பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். மெஜஸ்டிக் ரயில் நிலையத்திலேயே ஏறி அமர்ந்திருப்பார் போலும். தழையத் தழைய வேட்டி கட்டிய, ஏறக்குறைய முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர், எதிர் சீட்டில் சன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தார். கையில் ஒரு புத்தகம், மூன்றுபேர் அமர்வதற்கான அந்த இருக்கையில் அவர் மட்டுமே இருந்தார். மற்ற இருக்கைகளில் யாரேனும் ஓசூரில் ஏறலாம் அல்லது காலியாகவே இருக்கவும் சாத்தியமென்பதால், ராஜேஷ் தன் பெற்றோரை அவர்களது இருக்கையில் அமரச் செய்து, அவன் மட்டும் எதிரில் காலியாக இருந்த இருக்கையில், அந்த இளைஞரின் அருகிலமர்ந்தபடி மடியில் “லாப்டாப்’ பை வைத்துப் பார்க்க ஆரம்பித்தான்.
அந்த வயதானவர்களின் முகங்களில் இறுக்கமும் சோகமும் இழையோடுவதைப் போலத் தோன்றியதைக் கண்ட அந்த இளைஞருக்கு அவர்களிடம் பேச வேண்டும் போலத் தோன்றினாலும், ராஜேஷின் ஆணைப்படி அவர்கள் நடப்பதுபோல் தோற்றமளித்ததால், அந்த இளைஞர் அவர்களிடம் பேச்சுக் கொடுப்பதைத் தவிர்க்கும் கட்டாயத்தால், ஒரு புன்னகையுடன் நிறுத்திக் கொண்டு, தன்னுடைய புத்தக வாசிப்பில் கவனத்தைச் செலுத்தலானார்.
ரயிலில் விற்ற இட்லி வடைப் பொட்டலத்தை அவர்களுக்கு ராஜேஷ் வாங்கிக் கொடுத்து, அவர்கள் அதை உண்பதைப் பார்த்த இந்த இளைஞர், தனது பையிலிருந்து இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்துத் தானும் உண்டார்.
அந்த முதியவர்கள் யாரிடமும் பேசாமலேயே கண்களை மூடியபடி, உறங்குவதைப் போலவே அமர்ந்தபடியிருந்ததைக் கவனித்த அந்த இளைஞருக்கு, அவர்கள் ஏதொவொரு தாங்கொணா வருத்தத்திலிருப்பதாகத் தோன்றியதால், அவரும் மெüனமாகவே பயணத்தைத் தொடர வேண்டி இருந்தது. ராஜேஷ் மும்முரமாக அவனது கணினியிலிருந்து பார்வையை விலக்காமலேயே பயணம் செய்தான்.
மதியம் ஒரு மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்குள் வண்டி நுழையும்போதே அம்மூவரும் எழுந்து படியருகில் சென்றுவிட்டனர். ஆனால் அந்த இளைஞர் வண்டி நிற்கும் வரை எழுந்திருக்காமல் அமர்ந்திருந்தார்.
••••••
“நம்மவீடு’ என்ற அந்த முதியோர் இல்லம் ஒரு சிறு கிராமத்தின் அருகே இருந்தது. இல்லமும் அதைச் சுற்றியருந்த ஆரோக்கியமான சூழலும் மனதுக்கு மிக இதமும் இனிமையுமளிப்பனவாக இருந்தன.
மாலை நான்கு மணியளவில் அந்த இல்லத்துள் நுழைந்த டாக்சியிலிருந்து ராஜேஷும் பெற்றோரும் இறங்கினர்.
வரவேற்பறையிலிருந்து ஓர் இளைஞர் அவர்களை வரவேற்று அமரச் செய்து விசாரிக்கலானார்.
ராஜேஷ் அவரிடம், “”இவர்களை இந்த இல்லத்தில் சேர்க்க வந்திருக்கிறேன். உங்கள் இல்லம் சிறப்பாகச் செயல்படுகிறதென்று கேள்விப்பட்டிருப்பதால், பெங்களூரிலிலிருந்து இங்கே வந்திருக்கிறோம். நான் ஏற்கனவே சென்ற மாதம் இது பற்றிக் கடிதம் அனுப்பியிருந்தேன்” என்றான்.
அந்த இளைஞர், “”நான் இராமலிங்கம், இந்த இல்லத்தின் மேனேஜர். உங்கள் கடிதம் பற்றி எனக்குத் தெரியும். எங்கள் இல்லத் தலைவர் ஐந்து மணிக்கு வருவார். அதுவரை சற்றுக் காத்திருக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்” என்றார்.
“”அதுவரை இந்த இல்லத்தின் வசதிகளைச் சுற்றிப் பார்த்தறிய முடியுமா?” என்று ராஜேஷ் கேட்டவுடன், “”ஓ, நிச்சயமாக” என்றபடி, இராமலிங்கம் அவர்களை அழைத்துச் சென்றபடியே விளக்க ஆரம்பித்தார்.
“”எங்கள் இல்லத்தலைவர் ஆனந்தன் பிறவியிலேயே பெற்றோரை இழந்தவர். அநாதை இல்லத்தில் வளர்ந்து படித்து, கணினிப் பொறியியலில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறிய போது, அவருக்குச் சுவீடன் நாட்டிலிருந்து, அவருடைய திறமையை மதித்து, மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வருமானத்துடன் கூடிய வேலைக்கான உத்தரவும் கிடைத்தது. வேலையில் சேருவதற்கான பயணத்தைத் துவங்குவதற்கு முதல் நாள் கோவிலுக்குச் சென்றபோது, பெற்ற மக்களும் வசதிகளுமிருந்தும், கோவில் வாசலில் கையேந்தி நிற்கும் ஒரு பெற்றோர் இணையரைக் கண்டதில் மனம் வருந்தி, கிடைத்த வேலையை உதறி, உடனே இந்த இல்லத்தை அமைக்க உறுதி பூண்டு, கடந்த பத்து வருடங்களாக நடத்தி வருகிறார்.
இது பிரேயர் ஹால். காலையிலும் மாலையிலும் பஜனை உண்டு. இது நூலகம். பல நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறோம். இது இசை அறை. இனிய இசைக் குறுந் தகடுகளை வாங்கி வைத்திருக்கிறோம். வேண்டியவர்கள் வேண்டியதைப் போட்டு, கேட்டு மகிழலாம்.
இது சமையலறை மற்றும் டைனிங் ஹால். இல்லத்தைச் சுற்றியுள்ள தோட்டத்தில் விளைவிக்கும் காய், கீரை, கனிகளைக் கொண்டு, சிறந்த உணவு அளிக்கப்படுகிறது. தோட்டத்தில் என்னைப் போன்ற, இங்கு பணிபுரியும் அனைத்து இளைஞர்களும் வேலை செய்வார்கள். இங்கு தங்கும் முதியோர்களில், விருப்பமும் ஆரோக்கியமான உடல் நிலையும் உள்ளவர்கள் சிலர் எங்களுடன் துணைக்கு வருவதுமுண்டு.
அடிப்படை மருத்துவ வசதியுமுண்டு. இரண்டு இளம் டாக்டர்களும், நான்கு நர்ஸ்களும் இருக்கிறார்கள். அவசரத்துக்கு ஓர் ஆம்புலன்ஸ் வண்டியும் வைத்திருக்கிறோம்”
ராஜேஷுக்கு எல்லாம் திருப்தியாக இருந்தது. தன்னுடைய பெற்றோரைப் பற்றிய கவலையை அவன் மறக்குமளவுக்கு இந்த இல்லத்தில் வசதிகள். பெங்களூரிலிருந்து மாதமொருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகலாம். அவன் இராமலிங்கத்திடம் கேட்டான்:
“”நீங்கள் எத்தனை பேர் இங்கே வேலை செய்கிறீர்கள்? இங்கே எத்தனை பேர் தங்கியிருக்கிறார்கள்? எல்லாரிடத்தும் ஒரே மாதிரிக் கட்டணம்தான் வசூலிக்கிறீர்களா?”
இராமலிங்கம் புன்னகை நிறைந்த முகத்துடன், “”இங்கே தற்போது ஏறக்குறைய அறுபது முதியவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சேவை செய்ய ஆண்களும், பெண்களுமாக, மருத்துவர்கள் உட்பட, இருபது பேர் இருக்கிறோம். இங்கு சேவை செய்யும் நாங்களனைவரும் அப்பா, அம்மா முகமறியாது அனாதை இல்லங்களில் வளர்ந்தவர்கள், இங்கே சேவையில் ஈடுபட அது ஒன்று மட்டும்தான் தகுதி. ஏனெனில் பெற்றவர்களையே கண்டறியாத எங்களுக்குத் தான் பெற்றோர்களின் அருமை பெருமையைப் பற்றி நன்குணர்ந்து அவர்களைப் போற்ற முடியுமென்பது எங்கள் இல்லத் தலைவரின் உறுதியான கருத்து. அவர் இந்தச் சேவையைத் தொடங்குவதற்காகத்தான் கிடைத்த வேலையை ஒப்புக் கொள்ளவில்லை என்றறிந்த அந்த சுவீடன் நிறுவனம், அவருக்கு அவருடைய புராஜக்ட் வேலையை இங்கிருந்தபடியே செய்யும்படியான விதிவிலக்குடன் கூடிய அனுமதி கொடுத்ததுடன், மாதச் சம்பளத்தையும், பதவி உயர்வையும் கூடக் கொடுத்து ஆதரித்து வருகிறது. அவரது மொத்த ஊதியமும், வேறு பல நல்ல உள்ளங்களின் ஆதரவிலும் தான் ,இந்த இனிய இல்லம் வளர்கிறது”
ராஜேஷ், “”ஆனால் காப்புத் தொகையும், மாதாந்திரக் கட்டணமும் உண்டென்று எனக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்தில் இருந்ததே” என்று கேட்டான்.
இராமலிங்கம், “”பெற்றவர்களைக் காப்பாற்றும் வசதியிருந்தும், காப்பாற்ற மனமில்லாதவர்களிடம் மட்டும்தான் கட்டணம் வசூலிக்கிறோம். வசதியிருந்தும் மனமில்லாதவர்களுக்கு எல்லாம் பெற்றோர் உண்டு. ஆனால் எங்களைப் போன்ற மனமிருந்தும் வசதியில்லாதவர்களுக்குத்தான் பெற்றோர்கள் இல்லை” என்றதும், ராஜேஷுக்குச் சாட்டையடி கிடைத்ததைப் போல இருந்தது.
இராமலிங்கம் தொடர்ந்து, “”இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஓர் அனாதைச் சிறுவர் இல்லக் குழந்தைகளை, ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இங்கு வரவழைத்து, முதியவர்களிடம் சேர்ந்து பழகச் செய்கிறோம். அதனால், தாத்தா, பாட்டி உறவுகளும், பேரன் பேத்தி உறவுகளுமாக இங்கு ஆனந்தமாக இருப்பார்கள். அந்த இரண்டு நாட்களின் குழந்தைகளுக்கான செலவையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்” என்றார்.
அவர்கள் திரும்பவும் வரவேற்பறைக்கு வந்து சேர்ந்த சில நிமிடங்களில் அந்த இல்லத் தலைவர் வருவதைக் கண்டதும், ராஜேஷுக்கும் அவனுடைய பெற்றோருக்கும் பெரியதோர் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த இல்லத் தலைவர் கூட சிறிது அதிர்ச்சியுற்றார் எனலாம். இரயிலில் ஒன்றாகப் பயணம் செய்தவர்.
அவருடைய வருகையைக் கவனித்த ராஜேஷ், இராமலிங்கத்திடம் “”இவர்… இவருக்கு…” என்று இழுத்தான்.
“”ஆமாம். இவர்தான் இல்லத் தலைவர். பிறந்தது முதலே இருகால்களும் இல்லாதவர்”
அப்போதுதான் ராஜேஷ் நினைத்துப் பார்த்தான். இரயிலில் அவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே இல்லை. மட்டுமல்ல, அவர் இறங்கும் முன்னரே அவர் அமர்ந்திருந்ததாலும், அவரை நண்பர்கள் பெங்களூரில் தூக்கி அமர வைத்ததையோ, கோவையில் அவரைத் தூக்கிச் சக்கர நாற்காலியில் வைத்ததையோ அவனால் காண முடியாமல் போய்விட்டது.
சங்கர நாற்காலியில் புன்னகையுடன் கை கூப்பியபடி வந்த ஆனந்தன், “”வாருங்கள்” என்றழைத்தபடி வரவேற்று, இராமலிங்கத்திடம், “”இவர்களுக்கு இந்த இல்லம் பற்றியெல்லாம் கூறிவிட்டீர்களா?” என்று கேட்டபடி, ராஜேஷிடம், “”உங்களுக்குத் திருப்தியாக உள்ளதா? ” என்று கேட்டார்.
அதிர்ச்சியிலிருந்து விடுபடாத நிலையில், ராஜேஷ் தலையை மட்டும் அசைத்தான். “ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ். மாநிலத்தின் முதல் மாணவன். உயர்ந்த வேலையை ஒதுக்கித் தள்ளி எத்தனை முதியோர்களைத் தன் பெற்றோர்களாக நேசித்துச் சேவை செய்கிறான்? ஓடியாடி நடக்கவியலாதவன், இத்தனை பேரைக் காப்பாற்றும்போது, எல்லாம் இருந்தும் சொந்தப் பெற்றோரை வைத்துக் காப்பாற்றாத இழிவான என்னை என்ன செய்வது? இந்த மகத்தான மனிதனால் என் கர்வம் அடங்கி, மனமும் தெளிந்தது’ என்று தன்னை உணர்ந்தவனாகச் சற்றுநேரம் மெüனமாக இருந்தான்.
ஆனந்தனின் குரல் அவனைத் தட்டி எழுப்பியது. “”உங்களுக்குத் திருப்தியென்றால், மேற்கொண்டு ஆவன செய்யலாம்”
ராஜேஷ் ஆனந்தனிடம், “”என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் சேவையையும் நேரில் கண்டதில், இன்று என் மனம் நன்றாகத் தெளிந்துவிட்டது. இத்தனை பெற்றோர்களைக் காப்பாற்றுகின்ற உங்களிடம் என் பெற்றோரையும் காப்பாற்றும் பொறுப்பை நான் ஒப்படைக்கப் போவதில்லை. எல்லாம் இருந்தும், என் பெற்றோரைக் காப்பாற்றாமல் இனிமேலும் நான் வாழ்ந்தால், அதைவிட இழிவு இந்த உலகத்தில் வேறில்லை. இங்கே இந்தக் கணம், நான் புதிதாகப் பிறந்துவிட்டேன். எனவே எல்லா மாதமும் இதே தேதியில் இங்கு ஏற்படும் ஒருநாள் செலவை முழுவதுமாக நான் ஏற்றுக் கொள்ள முடிவு செய்துவிட்டேன். தயவு செய்து நீங்கள் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் ” என்றான்.
ராஜேஷின் மனமாற்றத்தை நன்கு புரிந்துணர்ந்து கொண்ட ஆனந்தன், “”நன்றி நண்பரே, அடிப்படையில் நமது இந்தியமண், கருணையெனும் ஊற்று வற்றாத மண், இங்கு பிறந்தவர்கள் அனைவரும் கருணை மனதோடு மட்டுமே பிறந்தவர்கள், அந்நிய மோகமும், நாகரிக மோகமும் சேர்ந்து ஆங்காங்கே சில ஊற்றுக் கண்களைத்
தற்காலிகமாக மூடி வைத்திருக்கின்றன. அவ்வளவே. எங்களைப் போன்றவர்களின் சிறிய சேவையால் அந்த ஊற்றுக் கண்கள் அனைத்தும் திறக்கப்படுமாயின், இந்நாட்டில் கருணை வெள்ளம் வற்றாத நதியாக ஓடி, முதியோரில்லம் என்ற ஒன்று இல்லாமலேயே போகும். உங்கள் நல்லெண்ணத்துக்கு நான் ஒரு சிறு கருவியாக அமைந்தது எனது உயர்பேறு” என்றபடி அவர்களுக்கு விடைகொடுத்தபோது, அந்தப் பெற்றோரின் கண்களில் ஒளிர்ந்த ஆனந்தத்தில் இந்த மண்ணின் ஜீவ ஒளியைக் கண்டு மகிழ்ந்தான்.
– மே 2012