கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 14,254 
 
 

அன்று வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அந்த அதிகாலைப் பொழுதில் பக்கத்து வீடுகளில் கந்த சஷ்டியும், சுப்ரபாதமும் ஒலித்துகொண்டிருந்தது.

நான் படுக்கையில் இருந்து எழ மனமில்லாமல், கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் சரியாக 6. இன்று எனக்கு ‘மார்க்ரெட் அண்ட் கோ’ கம்பெனியில் னேர்முகத் தேர்வு. எப்படியாவது இந்த தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ‘என்ன படித்து என்ன பிரயோஜனம், சிபாரிசு இருப்பவனுக்குத்தான் வேலை கிடைக்கிறது’ என்று நண்பன் கோபி நேற்றிரவு சொன்னது நினைவுக்கு வந்தது.

என் தந்தை காலமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவர் அரசாங்க வேலையில் இருந்ததால், அவர் குடும்ப ஓய்வூதியத்தில் என் தாயின் ஜீவனம் நடந்துகொண்டிருக்கிறது. அவள் இந்த வயதான காலத்திலும், தன் வேலைகளை தானே செய்துகொள்பவள். யாரிடமும் உதவி கேட்பதிலை. அண்ணனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அண்ணிக்கும் அம்மாவுக்கும் ஒத்துப்போகவில்லை. எனவே ஊரில் அம்மா தனியாகத்தான் இருக்கிறாள். நான் இங்கு திருவல்லிகேணியில் என் நண்பனுடன் மாத வாடகையில் குடியிருக்கிறேன். அறிமுகம் போதும் என நினைக்கிறேன்.

நேர்முகத் தேர்வுக்கு செல்ல ஆயத்தமானேன். எனக்கு கிடைத்த ஒரு வரம் என் நண்பன் கோபி. அவன் தான் இன்றளவும் எனக்கு படியளந்து கொண்டிருக்கிறான். கோபி குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்ப மனமில்லாமல் நான் கிளம்பத் தயாரானேன்.

நான் செல்ல வேண்டிய நிறுவனம் அண்ணா சாலையில், எல்.ஐ.சி. அருகே இருந்தது. இங்கிருந்து பொடி நடையாக சென்று விடலாம். மாமி மெஸ்சில் இரண்டு இட்லியும் காஃபியும் சாப்பிட்டு, கணக்கில் எழுதிவிட்டு நடையை கட்டினேன்.

நான் அந்த நிறுவனத்தை அடந்தபோது, எனக்கு முன்னதாகவே நாங்கைந்துபேர் அமர்ந்திருந்தார்கள். அங்கிருந்த வரவேற்பாளரிடம், நேர்முகத் தேர்வுக்கான கடிதத்தை கொடுத்தவுடன், அங்கு காலியாக இருந்த நாற்காலியில் என்னை அமரச்சொன்னார்கள்.

அங்குதான் நான் கீதாவை முதல் முதலில் சந்தித்தேன். கீதா ரம்யமானவள், ம நிறம்தான் என்றாலும், அந்த கண்களில் ஒரு வசீகரம். நான் பல பெண்களை சந்தித்திருக்கிறேன், ஆனால் இவள் முதல் பார்வையில் என்னை சாய்த்துவிட்டாள். நாம் கதைக்குள் செல்வோம்.

கீதா எனக்கருகில் அமர்ந்திருந்தாள். நான் நேர்முகத் தேர்வுக்கு வந்ததைக்கூட மறந்து விட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அவள் என்னை நிமிர்ந்து பார்த்து, “சார், நீங்க எந்த போஸ்டுக்கு வந்திருக்கீங்க” என்று கேட்டாள். அந்த குரலில் ஒரு இனிமை.

நான் அவளுக்கு பதில் கூறும் முன் அங்கு வந்த அந்த நிறுவன ஊழியர், எங்கள் அனைவருக்கும்,எழுத்துத் தேர்வுக்கான பேப்பரை வினியோகம் செய்து, ஒரு மணி நேரத்தில் முடித்தாக வேண்டும் என்று கூறி சென்றுவிட்டார். அனைவரும் பரபரப்பானார்கள். எனக்கு ஒரு பதட்டமும் இல்லை, இதுபோல் பல தேர்வுகளை நான் சந்தித்து பழகியவன். கீதாவிற்கு இது முதன் முறை போலும், நான் என்னுடைய வினாத்தாளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிட்டேன். என் பார்வை கீதா மீது சென்றது. அவள் ஒரு கேள்விக்கு கூட பதில் எழுதாவில்லை, எனக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. நான் அவளுக்கு உதவ நினைத்து, என்னுடைய பேப்பரை அவள் பக்கம் திருப்பினேன். அவள் வேகவேகமாக விடைகளை குறித்துகொண்டாள். பின்பு கண்களாலேயே எனக்கு நன்றி கூறினாள். சிறிது நேரத்தில் ஒருவழியாக எங்கள் தேர்வு முடிவுகள் வெளிவந்தது. துரதிர்ஷ்டவசமாக எங்கள் இருவர் பெயரும் தேர்வாக வில்லை. எனக்கு இது புதிதல்ல. ஆனால் கீதா உடைந்துபோய்விட்டள். அவள் கண்களில் கண்ணீர். எனக்கு தர்ம சங்கடமாக போய்விட்டது. நான் தான் அவள் தேர்வாகாததற்குக் காரணமோ என்று.

“ஏங்க அழாதீங்க, எல்லாரும் உங்களையே பார்க்கறாங்க என்று அவளை சமாதானபடுத்த முயன்றேன்.

“இந்தவேலையை நம்பித்தாங்க வந்தேன், இப்படியாகி விட்டதே” என்று புலம்பத் தொடங்கினாள்.

“சரி விடுங்க, உங்களுக்கு இதைவிட நல்ல வேலை கிடைக்கும்” என்றவுடன் சற்று சமாதானமடைந்தாள்.

நான் மெதுவாக அவளிடம், ”வாங்க வெளில போயிடலாம், உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் ஒரு கப் காபி சாப்பிடலாம், வற்ரீங்களா?” என்றவுடன் அதற்காகவே காத்திருந்தவள் போல் என்னுடன் வரத் தயாரானாள்.

காபி சாப்பிடும்போது நாங்கள் மனம் விட்டு சிறிது நேரம் பேசினோம். அவள் தன்னைப் பற்றி முழுதும் சொன்னாள், தன் குழந்தை ரம்யாவின் மேல் உயிரையே வைத்திருந்தது வரை, நீங்கள் நினைப்பது சரிதான்.. .. கீதா விவாகரத்தானவள். அவள் கணவன் ஒரு சந்தேகப் பேர்வழி. திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் நரக வேதனையை அனுபவித்திருக்கிறாள். இத்தனையையும், என்னை நம்பி, அவள் கூறியது, எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

அதன் பிறகு பல சந்திப்புகள். ஒரு நாள் ரம்யாவையும் தன்னுடன் அழைத்து வந்தாள். ரம்யா என்னுடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள். ரம்யாவுக்கு வயது ஐந்து. மிகவும் சூட்டிகையான குழந்தை. கீதாவை அப்படியே உறித்து வைத்திருந்தது. மெல்ல மெல்ல கீதா என்னை ஆக்கிரமித்திருந்தாள்.

அன்றிரவு நண்பன் கோபியிடன் அனைத்தையும் கூறினேன். அவன் முதலில் அதிர்ந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “டேய் இது நடக்குமா?, உனக்கு அத்தனை பக்குவம் உள்ளதா? இது சாதாரண விஷயமில்லை,” என்று பாடம் எடுக்க ஆரம்பித்தான். நான் முடிவெடுத்துவிட்டேன், கீதா தான் என் வாழ்க்கை என்று, நாளை எப்படியும் அவளிடம் இதைப்பற்றி பேசிவிடவேண்டும் என்று எண்ணினேன்.

காலை பொழுது நன்றகவே விடிந்தது.

நான் முதல் வேலையாக கீதாவுக்கு போன் செய்தேன். கீதா இன்று மாலை ஆறு மணிக்கு ரம்யாவையும் கூட்டிக்கொண்டு மைலாப்பூர் வந்துவிடு, உன்னிடம் நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறியதும், அவள் மறுப்பேதும் கூறவில்லை.

இந்த ஆறு மாத நட்பில் நாங்கள் பல விஷயங்களை பேசி உள்ளோம். பல நேரங்களில், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டு அமர்ந்திருக்கிறோம். ஆனாலும், நானோ அவளோ எங்களுடைய திருமணத்தைப் பற்றி பேசியது இல்லை.

நல்லபடியாக எங்கள் இருவருக்கும் ஒரு வேலை கிடைத்தபடியால், எங்கள் பணப் பிரச்சினை தீர்ந்தது. ரம்யா தான் பாவம். கீதா அலுவலகத்திலிருந்து வரும் வரை பள்ளியிலிருந்து வந்து காப்பகத்தில் இருந்தாக வேண்டும்.

அன்று நான் அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே கிளம்பி, மைலாப்பூர் வந்தடைந்தேன். சில நேரங்களில், நான் மிகவும் டென்ஷனாக இருக்கும் சமயங்களில் புகை பிடிப்பதுண்டு. அன்று நிதானமாக ரசித்து புகை பிடித்தேன்.

அப்போது, கீதாவும் ரம்யாவும் வந்துகொண்டிருந்தார்கள். கீதா எனக்கு மிகவும் பிடித்த நீல நிற புடவையில் இருந்தாள். ரம்யா என்னைப் பார்த்ததும், “அங்கிள்” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டது.

“இளங்கோ என்ன அவசரம், ஞாயிற்றுக்கிழமை தானே நாம் சந்திப்பது வழக்கம்” என்ற கீதாவின் கேள்விக்கு நான் பதிலேதும் கூறவில்லை. ரம்யாவை தூக்கிக்கொண்டு நாங்கள் வழக்கமாக செல்லும் பூங்காவிற்குள் நுழைந்தேன்.

ரம்யா தனக்கு பிடித்த சருக்குமரத்தில் ஏறி விளையாடத் தொடங்கினாள். நானும் கீதாவும் அருகருகே புல் தரையில் அமர்ந்தோம். சற்று நேரம் அமைதியாக இருந்தோம். நான் மௌனத்தை கலைக்க முற்பட்டு, “கீதா உன்னிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டும்” என்று ஆரம்பித்தேன்.

“என்ன இளங்கோ பீடிகை பலமா இருக்கு? நீங்க எப்பவுமே தயங்க மாட்டீங்களே, என்னப்பா ஆச்சு, ஏன் இவ்வளவு தயக்கம்”

“கீதா உன் வாழ்க்கையைப் பற்றி என்ன யோசித்திருக்கிற, நாம் சில விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டும், நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக் கூடாது.” என்று கேட்டுவிட்டு அவள் கண்களை ஊடுருவினேன்.

அவள் கண்களில் கண்ணீர். “இதை கேட்க ஏன்டா ஆறு மாசம்?” என்று என் மடியில் புதைந்த்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். நான் அவள் தோளை ஆதரவாகப் பற்றினேன். அழுது முடிக்கும் வரை காத்திருந்தேன். ரம்யா நடப்பது எதுவும் புரியாமால், “அங்கிள் அம்மா என் அழறாங்க” என்று கேட்டதும், நான் ரம்யாவிடம், இனிமேல் நீ என்னை அப்பான்னு தான் கூப்பிடணும் என்று வாரி அணைத்தேன்.

எங்கள் திருமணம் ஒரு சுபதினத்தில் நடந்தது. என் தாய் முதலில் சற்று முரண்டு பிடித்தபோதும், கீதாவையும், ரம்யாவையும் நேரில் பார்த்தவுடன் கரைந்துவிட்டள். அண்ணாவும், அண்ணியும் கடமைக்கு தலையைக் காடி விட்டு சென்றுவிட்டார்கள்.

“டேய் உனக்கு பெரிய மனசுடா!, உன் குணத்திற்கு நீ நல்லாயிருப்ப” என்று நண்பன் கோபி புகழாரம் சூட்டினான். எல்லம் முடிந்தது. ஒரு வாடகை வீடு பிடித்து குடிபுகுந்தோம். என் தாயையும் கட்டாயப்படுத்தி என்னுடன் இருக்க சம்மதிக்கவைத்தேன்.

நாட்கள் சுகமாக கழிந்தது. கீதாவும், அன் தாயும் ஒத்துப்போனதில் அனக்கு மிகுந்த சந்தோஷம். எங்கள் இருவருடைய வருமானத்தில் ஓரளவு குடும்பத்தை ஓட்ட முடிந்தது. என் தாய் ரம்யாவை பார்த்துகொண்டாள்.

காலம் வேகமாக சுழன்றது. திருமணமாகி ஆறு மாதங்கள் ஓடிவிட்டது.

அன்று நான் அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். புழக்கடையில் கீதா வாந்தியெடுத்துக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்று,” கீதா என்னாச்சு, உடம்பு எதுவும் சரியில்லையா? லீவு வேணா போட்டுடேன்” என்று கூறினேன். அதற்குள் என் தாய், அவள் நாடியைப் பார்த்து, “டேய் நீ அப்பாவாகப் போறே, கீதா முழுகாம இருக்கா” என்று சந்தோஷத்தில் குதித்தாள். நான் கீதாவைப் பார்த்தேன். அவள் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. எப்படி இது சாத்தியம், மிகவும் பாதுகாப்பாகத்தான் இருந்தோம். நாங்கள் இருவரும் ஒரளவிற்கு செட்டில் ஆகும்வரை எங்களுக்குள் குழந்தை வேண்டாம் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தோம். கீதா என்னருகில் வந்து, “என்னங்க இப்ப என்ன பண்றது? நான் அப்பவே சொன்னேன் நீங்க கேட்கலை,” என்று புலம்ப ஆரம்பித்தாள். “கீதா இது நம்ம கையில இல்லை, கடவுளா பாத்து நமக்கு இந்த குழந்தையை குடுத்திருக்கான், அதனால வருத்தப்பட எதுவுமில்லை” என்று அவளை ஒருவாரூ சமாதானப்படுத்தினேன். பிறகு, அவளை எனக்குத் தெரிந்த பெண் டாக்டரிடம் அழைத்து சென்றேன். குழ்ந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது என்று டாக்டர் பல மருந்துகளையும், கூடவே சில நிபந்தனைகளையும் வழங்கினாள்.

“கீதா னீ உங்க ஆஃபீசில் லீவ் சொல்லிடு, வேளா வேளைக்கு ஒழுங்காக சாப்பிடு, எதைப்பற்றியும் கவலைப்படாதே என்று நான் சொன்னது அவள் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை, இருந்தும் தலையை ஆட்டினாள்.

அடுத்த நாளில் இருந்து, அனைத்து வேலைகளையும் அம்மாவே செய்தாள். கீதாவிற்கு ராஜ மாரியாதை. நானும் அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு அம்மவுக்கு உதவி செய்தேன். அன்று இரவு. கீதா என்னிடம், இளங்கோ நமக்கு இந்த குழந்தை வேண்டுமா? என்றதும், “உனக்கு என்ன பைத்தியமா?ஏன் இப்படி உன்னுடைய புத்தி போகிறது?” என்று கடிந்து கொண்டேன்.

கீதா அத பிறகு எதுவும் பேசவில்லை. தூங்கிவிட்டாள். எனக்குத்தான் தூக்கம் வரவில்லை. என் அம்மா அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சொன்ன போது அவள் முகத்தில் சந்தோஷம் இல்லை. இப்போது இப்படி கேட்கிறாள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் அவள் இப்படி இருக்கிறாள் என்ற கேள்வி என்னை குடைந்தது. பின்பு எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

திடீரென ஒரு நாள் என்னுடைய அலுவலகத்திற்கு ஒரு போன் வந்தது. வரவேற்பாளர் சுமதி, “சார் உங்க வீட்லேர்ந்து போன்” என்று கூற நான் போனை எடுத்தேன். மறுமுனையில் என் அம்மா, “டேய் இளங்கோ, கீதா வயித்த வலியால துடிக்கிறா சீக்கிறம் வீட்டுக்கு வாடா என்று பதறினாள்.

நான் அவசர அவசரமாக லீவ் சொல்லிவிட்டு, வீடு நோக்கி விரைந்தேன். அம்மா வசலிலேயே பதட்டமாய் நின்றிருந்தாள். “என்னம்மா ஆச்சு, காலைல நல்லாத் தானே இருந்தா? என்று வீட்டினுள் நுழைந்தேன்.

“கீதா வா ஆஸ்பத்திருக்கு போகலாம், என்ன பண்ணுது உடம்புக்கு” என்ற கேள்வ்க்கு அவளிடம் பதிலில்லை. ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, டாக்டர் என்னை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு கதவை மூடிக்கொண்டார். “என்னப்பா ஆச்சு அம்மாவுக்கு” ஏன்ற ரம்யாவின் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

டாக்டர் என்னை அழைத்தார், “மனசை தேத்திக்குங்க உங்க மனைவிக்கு அபார்ஷன் ஆகிவிட்டது” என்றதும் எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்து, மயக்கம் வருவது போல் இருந்தது.

“எப்படி இது நடந்தது டாக்டர்?” என்று வாய் குழற கேட்ட போது டாக்டர், “அவங்க சாப்பிட்ட ஏதோவொண்ணு தானி இதுக்கு காரணம், அவங்க கிட்ட நிதானமாக கேளுங்க என்றார்.

அன்று இரவு, ரம்யா அவள் பாட்டியினருகே படுத்து உறங்கி விட்டாள். நான் கதவை தாழிட்டு கீதாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டேன். பின்பு, “கீதா உனக்கு வருத்தமா இல்லையா, உண்மையை சொல் என்ன நடந்தது என்று அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்து கேட்டேன். அவளால் என் கண்களை சந்திக்க முடியவில்லை. கீதா அமைதியாக இருந்தாள். அவள் அழுத்தக்காரி, எனக்குத்தெரியும். ஆனால் நான் அவளை உண்மையை சொல்லுவரை விடுவதாக இல்லை.

“கீதா, நீ என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறாய்.., உன் மௌனம் என்னை கொல்கிறது. என்ன செய்தாய் என் குழந்தையை” என்றதும் அவள் உடைந்து என் மடியில் விழுந்து அழத் தொடங்கினாள். பின்பு, “என்னை மன்னித்து விடுங்கள் இளங்கோ, எனக்கு இந்த குழந்தையை பெற்றுக்கொள்வதில் விருப்பமில்லை, அதனால் தான் இப்படி செய்தேன்” என்று அழுதுகொண்டே கூறினாள்.

எனக்கு அவளை பார்க்கவே அர்வருப்பாக இருந்தது. ஒரு உயிரைக் கொல்லும் அளவுக்கு அவளுக்கு எப்படி மனம் வந்தது.

“ஏன் இப்படி செய்தாய் கீதா? நீ செய்தது துரோகம்” என்று கண்கள் சிவக்க அவளிடம் கேட்டேன். அவள் கூறிய காரணம் என்னை மேலும் வெறி ஏற்றியது.

“ரம்யாவை கருத்தில் கொண்டுதான் நான் இப்படி செய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி அழுதாள்.

]”உனக்கு மன்ன்ப்பே கிடையாது கீதா, நான் ரம்யாவை இதுவரை என் குழந்தையாகத்தான் கருதுகிறேன். இனிமேலும் அப்படித்தான் இருப்பேன். ஆனால் நீ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.” என்று சொல்லி அங்கிருக்க மனமில்லாமல் அறையை விட்டு வெளியில் வந்தேன்.

ரம்யா என் அம்மாவின் மடியில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். நானும் அம்மாவின் அருகில் படுத்துக்கொண்டேன். அவள் கண்களில் கண்ணிர். “ஏம்மா அழறே?” என்று கேட்டவுடன், “தெரியும்பா நீ எவ்வளவு வேதனைப்படரேன்னு, மனசை தேட்திக்கோ” என்று என்னை தேற்றினாள்.

அதற்குமேல் அடக்க முடியாமல் நான் குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினேன்.

“அம்மா என் குழந்தையை அவ கொன்னுட்டா!, ரம்யாவிடம் நான் காட்டும் பரிவு போய்விடும்னு காரணம் சொல்றா! என்றதும், அம்மவும் சேர்ந்து அழுதாள்.

தூக்கம் முழித்த ரம்யா ”எம்பா அழறிங்க?” என்றதும் நான் கண்களை துடைத்துக்கொண்டு, அவளை வாரி அணத்துக்கொண்டேன்.

கிதாவுடன் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதில்லை என்றும், ரம்யாவுக்காக வாழ்வதென்றும் அன்று உறுதி பூண்டேன்.

3 thoughts on “கனவே கலையாதே

  1. நல்ல கதை என்பதால் சிறப்புக் கதையாக வந்துள்ளது. நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள் பார்த்தா.

  2. முதல் கதையா? நம்ப முடியவில்லை. அதவும் சிறப்புக் கதை என்கிற முத்திரையோடு. மேலும் மேலும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள் பார்த்தா.

    1. மிக்க நன்றி, உங்களை போல் மனமுவந்து பாராட்டுவார்கள் மிக அரிது – பார்த்தசாரதி, நங்கநல்லூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *