(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03
“நாளை நான் சேர நாட்டுக்குக் கிளம்புகிறேன்” என்றான் சிவலோகநாதன். “நமக்கிருப்பது இன்று ஒரே ஒரு நாள்தான்.”
“அப்படிச் சொல்லாதீர்கள்” என்று அவன் வாயைத் தன் காந்தள் விரல்களால் பொத்தினாள் உதயபானு. “இன்னும் ஒரு நாள் அல்ல. ஓராயிரம் நாளுமல்ல; பல்லாயிரம் நாட்கள் நாம் இணை சேர்ந்து இன்புற்றிருக்கத்தான் போகிறோம்.”
“இருந்தாலும் இப்போது நீண்ட காலப் பிரிவு” என்று சுட்டிக் காட்டினான்.
“அதனால் என்ன? பிரிவு நம் காதலுக்கு உரமேற்றும்.”
”பிரிவு மட்டும்தானா உரமாகும்? நெருக்கமும்தான்” என்றான் அவளை இழுத்து அணைத்தவாறே. அவர்களுடைய ஆலிங்கனம் அரச மரத்தின் இலைகளுக்குக் கூட இன்பச் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஏரிக் கரையில் மோதிய சிற்றலைகள் களுக்கென்று சிரித்தன. குயில் ஒன்று குக்கூ என்று பரிகசித்தது. தென்றல் சில்லென்று வீசி அவர்களை மேலும் இறுக்கமாக இணைய வைத்தது.
அருள்மொழிவர்மனிடம் அனுமதி பெற்று அரசுப் பணிகளிலிருந்து அன்று ஒரு நாள் தன்னை விடுவித்துக் கொண்டு அவன் வந்திருந்தான். அந்தப்புரப் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குந்தவைப் பிராட்டியிடம் அனுமதி பெற்று அவள் வந்திருந்தாள். இருவருமாகத் தஞ்சைக் கோட்டைக்கு வெளியே அரச வனத்தினை ஊடுருவிச் சென்றார்கள். ஏரிக் கரையை அடைந்ததும் குதிரையிலிருந்து தான் இறங்கி அவளும் இறங்க உதவினான். குதிரை அவர்களை நிம்மதியாக விட்டுப் புல் மேயச் சென்றது.
”பானு! பாடு” என்று வேண்டினான். அவள் ஆனந்தமாக அவன் கோரிக்கையை நிறை வேற்றினாள். உடன் எடுத்து வந்திருந்த சித்திரான்னங்களைப் புசித்தார்கள். சல்லாபித்தார்கள். சற்று விளையாடவும் செய்தார்கள். பகல் போது மெல்ல மெல்லக் கரைந்து மாலைப் போது நெருங்க ஆரம்பித்த பொது அவன் தாபம் அதிகரித்தது.
“பானு! பானு!” என்று கரகரத்த குரலில் அழைத்தபடியே தன் கரங்களுக்குள் சிக்குண்டிருந்த அவளைக் கெஞ்சினான். “என் கண்ணல்லவா?” அவன் அதரங்கள் அவளுடைய சந்திர வதனத்தை ஸ்பரிசித்தன. அவள் நடக்கிற காரியத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் தன் கண்களை மூடிக்கொண்டாள். இருளைத் தருவித்துத் தன்னைத் தன்னிடமிருந்தே இப்படி சாமர்த்தியமாக விலக்கிவிட்ட பின் தனக்கு சம்பந்தமில்லாத அந்த இன்னொருத்திக்குத் துணிவு அசாத்தியமாகப் பிறக்கக் கண்டு வியந்தாள். அந்த இன்னொருத்தி இப்போது முகத்தை உயர்த்தியதன் மூலம் அவன் இதழ்கள் கன்னங்களிலிருந்து கீழிறங்கி கழுத்திலே பல இடங்களில் முத்திரை பதிக்க உதவிக் கொண்டிருந்தாள். அவன் கேசத்தை அவள் விரல்கள் இறுகப் பற்றி இழுத்தும் அழுத்தியும் வழி காட்டிக் கொண்டிருந்தன. அவள் முதுகிலே படர்ந்து தவழ்ந்து கொண்டிருந்த அவனுடைய கரங்களில் ஒன்று இப்போது தோளுக்கு உயர்ந்து நெஞ்சுக்குத் தாழ்ந்தது.
“உம்” என்ற முனகல் அவள் கண்டத்திலிருந்து எழுந்தது. அது வேண்டும் என்றதா? வேண்டாம் என்றதா? உதயபானுவுக்கே புரியவில்லை. புல் தரையில் அவளைச் சரித்தான். கிண்ணென்றிருந்த தன் வலது தோளை அவளுக்குத் தலையணையாக்கினான். அவள் விரல்கள் அவன் பரந்த மார்பினை அளவெடுத்தன. மாலைச் சூரியன் வெட்கி ஒரு மேகத்துள் மறைந்தான்.
சற்றுத் தூரத்தில் குளம்படிகள் கேட்டன. சோழ மன்னர் அருள்மொழிவர்மர் வேட்டையாடி முடித்து அரண்மனை திரும்புவதற்கு அறிகுறியாகக் கொம்பொலி முழங்கியது.
சரேலென்று எழுந்தான் அவன். “கிளம்புவோமா? நேரமாகிறது. மன்னர் கடைசி நேர அறிவுரைகளை எனக்கு வழங்க எண்ணியிருப்பார்.”
“ஆமாம். குந்தவைப் பிராட்டி கவலையோடு காத்திருப்பார்” என்றாள்.
இருவருமே ஒரு இனிய விடுபட்டவர்களாகதிடுக்கிட்டு கனவிலிருந்து விழித்தெழுந்தவர்களாக ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். இருவருமே சிரித்தும் விட்டார்கள். ரொம்பத் தைரியம்தான் நமக்கு என்று தங்களைத் தாங்களே கேலி செய்துகொள்வது போல் ஒலித்தது அந்தச் சிரிப்பு.
சலசலப்புக் கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள். குதிரை மேல் கம்பீரமாக ஆரோகணித்திருந்த அருள்மொழி, இப்போது குனிந்து, பரியின் பிடரி மேல் கரங்களை மடித்துப் போட்டவராகப் பரிகாசக் குரலில் “சிவலோகநாதா! உன் மன்னன் மான்களை வேட்டையாடுவதில்லை தெரியுமல்லவா?” என்றார்.
“நாடி வரும் மான்களை நலிய விடுவதுமில்லை அவர். அதுவும் எனக்குத் தெரியும்” என்றான் சிவலோக நாதன்.
“நலிய விடக்கூடாது நண்பா! ஆனால் அதனை உரிய முறையில் செய்ய வேண்டும்” என்று உணர்த்தினார் அருள்மொழி.
உதயபானு வெட்கித் தலை குனிந்து நின்றாள். சிவலோகநாதன் பாய்ந்து குதிரை மீதேறி அவளையும் தனக்கு முன்னால் கைலாகு கொடுத்துத் தூக்கி வைத்துக் கொண்டான்.
“உனது சேர நாட்டுப் பயணம் உங்கள் காதலுக்கு ஒரு சோதனையாகவே இருக்கட்டும். நீ திரும்பி வந்த மறு தினமே திருமணத்துக்கு நாட் குறிக்கப்படும்” என்று உறுதிமொழி தந்தார் அருள்மொழிவர்மர். சிவலோகநாதனைத் தட்டிக் கொடுத்தார். “உதயபானு! கோபமா?” என்றும் வினவினார்.
“ஆம் பிரபு! கோபம்தான்” என்றாள் உதயபானு. “ஆனால் உங்கள் மீதல்ல. வேட்டைக்குப் போவது போல் செல்லுமாறு கூறி உங்களை இங்கே அனுப்பி வைத்திருக்கும் குந்தவைப் பிராட்டி மீதும் அல்ல. என் மீதேதான் எனக்குக் கோபம். என்னுடைய பலவீனத்தை நான் உணர்ந்ததால் கோபம். கட்டுப்பாடு இழந்த என் மனத்தினிடம் கோபம்.”
“போதும் போதும். ஒரேயடியாகக் கோபித்துக்கொள்ளாதே” என்று சிரித்தார் அருள்மொழிவர்மர். “அவ்வளவு கோபப்படும்படி உன் மனம் பெரிய தவறு ஏதும் செய்துவிடவில்லை. சந்தேகமிருந்தால் சிவலோகநாதன் வல்லவரையர் வந்தியத் தேவரை வினவட்டும். நீ வானதியைக் கேட்டுப் பார்!”
– தொடரும்…