கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2013
பார்வையிட்டோர்: 10,201 
 

Злодеи : கொடியவர்கள்
மூலம் : மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ்
தமிழில் : மா. புகழேந்தி

1
அதிகாலையில், விடிவதற்கும் முன்னர், அந்தக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லோரும் துயில் எழுந்து, விளக்கேற்றி இருந்தனர். ஜன்னலுக்கு வெளியே இன்னும் இரவின் நீல நிறம் வானில் எஞ்சியிருந்தது, ஆனாலும் விடிவதை அறிவிக்க வெளுத்துக் கொண்டிருந்தது. குளிராக இருந்தது, அவளது முழு உடலும் நடுங்கியது, அவளிடம் ஆழ்ந்த சோகம் கப்பியிருந்தது. அதுதான் அவளை அதி காலையிலேயே எழுப்பி இருக்கக் கூடும்.

உணவறையில் காப்பி தயாரித்தாள், அதே நேரம் அவளது கணவன், மிஸ்டர் பிரென்ச், குளிரில் நடுங்கியபடி அக்கறையுடன் கஞ்சியிட்ட கழுத்துப் பட்டையை தனது சட்டையில் பொருத்திக் கொண்டான், கையில் பொத்தான்களைப் போட்டுக் கொண்டான்.

தட்டுக்கள் நகரும் ஒலியுடன், அவன் மனைவியின் கவலை கொண்ட குரல் அழைத்தது,” டாம்மி, காப்பி தயார்….”. கடந்த ஐந்து மணி நேரமாக அவளது குரல் வித்தியாசமாகவே இருந்தது.
அவனுக்கும் ஆயாசமாக இருந்தது, எதோ ஒன்று அவனது வயிற்றினை உறுத்திக் கொண்டிருந்தது. மூச்சு விட சிரமம் கொடுத்தது.

“சரி” கோபத்துடன், கத்தினான், கோபத்தைக் கட்டுப் படுத்த சிரமப் பட்டான். தனது கறுப்புக் கோட்டை எடுத்துக் கொண்டான். சுத்தமாக மழிக்கப் பட்டிருந்த அவனது முகம், அவனின் அறிவாற்றலையும் தகுதியையும் சொல்வதாக இருந்தது. உணவறைக்குச் சென்றான்.

அவன் மனைவி அவனை அச்சத்துடன் ஒரு நொடி பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள், எதோ வேலையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.

நேற்றும் அதற்கு முந்தைய நாளும் அவன் தனது நண்பர்களிடமும் மனிவியிடமும் தான் ஒரு மரண தண்டனை நிறைவேற்றும் நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டிருப்பதாக தற்பெருமை பொங்க அடிக்கடி குறிப்பிட்டிருந்தான். அது மீண்டும் அவனுள்ளே விழித்தெழுந்தது.

நீதியைப் போல இதுவும் தேவைதான் என்று அவனை முக்கியப்படுத்தியதால் நினைத்தான். சந்தேகத்திற்கு இடமின்றி அவன் தன்னை ஒரு முக்கியப் புள்ளியாக நினைத்துக் கொண்டான். ஆனால் அவன் மனிவியோ அச்சம் கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் விட அவனது உள்ளுணர்வு அதை ஒத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அவனது மனம் படாத பாடு படுத்தியதால் (உணவறையில் குளிர் இருந்தாலும் கூட) அவனது உடல் தேவைக்கும் அதிகாமாக நடுங்கியது. அவன் காப்பியைச் சுவைக்கவில்லை, குடித்தான், இயல்பாகக் காட்டிக் கொண்டான், அவன் மனைவி ஒன்றும் சொல்லவில்லை, எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது இளம் அழகிய முகம் வெளுத்திருந்தது ஏதோ காய்ச்சல் கண்டாவளைப் போலக் காணப்பட்டாள். அவள் உள்ளுக்குள்ளே உடைந்து போயிருந்தாள், இருந்தாலும் இருவரும் அமைதியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டனர்.

அவன் தனது காலுறைகளைக் கேட்டபோது, அவனைப் பார்த்துக் கேட்டாள், “டாம்மி, உங்களுக்கே இது நல்லா இருக்கா?” தேவை இல்லாமல் அவனை அவள் எரிச்சலூட்டியதால், வேண்டாத உணர்வு ஒன்று அவனுள்ளே கொழுந்து விட்டு எரிந்தது.
“அதனால் என்ன?” , தனது புருவத்தை உயர்த்திக் கொண்டு தோள்களைக் குலுக்கிய படி பதட்டமாகக் கேட்டான்.
“இப்பவும் உங்களாலே முடியலை. பயந்து போய் இருக்கீங்க” முனுமுனுத்தாள். அவளது உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது, வாய்விட்டுக் கதற நினைத்தாள், ஆனால் அடக்கிக் கொண்டாள்.
“சரி அது கடினம் தான்…. இதை ஏற்றுக் கொண்டால், கொலை காரர்களும் கொடியவர்களும் பரவாயில்லை என்று ஆகிவிடும். எப்படியோ, நாம் பொது மக்கள், பொதுப் பாதுகாப்பு என்பது தேவையா இல்லையா?”….இதைப் போன்ற சில வசனங்களை அவன் சிறிது நேரம் பேசினான். பேசியதால் சற்றே ஆறுதல் அடைந்தான். மீண்டும் அவனுள்ளே தான் ஒரு முக்கியப் புள்ளி என்ற நினைவு தலை தூக்கியது. பெருமையாக இந்தத் துயரமான வேலையைக்காணச் சென்றான்.

அவன் மனைவி அவனது கண்ணுள்ளே உற்று நோக்கினாள், தனது தலையை ஒப்புதலுக்காக அசைத்தாள், ஆனால் இதை அவள் தொடர்ந்து வாதாட விரும்பாததால் செய்ய வேண்டிவந்தது.
“என்னால என்ன செய்ய முடியும்”, தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

பக்கத்து அரங்கில் நாடகத்திற்காக வாங்கப் பட்ட அனுமதிச் சீட்டுக்கள், கதவருகே வந்த போது அவளுக்கு நினைவுக்கு வந்தது, ” டிக்கெட்டுகளை திருப்பி அனுப்ப வேண்டாமா? ”

“ஏன் … இந்த உலகத்தில இல்லாததா நடந்து போச்சு?”

“ஆமாம் சரிதான் “, மனைவியும் ஆமோதித்தாள்.

கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள், சோகமாக விரல்களில் நெட்டி எடுத்தாள்.

2

தெளிவாக விடிந்திருந்தது, வானில் வெண்மை பரவிக் கொண்டிருந்தது, இதமான ஈரப்பதம் காற்றில் மீதமிருந்தது. நடைபாதைகள், கம்பங்கள், ட்ராம் தண்டவாளம், சுவர்கள், மரங்கள் எல்லாவற்றிலும் ஈரத்தின் குறி தென்பட்டது. வாழ்க்கைச் சக்கரம் சுழல ஆரம்பித்து விட்டது. தூக்கக் கலக்கத்துடனும், குளிரின் நடுக்கத்துடனும் மக்கள் எல்லா இடங்களிலும் காணப் பட்டார்கள், ஏற்கனவே திறக்கப்பட்ட கடைகளில், ட்ராம் வண்டிகளில் , பேருந்துகளில் மற்றும் எல்லாஇடங்களிலும்.

காரில் ஏறிக்கொண்டான், அது இன்னும் மூடப்பட்டிருந்த ஜன்னல்களைக் கொண்ட வீடுகளைத் தாண்டிச் சென்றது. பெரிய நகரம் வழக்கமான தனது பரபரப்பான வேலைகளைத் தொடங்கி விட்டாலும், தொழிற்சாலையின் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தாலும், ட்ராம் வண்டியின் ஓசை வந்தாலும், நகரத்தில் பாதி வெறிச்சோடிக் கிடந்தது, அனேகமாக சில மக்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

அவனுடன் சில பெரிய மனிதர்கள் இருந்தார்கள், சாம்பல் நிறத்தில் தூக்கக் கலக்கத்தில் ஓர் அழகான பெண்ணும் இரண்டு இளைஞர்களும்.

இப்போது பெரும் பாரமாக அயர்ச்சியாக இருப்பதாக உணர்ந்தான். மயக்கம் வரும் போல் இருந்தது.

உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் வரவழைத்துக் கொண்டு கம்பீரமாக அந்த அழகியினைப் பார்த்தான். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் அறிந்திருக்க வில்லை தங்கள் முன்னே அமர்ந்திருப்பவன் சட்டத்தின் மேல் பொது மக்கள் நலனுக்காக உறுதிமொழி எடுத்துக் கொண்டவன் , அதனால் , நகரமே கொடூரமானவன் என்று வசை பாடிய ஒருவனின் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதைக் காண அழைக்கப் பட்டிருக்கிறான் என்று.

தான் முக்கியமானவன் என்று மீண்டும் அவன் நினைத்தான். அது அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது. பிற்பாடு அவன் கொலைகளின் பயங்கரத்தை விவரிக்க வேண்டியிருக்கும். அதே நேரம் ஓர் அழகிய இளம் பெண் அருகே இருந்ததால் உள்ளூர மகிழ்ந்தான், அவனுள்ளே ஆண்மை தன் குணத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அவளது அழகை அவன் ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவன் பார்வை அவளின் கண்கள், மார்பு, பொன்னிறக் கூந்தல் ஆகியவற்றின் மேல் படர்ந்தது. அவன் தான் எதற்காக எங்கே போகிறோம் என்பதையே மறந்து போனான். தன்னுடைய வேலை எது என்பதைத் திடீரென உணர்ந்தான். ஆனால் இப்போது அவனுக்கு அது ஒரு கவலை தரும் ஒன்றாக இருக்கவில்லை. பெண் அருகே இருப்பதனால் ஆண்களுக்கே உண்டான கர்வம் அவனுள்ளே தலைதூக்கியது. தன்னை ஒரு நாயகனாக நினைத்தான். அவன் விரும்பினால் அவளுக்கு அவன் மேல் ஓர் ஈர்ப்பினை உண்டாக்க முடியும் என்று நினைத்தான்.
கொடியவன் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப் படுவதைக் காண, தான் அழைக்கப்பட்டதை எண்ணி தைரியமாகவும் பெருமிதமாகவும் இருப்பதாகக் காட்டிக் கொண்டான். கார் நின்றது. அவன் நெஞ்சுக்குள் என்னவோ ஒன்று அடைத்துக் கொண்டது. எழுந்திருக்கச் சிரமப்பட்டான். எப்படியோ எழுந்து நின்றான். கடைசியாக ஒரு முறை தூங்கி வழிந்து கொண்டிருந்த அவளின் கண்களைப் பார்த்தான், வண்டியின் வெளியே வந்தான். அந்த இடத்தினைச் சுற்றிலும் பனியினால் ஈரமான மரங்களைக் கண்டான்.

3

“ஐந்திலிருந்து ஆறுக்குள் தான் நேரம் ” , வழக்குரைஞர் சொல்லிவிட்டு எழுந்தார். பன்னிரண்டு ஜுரிகளும் ஒரு மருத்துவர், மற்றும் ஒரு காவல் துறை அலுவலர், எல்லோரும் எழுந்து நின்றார்கள். முகங்கள் வெளுத்திருந்தன. அமைதியாக நின்றனர். அமைதியாக வழக்குரைஞரை நோக்கி பிரென்ச் முன்னேறினான். சிறையின் கூடம் வெறுமையாக இருந்தது. தண்டனை நிறைவேற்றப் படவேண்டிய தனி அறை அங்கே இருந்தது , அங்கு அமைதியாகவும் விளக்கு எரிந்து கொண்டும் இருந்தது. பெரிய பெரிய ஜன்னல்கள் முறுக்கப் பட்ட கம்பிகளுடன் அமைக்கப் பட்டிருந்தன. காலை ஒளியில் அறை குளிராகவும் வசதியற்றும் தெரிந்தது. சுவர்கள் சாம்பல் நிறத்தில் பூசப்பட்டிருந்தன. இருக்கைகள் கருப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப் பட்டிருந்தன.

தனக்கென ஒதுக்கப் பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தான் அது கடைசியில் இருந்து மூன்றாவதாக இருந்தது. அவனுக்கு நடுங்க ஆரம்பித்தது. காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தான். அறையின் மையத்தில் ஒரு நாற்காலி இடப்பட்டு இருந்தது.
எல்லா சாய்வு நாற்காலிகளைப் போலத்தான் இருந்தது, இருந்தாலும் அதன் எல்லாப் பக்கங்களில் இருந்தும் பட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. கைப்பிடிகளில் முதுகுப் புறத்தில் கால்ப்பகுதிகளில் என்று எல்லா இடங்களிலும். தலைக்கும் கால்ப்பகுதிக்கும் உலோகத் தப்பை இருந்தது. சாய்வு நாற்காலி மேல் இறுக்கிக் கட்டப் பட்டிருந்த வெள்ளைத் துணி அதற்கு சுகமற்ற தோற்றத்தைக் கொடுத்தது. ஏதோ ஓர் அறுவை சிகிச்சை மேசை போல அவனுக்குப் பட்டது.
ஓர் ஒப்பு நோக்கு அவனுக்குள்ளே தோன்றியது, “சரி இதுவும் ஓர் அறுவை சிகிச்சை தான் சமூகத்திற்கு வேண்டாதவர்களை நீக்குவது. ” அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

திடீரென கதவுகள் திறக்கப் படும் ஓசை கேட்டது. காலடிச் சத்தங்கள் தங்களை நோக்கி வருவதை அனைவரும் உணர்ந்தனர்.

எல்லோரும் எழுந்து நின்றார்கள். அவனால் எழ முடியவில்லை. அங்கு நின்றுதான் ஆகவேண்டும் உட்கார்ந்திருக்க முடியாது. அந்த ஒரு வினாடி முடிவே இல்லாமல் நீண்டு கொண்டு போனது, கடினமாக இருந்தது. திறந்திருந்த கதவுகள் வழியே இரண்டு காவலர்கள் நுழைந்தார்கள் உள்ளே வந்ததும் கதவருகே நின்று கொண்டனர்.

அவர்கள் பின்னே “அவன்” வந்தான். அனைவரின் கண்களும் அவன் மேல் நிலைத்திருந்தன. அவன் மரணதண்டனைக் கைதியாக இல்லாமல் போனால் மிக நேர்த்தியானவனாக இருந்திருப்பான். அவன் இளைஞன், உயரமானவன். அவன் மட்டும் உள்ளாடைகளுடன் இருந்தான் மற்றவர்கள் எல்லாம் கறுப்புக் கோட்டுக்குள் இருந்தனர். அதன் பிறகு பிரென்ச் தன் கண்களை அவன் மேலிருந்து எடுக்க வில்லை. தடுக்க முடியாத ஆர்வம் அவனை அந்த இளைஞனின் சிவந்த முகத்தைப் பார்க்கத் தூண்டியது. பார்க்கக் கடினமாக இருந்தது. ஆனால் விரைவில் சாகப் போகும் அவனது முகத்திலிருந்து வெளிப்படும் எந்த வித உணர்சிக் குறிப்பினையும் தவறவிடக் கூடாது என்ற ஆர்வமும் அவனுள்ளே இருந்தது. குற்றவாளி பெரிதாக எட்டு வைத்து நடந்து போனான், வெறுப்புடன் வெறித்துக் கொண்டு முன்னேறினான். கதவருகே தயங்கினான் , “இங்கே இங்கே ” என்று கூறினார்கள், பார்வையாளர்கள் கனத்த இதயத்துடனும் ஊற்றெடுக்கும் ஆசையிலும் தத்தளித்தார்கள். “இங்கே” அவனது மனதில் மின்னியது. குற்றவாளி அறையினுள் வந்தான். அவன் வருவது வித்தியாசமாக இருந்தது. ஜூரிகளை அவன் பார்த்தான், அவன் கண்கள் பிரென்ச்-இன் கண்களைச் சந்தித்தன. அந்த நேரத்தில் அவனுக்கு மரணதண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று தான் சொன்னது நினைவிற்கு வந்தது. பிரென்ச் கண்களைத் தாழ்த்திக் கொண்டான். உடல் முழுக்கக் குளிர் ஊடுருவியது.

அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. அனைத்து நடைமுறைகளும் முடிக்கப் பட்டன. ஒன்று மட்டுமே செய்யப் பட வேண்டும் ‘தண்டனை நிறைவேற்றம்’. அதாவது கொலை.

அந்த ஒரு நொடியில் நன்றாகத் தெரிந்தது, அவர்கள் பளபளக்கும் கறுப்புக் கோட்டுகளிலும் சீருடைகளிலும் இருக்கும் இருபது பேரும் சேர்ந்து ஒருவனைக் கொன்று விட்டார்கள், இன்னும் தனது உயிரோடிருக்கும் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் குற்றவாளியினை.

அதற்குப் பிறகு தண்டனை நிறைவேற்றப் படும் முன்வரை நடந்தவை அப்படி ஒன்றும் ஆச்சரியப் படக் கூடியவை அல்ல. இரண்டு சிறைக் காவலர்கள் அவனது இரு கைகளையும் தாங்கிக் கொண்டு நாற்காலிக்கு அழைத்து வந்தனர். உட்காரவைத்தனர். அவன் மறுக்காமல் அப்படியே செய்தான். குழப்பமுடன் சுற்றிலும் பார்த்தான். அவன் வசதிக்காகச் செய்வது போல் வெள்ளைப் பட்டைகள் கச்சிதமாக அவன் கை கால்களில் பொருத்தப் பட்டன. தண்டனை நிறைவேற்றுபவர்கள் சுற்றி நின்றதால் குற்றவாளி சரியாகத் தெரியவில்லை.

அவர்கள் விலகிய பின்பு குற்றவாளி தெளிவாகத் தெரிந்தான். பட்டைகளால் இறுக்கிக் கட்டப் பட்டதால் அவன் உருவம் இப்போது ஒல்லியாகத் தெரிந்தது. குற்றவாளி இப்போது நகர முடியாது. அவன் தலையைக் கூட அசைக்கமுடியாது. ஆனால் கண்களைச் சுழல விட்டான். எதையோ தேடினான்.

குற்றவாளியின் பின் இருந்து, யாருடையது என்று அடையாளம் காண முடியாத இரண்டு கைகள், அவனது தலையைத் தூக்கின. ஒரு உலோகத் தலைக்கவசத்தை அவனுக்கு கச்சிதமாக அணிவித்தன. கடைசியாக பிரென்ச் அவனது கண்களைப் பார்த்தான். அதன் பின் அவன் முழுதுமாக மறைக்கப் பட்டான். வித்தியாசமாகத் தலை முதல் கட்டுப் போடப்பட்ட யாரோ ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைப் போல இருந்தது. பிரென்ச்க்கு விளங்கியது, ‘இது தான் அவனது இறுதி நேரம், காணவே கூடாத, நம்ப முடியாத கொடூரத்தைக் காணப் போகிறோம். பிரென்ச் கண்களை மூடிக் கொண்டான். இருள் அவனைச் சூழ்ந்தது. ஆயாசமாக உணர்ந்தான், தலை சுற்றியது, உடல் நடுங்கியது. மயக்கம் வருவது போல் இருந்தது. சிலர் நகரும் ஓசைகளைக் கேட்டான், மெல்லிய சத்தத்தில் , கிசுகிசுப்பாக யாரோ சொல்வது கேட்டது. வெறியினாலும் அதனால் உந்தப் பட்ட ஆர்வத்தினாலும் அவன் தன் கண்களைத் திறந்தான். அறையின் நடுவில் தனிமையான நாற்காலி வெண் துணியால் மூடப்பட்டு பட்டைகளால் கட்டப் பட்டிருந்த ஓர் உடல். அவனைச் சுற்றி வெறுமையாக இருந்தது. கட்டப் பட்ட உடல் கொஞ்சம் கொஞ்சமாகத் துடித்துக் கொண்டிருந்தது. அதன் அசைவுகள் சிறிய அளவில் இருந்தன. நினைத்துப் பார்க்கவே முடியாத கொடுஞ்செயல் நடந்து கொண்டிருந்தது.
“போதும்” – மெல்லிய குரலில் யாரோ சொன்னார்கள். உடல் தொடர்ந்து துடித்தவாறு இருந்தது.

கொடுமையான சத்தம் எழுந்தது. எல்லோரும் இருக்கையிலிருந்து எழுந்தார்கள். எல்லோருக்கும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. திரைக்கு அருகில் யாரோ ஓடினார்கள்.
“கரண்ட்,கரண்ட்” -வழக்குரைஞரின் குரல் கேட்டது. என்னவோ ஒடிவது போலச் சத்தம். உடல் திருகிக் கொண்டிருந்தது. ஒரு பட்டை நழுவியிருந்தது.

பிரென்ச்சுக்கு நினைவு தப்புவது போல உணர்ந்தான். எரியும் முடியின் நாற்றம் அடித்தது. நடுக்கம் நின்றது.
-“போதும்” வெண் துணியால் போர்த்தப் பட்ட உடல் அசைவது நின்றது. பிணத்தின் அருகே கருப்பு மருத்துவர் வந்து தலையைத் தாழ்த்தினார்.
“எல்லாம் முடிந்தது” , பிரென்ச் நினைத்தான். காய்ச்சல் கண்டவனைப் போல சுற்றிலும் பார்த்தான்.
கடைசியில் உணர்ந்தான் “இது கொடூரம்.”

“அவன் உயிரோடிருக்கிறான்” திடீரெனப் பதட்டமான குரலில் மருத்துவர் கத்தினார்.

“ஐயோ அப்படி இருக்கக் கூடாதே.”

“கரண்ட் …கரண்ட் …சீக்கிரம்.”

பிரென்ச் எதிர்பாராததைக் காண நேர்ந்தான், கொடூரமானது பைத்தியக் காரத் தனமானது என்று அவன் மனதுள் எண்ணினான்.

உலோகத் தலைக் கவசம், நாற்காலியில் பிணைக்கப் பட்டுள்ளது, அதன் கீழிருந்து புகை வந்து கொண்டிருந்தது. எரியும் தசையின் நாற்றம் வயிற்றைப் புரட்டி வாந்தியைக் கொண்டுவந்தது.

கெட்டகனவு போல அறையினுள் புகைந்து கொண்டிருந்தது. யாரோ அவனின் கையைப் பற்றி நினைவுக்குக் கொண்டு வந்தனர்.

“எல்லாம் முடிந்தது. தண்டனை நிறைவேறியதற்கான சாட்சியாக கையெழுத்து போடுங்கள். ”

அவன் முட்டாள்த்தனமாக உடன்பட்டான். அசையாத உடலைப் பார்த்தான். மரணத்தின் அமைதியை ஏற்கனவே அது அறிவித்திருந்தது.

திரும்பும் போது வழியில் அவன் எதையும் பார்க்கவில்லை. யந்திரத் தனமாக நடந்து கொண்டான். முழு உடலும் வலித்தது. சுவை கொண்ட கனிகளைக் கூட அவன் ருசிக்கவில்லை. முக்கியமான மிகவும் கசப்பான ஒன்றை அவன் நினைவு கொள்ள வேண்டி இருந்தது. எதையேனும் அவன் கவனிக்காமல் விட்டிருந்தால் அவை முக்கியமற்றவையாகத் தானிருக்கும்.

நடந்தவைகள் எல்லாம் வழக்கமான நடைமுறைகள் தான்.
குற்றவாளி கொல்லப்பட்டான், அதற்கு அவனும் ஒரு காரணம். மரணம் கொடுமையானது, வலிமிகுந்தது. ஆனால் இங்கு நிறைவேற்றப் பட்ட தண்டனை அவ்வாறு தெரியவில்லை.
ஆனால் முடிவில் என்ன? ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது, இதை அவன் காணவில்லை என்றால் இதன் கொடுமைகளை அறிந்திருக்க மாட்டான் நினைவில் நிறுத்தி இருக்க மாட்டான்.

குற்றவாளியின் தலைக்கவசத்தை நீக்கியபோது, இறந்தவனின் கண்கள் திறந்திருந்தன. அவற்றில் உயிர் எஞ்சி இருந்தது. கடைசி முயற்சியாக நம்பிக்கையற்று உதவியைக் கெஞ்சிக் கொண்டிருந்தன.

அங்கு தான் அவன் அந்த உணர்ச்சியை உணர்ந்தான். மிருகத்தனமான ஆர்வத்துடன் அதையெல்லாம் கவனித்திருந்தான், அவன் மூளையில் அங்கு நடந்த அனைத்துக் கொடுமைகளும் ஓர் அசைவு கூடப் பிசகாமல் அழிக்கமுடியாத நினைவாகப் பதிந்து போனது.

– பெப்ரவரி 26, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *