செல்வரத்தினம் தூக்கம் வராமற் புரண்டு படுத்தபோது,அவருக்குக் கொஞ்சம் தூரத்தில்,தனிக்கட்டிலில், சுருண்டு படுத்திருந்த அவரின் மனைவி சங்கரியில் அவரின் பார்வை தட்டுப்பட்டு நின்றது.
காலிற் காயத்துடன் படுத்திருக்கும் இவரின் கட்டிலில் படுத்திருந்தால்,அவருக்குச் சிரமமாகவிருக்கும் என்று, அவசர தேவைகளுக்காக வாங்கி வைத் திருந்த, ‘மடிக்கும் கட்டிலை’ விரித்துப் போட்டுக்கொண்டு அதில் படுத்திருக்கிறாள் சங்கரி.
இதுவரைத் தன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவளை அவர் விளங்கி; கொள்ளாதது போலவும்,அவள் சற்றுத் தூரமாக செல்வரத்தினத்திடமிருந்து விலகிப் படுக்கத் தொடங்கிய நாளிலிருந்து அவளைப் புரியத் தொடங்கியதுபோலவும் போன்ற ஒரு வித்தியாசத்தை அவர் உணர்கிறார்.
அவரின் நினைவில் ஒரு சுண்டிப்பு.அந்தச் சுண்டிப்பைத் தாண்டி,நித்திரை கொள்ளப் பிரயத்தனம் செய்தார்.
உடைந்த காலிற் போட்டிருந்த பிளாஸ்டருக்களாhல் தினவெடுத்துக் கடித்தது. சொறிய வேண்டும்போலிருந்தாலும்,பிளாஸ்டருக்குள்ளால் கைவிட்டுச் சொறிவது முடியாது என்று அவருக்குத் தெரியும்.
அவர் தனது கண்களை மூடிக்கொண்டார். பிளாஸ்டரால் மூடப்பட்டிருக்கும் அவரின் காலில் மட்டுமா சொறி?
செல்வரத்தினம் பெருமூச்சுடன் தனது நெஞ்சைத் தடவிக் கொண்டார்.
அவர் தனது மனைவியை இன்னொருதரம் உற்றுப் பார்த்தார்.
எவ்வளவு அமைதியான முகம் அவளுக்கு?அவளின் முகத்தை மட்டுமல்ல அவளை ஒரு முழுமையான பெண்ணாக அவர் எப்போதாவது பார்த்திருக்கிறாரா? அல்லது பார்க்கத்தான் முயற்சி செய்திருக்கிறாரா?
செல்வரத்தினத்தின் நினைவில் இன்னொரு சுண்டிப்பு.
‘எத்தனை ஒரு கணவர்கள்; தங்களுடைய மனைவியை முழுமையாக் உணர்த்திருப்பார்கள்’?
தங்கள் தேவைகளுக்கு மட்டும் பெண்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆண்வர்க்கத்தில் அவரும் ஒருத்தர் என்பதை-தான் ஒரு கணவன் என்ற பரிமாணத்துக்கப்பால் உணரத் தொடங்கிய அவரின் மனச்சாட்சியின் குற்ற உணர்வின் சுண்டிப்பை அவர் தெரிந்து கொண்டார்.
சங்கரி தன் கணவன் படும் மன உளைச்சலைத் தெரியாமல் நித்திரை கொள்கிறாள்.பொறுமையான பூமித்தாயின் மெல்லிய மூச்சிளையில் உலகம் உறங்க அவளும் அதில் ஒன்றியிருக்கிறாள்.அவள் முகத்தில் நிம்மதி.
தனது நித்திரையில்லாத் திண்டாட்டத்துக்கும் அவளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று தன்னைத் தானே சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.
சட்டென்று,ஏதோ ஒரு நரம்பு தாக்குப் பட்டதுபோன்ற வலி.உடைந்த காலில் விணுக் விணுக்கென்ற வலி தொடர்கிறது. உடைந்த எலும்பில் மட்டுமா வலி?
அவர் பழையபடி தன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் கேள்வி வட்டத்துள் நுழைகிறார்.
அவரின் காலில் உடைவு வரும் வரை, அவரின் உடம்பிலுள்ளு நரம்புகள், தசைகள்,எலும்புகள் என்னென்ன செய்கின்றன,இரத்தமும் தசையும் நரம்பும், உணர்வுகளும் பிணைந்த சிக்கலான அமைப்பில் ஒருத்தரின் உடல் இயங்குகிறது என்பது விரிவாக அவருக்குத் தெரியாது.
காலில் அடிபட்டு விழுந்தபோது அவரின் நினைவு தடுமாறிவிட்டது. முழுமையான சுய உணர்வு வந்தபோது அவருக்குத் தான் ஹாஸ்பிட்டலில்; இருப்பது தெரிந்தது.
யாரோ ஒரு அன்னிய மனிதனைப்போலத் தன்னையுணர்ந்தார். ஓரு காலில் நல்ல அடி, சிக்கலான முறிவு குணமாக மாதக்கணக்கான காலம் எடுக்கும் என்று டாக்டர் சொன்னார்.தோள்களிற் பட்ட காயம் அவ்வளவு பரவாயில்லை. வலது கையில் முறிவில்லை ஆனால் மணிக்கட்டில் காயம், வீங்கியிருக்கிறது. அது சரியாகும் வரைக்கும் வலது கரத்தைப்; பாவிப்பது கஷ்டம்.
அவரின் நிலை கண்டதும் சங்கரி பதறிப்போய்விட்டாள்.ஆறு பெருகுவதுபொல் அழுது கண்ணீர் விட்டுக் கதறினாள்.அந்த விபத்து நடக்கும்வரையும் யாரையும் எந்த உதவியும் கேட்காமல் வாழ்ந்த ‘சுயமை’ பிளாஸ்டரால் மூடப்பட்டு வலிமையிழந்த போதுதான், தனக்குள் ஒளிந்து கிடந்த வலிமையற்ற ‘செல்வரத்தினத்தை’ அவர் அடையாளம் கண்டார்.
‘உங்கள் நிலமை சரிவர மாதக்கணக்காகும் அதுவரைக்கும் ஹாஸ்பிட்டலில்; இருக்கத் தேவையில்லை. அடிக்கடி எக்ஸ்ரே எடுக்க வந்தால் மட்டும்போதும் மற்றப்படி நீங்கள் வீட்டில் றெஸ்ட் எடுக்கலாம்’
டாக்டர் உத்தியோக தோரணையுடன் செல்வரத்தினத்தின்; எதிர்காலத்தைக் காட்டினார். நினைவு தெரிந்த நாள் தொடக்கம் ஓடியாடித் திரிந்த உடல், இப்போது வீட்டில் என்னவென்று உடைந்த காலுடன் முடங்கிக் கிடப்பது?
சங்கரிக்கு இவர் ஹொஸ்பிட்டலில் தங்காமல் வீட்டில் றெஸ்ட் எடுப்பது ஓரளவு நிம்மதியாகவிருந்தது. இல்லா விட்டால்,காலையில் குழந்தைகளைப் பாடசாலைக்குக் கொண்டுபோய் விட்டதும், அதன் பின் அவசர அவசரமாகச் சமைத்துக் கொண்டு ஹொஸ்பிட்டலுக்கு ஒடவேண்டும்.
இப்போது செல்வரத்தினம் வீட்டோடு இருப்பது பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கிறது.
அவருக்கு நடந்த விபத்தால், அவர்களின் வாழ்க்கையில் நடந்த திடிர் திருப்பத்தால் தனது நாளாந்த வாழ்க்கை சிதறிப் போனதை அவரால் கிரகித்துக் கொள்ளச் சில நாட்கள் எடுத்தன. ஆனால் அவளோ சட்டென்று பல மாற்றங்களுக்கு முகம் கொடுக்கிறாள். வீpட்டுக்கான பல திட்டங்களை அமுல் நடத்துகிறாள். தேர்ச்சி பெற்ற நிர்வாகிபோல் எல்லாவற்றையும் பராமரிக்கிறாள் உலகத்தில் பெரும்பாலான பெண்களே பன்முகத் திறமை கொண்ட கெட்டிக்காரிகளா? ஓரே நேரத்தில் எத்தனை பிரச்சினைகளை சங்கரி சமாளிக்கிறாள்?
அவளுக்கு இப்படி ஒரு விபத்து வந்திருந்தால் அவரால் இப்படிச் சமாளிக்க முடியுமா? அவருக்குச் சமயலே தெரியாது. அவர் எப்போதாவது இருந்து லீவு எடுத்த கால கட்டத்தில்,குழந்தைகள் சரியான நேரத்திற்குப் பாடசாலைக்குப் போக வெளிக்கிடாவிட்டால் அவளிடம் அவர் சத்தம் போடுவார்.
அவள் பெரிதாகக் கோபப் பட்டதில்லை.இவரின் எதிர்பார்ப்புக்களை ஒரு இயந்திரம்போல் செய்து முடிக்கிறாள். அடிக்கடிவரும் சொந்தக்காரர்களுக்குப் பல வகையான சமையல்களைச் செய்து சமாளிப்பாள். பெரிதாக எதையும் ஒரு சுமையாக அவள் எடுத்துக் கொண்டதில்லை.
இன்று குழந்தைகளை மட்டுமல்ல,அவரையும் ஒரு குழந்தையாகப் பராமரிக்கிறாள் காலில் முறிவு காரணமாகப் படுத்த படுக்கையாக இருக்கும் கணவருக்குச் சாப்பாடு; தருவதிலிருந்து,மலசலம் போகும்போது துப்பரவாக்குவதிலிருந்து அத்தனை பணிகளையும் ஒரு தாயாயத், தாதியாயச் செய்கிறாள்.
இப்படியான பணியை அவர் தனது மனைவிக்குச் செய்வாரா?
செல்வரத்தினம் மெல்லமாக அசைந்து தன் தயைணையைத் தன் இடது கையாற் சரி செய்து கொள்கிறார்.
இதுவரையும் சங்கரி ஏதும் நோய் நொடி என்று படுத்திருந்தால் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அவள் அப்படிப் படுத்திருப்பது மிக மிக அருமையான விடயம்.
குழந்தை பிறந்திருந்தபோது அவள் ஏதோ முணு முணுக்க, இவர், ‘என்ன நீ மட்டும்தானா பிள்ளை பெற்றுக் கொண்டாய்? இது சாதாரணமாக நடக்கும் இயற்கையின் மாற்றங்களில் ஒன்று’ என்று விளக்கம் சொல்ல அவள் அதன் பின் தனது முணுமுணுபு;பைத் தவிர்த்துக் கொண்டு,தனது மவுனத்தில் தனது சோகத்தைப் புதைத்துக் கொண்டாள்..
வெளியில் இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு கார் கிறீச் என்று ஓடிய சப்ததத்தில் சங்கரி புரண்டு படுத்தாள். அவளின் பின்பக்கம் தலைமயிர் விரிந்த இடைவெளியில் அவளின் தாலி பாம்புபோல் அவள் கழுத்தில் பதுங்கி வளைந்து கிடக்கிறது.
அவளைச் செல்வரத்தினம் பெண்பார்க்க வந்த ஞாபகம் நினைவிற் தட்டுகிறது. வடக்கு லண்டன் கோயிலுக்கு அவர் போயிருந்தபோது அவளை அவர் முதற்தரம் கண்டார்.
வெள்ளிக் கிழமை பூசைக்குத் திரண்டு நின்ற தமிழ்ப் பக்திக் கூட்டத்தில் அவளுமொருத்தியாக அடக்கமாகத் தலை குனிந்து பூசைத்தட்டைத் தாங்கிக் கொண்டு நின்றிருந்தாள்.
கோவிலிற் பல பக்கங்களிலம் பல சிலைகள். அவளும் ஒரு சிலைபோல் பளிச்சென்றிருந்தாள்.கவர்ச்சியான இளம் தோற்றம். அவள் ஒருத்தரையும் நிமிர்ந்து பார்க்காமல் பூசையில் கவனம் செலுத்தியபோது அவர் அவளை எடைபோட்டார்.
‘பெட்டைகளுக்கு என்ன வேலை,தட்டத்தில் பழங்களையம் பூக்களையும் சுமந்து கொண்டு தங்களுக்கு ஒரு புருஷன் தேடக் கோயிலில விரதம் பிடிக்குதுகள்’ பக்கத்தில் நின்றிருந்த சினேகிதனின் கிண்டல் செல்வரத்தினத்துக்கு மிகவும் விரசமாகப் பட்டது.
‘உனக்குத் தெரிந்தா பெண்ணா அவள்?’ செல்வரத்தினத்தின் குரலிற் தொனித்த ஆத்திரத்தில் சினேகிதன் வெலவெலத்துப் போனான். அவளின் தோற்றமும் பவ்யமும் அவரைக் கவர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்த சினேகிதன்,
‘தெரிந்து கொள்ள விருப்பமா’?என்று மெல்லக் கேட்டான்.
முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் தனது மனத்தைப் பறிகொடுத்துப் பின் பரிதாப நிலைக்குப் போகவந்தாலும் என்ற பயத்தில்,’அப்படி ஒன்று மில்லை,சும்மா கேட்டன்’ என்று மழுப்பி விட்டார்.
ஆனாலும் சினேகிதன் மூலம் அவளைப் பற்றி விசாரித்து, அவளின் வீட்டார் அவளுக்கு வரப்போகும் மாப்பிள்ளைக்கு எவ்வளவு விலை கொடுக்கப் போகிறார்கள் என்றெல்லாம் விளக்கமாக விசாரித்த பின் அவர்கள்,சம்பிரதாய முறைப்படி பெண் பார்க்கப் போனார்கள்.
கோயிலிற் கண்ட பவ்யத்துடன்,குனிந்த தலை நிமிராமல், கையிற் பலகாரத் தட்டுடன் சங்கரி மாப்பிள்ளை வீட்டார் இருந்த ஹாலுக்குள் வந்தாள்.
வெளியிற் சரியான குளிர். இன்னும் பனியடிக்கத்; தொடங்கவில்லை.ஆனால், அவள் கொண்டு வந்த பலகாரத்தட்டதை மேசையில் வைத்தபோது அவள் நெற்றியில் வியர்வை முத்துக்களாகப் பளிச்சிட்டன. அவை அவளின் பயத்தின் அல்லது நாணத்தின் அடையாளங்கள் என்று புரிந்தது.
‘லண்டனுக்கு வந்து இப்பதான் ஆறுமாதம். கொம்பியுட்டர் படிக்கிறா’ அவளின் தமயன் வாயெல்லாம் பல்லாக இளித்தார்.
லண்டனிற் கல்யாண வயதைக் கடந்து,தாடி நரைக்கத் தொடங்கிய ஆண்களும், கல்யாணச் சந்தையில் ஒரு நல்ல சம்பந்தம் வர எத்தனையோ பிரயத்தனங்களைச் செய்யும் பல பெண்களும் இருக்கிறார்கள்.
ஆனால் லண்டனுக்கு வந்து ஆறுமாதத்துக் கிடையில் ஒரு சம்பந்தம் சங்கரிக்கு வந்ததைப் பார்த்துப் பலர் பொறாமைப் பட்டார்கள் (நாங்கள் தமிழர்கள்!).
‘டேய்,செல்வரத்தினம், கல்யாணமாகிக் கொஞ்ச காலத்துக்குக் கவனமாக இருக்கவேணும். இந்தப் பெண்களுக்கு இடம் கொடுத்தால்,தலையில ஏறிப் பரத நாட்டியமாடத் தொடங்கிடுவாளவை’
.சினேகிதனின் இந்தப் புத்திமதியோ என்னவோ, திருமணத்தின்பின், செல்வரத்தினம், சங்கரியிடம் தனது ‘ஆளுமையை’ விட்டுக் கொடுக்காமல் வாழப் பழகி விட்டார்.
லண்டன் தமிழர்களிடையே அவர்கள் மிகவும் கவுரமான தம்பதிகள். தங்களிடம் அதிகம் சீதனம் கேட்காமற் தன்னைத் திருமணம் செய்து கொண்ட செல்வரத்தினத்தில் சங்கரிக்கு நன்றிக் கடன் சேர்ந்த ஒரு மரியாதை. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.அவள் வாழ்க்கை மிகவும் சந்தோசமானது.
…..
பக்கத்து அறையில் சின்ன மகனின் சிணுங்கல் கேட்கிறது.அவள் இன்னொருதரம் புரண்டு படுத்தாள். குழந்தையின் சிணுங்கல்,பெரிய சத்தமான அழுகையாயத் தொடர்ந்தபோது,அவள் சட்டென்று எழுந்து பக்கத்து அறைக்குப்போகிறாள்.
தன்னைத் தாண்டிப் போகும் தனது மனைவியின் உருவத்தை மவுனமாப் பார்க்கிறார் செல்வரத்தினம். பலரின் தேவைகள் என்ற கடமைகளைச் செய்யப் பிறந்த இயந்திரமா அவள்?.
உலகமே இப்படியான பெண்களின் தன்னலமற்ற சேவையிற்தான் தங்கியிருக்கிறதா?
அழும் குழந்தையை ஆறுதல் செய்யும் அவளின் குரல் அவரையும் தாலாட்டுகிறது.
உடைந்த காலின் வேதனையில் அவர் முணுமுணுக்கும்போதும் அவள் குரலில் இதே விதமான அன்புத் தொனி இழைந்தோடும்.
‘கடவுள் ஏன் பெண்களைப் படைத்தார் தெரியுமா?’ அவரைப் பார்க்க வந்திருந்த ஒரு நண்பன் அவரைக்கேட்டான். சங்கரிp அவருக்குச் செய்யும் பணிவிடைகளை அவன் கவனித்திருக்கிறான். செல்வரத்தினத்தின் தாய் இலங்கையிலிருக்கிறாள் அவர் தனது வேதனையில் அம்மா என்று முனகும்போது,அவள் ஓடி வந்து ஆறுதல் கொடுக்கிறாள்.
அவர் காலுடைந்த வேதனையில் முனகிக் கொண்டு,கேள்வி கேட்ட நண்பனை விசித்திரமாகப் பார்த்தார்.
‘உலகத்தில் அன்பு தேடும் அத்தனைபேருக்கும் தான் ஒருத்தனால் ஓடியாடி நிறைவு செய்ய முடியாது என்றுதான் உனது மனைவிபோல தாய்மையுள்ள கோடிக்கணக்கான பெண்களைக் கடவுள்; படைத்தான் போலிருக்கிறது’ நண்பன் சிரித்தபடி சொன்னான்.
அவர் தன் நண்பன் சொன்னதை யோசித்துப் பார்த்தார்.
எனது தேவைகளகு;காக மட்டும் சங்கரியைப் ‘பாவித்துக் கொள்ளும் ஒர சராசரி மனிதனா நான்?’ நடுச் சாமத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டார். அவரின் சிந்தனை குழம்பியது.
மேற்கு நாடுகளில் பெரும்பாலோரின் வாழ்க்கை அவசரமாக ஓடிக்கொண்டிக்கிறது.
கல்யாணம்,வீடு,வாசல், குழந்தைகள், என்று பிரச்சினைகள் ஒவ்வொருநாளும் கூடிக்கொண்டே போகிறது.வாழ்க்கைப் பிரச்சனைகளின் சுமையால் வரும் கோப தாபங்களை அவள் தலையில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அவள் பொறுப்பில்லை. ஆனால் அவருக்கு அவள்தான் ஒரு சுமைதாங்கி,குப்பைக்கூடம்!
அவள் தன்னை நியாயப் படுத்த அவர் பெரும்பாலும் அதுவரை இடம் கொடுத்தது கிடையாது.’எனது வீடு,எனது உத்தியோகம்,எனது பிரச்சினைகள்,அதில் உனக்கு ஒரு பொறுப்பும் கிடையாது என்பதை அவர் சொல்லாமற் சொல்லி அவளை வதைத்ததை நினைக்க அவருக்கு வெட்கமாகவிருக்கிறது.
உலகம் அமைதியான அந்த நேரத்தில்,அவர் தன்னை,தன் மனைவியைப் புரிந்து கொள்ளாத அல்லது தெரிந்து கொள்ளாத ஒரு அன்னியனாக நினைத்து அளவிடுகிறார். மனம் கனப்பதுபோல் ,உடைந்த அவரின் காலும் வேதனைளில் கனக்கிறது. மெல்லமாகத் தன் காலை அசைத்த ஒரு கொஞ்சம் சுகமான பக்கத்தில் வைத்தார்.
கனமான அவரின் நினைவுகளை அவரால் அகற்ற முடியவில்லை. நித்திரை வரவில்லை.
பக்கத்து மேசையில் நிறையப் புத்தகங்கள். காலுடைவு காரணமாக வீட்டோடு இருக்கப்போகும் ஒரு சில மாதங்களைச் செலவளிக்கப் புத்தகங்களைச் சேமித்து அடுக்கி வைத்திருக்கிறாh.; அவற்றைப் படிக்கவும் மனமில்லை.
அந்தப் புத்தகங்களில்,இதுவரை அவரறிந்து கொள்ள முடியாத பல விடயங்களை அவர் படித்தறியலாம்.
ஆனால்த் தன்னைத் தானே அறிந்து கொள்ள இந்தப் புத்தகங்கள் தேவையா?
சங்கரி, அழுத குழந்தையை ஆறுதல் பண்ணித் தூங்க வைத்து விட்டு அவரருகே வருகிறாள்.அவர் நித்திரை கொள்ளாமலிருப்பது அவளுக்குச் சங்கடமாகவிருக்கிறு என்பதைச் சாடையாக உணர்ந்து கொண்டார்.
சில இரவுகளில் அவர் பலயோசனைகளுடன் குழம்பிப்போய்த் தூங்காமலிருக்கும்போது,அவருக்குத் தூக்கம் வர எதை நாடுவார் என்று அவளுக்குத் தெரியும்.
‘சங்கரி’ அவர் குரலில் மென்மை. அவள் அவர் பக்கத்தில் வந்து உட்மார்ந்தாள்.அவர் அவளின் கைகளை அன்புடன் தடவி அவளை அணைத்துக் கொள்கிறார்.
பக்கத்தில் அடுக்கி வைத்திருக்கும் பல புத்தகங்களில் தேட முடியாத ஒன்றை அவளிடம் தேடுகிறார் இதுவரையும் அவராற் கண்டு கொள்ளாமலிருந்த அவளின் முழமையை அவர் அறிய ஆவலாகவிருக்கிறார்.
அவர் கண்களில் பளிச்சிடும் ஆயிரக் கணக்கான கேள்விகளையும் பாவங்களையும் நித்திரைக் கலக்கத்திலிருக்கும் சங்கரியாற் புரிந்து கொள்ள முடியவில்லை.
முதற்தரம் தொடும் காதலியை அணைக்கும் வேகத்தில் அவளை இறுக்கியணைத்து முத்தமிடுகிறார்.
சங்கரிக்குத் தூக்கம் கலைந்து விட்டது.அவரை ஏறிட்டுப் பார்க்கிறாள்.
மெல்லமாக அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறாள்.
‘ இஞ்ச பாருங்கோ, கொஞ்ச நானைக்கு நீங்க பொறுமையாக இருக்கவேணும்,கால் சரியாகப் பொருந்தாட்டா,எவ்வளவு காலம் கட்டிலில கிடக்க வேணுமோ தெரியாது. உங்களுக்கு மூன்று மாதத்துக்கு மேல மெடிக்கல் லீவெடுத்தா முழுச்சம்பளம் கிடைக்காது. இப்பவே எத்தனையோ பிரச்சினைகள்’
சங்கரி என்ன சொல்கிறாள்?
செல்வரத்தினம் தன்னிடமிருந்து பிரிந்துபோகும் மனைவியை ஏறிட்டுப் பார்க்கிறார்.
அவர் இதுவரை அவளை எப்படிப் பாவித்தாரோ அதற்கு அப்பாலுள்ள ‘உலகத்தை’ அவள் அறிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ விரும்பவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என்ற உண்மை பல சம்மட்டிகளாக அவர் தலையில் அடிக்கிறது.
‘சங்கரி, நீ என்னவள், நாங்கள்,இரு உடல்கள் சேர்ந்து வாரிசுகள் படைக்கும் இயந்திரங்களல்ல. நீ எனது ஆத்மாவின்பாதி, நீ எனது சினேகிதி, அதை நான் சரியாக உனக்கு உணர்த்தத் தவறியதற்கு மன்னித்து விடு;, கால் அடிபட்டதால் எனக்குக் கிடைத்த அவகாசத்தில் எனது வாழ்க்கையை அலசிப் பார்க்கிறேன் எனது மனதிலிருந்த பல தடைகள் இன்றிலிருந்து கொஞ்சம் சொஞ்சமாகக் குறையப்போகிறது,நீயும் நானும் ஒரு புதிய பாதையை அமைப்போம்…’ அவர் இப்படி எத்தனையோ சொல்லத் துடிக்கிறார்.
சங்கரி தூரத்திற் போய்ப் படுத்துக் கொண்டாள்.அவள் இவ்வளவு காலமும் அவர் பக்கத்திற் படுத்திருந்தபோது அவளைப் புரிந்து கொள்ளாதவர்,அல்லது புரிந்து கொள்ள அக்கறைப் படாதவர். தனது உறவை அவளின் பார்வையில் வைத்து எடைபோடத் தெரியாதவர்,தூரத்தில் அவள் ஒதுங்கிப் படுக்கும்போது புரிய வைக்கத் துடிக்கிறார் .
அவர்கள் திருமணத்தின் ஏழுவருட காலம்,ஒவ்வொரு வினாடியும்,அவர் அவளிடம் வார்த்தைகளாற் சொல்லாத வளர்த்து விட்ட’அஞ்ஞானம்’,இன்று அவரைச் சூனியமாகப் பார்க்கிறது.
இன்று அவளுக்கு, அவர் அவளுடையவன் அவளின் ‘என்னவன்’ என்ற முழமையின் அர்த்தத்தைப் புரியவைக்க முயன்ற அவரது உண்மையான உணர்வை அவள் புரிந்து கொள்ளாதது அவராற் தாங்க முடியாமலிருக்கிறது.
இதுவரை காலமும் நடத்திய ‘இணைந்த’ வாழ்க்கையின் உண்மை சொருபம் அவரைத் திடுக்கிடப் பண்ணுகிறது.
அப்படி அவளை’அன்னியமாக’ நடத்திய தனது ஆண்மையை அவர் சபிக்கிறார்.
இரவு நீண்டு கொண்டு போகிறது.அவரின் கால் வலியும் மன வலியும் தாங்கமுடியாதிருக்கிறது.
(யாவும் கற்பனையே)
– பாரிஸ் முரசு பிரசுரம்-1993
நல்ல கதை ! சற்று அவர் மனைவியின் உணர்வுகளையும் விளக்கி இருக்கலாம் … கொஞ்சம் தைரியமாக … 🙂