கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 7,181 
 
 

சாயங்காலம் அப்பாவுடன் கோயிலுக்குக் கிளம்பும் போது, கோயில் திடலில் இன்னிக்கு ஊர் கூட்டம் இருக்குடா என்றார்.

“ஏம்பா! மரத்தடி பஞ்சாயத்து மேடை, நசுங்கிப் போன சொம்புல தண்ணி, நாட்டாமையின் எவடியவ கத்தல், வெத்தலைய போட்டு புளிச்..புளிச்னு எச்ச துப்பறது, அடாவடி தீர்ப்பு, இதுங்களை இன்னும் நீங்க விடவே இல்லையா?.”–அப்பா சரிக்கு சரி நக்கலடிப்பார்.

”ஜோக்கா இது?. சரி நான் சிரிச்சுட்டேன்.”

நான் பி.டெக். முடிச்சப்புறம், பூனாவில் டி.சி.எஸ்.ல ஜாய்ன் பண்ணி பதினோரு வருஷங்கள் ஆகிவிட்டன.. ப்ளஸ் பி.டெக். படிப்பு ஒரு நாலு வருஷம். ஆக ஊருடன் பதினைஞ்சி வருஷங்களாக நான் தொடர்பில் இல்லை. வருஷத்துக்கொரு கம்பெனி, என்று வட இந்திய நகரங்களில் சுற்றியலைந்து, பர்கர், பீட்ஸா, பக்கெட் சிக்கன், ப்ரிங்கில்ஸ், சான்ட்விச், என்று கண்டதையும் தின்று, காஃபி ஷாப்பில் காஃபியும், பப்பில் பியரும் குடிச்சி, பெண்களோடு ஊர் சுற்றி, பிரதிகூலமாய் பெரிய தொப்பையை வாங்கிக் கொண்டு, சதா கம்ப்யூட்டர்களுடன் சாஃப்ட்வேர் அடிமைகளாக குப்பை கொட்டியதில் எதேஷ்டமாக கரன்ஸிகளை சேர்த்து, இவை எதிலும் சந்தோஷம் கிட்டாமல் எல்லாவற்றையும் மூட்டைகட்டி வைத்து விட்டு , பழைய சாவகாசமான, வெள்ளந்தியான, பசுமையான, எங்கள் கிராம வாழ்க்கைக்கு ஏங்கி, நாலுமாத ப்ரேக்கில் தென்கழனி என்ற என் சொந்தமண்ணுக்கு குடும்பத்துடன் வந்திறங்கினேன். ஆனால் பெருத்த ஏமாற்றம். இந்த பதினைஞ்சி வருஷங்களில் ஊரில் பெருமளவு பசுமை தொலைந்து போயிருந்தது. அங்கங்கே கூரை வீடுகள் மாடிகளாகி இருக்கின்றன. தெருவில் நிறைய டூ வீலர்களை அதிலும் கியர் வண்டிகளை டென்த், ப்ளஸ் ஒன் படிக்கும் விடலைகள் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், பாதசாரிகள் சிதறி ஓடும்படி வண்டியை சீற விட்டு, தலை தெறிக்க ஓட்டிக் கொண்டு போகிறார்கள்.. ஊரைச் சுற்றி பசுமையாக விரிந்துக் கிடந்த கழனிகள் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு வீடுகளே இல்லாத மைதான நகர்கள் ஆர்ச்சுகளுடன் நிற்கின்றன.

நாங்கள் போனபோது ஈஸ்வரன் கோயில் திடலில் ஊர் கூடியிருந்தது. “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி…”— கருவறையில் நின்று யாரோ உருகிப் பாடும் குரல் இங்கு வரைக்கும் கேட்கிறது. ஊரில் இருக்கிற பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ திருமணம் செய்யும் போது திருமணத்துக்கு முன்னதாக ஊருக்குச் சொல்லி ஊரின் ஒப்புதலை பெறவேண்டும். அப்படி ஊர் தன்னுடைய ஒப்புதலை தருகிற கூட்டம்தான் இது. கூட்டத்தில் பிரதானமாய் உட்கார்ந்திருந்த பெரிய பெர்தனக்காரர்(கிராமணி) கைலாசபதி அய்யா செருமிக் கொண்டு ஆரம்பித்தார்.

“இன்னா கன்னிப்பா! இன்னா விஷயமா ஊரைக் கூட்டியிருக்கிற?.”— எதற்கு என்ற காரணம் ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும் சபையறிய கேட்டு, ஊர் அறிய பதிலை வாங்கறது முறை. கன்னியப்பன் என்ற அந்த ஆள் எழுந்து அவர் எதிரில் போய் பவ்வியமாக நின்றார்.

“எம் பொண்ணு அம்சவேணிக்கு ஒரு நல்ல எடம் தகைஞ்சிருக்குபா. அதான் ஊருக்குச் சொல்லி ஊரு ஒப்பு கேக்கலாம்னு ஊரை கூட்டச் சொல்லி கேட்டுக்கிணேன்.”

“சந்தோசம். புள்ள எந்த ஊரு?.”

“ இங்கதான் காஞ்சீபுரம் தாண்டி அய்யம்பேட்டைபா. உள்ளூர்ல வாத்தியாரா வேல பாக்கிறாப்பல. கவர்மெண்ட் உத்தியோகம்.”

“ஏன் உம்பொண்ணும் வாத்தியார் வேலைக்குத்தான படிச்சிருக்குது?. சரி ஊர் ஒப்பு கேக்கறீயே அய்யம்பேட்டையில இருந்து ஊரு ஆளுங்க வந்திருக்காங்களா?.—- “ இதோ “—— சற்று தள்ளி ஈசான மூலைபக்கம் உட்கார்ந்திருந்த மூத்த வயதுள்ள ரெண்டு பேர் எழுந்து வந்தார்கள். கைலாசபதி சடக்கென்று எழுந்துச் சென்று அவர்கள் கையைப் பற்றி அழைத்து வந்து உட்கார வைத்தார்.

“கன்னிப்பா! இந்த சம்பந்தம் உனக்கு சம்மதம்தானா?. உரக்க சொல்லு, ஊருக்குத் தெரியணும்.”

“சம்மதம்ங்க.”—-உரக்க சொன்னார்.

“ இல்ல..இல்ல… நேர் பங்காளிங்க, ஒருகால் வுட்டவங்க, மாமன், மச்சானுங்க எல்லாரையும் கலந்துட்டு வந்து சொல்லுப்பா. தாம்பூலம் மாத்திப்புட்டா அப்புறம் பேச்சை மாத்த முடியாது.”—-கன்னியப்பன் போய் எல்லா பங்காளிகளையும், மச்சான்களையும் கலந்துக்கிட்டு வந்து சொன்னார்.

“எல்லாருக்கும் பரிபூரண சம்மதம்க.”

“அப்ப செரி. ஏம்பா! புள்ளை வீட்டுக் காரங்களுக்கும் சம்மதமா?.” —-ஊரு ஆளு எழுந்து முன்னே வந்து “ சம்மதம்தான். நாங்க பொண்ணு வூட்ல இன்னிக்கு காத்தால கையை நனைச்சாச்சி.”

“ அப்ப செரி… புள்ள வூட்ல அவங்க பங்க பங்காளிங்களை, மாமன், மச்சானுங்களை எல்லாம் கலந்தாச்சா?.”

“ஆச்சிங்க..”

“ சந்தோசம். பொண்ணும் புள்ளையும் சம்மதம் சொல்லிடுச்சிங்களா?.”

“ ஆமாங்க.”

“உம் அய்யம்பேட்டைக் காரங்கன்னா எதுவும் கொலம் கோத்திரம், கொள்வினை கொடுப்பினை, வரலாறு கேக்கத் தேவல. அங்கித்திய பொண்டுங்க ஏழெட்டூண்டு இங்க வாழுதுங்க. நம்மூரு பொண்டுகளுந்தான் அங்கன வாழுதுங்க. சரி நகை நட்டு, சீருசெனத்தி பத்தியெல்லாம் பேசி முடிச்சாச்சா?.”

“ஆச்சிபா. காதுக்கு, மூக்குக்குன்னு சில்லரை நகைங்களை தள்ளி, பொண்ணு கழுத்துக்கு இருபது சவரன். புள்ளைக்கு அஞ்சி சவரன்ல மைனர் செயினு. மாப்பிள்ளை டிரஸ்ஸுக்கு ஐயாயிரம். மத்தபடி சீர்வரிசைங்களை முறையா செஞ்சிட்றேன்னு சொல்லிட்டேம்பா.” —இதெல்லாம் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும், எனக்கு வித்தியாசமாகவும், எரிச்சலாகவும் இருந்தது..

“எப்பா! எத்தினி கேள்வி?. இந்தாளு எதுக்கு அதையெல்லாம் கேக்குறாரு?.” ——அப்பா உஷ்! என்று வாயில் விரலை வைத்தார்..

“சமாளிப்பியான்னு பார்த்துக்க கன்னிப்பா..”

“இது முக்கியமாச்சேப்பா. எரிக்குக் கீழ ஒரு தளைய பேரம் பண்ணிட்டேம்பா.”

“செரி..செரி..டேய் சபாபதி!.”— சபாபதி என்ற அந்த இளைஞன் ஓடிவந்து நின்றான்.

“ சபையில எல்லாருக்கும் தாம்பூலம் குட்றா. மொத தாம்பூலத்த அய்யம்பேட்டை ஊர்க்காரங்களுக்கு குடுக்கணும்டா.”—– வெற்றிலை, பாக்கு, ஒரு வாழைப் பழம்னு தட்டில் வரிசையாய் செட் பண்ணி வெச்சிருந்த தாம்பூலத்தட்டை எடுத்துக் கொண்டு சபாபதி நகர்ந்தான்.

“என்னிக்கு முகூர்த்தம்?, சத்திரம் பார்த்துட்டீயா?. ஒண்ணுமே சொல்லலியே”

“இங்கியே பூங்காவனம்மாள் சத்திரத்திலதான் வெச்சிருக்குபா. தேதி…? வர்ற சித்திரை போயி வைகாசி இருவதுக்கு பொண்ணழைப்பு, இருவத்தொண்ணாம் தேதி முகூர்த்தம்.” “ ஏம்பா முகூர்த்த தேதிய அம்மாம் தள்ளி வெக்கிற?. ரொம்ப தள்ளக் கூடாதுபா. பேசி முடிச்சாச்சின்னா ஐசா பைசா ன்னு முடிக்கப் பாக்கணும். “ நானும் பணத்துக்கு சுதாரிக்கணுமில்லே.”— சொல்லிவிட்டு சிரித்தார். இப்போது பெர்தனம் கூட்டத்தைப் பார்த்து

“செரீ…எல்லாம் முடிஞ்சிது, ஏம்பா! அங்க புள்ள வூட்ல ஊரு ஒப்பு வாங்கறப்ப நம்ம ஊரு நிர்வாகஸ்தர்னு ரெண்டுபேரு, யாராரு போறீங்க?.”——ஊரு கமானமாக இருந்தது.

“செரி… செரி… இந்த கல்யாணம் முடியற மட்டும் எல்லாத்துக்கும் ஊர் ஆளுன்னு கூட இருந்து முடிக்கிறதுக்கு பெரியவர் நமச்சிவாயம் அய்யாவையும், ஜனார்த்தனத்தையும் ஊரு நியமிக்குது. டேய்! ரெண்டு பேருக்கும் தாம்பூலம் குடுப்பா.”—அவங்களுக்கு தாம்பூலம் கொடுத்து திருமணம் ஊர்ஜிதம் செய்யப் பட்டது. அடுத்த விஷயம் கல்யாணத்துக்கு மூட்டுத்தளிக்கு (சமையல் வேலைக்கு) ஆட்களை ஊரு நியமிக்கணும். டவுன்ல கல்யாணத்தை வைக்கிற வசதியானவங்களைத் தவிர மற்றவங்க யாரும் கேட்டரிங் காண்ட்ராக்டு பக்கம் போறதில்லை.. ஊர் ஆளுங்களே சமையல் வேலைய பார்த்திட்றது வழக்கம். இதுக்கு பணம்னு எதுவும் அவங்களுக்கு தர்றதில்லை. விருப்பப் பட்டவங்க துணிமணி மரியாதை செய்யறதுண்டு. பெர்தனக்காரர் கைலாசபதி கூட்டத்தைப் பார்த்து “மூட்டுத்தளிக்கு (சமையல் வேலை) யாரார் வர்றீங்க?. குறைஞ்சது பத்து பன்னிரெண்டு பேரு இருக்கணும்டா.”—கூட்டம் அமைதி காத்தது.

“என்னய்யா எப்பப்பாரு மசமசன்னு இருந்தா எப்படி?.சரி நானே பேரைச் சொல்றேன் கேட்டுக்கோங்க.. வினாயகம், சுப்ரமணி, மூலைவூட்டு சுந்தரம், ம்..ம்..சுப்பராயன், மாணிக்கம், திருவேங்கிடம், ரோட்டுத் தெரு குப்புசாமி, லோகநாதன், வெங்கட்ராமன், சிவகுரு, மோகன், குருநாதன், ”—பெர்தனம் பெயரைச் சொல்லச் சொல்ல எழுந்து நின்றார்கள். அவர் கண்ணைக் காட்ட அவர்களுக்கும் தாம்பூலம் கொடுக்கப் பட்டது.

“கேட்டுக்கோங்கப்பா!,வைகாசி இருவது சாயங்காலம் பொண்ணழைப்பு அன்னைக்கு விருந்தும், மறுநாள் முகூர்த்தம். அன்னைக்குக் காலை டிபன், மதியம் விருந்து சாப்பாடு, எல்லாம் உங்க பொறுப்புத்தான். ஆக்கி, பரிமாறி, இலை எடுக்கிறது வரைக்கும் உங்க பொறுப்புத்தான். கூடமாட ஒத்தாசைக்கு உடையவங்க இருப்பாங்கதான், ஆனா பொறுப்பு உங்களுது.”—பன்னிரெண்டு பேரும் தலையாட்டினார்கள்.

“ஏம்பா! கன்னிப்பா! ஊர் கட்டளை—நூத்தியொரு ரூபா. சபையில கட்டிடு.”——–கன்னியப்பன் சின்ன பெர்தனத்தின் கிட்டே போய் பணத்தை கட்டிவிட்டு, திரும்பி நின்னு ஊராரைப் பார்த்து கும்பிட்டான்.

“சபையில எல்லாருக்கும் ஒரு வார்த்தை சொல்லிக்கிறேன். பொண்ணழைப்பு அன்னைக்கு ராத்திரி சாப்பாடு, முகூர்த்தம் அன்னைக்கு காலையில டிபன், மதியம் சாப்பாடு ஆக மூணு வேளையும் வூட்ல உலை வைக்காத சாப்பாட்டுக்கு இப்பவே எல்லாருக்கும் சொல்லிக்கிறேன். அப்புறம் நெருக்கத்தில தனித்தனியா வூட்டுக்கு வந்து சொல்றேன்.”— சொல்லிவிட்டு நகர்ந்தார். உலை வைக்காத சாப்பாடு என்றால் ஊரில் யாரும் வீட்டில அடுப்பு பத்தவைக்கக்கூடாது. குடும்பத்தில குஞ்சி குளுவான் முதற்கொண்டு ஒருத்தர் தப்பாம எல்லாரும் மூணு வேளையும் வந்து விசேஷத்தில சாப்பிடணும்னு அர்த்தம்.

அத்துடன் ஊர்கூட்டம் முடிந்தது. எல்லாரும் எழுந்து கலைய ஆரம்பித்தார்கள்.. அப்பா என்னை அர்த்தத்துடன் பார்த்தார். “அப்பா! ஏன் நோண்டி நோண்டி இத்தனை கேள்வி கேக்கறாரு அந்தாளு?. எனக்கே எரிச்சலாவுது.” “ உன்னாட்டம் ஆளுங்களுக்கு அப்படித்தான் இருக்கும். ஆனா இங்கதான்டா மனுசன் இருக்கிறான். ஊர் கட்டுபாடுன்றது அவ்வளவு அத்தியாவசியம். கன்னியப்பன் வூட்டு கல்யாணத்துக்கு ஊரே பொறுப்பு ஏத்துக்குது பாரு. நாலு பேரோடு ஒத்து அணுசரனையுடன் வாழணும்னு கத்துக் குடுக்கிறது ஊர்கட்டுப்பாடுதாம்பா. இன்னிக்கு எல்லாம் சிதைஞ்சி போச்சி. ஆனா இன்னிக்கும் நம்ம ஊரைப் போல அங்கங்கே சில ஊருங்கள்ல ஊர் கட்டுப்பாடு இருந்துக்கிட்டுதான் இருக்கு. ஊரு ஒப்புன்னு குடுத்துட்டா அப்புறம் கல்யாணம் முடியற வரைக்கும் ஊரு துணை நிக்கும். முக்கால்வாசி வழக்குங்க கோர்ட்டுக்குப் போறதில்லை தெரியுமா?. இங்கியே பைசலாயிடும். இருக்கப் பட்டவன்களும், வீம்புக்காரன்களும்தான் கோர்ட்டுக்குப் போயி சீரழிஞ்சி போறானுவ..”——-உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.சுத்த பத்தாம்பசலித்தனம்.

அந்தவாரக் கடைசியில அய்யம்பேட்டையிலும் பிள்ளை வீட்டார் ஊர் ஒப்பு வாங்கி விட்டார்கள் என்று தகவல் வந்தது. அதற்கப்புறம் எதுவும் இல்லை. பெண்வீட்டார் கல்யாணத்திற்கான அரிசி, பருப்பு, மளிகை ஐட்டங்களை வாங்கி புடைத்து சுத்தம் பண்ணி இருப்பு வைக்க ஆரம்பித்தார்கள்.. அப்பப்ப மாப்பிள்ளை பையன் ஏதாவதொரு நொண்டி சாக்கு வைத்துக் கொண்டு இங்கே வந்து பெண்ணிடம் பேசிச் சிரித்து விட்டு போய்க் கொண்டிருந்தான் ஊரில் எல்லாரும் கல்யாணப் பெண்ணை இப்பவே மாப்பிள்ளையை வளைச்சிப் போட்டுட்டீயடீ என்று கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு விஷயங்கள் நடந்து முடிந்தப் பிறகும் அம்சவேணியின் கல்யாணம் நின்று போனது. ஒருநாள் கன்னியப்பனுடைய செல் சிணுங்கியிருக்கிறது. லைனில் பிள்ளையின் அப்பா. “ஐயா! இதை எப்படி சொல்றதுன்னு தெரியல. நான் நேரா விசயத்துக்கு வந்திட்றேன். ஒரு மாசமா டெல்லியில புள்ளை வீட்ல போய் தங்கிட்ட எங்க ஜோஸ்யர் நேத்துதான் வந்தாரு. பையனுக்கும் பொண்ணுக்கும் சுத்தமா பொருத்தம் இல்லையாம். தீர்த்து சொல்லிட்டார். எங்க விட்ல எல்லாருக்கும் மனசே சரியில்லை. கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்றது அதுங்க எதிர்காலத்தை பார்க்கணுமில்ல?. ம்..ம்..எங்களுக்கு ப்ராப்தமில்லை. குழந்தை அம்சவேணிக்கு நல்ல இடம் அமைய கடவுளை வேண்டிக்கிறேன். ”—சொல்லிட்டு லைனை துண்டித்துக் கொண்டார்.

வீடே அழுதது. என்ன பண்றதுன்னே ஒருத்தருக்கும் புரியல. அதிர்ச்சி. ஊர் ஒப்பு வாங்கியாச்சி, அரிசி பருப்பு மளிகை ஐட்டங்களும் வந்திறங்கியாச்சி. அவங்க சம்மதம்னு சொல்லி ஊரறிய வந்து நம்ம வீட்டிலே கையையும் நனைச்சிட்டாங்க. அந்தப் பையன் வேற அப்பப்ப ஊரறிய வந்து வந்து நம்ம பொண்ணுகிட்ட பேசிட்டு போயிருக்கிறான். இப்ப வந்து திடீரென்று கல்யாணம் நின்றுபோனால், ஐயோ! ஊர் வாய் சும்மாயிருக்குமா?. கும்மியடிச்சிடுமே. இனிமேல் யாரு என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்பான்?. கன்னியப்பன் சுருண்டு படுத்து விட்டார். வெளியே தலை காட்ட முடியவில்லை. இரண்டு மூணு தடவை பிள்ளையின் அப்பா முருகேசனுடன் செல்லில் பேச கால் பண்ணிய போது இரண்டு முறை லைன் துண்டிக்கப் பட்டது. ஒருமுறை

“ஏங்க! அதான் ஜாதகம் பொருந்தலன்னு சொல்லிட்டேன்ல?. திரும்பதிரும்ப சொன்னதையே சொல்லி தொந்திரவு பண்ணா என்ன அர்த்தம்?. உம் பொண்ணுக்கு வேற எடம் பாருய்யா”—— என்று கடிந்து சொல்லிட்டார். கன்னியப்பன் உடைந்து போனார்.

“எப்படி பொருத்தமில்லாமல் போச்சி?. பத்துக்கு ஒன்பது பொருத்தம் தீர்க்கம்னு நம்மூரு ஜோஸ்யர் சொன்னாரே. தினம், கணம், யோனி, ராசி, ரச்சு இந்த அஞ்சி முக்கியமான பொருத்தங்களும் அருமையா பொருந்தியிருக்குன்னு எழுதியே கொடுத்திருக்கிறாரே.”—– தெருவில் வர்றவங்க போறவங்க கிட்டேயெல்லாம் பைத்தியம் மாதிரி பஞ்சாயத்து பேசிக் கொண்டிருக்க, அம்சவேணி அழுதபடி ஓடி வந்து அவரை இழுத்துக் கொண்டு போனாள். ஹும்! பையன் அப்பப்ப வந்தவன் அம்சவேணி கிட்ட பேசிட்டு மட்டுந்தான் போனானோ என்ன கன்றாவியோ என்று ஊரு புறணி பேச ஆரம்பித்தது.

நடந்த விஷயத்தை கேள்விப்பட்டு பெரிய பெர்தனம் கைலாசபதியும், இன்னும் சில முக்கியஸ்தர்களும் வந்து கன்னியப்பனை விசாரித்து விட்டு போனார்கள். போனவங்க அய்யம்பேட்டைக்காரன் விஷயம் என்னான்னு விசாரிக்க ஆளனுப்பினார்கள். ஒற்று பார்க்கப் போனவன் மறுநாள் வந்து சேர்ந்தான்.

“ஐயா! விசயமே வேறங்க. அந்தப் பையனுக்கு காஞ்சிபுரம் சேர்மன் தங்கவேலு தன் பொண்ணை குடுக்கப் போறானாம். நூறு சவரனாம், புள்ளைக்கு அஞ்சி, புதுசா பல்சர் வண்டி, இதில்லாம காஞ்சிபுரம் டவுன்ல பொண்ணு பேர்ல பத்து சதுரத்தில ஒரு வீடாம். அதாம் ஜோஸ்யத்து மேல பழி போட்டு பல்டியடிச்சிட்டான்.” —பெர்தனக்காரங்க கோபத்தில அமைதியாயிட்டாங்க.

“ ரெண்டு தரப்பிலேயும் ஊரு ஒப்பு கொடுத்தப்புறம் மாத்தறான்னா. அந்த மசுரான் ஊரை இன்னா மதிக்கிறான்டா?. பொண்ணு செவிடு, ஊமை, இல்லை தீராத வியாதி இருக்கு அதை சொல்லாம மறைச்சி ஏமாத்தி கட்டிக் கொடுக்க பார்த்தாங்கன்னு காரணம் சொன்னா ஊரும் அதை ஆமோதிக்கலாம்பா. பெரிய இடம் வருதுன்னு ஜோஸ்யத்து மேல பழி போட்டு ஊரை ஏமாத்தினா நாமெல்லாம் கையை சப்புறதா?. ”— கைலாசபதி கோபமாக இரைந்தார்.

இரவிலும், அதிகாலையிலும் இரண்டு மூணு தடவை பிள்ளை வீட்டுக்கு சேர்மேன் கார் வந்து போய்க் கொண்டிருந்ததை அய்யம்பேட்டையில ஊரு பார்த்துக்கிட்டுதான் இருந்துச்சி.. அதுக்கப்புறந்தான் விஷயம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ரெண்டு ஊர் பெர்தனக்காரங்களும் காதும் காதும் வெச்சாப்பல ரகசியமாக கலந்து பேசினாங்க. பேசி முடிவெடுத்துட்டாங்க. என்ன முடிவுன்றதை வெளியே கசியாமல் பார்த்துக்கிட்டாங்க. அய்யம்பேட்டையில் அமாவாசை அன்றைக்கு கூடிய ஊர் கூட்டத்தில பையனின் அப்பன் முருகேசனை கூப்பிட்டு நிற்க வெச்சிட்டாங்க. அங்கே மணியம் பார்க்கிறவரு வேதாச்சலம் அய்யா

“என்னா முருகேசா! தென்கழனியில பார்த்த பொண்ணை வாணான்னு சொல்லிட்டேன்னு தெங்கழனி ஊர்க்காரங்க பிராது குடுத்திருக்காங்கப்பா. ரெண்டு ஊர்லேயும் ஊரு ஒப்பு வாங்கியாச்சி. நீயும் சம்மதம்னு சொந்த பந்தத்தோட போயி பொண்ணு வூட்ல கையை வேற நனைச்சிட்டு வந்துட்ட.. உம் புள்ள வேற நேத்துவரைக்கும் அப்பப்ப போய் பொண்ணுகிட்ட குலாவிட்டு வந்திருக்கான். அப்புறம் இப்ப வந்து வாணான்னா என்ன அர்த்தம்?.. அந்தப் பொண்ணு கதி என்னா?. பெரிய தப்பாச்சே.

“அதான் சொன்னேனே ஜாதகம் பொருந்தலய்யா. என்ன பண்ணச் சொல்றீங்க?.”

“அட! அதெல்லாம் பார்க்காமயா ஊர் ஒப்பு வரைக்கும் போயிட்ட?, பொண்ணு வூட்லயும் போயி சாப்டுபுட்டு வந்திருக்க?. விளங்கலியே. நம்ம ஊருக்கு நீ நிஜத்தை சொல்லியாவணும். இதான் உண்மையான காரணமா இல்லே எதனா மறைக்கிறீயா?.”

“இல்லீங்க. இதான் காரணம்..”

“சரி வேற எங்கியாவது பொண்ணை பார்த்திருக்கீயா?.”

“ இல்லீங்க இனிமேதான் தேடணும்.” —வேதாச்சலம் அவரை ஒரு நொடி தீர்க்கமாகப் பார்த்தார். முருகேசன் முந்தா நாள் ரெண்டொரு பங்காளிகளோடு ரகசியமாகப் போய் சேர்மேன் வீட்டுக்குப் போய் கையை நனைத்து விட்டு வந்தது அவருக்குத் தெரியும்.

“அப்ப சரி நீ போவலாம்பா.” — அதுக்குமேல ஊர் ஒருவார்த்தை கேட்கவில்லை. அப்பவே முருகேசனுக்கு உள்ளே சந்தேகம் எழ, அரை மனசோடு வீட்டுக்கு கிளம்பினார். ஊரு கட்டுப்பாட்டின் வீரியம் அவருக்கு அத்துபடி. அப்பவே சேர்மேனுக்கு போன் பண்ணி சொல்லி விட்டார். அப்புறம் எதுவும் நடக்கவில்லை. ஊரும் அடுத்தடுத்த விவகாரங்களை பார்க்க போயாச்சி. முருகேசனும் ஊரில் தெளிவாக உலவிக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு முகூர்த்த நாளில் விடிநேர கருக்கலில் பெரிய பெர்தனம் வேதாசலம்அய்யாவின் உத்திரவுப்படி ஊரைவிட்டு சற்றுத் தள்ளி அமைந்திருந்த அய்யம்பேட்டை வேதபுரீஸ்வரர் கோயிலில் கமுக்கமாக ஊர் திரண்டது. கும்பலில் ஒரு பிரிவு அங்கிருந்து கிளம்பி முருகேசன் வீட்டண்டை போய் நின்றது. எதுவும் பேச்சில்லை. ஒரு நாலைஞ்சி விடலையான பசங்க மட்டும் திமு திமுவென்று உள்ளே போனார்கள். முருகேசனும், அவர் மனைவியும் கத்தக் கத்த பையனை கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள். தடுத்து மறித்த முருகேசனை இழுத்து தள்ளிவிட்டு போனார்கள். பையன் மறுக்காமல் அவர்களுடன் சென்றான். மறுத்திருந்தால் இழுத்துக் கொண்டு போயிருப்பார்கள். கோயில் உள்ளே பெண்ணைப் பெற்றவர்களும், ஊர் முக்கியஸ்தர்களும் சூழ பெண் தயாராக காத்திருந்தாள். பக்கத்தில் பெண்ணுக்கு தருவதாக சொன்ன அத்தனை சீர்வரிசைகளும் வைக்கப் பட்டிருந்தன. இப்போது முருகேசன் குடும்பத்தினரின் வரவுக்காக ஊர் காத்திருந்தது. அரைமணி நேரத்தில் பதட்டத்துடன் ஓடிவந்த முருகேசன் குடும்பத்தாரும், அவருடைய பங்காளிகள் கூட்டமும், சப்போர்ட்டுக்கு ஆவேசமாய் தடி தாம்புகளுடன் ஓடிவந்த சேர்மன் ஆட்களும், அங்கிருந்த பெருங்கூட்டத்தைப் பார்த்து பம்மினார்கள். தென்கழனி ஊர்க்காரங்கன்னு நாங்க ஒரு பஸ் நிறைய போயிருந்தோம்.. வேகமாய் வந்த சேர்மேன் டாய்! என்று கத்த, கூட்டம் டாய்..டாய்..என்று நூறு டாய்! களுடன் அவர்மேல் பாய, பெர்தனக்காரர்களின் அதட்டலுக்கு ஊர் கட்டுக்குள் அடங்கி நின்றது. அத்துடன் சேர்மேன் அடங்கிப் போனார். அவ்வளவுதான் நல்ல நேரத்தில் பெற்றவர்கள் ஆசியுடன், பையன் சந்தோஷமாய் தாலி கட்ட, இரண்டு ஊராரும் கூட்டமாய் கூடி நின்று அட்சதை போட, சிறப்பாக கல்யாணம் முடிந்தது. மலைத்துப் போய்விட்டேன்.என்னமாதிரியான நெட் ஒர்க் இது?. எப்படி இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடிந்தது?. அத்தனையும் வீடியோ கவரேஜுக்கு வந்து விட்டது. பிறகு ஊர் முக்கியஸ்தர்கள் மணமக்களை அவர்களைப் பெற்றவர்களின் கால்களில் விழவைத்து அவர்களின் மனத்தாங்கல்களை குறைக்க முயற்சித்தார்கள். கல்யாண விருந்து சாப்பாடு அன்றைக்கு ராத்திரியே பொண்ணு விட்டில் ஏற்பாடாகியிருந்தது. வேதாச்சலம் அய்யா பிள்ளையின் அப்பனிடம்

“முருகேசா! உனக்குத் தெரியாதது ஒண்ணுமில்லபா. எல்லா விவகாரங்களையும் பேசி முடிச்சிட்ட அப்புறத்தான் நீ ஊரு ஒப்பு கேக்கணும். ஊரு ஒப்பு குடுத்துட்டா, அப்புறம் யாரும் நியாயமான காரணமில்லாம மாத்தி பேச முடியாது. அப்படி மாத்தி பேசினா, ரெண்டு ஊரும் சேர்ந்து பொண்ணு புள்ளைய கூட்டிப் போயி கல்யாணம் பண்ணி வெச்சிடும். இதில பொண்ணோட மானம் பத்திதான் ரெண்டு ஊரும் பார்க்கும். இதான வாலாயமாய் நடந்துக்கிட்டு வர்ற ஊரு மொறை?.”—-. முருகேசன் தலை கவிழ்ந்தார். அப்புறம் ஊரார் இருந்து சீர்வரிசைகளை ஒப்படைத்தார்கள். எல்லோரும் சேர்ந்து கூட்டமாக நிற்க, பெண்ணும், பிள்ளையும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார்கள். பெண் மறுபடியும் மாப்பிள்ளையுடன் போய் ஒரு தடவை பெர்தனக்காரர் கைலாசபதி அய்யாவையும், வேதாச்சலம் அய்யாவையும் ஒரு சேர நிற்கவைத்து காலில் விழ, விழும் போதே உணர்ச்சியில் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். கன்னியப்பன் நிலைமை பற்றி சொல்லவே வேண்டாம். மேல் துண்டால் முகத்தை பொத்திக் கொண்டிருந்தார். கைலாசபதி அவளை தூக்கி நிறுத்தி “அடிக்கழுத! எதுக்கு அழுவற?. ஊருன்னு எதுக்கு இருக்கு?. நாங்கள்லாம் வுட்ருவமா?.” —என்றார்.

இதையெல்லாம் பார்க்க எனக்கு கலங்கி விட்டது. பிரமிப்பாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. நான் அப்பாவிடம் “ஏம்பா எதிர் பார்ட்டி கோர்ட், போலீஸ்னு போவமாட்டாங்களா?.”

“தாராளமா போவட்டுமே. ரெண்டு பேரும் மேஜர்ன்றதால போலீஸோ, கோர்ட்டோ தலையிடாது. அப்படியே போனாலும் போயிட்டு? அப்புறம் இந்த ஊர்லதான இருக்கணும். போலீஸ் எத்தினி நாளைக்கு காவல் காக்குமாம்?. `ஊரோடு ஒக்க, நாட்டோடு நடுவே’ ன்னு ஏன் பெரியவங்க சொல்லி வெச்சிருக்காங்க?. இந்த கிராமசபை நடைமுறைகளை எல்லாம் கட்டை பஞ்சாயத்துகள் மனித சுதந்திரங்கள் பறிபோகின்றன, என்று முத்திரை குத்தி ஒதுக்கி வெச்சிட்டோம். ஊர் கூடி நியாயம்னு சொல்ற ஒரு விஷயத்தை ஒருத்தன் மட்டும் நியாயம் இல்லைன்னு கோர்ட்டுக்குப் போறான்னா அதுக்கு சுயநலம் தவிர வேறு என்ன அர்த்தமிருக்க முடியும்?, சொல்லு. அதனால்தான் இன்னைக்கு கோர்ட், போலீஸ்னு வருஷக் கணக்கா செலவு பண்ணிக்கிட்டு அலையறோம். கிள்ளிப் போட்றதை, கோடாலியால் வெட்டிக்கிட்டிருக்கோம். இந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போயிருந்தா அம்சவேணி கிழவியா ஆவறதுக்குள்ள தீர்ப்பு கிடைச்சிருக்கும்தான், ஆனா நியாயம் கிடைச்சிருக்குமா?. ”—–அப்பா சொன்னது என்னை நெடுநேரம் யோசிக்க வைத்தது.

“இல்லப்பா! இப்படி ஆளாளுக்கு சட்டத்தை கையில் எடுத்துக்கிறதுன்னா, அப்புறம் போலீஸ், கோர்ட்லாம் எதுக்கு இருக்காம்?.”

“ ஊழல் பண்ணி பொழைக்கிறதுக்குத்தான். அதான இப்ப நடக்குது?.”—– சொல்லிவிட்டு சிரித்தார்.

நன்றி—`கணையாழி’—செப்டெம்பர்2017 இதழில் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *