கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 2,074 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 08 | அத்தியாயம் 09 | அத்தியாயம் 10

அருள்மொழியின் ஊகம் பொய்க்கவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் அவனும் வீரபாண்டியனும் பாசறையில் உபசரிப்பு முடிந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். 

“மன்னா! உமது நல்லெண்ணத் தூதனை ஒற்றனென்று பழி சுமத்தி பாஸ்கர ரவிவர்மன் சிறைப்படுத்தினான் என்பதை அறிந்த கணத்திலிருந்து சோழ நாட்டின் மானம் காக்கத் தாங்கள் நடத்தப் போகின்ற இந்தப் படையெடுப்பை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்” என்றான் வீர பாண்டியன். 

“எதிர் நோக்கலில் உள் நோக்கமும் இருக்குமே” என்று மெல்ல நகைத்தான் அருள்மொழி. 

சரேலென்று கோபத்துடன் நிமிர்ந்தான் பாண்டியன். “மன்னவா! பாண்டியர்கள் உதவி புரியக் கூடிய நிலையில் இருக்கும் போதுதான் உதவி கோரவும் செய்வார்கள்!” என்றான் கம்பீரமாக. “உள்நோக்கம் இருந்தாலும் அதில் சமநோக்கும் உண்டு.” 

“வேடிக்கைதான்” என்றான் அருள்மொழி. “கடலனையப் பெரும் படையுடன் பழிவாங்கப் புறப்பட்டிருக்கும் எனக்கு நீர் உதவுவதா? அதுவும் சம நிலையிலிருந்தா? பாண்டியரே! பேசினாலும் பொருந்தப் பேச வேண்டும். அலை கடலுக்கு ஆறு உதவுகிறதா? சிம்மத்துக்கு நரியினால் என்ன உதவி?” 

”அரசே? சிறு துளியில்லையானால் பெரு வெள்ளம் கிடையாது. இறை இருக்கும் இடத்துக்குச் சிம்மத்தை நரி வழி காட்டி அழைத்துப் போவதும் உண்டு; வேட்டை முடிந்த பின்னர் நன்றி காரணமாக சிங்கம் தான் உண்டது போக மிகுதியை நரிக்கு வெகுமதியாக விட்டுச் செல்வதும் உண்டு. இந்தக் கட்டத்தில் சிங்கம் தான் உயர்ந்தது நரி தாழ்ந்தது என்று எண்ணுவதில்லை. ஒன்றுக்கொன்று உதவி இரண்டுமே பயனடைகின்றன.” 

“மீனக் கொடியோனுக்குத் தூண்டில் போடவா தெரியாது! பாண்டியரே அழகாகப் பேசினீர்! நீங்கள் எதிர்பார்க்கும் வெகுமதி?” 

“பாண்டிய நாட்டின் அரியணை! அமரபுஜங்கனைப் புறமுதுகிடச் செய்யுங்கள்; சேரனையும் வென்று வாருங்கள்! பிறகு, உங்களுக்கு உதவிய எனக்கு உமது திருக்கரத்தாலேயே தொன்மையான பாண்டிய நாட்டின் மணி முடியைச் சூட்டுங்கள்!” 

“அடேயப்பா! பெரிய விலையைத்தான் கோருகிறீர்கள்! அதற்கேற்ப விற்பனைக்கு வரும் பண்டத்தின் மதிப்பும் உயர்வாயிருக்க வேண்டுமே!’ 

“சேரனின் படை பலம் பற்றிய உண்மையான முழு விவரங்கள். அவனது பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள பலவீனங்கள் பற்றிய குறிப்புக்கள். சேர நாட்டில் எந்தெந்த இடத்தில் எந்தெந்த அளவில் எத்தகைய பாதுகாப்புக்கள் உருவாகியுள்ளன என்பது பற்றிய தகவல்கள், அரண்களின் நிலவரம், கோட்டை கொத்தளங்களின் ரகசியங்கள்…. மன்னா எதிரியின் பலத்தை முழுமையாக அறிந்தவன் பாதி யுத்தத்தை வென்றது போலத்தான் என்பதை உங்களுக்கு நானா கற்றுத் தர வேண்டும்?” 

“நீங்கள் தரப்போகும் தகவல்கள் மெய்யானவை என்பதற்குச் சாட்சியம்?” 

“எனது வார்த்தைகள்தான்.” 

“இவ்விவரங்கள் அறியப்பட்ட விதம்?” 

ஒரு கணம் பாண்டியன் தயங்கினான். பிறகு இனியும் ஒளிவு மறைவென்ன என்று தீர்மானித்தவன் போல் வண்டார் குழலி பற்றிப் பேசினான். 

கடைசியாக அவள் வீர பாண்டியனுக்கு அனுப்பிய ரகசிய ஓலையில் ‘அருள்மொழி வர்மனின் தூதனை ஒற்றன் என்று பழி சுமத்திச் சேரன் சிறைப்படுத்தி விட்டான். எனது திறமைதான் இதனைச் சாதித்தது. அருள்மொழி வெகுண்டு சேரன் மீது படையெடுத்து வருவது நிச்சயம். அத்தருணத்தில் அவனைச் சந்தியுங்கள். நான் கொடுத்திருக்கும் தகவல்களை யெல்லாம் அவனுக்கு அளித்து உதவுங்கள். அதற்குப் பிரதிபலனாக பாண்டிய நாட்டின் அரியணையை நீங்கள் கோரிப் பெறுங்கள். முடி சூட்டிக்கொண்ட பின் அடியாளை மறவாதீர்கள்’ என்று எழுதியிருந்தாள். 

இந்தக் கடைசி வரியையும் சிவலோக நாதன் சிறைப்பட வண்டார் குழலிதான் தந்திரம் செய்தாள் என்ற விவரத்தையும் மட்டும் மறைத்து மற்ற அனைத்தையும் அருள்மொழி வர்மனுக்கு வீர பாண்டியன் தெரியப்படுத்தினான். 

சற்று நேரம் மௌனமாக இருந்த இராச கேசரி, “பாண்டியரே! அந்த நங்கை வண்டார் குழலி இன்னமும் சேரன் அவையில் சோமேசுவரனது நம்பிக்கைக்குரியவளாகத் தானே இருக்கிறாள்?” என்று வினவினான், 

“ஆம்” என்று பதிலிறுத்தான் பாண்டியன். 

“அப்படியானால் அவளுக்குச் சிவலோக நாதன் சிறைப்பட்டிருக்கும் இடமும் தெரியுமல்லவா?” 

“தெரியாவிடினும் தெரிந்து கொள்வது அவளுக்குக் கடினமல்ல. 

“நல்லது. பாண்டிய நாட்டுப் பொன்னாபரண வியாபரி போல் மாறு வேடத்தில் ஒருவன் சென்று அவளை விரைவில் சந்தித்து விவரங்கள் அறிவான். அவனோடு சேர்ந்தாற்போல் அல்லது தனித் தனியாக வேறு முப்பது பேர் சேர நாட்டுக்குள் பாண்டிய நாட்டு மக்களாக நுழைவார்கள். வியாபரியாகவோ, பண்டிதராகவோ, பிழைப்பு நாடி வந்த பாமரனாகவோ செல்வார்கள். அனைவரும் வஞ்சி நகரில் குறிப்பிட்ட ஓரிடத்தில் குறிப்பிட்ட தினத்தில் சந்திப்பார்கள். இதற்கு நீங்கள் வழி காட்ட வேண்டும். முக்கியமாக அவர்கள் தலைவன் கம்பன் மணியன் வண்டார் குழலியைச் சந்திக்கவும் அவளிடமிருந்து சிவலோக நாதன் சிறைப்பட்டிருக்கும் இடத்தை அறியவும் அச்சிறையைச் சுற்றியுள்ள பாதுகாப்புக்கள் பற்றித் தெரிந்து கொள்ளவும் நீங்கள் அவளுக்கு ஓலையும் இலச்சினையும் கொடுத்து உதவ வேண்டும். செய்வீர்களா?” 

“மகிழ்ச்சியோடு ஏற்கிறேன் அந்தப் பொறுப்பை” என்றான் வீர பாண்டியன். “நீங்களும்….” 

“உமது கோரிக்கையை மறக்க மாட்டேன்” என்றான் அருள்மொழி. 

அதுவே போதுமானதாக இருந்தது வீர பாண்டியனுக்கு.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *