இசக்கியும் ஜோசியரும்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 14,014 
 

(இதற்கு முந்தைய ‘இசக்கியின் அம்மா’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

சும்மா இருக்க வேண்டாம் என்கிறதுக்காக, பெரிய அளவில் முதல் போட்ட தொழில் எதுவும் ஆரம்பிக்க இசக்கிக்குப் பிரியம் இல்லை. கமிஷன் வருகிற வியாபாரம் ஏதாவது செய்யலாம்னு நினைத்தான்.

ஆவுடையப்பன் அண்ணாச்சிக்கு மலையாளத்துக்கு சரக்கு வாங்கிபோடுகிற வியாபாரம்தான் தெரியும். அதனால் அவரிடம் போகாமல் கோட்டைச்சாமியைத் தேடிப்போனான். அவர் இசக்கியைவிட மூத்தவர். பொய் புரட்டல் இல்லாத மனுஷர்.

“வணக்கம் சாமி…”
“அடட.. இசக்கியா வா வா. ஒரு வார்த்தை சொல்லி விட்டிருந்தீன்னா நானே ஒன் வீட்டுக்கே கெளம்பி வந்திருப்பேனே..!”

“அதனால என்ன சாமி?”

“எப்படியிருக்கே? இலஞ்சில ஒன் மாமியார் வீட்ல எல்லாரும் எப்படியிருக்காக?”

“எல்லாரும் நல்ல இருக்காங்க சாமி.”

“பேசாமே நீயும் இலஞ்சில ஒரு வீட்டை வாங்கிட்டு அங்கேயே போய் இருந்திடலாம்ல?”

“அதெப்படிங்க சாமீ?”

“நீயும் ஒன் பொஞ்சாதியும் ஒத்தில கொட்டுக் கொட்டுன்னு உக்காந்திகிட்டு இந்த ஊர்ப்பயலுங்க வாயிலெல்லாம் அனாவசியமா விழுந்துக்கிட்டு.”

“யார்தேன் சாமி அவங்க வாயில விழல… வாழ்ந்தாலும் பேசுவானுங்க, தாழ்ந்தாலும் பேசுவானுங்க. அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா?”

“அப்ப ஒன் பிரியம்.”

“ஒரு முக்கியமான யோசனை கேக்கத்தான் வந்தேன் சாமி.”

“என்ன யோசனை வேணும்? கேளு சொல்றேன்.”

“மறுபடியும் ஏதாவது சின்னதா ஒரு தொழில் ஆரம்பிக்கலாம்னு யோசிக்கிறேன் சாமி. ஆனா அந்த எண்ணை ஆட்றது, தொவரை மிசின் போடற மாதிரியான இந்தவூரு வியாபாரமெல்லாம் இனிமே எதுவும் பண்றதா இல்ல… புது டைப்பா கொஞ்சம் அலுங்காம குலுங்காம, சும்மா இருக்கவேண்டாம் என்கிறதுக்காக சின்ன கடை வச்சு உக்காரலாமான்னு பாக்கறேன். நம்ம ஊர்ல இப்ப எந்த மாதிரியான கடை வச்சா கையைக் கடிக்காம வியாபாரம் பண்ணலாம்.?”

கோட்டைச்சாமி சிறிதுநேரம் யோசித்துவிட்டு, “நம்ம ஊர்ல ஒரு விசயம் கவனிச்சியா இசக்கி?” என்றார்.

“எது சாமி?”

“வீட்டுக்கு வீடு இந்த கரண்டு வந்தாலும் வந்தது, எலக்ட்ரிக் சாமானும் ரேடியோவும் விக்கற விப்பைப் பாத்தியா?”

“ஆமா சாமி. யாரைப் பாத்தாலும் மதுரையில போய் ரேடியோ வாங்கிட்டு வாராக…”

“நம்ம ஊருல உருப்படியா ரேடியோ விக்கிற கடைன்னு ஏதாவது மெயின் பசார்ல இருக்கா பாரு.”

கோட்டைச்சாமி சொன்ன இந்த உருப்படியான யோசனை இசக்கிக்கு ரொம்பவும் பிடித்துப்போக, மூன்றே மாதத்தில் மெயின் பஜாரிலேயே அம்மா பெயரில் ‘பூரணி எலக்ட்ரிகல்ஸ்’ என்கிற விலாசம் போட்டு ஜோராக ஒரு கடையை ஆரம்பித்துவிட்டான். எல்லா விதமான எலக்ட்ரிக் சாமான்களோடு மர்பி ரேடியோ விற்பனை உரிமையும் பெற்று, கடையில் வரிசையாக ஏழெட்டு மர்பி ரேடியோக்களை கண்ணாடி வழியாக பார்வைக்கும் வைத்துவிட்டான். மர்பி கம்பெனியிலிருந்து டை கட்டிய ஐயர் பையன் ஒருவன் வந்து ரேடியோக்களை எப்படி சனங்களைக் கவரும்படி வைக்க வேண்டும் என்றெல்லாம் விவரமாய் சொல்லிக் கொடுத்தான். தினமும் வியாபாரம் சூடு பிடித்தது.

ரேடியோக்களின் டிஸ்ப்ளேயை பார்ப்பதற்கென்றே இசக்கியின் மச்சான்கள் இலஞ்சியிலிருந்து வந்து விட்டுப்போனார்கள். இசக்கிக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி ரேடியோ விற்கும் தொழில் பிடித்துப்போய்விட்டது. காலையில் அம்மா படத்தை கும்பிட்டுவிட்டு வந்து கடையில் உட்கார்ந்தால் இசக்கி வேறு எந்த சோலிக்கும் போவது கிடையாது. ரேடியோவும் நிறைய விற்றது. சுத்துப்புற பட்டிக்காடுகளில் இருந்தெல்லாம் வந்து சின்னச் சின்ன ரேடியோவாக வாங்கிக்கொண்டு போனார்கள்.

கடையில் எப்போதும் சிலோன் தமிழ்ச்சேவை ஒலித்தது. கேக்கணுமா? ஊர் பூரா மர்பி ரேடியோதான். சிலோன்காரன் இசையும் கதையும்தான். மயில்வாஹணன் வேறு நேயர்களுக்குப் பிடித்தமான பாட்டாகப் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார். இசக்கிக்கும் போதும் போதுன்னு சொன்னாலும் துட்டு வந்து விழுந்துக்கிட்டே இருந்தது. இப்ப யாருமே இசக்கின்னு சொல்றதில்லை. இசக்கி அண்ணாச்சி! அது மூஞ்சிக்கு எதிர்ல. மூஞ்சிக்குப் பின்னாடி பனங்காட்டு இசக்கி.! எப்பவுமே பாளை சனங்களுக்கு ரெண்டு ரெண்டு நாக்கு..!

இப்படி காலச்சக்கரம் சுத்திக்கிட்டே இருந்தது. ரேடியோக்கடை நல்ல லாபத்தில் நடந்துக்கிட்டு இருந்தது. பிள்ளை குட்டிகள் இல்லையே என்கிற கவலை மன ஆழத்தில் இருந்தாலும் இசக்கி வெளியில் யார்கிட்டேயும் காட்டிக்கிறதே கிடையாது. கோமதிகூட சந்தோசமாத்தான் இருந்தாள்.

இசக்கி, எந்த ஊரில் திருவிழா நடந்தாலும் மனைவியையும் கூட்டிக்கொண்டு போய்விட்டு வருவார். ஒவ்வொரு கார்த்திகைக்கும் தவறாமல் திருப்பரங்குன்றம் போவார்கள். ஆடிக் கார்த்திகைக்கு திருத்தணி; பெரிய கார்த்திகைக்கு மட்டும் திருச்செந்தூர்; தைப்பூசத்துக்கு வடலூர்; மாசிமகம் கும்பகோணத்துக்கு; பங்குனி உத்திரம் திருவந்திபுரத்துக்கு; சித்திரைத் திருவிழா வந்து விட்டால் இருக்கவே இருக்கிறது மதுரை. இப்படிக் கோயில் கோயிலாகப் போய்வந்து கொண்டிருந்தார்கள் புருசனும், மனைவியும்.

இதற்கிடையே வெயில் காலத்தில் கொடைக்கானல், காத்து காலத்தில் குற்றாலம் என்று உல்லாசப் பயணங்கள் வேறு. இந்தியாவில் இசக்கி அண்ணாச்சி பாக்காத ஊருன்னு ஏதாச்சும் இருக்கான்னு ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டது ரொம்ப உண்மையும் கூட. பார்வதியும் சிவனும் போல இசக்கியும் கோமதியும் ஒண்ணாவே இருந்தார்கள். கோமதியின் காதிலும், கழுத்திலும், மூக்கிலும், கையிலும் நூத்தியம்பது பவுன் நகை கிடந்ததைப் பார்த்தே தெரிஞ்சிக்கலாம், இசக்கிக்கு மனைவி மேல் இருந்த பிரியத்தை. அவ்வளவு ஐக்கியமாக இருந்தார்கள். கோமதியை எப்போதும் சந்தோஷமாக வைத்திருந்தார்.

அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு சண்டை சச்சரவு வந்து யாரும் பார்த்தது கிடையாது. அப்படியொரு ஆதர்ச புருஷன் பொண்டாட்டியாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அதனால் திருஷ்டி விழுந்துவிட்டது.

பக்கத்து ஊரான காவலூர்ல ரொம்ப ஜோரா ஜோசியம் பாக்கிற ஒருத்தரைப் பார்க்கிறதுக்காக, துணைக்கு வரச்சொல்லி சிநேகிதர் ஒருத்தர் வந்து இசக்கியைக் கையைப் பிடிச்சி இழுக்காத குறையாகக் தன்னுடன் கூப்பிட்டார்.

“கொஞ்சம் சோலி இருக்கு எனக்கு” என்றார் இசக்கி.

“எனக்காக வரக்கூடாதா அண்ணாச்சி..” சிநேகிதர் கெஞ்சினார்.

“ரொம்பத்தேன் ஆசையா கூப்பிடுறீக… சரி வாங்க போவம்.”

இசக்கியும் சிநேகிதருடன் காவலூர் கிளம்பிவிட்டார். விதி சிநேகிதர் உருவில் வந்து காவலூருக்கு இழுத்துக்கொண்டு போய்விட்டது. வேறென்ன?

சிநேகிதர் காவலூர் ஜோசியரிடம் தனது ஜாதகத்தைக் காட்டிக் கேட்க வேண்டியது பூராவையும் கேட்டுக்கொண்டு விட்டார். அவ்வளவுதான் வந்த சோலி முடிந்தது. கிளம்பலாமா என்பது மாதிரி சிநேகிதரும் பார்த்தார்.

அப்போதுதான் ஜோதிடர் இசக்கியப் பார்த்து சரித்திர முக்கியமான கேள்வியைக் கேட்டார். “அண்ணாச்சிக்கு சிம்ம லக்னமா?”

இசக்கி அசந்து போனார் அசந்து.

“எப்படி அவ்வளவு கரெக்டா கேட்டீங்க?”

“என்ன அண்ணாச்சி, ஒருத்தரோட தலை அமைப்பைப் பாத்தே அவரோட லக்னத்தைச் சொல்ல முடியலைன்னா பெறகு என்ன அர்த்தம் நா ஒரு ஜோசியர் என்கிறதுக்கு?”

இசக்கிக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. காவலூர் ஜோசியர் அவ்வளவு பெரிய ஆளான்னு. சிநேகிதர் தூண்டி விட்டார்.

“அண்ணாச்சி நீங்களுந்தேன் ஒருநாள் ஒங்க ஜாதகத்தைக் கொண்டாந்து காட்டுங்களேன்..!”

இசக்கிக்கு சிறிது ஆர்வமாக இருந்தாலும் ‘பாப்பம்’ என்று சொல்லி மழுப்பப் பார்த்தார். சிநேகிதர் விடவில்லை. ஜோதிடரிடம் “நம்ம அண்ணாச்சிக்கு சொத்து சுகம் எக்கச்சக்கமா இருக்கு ஜோசியரே. ஆனா அதையெல்லாம் கட்டி பின்னால ஆள்றதுக்குத்தேன் வாரிசு இல்லாமப் போயிருச்சி.”

“அண்ணாச்சியை ஜாதகத்தை எடுத்தாரச் சொல்லுங்க. ‘தரவ்’வா பாத்துப்பிடுவோம்.”

இசக்கி இதற்குமுன் எதற்காகவும் தன்னுடைய ஜாதகத்தை தூக்கிக்கொண்டு எந்த ஜோதிடரிடமும் போனதில்லை. பூரணி திடீர் திடீர்னு எடுத்துக்கொண்டு போவாள், வருவாள். இசக்கி அம்மாவிடம் அதைப்பற்றி கேட்டுக் கொண்டதில்லை. இசக்கிக்கு பொதுவாக ஜோதிடத்தில் பெரிதாக ஆர்வம் எதுவும் இருந்தது கிடையாது. ஆனால் தான் ஒரு சிம்ம லக்னத்துக்காரன் என்ற விஷயம் மாத்திரம் தெரியும். தன்னுடைய தலையைப் பார்த்த உடனேயே அதை ஜோதிடர் சொல்லிவிட்டது இசக்கியை ரொம்ப ஆச்சர்யப்படுத்தி விட்டது. அதனால் அடுத்த நாளே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சிநேகிதருடன் காவலூர் ஜோதிடரைப் பார்க்க கிளம்பிவிட்டார்.

ஜாதகத்தைப் பார்த்த அடுத்த நிமிஷம் ஜோதிடர், “ஆரு சொன்னா உங்களுக்கு வாரிசு கெடையாதுன்னு?”

இசக்கியும் சிநேகிதரும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். “சொல்லுங்க அண்ணாச்சி, கேக்குறேன்ல, ஆரு சொன்னது ஒங்களுக்கு வாரிசு கெடையாதுன்னு?”

“யாரும் சொல்லணுமாக்கும் இதை? வாரிசுதான் இல்லையே ஜோசியரே..”

“இதுவரைக்கும் இல்லை வாரிசு. அதனாலே ஆயுசுக்கும் இல்லாமலே போயிடுமா?

“என்னது, என்னது?” சிநேகிதர் ஆர்வத்துடன் கேட்டார்.

“ஆமா, இன்னும் எட்டு வருசம் கழிச்சிச் சொல்லுங்க வாரிசு வரும்னு.”

“என்ன அண்ணாச்சி பேசறீங்க… வாரிசு வாரதுக்கு வயசுன்னு ஏதாவது இருக்கா என்ன?”

“ஆமா, இப்பவே ஐம்பது வயசாயிருச்சி. பேரன் பேத்தி எடுக்கிற வயசுல வாரிசு வரப்போகுதுன்னு சொல்றீங்க. எனக்கு நம்பிக்கை இல்லை ஜோசியரே.”

“ஒங்களுக்கு கண்டிப்பா வாரிசு உண்டுன்னு சொல்றேன் அண்ணாச்சி. லக்னாதிபதி பத்துல இருக்கான். அந்தப் பத்தாம் இடத்தை விருச்சிகத்ல இருக்கிற குரு ஏழாம் பார்வையால பாக்கறான். இந்த ஒண்ணை வச்சிப் பாத்தாலே ஒங்களுக்கு கருமம் செய்யறதுக்கு ஆம்பளைப் பையன் கண்டிப்பா இருந்தே ஆகணும்னு எந்த ஜோசியக்காரனும் பாத்த அடுத்த நிமிசமே சொல்லிப்பிடுவான்.”

Print Friendly, PDF & Email

3 thoughts on “இசக்கியும் ஜோசியரும்

  1. சூப்பர் கண்ணன் அண்ணா .அருமையா போய்ட்டு இருக்கு கதை.விறுவிறுப்பா இருக்கு.தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை,ஒரு சின்ன கேள்வி
    உங்களுக்கு திருநெல்வேலியா? எனக்கு உங்க வட்டாரம்தான்
    குலசேகரப்பட்டினம்.

    1. ஆமாம். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றேன். தற்போது பெங்களூர் வாசம். நன்றி ஜாவித்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *