ஒரு முடிவால் விடிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 9,790 
 
 

கதிரவன் அடி வானத்தைத் தழுவி மறைந்து கொண்டிருந்தான். பரந்து விரிந்து அமைதியில் இருந்தது கடற்கரை.பறவைகள் கூட்டம் கூட்டமாக தத்தமது உறைவிடங்கள் நாடிப் பறந்த வண்ணம் இருந்தன.அமைதியில் இதமாக தென்றல் வீசியபடி இருந்தது.

கடற்கரைமேட்டில் குழந்தையின் மேல் கையும்,விரிந்திருந்த நீர்ப்பரப்பின்மேல் பார்வையுமாக வதனி.கூர்ந்த பார்வை…….அகன்ற நெற்றி…அடர்ந்திருந்த கூந்தலை முடிந்துவிட்டிருந்தாள்……சாதாரண நூற்சேலையில் செக்க சிவந்த உடல் வாகு….. எந்நேரமும் கனவு காணும் அழகான கண்களில்……..அந்த சோகம்.

இவளிற்கு இந்த நிலை வந்திருக்க வேண்டாம்.எனக்குள் ஒரு முறை கூறிக் கொண்டேன்.பாழாய்ப் போன சமுதாயத்தின்மேல் கோபம் கோபமாய் சலிப்பும் வெறுப்புமாய் வந்தது.அவளது இந்த நிலைக்கு இந்த சிந்தனை யோட்டங்களும் நடைமுறைகளும் அல்லவா காரணம்.

நீண்ட நாட்களுக்கு பின்னால் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான், கிராமம் வந்திருந்த போது வதனியின் இந்த கோலம் பெரிதும் சித்திரவதை செய்தது.சிறுவயது முதலே ஒன்றாக ஓடியாடி இந்த மண்ணில் என்னுடன் வளர்ந்தவள்.என்னை விட இரு வயதுகள் மூத்தவள். அவளது அறிவும் அந்த அழகும்…..இரண்டு வருடங்களுக்கு முன்தான் அவளுக்கு திருமணமாகி இருந்தது. அவளது திருமணத்துக்குக் கூட நான் போகவில்லை. மோதலும் இரத்த களரியுமாக நாடிருந்த சூழ்நிலையில் நடந்த அந்த திருமண தினத்தன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்ட இளைஞர்களில் நானும் ஒருவனாக இருந்த நிலையில்……

இந்த இரு வருடங்களில் எத்தனையோ மாறுதல்கள்.வாழ்வே ஒரு மோதல்தான். தப்பிப் பிழைத்தால்தான்.

இந்த மோதல்களிற்குள் இன்னுமொரு மோதலாக தப்பிப் பிழைத்தலாக……நடந்து முடிந்து போன சம்பவங்கள்.இன்று மழை விட்டும் துவானம் விடாத நிலை.

மோதலும் அழிவுமாக போய் விட்டிருந்த கடந்த காலத்தின் ஒரு அவமானகரமான செயலாக, கணத்தில் படையினன் ஒருவனின் மிருக உணர்வுகளுக்கு பலியாகிப் போன வதனியின் கதை……இது யார் தவறு? அவளென்ன விரும்பியா இந்த தவறைச் செய்தாள்? நாதியற்ற சுழலில் வேலியே பயிரை மேய்ந்த கதையில் கருகிப் போனது யார் குற்றம்?

தியாகராஜன்…..அவன்தான் வதனியின் கணவன்.அம்மி மிரித்து அருந்ததி காட்டி “உயிருள்ளவரை என் கண்ணின் மணிபோல் காப்பேன்” என உறுதி கூறி கைப்பிடித்த பெண்மையை சோதனை நேர்ந்த இக்கட்டான சந்தப்பத்தில் ஆறுதலும் அரவணைப்பும் தந்து அன்பு செய்து காக்க வேண்டிய நேரத்தில், ஆண்மைத்தனத்தையே இழந்து “மானம் கெட்டவள் கற்பிழந்தவள்” என தூற்றிச் சென்று விட்ட பாவி. ஒரு குழந்தைக்கு தாயான வதனியின் நிலை என் நெஞ்சில் வேதனையைப் பெருக்கியது.ஏற்கனவே ஒரு மிருகத்தால் கொத்தி குதறப் பட்டிருந்த வதனியின் வேதனை தீருமுன்னரே இன்னுமோர் பேரிடி……கற்பு…….

கற்பு என்பது மனத்துடன் கூடுதலாக சம்பந்த பட்டிருக்க வேண்டுமே அன்றி, பெண்களை வெறுமனே அடக்கி ஒடுக்கும் கருது கோளாக இருக்கவே கூடாது.

“தியாகராஜன் ஏன் அவ்விதம் நடந்து கொண்டாய்?”

“ராஜேந்திரா நான் பாரதியல்லடா முற்போக்கு பேச…என் மனைவி இன்னொருத்தனால் கெடுக்கப் பட்டாள் என்னும் நினைப்புடன் அவளுடன் வாழ்வதென்பது என்னால் நினைக்கவே அருவருப்பாய் இருக்குறதடா”

“தியாகு…..வதனி என்ன வேண்டுமென்றா தவறிப் போனாள்.ஆறுதலும் அரவணைப்பும் தர வேண்டிய நீ இவ்விதம் போசலாமா?ஒரு கணம் குழந்தையை நினைத்துப் பாரேன்”

“ராஜேந்திரா,குழந்தையை நான் பொறுப்பேற்க தயார்…ஆனால் அதற்க்கு வதனி சம்மதிக்க மாட்டாள் என்று கேள்விப் பட்டேன்.நீயே நினைத்துப் பார் ரோட்டில் வதனியுடன் போகும் போது பின்னால் வாற குத்தல்களை ஏற்றுக்கொண்டு வாழ ஆண்மைக்கே இழுக்காகப் படவில்லையா……”

“ஆண்மைக்கே இழுக்கா…..ஆண்மைக்கு இழுக்கு அது இல்லையடா…உனது செயல்தான் ஆண்மைக்கே இழுக்கடா.”

உண்மையாகப் பார்க்கப் போனால் ஒரு விதத்தில் தியாகராஜனின் இந்த நடத்தைக்குக் காரணம் இந்த சமூகம் அல்லவா. இந்த சமுதாயம் இங்கு நிலவும் கோட்பாடுகள். இதனால் தானே தியாகராஜன் அவ்விதம் நடந்து கொள்கின்றான். அவனால் அவன் வாழும் சூழலையையும் மீற முடியவில்லை.அந்த சுழல் அவன்மேல் ஏற்படுத்திய பாதிப்பையும் மீற முடியவில்லை.

முன்னையைவிட இருள் கூடி இருந்தது.இதமான தென்றல் மட்டும் இதமாக வீசியபடி…….வதனி அருகில் இருந்த சிறு சிறு கற்களை கடலில் எறிந்து அதனால் ஏற்படும் வட்ட வட்டமாகப் பரவும் நீரலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழம்பி இருந்த என் நெஞ்சிலும் ஒரு வித தெளிவு.நானும் ஒரு முடிவு செய்து கொண்டேன்.தெளிவான ஆனால் உறுதியான முடிவு.என் முடிவை அவளுடம் கூறினேன்.ஒரு கணம் அவள் திகைத்துப் போனாள். சிறிது நேரம் அத்திகைப்பின் விளைவாக எழுந்த மெளனத்தில் மூழ்கிக் கிடந்தாள்.

“ராஜேந்திரா”……அவள் கண்கள் கலங்கின.அவளால் மேலே பேசவே முடியவில்லை.அவளால் என்ன பேச முடியும்?அவள் வாழ்ந்த சமூக அமைப்பு அப்படி.அவளோ மணமானவள்.ஒரு குழந்தை வேறு உள்ளவள்.இந்த இளம் வயதிலேயே வெறிமிருகம் ஒன்றால் கடித்து குதறப்பட்டு கணவானாலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பவள்.ஆனால் அவளும் ஒரு பெண் தான்.அவள் நெஞ்சிலும் உணர்வுகள் பொங்கத்தான் செய்யும் என்பதை இச்சமுதாயம் என்ன நினைத்துப் பார்த்தா தீர்ப்பு சொல்லப் போகின்றது?.

எனக்கு இவளுக்கும் இடையில் இப்படி ஒரு தொடர்பு இருப்பதை அறிந்தால் ஊரவர்கள் என்ன அம்மா,உறவினர்கள் காறித் துப்ப மாட்டார்களா?காம வெறி பிடித்தவள் அப்பாவிப் பொடியனை வளைத்துப் போட்டாள்-இவ்விதம் வாய்க்கு வந்தபடி அவளைத் திட்ட மாடார்களா?. ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்து கொண்டாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஒரு அறுபது வயதுக் கிழவன் பதினாறு வயதுச் சிறுமியை கலியாணம் செய்யலாம். ஒன்றில்லை இரண்டு மூன்று கள்ளத் திருமணங்கள் கூடச் செய்து கொள்ளலாம்.யாருமே கவலைப் படப் போவதில்லை.ஆனால் ஒரு பெண்…….அதிலும் வதனியைப் போல் அனாதரவான நிலையில் உள்ள பெண் ஒரே ஒரு முறையே வாழும் இந்த வாழ்வில் பெரும் பகுதியை துணையின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக உள்ளத்து உணர்வுகளைக் கொன்றடிக்கி துறவியாக வாழவேண்டும்.இதுதான் சமூக நியதி.

இவற்றை நான் உணர்ந்தேன். அதனால்தான் என் முடிவில் உறுதியாய் இருந்தேன்.ஆனால் வதனியோ அருகில் புற்றரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நோக்கினாள்.பரிதாபமாக என்னை நோக்கினாள்.

மீண்டும் நானே தொடர்ந்தேன்.”வதனி திருமணம் என்பது ஒருவரை ஒருவர் புரிந்து விளங்கி ஒன்று சேருவதுதான். ஆனால் தியாகராஜன் நடத்தை அவன் உங்களுக்கு ஏற்றவன் இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.என்னைப் பொறுத்தவரை உங்களது இந்த இக்கட்டான நேரத்தில் உங்களுக்குத்தேவை ஒரு துணை. பாதுகாப்பு தரக்கூடிய ஆதரவும் அன்பும் கலந்த துணை. அது சிறுவயது முதலே உங்களுடன் பழகி வளர்ந்த நானாக ஏன் இருக்கக்கூடாது?”

“ராஜேந்திரா,நீ இலேசாகக் கூறிவிட்டாய். ஆனால் இது எத்தனை பேரின் எதிர்ப்பை உருவாக்கும் தெரியுமா? உங்கம்மா….ஊரவர்கள்……எல்லோரும் என்னைத்தானே திட்டுவார்கள்.அவர் என்னைக் கைவிட்டது சரிதான் என்றல்லவா கூறுவார்கள். எனக்காக நீயேன் உன் வாழ்வை வீணாக்குகின்றாய்.என் வாழ்க்கையைப் பற்றி கவலைப் படும் பொறுப்பை என்னிடமே விட்டுவிடு”

இவ்விதம் கூறிய வதனி சிறிது நேரம் மெளனமாக இருந்தாள்.எல்லாவற்றையும் தாங்கித் தாங்கி அடங்கி விட்ட பெண்மையல்லவா பேசுகின்றது.ஆனால் நானோ……..என் முடிவில் உறுதியாய் இருந்தேன்.

“வதனி! அம்மாவை காலப் போக்கில் சமாதானப்படுத்த என்னால் முடியும்.நீங்கள் மட்டும் சரி என்று சொல்லுங்கள்.அது போதும் எனக்கு. உங்களை இந்நிலைக்கு தள்ளிவிட்ட சமூக கோட்பாடுகளை பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். நாமிருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் அதுவே போதும்”.

இவ்விதம் கூறியவன் அவள் கண்களை உற்று நோக்கினான்.அவளோ மெளனமாக எனது கண்களை உற்று நோக்கினாள்.அந்த மெளனத்தின் பொருளை நான் உணர்ந்து கொண்டேன்.அதில் பொங்கிய தூய உணர்வுகளை, அன்பினை காதலை, நம்பிக்கையை, நன்றியை நாம் உணர முடிந்தது.

“வதனி”….அவளை வாரி அனைத்துக் கொள்கின்றேன்.என் பிடிக்குள் தன்னை அடைக்கலமாக தன்னையே தந்த வதனி அந்த அணைப்பில் தன்னையே மறந்தாள்.அடிவானோ, கதிரவனின் முழுமையான இழப்பில் தழுவலில் சிலிர்த்து நாணிக் கிடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *