நான் லீனியர் கதை (spoof story)
சிறுகதைக்கு முன் சில வார்த்தைகள்:
உங்களுக்கு ஒரு விஷயத்தில் முழு உரிமை வழங்கப்படுகிறது. ஐயோ இந்தக் கதையை நேற்று எந்த பத்தியோடு நிறுத்தினோம் என்று தெரியவில்லையே என்று குழம்பத் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் ஆரம்பித்து, எங்கு வேண்டுமானாலும் முடிக்கலாம்.
பிரார்த்தனை:
நள்ளிரவு நேரத்தில் சிறுகதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, யாருக்கேனும் தலைமுடியை பிய்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால், கரண்ட் கட் ஆகிவிட வேண்டும் கடவுளே. ஏனெனினில் என்னால் யார் தலையும் சொட்டையாகிவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்பதைத் தெள்ளத் தெளிவாக ஆணித்தரமாக கூறிக் கொள்ள விரும்புகிறேன் கடவுளே……
ஆலோசனை:
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே
அத்யாயம் : ….. : …… (தெரியாது)
– பகவத் கீதை
(எதற்காக இந்த ஆலோசனை என்று எனக்கே தெரியவில்லை. இருப்பினும் எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுதினேனோ என்னவோ?)
(1)
நான் லீனியர் கதை என்ற இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் வாசகரான நீங்கள் தலைமுடியை பிய்த்துக் கொள்ள முடியவில்லையே என உங்கள் சொட்டைத் தலையில் நறுக்…..நறுக்…..நறுக்…… என்று ரத்தம் வர கொட்டிக் கொண்டிருக்கலாம்.
அஜீரணம் ஆனதைப் போல் உணர்ந்து உவ்வேக்….. உவ்வேக்…. என்று வாந்தி எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும்போது எதிர்வீட்டு மசக்கையான பெண் உங்களை விநோதமாக சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்கலாம்.
தெருவில் சிவனேயென போய்க்கொண்டிருப்பவனை அழைத்து அவன் மண்டையில், மடார்…….மடார்……. என கட்டையால் அடிக்க வேண்டும் போல் தோன்றலாம்.
இயற்பியல் வாத்தியாரை துப்பாக்கி முனையில் இக்கதையை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதைப் போல் பகல் கனவு கண்டு கொண்டிருக்கலாம்.
அவர் படிக்கும் பொழுது தூங்கிவிடாமல் இருக்க அவருக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுத்துக் கொண்டிருக்கலாம். (கனவில்)
கண்ணீர்விட்டு கதறிக் கொண்டிருக்கும் அவரது கண்ணீரை உங்களது வெண்ணிற கைக்குட்டையால் துடைத்துவிட்டுக் கொண்டிருக்கலாம்.
உனக்கு துரோகம் இழைக்க நினைக்கும் உன் காதலிக்கு இக்கதையை பரிசளித்துக் கொண்டிருக்கலாம்.
அவளிடம் ‘நீ இக்கதையை பாதியில் நிறுத்திவிட்டால் நம் காதலே பொய்” எனக்கூறி அவள் படிப்பதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கலாம்.
பயங்கரமான கடல்மிருகம் (முதல் எழுத்து ‘சு’ கடைசி எழுத்து ‘றா’) பெயரைக் கொண்ட திரைப்படத்தில் நடித்த கதாநாயகனை பயங்கரமாக பழி வாங்குவதற்காக, இக்கதையை பிரதியெடுத்து நம்பியாரைப் போல் சிரித்துக் கொண்டே அவரது முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இக்கதையை படித்துவிட்டு அந்த கதாநாயகன் ஐ.சி.யூ.வில் துடித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டிருக்கலாம்.
மெலினா படம் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அந்த கதாநாயகியைப் போல் பழிவாங்கப்பட்டதாய் உணரலாம்…
மார்ட்டின் ஸ்கார்செசி, மணிரத்தினத்திடம் துணை இயக்குநராக திட்டுவாங்கிக் கொண்டிருப்பதைப் போல் கெட்ட கனவு கண்டு கொண்டிருக்கலாம்.
க்வென்டின் டராண்டினோ இதுபோன்ற ஒரு கொடூரத்தை தன் திரைப்படத்தில் கொண்டுவர முடியவில்லையே என ட்விட்டரில் வருத்தப்பட்டதை படித்துக் கொண்டிருக்கலாம்.
ஹீரோயினை வில்லன் கதறக் கதறக் கற்பழித்துக் கொண்டிருக்கும் பொழுது தியேட்டரில் அதீத குழப்பத்தில் இருக்கும் நீங்கள் ‘சூப்பரப்பு” என கவுண்டமனியைப் போல் முற்போக்குச் சிந்தனையுடன் கைதட்டியபடி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கலாம்.
கொடைக்கானலில் ஹேர்ப்பின் பெண்ட் வளைவுகளில் அதிவேகமாக வளைந்து கொண்டிருக்கும் பேருந்தில் அமர்ந்து கொண்டிருக்கும் நீங்கள், இது அப்படி ஒன்றும் அந்த கதையைப் போல் பயமுறுத்துவதாக இல்லை என்று தெம்புடன் கூறிக் கொண்டிருக்கலாம்.
ஒரு தூக்கு தண்டனை கைதிக்கு இக்கதையின் பிரதியை பரிசளித்துக் கொண்டிருக்கலாம்.
சிறையிலிருந்து தப்பித்த அந்த கைதி கொலை வெறியுடன் அடிபட்ட புலியை போல் உங்களை தேடிக் கொண்டிருக்கலாம்.
சொர்க்கத்தில் இறுதித் தீர்ப்பு நாளன்று
1. பருத்தி வீரன் கிளைமாக்ஸ் காட்சியை நூறுமுறை பார்ப்பது
2. நான் லீனியர் கதையை 3 முறை படிப்பது
3. எண்ணெய் சட்டியில் வறுபடுவது
இந்த மூன்று தண்டனையில் எதைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாய் என்று கடவுள் கேட்டு முடிப்பதற்கு முன், ஓடிச்சென்று எண்ணெய்ச் சட்டியில் நீ குதித்துக் கொண்டிருக்கலாம்.
அப்படி என்ன பருத்திவீரன் கிளைமாக்சிலும், நான் லீனியர் கதையிலும் இருக்கிறது என குழம்பிப் போன கடவுள், அவையிரண்டையும் முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு படபடப்பு தாங்க முடியாமல் மாரடைப்பு வர, அவரது உதவியாளர்கள் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவதை, நீ எண்ணெய் சட்டியில் வறுபட்டுக் கொண்டே ரசித்தபடி பார்த்துக் கொண்டிருக்கலாம்.
(அல்லது)
கடவுளும் ஓடிவந்து எண்ணெய்ச் சட்டிக்குள் சம்மர் சாட் அடித்தபடி குதிக்கலாம் உனக்குத் துணையாக
(அல்லது)
கடவுளும் இவ்வாறு கூறியிருக்கலாம் வாய்தவறி
‘கடவுளே என்னைக் காப்பாற்று”
(2)
பச்சிழம் குழந்தையின் செந்நிற பாதம்….. இமைக்கும் கண்ணிற்கும் இடையே ஏற்படும் மென்மையான உரசுதல்…. இளம் சாரல் வீச அதிகாலையில் நடைபயிற்சி…. காதலியிடம் காதலை சொல்லாமல் காதலுடன் கொடுக்கும் முதல் முத்தம்….. அவளின் அதிர்ச்சி கலந்த பார்வை…. ரோஜா இதழின் மென்மையை போன்ற இளங்காற்றின் பறக்கும் அவளது முடி….
என வெட்டி உணர்ச்சிகளால் நிரம்பிய இலக்கிய உலகத்தில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கும் கற்காலத்து செத்த மூளைகளுக்கு முற்போக்கு சிந்தனைகளையும், சர்ரியலிசத் தன்மைகளையும், பின்நவீனத்துவக் கோட்பாடுகளையும், வழங்குமாறு உந்தித்தள்ளும் கடமை உணர்ச்சிக்கு மதிப்பளித்து…..
அந்த வாய்ப்பைப் பெறுவது பற்றி…..
இர்ரிவர்சிபிள் என்னும் படத்தில் வரும் வன்கலவி காட்சியை இடது கையில் பாப்கார்ன் பக்கெட்டுடனும், வலது கையில் அப்சிந்த் அல்லது எல்.என்.டி. அல்லது மாரிஜுவானா என ஏதேனும் ஒரு போதை வஸ்துவுடனும்…
ஒப்புக்கொண்டால் உன் காதலி, அல்லது அவள் செருப்பால் அடிக்கும் பட்சத்தில், யாரேனும் ஒரு சாலையோரப் பெண்மணி, அல்லது அவள் காரித்துப்பிவிடும் பட்சத்தில் தன்னந்தனியாக,
(மனைவியிடம் மட்டும் வேண்டாம். அவள் எப்பொழுதும் பயங்கர ஆயுதங்களான சப்பாத்திக் கல், உலக்கை, வெண்கல தோசைக்கரண்டி, மிக முக்கியமக பெண்ணியம் பேசுதல் என ஏதேனும் ஒளித்து வைத்திருக்கலாம்)
ஐநாக்ஸ் தியேட்டரின் ஸ்கிரீன் 2 வில் அமர்ந்தபடி பாநூறு முறை பார்க்கும் பட்சத்தில்….
மேலும் அந்த வாய்ப்பை பெறுவது பற்றி…
அதிகாலை வேளை குளித்து முடித்துவிட்டு, மல்லிகைப் பூ போன்ற இட்லியில் மணக்கும் சாம்பாரை ஊற்றிவிட்டு டி.வி.டி. பிளேயரில் ‘இச்சீ த கில்லர்” படத்தின் முதல் காட்சியை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது… (நான் சாப்டேண்டா…. நான் சாப்டேன்)
மேலும் அந்த வாய்ப்பைப் பெறுவது பற்றி
ஆடிசன் என்னும் ஜப்பானிய திரைப்படத்தின் அருமையான திரைக்காட்சிகளை வீட்டில் இருக்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கூட்டி வைத்துக் கொண்டு அருமையாக போட்டுக் காண்பிக்கலாம்.
கோபப்பட்டு கொதித்தெழும் உங்கள் வீட்டு தாத்தா தன் கையில் வைத்திருக்கும் நீண்ட கம்பை உங்களை நோக்கி 100 கிலோமீட்டர் வேகத்தில் வெறியுடன் வீசலாம்.
உங்களுக்கான குறிப்பு : நீங்கள் குனிந்து கொள்ளலாம்
கோபப்படும் உங்கள் மனைவி தன் பார்வையாலேயே சிவனைப் போல் உங்களை எரிக்கலாம்
உங்களுக்கான குறிப்பு : வேறு வழியில்லை எரிந்து விடுங்கள். ஒன்றும் செய்ய முடியாது.
உங்கள் வீட்டு கோபமான சுட்டியான குழந்தை உங்கள் கையை நறுக்கென் கடித்து விடலாம்
உங்களுக்கான குறிப்பு : கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவிக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டு நாய் உங்கள் மேல் பாய்ந்து கடித்து, குதறி, பிராண்டி,……… அய்யோ
உங்களுக்கான குறிப்பு : தயவு செய்து மற்றும் கண்டிப்பாக தொப்புளை சுற்றி 40 ஊசிகளைப் போட்டுக் கொள்ளவும்.
மேலும் அந்த வாய்ப்பைப் பெறுவது குறித்து
வித்தியாசமாக இருப்பது :
பசியுடன் கதறிக் கொண்டிருக்கும் கைக்குழந்தைக்கென வைக்கப்பட்டிருக்கும் புட்டிப்பாலை, விருட்டென எடுத்து நிப்பிலைப் பிடுங்கி தூர எறிந்து விட்டு கடகடவென குடித்து விடுவது.
குழந்தையின் தாயால் விளக்கமாறு
குழந்தையின் தந்தையால் உருட்டுக் கட்டை
அன்பான பக்கத்து வீட்டு ஆண்கள் சைக்கிள் செயின், இரும்புக் கம்பி, செங்கற்கல், சோடாபாட்டில் மற்றும் பல்வேறு ஆயுதங்கள்
அன்பான பக்கத்து வீட்டு பெண்கள் குளிக்கும் மக்(பக்கத்து வீட்டுக்காரனுடையது), மஞ்சள் தேய்க்கும் கல், ஓட்டை விழுந்த பிளாஸ்டிக் குடம், செப்பல் (பிய்ந்து போனது மட்டும்) மற்றும் இதர பொருட்கள்
ஒருவேளை உயிருடன் இருந்தால் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் படுத்துக் கொண்டு பெருமை பட்டுக் கொள்ளலாம்.
எவனாவது……….. எவனாவது……….. ஒத்துக் கொள்ள மறுத்தால் அந்த பயங்கர கடல் மிருகத்தின் படத்தை கண்ணீர் மல்க பார்த்த காட்சியை 18 க்கு 10 சைசில் போட்டோ பிரிண்ட் எடுத்து வீட்டின் நடுவில் ஒட்டி வைத்துக் கொள்ளவும்.
சர்ரியலிசம், கியூபிசம், ரியாலிசம், எக்ஸ்டென்ஷியலிசம், மேஜிக் ரியாலிசம், நியோ ரியாலிசம் என எழுதி அழகாக அம்புக்குறியிட்டு அதன் பக்கத்தில் உங்கள் பெயரை எழுதி வைத்துக் கொள்ளவும்.
(3)
1. சர்ரியலிச வன்முறை பற்றி கூறுங்கள்?
மலைக்காடுகளுக்கு காவல் துறையில் உயரதிகாரியாக வேலைபார்க்கும் கணவனுடன் சுற்றுலா சென்றிருக்கும் பெண்ணாகிய உன்னை, பெரிய மீசை வைத்தபடி யாரேனும் கடத்திச் சென்று மலை உச்சிக்கு தூக்கிச்சென்று துப்பாக்கி முனையை உன் நெற்றியில் வைத்து சுட்டுக் கொல்ல எத்தனிக்கும் போது……
‘நீ ஒரு பாரதியின் பாடலை வேகமாக கூறியபடி அவனை எதிர்க்க வேண்டும்’
நன்றாக நியாபகம் வைத்துக் கொள், அது ஒரு பாரதியின் பாடல் வரிகள்.
நான் பாரதியின் வரிகளை பாடுகிறேன் என்று கூறிக் கொண்டு அச்சமில்லை, அச்சமில்லை என்று ஆரம்பிப்பாயானால் நானே தேடி வந்து உன்னை செருப்பால் அடிப்பேன்…… ஜாக்கிரதை…….
அந்தப் பாடல் வரிகளை யாரும் அவ்வளவாக அறிந்திருக்கக் கூடாது. இது மிக கண்டிப்பான குறிப்பு. உனக்கு மேலும் ஏதேனும் தெரிந்திருக்கும் பட்சத்தில், கலித்தொகையில் இருந்து கூட ஏதேனும் பாடலாம்…..
2. நீங்கள் கூறுவதற்கும் சர்ரியலிஸ வன்முறைக்கும் என்ன சம்பந்தம்?
கேள், உண்மையான வன்முறை என்பது, சுட்டுக் கொல்ல வந்தவன் பாரதியின் பாடல் வரிகளைக்கேட்டு விட்டு சுட்டுக் கொல்லாமல் நீ விட்ட அதே இடத்திலிருந்து அதே பாரதியின் பாடலைத் தொடருவது…. இது ஒரு செருப்பை வாயில் கவ்வக் கொடுத்து மறு செருப்பால் மண்டையில் மடார்….மடார்…. என்று அடிப்பதற்கு சமம். இது ஒரு நவீன வன்முறை. இதுவே சர்ரியலிச வன்முறை. யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, எனக்கும் பாரதிக்கும் இது நன்றாகப் புரியும்.
3. பாரதியின் கவிதைகள் சர்ரியலிசக் கவிதைகளா?
‘செருப்பால அடிப்பேன்’ என வினுச்சக்கரவர்த்தியின் குரலில், பாரதியின் உருவம் என்னைப் பார்த்து அந்த வார்தையை கூறியபோது நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. அதனால் இந்தக் கேள்விக்கு என்னுடைய பதில் மொளனம்.
4. எக்ஸ்டென்ஷியலிசம் என்றால் என்ன?
நீ காலையில் பல் துலக்கியதிலிருந்து, பாத்ரூம் போனது வரை அனைத்தைப் பற்றியும், பேசுவது, எழுதுவது, விவாதிப்பது.
5. சர்ரியலிச தன்மையுடன் ஒரு வார்த்தை ப்ளீஸ்?
போடி பொசக்கெட்டவளே
6. நீங்கள் ஒரு சர்ரியலிச எழுத்தாளரா?
5வது கேள்விக்குரிய பதிலே இதற்கும் பதில்
கேள்விகள் : லத்தின் அமெரிக்காவிலிருந்து
கடவுளே என்ன காப்பாத்து ………
ஐயோ முடியல யாராவது காப்பாத்துங்களேன்
இந்ந்த கொடுஐய பாக்கவா நான் இத படிச்சேன்
அய்ய்ய்யய்ய்யோ
………………………..:ப