யாருக்கு சொந்தம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 3,797 
 
 

ராஜ்ஜியபுரம் நாட்டை சங்கமித்திரன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அந்நாட்டில் சேனாபதி என்றொரு செல்வந்தான் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பத்து பெண் பிள்ளைகள் இருந்தனர். அந்த பத்து பெண் பிள்ளைகளுக்கும் ஒரே நாளில் ஒரே மேடையில் தான் தேர்ந்தெடுத்த மணமகன்களுக்கு திருமணம் முடித்து கொடுக்க ஏற்பாடு செய்தான். விடிந்தாள் திருமணம். முதலில் பிறந்த ஐந்து பெண்கள் திருமணத்தை நினைத்தும், தங்களை கைப்பிடிக்க இருக்கும் மணமகன்களை நினைத்து பார்த்தும் சந்தோஷ கடலில் மூழ்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு பின்னால் அடுத்தடுத்து பிறந்த ஐந்து பெண்களுக்கும் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தில் துளிக்கூட விருப்பம் இல்லை. பொழுது விடிந்தால் தங்களின் தலையெழுத்தே மாறப்போகிறதே எண்றெண்ணி அந்த ஐந்து பெண்களும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

சூரியதேவன் மெல்ல மெல்ல பூமியை எட்டிப்பார்த்தான். கலங்கமில்லா அந்த காலைபொழுது அழகாக புலர்ந்துக் கொண்டிருந்தது. செல்வந்தரின் வீட்டிலோ அந்த பத்து பெண்களும் அழகோவியமாக ஜொலித்துக்கொண்டிருந்தனர். செல்வந்தரின் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. சொந்த பந்தங்களின் கூட்டம் வீட்டில் நிறைந்து வழிந்தது. மறுபக்கம் பலவகையான பதார்த்தங்களோடு அமர்க்களமாக பந்தி நடந்துக்கொண்டிருந்தது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் வயிறும், மனமும் நிறைந்து மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். புரோகிதர்கள் ஓமகுண்டம் வளர்த்து மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்க, பத்து மணமகள்களும் ஒவ்வொருவராக மணமேடை ஏறிய போது திருமண கூட்டத்திலிருந்து ஒருவன் திடீரென்று கூச்சலிட்டான். அவன் சொன்ன விசயத்தை கேட்டதும் செல்வந்தர் உட்பட அனைவருக்கும் குழப்பமும் அதிர்ச்சியும் உண்டானது. கூச்சலிட்டவன் சொன்ன சேதியை ஏற்றுக்கொள்ளவோ, நம்மபவோ சேனாபதியின் மனம் மறுத்தது. இருவருக்கும் சண்டை முற்றிப்போனது. இறுதியாக வழக்கு மன்னர் சங்கமித்திரனிடம் சென்றது. இருவரின் வழக்கை கேட்ட மன்னரே ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தார்.

இருவருக்கும் உண்டான வழக்கு என்னவென்றால், சேனாபதிக்கு பிறந்த பிற்பாதி ஐந்து பெண்பிள்ளைகளும் தனக்கு பிறந்த குழந்தையென்று செங்கையன் சொல்கிறான். சேனாபதியோ செங்கையன் சொல்வது பொய் என்று வாதாடுகிறார். இருவரின் வாதம் சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. செங்கையா இந்த ஐந்து பெண்களும் உன்னுடைய பிள்ளைகள் என்று உனக்கு எப்படி தெரிந்தது! அதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாய்? அதுவும் இல்லாமல் இத்தனை வருடங்கள் கழித்து ஏன் இன்று வந்து இவர்கள் மீது நீ சொந்தம் கொண்டாடுகிறாய் என்று மன்னர் சங்கமித்ரன் கேட்டார். மன்னா நான் ஒரு நாடோடி. சில காலங்களுக்கு முன் நிராலி என்றொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டேன். எங்கள் வாழ்வின் சந்தோஷத்திற்கு ஆதாரமாக என் மனைவி ஒரே பிரசவத்தில் பத்து பெண்பிள்ளைகளை பெற்றெடுத்தாள். அந்த ஐந்து பெண்பிள்ளைகளின் வலது குதிக்காலில் நட்சத்திர குறியிட்ட மச்சம் ஒன்று இருக்கும். ஒரு நாள் எங்கள் பிள்ளைகளை சுமந்துக்கொண்டு பிழைப்பிற்காக விக்கிரமசிங்க புரம் என்ற நாட்டிற்கு நாடோடிகளாக நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று எங்களை வழிமறைத்த கொள்ளையர்கள் எங்களிடம் நகைப் பணம் ஏதும் இருக்கிறதாயென சோதனையிட்டனர். நாடோடிகளான எங்களிடம் ஏதும் மன்னா பணம் நகையெல்லாம்? பொன்னும் பொருளும் கிடைக்காத கோபத்தில் எங்கள் ஐந்து பெண் பிள்ளைகளையும் அந்த கொள்ளையர்கள் எங்களிடமிருந்து பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள் மன்னா. குழந்தைகளை பறிக்கொடுத்த துக்கத்திலேயே என் மனைவி இறந்துப் போய்விட்டாள். பிறகு கால் போனப் போக்கில் ஏதேதோ தேசத்திற்கு சென்று கிடைத்த வேலையை செய்துக் கொண்டு என் பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த நான் கடைசியாக தங்கள் நாட்டிற்கு வந்தேன் மன்னா. அப்போது அங்கிருந்த வாசிகள் இந்த செல்வந்தரின் வீட்டு திருமணத்தைப் பற்றியும் அங்கு நடக்கும் விருந்தையும் புகழ்ந்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். என் பசியைத் தீர்த்துக் கொள்ள நினைத்துதான் நான் இந்த செல்வந்தரின் வீட்டிற்கு சென்றேன்.

இந்த ஐந்து பெண்களும் மணமேடை ஏறும் போதுதான் இந்த பெண்களின் வலதுக் குதிங்காலில் இருந்த நட்சத்திரக் குறியிட்ட மச்சத்தை நான் கவனித்தேன் மன்னா. தொலைந்துப் போன என் ஐந்து பெண் குழந்தைகள் இவர்கள்தான் என்று எனக்கு அப்போதுதான் தெரியவந்தது என்று செங்கையன் தன் பக்க கதையை கூறி முடித்தான்.

இப்போது மன்னர் செல்வந்தரிடம் தன் பார்வையை திருப்பினார். மன்னா இந்த செங்கையன் சொல்வது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஐந்து பெண்களும் என் பிள்ளைகள். என் மனைவியின் மீது நான் வைத்திருந்த மாசற்ற அன்பின் மீது ஆணையிட்டு கூறுகிறேன், இவர்கள் ஐவரும் என் குழந்தைகள். எனக்கும் என் மனைவிக்கும் பிறந்த செல்வங்கள் என கூறி செல்வந்தன் கண்ணீர்விட்டு கதறியழுதான்.

இவர்கள் இருவரில் யாரோ ஒருவன் பொய் சொல்கிறார்கள் என்பது மன்னனுக்குப் புரிந்தது. சற்று நேரம் பலத்த சிந்தனைக்குப் பிறகு யாரும் எதிர்ப்பாராதொரு தீர்ப்பை மன்னர் கூறினார்.

உங்கள் இருவரில் யாரோ ஒருவர் பொய் கூறுகிறீர்கள் என்பது எனக்கு மட்டுமில்லை அவையில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்ததே. குற்றவாளியே குற்றத்தை ஒத்துக் கொண்டாதான் இதற்கு தீர்வு காண முடியும். ஆனால் அது நடக்கும் காரியமில்லை. அதனால் இப்போது உங்கள் இருவருக்குமே நான் தண்டனை தரப்போகிறேன் என்றதும் செங்கையனுக்கு விழிப்பிதிங்கியது. செல்வந்ததோ அமைதியாக நின்றான்.

உண்மையை கடைசி வரைக்கும் கண்டுப்பிடிக்க முடியாத காரணத்தில் உங்கள் இருவருக்குமே நான் மரணத் தண்டனை விதிக்கிறேன். நாளைக் காலை நாட்டு மக்கள் முன்னிலையில் உங்கள் இருவரின் தலையும் துண்டிக்கப்ப… ‘ஐயோ மன்னா என்னை மன்னித்துவிடுங்கள் மன்னா”. தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். பேராசையும், நயமானப் பேச்சும் என் மூளையை மழுங்கடித்துவிட்டது. இது போன்ற தவறை இனி நான் ஒரு போதும் செய்யமாட்டேன். என்னை மன்னித்து எனக்கு கருணைக் காட்டுங்கள் மன்னா என்று செங்கையன் மன்னரின் காலைப் பிடித்து மன்றாடினான்.

அவனை எட்டி உதைத்த மன்னன். மரியாதையாக சொல்லிவிடு. எதற்காக இப்படியொடு நாடகத்தை அரங்கேற்றினாய். செங்கையன் மன்னனையும் அந்த ஐந்து பெண்களையும் மாறி மாறிப் பார்த்தான். இப்போது சொல்கிறாயா இல்லை இங்கயே உன் தலையை துண்டிக்கட்டுமா? ஐயோ மன்னா இதற்கு முழு காரணமும் இந்த ஐந்து பெண்கள்தான் மன்னா என அவன் சொன்னதும் ஐந்து கன்னிகளுக்கும் நெருப்பை விழுங்கியதுப் போல நா வரண்டுப் போனது. பயத்தில் அவர்களின் கை கால்கள் நடுங்கியது.

ம்… கூறுங்கள் எதற்காக இப்படியொரு நாடகத்தை அரங்ககேற்றினீர்கள். இந்த கேள்வியை எங்கள் தந்தையிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் மன்னா. புரியவில்லையே. எங்களின் மூத்த சகோதரிகள் ஐந்து பேருக்கும், பெரிய செல்வந்தர் வீட்டில் சம்பந்தம் முடித்தவர், எங்கள் ஐந்து பேருக்கும் மட்டும் மிகவும் ஏழ்மையான வீட்டில் சம்பந்தம் பேசியுள்ளார் மன்னா. இந்த திருமணம் எங்களுக்கு வேண்டாம் என நாங்கள் எவ்வளவோ தந்தையிடம் மன்றாடினோம். ஆனால் அவர் எங்களை லட்சியம் செய்யவே இல்லை. இந்த திருமணத்தில் எங்களுக்கு துணிக்கூட விரும்பம் இல்லை. இதிலிருந்து தப்பிப்பதற்காகதான் நாங்கள் ஐவரும் இப்படி செய்தோம் என்று பிற்பாதி கன்னியர்கள் கூறினர்.

சேனாபதி எதற்காக இவர்களுக்கு இப்படியொரு தீங்கு செய்ய துணிந்தாய்?

மன்னா இப்போது என்னிடமிருக்கும் செல்வங்கள் எல்லாம் நான் மட்டும் கஷ்டப்பட்டு சம்பாதித்து இல்லை. என்னுடைய முற்பாதி ஐந்து பெண்களும் எனக்கு தொழில் உதவி செய்தனர். கழனியில் கடுமையாக உழைத்து சிக்கனமாக குடும்பத்தை நடத்தினர். ஆனால் பிற்பாதி பிறந்த இந்த ஐந்து பெண்களும் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துக் கொள்ளாமல் தினம் தினம் பட்டாடை உடுத்துவதும், வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொள்வதும், தங்கள் அழகை பேணி பராமரிப்பதிலுமே இவர்கள் ஐவரும் குறியாக இருந்தனர். இப்படியே போனாள் இவர்களது வாழ்க்கை என்னவாகும் என்ற பயம் எனக்கு உண்டானது. அதற்காக நன்றாக யோசித்து, வாழ்க்கையில் உழைப்பை மட்டுமே பெரிதாக எண்ணும் ஐந்து ஆண்களுக்கு இவர்களை மணமுடித்துக் கொடுக்க நான் ஏற்பாடு செய்தேன். அத்தோடு இல்லாமல் சொத்துக்களையும் சரிபாதியாக பங்கிட்டு இவர்களின் மணமகன்களிடம் ஒப்படைத்துவிட்டேன் மன்னா.

பார்த்தீர்களா? காக்கைக்கு எப்போதுமே தன் குஞ்சுப் பொன் குஞ்சுதான். பெற்றவர்கள் என்றைக்குமே பிள்ளைகளிடம் பாகுபாடோ வேற்றுமையோ பார்க்கமாட்டார்கள். உங்களின் அறியாமையினாலும் முட்டாள் தனத்தாலும் செய்த தவறை நான் மன்னிக்கிறேன். சேனாபதி உன் விருப்பம் போல பத்து பெண் பிள்ளைகளுக்கும் ஒரே மேடையில் திருமணத்தை முடித்து வை என்ற மன்னன் செங்கையனுக்கு சிறைத் தண்டனை விதித்தான். அந்த ஐந்து பெண்களும் சோனபதியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். பெண்களின் மாற்றத்தை உணர்ந்த சோபதி சந்தோசமாக தன்னுடைய பத்து பெண் பிள்ளைகளும் ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்து ஆனந்தமும் திருப்தியும் அடைந்;தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *