திரைகட லோடி திரவியம் தேடிய தமிழர் பரம்பரையில் வந்தது முத்து ‘கிராண் டிரங்க்’ ஏறி தில்லியை வந்தடைந்தான். பல்கலைக் கழக பட்டமா பெற்றிருக்கிறான் அவன், வேலை கிடைக்காமல் போக? இரண்டு கைகள் இருந்தன; உறுதி இருந்தது மனதில். வந்ததும் வேலை கிடைத்து விட்டது. மத்திய சர்க்கார் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஐந்தாறு உத்தியோகஸ்தர்களுடைய வீட்டையும், பாத்திரங்களையும் ‘விளங்க’ வைப்பதுதான் அந்த வேலை… மாதம் நூற்றிருபது ரூபாய் வந்தது.
சேலத்தில் இடைப்பாடியைச் சேர்ந்த அவனுக்கு ஊரில் பெரிய குடும்பம். அநேகமாக கிராமத்துக்குக் கிராமம் குடிசைத் தொழிலாக மாறிவிட்ட கள்ளச் சாராயம் இறக்குதல் என்ற பணியில் ஈடுபட்டிருந்த அவன் தந்தையை போலீசுக்கு உரிய சமயத்தில் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் கைது செய்து விட்டார்கள். குஞ்சும் குளுவான்களுமாக ஏழெட்டு தம்பி தங்கைகள். முத்து மாதா மாதம் அனுப்பி வந்த எழுபது ரூபாய், தம்பிகள் செய்து வந்த ‘எடு பிடி’ வேலைகள் ஆகியவை அந்தக் குடும்பத்தை பரிபூரணமாகப் பட்டினி கிடக்காமல் காப்பாற்றி வந்தன.
இந்தச் சமயத்தில்தான் முத்து காதல் நோய்க்குள்ளானான். ஒவ்வொருவருடைய வருமானத்தை பார்த்தா கணை தொடுக்கிறான் மன்மதன்? தில்லியில் வசந்த பஞ்சமி கொண்டாடினார்கள். மனமதன் அம்பு எய்தான். அது முத்துவின் மீது போய் விழுந்தது.
முத்து கரோல்பாகில் அஜ்மல்கான் ரோடு வழியாக வந்து கொண்டிருந்தான். நல்ல கூட்டம். நடைபாதையில் யானையைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு விலை கூறியவாறு இருந்தனர். அப்பொழுது திடீரென்று ஒரு பெண் குரல் கிறீச்சிட்டது. முத்து திரும்பிப் பார்த்தான். அங்கே
சேலத்தைச் சேர்ந்த பெண்தான். அவள் எதிரே ஒரு பெரிய அல்சேஷன் நாய். அவள் மீது எந்தக் கணத்திலும் பாயலாம் என்ற நிலையில், முஸ்தீபுக்குத் தயாராவது போல் உறுமிக் கொண்டிருந்தது.
அந்தப் பெண் எதிர்ப் பக்கமாக நின்று கொண்டிருந்தாள். முத்து குறுக்கே வந்து கொண்டிருக்கும் கார்களையும், ஸ்கூட்டர்களையும் பாராமல், உயிரை ஒரு பொருட்டாக மதிக்காது, எதிர்த் திசைக்கு ஓடினான். அந்தப் பெண்ணின் கைகளைப் பற்றி அவளை கடை ஓரமாக அணைத்துச் சென்றான்.
“ஏ… புல்லி..!” என்ற குரல் கேட்டது. அல்சேஷனின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு பஞ்சாபிப் பெண் அந்த நாயை அதட்டினாள். அது அவளை பின் தொடர்ந்தது.
காப்பாற்றப்பட்ட பெண், முத்துவை நன்றியுடன் நோக்கினாள். அவனும் நோக்கினான்.
தமிழ் இலக்கியத்தில் களிறு தரு காமம்’, ‘புனல் தரு காமம்’… என்றெல்லாம் சொல்வார்கள். இது ‘அல்சேஷன் தந்த காம’ மாயிற்று.
“உம் பேரென்ன?” என்றான் முத்து.
“ராசம்மா. உம் பேரென்ன?”
“முத்து!”
அப்பொழுதுதான் ராசம்மா முத்து தன்னை இன்னும் அணைத்துக் கொண்டிருக்கிறான் என்று உணர்ந்திருக்க வேண்டும். அவள் அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
“எம்மாம் பெரிய நாயி…” என்றாள் ராசம்மா.
“நாயைக் கண்டா கூச்சலா போடுவாங்க? கடிச்சுக் குதறி இருக்குமில்லே …!”
ஒரு பெண்ணின் ஸ்பரிசம், முத்துவுக்கு அதுதான் முதல் அநுபவம். அவன் அவளைதலையிலிருந்து கால் வரை ஆராய்ந்தான்.
“பொருத்தமாகத்தான் பேர் வைச்சிருக்காங்க பெத்தவங்க” என்றான் முத்து புன்னகையுடன்.
“என்ன சொல்லறே நீ?”
“ராசம்மாங்கற பேரைச் சொல்றேன்…”
“என்ன வம்பு பண்ணறயா?” அவள் இதைப் பொய்க் கோபத்துடன் சொல்லுகிறாள் என்பதை முத்து உணராமலில்லை.
“சரி வரயா, அந்த ஓரக் கடையிலே டீ குடிப்போம்?” என்றான் முத்து.
அவள் கொஞ்சம் தயங்கினாள். “சும்மா வா, பயம் தீருமில்லே?”
அஜ்மல்கான் ரோட்டினின்றும் கிளைத்த ஒரு சந்திலிருந்த டீக்கடைக்கு இருவரும் சென்றார்கள். கடை வாசலில் போடப்பட்டிருந்த ஆடும் பெஞ்சி’யில் இருவரும் உட்கார்ந்தனர்.
“எங்கே இருக்கே நீ?” என்று கேட்டான் முத்து
“பிர்லா மந்திருக்குப் பின்னாலே… நீ?”
“தேவ் நகர். நான் உன்னை இங்கே பார்த்ததேயில்லையே?”
“இப்பொத்தானே உனக்கு மீசை மொளைச்சிட்டு இருக்கு?” என்றாள் ராசம்மா. அவள் சிரித்தாள். பற்கள் வெள்ளை வெளேரென்று இருந்தன.
“பொம்பளைக்கு என்னா திமிரு?” என்றான் முத்து.
அப்பொழுது டீ வந்தது. இருவரும் வாங்கிக் கொண்டார்கள்.
“உனக்கு எந்த ஊரு?” என்றான் முத்து.
“உசிலம்பட்டி. உனக்கு?”
“எடப்பாடி!”
ராசம்மா டீயை குடித்து விட்டு, புடவைத் தலைப்பினால் வாயை துடைத்துக் கொண்டாள்.
“யார் இருக்காங்க உன் கூட?” என்று கேட்டான் முத்து.
“அப்பா இருக்காங்க… அம்மா போன வருஷம்தான் போனாங்க.”
“எங்கே ?”
“ஒரேடியா….” என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்.
“இதென்ன சிரிக்கிற?” என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்டான் முத்து.
“முளுவிப் போற மாதிரி கடனை வைச்சுட்டுப் போனாங் கன்னா, அவங்க போனதுக்கு அளுவா அளுவாங்க?”
“அவங்களாலே என்ன கடன்?”
முத்து காசைக் கொடுத்து விட்டு புறப்பட்டான். இருவரும் சந்து வழியே குருத்வாரா ரோட்டை நோக்கிச் சென்றார்கள்.
“அவங்களுக்கு ஒரே வியாதி; ஊருக்கும் போக மாட்டேன்னு பிடிவாதமாக இங்கே கிடந்தாங்க. பைசாதண்ணியாக் கரைஞ்சதுதான் மிச்சம்…”
“உங்கப்பாவும் சம்பாதிக்கிறாரில்லே?”
‘அவரா? அவங்களுக்கும் வந்திடிச்சி… சைக்கிள்லே சாப்பாடு எடுத்துக்கிட்டு சுத்தி சுத்தி கயத்துக் கட்டில்லே, இப்பொ ராவோடு ராவா கிடக்கிறாரு.”
“எப்படிச் சமாளிக்கிறே நீ…?” ராசம்மா சிறிது நேரம் பேசாமலிருந்தாள். ”நம்ம ஜனங்க யாருமா உனக்கு உதவி செய்யலே?”
“ஆமாம்… செய்வாங்க” என்று பழிப்புடன் கூறிவிட்டு அவள் மேலும் தொடர்ந்தாள். “இந்த முருகேசன் பயல்லே, எங்கேயோ ஆபீஸ்லே சப்ராசியா இருக்கானே, அவனை இந்த ஊருக்குக் கூட்டிகிட்ட வந்ததே எங்கப்பாதான். அவன் ஒரு கல்யாணம் கட்டிக்கிட்டு, இப்போ என்னை, ‘வைப்பா இருக்கியா, பணம் தரே ங்கிறான். திமிரு பிடிச்ச பய…”
குருத்வாரா ரோட் வந்ததும் முத்து நின்றான். அவன் ராசம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“இத பாரு…. நான் உன்னை கட்டிக்கிறேன், என்ன சொல்லறே நீ?” என்றான் அவன்.
“கட்டிக்கிறது கிடக்கட்டும், உனக்கு என்ன வருது வரும்படி…?”
“நூத்திருபது ரூபா… இதைத் தவிர, கன்னாட் பிளேஸ்லே தெனம் பேப்பர்விக்கலாம்னு இருக்கேன். ஒரு ஐயா அதுக்கு ஏற்பாடு செய்யறேன்னிருக்காரு. அதிலே ஒரு நாளைக்கு ஒரு ரூபா கிடைக்கும்.”
“உன்னை பெத்தவங்க எங்கே இருக்காங்க?”
“ஊரிலே. அவங்களுக்கு மாசம் எளுபது ரூபா அனுப்பறேன்.”
ராசம்மா சிரித்தாள்.
“எதுக்குச் சிரிக்கிறே?”
“அம்பது ரூபாயிலே குடித்தனம் நடத்தப் போறியா? நான் சம்பாதிக்கிறது எங்கப்பாரு வைத்தியத்துக்குத்தான் போவும். அது கிடக்கட்டும், உன்னை நான் எப்படி நம்பறது?”
“எனக்குக் கல்யாணமாகலே.. உங்கப்பாரு கூட்டிகிட்டு வந்த முருகைய்யன் பய இல்லே நான். என்னை நம்பலாம்…”
“அப்போ ஒண்ணு செய்வியா?”
“என்ன செய்யணும்னு சொல்லு, இப்பொவே செய்யறேன்.”
“தெனம் நீ சம்பாதிக்கப் போற ஒரு ரூபாயை என்கிட்டே வந்து கொடு. ஒரு வருஷம் இப்படிச் செஞ்சியானா, அப்புறம் உன்னைக் கட்டிக்கிறேன். வட்டிப் பணம் கட்டிக்கிட்டு வரேன் லாலாகிட்டே, தெனம் ஒரு ரூபாய்னு… அதுக்கு இது சரியா இருக்கும்.”
முத்துவுக்கு ஸ்ரீவைஷ்ணவப் பெரியார்களுடைய கதை தெரிந்திருக்க நியாயமில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால், நாள் ஒன்றுக்கு ஆயிரம் பாகவதர்கள் வீதம் ஆண்டு முழுவதும் ‘ததியாராதநம்’ செய்து வர வேண்டுமென்று திருமங்கை மன்னனை பணித்த குமுதவல்லி நினைவு வந்திருக்கும்.
‘தினம் ஒரு ரூபாயா?….’ முத்து திகைத்து நின்றான்.
“தோ பாரு… தெனம் ஒரு ரூபா வரும்னு சொல்ல முடியுமா? ஒரு நாளைக்கு இரண்டு ரூபாகூட வரும், ஒரு நாளைக்கு ஒன்றுமே வராது. தெனம் ஒரு ரூபா கொண்டான்னா எங்கேயிருந்து கொடுப்பேன்?”
“அப்போகல்யாணத்தை மறந்துடு!” என்று கூறிவிட்டு ராசம்மா வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
“ஏய்… நிப்பியா, சொல்றதைக் கேட்டுட்டுப்போ …” என்று சொல்லிக் கொண்டே அவளை பின்தொடர்ந்தான் முத்து.
ராசம்மா நின்றாள். “மறு பேச்சு வேணாம். நாய்கிட்டேயிருந்து காப்பாத்தினே, டீ வாங்கிக் கொடுத்தே… இல்லேங்கலே… கல்யாணம் கட்டிக்கணும்னா, நான் சொல்றதை, நீ செய்தாத்தான் கட்டிப்பேன்…”
“தெனம் ஒரு ரூபாயா வட்டி கட்டிக்கிட்டிருக்கே? அந்த லாலா யாரு, சொல்லு?”
“ஏன்? என்ன செய்யப் போறே?”
“ஏன்யா, இது நியாயமான்னு கேக்கறேன்….”
“நியாயம், அநியாயத்தைப் பத்தி யோசிச்சா அவங்க ஏன்யா வட்டி வாங்கறாங்க? வெறும் பேச்சு வேணாம். நீ சம்மதம்னா சொல்லு. இல்லாட்டி நான் போறேன்.”
முத்து சிறிது நேரம் யோசனை செய்து கொண்டே நின்றான் தன்னால் முடியுமா இது? ‘ஒரு பேப்பருக்கு ஒரு பைசான்னு வைச்சா, ஒரு நாளைக்கு நூறு பேப்பர் வித்தாகணும். ஏன் முடியாது? கன்னாட் பிளேஸ் பூரா நாயா அலைஞ்சா வாங்கிக்காமெயா போயிடுவாங்க?’
“சரி…” என்றான் முத்து.
வானத்திலிருந்து தேவர்கள் புஷ்பமாரி சொரிவது போல், அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகில் இருந்த கட்டடத்தின் மீதிருந்து யாரோ குப்பையைக் கொட்டினார்கள்.
முத்து கோபத்துடன் மேலே பார்த்தான். “க்யாகர்த்தாஹை…?”
“மாப் கரோஜி….” என்றாள் ஒரு வயதான ராஜஸ்தானிய வேலைக்காரி.
“சரி… அதைவிடு.. என்னிலேருந்து பணம் தரே? அதைச் சொல்லு!” என்றாள் ராசம்மா.
“இன்னிக்கு நாலாம் நாள்லேந்து… ஒரு நாள், இரண்டு நாள் கொடுக்கலேன்னா, அதுக்காக…”
“அந்தப் பேச்சு வேணாம். தெனம் கொடுத்தாவணும். முடியாதுன்னா இப்பொவே சொல்லிடு…”
“சரி, போ தாரேன்” என்று சொல்லிக் கொண்டே மேலே விழுந்திருந்த குப்பைகளை தட்டினான் முத்து.
“சரி வரட்டுமா?” என்று கேட்ட ராசம்மாவின் தோள் மீது கையை வைத்தான் முத்து.
“ஏய், என்ன இது? வரம்பு மீறறே?” என்று அதட்டினாள் ராசம்மா.
“குப்பை இல்லே தட்டினேன். ஏன் காயறே?” என்றான் முத்து இலேசாக அவள் தோளைத் தட்டிக் கொண்டே. அவள் புன்னகை செய்தாள்.
பேப்பர் விற்கத் தொடங்கிய பிறகுதான் இந்தத் தொழிலில் எவ்வளவு போட்டி இருக்கிறது என்று அவனால் உணரமுடிந்தது. ஏழு வயதுப் பையன்கள், அழுது கொண்டேயிருக்கும் குழுந்தைகளை இடுப்பில் வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள், அங்க ஹீனமானவர்கள் இவர்கள் யாவரும் பொதுமக்களின் அனுதாபத்தை மூலதனமாகக் கொண்டே எல்லாப் பேப்பர்களையும் விற்றுவிட முடிந்தது. முத்துவால் ஒரு நாளைக்கு முப்பது, அதிகமாகப் போனால், நாற்பது, இதற்கு மேல் விற்க முடியவில்லை. ஆகவே, ராசம்மாவுக்கு தினம் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால், தான் ஒரு வேளை சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு கொடுக்கும்படியாக ஆகிவிட்டது.
ஒரு நாள்… அவன் அன்று உண்மையாகவே நரியின் முகத்தில் விழித்தான். தேவ் நகரில் அவன் இருந்த குடிசைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு காட்டிலிருந்து அது வந்திருக்க வேண்டும். மனிதன் முகத்தில் விழிப்பது அதற்குக் கெட்ட சகுனமோ என்னவோ… அது இவனை கண்டதும் ஓடி விட்டது. முத்துவுக்கு ஒரே சந்தோஷம்.
நரியின் முகத்தில் விழித்தது வீண் போகவில்லை . அன்று எல்லாப் பேப்பர்களும் விற்றுப் போய் விட்டன. மத்திய சர்க்கார் ஊழியர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக செய்த தடியடிப் பிரயோகம், முத்துவின் பையில் ஒரு பழைய பர்ஸில் ஒரு ரூபாய்க்கு ஐந்து பைசா நாணயங்களாகக் கலகலத்தன.
முத்துவுக்குக் கன்னாட் பிளேஸைச் சாவகாசமாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்பொழுதுமே உண்டு. இன்று அது நிறைவேறியது. எல்லாப் பேப்பர்களையும் விற்றாகி விட்டது. ராசம்மாவும் கூட இருந்தால் தேவலை என்று அவனுக்குத் தோன்றிற்று. அவள் பிடிவாதக்காரி. வர மாட்டாள்.
அவன் நண்பன் ராமசாமி, ராசம்மாவின் சிநேகிதம் அவனுக்கு வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். “உன்னைவிடப் பெரியவடா அவ. நம்ம மத்த ஜனங்க அவளைப் பத்தி நல்லாச் சொல்லலே.. அந்தத் தங்கராசு தங்கையைக் கட்டிக்க. சொல்றேன், கேளு…” ராமசாமி பொறாமையினால் சொல்கிறான் என்று முடிவு செய்தான் முத்து. அந்தப் பொண்ணு நாயை பார்த்துப் பயந்துகிட்டு எப்படி நின்னா! அவளை போய் தூத்தறாங்களே, பாவிப் பயங்க…”
முத்து பையைத் தொட்டுப் பார்த்தான். பர்ஸ் கனமாக இருந்தது. ராசம்மாவிடம் இன்று பேப்பர் முழுதும் விற்றுவிட்டதென்று சொன்னால், எப்படி சந்தோஷப்படுவாள்! “அந்தப் பய மவ பல்லு எப்படி அவ்வளவு வெள்ளையா இருக்கு!”
கன்னாட் பிளேஸ் எப்பொழுதும் போல் மாலை வேளையில் திருவிழாக் கோலம் பூண்டு விளங்கியது. ஜன்பத்தில் ஒரே கூட்டம்.
‘இந்தப் பஞ்சாபிக்காரப் பொண்ணுங்க நல்லாத்தான் இருக்காங்க…. ராசம்மா பல்லைச் சொல்லப் போயிட்டேனே… இவங்க உடம்பு என்னா நிறம்! ஏன் இப்படி மனித சாதியிலே கறுப்பு ஒருத்தன், வெள்ளை ஒருத்தன் இருக்குது? இந்த அம்மா எல்லாம் கடையையே விலைக்கு வாங்கிக் கைப்பையிலே அடைச்சுக்கப் போறாப்பலே. ‘டாக் டாக்’னு போறாங்க. நான் ஒரு ரூபாய்க்காக ‘எஞ்சாமி, உஞ்சாமி’ன்னு பாடுபட வேண்டியிருக்கு: ஏன் இந்தப் பொளைப்பு!… யாரைக் கேக்கறது? என்னைத்தான் கேட்கணும்… ‘எடப்பாடியிலே ஏளைப் பய குடிசையிலே பொற’ ன்னு யாரு சொன்னாங்க! அடே! அந்தப் பொண்ணு எத்தினி நல்லா இருக்குது! என் உடம்பைச் செய்யறப்போ எண்ணெயை ஊத்தி முடுக்கிவுட்டிருப்பாங்க. அது, பால்லே செஞ்ச உடம்பு… அது காரை தொறந்துக்கிட்டு நிக்கிற சொகுசு… அட சீ..! ஏளையா பொறந்துட்டு ஏண்டா ஆகாசத்தை அண்ணாந்து பார்க்கிறே? உன் பையிலே இருக்கிற ஒரு ரூபாயை….” தன் பையைத் தொட்டுப் பார்த்த முத்துவின் கை அப்படியே செயலற்று நின்றது. பர்ஸ் பறி போய் விட்டது!… பட்டினத்து நாகரிகத்தை கட்டணம் செலுத்தாமல் வேடிக்கை பார்க்க முடியுமா?
முத்துவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எல்லை மீறிய கோபம் வந்தது. யார் மீதுதான் என்று தெரியவில்லை . அவன் கோபத்தை உணராமல், அவரவர்கள் காரில் ஏறிக் கொண்டு சென்றார்கள். அவன் தன் காதல் கப்பத்தை இழந்துவிட்டான் என்ற காரணத்துக்காக கன்னாட் பிளேஸில் தலைதெறிக்க ஓடிய கூட்டம், தாபம் தெரிவிக்கவில்லை . முத்து தனி ஆளாய், அளவற்ற சினத்துடன் நின்றான்.
இப்பொழுது என்ன செய்வது? அவன் ஆத்திரத்தில் ‘சிவப்பு சிக்னல்’ என்று அறிவித்ததும், தெருவைக் கடந்து ‘ரீகல்’ அருகே வந்தான். பெரிய பெரிய ஹோட்டல்களுக்குள், ஜோடி ஜோடியாய் போனார்கள். ‘ரீகல்’ கொட்டகையில் ஜன சமுத்திரம் பொங்கி வழிந்தது.
ராசம்மாவை எப்படிப் பார்ப்பது? இரண்டு நாட்களாகப் போவேயில்லை. அவள் மிகவும் கோபமாக இருப்பாள். ஏதாவது பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்று அவன் முதலில் நினைத்தான். அவள் பிடிவாதக்காரி. தான் சொல்லுவதை அவள் நம்ப மாட்டாள். ஒரு ரூபாய் கொண்டு போனாலாவது, ஏன் இரண்டு நாட்களாக வரவில்லை என்பதற்கு ஏதாவது சொல்லி அவளை சமாதானப் படுத்தலாம்.
யாரையாவது கேட்கலாமா? ராமசாமியைக் கேட்கலாம். ஆனால் அவன் ராசம்மாவுக்கென்றால் தரமாட்டான். சுப்பிரமணியனைக் கேட்டால் என்ன? அதற்காக லோதிரோட் வரை போக வேண்டுமே? அதற்குப் பணம்? ராமாசாமியிடம் சைக்கிளை இரவல் வாங்கிக் கொண்டு போகலாம். சேச்சே… ஒரு ரூபாய்க்கா இவ்வளவு பாடு!… ஒரு ரூபாய்க்கு அல்ல, ராசம்மாவின் முகத்தில் ஏற்படப் போகிற அந்த இளஞ் சிரிப்புக்காக. கன்னாட் பிளேஸில் பார்த்த அந்தப் பெண், என்ன அழகு!… என்ன அழகு!…? அதற்குத்தான் வரி செலுத்திப் பார்த்தாகிவிட்டதே! பர்ஸில் பணம் போட்டுக் கொண்டிருக்கவே கூடாது. அது ராசம்மா கொடுத்த பர்ஸ்… இதயத்துக்கருகே வைத்துக் கொண்டிருந்தாள். பர்ஸ் போய் விட்டது. அப்படியானால்….
அவன் கோல் மார்க்கெட் அருகே வந்து விட்டான். நன்றாக இருட்டி விட்டது.
அப்பொழுது… கீழே அவன் கண்ணுக்கு ஏதோ தென்பட்டது. குனிந்து எடுத்தான். பர்ஸ்…! ஆனால், அவனுடையதல்ல. அவன் சுற்று முற்றும் பார்த்தான் ஒருவரும் அவனை கவனிக்கவில்லை. இடுப்பில் செருகிக் கொண்டான்.
அவன் முன்னால் சைக்கிளை தள்ளிக் கொண்டு ஒருவர் சென்றார். அவர் திடீரென்று நின்றார். சட்டைப் பையையும், பாண்ட் பைகைளையும் கலவரத்துடன் தேட ஆரம்பித்தார்.
முத்து அவரைக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால் அநுதாபம் தெரிவித்து விட்டாவது போக வேண்டும் என்று, அவன் மனச்சாட்சி சொல்லிற்று?
“க்யா ஹைஜி?” என்றான் முத்து.
அவர் முத்துவை ஏற இறங்கப் பார்த்தார். அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும் விளங்கின. மதராஸி என்று அறிந்ததும், பர்ஸைக் கொடுத்துவிடலாமா என்று முத்து ஒரு கணம் யோசித்தான். ஆனால் காதல் குறுகிய இனப் பற்றை வென்றது.
“பர்ஸைக் காணோம்…” என்றார் அவர், அவன் தமிழன் என்று தெரிந்து கொண்டு.
“பர்ஸா …? அட பாவமே.. நல்லா பாருங்க…”
அவருடைய சைக்கிளில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பைகள் தொங்கின. காய் கறிகள், வீட்டுச் சாமான்கள் – எல்லா வற்றையும் வாங்கிய பிறகு அந்தப் பர்ஸில் மீதி என்ன இருக்கப் போகிறது என்று நினைத்தான் முத்து. கொடுத்து விடலாமா? தேடுவதைப் பார்த்தால், எப்படியும் ஒரு ரூபாயாவது இருக்காதா?
“பர்ஸில் எவ்வளவு இருந்தது?”
“முப்பது ரூபாய்!” என்றார் அவர் பரிதாபமாக. முப்பது நாட்களுக்கு பேப்பர் விற்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தான் முத்து.
அப்பொழுது வேட்டி கட்டிய ஒருவர் அங்கு வந்தார்.
“என்ன ஆச்சு?” என்று பரிவுடன் விசாரித்தார்.
“பர்ஸை தொலைச்சிட்டாரு” என்றான் முத்து.
“எனக்கு எதிர்த்த வீடுதான். நான் பார்த்துண்டே இருந்தேன். நீ என்ன குனிஞ்சு எடுத்தே?” என்றார் அவர்.
முத்துவுக்கு வியர்த்துக் கொட்டியது. “நானா?” ஒண்ணு மில்லையே…?”
பர்ஸை தொலைத்தவர் அவன் மீது குபீரென்று பாய்ந்தார். அவன் இடுப்பிலிருந்து பர்ஸ் விழுந்தது.
“திருட்டுப் படவா! நீயுமா தேடறே..?”
“சரிதான் சார்… கிடைச்சுடுச்சுல்லே …. ஏன் கத்தறீங்க?”
முத்து மேலே நடக்கத் தொடங்கினான். அவர் அவனை போகவொட்டாமல் கையைப் பற்றிக் கொண்டு தடுத்தார்.
“வா, ரீடிங்ரோட் போலீஸ் ஸ்டேஷனுக்கு.”
“எதுக்கு ?”
“எதுக்கா? வாடா, ராஸ்கல்! நீங்களும் வாங்க சார்.”
“இருங்கோ. வீட்டுக்குப் போய் செருப்பு போட்டுண்டு வந்துடறேன்.”
அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. அவனை அடிக்கடி அந்த வட்டாரத்தில் பார்த்திருப்பதாக நாலைந்து பேர் சொன்னார்கள்.
“போலீஸிலே ஒப்படைங்கோ … அது தான் ‘பெஸ்ட்!” என்றார் வழுக்கைத் தலையாக இருந்த ஒருவர். இரண்டு, மூன்று பேர் முத்துவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
பர்ஸை தொலைத்தவர்கள் வாழ்க்கை ரஸமற்றது. ஆபீஸில் ஃபைல்கள், வீட்டில் நச்சு நச்சென்ற ஒரு மனைவி. குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்துக்கு முன்பே பெற்றெடுத்த ஏழெட்டு வாலி வர்க்கம். இப்பொழுது அவருக்கும் தம் ஆற்றலை அனைவருக்கும் எடுத்துக் காட்ட ஒரு வாய்ப்பு வந்தது. அவருக்குள் ஒளிந்து கொண்டிருந்த கற்பனை காட்டாறாகப் பெருக்கெடுத்து ஓடியது.
கண்ணும் காதும் வைத்து, முத்துவை பிடித்த தம் சாகஸத்தை அங்கிருந்த அனைவருக்கும் எடுத்துக் கூற தொடங்கினார்.
செருப்பை எடுக்கப் போனவர் வரவேயில்லை. பாரதப் பண்பாட்டுக்கேற்ப ‘நமக்கேன் வம்பு?’ என்று பேசாமல் இருந்து விட்டார். போலீஸ் விவகாரத்தில் அவர் மாட்டிக் கொள்ள விரும்பவில்லையென்று தெரிந்தது.
“நான் வருகிறேன்” என்றான் ஓர் இளைஞன்.
“நீங்கள் சாட்சி சொல்ல வேண்டும். இவன் குனிந்து எடுத்ததாக…” என்றார் பர்ஸை தொலைத்தவர்.
“சரி… ஒரு பர்ஸா, இரண்டு பர்ஸா?” என்று கேட்டான் அந்த இளைஞன். அவன் துடிப்பைப் பார்த்தால் ‘ஆயிரம் பர்ஸ்’ என்று கூடச் சொல்ல அவன் தயாராக இருக்கிறான் என்று தெரிந்தது.
“நானும் சொல்லுகிறேன்…” என்று இன்னொருவன் வந்தான். பொய்ச் சாட்சி சொல்லுவதற்கு இவ்வளவு போட்டி ஏற்படுமென்று பர்ஸை தொலைத்தவர் நினைக்கவில்லை.
“சரி…. எல்லாரும் வாருங்கள்.”
எல்லாருமாக ரீடிங் ரோட் போலீஸ் ஸ்டேஷனுக்கு நோக்கிச் சென்றார்கள்.
போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டர் இருந்தார். இளைஞர். அவர் ஏழெட்டுப் பேர் வருவதைப் பார்த்ததும், ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து நோக்கினார்.
“எஸ்?”
பர்ஸை தொலைத்தவர் இன்னும்கூட ஓரிரண்டு விவரங்களைச் சேர்த்து தம் கேஸைச் சொன்னார்.
அப்பொழுது முத்து ஆடாமல் அசையாமல் நின்று கொண் டிருந்தான். அவன் அப்படி நிற்பதற்குக் காரணம் இருந்தது.
ராசம்மா அங்கிருந்தாள். அவளருகில் ஒரு வயதான போலீஸ்காரர், சர்தார்ஜி. இன்னொரு பக்கத்தில் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க, தொந்தியும் தொப்பையுமான ஒரு பஞ்சாபி, அவன் பக்கத்தில் ஒரு போலீஸ்காரர். என்ன விவகாரம்? முத்துவுக்கு தலையைச் சுற்றியது.
ராசம்மா குனிந்து கொண்டிருந்தவள், பலர் உள்ளே வரக் கண்டதும் நிமிர்ந்து பார்த்தாள். முத்துவை ஏன் இழுத்து வருகிறார்கள்?
சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்: “என்ன இது? பர்ஸ்தான். திரும்பி வந்து விட்டதே, இவனை என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்?” அவர் குரலில் அலுப்பு தெரிந்தது.
“முதலில் தெரியாதது போல் நடித்துவிட்டுப் பிறகுதான் நான் கைப் பற்றிய போது ஒப்புக் கொண்டான். இது திருட்டுத்தனம் இல்லையா?”
“என்னப்பா, என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டார் சப் – இன்ஸ்பெக்டர், ஹிந்தியில்.
“நான் மறுக்கவில்லை . என் பர்ஸ் காணாமல் போய் விட்டது, கன்னாட் பிளேஸில். அதில் ஒரு ரூபாய்தான் இருந்தது. அந்த ஒரு ரூபாய், இவருடைய முப்பது ரூபாய்க்குச் சமானம். என் துரதிர்ஷ்டம் என் பர்ஸை திருடியவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் அதிர்ஷ்டம் இவர் பர்ஸை தரையிலிருந்து எடுத்தவனை இவர்கண்டு பிடித்து விட்டார். இதைத் தவிர நான் வேறு என்ன சொல்வது?” என்றான் முத்து.
சப் இன்ஸ்பெக்டர் சிரித்தார். “ஃபைன் லாஜிக்…” என்றார் அவர்.
“நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதற்கு மேலே என்னால் புகார் பண்ண முடியும். நான் ‘ஹோம் மினிஸ்டிரி’யில் இருக்கிறேன்…” என்றார் பர்ஸை தொலைத்தவர்.
“நீங்கள் ராஷ்டிரபதியிடமே சென்று புகார் செய்யுங்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இவன் பர்ஸை எடுத்தது உண்மை என்கிறான். உங்களுக்கும் அது திரும்பி வந்து விட்டது. இதில் கேஸ் என்ன இருக்கிறது?”
“பொய் சொன்னான்.”
“நாம் எல்லோரும் பொய் சொல்லாதவர்களா?”
“இங்கு நான் எடுத்ததை பார்த்ததாகச் சொல்ல வந்திருப் பவர்கள் அனைவரும் பொய் சாட்சி சொல்ல வந்திருக்கிறார்கள். நான் எடுத்ததை உண்மையாகவே பார்த்தவர் இங்கு வரவில்லை ….” என்றான் முத்து.
“க்யா பாத் ஹை?” என்று ஓர் இளைஞன் முத்துவின் மீது பாய்ந்தான். ஒரு போலீஸ்காரர் அவனை தடுத்து நிறுத்தி விட்டார்.
“கெட் தி ஹெல் ஔட் ஆஃப் ஹியர்… ஆல் ஆஃப் யூ… நான் இவனை விசாரிக்கிறேன்…” என்று தம் இருப்பிடத்திலிருந்து எழுந்திருந்து கத்தினார் சப் இன்ஸ்பெக்டர்.
எல்லாரும் நழுவி விட்டார்கள்.
முத்து மட்டும் நின்று கொண்டிருந்தான். சப் இன்ஸ்பெக்டர் சிறிது நேரம் பேசாமல் இருந்தார்.
“உனக்கு தமிழ்தானே தாய் பாஷை?” என்று கேட்டார் அவர்.
“ஆமாம்…!”
“இந்தப் பெண்ணுக்கு தமிழைத் தவிர வேறு பாஷை தெரியாதாம். இது ஒரு விபச்சார கேஸ்… அந்த லாலாவையும் இவளையும் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணை கொஞ்சம் விசாரித்துச் சொல்” என்றார் சப் இன்ஸ்பெக்டர்.
ராசாம்மாவுக்கு தமிழைத் தவிர வேறு பாஷை தெரியாதா? ஏன் பொய் சொல்லுகிறாள்? அவளுக்கு ஹிந்தி நன்றாக பேசத் தெரியும். ‘விபச்சாரக் கேஸ்!’ ராமசாமி சொன்னது உண்மைதானா?
ராசம்மா குனிந்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஈரமாகி இருந்தன.
“ஏதானும் சொல்லணுமா?” என்று கேட்டான் முத்து. அவன் குரல் வறட்சியாக இருந்தது.
அவள் அவனை நிமிர்ந்து நோக்கினாள். பிறகு மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.
“நீ ஏன் இரண்டு நாளா வரல்லே?”
“அதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்” என்றான் முத்து.
“நீ வரலேங்கிறதனாலேதான் நான் இங்கே வந்து தலை குனிஞ்சு நிக்கும்படியா இருக்கு…”
“என்ன சொல்லறே நீ?”
“லாலாஜி நேத்து வந்து ரகளை பண்ணிட்டான். அவனுக்கு கொடுக்க வேண்டிய இரண்டு நூறு ரூபாயை உடனே கீழே வைச்சாகணும்னான். உன்னை தேடித் தேடி பார்த்தேன்… நீ இனிமே வரமாட்டேன்னான் ராமசாமி. கெட்ட பெயரு சுமத்திட்டு, புண்ணு வந்த கண்ணிலே குத்திப் பார்க்கிற மாதிரி இருக்காங்களே நம்ம ஜனம்? இவங்களை எதுக்காக நம்ம ஜனம்னு சொல்லணும்? யாரோ லாலாகிட்டே போய் நான் யாரோடேயோ ஓடப் போறேன்னு சொல்லியிருக்காங்க. பணத்தை வைச்சாத்தான் ஆச்சுன்னு ஒரேடியாகக்கூப்பாடு போட்டான். எனக்கு வேறே வழி தோணலே” என்றாள் ராசம்மா.
அவள் புடவைத் தலைப்பு நனைந்தது.
சப் இன்ஸ்பெக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
“யார் இந்தப் பெண்?” என்று கேட்டார் அவர்.
“அவள் என் மனைவி!” என்றான் முத்து நிதானமாக.
ராசம்மா அவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.
(‘கல்கி’ பொங்கல் மலர் 1969) (பெர்க்லி – கல்கி இலக்கியப் பரிசு திட்டத்தில் முதல் பரிசு பெற்றது)