கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 16,929 
 
 

“அனுபந்தம் க்ஷ்யம் ஹிம்ஸா மனபேக்ஷ்யச பௌருஷம்.”

என் உடல் நடங்கியது. தொலைவில் எங்கிருந்தோ மைக்கில் அந்த சுலோகம் ஒலித்துக் கொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டிவிட்டது. சுலோகத்தைக் கேட்டு உடல் நடுங்குவதாவது என்று உங்களுக்கு சந்தேகம் வரக் கூடும். நான் இருந்த நிலைமை அப்படிப்பட்டது.

வெட்டியானுக்கு பணம் கொடுத்து ஏதோ ஒரு சாக்கு சொல்லி வெளியே அனுப்பிவிட்டு நள்ளிரவு இரண்டு மணிக்கு சுடுகாட்டில் பிணத்தைத் தோண்டி வெளியே எடுக்கும் முயற்சியில் நான் ஈடுப்பட்டிருக்கும் போது, “தான் செய்யும் காரியங்களுக்கு பின்னால் ஏற்படும் சுகதுக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் செய்யப்படும் காரியங்கள்தான் தாமஸ கர்மாக்கள்” என்ற பொருள் அடங்கிய சுலோகம் ஒலித்த போது என் உடல் நடுங்கியதில் வியப்பு எதுவும் இல்லை. நள்ளிரவில் நான் எதற்காக பிணத்தைத் தோண்டி எடுக்கிறேன் என்று தெரிந்து கொள்ளணும் என்றால் என் கடந்த காலத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியவேண்டும்.

****************************************************************************

“இடிந்து போன பாலத்தின் கட்டுமான பணியில் உங்களுடைய பிரமேயமும் இருக்கிறது என்ற சந்தேகத்தின் காரணமாக உங்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்கிறோம்.”

ஆபீசிலிருந்து வந்த கடிதத்தைப் பார்த்த போது எனக்குச் சிரிப்புதான் வந்தது. இந்த நாடகமெல்லாம் வெறும் கண்துடைப்பு என்றும், எதிர்க்கட்சிக்காரர்களின் கோபத்தை தணிப்பதற்காக செய்யும் முயற்சி என்றும் எனக்குத் தெரியும். இந்த விஷயத்தை எங்கள் கூட்டாளியான அமைச்சரே சுயமாக தெரிவித்தார்.

பாலம் இடிந்து போன விபத்தில் நூறுபேர் வரையிலும் இறந்து போயிருக்கிறார்கள். அதில் தொண்ணூறு பேர் கட்டட தொழிலாளிகள். பாதி கட்டும் போதே பாலம் இடிந்து போய்விட்டது. அதுவும் ஒரு விதத்தில் அதிர்ஷ்டம்தான். முழுவதுமாக கட்டி முடித்த பிறகு இந்த விபத்து நடந்திருந்தால் இன்னும் அதிகமாக மக்கள் உயிரை இழந்திருப்பார்கள். கட்டடம் சுமார் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக, பாதி கட்டும் போதே இடிந்து போய்விடும் என்று மட்டும் எதிர்பார்க்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் நாங்கள் எல்லோரும் பணி நீக்கம் செய்யப் பட்டோம். ஆனால் எல்லோரையும் விட முக்கியமானவர், ஏறக்குறைய கோடி ரூபாய் வரையிலும் சுருட்டிக் கொண்ட அமைச்சர் மட்டும் எப்போதும் போல் இருந்தார். பாலம் இடிந்து போன விபத்தில் உங்களுக்கும் பங்கு இருப்பதால் உங்களை பாராளுமன்றத்திலிருந்தும், அரசியலிலிருந்தும் சஸ்பென்ட் செய்கிறோம் என்று யாரும் அமைச்சருக்கு ஆர்டர் கொடுக்கப் போவதில்லை.

அதான் அவர் தைரியமாக நடமாடிக் கொண்டிருந்தார். எங்களுக்கு தைரியம் சொன்னதோடு ஆறுமாதங்களில் நிலைமை சரியாகிவிடும் என்று உறுதிமொழியும் தந்தார். அவருக்கு கோடி என்றால் எங்கள் எல்லோருக்கும் சேர்த்து ஐம்பது லட்சங்கள். அதில் என்னுடைய பங்கு ஐந்து லட்சம்.

தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு நான் ஒன்றும் வருத்தப்படவில்லை.. சொல்லப் போனால் நானே ஒரு மாதம் விடுமுறை எடுத்துக் கொள்வதாக இருந்தேன், பிசினெஸ் விஷயங்களைப் பார்த்துக் கொள்வதற்காக. சொல்ல மறந்துவிட்டேன். சீ·ப் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தாலும் எனக்கு மேலும் சில வியாபாரங்கள் இருந்தன. லாட்டரி கமிஷன் வியாபாரமும் இருந்தது. அதில் நல்ல வருமானம் இருக்கும் என்ற விஷயம் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

ஆபீஸ் போக வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டதால் ஒருநாள் சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு என் சொத்து முழுவதும் இவ்வளவு இருக்கிறது என்று கணக்குப் பார்த்தேன். ஒரு மணி நேரம் பிடித்தது. மகளுக்கு வரதட்சிணையாக கொடுத்த இருபது லட்சங்களையும் செர்த்துக் கொண்டால் இரண்டரை கோடி என்று தெரிந்தது. இது சம்பளம் இல்லை. மேல் வரும்படி மட்டும்தான். வியாபாரத்தின் மூலமாக வந்த வருமானம் மேலும் ஒரு கோடியாவது இருக்கும். இறந்து போன என் மனைவியின் நகைகளின் மதிப்பு ஐம்பது லட்சம் வரையிலும் இருக்கும். அவளுக்கு நகைகள் மீது மோகம் அதிகம். அவள் இறந்து போனபிறகு அந்த நகைகளின் மீது மருமகளுக்கு ஒரு கண் இருப்பது எனக்குத் தெரியும். இந்த விஷயமாக அமெரிக்காவில் இருக்கும் என் மகளுக்கும் இந்தியாவில் இருக்கும் மருமகளுக்கும் நடுவில் ஒரு மௌனப் போர் நடந்து கொண்டிருந்தது. ஆயில் விஷயத்தில் அமெரிக்காவுக்கும், இராக் நாட்டுக்கும் நடுவில் போர் நடக்கவில்லையா? அது போலத்தான்.

சாதாரணமாக மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆகாது என்று சொல்லுவார்கள். ஆனால் என் மனைவியும் மருமகளும் வெளிப்பார்வைக்கு ஒத்துமையாகத்தான் இருந்தார்கள். உள்ளுக்குள் தனிப்பட்ட முறையில் திட்டங்களைத் தீட்டிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் என் மனைவிக்கு கேன்சர் நோய் வந்த பிறகு என் மருமகள் போர் புரிவதை நிறுத்திவிட்டாள். ரஷ்யா பலவீனமடைந்து விட்டதென்று தெரிந்த பிறகு அமெரிக்கா நட்பு கரத்தை நீட்டியது போல். அந்த இருவரும் என் தாயை எதிரியாக நினைத்தார்கள்.

வயோதிகத்தில் இருக்கும் என் தாய்க்கும், கேன்சர் நோயாளியான என் மனைவிக்கும் தன்னால் பணிவிடை செய்ய முடியவில்லை என்று என் மருமகள் புகார் செய்தாள். அவளுடைய வாதம் எனக்கும் சரியென்று பட்டது. இரவில் தாயின் ஓயாத இருமல் சத்தம் … அவளுக்கு பணிவிடை செய்ய அடிக்கடி சேவை இல்லத்திலிருந்து தாதிகளை வரவழைப்பது …. இதெல்லாம் எரிச்சலாக இருந்தது. அதே செலவில் என் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டேன்.

இப்பொழுது மயானத்தில் நான் தோண்டுவது அந்த தாயின் பிணத்தை வெளியில் எடுப்பதற்காகத்தான்.

**************************************************************************

மருமகன் போன் செய்தான். அமெரிகாவில் ஏதோ வியாபாரம் தொடங்கப் போகிறானாம். ஐம்பது வட்சம் முதலீடு செய்தால் அடுத்த வருடமே மும்மடங்காக திரும்பக் கிடைத்துவிடுமாம். அனுப்புவதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நான் சம்பாதிப்பது குழந்தைகளுக்காகத்தானே.

ஆனால் இதில் ஒரு சின்ன பிரச்னை இருந்தது. என் சொத்து முழுவதும் என் குழந்தைகளுக்குத்தான் என்றாலும் மருமகனுக்கு அத்தனை பணம் அனுப்புவதில் என் மகனுக்கு விருப்பம் இல்லை. அவனுக்குத் தெரியாமல் அனுப்ப வேண்டும். எப்படி அனுப்புவது?

என் பிரச்னைக்குக் கடவுளே ஒரு வழி காண்பித்தார். சில நாட்களுக்கு முன்புதான் லாட்டரியில் கோடி ரூபாய் சரி விழுந்ததாக தகவல் தெரிந்தது. எனக்கு லாட்டரி ஏஜென்ஸி இருப்பது உங்களுக்குத்தான் தெரியுமே. விற்றுப் போகாத டிக்கெட்டுகள் இருந்தால் அப்படியே விட்டு வைப்பது என் வழக்கம். அப்படி தங்கிவிட்ட டிக்கெட்டுகளில் ஒன்றுக்கு பரிசு கிடைத்திருக்கிறது. அந்தச் செய்தியை பேப்பரில் பார்த்த போது மகிழ்ச்சியில் என் இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டாற்போல் இருந்தது.

கோ….டி…ரூ …..பா…ய்…ப …ரி..சு!

உடனே அந்த டிக்கெட்டுக்காக தேடினேன். கிடைக்கவில்லை. என்னுள் பதட்டம் அதிகரித்தது. நெற்றி முழுவதும் வியர்வை அரும்பியது. அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது, அந்த லாட்டரி சீட்டு என் தாயிடம் இருக்கிறதென்று.

முதியோர் இல்லத்தில் இருந்த என் தாயை குசலம் விசாரித்து விட்டு வருவதற்காக போன போது அன்றுதான் அவளுடைய பிறந்தநாள் என்று தெரிந்தது. பரிசாக என்ன கொடுப்பது என்று புரியாமல் கைவசம் இருந்த மீந்துபோன லாட்டரி டிக்கெட்டுகளை கொடுத்தேன். சமயத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட என் மூளையை நானே மெச்சிக் கொண்டேன். அம்மா முறுவலித்தாள். தன்னுடைய பிறந்தநாளை மகன் மறந்துபோனதற்காகவோ அல்லது பூக்களுக்கு பதில் மீந்து போன லாட்டரி சீட்டுகளைத் தந்து பெற்றக் கடனை தீர்த்துக் கொண்டதற்காகவோ.

எதுவாக இருந்தால் என்ன? அந்த டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்குதான் பரிசு கிடைத்திருக்கிறது. பிணத்தைப் புதைக்கும் போது அந்த நபருக்கு பிடித்த உடைகளுடன், விருப்பமான ஓரிரண்டு பொருட்களுடன் புடைப்பது எங்களுடைய வழக்கம். இப்பொழுதுதான் நான் பிணத்தைத் தோண்டுவது அந்த உடையில் இருக்கும் லாட்டரி சீட்டுகளுக்காகத்தான்.

பிணத்தைத் தோண்டியெடுப்பது என்ற முடிவுக்கு வருவதற்கு நான் ரொம்ப யோசிக்க வேண்டியிருந்தது. இதற்கு ரொம்ப தைரியம் தேவை. நள்ளிரவில் மயானத்தில் தோண்டுவது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. அதிலும் யார் கண்ணிலும் படாமல் ரகசியமாக செய்ய வேண்டும். கூலி ஆடகளை வைத்து, பட்டப் பகலில் வெளிப்படையாக செய்ய வைக்கலாம்தான். ஆனால் விஷயம் தெரிந்தால் எல்லோரும் முகத்திற்கு நேராகவே ஏசுவார்கள். “இந்த நிலை எங்களுக்கு வந்தால் பத்துக்கோடி பரிசு விழுந்தாலும் நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்யமாட்டோம்” என்று வசனம் பேசுவார்கள். ஆனால் உண்மை என்னவென்று அவரவர் மனச்சாட்சிக்குத்தான் தெரியும். இந்தப் பிரச்னைகள் எல்லாம் எதுக்கு என்றுதான் நானே தோண்டுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

தோண்டும் போது தூசி கிளம்பியதில் இருமல் வந்தது. சமீபத்தில் அடிக்கடி இருமல் வந்து கொண்டிருந்தது. “டி.பி.யாக இருக்குமோ?” என்று மருமகள் மகனிடம் சந்தேகத்தை வெளியிட்டது ஒரு நள்ளிரவு நேரத்தில் என் காதில் விழுந்தது. அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். முன் ஜாக்கிரைதையுடன் இருப்பதில் தவறு இல்லையே?

என் மகளுக்கும் இந்தச் செய்தி தெரிந்தவிட்டது போலும். உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளச் சொல்லி கரிசனத்துடன் கடிதம் எழுதினாள். மாப்பிள்ளை மட்டும் அமெரிக்காவில் எவ்வளவு முன்னேற்பாடாக உயில் எழுதி வைப்பார்களோ, அப்படி வைக்காததால் அம்பானி குடும்பத்தினர் எப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொள்கிறார்களோ உதாரணம் காட்டி கடிதம் எழுதி என் கடமையை மறைமுகமாக நினைவுப் படுத்தினான்.

யோசனையில் மூழ்கியிருந்தபடி தோண்டும் வேலையைத் தொடர்ந்தேன். பிணம் வெளிப்பட்டது. அவசர அவசரமாக உடைகளில் தேடினேன். கத்தையாக இருந்த லாட்டரி சீட்டுகள் தென்பட்டன. நடங்கும் விரல்களால் அவற்றில் தேடினேன். நடுவில் தென்பட்டது. அந்த எண் எனக்கு மனப்பாடம்தான். அந்த நம்பரேதான்.

பத்திரமாக அதை சட்டைப் பையில் வைத்துக் கொண்டே என் தாயின் முகத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். கண்கள் இருக்கவில்லை. ஆனால் அந்தக் குழிகளிலிருந்து தன் இதயவாசல் வழியாக என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. பூச்சிகள் தின்னத் தொடங்கிவிட்டாலும் அந்த முகம் அமைதியாக தென்பட்டது.

“கண்ணா! என் பின்னாலேயே உன் பயணம். என்றாவது ஒரு நாள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு நீயும் அனாதைப் பிணமாக இங்கே வந்து சேரத்தான் போகிறாய்” என்று சொல்லுவது போல் தோன்றியது.

திடீரென்று காற்று பலமாக வீசியது. எங்கள் கண் முன்னாலேயே பாலம் இடிந்து விழுந்த போது அதில் சிக்கிக் கொண்டு இறந்து போன கட்டடப் பணியாளர்களின் மரண ஓலம் போல் இருந்தது அந்தக் காற்றின் பேரிரைச்சல். அவர்களுடைய மனைவி குழந்தைகளின் அழுகைக் குரல்கள் எங்கும் எதிரொலிப்பது போன்ற பிரமை.

மயானம் எனக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டிருந்தது. சமாதிகளே போதி மரங்களாக மாறின. எரியும் சிதையின் நெருப்பு ஞானதீபமாக ஒளி வீசியது.

என் அகக் கண் திடீரென்று திறந்துகொண்டது. வயோதிகத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த வயதில் எந்த தவிப்புடன் என் தாயின் பிணத்தைத் தோண்டியெடுக்க முற்பட்டேனோ அந்த பேராசை பிசாசாக மாறி என்னைச் சுற்றி நாட்டியம் புரிவது போல் தோன்றியது. மருமகள் அணிந்து கொண்டிருந்த என் மனைவியின் நகைகள் … மருமகனின் வியாபாரத் திட்டங்கள்…. இவற்றுக்காகவா நான் தவித்தேன்?

“ராஜாவாகவே இருந்தாலும் போகும் போது எதையும் மூட்டைக் கட்டிக் கொண்டு போக முடியாது” என்ற பொன்மொழி நினைவுக்கு வந்தது. கண்ணுக்குத் தெரியாத விலங்குகள் அறுந்து விட்டது போன்ற உணர்வு!

மெதுவாக திரும்பினேன். பகவத்கீதையின் சுலோகம் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த முறை எனக்கு பயமாக இருக்கவில்லை. இறந்துபோன ஒவ்வொரு கூலியின் குடும்பத்தினருக்கும் நஷ்ட ஈடாக ஒரு லட்சரூபாயைத் தருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த லாட்டரி சீட்டு வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரியவைத்தது. ஜெயிலில் கூட அதே உணர்வுதான் எனக்கு அமைதியைத் தரப்போகிறது.

– தெலுங்கில் எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் tkgowri@gmail.com (ஆகஸ்ட் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *