எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டான் நடேசன். “நான்…நான் நினைக்கவில்லை. சுசீலா அவ்வளவு தூரம் போய் இருப்பாள் என்று. ஆனாலும் ஏன் மற்றவர்கள் ஒரு மாதிரிக் மற்றவர்கள் பேச்சுக்கு இடம்கொடுக்கவேண்டும்?”
‘மற்றவர்கள் கதைப்பதைப் பற்றி இவன் கதைக்கிறான். இவர் யார் மற்றவர்கள் இல்லாமல்? என் மனைவி சுசீலாவைப் பற்றி என்னிடம் கதைக்கும் போது இவன் ‘மற்றவர்கள்’ இல்லாமல் யாராகி விட்டான்?’
தியாகராஜன் மௌனமாக மேலெழும்பிக் கொண்டிருக்கும் ‘லிப்டை’ ஏறிட்டுப் பார்க்கிறான். 10 -11-12 இலக்கங்கள் மஞ்சள் லைட்டில் கண்ணடித்து மறைய ‘லிப்ட்” மேலெழும்பிக் கொண்டிருக்கிறது.
சுசீலா அவ்வளவு தூரம் போய் இருக்க மாட்டாளாம்.
சுசீலா எவ்வளவு தூரம் போய் விட்டாள் என்று இவனுக்கு என்ன தெரியும்?
“I don’t think that, Susila will get involved with Raman, but…..but you know…they have done enough for, other people to see, to think and to talk”.n
Done enough?
இப்படித்தானே சொல்ல நினைத்திருப்பான் நண்பன்.
“Good lord, he was talking about my wife, my life. My life”
தியாகராஜனுக்குச் சத்தம் போட்டுக் கத்தவேண்டும் போல் இருக்கிறது.
சுசி சுசி….என் அருமை சுசீலா.
மென்மையான அவன் கிசு கிசுப்புகளுக்கும் அணைப்புகளுக்குமுரிய அவன் மனைவியின் பெயர் யாரோ வாயில் அருவருப்பாக அரைபடுகிறதை அவனால் நம்ப முடியாமல் இருக்கிறது கொன்பிறன்ஸ் ஹோல் கிட்டத்தட்ட நிரம்பி வழிகிறது.
வாசலில் இருந்த லேபிள் ஒன்றை எடுத்துத் தன் பெயர், உத்தியோகம், வேலை செய்யும் கொம்பனிப் பெயர் எழுதுகிறான்.
Mr.S. Thiyagarajan, Senior ………… என்றும் அர்த்தம் நிறைந்ததாகத் தெரியவில்லை. ஒன்றையும் முழுதாக உணரத் தோன்றவில்லை. தியாகராஜா……..
உலகமெல்லாம் ஆயிரங்கள் தியாகராஜாக்கள் இருக்கட்டும். இருக்கிறார்கள். எல்லோருக்கும்…அல்லது என் வயதிருக்கலாம்; அதிகம் பேருக்கு மனைவி இருக்கட்டும். காதலிகள் இருக்கலாம். அவர்களின் பெயர் சுசீலாவாக இருக்கலாம்.
எல்லா சுசீலாக்களும் என் மனைவிபோல் என் மனைவி போல……Beautiful
“Dear Susi, dear Susi you are mine, hell with a conference.
அவனுக்கு வீட்டுக்கு ஓடவேண்டும் போல் இருக்கிறது.
மடையன் நடேசன்.
ஏன் இதுவரைக்கும் இருந்து விட்டு இப்போது சொல்கிறான்.
என் மனைவியை என் நண்பன் சிவராமனுடன் அடிக்கடி கண்டானாம்.
அவர்கள் சிரித்துப் பேசும் விதம், பார்த்துக்கொள்ளும் விதம் சாதாரணமாக இல்லையாம். எனக்குச் சொல்கிறான் என் மனைவியைப் பற்றி.
எங்கே கண்டிருப்பான் அவர்களை?
எங்கே கண்டிருப்பாரு? லைப்ரரியில்? ஆர்ட் கலரியில்? என் மனைவி எங்கெங்கே போகிறாள் என்று எனக்குத் தெரிந்தாற்தானே கேட்பதற்கு.
‘Ladies, and Gentlemen……..”
ஆட்டம் தொடங்குகிறது.
Conference அமைதியாக இருக்க உலகத்தின் எனர்ஜி கிரைஸஸ் பற்றி ஒருவர் ஒப்பாரி வைக்கிறார்.
இவன் தன் கொம்பனி பிரதிநிதியாக வந்தவன்.
வரும் வழியில் நண்பன் நடேசன் பிக்கடெலி சேர்க்கிள் ஸ்ரேசனுக்கு “லிப்ட்” கேட்க இவன் தன் பியர்ட் காரைத் திறந்துவிட அவன் இவனின் வாழ்க்கையைத் திறந்து காட்டி விட்டுப் போய் விட்டான்.
உலகத்தில் என்ன “கிரைஸஸாகவும்” இருக்கட்டும் யாராவது வந்து என் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள்.
விலையுயர்ந்த சூட்டும் கோட்டும் போட்ட மனிதர்கள். பெண்கள். லேடிஸ் அனட் ஜென்ட்டில்மென்! தங்களை உலகத்திலிருந்து தனிப்பட்ட பிரித்துக்கொண்ட பிரதி நிதிகள்!
உலகத்துப் பிரச்சினைக்கு வழிதேடும் உபதேசிகள். இவர்களில் எத்தனை பேரின் மனைவிகள் இப்போது இன்னொருத்தனுடன்……….
யார் பிழை?
இவ்வளவு நேரமும் காதடைத்துப் போய் இருந்து இப்போதுதான் ஏதோ கேட்ட உணர்ச்சி தியாகராஜா திடுக்கிட்டு உட்கார்ந்தான்.
யார் பிழை?
குழந்தைகள் பிழைவிட்டால் பெற்றோரின் பிழை. கணவன் …தொடங்கிப் மனைவியின் பிழை.
அப்படித்தான் உலகம் சொல்கிறது. ‘சிவிலைஸ்டான’ எங்கள் திருமணம் உடைந்து போவதற்கு யார் பிழை விட்டார்கள்?
மதிப்பான உத்தியோகம்.
ஆங்கிலேயக் கொம்பனியில் சீனியர் போஸ்ட். அழகிய வீடு. ஆளுக்கொருகார். இவளுக்கு என்ன குறை வைத்து விட்டேன். ஐயருக்கு முன்னால் அக்கினி சாட்சியாக அமைதியாக இருந்து பூப்போன்ற என் கைகளைத் தொட்டவள் இப்போது…..இப்போது………
“Middle East was…………”
Conference பேச்சுக்கள் உலகப் பிரச்சினையின் உச்சத்தில் இருக்கிறது.
இவள் என்ன கண்டு விட்டாள். அந்த…….அந்த……சிவராமனிடம்.
“Stupid ……..sivasam”
நிச்சயமாக Stupid இல்லை.
சிவராமா முட்டாள். நான்…… நான் தான் முட்டாள்;.
சிவராமன் ஆறுமாதங்களுக்கு முன் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். பழைய சினேகிதன். ஓன்றாக யூனிவசிட்டிக்குப் போனவர்கள் ஒரு காலத்தில்.
சும்மா இருக்கிற அறைதானே கொடுப்போம் என்றான் தியாகராஜா.
‘உங்கள் நண்பர் எனக்கொரு தடையுமில்லை’ என்றாள் சுசீலா.
இப்போது……
இப்போது யார்ன் நண்பன் அந்த பாஸ்ரட்?
என்ன கண்டு விட்டாள் அவனிடம்?
……எல்லோரும் கை தட்டுகிறார்கள் கூட்டத்தில் தியாகராஜா திடுக்கிடுகிறான்.
தான் வாய் விட்டு அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டேனோ என்று தனக்குத் தானே யோசிக்கிறான். இல்லை கூட்டம் முடியவிட்டு அவர்கள் கைதட்டுகிறார்கள்.
தேனீர் வருகிறது.
பக்கத்தில் இருந்தவள் இவன் பெயரை வாசித்துவிட்டு தடுமாறி தியாகராஜா சொல்லி அழைக்கிறாள்.
கனவுலகத்தில் இருந்து வந்து சம்பாசனைகளில் நுழைகிறது அவன் மனம். அரை குறையாக
கல்யாணமாகாத வாலிபர்கள் கல்யாணம் முடித்த நண்பர்களின் மனைவிகளுடன் Free யாகக் கதைப்பது தெரியும். அவனும் ஒரு காலத்தில் அப்படித்தான். திருமண வேலியைத் தாண்டத் தயங்கும் எங்கள் பெண்களுடன் “எதையும்” ஒரு அளவுக்குக் கதைக்கலாம் என்ற உணர்ச்சிக்கு யார்விதிவிலக்கு.
அப்படி இருக்கலாம் சிவராமனும் சுசீலாவும்.
நாங்கள் படித்தவர்கள். எல்லோரும் சர்வகலாசாலை போனவர்கள். (எங்கள் பெயருக்குப் பின்னால் இரண்டு..மூன்றெழுத்தில் பட்டங்களைப் பொருத்திக்கொண்டவர்கள்) லண்டனில் சீவிப்பவர்கள்.
நாகரீகமாகப் பழகத் தெரிந்தவர்கள்.
நாகரீகமாகப்……….
சிவராமன்.சிவராமன்……சுசீலா மட்டுமென்ன என்ன எந்தப் பெண்தான் தயங்கமாட்டாள் அவனின் பேச்சில் சிரிப்பில்.
ஏன் சில ஆண்களுக்கு மட்டும் பெண்களைக் கவர முடியாமல் இருக்கிறது.
சில ஆண்களா?
பல பேர் சிவராமன் மாதிரியாகவா…கவர்ச்சியாக…கல கலப்பாகப் பழகிக்கொண்டு….. தன் ‘பிலோசபி’ லெக்ஸரை லண்டன் யூனிவர்சிட்டிடியில் வைத்துக்கொள்ளட்டும்…..
வீட்டில் கதவைத் திறக்கவும் “அவர்களின்” சிரிப்பு காதில் முட்டவும் சரியாக இருக்கிறது. இவ்வளவு காலமும் அவர்கள் தனிமையாக இருப்பதும் அவன் கதவைத் திறக்கும் போது கலகலவென்று சிரிப்பதும் “ஒரு மாதிரியாக” இருந்தாலும் இதெல்லாம் சாதாரணம் என்று தன்னைத் தானே சமாதானப் படுத்தியது ஞாபகம் வருகிறது.
கதவு படாரென்று சாத்துப்பட்ட சத்தத்தில் அவர்களின் சிரிப்பு ‘சட்’ என்று நிற்கிறது. அவள் சமையறைக்குள்ளாலும் அவன் முன் அறைக்குள்ளாலும் இவனை எட்டிப் பார்க்க இவன் ஒரு வார்த்தையும் சொல்லாமல் தன் அறைக்குள் போகிறான்.
அவர்கள் இருவரும் ஒன்றும் புரியாமல் தங்களைப் பார்த்துக் கொள்வதை இவன் திரும்பிப் பார்க்க முடியாவிட்டாலும் உணர முடிகிறது.
எப்படிக் கேட்பது இவர்களை உங்கள் உறவு என்ன என்று?
அப்படிக் கேட்டால் சுசீலா பெட்டி படுக்கைகளுடன் வெளிக்கிடத் தயங்கமாட்டாள். அதை விட நாகரீகமாக எப்படிக் கதைப்பது? அல்லது எல்லாவற்றையும் மறந்து சிரிப்பது? பெண்கள் எப்படித்தான் இருந்தாலும் நடேசன் போன்றவர்கள் இப்படித்தான் கதைப்பார்கள் என்று இருப்பதா பேசாமல்
மௌனமாகக் குளியலறைக்குள் போய் “சவரைத்” திறந்து விடுகிறான்.
அவர்களின் மௌனம் தாங்க முடியாத வேதனையை உண்டாக்குகிறது.
தன் இனிய மனைவியை இப்படிச் சந்தேகிப்பது அவனுக்கும் அவமானமாக இருக்கிறது.
பேப்பரில் கையெழுத்துப் போட்டுத் தாலிகட்டிய குற்றத்துக்காக அவளை இன்னொரு ஆணுடன் கதைக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு எனக்கு உரிமை இருக்கிறதா?
வெளியில் மெல்லிய பனி கொட்டுகிறது. ஜன்னலில் பனிச் சிதழ்கள் காற்றில் அடிபட்டு வந்து தட்டுகிறது. படாரென்று கதவையடித்தபோது சட்டென்று மாறிய அவள் முகபாவம் ஞாபகம் வருகிறது.
சிவராமன் போனபின்?
நாங்கள் இருவரும் பழைய படி சாதாரணமாகப் போய் விடுவோமோ?
எங்கள் உறவும் உணர்ச்சிகளும் இருவரின் அன்பின் பிணைப்பில் சேருமா…அல்லது…. கோடான கோடி வருடமாக எங்கள் பிடிப்பில் வாழ்ந்தவர்களுக்கு என்ன குறைந்து விட்டது.
“எங்கள்” என்பது ஆண்வர்க்கத்தை மட்டும் குறிப்பிடுவது என்று நினைத்தபோது அவனுக்கு நிம்மதியாக இருக்கிறது.
“எங்கள்” நிலை இந்தச் சமுகத்தில் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதான பிரமை.
“அவர்கள்” நிலையும் அவர்களைச் சார்ந்தவர்கள் நிலையும் எப்போதும் எங்கள் தயவின் அடிப்படையில் நிர்ணயிப்பதான சுய பெருமை!
தியாகராஜா சாப்பாட்டு மேசையில் உட்காருகிறான்.
“எப்படிக் கொன்பிறன்ஸ்” தனக்கு எதிராக சிவராமன் இருப்பதை இப்போதுதான் கவனிப்பதுபோல் நிமிர்ந்து பார்க்கிறான்.
நிர்மலமான சிவராமனின் கண்களைச் சந்தித்தபின் குற்ற உணர்வுடன் குனிந்து கொள்கிறான் தியாகராஜா.
“பரவாயில்லை கொன்பிரன்ஸ்” அவன் வாய் முணுமுணுக்கிறது.
சுசீலா “செஸ்;” மேசையைத் துப்பரவாக்குகிறாள். பின்னேரம் வேலையால் வந்தபின் இருவரும் செஸ் விளையாடி இருக்கிறார்கள்!
அடங்கிக் கிடந்த கோபம் திரும்பவும் அக்கினி போல எரிகிறது கணவனின் மனத்தில்
செஸ் விளையாட்டா அல்லது…….
மெல்லிய முனங்கல்கள், ரகசியமான அந்தரங்கமான உணர்ச்சிகளைப் பரிமாறும் பார்வைகள்!
அவனுக்கு ஞாபகமில்லையா அவர்கள் செஸ் விளையாடியது.
யார் பிழை? அவர்களை ஒன்றாக விட்டது?
எத்தனையோ தரம் அவன் சொல்லவில்லையா சுசீலா கேட்கும்போது தனக்கு நேரம் இல்லை என்று இப்போது மட்டும் ஏன் அவர்கள் ஒன்றாய் இருந்ததற்காகவும் சிரித்ததற்காகவும் கதைத்தற்காகவும் ஒப்பாரி வைக்கவேண்டும்?
நெளிவுகள், சுழிகள், நெருக்கமான உணர்ச்சிகள் அவன் நிமிர்ந்து பார்க்காமல் சாப்பாடுகிறான். அவள் கேட்கவில்லை ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறான்’ என்று. ஏன் கேட்பாள்? தெரிந்திருக்க வேண்டும்.
“சிவராமன்……….” பெயரைச் சொல்லிவிட்டுத் தயங்குகிறான் தியாகராஜா.
கைகள் இரண்டையும் மடித்துக் குவித்து நாடியில் தாங்கியபடி என்ன என்றபடி உட்கார்ந்து இருக்கிறான் சிவராமன்.
சுசீலா மௌனமாய் சாப்பாடு போடுகிறாள் தன் பிலேடகோப்பைகளில்.
“யூனிவர்சிட்டி ஹோஸ்டேவில் இடம் பார்ப்பதாகச் சொன்னியே” தியாகராஜனுக்கே நம்பிக்கையில்லாமல் இருக்கிறது நேரடியாகவிடயத்துக்கு வந்தது.
நடேசன் காரில் கதைத்துக் கொண்டு வந்தபோது உடனே வீட்டுக்குப் போய் சிவராமனின் கழுத்தில் கை வைத்து “பநவ ழரவ அல hழரளந” என்று கத்த நினைத்தவன் இப்போது நாகரீகமாக விடயத்தைத் தொடங்குவது அவனுக்கே வியப்பாக இருக்கிறது.
“Do you want me to go” சிவராமனின் குரலில் ஒரு ஏளனம் இருப்பதாகப்படுகிறது. வெறும் பிரமையாக இருக்கலாம்.
“You see………….” என்னவென்று சொல்வது! “I know, I cannot Live here too ever” சிவராமன் முடிக்கிறான். என்னென்று தெரியும் போகச் சொல்வான் என்று!
“For ever”?
தியாகராஜன் மனைவியைப் பார்க்கவில்லை. ஏன் திடீரென்று இப்படி உங்கள் நண்பரைப் போகச் சொல்கிறீர்கள் என்ற கேள்வி அவள் முகத்தில் இருக்கலாம்.
அல்லது….
உங்கள் நண்பரையும் என்னையும் பற்றி ஏதும் யாரும் சொன்னார்களா என்று சுசீலா நேரடியாகக் கேட்கக் கூடியவள். கேட்டால் சிவராமனுக்கு முன்னால் பதில் சொல்ல அவன் தயாராயில்லை.
சுசீலா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று அறிய அவனுக்கு ஆவலாக இருந்தது.
என்ன நினைப்பது!
என் வீடு யாரையும் வைத்திருக்க உரிமையுண்டு தனக்குத் தானே சமாதானம்.
என் வீடு
என் மனைவி
என் மனைவியும் வீட்டில் அடங்கிய……வீட்டோடு சேர்ந்த உடமைகளில் ஒன்று! சிவராமன் கைகழுவி விட்டு வந்து உட்கார்ந்து விட்டுச் சொல்கிறான்.
“நானே சொல்ல வேண்டும் என நினைத்தேன்” சிவராமன் சொல்வதைக்கேட்க,தியாகராஜன் நிமிர்ந்து உட்காறுகிறான். என்ன சொல்ல ……..?
How to flirt with your friend’s wife? உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் நண்பனைப்பார்க்கிறான்.
“ஹொஸ்டலில் தற்செயலாக ஒரு இடம் கிடைத்தது. நேற்று ஒரு நண்பன் சொன்னான் அமெரிக்கன் யூனிவர் சிட்டிக்குப் போகிறான் என்று. அவர் அறையை நான் கேட்பதாக யோசித்திருந்தேன். உண்மையாக அடுத்தமாதம் தான் போகிறான். ஆனால் ஹொலிடேயில் ஸ்கொட்லாந்துக்குப் போய்விட்டான் இன்று. நான் எப்போதும் அறை மாறலாம்!
சிவராமன் சொல்லி முடிக்க ஒரு இனம் தெரியாத அரிப்பு தியாகராஜா மனதில்.
அவர்கள் இருவரும் தர்மசங்கடத்துடன் நெளிவார்கள் என்பதை மறைமுகமாகப் பார்த்து ஆசைப்பட நினைத்த அவனுக்கு இப்படி சிவராமன் சொன்னது ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றமாக இருக்கிறது.
Good night சொல்லி விட்டுப் போகும் நண்பனை ஒரு வித எரிச்சலுடன் பார்க்கிறான் தியாகராஜா.
கொன்பிரண்சுக்குப் போன றிப்போர்ட் எழுத வேண்டும்.
சுசீலா படுத்து விட்டாள். ஒரு விதத்தில் அதிகம் அவள் பேசிக்கொள்ளாது அவனுக்கு நிம்மதியாக இருக்கிறது.
றிப்போர்ட் எழுதி விட்டு வர அவள் நித்திரையாக இருப்பதைப் பார்க்க ஆறுதலாக இருக்கிறது. களங்கமற்ற அவள் முகமும் நிர்மலமான சிவராமனின் கண்களும் தான் குற்றவாளியோ என நினைக்கப் பண்ணுகிறது.
என்ன இருந்தாலும் என்ன? ஏன் சும்மா மனதில் நினைத்துப் புழுங்கிக் கொண்டிருக்க வேண்டும்?
அடுத்த நாள் அரித்துக் கொண்டிருந்த வீட்டு நினைவுகளால் வேலை ஒடவில்லை.
எவ்வளவு விரைவாக வரவேண்டுமோ அவ்வளவு வரைவாக வரவேண்டும் போல் இருக்கிறது.
சிவராமன் எப்போது போவேன் எனது சொல்லவில்லை. வீட்டுக்குப்போய் இருப்பானா இப்போது.
அதற்கிடையில் அவர்களைக் கவனிக்க வேண்டும் போல் இருக்கிறது.
தற்செயலாக சுசீலா சண்டைக்கு வந்தாலும் ‘புருவ்’ பண்ண ஏதும் தடயம் கிடைக்காதோ என்ற நப்பாசை. தான் நினைத்தது சரியாக இருக்கவேண்டுமே! வீட்டில் யாரும் இல்லை!
வெறும் வீடு.
நேற்றுக் கதவைத் திறக்க கலகலவென்று சிரித்த சத்தம் காதில் கேட்பது போன்ற உணர்ச்சி எங்கே போய் விட்டார்கள்.?
வெளியில் பனி கொட்டுகிறது.
சுசீலாவுக்கு இன்னும் வேலை விட்டிருக்காது.
ஆனால் சிவராமனின் லெக்ஸர் முடிந்திருக்கும். எங்கே போய் விட்டாள்?
ஒரு வேலை சுசீலாவைக் கூப்பிடப்போய் விட்டானோ?
நடேசன் சொன்னான் இருவரும் ஒன்றாய் வருவதாக.
சிவராமனுக்குக் கார் இல்லை. சுசீலாவின் காரில் வருவதுண்டு.
அதுதான் உண்மை.
ஆனால் தியாகராஜாவுக்குப் புரியவில்லை. ஏன் அதை நம்பிக் கொண்டு சிவராமனைத் தன் மனைவியுடன் பார்க்க வேண்டுமென்று.
முன் ஹாலில் செஸ்போர்ட் இல்லை.
சிவராமனே இல்லாத உணர்ச்சி.
சிவராமனின் அறையை எட்டிப் பார்க்கிறான். வெறுமை! ஒரு சாமானும் இல்லை.
இனம் தெரியாத பயத்துடன் தன் படுக்கை அறைக்குள் போகிறான்.
சுசீலா ஓடி விட்டாளோ சிவராமனுடன்? வெளியில் கதவு திறக்கும் சத்தம்.
சுசீலா! அப்பாடா நிம்மதி!
ஏன் நேரத்துடன் இவன் வந்தான் என்று அவள் நினைத்திருக்க வேண்டும். வியப்புக் கண்களில் தெரிகிறது அசட்டுச் சிரிப்பு இவன் முகத்தில்.
“நாளைக்கு இன்னொரு கொன்பிரன்சுக்குப் போகிறேன். கொஞ்சம் றெஸ்ட் எடுக்க வேண்டும்” அவனுக்குத் தெரியும் அது காரணமில்லை என்பது இவனுக்குத் தெரிகிறது. அவள் மௌனமாகப் போகிறாள்.
என்ன நடந்துவிட்டது?
ஏன் மௌனமாக இருக்கிறாள்?
சிவராமனின் பிரிவோ! அவள் மௌனம் அசாதரணம். “இரவு சாப்பாட்டுக்கு என்ன வேணும்” அவள் கேட்கிறாள்.
பெரும்பாலும் அவன் விருப்பத்தைக் கேட்காமல் விடுவதில்லை.
அவள் கேட்ட விதமும், முகம் சரிந்த விதமும் இனிய குழந்தையை ஞாபக முட்டுகிறது. அவளை இன்னொருத்தனுடன் சேர்த்து நினைத்தது பாவமான சிந்தனையாய்த் தெரிகிறது. அவனுக்கு மெல்லமாய்ப போய் மனைவியை அணைத்துக்கொள்கிறான்.
அவள் திமிறவில்லை.
உங்கள் நண்பர் போய்விட்டார். அவள் சொல்கிறாள்.
தன்னின் அணைப்பில் அவனின் ஞாபகம் அவளுக்கு வருவது இவனுக்கு எரிச்சலாக இருக்கிறது.
எவ்வளவு காலம் அவனை நினைத்துக் கொண்டிருக்கப்போகிறாள்? அவனுக்கு மறைமுகமான ஆத்திரம் பொங்குகிறது. நான் உன் கணவன் என்னுடன் இருக்கும்போது ஏன் மற்றவனை யோசிக்கிறாய் என்று கேட்கவேண்டும் போல் இருக்கிறது.
ஏன் கேட்க வேண்டும்?
என்னுடன் இருக்கவேண்டும் அவள் முழுக்க முழுக்க என்னுடையவள் என்று புரிய வைக்கவேண்டும். உலகம், இன்னும் இருளவில்லை. ஜன்னல் திரையைப் போடுகிறான். வேலைக்குப் போய் விட்டு வந்த உடுப்புகளை மாற்றிக் கொண்டிருந்தவள் கணவனைத் திரும்பிப் பார்க்கிறாள்.
டை கழட்டி, சப்பாத்துக்களை எறிந்து, சேர்ட் கழட்டி கொண்டிருக்கும் கணவைனப் பார்க்கிறாள்.
இவள் இரவு சாப்பாடென்ன என்ற கேள்விக்கு அவன் சொல்லப் போகும் பதில் அவளுக்குப் புரிகிறது. நீல ஜீன்சும், கருப்பு புல்லோவரும் போட்டிரகுகம் இவள் அவனைப் பார்க்கிறாள்.
அவன் பார்வை உணர்ச்சிக் கொந்தளிப்பில் உயர்ந்து அவளில் தவழும் மார்பகங்களில் நிலைக்கிறது.
“Do you want to use them” அவளின் குரலில் உள்ள எந்த உணர்ச்சியும் அவனுக்குப் புரியவில்லை. ஏளனமும் எக்காளமுமா அல்லது …?;.
“You are the Owner” அவளின் கண்கள் கலங்குவதை அவன் போன்ற கணவன்கள் எங்கே கவனிக்கிறார்கள்?
– ‘ஞானம்’ இலங்கை பிரசுரம் 2014