கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,914 
 

இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம் மறைந்து, கிராமங்களுக்கு, நகரங்கள் துணையாக இருந்து உதவ வேண்டும் என்று, என்னுடைய மனோபலம் எனக்குக் கூறுகிறது. கிராமங்களைச் சுரண்டுவது, திட்டமிட்டு நடைபெறும் பலாத்காரம் தான்.

அகிம்சையின் அடிப்படையில், சுயராஜ்யத்தை தீர்மானிப்பதற்கு கிராமங்களுக்கு ஓர் இடத்தை நாம் அளித்தாக வேண்டும்!

— மகாத்மா காந்தி, “அரிஜன்’ இதழில். (20.1.1940) காந்தி ஜெயந்தி அன்று, பஞ்சாயத்து அலுவலகம் முன், மார்பு அளவு காந்தி சிலைக்கு, கைராட்டினத்தால் நெய்யப்பட்ட, நூல் மாலையை, அணிவித்து, வார்டு உறுப்பினர்களும், கிராம மக்கள் சிலரும் அங்கு கூடியிருந்தனர். பரபரப்பாய் அங்கு வந்தான் பாரதி.
அவன் வந்த வேகமும், அவன் முகத்தில் காணப்பட்ட கோபமும், நன்றாகத் தெரிந்தது.

தரிசு நிலம்!

“”இந்த அநியாயத்தை கேட்டீங்களா… நம்ம ஊர்ல ஆடு, மாடு மேய்ச்சலுக்கு பயன்படுகிற தரிசு நிலம், 70 ஏக்கரை, பக்கத்து டவுனுக்கு தாரை வார்த்து, அந்த நகரத்திலுள்ள குப்பைகளை யும், மற்ற திடக் கழிவுகளையும், இங்கே வந்து கொட்டப் போறாங்களாம். அதற்கான உத்தரவை, நம்ம கலெக்டர் போட்டிருக்கிறார்.”

கையுடன் கொண்டு வந்த செய்தித்தாளில் இருந்த, செய்தியைக் காட்டினான் பாரதி.

அந்த செய்தியை பார்த்ததும், சத்யமூர்த்திக்கு கோபம் வந்தது. மற்றவர்களும் ஆவேசமாயினர்.

“”இந்த பிரச்னையை இப்படியே விடக்கூடாது. இதற்கு ஒரு முடிவு கட்டியாகணும்.”

“”இனிமே, நாம எங்கே ஆடு, மாடுகளை மேய்க்கிறது… கலெக்டருக்கு நாமெல்லாம் யாருன்னு காட்டணும்.”

“”பஸ் மறியல் செய்யணும்.”

“”என்ன இது, அக்கிரமமா இருக்கு… கலெக்டருக்கு யார் அதிகாரம் கொடுத்தாங்க… நம்ம பஞ்சாயத்துக்கு அதிகாரப்பூர்வமாய் எந்த தகவலும் இல்லையே?”

ஆளுக்கு ஆள், ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் சல சலப்பு அதிகமாகவே, எல்லாரையும் அமைதிப் படுத்தினார் சத்யமூர்த்தி.

“”இதப்பாருங்க… உங்க ஆவேசமும், ஆதங்கமும் எனக்கு நல்லாவே புரியுது. நல்ல பஞ்சாயத்து கிராமம்ன்னு நாம பேர் வாங்கிருக்கோம். வீணா வன்முறையிலே இறங்கி, நம்ம ஊர் பேரை கெடுத்துக்க வேண்டாம். காந்திய வழியிலே, அகிம்சை முறையிலே போராடுவோம். முதல்ல, இன்னிக்கு கலெக்டர் உத்தரவை எதிர்த்து, தீர்மானம் போடுவோம். தீர்மான நகலோட, நாளைக்கே கலெக்டரை பார்த்து, நம்ம பிரச்னையை பற்றி பேசுவோம்.”
அவர் பேச்சை எல்லாரும் ஆமோதித்தனர். தீர்மானம் போடப்பட்ட பின், கூட்டம் கலைந்து சென்றது. ஆனாலும், சத்யமூர்த்தி மனதில் கவலை குடி கொண்டது.
காந்தி கண்ட கிராம ராஜ்யமாக, கிராமங்கள் இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர் அவர். அரசியல் கட்சி சாயம் ஏதுமின்றி, சுயேச்சையாக நின்று, பஞ்சாயத்து தலைவராக ஜெயித்தவர். 20 ஆண்டுகள், கட்சி பாகுபாடின்றி, கடினமாக உழைத்து, தன் கிராமத்தை, மாதிரி கிராமமாக மாற்றிய பெருமை, முழுக்க, சத்யமூர்த்தியைச் சேரும்.

கிராமத்திற்கு மட்டுமல்லாமல், தன் பஞ்சாயத்துக்குட்பட்ட சின்ன சின்ன கிராமங்களுக்கும், அடிப்படை வசதி செய்து கொடுத்து, கிராமங்களின் ஜீவாதாரமே விவசாயம் தான் என உணர்ந்து, பசுமை புரட்சி ஏற்படுத்தியவர்.
எட்டாம் வகுப்பு வரை இருந்த பள்ளிக்கூடத்தை, பத்தாம் வகுப்பு வரை தரம் உயர்த்தியது, நீர் நிலை தொட்டிகள், தெரு விளக்குகள் அமைத்தது, மகளிருக்கு சுய வேலை வாய்ப்பு ஏற்படுத்தியது போன்றவை, அவரது சமூகப் பணிகளில் சில.
நிலமற்ற ஏழைகள், குறிப்பாக தலித் மக்களுக்கு வங்கிக் கடன் உதவி மூலம், ஆடு, மாடுகள் வாங்கிக் கொடுத்து, தரிசாக கிடந்த புறம்போக்கு நிலமான, 70 ஏக்கர் நிலத்தையும், அந்த கால்நடைகளின் மேய்ச்சலுக்காக பயன்படுத்தி கொள்ளச் செய்திருந்தார் சத்யமூர்த்தி.

அப்படி பயன்பட்ட நிலம், இப்போது இன்னொரு நகரத்தின் திடக்கழிவையும், குப்பைகளையும் கொட்டுவதற்கு, இனி பயன்படப்போகிறது என்று தெரிந்தவுடன், அவருக்கும் நெஞ்சு குமுறத்தான் செய்தது.

கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருந்த சத்யமூர்த்தி, தன் தங்கையின் மகன் பாரதியை, தன்னுடன் உதவிக்கு வைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால், பாரதியோ, அவரது குணத்தில் இருந்து, சற்று மாறுபட்டவன். எந்த ஒரு மனிதனும், தன்னை அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றி, நெளிவு சுளிவுடன் நடந்து கொண்டால், எந்த காரியத்தையும் சாதிக்கலாம்; குறிப்பாக, பணத்தினால், எந்த விதமான காரியத்தையும் முடித்து விடலாம் என்ற எண்ணம் கொண்டவன்.

என்றாவது ஒரு நாள், அவனது கருத்து மாறும் என்ற நம்பிக்கையோடு இருந்தார் சத்யமூர்த்தி.

கிராம மக்கள் கலைந்ததும், மறுநாள் கலெக்டரை சந்திக்க தேவையான ஆயத்த வேலைகளை ஆரம்பித்தார்.

“”வணக்கம் சார்!”

சத்யமூர்த்தியும், ஊர் பிரமுகர்களும் கலெக்டர் முன் இருந்தனர்.
“”என்ன விஷயம்?”

“”எங்க ஊர் புறம்போக்கு நிலம், கால்நடைகளின் மேய்ச்சல் நிலம். இந்த கால்நடைகளை நம்பித்தான், 700 குடும்பங்கள், வாழ்க்கை நடத்தி வருகின்றன. மேலும், அந்த நிலத்தை சுற்றித்தான், எங்கள் கிராம மக்களின் குடிநீர் ஆதாரமான, குளம், குட்டை எல்லாம் இருக்கு,” நிதானமாக, சூழ்நிலையை விளக்க ஆரம்பித்தார் சத்யமூர்த்தி.

“”பக்கத்து டவுன்ல இருக்கிற குப்பைகளையும், திடக் கழிவுகளையும், எங்க ஊர் தரிசு நிலத்தில் கொட்ட, நீங்கள் உத்தரவு போட்டிருப்பது, இதையெல்லாம் பாழாக்கிடும் சார்.”

இப்படி கூறியவுடனேயே, விஷயத்தை புரிந்து கொண்டார் கலெக்டர்.

“”எங்க நிலத்துல குப்பைகளை கொட்டி குவித்து வைப்பதால், நாள்பட நாள்பட, அந்த குப்பைகள், மீத்தேன் வாயுவை உண்டாக்கும். இது எரியக் கூடியது. எப்போதும், கசிந்து வரும் புகையை சுவாசிக்கும் மக்களுக்கும், கால்நடைகளுக்கும், சுவாச கோளாறுகளையும், ஆரோக்கிய குறைச்சலையும் ஏற்படுத்தி விடும். குடிநீரும் மாசுபடும். நிலத்தடி நீரும் வீணாகும், எங்க கிராமங்களுக்கு, இவ்வளவு தீமைகளை ஏற்படுத்துற இத்திட்டத்தை கைவிடணும் சார்.”

“”வாட்… நான் போட்ட உத்தரவை, கான்சல் செய்யணுமா… நெவர்! நான் சரியாத் தான் செஞ்சிருக்கேன். குப்பைகளையும், திடக்கழிவுகளையும் கொட்டுவதற்கு, ஒரு துளி நிலம் கூட கிடையாது. உங்க ஊர்ல இருக்கிற இவ்வளவு நிலமும் புறம்போக்கு தானே?” என்றார் கலெக்டர் அலட்சியமாக.

“”மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை, லேண்ட் பில்ஸ் எனப்படும் இடங்களை உண்டாக்கி, அதிலே தானே கொட்ட வேண்டும்? உங்க கிராமத்தில இருக்கிற, 70 ஏக்கர் புறம்போக்கு நிலத்திலே, கொஞ்சம் நிலம், லேண்ட் பில்ஸ் ஆக பயன்பட்டு போகட்டுமே?”

“”கலெக்டர் சார்… மக்கள் குடியிருக்கிற பகுதிகள், காடுகள், நீர்வளப்பகுதிகள், வரலாற்றுப் பகுதிகள், தேசிய பூங்காக்கள், இந்த மாதிரி இடங்கள்ல, லேண்ட் பில்ஸ் அமையக் கூடாதுன்னு சட்டம் சொல்லுதே. நீங்க சொல்ற அந்த புறம்போக்கு நிலத்தை சுற்றிலும், நீர் நிலைகள் இருப்பதால், தண்ணீர் மாசு பட்டு விடுமே… குப்பைகள் நாளுக்கு நாள் மலைபோல குவிந்து, மக்களுக்கு நோய் நொடி ஏற்படுமே…”

“”மன்னிக்கணும் மிஸ்டர் சத்யமூர்த்தி… நான் முன் வைச்ச காலை பின் வைக்க மாட்டேன். நீங்க போகலாம். எனக்கு வேற அவசர மீட்டிங் இருக்கு,” பதிலுக்கு காத்திராமல், தன் சீட்டை விட்டு எழுந்து கலெக்டர் வெளியே கிளம்ப, சத்யமூர்த்தியும், மற்றவர்களும் வெறுமையுடன் ஊர் திரும்பினர்.

“”என்ன மாமா… போன காரியம் சக்சஸ் ஆயிடுச்சா… கலெக்டர், தான் போட்ட உத்தரவை கான்சல் செய்திட்டாரா?” கிண்டலாக கேட்டான் பாரதி.

“”தீர்மான நகலை கொடுத்திருக்கோம்… எங்க எதிர்ப்பையும் காட்டியிருக்கிறோம். சீக்கிரம் நல்லது நடக்கும்ன்னு தோணுது. அரசு காரியமில்ல… கொஞ்சம் லேட் தான் ஆகும்,” சற்றே கம்மிய குரலில் பதிலளித்தார் சத்யமூர்த்தி.

“”பார்த்துக்கிட்டே இருங்க… நீங்க என்னதான் பொறுமையா இருந்தாலும், அரசாங்க காரியங்கள் முடியறதுக்கு, மாத கணக்கில் ஆகும். உங்க காரியத்தின் தன்மை நல்லதா இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி, அந்தந்த காரியங்களுக்கு ஒரு, “ரேட்’ இருக்கு மாமா. சம்திங் கொடுக்காம, நீங்க கொடுத்த தீர்மானத்தை தொடுவாங்களா முதல்ல?”

“”டேய் பாரதி… என்ன பேசுற நீ? இது நம்ம கிராமத்தோட ஜீவாதார உரிமைடா… நம்ம ஊர் நிலத்தை குப்பைக்கிடங்கா மாத்துறத, நாம தடுத்தே ஆகணும். அதுவும் காந்திய வழியில்,” அவர் குரலில் உறுதி இருந்தது.

பாரதி சொன்னபடி, நாட்கள் மட்டும் நகர்ந்தன. அவர்கள் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

இடையில் சத்யமூர்த்தியும், மற்றவர்களும், கலெக்டரை பார்க்க பல முறை முயற்சித்தும், அவரை பார்க்க முடியாமல் போனது. நகராட்சி அதிகாரிகள், தரிசு நிலத்தை பார்வையிட வந்தபோது, அவர்களை அனுமதிக்காமல், பொறுமையாக திருப்பி அனுப்பினர் கிராம மக்கள்.

அன்று —
கிராமத்தில் அவசரக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. பேச ஆரம்பித்தார் சத்யமூர்த்தி.

“”இவ்வளவு நாள் பொறுமையா இருந்திட்டோம். நம்மோட மனு மேல, கலெக்டர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கல. இந்த விவகாரத்துல மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் சம்பந்தப்பட்டிருக்கு. அதனால, நம்ம ஊர் புறம்போக்கு நிலத்தை, குப்பை கொட்டுற இடமா பயன்படுத்த அனுமதியோ, தகுதி சான்றோ கொடுத்திருக்காங்களான்னு தெரிஞ்சுக்கணும்.”

“”ஆமா… நாம போய் கேட்ட உடனே சொல்லிடுவாங்களாக்கும்…” கிண்டலாய் சொன்னான் பாரதி.

“”போய் கேட்டா சொல்ல மாட்டாங்கதான்… ஆனா, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமா கேட்டா, 30 நாளுக்குள்ள சொல்லித்தானே ஆகணும்?” என்ற சத்யமூர்த்தி, தொடர்ந்து பேசினார்….

“”நாம இது சம்பந்தமா மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி மனு அனுப்புவோம். அங்கேயிருந்து பதில் வந்ததும், அடுத்த கட்டமா என்ன செய்யலாம்ன்னு முடிவெடுப்போம். அதுவரைக்கும் நீங்க பொறுமையா இருக்கணும்; ஆவேசப்படக் கூடாது…”

கிராம மக்கள் ஒத்துக்கொள்ள, உடனடியாக மனு தயார் செய்யப்பட்டு, அன்றே அனுப்பப்பட்டது.

சத்யமூர்த்தி எதிர்பார்த்த மாதிரி, மாசுக்கட்டு பாட்டு அலுவலகத்திலிருந்து பதிலும் வந்தது. கிராம மக்கள், சத்யமூர்த்தி வீட்டில் கூடியிருந்தனர். கடிதத்தை படித்து, விவரம் தெரிவித்தான் பாரதி.

“”மாசுக் கட்டுப்பாட்டு அலுவலக ஆய்வு கமிட்டி, மேற்படி நிலம், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக பயன்படுவதாகவும், நீர் நிலைகள், குட்டைகளின் அருகில், நகரத்து குப்பைகளை கொட்டுவதால், கிராம மக்களின் குடிநீர் மாசுபடும் என்றும், குப்பைக் கழிவுகளை கொளுத்தி, அதனால் வரும் புகை, கிராம மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றும், இதனால், வியாதிகள் வர வாய்ப்பு உள்ளது.

“”குறிப்பிடப்பட்டுள்ள, மேற்படி தரிசு நிலமான, 70 ஏக்கர் நிலம், திடக்கழிவுகளை கொட்டுவதற்கு தகுந்த இடம் அல்ல என்று அறிக்கை கொடுத்துள்ளது. அந்த அறிக்கையை புறக்கணித்து, மாவட்ட நிர்வாகத்தால், தடை இல்லாத சான்றிதழ் அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது,” என்று விவரம் சொன்னான் பாரதி.
எல்லார் முகத்திலும், மலர்ச்சி தெரிந்தது.

“”நல்லதா போச்சு… இந்த அறிக்கையை வைத்து, மீண்டும் தீர்மானம் போடுவோம்; போராடுவோம்,” என்றார் சத்யமூர்த்தி.

“”தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, கிராமத்தில் உள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன், அந்த குறிப்பிட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம மக்களின் கருத்துகளை கேட்டு, கலந்து ஆலோசித்து, முடிவு எடுக்கணும். ஆனா, இங்கே அப்படி எதுவுமே நடக்கலையே… எல்லாம் அரசியல்வாதிகளோட கைங்கர்யம்.”

“”ஆமாம்… நீ சொல்றதும் சரிதான். என்னையோ, நம் கிராம மக்களின் கருத்தையோ கேட்காமல், கலெக்டர் தன்னிச்சையாக போட்ட உத்தரவால், இப்போ நாம், நம் உரிமைக்காக போராட வேண்டியுள்ளது,” வருத்தமாக சொன்னார் சத்யமூர்த்தி.

“”இது, காந்தி தேசம் காந்தி தேசம்ன்னு நீங்க அடிக்கடி சொல்வீங்க. இந்த காந்தி தேசத்தில்தான், லஞ்சம், லாவண்யம், பித்தலாட்டம், களவு, கொள்ளை, ஒருவருக்கொருவர் ஏமாத்திக்கிறது, கூட இருந்து குழி பறிப்பது போன்ற சமூக அவலங்கள் நிறைய இருக்குது. நீங்க சொன்ன காந்தி தேசத்தில் தான், இனாமா கிடைச்சுகிட்டிருந்த தண்ணீரை, இப்போ காசு கொடுத்து வாங்கிட்டிருக்கோம். மாசுக் கட்டுப்பாடு நிறைந்த இந்த பூமியில, இனி, காற்றையும், விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் வந்தால் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை.” ஆவேசமாகப் பேசினான் பாரதி.

“”இல்லை பாரதி… நீ சொல்றது எல்லாம் உண்மையாக இருக்கலாம். ஆனாலும், சில விதி விலக்குகளும் இருக்கத்தானே செய்யுது? இனி, நாம சட்டரீதியா போராட வேண்டிய நேரம் வந்தாச்சு… நம் தரப்பு நியாயங்களோட, நாம் வழக்கு தாக்கல் செய்யலாம்,” என்றார் சத்யமூர்த்தி.

மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடிக்காமலும், பஞ்சாயத்து சட்டப்படி சரியாக நடக்காமலும், தன்னிச்சையாக உத்தரவு போட்ட கலெக்டர் உத்தரவை கண்டித்து, உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒரு மாதம் சென்றதும், வழக்கறிஞரிடமிருந்து தகவல் வந்தது. “”நம் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மறு ஆணை பிறப்பிக்கும் வரை, நம்ம ஊர் தரிசு நிலத்தில், எந்த குப்பையையும் கொட்டக்கூடாது என்றும், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம், 1994 134(3)ன் படி, நம்ம ஊர் தரிசு நிலத்தை கையகப்படுத்திய கலெக்டர் நடவடிக்கை தவறு என்றும், மேல்முறையீட்டுக்கு மேற்படி நம்ம பஞ்சாயத்தும், சம்பந்தப்பட்ட நகரமும், சுற்றுச்சுழலை தீர்மானிக்கும் அலுவலகத்தை, அணுகலாம் என்றும், சாதக பாதகங்களுக்கு தகுந்தவாறு மறுமுறையீடு செய்யலாம் என்றும் சொல்லியிருக்கு.” எல்லார் முகத்திலும், மகிழ்ச்சி காணப்பட்டது.

“”கிட்டத்தட்ட நாம வெற்றியின் விளிம்பு வரை வந்து விட்டோம். முழுமையான வெற்றி அடையும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. இது வரை நீங்க கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி.” நெகிழ்ச்சியாக சொன்னார் சத்யமூர்த்தி.

அந்த கிராமத்துக்கு இனி, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எல்லாருடைய மனதிலும் தெரிந்தது. பாரதிக்கும், அந்த நம்பிக்கை லேசாக மனதுக்குள் வர ஆரம்பித்தது. காந்தி சிலையை பார்த்தான். அந்த பொக்கைவாய் புன்னகையில், ஏதோ அர்த்தம் தெரிவதாக இருந்தது அவனுக்கு.

– அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *