கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 19,271 
 
 

வீட்டு சொந்தக்காரர் வாடகை வாங்க வந்தபோது, “என் பெண் வரப் போகிறாள். இந்த ஊரில் சில மாதம் தங்க வேண்டுமாம். ஆகையால், வீட்டை அவளுக்காக காலி செய்ய வேண்டி வரும். நீங்கள் ஒரு மாதத்திற்குள் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள். இம்மாத வாடகை போக மீதி உள்ள அட்வான்சு பணத்தை நான் இரண்டொரு நாளில் கொடுத்து விடுகிறேன்” என்று சொன்னார்.

“என்ன, நீங்கள் திடீர் என்று இப்படிச் சொல்லுகிறீர்களே? வேறு வீடு கிடைக்கா விட்டால் நாங்கள் எப்படி காலி செய்ய முடியும்?” என்றேன் நான்.

“கவலைப் படாதீர்கள், அடுத்த தெருவில் உள்ள என் வீட்டில் உள்ள இரண்டு குடித்தனங்களில் ஒரு குடும்பத்தார் ஒரு வாரத்தில் காலி செய்கிறார்கள். நீங்கள் அந்த வீட்டில் வசித்துக் கொள்ளுங்கள். ஒண்டுக் குடித்தனம் சரிப்படா விட்டால், என் மகள் சென்ற பிறகு இதே வீட்டிற்கு வந்து விடுங்கள்” என்று அவர் சொன்னதன் பேரில், வீடு மாற்றி இந்த வீட்டிற்குக் குடி வந்தோம்.

நடுவில் தொட்டி முற்றமும், கூடம் தாழ்வாரமுமாக அந்த நாள் வீடு. கூடத்துப் போர்ஷனில் ரிடையர் ஆன ஜானகிராம ஐய்யர், அவர் மனைவி சரசு, மகன் சுப்பையா, மருமகள் நீலா, அவளுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை ஆகியோரைக் கொண்ட குடும்பம். சுப்பையா தனியார் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர் வேலை பார்த்து வந்தான். இவர்கள் தவிர ஒரு அத்தைக் கிழவியும் அவர்கள் குடும்பத்தில் இருந்தாள். வயது எண்பதுக்கு மேல் இருக்கும். நடமாட்டம் கிடையாது. அவளது அத்யாவசியத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு கோணிச் சாக்கில் உட்கார்த்தி, சாக்கை வண்டியாக இழுத்துச் செல்வார்கள். அவளின் தேவைக்கு ஏற்ற இடங்களில் தூக்கி உட்கார்த்தி வைப்பார்கள்.

கிழவி மிகுந்த அமைதியாக இருப்பாள். அதிகம் பேசவே மாட்டாள். மற்றவர்களும் அவளிடம் பொறுமையாகத்தான் நடந்து கொள்ளுவார்கள். சரசு அம்மாள் தன் நாத்தியான அந்தக் கிழவியின் வேலைகளை எல்லாம் சிறிதும் முகம் கோணாமல் தானே முன் நின்று பணிவிடை செய்யும் அழகே அழகு. அக்குடும்பத்தைப் பார்க்க மிகவும் நன்றாக இருந்தது. அனாவசிய வம்பு வார்த்தை, சண்டை, சலிப்பு எதுவுமில்லாமல் பார்க்க திருப்தியாக இருந்தது.

சுறுசுறுப்பும், அடக்கமும், அமைதியுமான சரசு அம்மாள், ஒரு நாள் நெஞ்சுவலி என்று சிறிது நேரமே துடித்து மரணமடைந்து விட்டாள். குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. அதிலும் அந்த வயோதிக மாது துடித்த துடிப்பு மிகவும் பரிதாபமாக இருந்தது. எல்லோரும் அந்தக் கிழவியை சமாதானம் செய்ய முயன்றனர். பார்க்க மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. சரசுவின் அந்திமக் காரியங்கள் நடந்து முடிந்தன.

சரசு செத்த நாலாம் நாள் என்று நினைக்கிறேன். அன்று எனக்குத் தூக்கமே வரவில்லை. அந்த வீட்டுக் கூடத்திலும், தாழ்வாரத்திலும் ஜனங்கள் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தனர். கிழவி சற்று ஒதுக்குப் புறமாக படுத்திருந்தாள். இரவு ஒரு மணி இருக்கும். மெல்ல மெல்ல ஒரு ஆண் உருவம் கிழவியை நெருங்குவதைக் கண்டேன். கிழவியின் கையைப் பிடிப்பது போல அந்த இருட்டிலும் எனக்கு மசமச என தெரிந்தது. வலிதாங்காத சின்ன ஒரு சத்தம் கிழவியிடமிருந்து வந்தது. அந்த உருவம் அவசர அவசரமாக அவ்விடம் விட்டு நகர்ந்து சென்று விட்டது. என் நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொண்டது.

பொழுது விடிந்தது. கிழவி பிணமாகத் தன் படுக்கையில் கிடந்தாள். எல்லோரும் ஒப்புக்கு அழுதனர். சரசுவின் சாவால் கிழவி கதிகலங்கிப் போய் விட்டாள். சோகம் அவளைக் கொன்று விட்டது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டனர். கிழவியின் சாவுக்கு சோகம் காரணமில்லை என்னும் உண்மை என் ஒருத்திக்கு மாத்திரம் தெரிந்தது. ஆனால் அந்த உண்மை என் மனத்திலேயே புதைந்து விட்டது.

***

பூரணி

எழுத்தாளரும் கவிஞருமான இவருக்கு இப்போது 100 வயது. 1913 அக்டோபர் 17ம் தேதி பிறந்தார். சாதாரண மத்தியதரக் குடும்பம். ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். 13 வயதில் திருமணம். பிறகு, இந்தி கற்றுக் கொண்டு அதில் ‘ராஷ்டிர பாஷா’ பரீட்சை எழுதி தேறினார். பலருக்கும் இந்தி கற்றுக் கொடுத்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவிகளில் பிரபல மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத்தும் ஒருவர். கபீர் கவிதைகளையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் சில கவிதைகளையும், சமகால இந்திக் கவிஞர்கள் சிலரின் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். 1937ல் பழநியில் இருந்து வெளி வந்த ‘சித்தன்’ பத்திரிகையிலும், கோவையிலிருந்து வெளி வந்த ‘பாரதஜோதி’ பத்திரிகையிலும் இவருடைய 5 சிறுகதைகள் வெளியாயின. 1929ல் ‘ஸ்வயம்வர கும்மி’ என்கிற தலைப்பில் கவிதைகளும், 1930–45க்கு இடைப்பட்ட காலத்தில் ‘நலங்குப் பாடல்கள்’ சிலவற்றையும் எழுதினார். ‘நலங்குப் பாடல்கள்’ தேசிய விடுதலை இயக்கம் சார்ந்த எழுச்சிப் பாடல்கள். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்காகவும், மாதர் சங்கத்துக்காகவும் சில பாடல்களை எழுதியிருக்கிறார். மரபுக் கவிதைகள், 2001-2005க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுக் கவிதைகளையும் படைத்திருக்கிறார். இவர் புதுக் கவிதைகளை ‘புது மரபுக் கவிதைகள்’ என்றே குறிப்பிடுகிறார். சிறுகதை, கவிதை போன்ற புனைவுகள் தவிர நினைவலைகள், சுயவரலாறு, வேதாந்த விசாரங்கள் என்று நீள்கிற இவருடைய படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. திருப்பூர் ‘சக்தி இலக்கிய விருது’ உள்ளிட்ட விருதுகளையும் பல பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். இவருடைய கவிதைகளும், சிறுகதைகளும், நினைவலைகளும் நூல்களாக வெளியாகி இருக்கின்றன. இப்போது சென்னையில் வசிக்கிறார். இவருடைய மகள் க்ருஷாங்கினியும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ்ப் பெண் கவிஞர்களில் முக்கியமான ஒருவர். வெகு யதார்த்தமான, அலட்டல் இல்லாத, மனதில் தோன்றி உண்மைகளை, அதன் இயல்பு சற்றும் குறையாமல் வெளிப்படுத்துபவை பூரணியின் எழுத்துகள். இவரின் இரு சிறுகதைகள் இங்கே…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *