கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 11,635 
 
 

அலுவலக ஜீப்பில் அந்த வீட்டின் முன் நின்று இறங்கிய போது, என் மனம் பரபரவென இருந்தது. எத்தனையோ தடவை அந்த வீட்டினுள் சென்றிருக்கின்றேன். ஆனால் இந்த தடவை நுழைவதற்கும், இதற்கு முன்பு நுழைந்ததற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் என் மனதில் அந்த பரபரப்பு.

பெரிய மதில் சுவர். நடுவில் அந்த சுவருக்கு கொஞ்சம் கூட பொருந்தாத மரசட்டத்தில் தகரம் அடித்த சாதாரண கதவு. ஒரு பக்கம் எப்பொழுதும் மூடி இருக்கும். இன்னொரு கதவு சாத்தினமாதிரி இருக்கும். யார் வேண்டுமென்றாலும் திறந்து போகலாம். உள்ளே நுழைந்தவுடன் வீட்டை பார்த்தால் யாருமே பிரமித்து போவார்கள்.

நூறு மீட்டர் நீளமுள்ள நடைபாதை. இருபுறமும் செடிகள். அதன் பின் இருபது படிகள். கிட்டதட்ட 10 அடி உயரம். அதன் மேல்தான் திண்ணையே ஆரம்பிக்கும். வீட்டை நிமிர்ந்துதான் பார்க்க வேண்டும். கழுத்து வலிக்கும். வெள்ளத்தினால் தண்ணீர் வராமல் இருக்க அவ்வளவு படிகள் கட்டியதாக கூறுவார்கள். இந்த காலத்தில் முட்டி வலியில் அவதிபடுபவர்கள் ஏறுவது கடினம். யார் கதவை திறந்தாலும் அந்த உயரமான திண்ணையில் அமர்ந்திருப்பவருக்கு தெரியும். குளிக்க, சாப்பிட மற்றும் உறங்க, இதை தவிர அவர் வீட்டினுள் செல்லமாட்டார். நேரத்தில் பெரும் பகுதி அவர் அந்த திண்ணையில் தான் அமர்ந்திருப்பார். அவர் பக்கத்தில் கணக்குபிள்ளை.

அவர் அமர்ந்திருக்கும் சேரை, ஈசி சேர் வகையில் சேர்க்க முடியாவிட்டாலும், சாய்வான சேர் என்று கூறலாம். கை வைச்ச பனியன், வேஷ்டி இதுதான் அவரது உடை. அவரது முகம் மிக பிரகாசமா இருக்கும். அதற்கு அழகு சேர்ப்பது போல் அவரது நெற்றியில் விபூதி பட்டை. குங்குமம் இருக்காது. கழுத்தில் தங்க செயின். கதவை திறந்தவுடன், அவரது குரல்”யாருங்க” என்று அதட்டலாக வரும். நாம் இன்னார் என்று தெரியபடுத்தியவுடன், “வாங்க” என்று அழைப்பு வரும்.

அவரது வாங்க என்ற சொல்லை கேட்டவுடன் கணக்குபிள்ளை எழுந்து வருபவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு பாயை விரிப்பார். அவரை பார்க்க வந்தாலும், அமர்வதற்க்கு பாய்தான். அந்த மனிதரைதான் நான் இப்பொழுது சந்திக்க போகின்றேன்.

என்ன, நான் இதற்கு முன் பல தடவை பார்க்க போன போது இருந்த சூழ்நிலை வேறு. என் அப்பாதான் என்னை அழைத்து செல்வார். மனதில் எந்த விதமான விருப்பும் இல்லாமல் அப்பாவின் விருப்பத்திற்க்காக பலதடவை சந்தித்திருக்கின்றேன். வாயை திறந்து ஒரு தடவை கூட அவரிடம் பேசியதில்லை. இந்த முறை முதல் தடவையாக என் அப்பா கூட இல்லாமல் அவரை சந்திக்க போகின்றேன், அவரிடம் முதல் தடவையாக பேச போகின்றேன்.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பள்ளி பாடத்தில் படித்திருக்கின்றேன். என் குடும்பத்தார், கடனுக்காக எப்போழுதும் பணமிருப்பவர்களிடம் பணி செய்து காலத்தை கழிப்பவர்கள். வறுமையோடு வசதியாக வாழ்வது ஒரு கலை. அதை மிக திறமையாக செய்தார் என் அப்பா. குடிசை வீடு, பழைய பாத்திரங்கள், அழுக்கு சட்டை, கஞ்சி மட்டுமே உணவு என வறுமைக்கான அடையாளங்களை விருப்பத்தோடு, அதற்கு மேல் முன்னேற வேண்டும் என்று துளி கூட எண்ணமில்லாமல் அதோடு வசதியாக வாழ்ந்தவர். முன்னோர்கள்பட்ட கடனுக்கு, விவசாய கூலியாக தலை முறை தலைமுறையாக உழைப்பை கொடுத்த பரம்பரையில் வந்தவர். தீடிரென என்னை படிக்க வைக்க வேண்டும் என அவருக்கு தோன்றியிருக்கிறது. ஏதாவது சார் சொன்னாரா? என்று எனக்கு எப்பொழுதும் ஆச்சர்யம் வரும். எவர் சொன்னால் என்ன, என்னை பள்ளியில் சேர்ப்பது என தீர்மாணித்து விளையாடி கொண்டிருந்த என்னை, தர தரவென இழுத்து கொண்டு இந்த வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தார். அதுதான் நான் முதல் தடவையாக இந்த வீட்டினுள் நுழைந்தது. அப்பாவும் நானும் வெறும் உடம்போடு, அவர் வேஷ்டி, நான் டிரவுசருடன் நுழைந்தோம். “யாருங்க” கணீரென குரல்.

நாந்தான் முனியன்.

என்னடா காலங்காத்தால

எனக்கு அந்த படி, செடி, கதவை பார்த்து பயங்கர ஆச்சர்யம். கட கடவென படியில் ஏறி ஓட வேண்டும் என்று ஆர்வம். நிச்சயம் நான் அப்படி செய்வேன்னு எங்க அப்பாவுக்கு தெரிஞ்சதால, என் கையை இறுக்க பிடிச்சிருந்தார். நான் அவர் கையை கிள்ளிகிட்டே இருந்தேன்.

என்னடா சொல்லு.

என் பிள்ளைய ஸ்கூல்லே சேர்க்கனும்.

நல்ல விஷயம். சேரு. நான் ஸ்கூல்ல சொல்லிர்றேன். அவனுக்கு முத சட்டைய வாங்கி போடு. காசை கணக்கு பிள்ளைக்கிட்ட வாங்கிக்கோ என்று சொல்லிவிட்டு கையில இருந்த பேப்பருக்குள் புகுந்து விட்டார்.

என் அப்பா தன்னை பார்க்காத மனிதரை பார்த்து கும்பிட்டுவிட்டு என்னை இழுத்து கொண்டு கிளம்பினார். நான் திரும்பி அந்த வீட்டை பார்த்த வண்ணம் வந்தேன். அதன் பின்னே ஒவ்வொரு வருஷமும் என்னை அவர்கிட்ட கூட்டிக்கிட்டு போய் காசு கேட்பார். அவரும் கொடுப்பார். எனக்கு விவரம் புரிய புரிய அந்த யாசகத்தின் மேல் வெறுப்புதான் வந்தது. அவர் என் அப்பாவை வாடா, போடா என்று அழைத்தது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு தடவை கூட நாங்கள் அந்த படியின் மேல் ஏறி வர அனுமதிக்கபட்டதில்லை. எனக்கு ஏக்கமாக இருக்கும். பலதடவை என் அப்பாவிடம் நீ மட்டும் போய்ட்டு வா, எனக்கு அங்க வர பிடிக்கல என சண்டை போட்டிருக்கேன்.

டேய், அவர் நமக்கு படி அளக்கிறவர்டா. வாங்குற நாம பணிவோட தாண்டா கேட்கனும். நீயும் படிச்சு பணம் காசு சம்பாதி அப்புறம் நெஞ்சை நிமித்தலாம். உன்னை கூட்டிக்கிட்டு போய் வருஷா வருஷாம் காட்டுறேனே, அவர் வீட்டுல இருக்கிற படி மாதிரி உன் வாழ்க்கையும் உசரனும்ன்னு உனக்கு உரைக்கனும். கடவுள் காசையும், உழைப்பையும் வேற வேற இடத்திலதான் எப்பவுமே வைக்கிறான். இது இரண்டையுமே இணைக்கிறது சரஸ்வதிதான். அவுக எல்லாம் முன்னாடியே சரஸ்வதிய வைச்சு உழச்சு காசு சம்பாதிச்சுட்டாங்க. நம்ப குடும்பத்துல நீதான் முத தடவையா அத மாதிரி செய்ய போற. அதுக்குதான் வருஷத்துல ஒரு தடவையாவது அவுக மூஞ்சிய உங்கிட்ட காட்டுறேன். பார்த்துட்டு வந்து ரோஷத்தை படிப்பில காட்டு. அப்படின்னு திட்டுனார்.

எங்க அப்பா மாதிரி அவர கும்பிட்டு நிக்க எனக்கு பிடிக்கல. விரைச்ச மாதிரி நிப்பேன். வருசா வருசம், அவர் ஒரு சொல் மட்டும் என் காதில விழும். “நல்லா படிக்க சொல்லு, இனம் வளரும்”

எனக்கு அந்த படி மேல ஏறனும், என் அப்பாவை போல படிக்கு கீழ குனிந்து இருக்கிற நிலைமை இருக்க கூடாது என்று ரோஷமா இருந்துச்சு. கல்லூரி படிப்பை முடித்தபின் மேற்படிப்புக்காக செல்லும் முன் இந்த வீட்டினுள் நுழைந்தது தான் கடைசி.

மேல நல்லா படி, நல்ல வேலைக்கு போ, இனத்தை வளரு நீ மட்டும் வளரனும்ன்னு நினக்காதே என்றார்.

ஏனக்கு சிரிப்புதான் வந்தது. இவர் இனம் என்று எதை சொல்லுகிறாருன்னு தெரியலை. மேற்படிப்பு முடித்து குரூப் 2 எழுதி, இன்கம்டாக்ஸ் ஆபிசராக சேர்ந்தேன். இன்கம்டாக்ஸ் ரெய்ட் என்று இவர் பேர் குறிப்பிடவும் எனக்கு அவ்வளவு சந்தோஷம். என்னுடைய நீண்ட கால ஆசை நிறைவேற போகிறது. கம்பீரமாக அந்த படிகளின் மேல் ஏற போகிறேன் என்று பெருமையுடன் கூடிய படபடப்பு.

கதவை திறந்தவுடன் ‘யாருங்க” என்று அதே குரல்.

“நாங்க இன்கம்டாக்ஸ் ஆபிஸுல இருந்து வந்திருக்கோம். உங்க வீட்டுல ரெய்டு” என்று உரத்த குரலில் சொன்னேன்.

வாங்க என்றார். அந்த படி அருகே சென்றவுடன் ஆக்கனிலை அனிச்சை செயலாக நின்று விட்டது என் கால். “சார், மேலே ஏறுங்க சார் ஏன்ற குரல் கேட்டவுடன் தான் ஏறினேன். ஓவ்வொரு படியும் நிதானமாக என் காலை பதித்து பதித்து நிதானமாக ஏறினேன். எவ்வளவு நாள் ஆசை. உணர்ந்து செய்ய வேண்டுமல்லவா. ரசித்து ஏறினேன். மேலே ஏறி நின்று கீழே பார்க்கும் போதுதான் தெரிந்தது அவர் அமர்ந்திருந்த இடம் எவ்வளவு உயரத்தில்.

வழக்கம் போல் பாய்தான் போடபட்டது.

“சார், நாங்க நிறைய ரீக்கார்ட்ஸ் எல்லாம் பார்க்கனும். டேபிள் சேர் எல்லாம் ஒரு ரூம்ல போட சொல்லுங்க”என்று அதட்டலாக உத்தரவிட்டேன்.

“டேய், உள்ளே சார் சொல்லுற மாதிரி ரெடி பண்ணுறா. ரெடி பண்ணுற வரை உட்காருங்க” என்றார்.

நான் உட்காரவில்லை. இன்னும் ஏன் கீழே உட்காரணும். சரி சமமா உட்காரணும். நின்ன காலம் மலையேறி போச்சுன்னு காட்ட வேண்டாமா. அருகாமையில் அவர் முகத்தை பார்க்கிறேன். இவ்வளவு காலம் தாண்டியும் அவர் முகத்தில் உள்ள பளபளப்பு குறையல. சுருக்கம் மட்டும் அதிகமாகியுள்ளது. அவர் கண்ணை பார்க்கிறேன். என்னை அடையாளம் தெரிந்த மாதிரி தெரியலை.

“சார், என் ஆடிட்டரை வர சொல்லலாமா? என்று கேட்டார்.

” தாரளமா, போன் பண்ணி விஷயத்தை சொல்லி வர சொல்லுங்க. வீட்டுல இருந்து யாரையும் வெளிய போக வேண்டாம்ன்னு சொல்லிடுங்க. பயப்படுறதுக்கு ஓன்னும் இல்லை. எல்லாம் ரொட்டீனா நடக்குறதுதான். பத்திரம், நகை எல்லாம் அசெஸ் பண்ணனும். எல்லாத்தையும் சரியா காட்டீடுங்க” என்றேன்.

“நல்லது சார். என் கணக்கு பிள்ளைக்கு எல்லாம் தெரியும். நீங்க எதை கேட்டாலும் எடுத்து கொடுத்துடுவான். முறையா கணக்கு வைக்காத பணம், கம்மாயில புதைச்ச பணம் மாதிரி. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நா, நமக்கே எங்கே வச்சோம்ன்னு தெரியாது. நமக்கு பயன்படாம போயிடும்ன்னு என் பாட்டன் சொல்லி கொடுத்தது. வரி முறை படிதான் கட்டியிருக்கோம். உங்க திருப்திக்கு பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு பேப்பரில் புகுந்தார்.

என்னை யாருன்னு ஒரு வார்த்தை விசாரிக்க மாட்டீங்கிறாரேன்னு ஏமாற்றம். விசாலமான அரண்மனை. எங்கு பார்த்தாலும் லெட்சுமி கடாட்சம். பெரிய பெரிய முன்னோர் போட்டாக்கள். சாமி படம் முதற் கொண்டு பெரிது பெரிதாகதான் இருந்தது. தலைமுறை தலைமுறையாக சேமிக்கப்பட்ட விஷயங்கள் என்பது நன்றாக தெரிந்தது. ஒரு பெரியவர் மிக பெரிய படிப்பு படித்து பட்டம் பெறுவது போன்ற போட்டோ இருந்தது. போட்டோ ஸ்டுடியோ பெயர் போட்டு பர்மா என்று இருந்தது. பர்மாவில் இருந்து வந்த குடும்பம் போல.

அவருடைய குடும்பத்தார் எங்களை மிக மரியாதையாக நடத்தினார்கள். யாருக்கும் என்னை தெரியவில்லை. அவரோட ஆடிட்டர் வந்தார்.

“சார் வாங்கோ. ஓன்னும் சொல்லலை” என்று நக்கலாக கேட்டு பெரிதாக சிரித்தார்.

” சாமி பார்த்து, உங்க நக்கலால, என்னை சிரம படுத்திட போறாங்க” என்றார் பெரியவர்.

நீங்க கவலை படாதேள், மடியல கனம் இருக்கிறவா தான் பயப்படனும். என்னைக்கு எதை முறை இல்லாம வாங்கி இருக்கீங்க இல்ல கொடுத்திருக்கீங்க. உங்க இடத்துக்கு ரெய்டு பண்ண ஆர்டர் ஏன் போட்டாங்கன்னு தான் தெரியலை. புது ஆட்களுக்கு உங்க அருமை தெரியல என்று குத்தி பேசினார்.

“சார், கொஞ்சம் எங்களோட விஷயங்களை கவனிக்கிறீங்களான்னு” கடுமையா சொன்னேன்.

“சாரி சார். வாங்க ரிகார்ட்ஸ் பார்க்கலாம்ன்னு என்னை அழைச்சிட்டு ரூம்குள்ள போனார்.

உடன் வந்த அதிகாரிகள் சல்லடை போட்டு தூண்டி தூருவி பார்த்தார்கள். கணக்கு வழக்குகளை மெயிண்டெயின் பண்ணிருக்குற முறைகளை பார்த்து அவர்களுக்கு ஆச்சர்யம்.

“சார், பெர்பெக்ட் ரீக்கார்ட் மெயிண்டனென்ஸ். பக்காவா இருக்கு. எதுக்கு செலக்ட் பண்ணாங்கன்னு எங்களுக்கு ஆச்சர்யமா இருக்கு என என் சக அதிகாரி ஆங்கிலத்தில் கேட்டார்.

இங்க எதுவும் கிடைக்காதுன்னு தெரியாதா? நான் வந்த நோக்கம் வேறேயே. படி ஏறனும்ன்னு நினைச்சேன். படி ஏறிட்டேன். என் பெருமை அவருக்கு தெரியனும் நினைச்சேன் இன்னும் நடக்கலையே என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்.

“சார் முடிச்சுடுவோமா? என்றார். எஸ் முடிச்சிடலாம். என்ன ரிக்காட்ஸ் தேவையோ அதை மட்டும் எடுத்துக்கலாம். எதையும் சீல் பண்ணனுமா?.

“தேவைபடாது சார். பஞ்சனாமாவ ரெடி பண்ணிடுறேன் என்று போய்விட்டார்.

நான் மெதுவாக பெரியவரிடத்தில் போய் நின்றேன். “என் கிட்ட எதுவும் கேக்கனுமா? என்று கேட்டவரிடம்,

“சார், நான் யாருன்னு தெரியுமா. மேட்டுகடை முனியன் பையன்” என்றேன்.

அவர் என் முகத்தை நேருக்கு நேர் முதல் தடவையாக பார்த்தார். என் கண் தரையை பார்த்து தாழ்ந்தது. அவர் முகத்தில் பரவசம் கலந்த சிரிப்பு. நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஏளனம் கலந்த சிரிப்பு நான் எதிர்பார்த்தது. ஆனால் அவர் முகத்தில் தெரிந்த சிரிப்போ அவர் பெற்ற மகனை பார்த்து சிரித்தது போல் இருந்தது. “டேய் முனியன் பையனா. மகிழ்ச்சி. உங்க அப்பன் இதைதானே எதிர்பார்த்தான். அவன் வயித்துல பால் வார்த்துட்ட. முனியன் எங்க இருக்கான். உன் கூடதானே இருக்கான்?’

“இல்ல, நான் குவாட்டர்ஸ்ல இருக்கேன். அவர் அதே வீட்டிலதான் இருக்கார்”

“ஏண்டா, அவன் இருக்கிற வீட்டில தானே நீ இருக்கனும். உன் இடத்துக்கு அவன் வருவானா? அதுக்கா அவ்வளவு கஷ்டபட்டான். டேய் நீதாண்ட இனிமே உங்க இனத்து முன்மாதிரி. உங்க குடும்பத்துல முத முத சரஸ்வதி கடாட்சம் வாங்குனவன் நீ. இனி உன் உழைப்பில செல்வம் தேடி வரும்டா. எங்கிட்ட உதவிக்கு வர்றவங்ககிட்ட, படிச்சா இனம் வளரும். நீ மட்டும் வளரனும் நினக்காதே, இனத்தோட சேர்த்து வாழ்ன்னு சொல்வேன். ஏன்னு நினக்கிற, ஒருத்தன் உசரும் போது கூட இருக்கிறவங்களையும், வளர்ற சந்ததிகளையும் சேர்த்துகிட்டு வளரனும்.

எங்க குடும்பம் எல்லாம், பரம்பரையா பணக்காரங்கன்னு நினைச்சயா? எல்லாம் பர்மாவுல அடிமைபட்ட குடும்பத்தை சேர்ந்தவங்கதான். என் பாட்டன்லையும் ஒருத்தன் சட்டை இல்லாம, உங்க அப்பனை போல நின்னவன்தான். எல்லா இனத்திலேயும், ஒருத்தனுக்கு படிக்கனும் தோணும். அவனால எந்திரிக்கிறதுதான் அவன் சந்ததியே. உங்க அப்பன் முத முத உன்னை படிக்க வைக்க போறேன்னு சொன்னப்ப, ஒருத்தனுக்காவது புத்தி வந்துச்சே, இனி அவன் சமுதாயம் முன்னேறிடும்ன்னு எனக்கு சந்தோஷம். இப்ப நீ எந்திரிச்சிட்ட. இப்பதான் உன் இனத்து பக்கத்தில நிக்கனும். உதவனும். உன்னை பார்த்து அவனுக படிக்கனும் வளரனும். அதை செய். குவாட்டர்ஸ்ல தங்கினா, உன்னை யாருக்கு தெரியும். உங்க இனத்தோட வேர் நீ. தண்ணிய தேடி வேர் தானா போகும். அது மாதிரி, உங்க இனத்தோட உதவிக்கு நீ தானா போகனும். வீட்டை காலி பண்ணிட்டு உங்க அப்பனோட போய் இரு. இனிமே உங்க பக்கத்துல இருந்து உதவி கேட்டு என் கிட்ட எவனும் வரக்கூடாது பார்த்துக்கோன்னு என்று அவர் சொல்ல சொல்ல என் கண்களில் கண்ணீர் மள மளவென வடிந்தது.

அவர் என் அப்பாவை உதாசீனபடுத்தியதாக கோபப்பட்டேன். உண்மையல, என் இனத்தை உதாசீனபடுத்தியது நாந்தானே. என் இனம் வளர நான் தான் வேர்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

“யாருங்க?”

“நாந்தான் முருகன் ஐயா” வெறும் உடம்போடு அப்பாவும் பையனும்.

“டேய் இனி என் வீட்டுக்கு வரக்கூடாது. இந்தா நிக்கிறாரே, இந்த சார் வீட்டுக்கு போங்க”

Print Friendly, PDF & Email

1 thought on “இன வேர்

  1. அருமையான கதை. ஒரு சமுதாயம் அல்லது இனத்திற்கு நல்வழி காட்ட முன்னேறிவிட்ட ஒருவரே போதும் என்ற கருத்தைச் சிறப்பாக வெளிக்கொண்டு வருகிறார் எழுத்தாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *