ஓர் இரவுப்பொழுதில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 8,120 
 

அவனுக்கு அந்தப் பேருந்து நிலையம் புதிதல்ல. ஆனால், அவளுக்கு அந்தப்பேருந்து நிலையம் புதிது. அவள் அப்பேருந்து நிலைய நிழற்குடை ஒன்றில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அவனும் அவளுக்கு எதிர்த்தார்போல் இருந்த நிழற்குடையில் அமர்ந்துகொண்டிருந்தான். அவன் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தான். அவள் அதற்காக காத்திருக்கவில்லை என்று அவனுக்குத் தோன்றியது. கூடவே ஏதோ ஒரு பதற்றம் அவள் முகத்தில் தெரிந்தது. பேருந்தின் வருகையைக் கவனித்துக்கொண்டே அவளையும் இடையிடையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவளும் அப்படித்தான் அவனை அடிக்கடி பார்த்துக்கொண்டாள்.

தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் அவன். மணி, இரவு பத்தைத் தாண்டியிருந்தது. இந்நேரத்தில் எதற்காக இவள் தனிமையில் இருக்கிறாள் என்று யோசித்தான் அவன்.

எதற்காக இவன் இவ்வளவு நேரம் அந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறான் என்று யோசிக்கத் தொடங்கியிருந்தாள் அவள். கண்ணாடியை அடிக்கடி தனது வலக்கையால் தூக்கித் தூக்கி விட்டுக்கொண்டான் அவன். காற்றில் களைந்துப் பிரியும் ஒன்றிரண்டு முடிகளைத் தன் கைகளால் தள்ளிவிட்டுக்கொண்டாள் அவள்.

இருவருக்கும் ஒன்று அல்லது இரண்டு வயதுதான் வித்தியாசம் இருக்கும். உயரம், கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். அவனும் அவளைவிட அதிக உயரமாக இல்லை. அவளும் அவனைவிட அதிகம் குள்ளமானவளாகத் தெரியவில்லை.

முகத்தைப் பின்பக்கமாகத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்துகொண்டாள் அவள். அப்போதும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அப்போது ஒரு பேருந்து விர்ரென்று அவனைக் கடந்து போனது. துடித்து எழுந்தவன் தலையிலடித்துக் கொண்டான். இதோடு எப்படியும் அடுத்த பேருந்து அரைமணி நேரம் கழித்துத்தான் வரும் என்பதை நினைக்கும் போது அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

இயல்பாக அவள்மீது கோபம் உண்டானது அவனுக்கு. இருந்தாலும் அவளைக் கவனிப்பதை அவனால் நிறுத்திவிட முடியவில்லை.

அவன் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்தாள் அவள். இப்போது இரண்டுபேரும் எதேச்சையாக நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டனர். அந்தப் பார்வைகள் நீண்ட நேரம் நீடிக்காமல் நொடிப்பொழுதில் திசைதிரும்பின.

மீண்டும் அவள் பார்வைகள் அவனை நோக்கின. அவன் பார்வையும் அவளை நோக்குவதுபோல அவளுக்குத் தோன்றியது.

உடம்பெல்லாம் படபடத்தது அவளுக்கு. அவனுக்குள்ளும் ஏதோவொரு படபடப்பு. அவளிடம் போய்ப் பேசிவிடலாமா? என்றுகூட நினைத்தான் அவன். இருந்தாலும் அவளிடம் போவதற்கான துணிவு வரவில்லை அவனுக்கு. தான் இருக்கும் இடத்தில் அழுத்தமாக உட்கார்ந்துகொண்டான் அவன்.

அவளுக்கு செல்பேசியில் ஒரு அழைப்பு வந்தது. “என்னோட பிரண்ட்… மேன்ஷன்ல.. இருக்காப்பா… அவக்கூட தங்கிக்கிறன்… நாளைக்கி காலைல ஊருக்கு வந்துடுறன்…” போனைத் துண்டித்துவிட்டு மீண்டும் அவள் தோழியின் எண்ணிற்கு அழைத்தாள். இப்போதும் அந்தப் போன் சுவிட்ச்ஆப்பில் இருந்தது. அவளோடு இவள் தொடர்புகொண்டு எவ்வளவோ மாதங்கள் ஆகியிருந்தன. “அவசரத்திற்கு அவள் எண்ணிற்குத் தொடர்புகொண்டால்… சுவிட்ச்ஆப்பென்று வருகிறது. ஒருவேளை நம்பரை மாற்றிவிட்டு இருப்பாளோ! நமக்குத் தெரிந்து இந்த ஊரில் இருக்கும் ஒரே ஒருத்தி அவள்தான். அவளையும் தொடர்புகொள்ள முடியவில்லையே” என்று தலையிலடித்துக்கொண்டாள் அவள்.

பேருந்து நிலையத்திலும் தங்குவதற்கு அவளுக்கு அச்சமாக இருந்தது. பஸ்ஸைப் பிடித்து ஊருக்குப் போனாலும் நடு இரவில் போய் இறங்க வேண்டியிருக்கும். “பாவம்… அப்பா… பத்து கிலோமீட்டருக்கு மாங்கு மாங்கென்று சைக்கிளை மிதித்துக்கொண்டு வரவேண்டும்”. வீண் தொந்தரவு எதற்கு?.. எப்படியாவது இன்றைய இரவை இங்கேயே கழித்துவிட வேண்டுமென்று முடிவுசெய்துவிட்டாள் அவள்.

இப்போது பேருந்து வரும் திசையை நோக்கியிருந்தது அவன் பார்வை. அவள் தன் கைகளில் வைத்திருக்கும் உடமைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டிருந்தது. ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டும் நடந்துகொண்டும் செல்போனில் பேசிக்கொண்டும் இருந்தார்கள். அவளுக்கு யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. இந்நேரத்தில் தனியாக ஒரு பெண் இருக்கிறாள் என்பதை யாரேனும் தெரிந்துகொண்டால்…. நினைக்கும்போதே பயமாக இருந்தது அவளுக்கு. அதனாலேயே பதட்டப்படுவதைக் குறைத்துக்கொண்டாள். இப்போது மிகவும் சாந்தமாக இருந்தது அவள் முகம். ஆனாலும் மனசு அலைபாய்ந்தது. “ஏன் இந்தப் பேருந்து நிலையத்தத்திலேயே தங்கிவிட்டால் என்ன?” என்று தோன்றியது அவளுக்கு.

முதல் முதலாக வேலை தேடி முதல் இண்டர்வியூவிலேயே தோல்வியுற்று கடைசியாளாக அந்தக் கம்பெனியை விட்டு வெளியில் வரும்போதே அந்த நகரத்தின்மீது அதிருப்தி வந்து விட்டது அவளுக்கு. இதனால் அங்கு வசிக்கும் மனிதர்கள் மீதும் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை. எப்படியாவது இந்த ஊரைவிட்டுப் போய்விட வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே அவள் புத்தியில் இருந்தது.

தன் உடமைகள் அனைத்தையும் எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள் அவள். அந்தப் பேருந்து நிலையத்திலிருந்த சுவிட்ச்பாக்ஸ் ஒன்றில் மின்னூக்கியைப் போட்டுத் தன் செல்போனுக்குச் சார்ஜ் ஏற்றிக்கொண்டே அதிலிருக்கும் எண்களையும் நண்பர்களின் பெயர்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. அவனால் உட்காரவும் முடியவில்லை. நிற்கவும் முடியவில்லை. அடுத்த பேருந்து வருவதாகவும் தெரியவில்லை. “அந்தப் பஸ்ஸை ஏன் தவறவிட்டேன்” என்று தன்னைத் தானே நொந்துகொண்டவன் தன் பார்வையை அவள் பக்கம் திருப்பினான். அவனைப் பார்த்துக்கொண்டிருந்த அவள் தன் பார்வையைச் சட்டென வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டாள்.

அவன் அவளை மேலும் கூர்ந்து பார்த்தான். அவள் அந்த நகரத்துப் பெண்மாதிரி அவனுக்குத் தெரியவில்லை. எங்கோ கிராமத்திலிருந்து வேலைதேடி வந்திருக்கக் கூடும் என்று தோன்றியது அவனுக்கு. சரியாக யூகித்தவன், தன் பதட்டத்தைக் குறைத்துக்கொண்டு அவளிடம் சென்று பேசலாமென்று அவன் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்தான்.

ஃபேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டான். கையில் இருந்த பாட்டிலைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டான். கர்ச்சிப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். பேண்டின் பின்பக்கப் பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்து தலையை ஒழுங்குபடுத்திக்கொண்டான். செல்பியில் ஒருமுறைத் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டான். இப்போது அவளை நோக்கி அவன் கால்கள் நடக்கத் தொடங்கின.

அவளுக்கு அருகே போய் நின்றான் அவன். அவனைத் தன் ஓரக் கண்ணால் பார்த்த அவளுக்கு உடம்பெல்லாம் வெடவெடத்தது. இருந்தாலும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்துகொண்டிருந்தாள். அவனும் சற்றுநேரம் அவளருகில் மெளனமாக நின்றுகொண்டிருந்தான். மனதில் தோன்றிய பயத்தை வெளிப்படுத்தவில்லை அவள். நிதானமாகத் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு வேறொரு இருக்கையை நோக்கி நடப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் அவள்.

அவளுக்கு நேரெதிரில் நின்ற அவன், “ஹாய்” என்றான்.

அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

மீண்டும் “ஹாய்…ஹலோ” என்றான் அவன்.

இப்போது அவள்,

“யார் வேணும் உங்களுக்கு” என்றாள்.

“யாருமில்லை…உங்ககிட்ட பேசணும்” என்றான் அவன்.

“எங்கிட்டயா?… என்ன பேசணும்…..எங்கிட்டப் பேச நீங்க யாரு?….” என்றாள் அவள்.

“நான்…நான்…” என்றான் அவன்.

“கொஞ்சம் வழி விடுறீங்களா?…” என்று அவனை விலக்கிச் செல்ல முயன்றாள் அவள்.

“நில்லுங்க…உங்களுக்கு ஏதோ பிரச்சினை போல தோணுது… எங்கிட்ட சொல்லுங்க… என்னால முடிஞ்சா…உதவறன்…” என்று பம்மிக்கொண்டு நின்றான் அவன்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. வழியைவிடு என்பதுபோல் அவனை முறைத்துப் பார்த்தாள் அவள். ஆனாலும் அவளை விடுவதாய் இல்லை அவன். அவள் போகாதபடிக்கு வழியை மறித்துக்கொண்டவன், “என்ன பிரச்சினை…பணத்த தொலைச்சிட்டீங்களா? வீட்ல சண்டபோட்டுக்கிட்டு வந்துட்டீங்களா…சொல்லுங்க…நான் ஒரு பத்திரிகை ரிப்போர்ட்டர்.., என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்றன்…” என்று அவளைக் கெஞ்சும் தொணியில் கேட்டான் அவன்.

புறப்பட எழுந்தவள், அந்த இடத்திலேயே மீண்டும் உட்கார்ந்துகொண்டாள். அவனுக்கான பதிலை வருவிப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தாள் அவள்.

சுமார் பத்து நிமிடங்கள் அந்த இடத்திலேயே அவளுக்கு எதிரே நின்றிருந்தான் அவன். அவளும் பதில் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்துகொண்டிருந்தாள்.

நீண்டநேர மெளனத்திற்குப் பின்பு வாயைத் திறந்த அவள், “என் ஃப்ரண்டுக்காக வெயிட் பண்றன்” என்றாள்.

“அப்படியா… பாய்ப் ஃப்ரண்டா…கேர்ள் ஃப்ரண்டா…” என்று கிண்டலான தொணியில் அவளைக் கேட்டான் அவன்.

“இது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்..” என்ற பதில் வந்தது அவளிடமிருந்து.

அவள் பதிலில் நம்பிக்கையில்லாத அவன், “அவங்க எங்க இருந்து வர்றாங்க…” என்ற கேள்வியைக் கேட்டான்.

“எங்கியோ இருந்து வர்றாங்க…மிஸ்டர் உங்களுக்கு என்ன என்னப்பத்தி அதீத கவல… உங்க வேலையைப் பாத்துக்கிட்டுப் போவீங்களா…” என்று அவனுக்குத் தன் பதிலைக் கூறியவள், மீண்டும் அந்த இடத்தை விட்டு நகருவதற்கு முயற்சித்தாள்.

“ப்ளீஸ்… உங்க நல்லதுக்குத் தான் கேக்குறேன்… உண்மையாவே நீங்க உங்க ஃப்ரண்டுக்காகத் தான் வெயிட் பண்றீங்கன்னா… எனக்கு ஒன்னும் ஆட்சேபனையில்லை…ஆனா தேவையில்லாம இங்க அண்ட்டைம்ல இருக்குறது உங்களுக்கு நல்லது இல்லை… எங்கப் போகணுமோ அங்க சீக்கிரமா கெளம்பிப் போயிடுங்க…” என்று சொல்லிவிட்டு அவள் இருந்த இடத்தை விட்டு நகர முயற்சித்தான் அவன்.

அவன் சொன்ன வார்த்தையைக் கேட்ட அவளுக்கு திக்கென்றது. அவ்வளவு ஆபத்தானதா அந்த இடம் என்று எண்ணி முடிப்பதற்குள் அவன் பத்தடி தூரம் கடந்து போயிருந்தான். அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் கைகளைப் பிசைந்துகொண்டாள் அவள். சட்டென்று சுதாரித்துக்கொண்டு தன் கைகளைத் தட்டி அவனை அழைத்தாள் அவள். வேகமாகப் புறப்பட்டுப் போனவன் திரும்பி மெதுவாக வந்து அவளருகில் நின்றான்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “ஒன்னுமில்ல…ஒரு இண்டர்வியூவுக்காக இந்த ஊருக்கு வந்தேன்….நான்தான் கைடைசி ஆளு… அதனால நேரமாகிடுச்சி…இங்க எனக்குத் தெரிஞ்ச ஒரு ஃப்ரண்டு இருக்கா…ஆனா அவ எங்க இருக்கான்னு தெரியல….இந்த நேரத்துல ஊருக்கும் போகமுடியல…” என்று அடுக்காக கூறிவிட்டு அவனது அடையாள அட்டையைக் கேட்டாள் அவள்.

சற்றும் யோசிக்காமல் தனது அடையாள அட்டையை அவளிடம் நீட்டினான் அவன். அதில் ஒரு பிரபல வார இதழின் பெயரும் அவன் பெயர் மற்றும் முகவரியும் இருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் கொஞ்சம் சமாதானமானது அவள் மனம். இருந்தாலும் இவன் கூறுவதெல்லாம் பொய்யாக இருக்குமோ என்ற எண்ண அலைகள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தது அவளுக்கு.

இன்றைக்கு நாடு சென்றுகொண்டிருக்கும் போக்கில் இவனை நம்பிப் போவதும் ஆபத்து, இந்த இடத்தில் இருப்பதும் ஆபத்து என்று தோன்றியது அவளுக்கு. பிறகு என்னதான் செய்வது என்னும் கேள்வியும் தொக்கி நின்றது அவளிடம்.

இந்த இரவுப்பொழுதைக் கழிப்பதற்கான ஒரு இடத்தைத் தேடுகின்றாள் அவள் என்பதைப் புரிந்துகொண்ட அவன், “உங்களுக்கு எம்மேல நம்பிக்கை இருந்தா என் கூட வரலாம். நான் உங்களக் கட்டாயப்படுத்தல…, ஆனா இங்க மட்டும் இருக்காதீங்க…” என்று கூறிவிட்டு அவளை நேரெதிராகப் பார்த்தான் அவன்.

அவ்வளவு சீக்கிரம் தைரியம் வந்துவிடவில்லை அவளுக்கு. இருந்தாலும் வேறு மாற்றுவழிகளும் தெரியவில்லை. அதனால் அவன்கூட போகலாம் என்று முடிவெடுத்துவிட்டாள் அவள். அவனை அவளுக்கு நேராக வெளிச்சத்தில் வந்து நிற்கச் சொன்னாள் அவள். நின்றவனை முழுசாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டாள். அதை உடனே வேறொரு ஊரில் பணியாற்றிக்கொண்டிருக்கும் தனது தோழியின் மின்னஞ்சலுக்குப் பதிவேற்றம் செய்துவிட்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டாள் அவள்.

“என்னை எதுக்கு போட்டோ எடுத்தீங்க” – அவன் அவளிடம் கேட்டான்.

“எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான்” – என்று அவள் சொன்னாள்.

சிரிப்பு வந்துவிட்டது அவனுக்கு. அடக்கிக்கொண்டான்.

அவன் இடத்திற்குப் போகவேண்டிய பேருந்து அப்போது அவர்களை நெருங்கி வந்து நின்றது. அவளை அதில் ஏற்றிவிட்டு அவனும் ஏறிக்கொண்டான். அவள் மகளிர் இருக்கையில் உட்கார்ந்துகொள்ள, அவன் இருவருக்குமான பொது இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

அவளுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துக்கொண்டான் அவன். அடுத்த நிமிடமே ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள் அவள். மறுக்காமல் வாங்கிக்கொண்ட அவன், அவளுக்கான பேருந்துக் கட்டணம் போக மீதிப் பணத்தை அப்போதே அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.

அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிவிட்டார்கள். ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல், கேள்விகள் கேட்காமல், இயல்பாக, மெதுவாக நடந்துகொண்டிருந்தார்கள் அவர்கள்.

எதிரே ஒரு ஓட்டலில் வகைவகையான உணவுகள் தயாராகிக் கொண்டிருந்தன. சட்டென்று நின்ற அவள், ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“என்ன வேணும்” என்றான் அவன்.

“ஏதாவது” என்றாள் அவள்.

“வீட்ல சமச்சிக்கலாமே” என்று மென்மையாகச் சொன்னான் அவன்.

“நீங்க சமச்சிக்கோங்க, எனக்கு மட்டும் பார்சல் வாங்கிடுங்க” என்றாள் அவள்.

சற்று நேரத்தில் ஒரு பார்சலைக் கட்டிக் கொண்டுவந்து அவளிடம் நீட்டினான் அவன். இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். சற்று நேரத்தில் அவன் குடியிருக்கும் தெருவை நெருங்கியிருந்தார்கள் இருவரும்.

அந்தத் தெரு நிசப்தமாய் இருந்தது. ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.

அந்தத் தெருவில் தலைசாய்த்து தூங்கிக்கொண்டிருந்த நாய்கள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டன. அவள் அவைகளுக்குப் பயந்து பயந்து வளைந்தும் நெளிந்தும் அவனுக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்தாள்.

அவன் வாடகைக்கு இருக்கும் வீடு அந்தத் தெருவின் கடைசியில் இருந்தது. முதல் மாடியில் ஒரு மூலையில் சமையற்கட்டுடன் கூடிய ஒற்றை அறையைக் கொண்டது அந்த வீடு. அந்த அறைக்கு வெளியே நேரெதிராக சிறிய கழிவறை ஒன்று இருந்தது.

பைக்குள் இருந்த சாவியை எடுத்து கேட்டைத் திறந்துவிட்டு அவளை திரும்பிப் பார்த்தான் அவன். முன்பைவிட அவள் முகம் சற்று இறுக்கமாகியிருந்தது. அவள் கண்கள் உருண்டு சுழன்றுகொண்டிருந்தன.

அவள் பதட்டப்படுகிறாள் என்பதைப் புரிந்துகொண்டவனைப் போல், “பயப்படாதீங்க… வாங்க மேல போகலாம்” என்று ஒரு படியில் ஏறி நின்றுகொண்டு இரு கரங்களாலும் அவளை வரவேற்றான் அவன்.

அவள் தோழியை மனதோடு திட்டிக்கொண்டு படியில் ஏறத்தொடங்கினாள் அவள். அவள் மேலே போய்ச்சேர்வதற்குள் அந்த அறையைத் திறந்துவிட்டு வெளியில் நின்றுகொண்டிருந்தான் அவன்.

அவளும் உள்ளே போகாமல் வெளியிலேயே சற்று நேரம் நின்றுகொண்டு சுற்றியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டாள்.

அந்த வீட்டைச் சுற்றி நிறைய வீடுகள் இருந்தன. எல்லா வீட்டிலும் மக்கள் வசிக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ஒவ்வொரு வீட்டிலும் எரியும் இரவு நேர விளக்குகளும், வானொலி, தொலைக்காட்சி ஒலிகளும் சான்றளித்துக் கொண்டிருந்தன.

கொஞ்சம் சத்தமாக கத்தினால் போதும், எப்படியும் கூட்டம் கூடிவிடும் என்று தோன்றியது அவளுக்கு. இப்போது அவளுக்குள்ளேயே ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்றியது.

அவள் மட்டும் உள்ளே போனாள். அவன் வெளியிலேயே நின்றுகொண்டிருந்தான்.

அந்த அறை முழுவதும் புத்தகங்களும் செய்தித் தாள்களும் இறைந்து கிடந்தன. அவன் உடுத்திக்கொள்ளும் உடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக களைந்து கிடந்தன. படுக்கையில் போட்ட பாயும் தலையணையும் சுருட்டப்படாமல் அப்படியே இருந்தது. ஒரு சிறிய ரேடியோ பொட்டி அலமாரியில் வைக்கப்பட்டிருந்தது. அதன் சுவிட்சை ஆன் செய்துவிட்டு, பாயில் அமர்ந்துகொண்டாள் அவள். அவன் வெளியில் சூவைக் கழற்றிவிட்டு அங்கேயே உட்கார்ந்துகொண்டிருந்தான்.

படுக்கையறைக்குப் பக்கத்திலேயே இருந்த சமையலறைக்குப் போனாள் அவள். வாஷ் பேஷனில் ஒன்றிரண்டு பாத்திரங்கள் கழுவப்படாமல் பூசணம் பூத்துக் கிடந்தன. அவற்றைக் கழுவிப் போட்டுவிட்டு, கைகளைக் கழுவிக்கொண்டு பாலித்தீன் பையில் இருந்த பார்சலைப் பிரித்துவைத்து சாப்பிட்டுக்கொண்டே ரேடியோ அலைவரிசையைத் திருப்பிக்கொண்டிருந்தாள் அவள்.

மெதுவாக அந்த அறைக்குள்ளே வந்த அவன், களைந்து கிடந்த துணியில் சிலவற்றை எடுத்துக்கொண்டு எதிரே இருக்கும் கழிவறைக்குப் போனான். உடையை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தவன், கையில் இருந்த பேண்டையும் சட்டையும் வெளியில் இருந்த கொடியில் போட்டுவிட்டு கைக்கால்களை அலம்பிக்கொண்டு வீட்டிற்குள்ளே போனான்.

அப்போது அவள் சாப்பிட்டு முடித்து தன் பைக்குள் வைத்திருந்த பாட்டில் தண்ணீரைக் குடித்துக்கொண்டிருந்தாள்.

சமையலறையில் நின்றுகொண்டு, “ரூம் எப்படி இருக்கு” என்றான் அவன். “ஒரு ஆளுக்கு போதுமானதுதான்” என்ற அவள், “நீங்க மட்டும்தான இங்க இருக்கீங்க” என்றாள். “ஆமாம்…நான் மட்டும்தான்…இங்க அஞ்சி வருஷமா இருக்கேன்” என்றான் அவன்.

அவளிடம் பேசிக்கொண்டே ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு ஒரு மேகி பாக்கெட்டைக் கிழித்து அதில் கொட்டினான் அவன். சற்று நேரத்தில் ஒரு தட்டில் அதைப் போட்டுக் கொண்டு அவளுக்கு எதிராக வந்து அமர்ந்துகொண்டான்.

ரேடியோவில் இளையராஜாவின் இனிமையான பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதைக் கேட்டுக்கொண்டே மேகியை ருசித்துக்கொண்டிருந்தான் அவன். அவனுக்கு எதிரில் அமைதியாக சம்மணமிட்டு உட்கார்ந்து இருந்தாள் அவள்.

இனி இருவரும் பேசிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என்பது இருவருக்குமே வெளிச்சமாயிருந்தது. அதனால் அவள் படுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்தவன், ஒரு பெட்சீட்டையும் தலையணையும் எடுத்துக் கையில் வைத்துக்கொண்டான். பிறகு, அவளைப் பார்த்து “ஒகே, படுத்துக்கோங்க…காலைல எப்ப எழுப்பனாலும் நான் ரெடி” என்று அவளிடம் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி, மொட்டை மாடியின் ஒரு பகுதியில் பெட்சீட்டை விரித்துப் போட்டு படுத்துக்கொண்டான்.

கதவை சாத்தி தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு அந்த அறையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் வந்து படுத்துக்கொண்டாள் அவள். நீண்ட நேரம் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. தனக்காக வெளியில் பனிக்குளிரில் படுத்துக்கொண்ட அவனை நினைத்துப் பரிதாபப் பட்டாள் அவள். அவனை நினைக்கும்போது அவளுக்கு வியப்பாக இருந்தது. “ஒரு இரவுப் பொழுதில் தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு எந்தப் பங்கமும் விளைவிக்கும் எண்ணமில்லாமல் அடைக்கலம் கொடுத்துவிட்டு வெளியில் படுத்துக்கொண்டானே” இதுவும் கூட ஆம்பளைத் தனம்தான் என்றாள் அவள்.

தூங்குவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் அவளால் தூங்க முடியவில்லை. அந்த அறையில் மாட்டியிருந்த கடிகாரத்தில் சுற்றும் முள்ளின் ஓசை மட்டும் அவள் காதுகளில் துள்ளியமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

ஜீரோ வாட்ஸ் விளக்கொளியில் அந்த அறையே ஒரு குட்டி குகைபோன்று அவளுக்கு அழகாக தோன்றியது. இது புது அனுபவம் அவளுக்கு. ஏன் அவள் அளவில் இது ஒரு புரட்சி என்றுகூட கூறலாம். இந்த சந்தர்ப்பம் அவள் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத ஒன்று. யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத அனுபவம் என்றுகூட இவற்றைச் சொல்லிவிடலாம். இதைப் பகிர்ந்துகொண்டால் எத்தனை பேர் இதை உண்மையென்று ஏற்றுக்கொள்வார்கள். அப்படியே இதை உண்மையென்று அவள் முகத்திற்கு நேராக தலையாட்டிவிட்டுப் போனாலும், “எவங்கிட்டயோ போய் படுத்துட்டு வந்துட்டா அப்படினுத்தானே சொல்வார்கள்.” ஆகையால் இந்த நிகழ்வை அவளுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுதல் தானே இந்த சமூகத்தில் அவள் கற்பிற்குப் பாதுகாப்பு.

மீண்டும் இப்படியொரு வாய்ப்பு…..நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை… அவளால்.

மீண்டும் ஏதாவது ஒரு ஊருக்குப் போய் இப்படியொரு இக்கட்டான சூழல் வந்து இவனைப்போல ஒருத்தன் வந்து வெள்ளந்தியாக உதவுவானா? என்று தன் மனதைக் கேட்டுக்கொண்டாள் அவள். அது இல்லவே இல்லை என்றது. இனி எங்கு போனாலும் தன் அப்பாவைக் கூட்டிக் கொண்டு போய்விட வேண்டியதுதான். எதற்கு வீண் வம்பு என்று சொல்லிக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தாள் அவள். ஐந்தைப் பார்த்துக்கொண்டிருந்தது பெரிய முள்.

சட்டென்று படுக்கையைவிட்டு எழுந்தவள் முகத்தைக் கழுவிக்கொண்டாள். தன் ஆடைகளை சரிசெய்துகொண்டாள். தன் உடமைகள் அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டாள். அடுத்து அவனைக் கூப்பிடவேண்டும்.

தாழைத் திறந்து வெளியில் பார்த்தாள் அவள். கடுங்குளிர்க் காற்று அவளைத் தீண்டி சிலிர்க்கச் செய்தது. அந்தப் பனியில் சுருட்டிமடக்கிப் படுத்துக்கொண்டிருந்தான் அவன். மெதுவாகத் தன் விரல்களால் அவனைத் தீண்டினால் அவள். அடுத்த நொடியே எழுந்து அவளைப் பார்த்தவன் “என்ன கெளம்பிட்டீங்களா” என்றான் அவன்.

அவள் மெளமனாக இருந்தாள்.

வீட்டிற்குள் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்து விடிந்துவிட்டதை தெரிந்துகொண்டான் அவன். செட்டென்று பேண்டு சட்டையை மாட்டிக்கொண்டு பர்சை எடுத்து பாக்கெட்டில் சொருகிக் கொண்டு அவளோடு கிளம்பினான் அவன்.

காக்கைகளும் குருவிகளும் தங்கள் கூடுகளைவிட்டு சிறகசைத்துப் பறக்கத் தொடங்கியிருந்தன. அவைகளின் ஓசைகளுக்கு நடுவே அவர்கள் இருவரும் அமைதியாக நடந்துகொண்டிருந்தனர்.

ஒரு தேநீர்க்கடைக்கருகில் நின்றான் அவன். அவளும் அவனுக்கு அருகில் போய் நின்றாள். அடுத்த நிமிடம் ஒரு கப்பில் அவளுக்கு ஒரு டீயும், அவனுக்கு கண்ணாடிக் கிளாசில் ஒரு டீயும் வந்து சேர்ந்தது. அவனே காசு கொடுத்தான். அவள் ஏனோ அதற்கு அவனிடம் காசு கொடுக்கவில்லை. காசைக் கொடுத்து அவனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றுகூட அவள் நினைத்திருக்கலாம்.

மீண்டும் நடந்தார்கள் அவர்கள். பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தது.

அவள் சொன்னாள், “என்ன.. பஸ் மட்டும் ஏத்தி விடுங்க… நான் போய்க்கிறேன்” என்று. சரியென்பதுபோல் தலையசைத்தான் அவன்.

மீண்டும் “உங்க மொபைல் நம்பர்” என்றாள் அவள்.

“மொபைல் நம்பர்லாம் வேண்டாமே” என்று நாகரிகமாய்ச் சொன்னான் அவன்.

“உங்க முகவரி”

“அடுத்த மாசம் வீட்ட மாத்தப் போறேன்” என்றான் அவன்.

“அட்லீஸ்ட் உங்க ஆபீஸ் அட்ரஸ்” என்றாள் அவள்.

“நான் செய்யறது நிரந்தரமில்லாத வேலை…நாளைக்கே கூட வேறு ஒரு பத்திரிகைல நான் ஜாயின் பண்ணலாம்…” என்றான் அவன்.

அதற்கு மேல் அவள் அவனிடம் எதையும் கேட்க விரும்பவில்லை.

பேருந்து நிலையம் போகக் கூடிய பஸ் ஒன்று வந்து நின்றது அந்த நிறுத்தத்தில். அதில் அவளை ஏறிக்கொள்ளச் சொன்னான் அவன். சட்டென்று ஏறி வேகமாகப் போய் ஓரத்துச் சீட்டில் உட்கார்ந்துகொண்டு அவனையே பார்த்தாள் அவள். அவனும் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். கண்டக்டரின் விசிலைக் கேட்ட பேருந்து நகரத் தொடங்கியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவள் கழுத்து பின் பக்கமாகத் திரும்பியிருந்தது. அவள் கருவிழிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி முழுவதுமாக மறைந்துபோனான் அவன்.

சாலையைக் கடந்து வீடிற்குப் போனான் அவன். வீட்டில் எறிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்தவன் ரேடியோ பெட்டியின் பொத்தானை அழுத்திவிட்டு அதை எதேச்சையாகப் பார்த்தான், அதற்குக் கீழ் ஒரு சீட்டு வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தான் அவன். அதில் “முதலில் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் டைரியைப் படித்ததற்கு மன்னிக்கவும். அடுத்து, உங்களுக்குத் தெரியாத ரகசியத்தைத் தெரிந்துகொண்டதற்கும்”

“எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம் என்னவாக இருக்கும்” ஆவலாகப் படித்தான் அவன்.

“நேற்று இரவு நான் தவித்த அந்தப் பேருந்து நிலையத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சில கயவர்களால் சீரழித்து விடப்பட்ட பெண்ணைக் காப்பாற்றி… அவள் அப்பாவிடம் ஒப்படைத்து இருக்கிறீர்கள். அதைக் காவல்துறையும், பத்திரிகையும் மோப்பம் பிடித்துவிடாமல் மறைத்து அவள் வாழ்க்கைக்கு உதவி இருக்கிறீர்கள்” – கீழே விரிந்து கிடந்த டைரியைப் பார்த்தான் அவன். அந்த செய்தியைப் பதிவுசெய்திருந்த பக்கம் மட்டும் திறந்து கிடந்தது. உடனே அதைக் கிழித்து தூள்தூளாக்கி குப்பையில் எறிந்துவிட்டு, கடித்தத்தைத் தொடர்ந்தான்.

“இனிமேலும் பல நிர்பயாக்களும், வினோதினிகளும், வினுப்பிரியாக்களும், ஜெசியாக்களும் பாதிக்கப்படாமல் இருக்க உங்களைப் போன்ற மனிதர்கள் இந்த சமூகத்திற்குத் தேவையாய் இருக்கிறது. தொடருங்கள் உங்கள் சேவையை. நன்றி நண்பரே!” – என்று எழுதி முடித்திருந்தாள் அவள்.

அந்தக் கடிதத்தையும் கிழித்துப் போட்டுவிட்டு பத்திரிகை அலுவலகத்திற்குப் புறப்படத் தயாரானான் அவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *