கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,629 
 
 

“”சித்தப்பா…” வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர், குரல் கேட்டு நிமிர்ந்தார். விக்ரமைப் பார்த்ததும் கண்களில் கோபம் தெரிந்தது.

“”இங்கே எதுக்கு வந்தே. உங்களோடுதான் ஒட்டு உறவு இல்லைன்னு, எல்லாத்தையும் அறுத்து விட்டாச்சே… அப்புறம் என்ன உறவு முறை சொல்லிக் கிட்டு வந்து நிக்கற…”

“”எதுக்கு இப்படி கோபப்படறீங்க? எனக்கு எந்த விஷயமும் தெரியாது சித்தப்பா. ஹாஸ்டலில் இருந்து படிப்பை முடிச்சு, நேத்து தான் வந்தேன். வந்தபிறகு தான் உங்களுக் கும், அப்பாவுக்கும், சின்ன சித்தப்பாவுக்கும் இடையில், சொத்து பிரிவினை ஆனது தெரியும். எதுக்கு சித்தப்பா பிரச்னை. தாத்தா சேர்த்து வைத்துவிட்டுப் போன சொத்து. உங்களுக்குள் எந்த மனஸ்தாபமுமில்லாமல் பிரிச்சுக்க வேண்டியதுதானே… எதனால் இப்படி கோபப்படறீங்க?”

“”இங்கே பாரு… ஒண்ணும் தெரியாத மாதிரி பேசாதே. தோப்பு, நிலத்தை மூன்று பங்காக வச்சாச்சு. வீட்டை என் பேருக்கு எழுதச் சொல்லி கேட்டேன். இரண்டு பேரும் ஒத்துக்கலை. உங்கப்பாதான் சொந்தமா வீடு கட்டிட்டாரே… ஆனாலும், விட்டுக் கொடுக்க மனசில்லை. அதனால, வீட்டை வித்து, மூன்று பங்காக பிரிச்சு எடுத்துக்க வேண்டியதா போச்சு. எங்கப்பா வாழ்ந்த வீடு, யாருக்கும் இல்லாம போயிடுச்சு. இவங்களை எல்லாம், கூடப் பிறந்தவங்கன்னு சொல்லவே வெட்கமா இருக்கு. எல்லாத்துக்கும் உங்கப்பாவோட பணத்தாசைதான் காரணம்.”

“”இல்லை சித்தப்பா அது காரணம் இல்லை. உங்க மூணு பேருகிட்டேயும் விட்டுக் கொடுக்கற தன்மை இல்லை. அதான் வீடு, கையை விட்டுப் போச்சு. சொத்தை தான் சரிபங்காக பிரிச்சுக்கிட்டீங்களே, உறவை ஏன் இப்படி துண்டிக்கணும்ன்னு நினைக்கிறீங்க?”

“”தேவையில்லை… உங்க உறவே வேண்டாம். இனி, நீயும் உறவுமுறை சொல்லிக்கிட்டு, இங்கே வர வேண்டாம்… கிளம்பு.”

“”சித்தப்பா… மோகன் ப்ளஸ்டூவில், நல்ல மார்க் எடுத்து பாசாகி இருக்கிறதாக சொன்னான். அவனைப் பார்த்து பேசிட்டுப் போறேன்.”

அதற்குள் உள்ளே இருந்து வந்த மோகன், “”அண்ணா வாங்க… எப்ப வந்தீங்க?”

கேட்டபடி, புன்னகையுடன் அவனை நோக்கி வர, “”மோகன்… நீ முதல்ல உள்ளே போ.” அப்பாவின் கோபமான குரலுக்குப் பயந்து உள்ளே சென்றான்.

உறவும் பகையும்!

வாசலில் நின்ற வாசு, விக்ரமைப் பார்த்ததும் மலர்ந்தான்.

“”அண்ணா, பரிட்சை எல்லாம் முடிஞ்சுதா, எப்ப வந்தீங்க?”

“”நேற்றுதான் வந்தேன் வாசு. நீ எப்படி படிக்கிற. டென்த் வந்துட்டே. படிப்பில் கவனம் வேணும். கணக்கு பாடம் சரியா வரலைன்னு சொன்னியே, டியூஷன் வச்சிருக்கியா?”

“”இல்லைண்ணா, இனிமேல் தான் பார்க்கணும்.”

“”வாசு, யாரோடு வாசலில் பேசிட்டு இருக்கே?” கேட்டபடி வெளியே வந்தவர், விக்ரமைப் பார்த்தார்.

“”நீ எதுக்கு இங்கே வந்தே? உங்க குடும்பத்தோட இருந்த உறவு அறுந்து போச்சு. நீ முதலில் வீட்டை விட்டு வெளியே போ.”

“”சித்தப்பா, நீங்களும் கோபமாகத்தான் இருக்கீங்களா?”

“”உன்கிட்ட விளக்கம் சொல்லணும்ன்னு அவசியமில்லை. கொஞ்சமும் பந்தபாசம் இல்லாம, காசுதான் பெரிசுன்னு நினைக்கிறவரோட பிள்ளை தானே நீயும். இனி, எங்க மூஞ்சியிலே முழிக்க வேண்டாம்; போ இங்கிருந்து. வாசு உள்ள வா.”

மகனை இழுத்துக் கொண்டு உள்ளே சென்று, கதவை மூடினார்.

“”விக்ரம் உனக்கென்ன பைத்தியமா. இரண்டு சித்தப்பா வீட்டுக்கும் போய், அவமானப்பட்டு திரும்பினியாமே. உனக்கு தேவையா? நானே தம்பிங்களோட உறவு இனி வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். அப்புறம் உனக்கு என்ன, தேவையில்லாம, அவங்க வீட்டு முன்னால போய் நின்னுருக்கே. இங்கே பாரு… இனி, சேர்த்து வைக்கலாம்ன்னு முயற்சி பண்ணாதே. முறிஞ்சது, முறிஞ்சதுதான். படிச்சு முடிச்சுட்டே. வேலை தேடற வழியைப் பாரு… புரிஞ்சுதா?”

“”சிவகாமி, விக்ரம் எங்கே இரண்டு நாளா காணும்.”

“”சென்னைக்குப் போறதாக சொல்லிட்டுப் போனான். வேலை விஷயமாக ஏதாவது ஏற்பாடு பண்ணப் போயிருப்பான்.”

“”விக்ரம் சென்னைக்குப் போயிட்டு வந்தியாமே… வேலைக்கு முயற்சி பண்றியா?”

“”இல்லப்பா, அதுக்காக போகலை. நம்ப மோகனுக்கு சென்னையில் கல்லூரியில் சீட் கிடைச்சிருக்கு. அவனுக்கு புது இடம், நண்பர்கள் யாரும் தெரிஞ்சவங்க இல்லை. அதான் நான் போயி, எனக்குத் தெரிஞ்சவங்க மூலம், அவன் தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணி, அவனுக்கு எல்லாரையும் அறிமுகப்படுத்தி வச்சுட்டு வந்தேன். நாளைக்கு அவனுக்கு ஏதாவது உதவி தேவைன்னாலும் அவங்க பார்த்துப்பாங்க.”

கோபமாக விக்ரமை முறைத்தார்.

“”உனக்கு வெட்கமாயில்லை. உறவே வேண்டாம்ன்னு தூக்கியெறிஞ்சவனோட பிள்ளைக்கு, நீ ஏன் உதவணும். வாசுவுக்கும், உனக்குத் தெரிஞ்ச ப்ரொபசர்கிட்டே, டியூஷனுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கியாம்… கேள்விப்பட்டேன். எதுக்கு தேவையில்லாத வேலையை இழுத்து போட்டுக்கிற?” கோபமாகப் பேசும் அப்பாவை நிதானமாகப் பார்த்தான்.

“”அப்பா முதலில் ஒண்ணைப் புரிஞ்சுக்குங்க. உங்களுக்கும், இரண்டு சித்தப்பாவுக்கும் வேண்டுமானால் உறவும், பந்தபாசமும் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனா, நாங்க அப்படி இல்லை. நாங்கன்னு சொன்னது, மோகன், வாசுவை சேர்த்துதான். நாங்க மூணு பேரும், கடைசி வரை, அன்பாக இணைந்து வாழணும்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். என் தம்பிகளை நான் எதுக்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்கிறதாக இல்லை.

“”வீட்டுக்கு ஒரு பிள்ளையா பிறந்திருக்கோம். உங்களை மாதிரி, ஒண்ணாப் பிறந்து வாழற கொடுப்பினை எங்களுக்கு இல்லாட்டியும், உறவுகளின் அருமையை, நாங்க புரிஞ்சு வச்சிருக்கோம். நாளைக்கு எங்களுக்குப் பிறக்கிற குழந்தைங்க, ஒட்டுறவு இல்லாம வாழக்கூடாது. சித்தப்பா, பெரியப்பான்னு உறவுகளோடு வாழணுங்கிறது எங்களோட விருப்பம்.

“”நீங்க மூணு பேரும் பணத்தை அருகில் வச்சு, உறவுகளை தூர ஒதுக்கி வச்சுட்டீங்க. நாங்க, எங்க மனசில, அன்புக்கு இடம் கொடுத்து, உறவுகளை அருகில் வச்சிருக்கோம்.

“”உங்க சண்டையும், பிரிவும் உங்களோடு போகட்டும். தயவுசெய்து அதிலே எங்களை சேர்க்காதீங்க. எங்களை அன்போடும், பாசத்தோடும் வாழவிடுங்க. தனித் தீவாக இல்லாமல், உறவுகளோடு இணைந்து வாழற வாழ்க்கையை, நாளை, எங்க சந்ததிகளுக்கு கொடுக்க, கைகோர்த்து நிற்கும் எங்களைப் பிரிச்சுடாதீங்க.” சொன்னவன், தந்தையை ஏறெடுத்துப் பார்க்காமல், அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

1 thought on “உறவும் பகையும்!

  1. பரிமளா,

    எளிய நடை. நல்ல கருத்து. இந்த கால பையன்களும், பெண்களும் இப்படி இருந்து விட்டால், பிரச்னையே இல்லை.

    ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *