிங்க்” என்று அழைக்கப்படும் டேன்ஸ் ஃப்ளோருக்குச் சென்றனர். டேன்ஸ் ஃபுளோர் கடற்கரையை ஒட்டி இருந்தது. பார் & ரெஸ்டாரண்ட் பக்கத்திலேயே இருந்தது. வண்ண மயமான விளக்குகளால் ஒரு சொர்க்க லோகம் போல் காட்சியளித்தது. கிட்டத்தட்ட 2000 பேருக்கு மேல் கூடி இருந்தனர் அந்த பிரைவேட் பீச்சில். கிட்டத்தட்ட அனைவரும் நடனமாடியபடியும் குடித்தபடியும் இருந்தனர்.

பாடல் வரிகள் இல்லாத இசை அதிர்ந்து கொண்டிருந்தது. இரண்டு பெண்களும் லேசாக இடுப்பை அசைத்தபடி நடனமாடத் தொடங்கினர். கமலக்கண்ணனும் அவர்கள் அருகில் ஆடத் தொடங்கினான். இவனைப் போல் கிட்டத்தட்ட எட்டு பேர் அந்தப் பெண்களைச் சூழ்ந்து கொண்டு ஆனால் சூழாதது போல ஆட ஆரம்பித்தனர். முதலில் அந்தப் பெண்களின் உடைகளின் மீது உரச ஆரம்பித்தான் கமலக்கண்ணன். மற்றவர்களும் அதே செய்தனர். கொஞ்சம் தைரியம் பெற்று அந்தப் பெண்களின் கை, இடை, பின்புறம் என உரச ஆரம்பித்தனர். அந்தப் பெண்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர். கமலக்கண்ணன் சோர்வாக ஓரிடத்தில் வந்து அமர்ந்து ஒரு பியர் அடிக்க ஆரம்பித்தான்.

பேரழகி ஒருத்தி வெள்ளை நிறத்தில் தேவதை போல் உடையணிந்து ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்த கமலக்கண்ணன், அவளின் அருகே சென்று பேச யத்தனித்தான். பக்கத்தில் மாடல் போல நின்று கொண்டிருந்த ஒருவன் 30 மினிட்ஸ், ட்வெண்டி தவுஸண்ட் பக்ஸ் என்றான். அதிர்ச்சி அடைந்து திரும்பி வந்து அமர்வதற்குள் பேரம் படிந்து வேறு ஒரு ஆளுடன் தேவதை மிதந்து மிதந்து சென்று கொண்டிருந்தாள்.

மறுநாள், மற்ற மூன்று நண்பர்களும், ஆள் செட்டாச்சி மச்சி, கடைசி நேரத்துல என்னாச்சின்னா என எதையோ புளுகினர். இன்னும் இரண்டு நாள்தான் மச்சி இருக்கு, அதுக்குள்ள ஃபிகர் செட்டாகுமா? என்னா மச்சி செய்யறது என பதற்றத்துடன் முகம் வெளிறி ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

நண்பர்கள் அனைவரும் பகலிலேயே வகதூர் பீச்சுக்குச் சென்றனர்.

பீச் முழுவதும் குடை நட்டு, படுக்கை போட்டு மல்லாக்கவும் குப்புற அடித்தும் படுத்திருந்தனர் வெளிநாட்டினர். கணிசமான அளவில் வட இந்தியர்களும்.

வட இந்தியப் பெண்ண்ணுக்கும் வெளிநாட்டுப் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் காண முடியவில்லை. வட இந்தியப் பெண்கள் மார்க்கச்சையை அவிழ்த்துப் போட்டு விட்டுப் படுத்திருக்கவில்லை, அவ்வளவுதான். சிலர் ஜோடியாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் கடலில் இடுப்பளவு ஆழத்தில் ஜோடியாக கட்டிப்பிடித்து முத்தமிட்டபடி தன் காதல் எவ்வளவு சிறப்பானதென்று காதலியின் பிருஷ்டங்களை அமுக்கியவாறே விளக்கிக் கொண்டிருந்தனர். பீர், கடல் தண்ணீருடன் போட்டி போடும் அளவுக்கு நுரை ததும்பப் பொங்கிக் கொண்டே இருந்தது. பீச் ஓரத்தில் இருந்த ரெஸ்டாரண்டுகளில் இருந்து துள்ளலான இசை கலவையாக ஒலித்துக் கொண்டே இருந்தது. மீன் வறுபடும் வாசனை தொடர்ந்து மூக்கின் வழியாக வயிறோடு பேசிக் கொண்டே இருந்தது. வ்வ்வ்ர்ரரூம் என்ற சத்தத்தோடு வாட்டர் ஸ்கூட்டர் கிளம்பிக் கொண்டே இருந்தது. வாட்டர் ஸ்கூட்டரில் எவளோ ஒருத்தி எவனோ ஒருத்தனின் முதுகில் காமமின்றி பயத்தோடு கட்டிக் கொண்டிருந்தாள். சென்னையில் தற்செயலாக நம்மீது துப்பட்டா படுவது போல, பீச்சில் உட்கார்ந்து இருப்பவர்களின் முகத்தில் மினி ஸ்கர்ட் அடிக்கடி உரசியது. தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒரு நடுத்தர வயது தொப்பைக் கூட்டம் தனியே வாந்தி எடுத்தபடி கிடந்தது. வாந்திக்கு நடுவில் ஒரு தொப்பை கர்ம சிரத்தையாக செந்தமிழ் தேன்மொழியாள் என சீரியஸாக பாடியபடியே ஆடிக் கொண்டிருந்தது. நிறைய வெளிநாட்டு சிங்கிள்ஸ் ஏதாவது ஒரு புத்தகம் படித்தபடி பீரையும் போனால் போகட்டும் என சிப்பியபடி இருந்தனர். இந்திய டீன் ஏஜ் பெண்கள் குரூப் எல்லாவற்றையும் அடக்க முடிந்த குறுஞ்சிரிப்போடு சூரிதார் பேண்டை லேசாகத் தூக்கிப் பிடித்தபடி கடந்து சென்றனர்.

இங்கேயே யாராவது தனியாக இருக்கும் வெளிநாட்டுப் பெண்ணிடம் பேசி வொர்க் அவுட் ஆகிவிட்டால், இரவு டிஸ்கோவுக்கு அழைத்துச் செல்லலாம் எனத் திட்டம். தனித்தனியாகப் பிரிந்தனர்.

ஹாய், வேர் ஆர் யூ ஃப்ரம் ?

ரஷ்யா பை பை.

ஹாய்

ஹேய் குட் டே.

ஹாய் வெல்கம் கோவா.

தேங்க் யூ, பை பை.

ஹாய் வாட் ஈஸ் யூர் டுடேஸ் ப்ளான்?

ப்ளான்? நோ ப்ளான்… ஹா ஹா ஹா, பை பை.

அசந்து போய் ஹோட்டல் வந்து டீ ஆர்டர் செய்தனர். விறுவிறுவென குளித்துத் தயாராகி, நான்காவது ஆள் வரும் வரையில் மூன்று பேரும் ஆறு சிகரட்களை புகைத்துக் கொண்டிருக்க , நான்காவது ஆள் பாத்ரூமில் சிகரட் புகைத்துக் கொண்டு இருந்தான். இன்று மாலை சன்பேர்ன்(sun burn) பார்ட்டி செல்வதாகத் திட்டம். நுழைவுக் கட்டணம் மட்டும் 5500 ரூபாய். இந்தியாவிலேயே நம்பர் ஒன் பார்ட்டி. ஓப்பன் ஏர் பீச் பார்ட்டி மற்றும் இசை ரகளை. வெளிநாட்டு டீஜேக்கள், அற்புதமான சவுண்ட் சிஸ்டம் என இளமை இசைக் கொண்டாட்டம்.

ஏழு மணிக்கு உள்ளே நுழைந்தனர். பல ஏக்கரை பீச்சில் வளைத்து பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர். மொத்தம் நான்கு அரங்குகள். ஒரு லட்சம் பேர் கூடலாம். நடனமாடலாம். நுழைவாயிலிலேயே ஒரு டிஸ்கோ அரங்கு. லேசர் ஒளி. சியர் லீடர்ஸ். வாண வேடிக்கை. பார். செக்யூரிட்டி ஓரமாக. ஸ்மோக்கிங்க் ஏரியா தனியாக. டீஜேக்கு வேர்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. கடற்கரை மணலில் இசையின் அதிர்வுகள் தெரிந்தன. கால்கள் தானாகவே ஆட ஆரம்பித்தன. கால்கள் மட்டுமல்ல, மொத்த உடலுமே இசைக்கு ஏற்றவாறு ஆட ஆரம்பித்தது.

ஒரு ஜோடி பின்னிப் பிணைந்து ஆடிக் கொண்டிருந்தது. அவள் ஹை ஹீல்ஸ் போட்டிருந்தாள். அவன் அவளை சற்றே மேலே தூக்கி தன் இடுப்போடு ஒட்ட வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தான். அவளையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தான். அவள் நளினமாக தலையை மட்டும் விதவிதமாக ஆட்டியபடி இருந்தாள். அவள் கை அவனது பின்னந்தலையில் இருந்தது. அவர்கள் செய்து கொண்டு இருந்ததை விஞ்ஞான ரீதியில் ஒரு புணர்ச்சி என கூற முடியாதுதான்.

இங்கேயும் நால்வரும் தனியாகப் பிரிவதற்கு முன் டிரிங்க்ஸ் அடித்தனர். சிகரட் பிடித்தனர். டேன்ஸ் ஆடினர். யூ டியூபில் இந்த நிகழ்ச்சியை, லைவாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த ஒரு சதுரத்தில் போய் நடனமாடினர். போதை ஏறியது. தனியாகச் சென்றான் கமலக்கண்ணன்.

வேறொரு இடத்தில் பெரிய டேன்ஸ் ஃப்ளோர். மிகப் பெரிய மேடை. மேடையில் டீஜே. அவ்வளவு பெரிய மேடையில் சவுண்ட் சிஸ்டத்தைத் தவிர டீஜே மட்டுமே. அவன் பக்கத்தில் ஒரு பியர் கேன். கீழே ஆயிரக் கணக்கில் மக்கள். இசைத்த இசைக்கு அன்று கண்டிப்பாக கடலில் உள்ள மீன்கள் கூட நடனமாடி இருக்கும். கூட்டம் பித்துப் பிடித்தபடி ஆடிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் செட்டிலாக ஒரு இடம் தேடினான் கமலக்கண்ணன். இரண்டு பெண்கள் கூட்டத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். கமலக்கண்ணன் லேசாக ஆடியபடி இருந்தான். அதில் ஒரு பெண் கமலக்கண்ணனை நோக்கி ஒரு விரலை குவித்தபடி ஆடியபடியே அருகில் வந்தாள். கமலக்கண்ணன் சிரித்தான். அவள் சென்று விட்டாள். இவன் திரும்பிப் பார்த்தான். அவள் சென்று கொண்டிருந்தாள். பின்னால் ஓடினான். மறைந்து விட்டாள். தலையில் அடித்துக் கொண்டான். ஒரு நொடி தாமதித்து விட்டான். ஹாய் சொல்லி இருக்க வேண்டும். அவளை வளைத்து நடனமாடி இருக்க வேண்டும். டிரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்…ச்சே ச்சே எல்லாம் போச்சு என நொந்து கொண்டான். கோவா கடவுள் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு தருகிறார். எல்லோரும் பயன்படுத்திக் கொள்வதில்லை. வெறுப்போடு ஒரு பியர் அடிக்க ஒதுங்கினான். இங்கும் லேடீஸுக்குத் தனியாக ஒரு பார் அமைத்து வெறுப்பேற்றி இருந்தார்கள். பியர் அடித்துக் கொண்டிருக்கையில் பார்த்தான். ஒருத்தி கழுத்தில் ஏதோ கம்பனி டேக் அணிந்து கொண்டு வந்து கொண்டிருந்தாள். வழியில் மடக்கி ஒருவன் பேசினான். அவனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டே நடனமாடினாள். அவன் முத்தமிட்டான் . நாசூக்காக அதை ஏற்றுக் கொண்டு, அவன் காதில் ஏதோ சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தாள். அவன் சென்று மறைந்து விட்டான். கமலக்கண்ணனுக்கு ஜிவ்வென்றது. பியரைக் காலி செய்து விட்டு லேசாக தள்ளாடியபடி அவளை நோக்கிச் சென்றான். அவள் எதிரில் போய் நின்றான் . அக்கம் பக்கத்தில் அனைவரும் ரிதமாக ஆடிக் கொண்டு இருந்தனர்.

ஹாய், ஹேப்பி நியூ இயர், ப்ளீஸ் டான்ஸ் வித் மீ என்றான்.

அவள் தயங்கி நிற்க, சடாரென அவள் கையைப் பற்றி, ப்ளீஸ் என்றான் மன்றாடுவதைப் போல. ப்ளீஸ் டான்ஸ் வித் மீ என கூறியவாறே ஆட ஆரம்பித்தான். அவளும் லேசாக சீராக அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே ஆட ஆரம்பித்தாள். அவளை சற்றே நெருக்கமாக இழுத்தான். தேங்க்ஸ் என்றான். யூ மேட் திஸ் நியூ இயர். ஆம் தி ஹேப்பியஸ்ட் பெர்சன் திஸ் நியூ இயர் என்றான். தப்பு செய்கிறோம் என அவனுக்கு உறைத்தது. உறைத்துக் கொண்டு இருக்கையிலேயே என்ன செய்வது எனத் தெரியாமல் அவளை முத்தமிட்டான். அது இசகு பிசகாக மூக்கில் பட்டது. அவள் இவனை விலக்கியவாறே, காதில் ஏதோ சிரித்தபடியே கூறியவாறு இயல்பாக மின்னி மறைந்து விட்டாள்.

துக்கம் தொண்டையை அடைத்தது. தண்ணி அடிக்காமல் இருந்திருந்தால் ஒழுங்காக ஹேண்டில் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. தண்ணி அடிக்காமல் இருந்திருப்பின் இதைக் கூட செய்திருக்க மாட்டோம் எனவும் தோன்றியது. மறுநாள் இரவு “ஹில் டாப் டிஸ்கோ” ஆடி முடித்து இரவு ரிஸார்ட் திரும்பும் வரை இந்த துக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஹில் டாப்பில் ஒன்றும் சுவாரசியமாக நடக்கவில்லை. அனைவரும் ஜோடியாக வந்திருந்தனர். தனியாக வந்திருந்த வெளிநாட்டுப் பெண்களும் பாட்டிகள். அவர்கள் வெற்றிலை போடுவதைப் போல அன்று இரவு கனவு கண்டான்.

டிசம்பர் 31. இன்றே இந்த கோவா கடைசி. இன்று இரவு ஒரு டிஸ்கோவில் மாட்டிக் கொள்ளாமல் பல டிஸ்கோ செல்வது எனத் திட்டம். இரவு பத்து மணிக்கு தனியே பிரிந்து விட்டனர். கமலக்கண்ணன் ஒவ்வொரு டிஸ்கோவாக போதை ஏற்றிக் கொண்டே இருந்தான். கூடியவரை தனியாள் யாரும் சிக்கவில்லை. ஜோடியாக ஆடிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்க பொறாமையாக இருந்தது. மனைவியா, காதலியா, இல்லை நம்மைப் போல இங்கே வந்து நண்பனாகி இருப்பானா என யோசனை செய்தபடியே ஒவ்வொரு டிஸ்கோவாக காலி செய்தபடி பைக்கில் சுற்றிக் கொண்டிருந்தான். நியூ இயருக்காக வெடி வெடிக்க ஆரம்பித்து விட்டனர். காலங்கூட் பீச்சில் ஒதுங்கினான். பிகினியோடு ஒருத்தி வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தது வித்தியாசமாக இருந்தது. ஒரு பெண்ணை இருவர் தூக்கியபடி அனாயாசமாகச் சென்று கொண்டிருந்தனர். ஒரு மணி நேரம் வாண வேடிக்கை நடந்தது. பீச்சிலேயே மூன்று ரவுண்ட் முடித்திருந்தான். போதை உச்சதில் இருந்தது. ஒரே நேரத்தில் ஜாலியாகவும் சோகமாகவும் இருந்தது. இனி நேரம் இல்லை… வழியில் ரோட்டில் பார்க்கும் அனைத்து வெளிநாட்டுப் பெண்களிடமும் ஹேப்பி நியூ இயர் சொல்ல வேண்டியதுதான் என போதையான மூளை முடிவெடுத்து இருந்தது. பைக் பார்க்கிங்க் அருகில் வந்தான். ஒரு கடையில் பாட்டி ஒருத்தி கண் விழித்து சோடா விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு சோடா வாங்கினான். திறந்தான். யாரோ ஒருவன் பிடுங்கி குடிக்கத் தொடங்கினான். இன்னொன்று வாங்கிக் குடித்து விட்டு போதையோடு வண்டியைக் கிளப்பினான்.

ரோடு இருட்டாக இருந்தது. போக்குவரத்து இருந்து கொண்டே இருந்தது. கூச்சல்களோடு கார்கள் கடந்து சென்ற வண்ணம் இருந்தன. நியூ இயர் முடிந்து கொண்டிருக்கிறது. மணி அதிகாலை மூன்று. வழி நெடுக எந்திரகதியில் ஹேப்பி நியூ இயர் சொல்லியபடியே வந்தான். ஒரு நாலு ரோடு சந்திப்பில் ஒரு ரஷ்ய அழகு தேவதை நின்று கொண்டிருந்தாள். அங்கே மனித நடமாட்டமே இல்லை. எப்படி சப்போரா செல்வது எனக் கேட்டாள். சடக்கென உற்சாகமான கமலக்கண்ணன் என்னுடன் வா, நான் வகதூர்தான் செல்கிறேன் என்று கூறி அவளைப் பின் தொடரச் சொன்னான். வகதூர் பக்கத்தில்தான் சப்போரா. அவளோடு இணையாக பைக் ஓட்டினான். அவள் பெயர், அவள் எவ்வளவு நாட்கள் இங்கு தங்குகிறாள், என்ன வேலை செய்கிறாள் எனப் பேசியபடி வந்தான்.

ஒரு இடத்தில் கும்பலாக இருந்தது. ஒரு வெள்ளைக்காரி, கிழிந்த உடையுடன், ஹௌ கேன் தீஸ் பாஸ்டர்ட்ஸ் ஃபக் மீ எனக் கொலைவெறியோடு கத்திக் கொண்டிருந்தாள். சிலர் அவளை ஆசுவாசப்படுத்தியபடி இருந்தனர்.

அந்தக் கூட்டத்தைக் கடந்ததும் ஒரு இடத்தில் ரோடு V போல இரண்டாகப் பிரிந்தது. ஒருக்கணம் திடுக்கிட்டான். போதையாக இருந்ததால் எப்படிச் செல்வது எனக் குழப்பமாக இருந்தது. அவள் சிரித்துக் கொண்டே, உனக்கும் வழி குழம்பி விட்டதா என்றாள். இந்த இடத்தில் சரியான ரோட்டைத் தேர்ந்தெடுத்தால் வகதூர் வந்து விடும். அங்கே இருக்கும் மேங்கோ ட்ரீயில் இவளுக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லி ஒரு பியர் வாங்கித் தர வேண்டும் என அவனுக்கு யோசனை. தலை கிண் கிண் என்றது.

இவர்களைத் தாண்டி ஒரு கார் சென்றது . பின் ரிவர்ஸில் வந்தது. இவள் சப்போராவுக்கு வழி கேட்டாள். அவர்கள் தங்களைப் பின் தொடரச் சொல்லிச் சென்றனர். அவள் பை சொல்லி சென்று விட்டாள்.

பைக்கை ஆஃப் செய்து விட்டு ஒரு சிகரட் பிடித்தான். பைக்கை எடுத்துக்கொண்டு வகதூர் வந்தான். ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் திறந்திருந்தது. ஒரு பியர் வாங்கி எரிச்சலோடு குடித்தான். அதிகாலை மணி நான்கு ஆகியது. ரிஸார்ட்டுக்கு வந்தான். நண்பர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. போதை கடும் உச்சத்தில் இருந்தது. மடக் மடக்கென தண்ணீர் குடித்தான். சிகரட் பற்ற வைத்தான். இழுக்கவே பிடிக்கவில்லை. தூக்கி எறிந்தான். கட்டிலில் அப்படியே சரிந்தான்.

தூங்குவதற்கு சற்று முன், கண் இழுத்துக் கொண்டு செல்கையில், கஷ்டப்பட்டு தூங்காமல் மொபைலை எடுத்துப் பார்த்தான். பல மிஸ்டு கால்கள். பல மெசேஜஸ்.

மனைவி நினைப்பு வந்தது. காதல் பொங்கியது. பாவம் தூங்கியிருப்பாள். ஆழ்ந்த நித்திரையில் இருப்பாள் என நினைத்துக் கொண்டே அரைத் தூக்கத்தில், மனைவியின் மொபைலுக்கு ஐ லவ் யூ செல்லம் என டைப் செய்து செண்ட் செய்து விட்டு ஃபிளாட் ஆனான்.

ஐ டூ லவ் யூ டியர் என்ற ரிப்ளை தாமதிக்காமல் உடனே வந்து ஒளிர்ந்து கொண்டேயிருந்தது .

– ஜூலை 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *