கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 1,746 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 09 | அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 

பொற்பாவையின் முன் பொன்னாபரணங்களைப் பரப்பிவிட்டு அவள் தேவையானதைத் தேர்ந்தெடுக்கக் காத்திருந்தான் வியாபாரி. எத்தனையோ விதமான வெம்பழித் தாக்குதல்களை எதிர்ந்து வெற்றி கண்டவனுக்கு இந்த எழில் தாக்குதலையும் விழித்தாக்குதலையும் சமாளிப்பது கடினமாகத்தான் இருந்தது. தன்னிடமிருந்த மிகப் பெரிய பலம் தன் அழகுதான் என்பதை உணர்ந்து அந்த ஆயுதத்தைக் கூர் மங்காது காக்கவும் திறம்படப் பிரயோகிக்கவும் அறிந்திருந்தாள் வண்டார் குழலி. அகில் புகையூட்டப்பெற்ற அளகபாரத்தின் மணமும் மதர்த்துப் பொங்கிய நெஞ்சங்களின் கனமும் மதன பாணங்களை அள்ளி வீசிய கண்களின் வளமும் சதா மென்னகையை உதிர்த்த பவள உதடுகளின் குணமும் காலம் காலமாய் ஆராய்ந்தாலும் சிறு குறையும் தென்படாத சிற்ப வடிவத் தோற்றத்தின் உயிர்த் துடிப்பும் மென்மையும் குழைவும் நிறமும் நிறைவும் எல்லாமாகச் சேர்ந்து அவனை நொடிப் பொழுதில் வீழ்த்திவிட்டன! வீர பாண்டியன் கற்றுத் தந்திருந்த சமிக்ஞைச் சொற்களை நினைவுக்குக் கொண்டு வரவே அரும்பாடுபட்டான் அவன். நல்ல வேளை ஒரு பெரு முயற்சிக்குப் பிறகு அதனை ஞாபகப்படுத்திக் கொண்டு கூற, புரிந்து கொண்டாள் வண்டார் குழலி. அந்தக் கணத்திலேயே அவள் போக்கு அடியோடு மாறிவிட்டது. காமனை விடை கொடுத்து அனுப்பிவிட்டுக் காரியத்தில் கண்ணானாள். “பேசுங்கள், அருகிலிருக்கும் சேடிப் பெண் செவிடு, ஊமை. ஆனால் கூர்மதி படைத்தவள். வியாபார நிமித்தமாகவே பேசுவது போல் நடந்து கொள்ளுங்கள்” என்றாள். 

அவ்வாறே நடித்தபடி உரையாடலை மட்டும் வேறு திசையில் திருப்பினான் வியாபாரி. “எனக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று ஓலையும் இலச்சினையும் தந்துள்ளார் வீரபாண்டியன். நாம் தனித்திருக்கும்போது அவற்றைத் தங்களுக்குக் காண்பிப்பேன்” என்று சொல்லித் தன் தேவைகளையும் வெளியிட்டான். சிவலோக நாதன் சிறைப்பட்டிருக்கும் ஊர், இடம், அங்குள்ள காவல் ஏற்பாடுகள் முதலிய விவரங்கள் தெரிய வேண்டும் என்றான். போர் முயற்சி தவிர மீட்பு முயற்சியின் அவசியத்தை விளக்கினான். 

துணுக்குற்றாள் வண்டார் குழலி. ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ‘இதென்ன கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாய் இருக்கிறதே! சிவலோக நாதனைச் சிறை வைக்கக் காரணமாயிருந்த நானே அவனை விடுவிக்கவும் உதவுவதா? அவன் விடுதலை பெற்று வந்த பின் அருள்மொழி வர்மனிடம் நடந்த உண்மைகளைக் கூறாதிருப்பானா? பிறகு என் கதி என்ன? வீர பாண்டியனின் நிலைதான் என்ன? இதையெல்லாம் வீர பாண்டியனும் யோசிக்காமலா இருந்திருப்பான்? மீட்பு முயற்சிக்கு உதவினால் அன்றி அருள்மொழியின் அன்பைப் பெற முடியாது என்ற சூழ்நிலை தோன்றியிருக்க வேண்டும் வீர பாண்டியனுக்கு. என்னுடைய திறமையில் நம்பிக்கை வைத்து நான் எப்படியாவது இந்த இக்கட்டைச் சமாளிப்பேன் என்று கருதி கம்பன் மணியனை என்னிடம் ஓலை, இலச்சினையுடன் அனுப்பியிருக்கிறான் என்று முடிவுக்கு வந்தாள். இப்போது என்ன செய்வது? இவனுக்கு கம்பன் மணியனுக்கு நிச்சயம் உதவ வேண்டியதுதான். அப்போதுதான் அருள்மொழியும் வாக்குத் தவறாமல் வீர பாண்டியனுக்குப் பாண்டிய தேசத்தைக் கொடுப்பான். நாமும் வீர பாண்டியனின் அரியாசனத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாவிடினும் பாண்டியப் பேரரசின் மெய்யான அரசியாக விளங்கலாம். வீர பாண்டியனே என் வயப்பட்ட பின் அனைத்து அதிகாரங்களும் என்னிடம்தானே! எனவே சிவலோக நாதனை மீட்கும் பணியில் உதவ வேண்டும்தான். ஆனால் அதே நேரத்தில் சிவலோக நாதன் தான் சிறை புக நேர்ந்ததற்கான உண்மைக் காரணத்தை உடைத்து விடாதிருக்க அவனைக் கொன்றுவிடவும் வேண்டும்! அவன் மரணம் மீட்புப் பணி நடக்கும் போதே ஒரு சேர வீரனால் சம்பவித்து விட்டது போலத் தோற்றமளிக்கச் செய்ய வேண்டும்!’ 

“இந்த இரு ஆரங்களையும் வங்கிகளையும் எடுத்துக் கொள்கிறேன். இவற்றுக்கு எடைக்கு எடை பொற் கழஞ்சுகளைத் தந்துவிட முடியும். ஆயின் இவற்றின் கலை வேலைப் பாடுகளின் மதிப்பை நமது அரசவை பொற் கொல்லரின் யோசனை கேட்டே அறிய வேண்டும். நீங்கள் இரு தினங்கள் சென்று நண்பகலில் வாருங்கள். அப்போது நான் தனியே இருப்பேன். வீர பாண்டியன் அனுப்பிய ஓலை, இலச்சினையைக் காட்டுங்கள். நானும் உங்களுக்குத் தேவையான விளக்கங்களைக் கூறுகிறேன்” என்றாள் வண்டார் குழலி. 

குறிப்பிட்ட தினத்தில் அவர்கள் ஒன்று கலந்து பேசித் திட்டம் தீட்டினர். மாபெரும் மதில்கள் சூழ்ந்ததாய் மாளிகைகளும் சூளிகைகளும் தன்பாற்கொண்டு உயரிய கோபுரங்களை உடைய வாயில்களைக் கொண்டதாய் சேரர்க்குரிய சிறந்த நகரங்களுள் ஒன்றான உதகையில் அதன் செல்வச் சிறப்புக்களும் மகிழ்ச்சி ஆரவாரங்களும் எழில் தோற்றங்களும் எட்டிப் பார்க்கமுடியாத சிறைக் கூடத்தில் பாதாள சிறையொன்றில் பெரும் பாதுகாப்புடன் வைக்கப் பட்டிருந்தான் சிவலோக நாதன். இந்த விவரத்தைக் கூறிவிட்டு வண்டார் குழலி தொடர்ந்தாள்: 

“நான் சொல்வதை நன்றாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அமரபுஜங்கனை முறியடித்துப் புறமுதுகிடச் செய்தபின் அருள்மொழி வர்மனின் பெரும்படை புயலென விரைந்து சேரநட்டின் எல்லை தாண்டியாகி விட்டதென்றும் வெகு வேகமாக மேலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றதென்றும் செய்தி வந்துவிட்டது. யுத்தகாலம் என்ற அறிவிப்பும் இங்கு செய்தாகிவிட்டது. அயல் நாட்டவரெல்லாம் வெளியேற்றப்படுகிறார்கள். இப்போது நீங்கள் வஞ்சி நகரை விட்டு வெளியேறத் தடை ஏதும் இராது. ஆனால் உதகை நகருக்குள் நுழையவே முடியாது. கோட்டைக் கதவுகள் மூடிய இருக்கும். உங்கள் அனைவருக்குமாக முப்பத்தோரு இலச்சினைகளைப் பெற்றுத் தருவதும் எனக்கு முடியாத காரியம். ஆனால் ஓர் உபாயம் இருக்கிறது” என்று நிறுத்தினாள். 

“என்ன அது?” என்று ஆர்வத்துடன் வினவினான், கம்பன் மணியன். 

“உதகை நகருக்குப் புறம்பாக மேற்கே மரகதத் தேவர் கோயில் ஒன்றிருக்கிறது. அங்குள்ள மரகதத் தேவர் சிலையை வலப்புறமாக நகர்த்திப் பிறகு பாதை தெரியும். பின்னோக்கித் தள்ளினால் ஒரு கோட்டை மதில்கள், அகழிகள், எல்லாவற்றையும் பூமிக்கடியிலேயே கடந்து செல்லலாம். அப்பாதை கூடத்தின் பாதாளச் சிறை பகுதியில்தான் முடிவடைகிறது. ஆபத்துக் காலத்தில் சேர நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் பயன்படுத்த ஏற்பட்ட அந்தப் பாதையை நாம் நம்மை எதிர் நோக்கியுள்ள ஆபத்தைக் கடக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்!” 

“உங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை” என்றான் கம்பன் மணியன் மெய்யான நெகிழ்ச்சியுடன். 

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். கால தாமதத்துக்கு இடமில்லை” என்றாள் வண்டார் குழலி. “எச்சரிக்கையாய் இருங்கள்! பலத்த பாதுகாப்பு சிறைக்கூடத்துக்கு மட்டுமல்ல. மரகதத் தேவருக்கும் உண்டு! மரகதத் தேவரை நெருங்க இருளைத் துணைக் கொள்ளுங்கள். பாதாளச் சிறைக் கூடத்தில் ஒருவேளை என்னையும் நீங்கள் சந்திக்கலாம். ஆண் வேடத்தில் சேர நாட்டின் உயர் அரசு அதிகாரி போல் நான் தோற்றமளித்தாலும் வியப்படையாதீர்கள். நீங்கள் வீர பாண்டியனிடம் கற்று என்னிடம் பயன்படுத்திய அதே சமிக்ஞைச் சொற்களை நானும் பயன்படுத்தி உங்களுக்கு மட்டும் நான் யார் என்பதைத் தெரியப்படுத்துவேன்.” 

“நீங்கள் அங்கு வரவேண்டுமா? எதற்கு இந்த ஆபத்தான காரியத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும்?” என்றான். 

“வீர பாண்டியனுக்காக நான் எதையும் செய்வேன். மேலும் என் நேரடி உதவியின்றி உங்களால் வெற்றி காண முடியுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் சிவலோக நாதன் தப்பிக்கவோ அல்லது அவனைத் தப்புவிக்கவோ முயற்சி நடந்தால் அந்தக் கணமே அவனைக் கொன்றுவிடலாம் என்று சிறைக் காவலர்களுக்கு உத்தரவாகியிருக்கிறது. வேறொன்றும் வேண்டாம். அவன் சிறை வைக்கப்பட்டுள்ள கொட்டடியின் வெளியே உள்ள ஒரு விசையைத் திருகினால் போதும். கொட்டடியின் தரை பின்னுக்கு நகர்ந்து மறையும். இவன் கீழே இருள் குகையில் விழுவான். அங்கே பசியோடு பல புலிகள் காத்திருக்கும்!” 

“ஐயோ! என்ன கொடுமை!” என்றான் கம்பன் மணியன். 

“அதற்காகத்தான் நான் அங்கு வருகிறேன் என்கிறேன். முத்திரை மோதிரத்தைக் காட்டி அதிகாரம் தூள்பறக்க காவலர்களின் கவனத்தைத் திருப்பிக் கொண்டிருப்பேன். அந்த வேளையில் நீங்கள் அவனை விடுவித்து அழைத்துப் போய்விடுங்கள்! சிவலோக நாதனை விடுவிக்க முயற்சி நடப்பாதாகச் செய்தி கிடைத்துள்ளதாகவும் அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே  சேர மன்னன் என்னை அனுப்பி வைத்திருப்பதாகவும் கூட நான் சிறை அதிகாரியையும் காவலர்களையும் மிரட்டிக் கொண்டிருப்பேன். அதைக் கேட்டு நீங்கள் கலவரமடையாதீர்கள்.  அங்கு நடக்கும் களேபரத்துக்கிடையில் உங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளுங்கள்.” 

தரையிலே நீர்க்கோலம் இட்டுக் காண்பித்தாள் வண்டார் குழலி. அந்த வரைபடம் சுரங்கப் பாதை முடியும் இடத்தையும் அங்கிருந்து சிவலோக நாதன் சிறைப்பட்டிருக்கும் பகுதியை அடையும் வழியையும் தெளிவாக விளக்கியது. நீர்க் கோலத்தை நெஞ்சில் நிழற்கோலமாக்கிக் கொண்டு புறப்பட்டான் கம்பன் மணியன்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *