முதிர்ச்சி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 6,121 
 

‘ நம்ம நாட்டுல வரதட்சணை என்கிறது பெரிய சாபக்கேடாய் போயிடுச்சு. எந்த படுவாவி இந்தத் தீயை முட்டினானோ…?! அவன் போயிட்டான். ஆனா.. அந்தத் தீ இந்த நாட்டை ரொம்ப உக்கிரமாய் பொசுக்குது. இதனால ரொம்ப பொண்ணுங்க திருமணம் ஆகாமலேயே ‘ நின்னுடுறாங்க..’ எவ்வளவு பெரிய கொடுமை. !!

எங்க அப்பா காலத்துல….

” மாப்பிள்ளை ! பொண்ணுக்கு எத்தினி பவுன் போட்டு கட்டிக்கிட்டுப் போறீங்கன்னு ..? ” – கேட்பாங்களாம் ! அப்பா சொல்லுவாரு அம்மாவும் சொல்வாங்க. அப்பா அம்மாவுக்கு பதினாறு பவுன் போட்டு கட்டிக்கிட்டு வந்தாராம். அதுவே அந்தக் காலத்துல குறைவுன்னு பொண்ணு வீட்டுல குறையும். அம்மாவும் இதை ஆமோதிச்சிருக்காங்க.

என்று இப்படி நினைத்தபடி இருந்த ஏகாம்பரம் அருகில்….

” ஏங்க.! இதை இப்படிச் செய்தாலென்ன…? ”என்றபடி காபியுடன் கணவன் அருகில் சென்றாள் பார்வதி.

” எப்படி..? ” என்று கேட்டு காபியை வாங்கி உறிஞ்சினார் ஏகாம்பரம்.

” நான் சொல்றேனேன்னு கோபப்படக்கூடாது. ஒரு யோசனைதான் .” என்றாள் .

” சரி சொல்லு..? என்று தலையசைத்தார் ஏகாம்பரம்.

இதுவரையில் தாங்கள் பேசிக் கொண்டுருந்த விசயத்திற்கு இவளாவது தீர்வு சொல்லமாட்டாளா ? என்ற எதிர்பார்ப்பு அவர் முகத்தில் தெரிந்தது .

” பெரியவள் சியாமளாவும் , சின்னவள் சங்கீதாவும் அசப்புல ஒரே மாதிரிதானே இருக்காளுங்க. வயசுதானே வித்தியாசம்..? ” கேட்டு ஏறிட்டாள்.

” ஆமாம் ! ”

” இதுவரை சியாமளாவைப் பார்த்திட்டுப் போன வரன்களெல்லாம்….. பெண்ணைப் பார்த்தா முத்தின முகமா இருக்குன்னு சொல்லியே நழுவிட்டுப் போயிட்டாங்க. அதனால இதை இப்படி செய்தாலென்ன என்கிறதுக்காகத்தான் கேட்டேன். ” என்றாள் மறுபடியும் பீடிகையுடன்.

” பார்வதி ! சொல்ல வந்ததை நேராவே சொல்லிடு . அதை விட்டுட்டு இப்படி சுத்தி வளைச்சிப் பேசி என் கழுத்தை அறுக்காதே .? ” என்றார் ஏகாம்பரம்.

தன் கணவனின் முகத்தில் கொஞ்சம் சூடு ஏறியதைக் கண்ட பார்வதி…

” இதுக்குத்தான் உங்ககிட்ட எந்த யோசனையும் சொல்றதில்லே, கேட்கிறதில்லே.. ” – நொடித்தாள் .

” பின்னே என்னடி.. சொல்லவேண்டியதைச் சொல்லாம நீ பாட்டுக்கு ஒண்ணுகெடக்க ஒண்ணு உளறினா மனுசனுக்குக் கோபம் வருமா வராதா..? ” என்றார் எரிச்சலுடன்.

” வர்றேன்னு சொல்லிக்கிட்டு வர்றவனுங்க முன்னாடி அலங்காரம் பண்ணி உக்கார்ந்து உக்கார்ந்து அலுத்துப் போச்சும்மா. இனிமே எவன் முன்னாலேயும் என்னை அலங்காரம் செய்து உட்கார வைக்காதீங்கம்மான்னு சியாமளா விரக்தியா சொல்றாங்க. போற போக்கைக் பார்த்தா அவ அப்படியே நின்னுடுவாளோன்னு பயமா இருக்கு. ” என்றாள் பார்வதி.

”அதனால..? ” … ஏகாம்பரம் கேள்விக்குறியாய் மனைவியை ஏறிட்டார்.

” சியாமளவுக்குப் பதிலா சங்கீதாவைக் காட்டி சியாமளாவைக் கட்டி கொடுத்தாலென்ன ..? ”

” என்னது…?! ” ஏகாம்பரம் துணுக்குற்று நிமிர்ந்தார்.

” ஏன் இப்படி அலர்றீங்க… ? ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்ன்னு சொல்றாங்களே.. நாம ஒரு பொய்யைத் தானே சொல்றோம். ” – பார்வதியின் கண்களில் எப்படியாவது பெண்ணைக் கட்டிக் கொடுத்து விட வேண்டும் என்ற ஏக்கமிருந்தது.

அதே சமயம் பின் விளைவுகளைப் பற்றி யோசனை செய்யாமல் இப்படி வெகுளியாய்ப் பேசுகின்றாளே ! என்று நினைக்கும்போது அவள் மீது பாவமாகவும் இருந்தது அவருக்கு.

” அது சரி பார்வதி. நீ சொல்றது சாத்தியப்படுமா..?. ” கேட்டார்.

” ஏன் சாத்தியப்படாது..? இரண்டு பேரும் அச்சு அசலா ஒரே அச்சாத்தானே இருக்காங்க. வயசுலதானே ஆறு வித்தியாசம்..? ” என்றாள் .

” அது சரி. அடிப்படையையே மாத்தணும்ங்குறியே இது தகுமாங்குறேன். ” நிமிர்ந்து உட்கார்ந்து கேட்டார் ஏகாம்பரம்.

” ஆமா.. இது தகுமா தகாதான்னு நீங்க பாட்டுக்கு நியாய, அநியாயத்தைப் பத்தியே யோசிச்சுகிட்டுப் போனா மூத்தவளுக்கு இந்த ஜென்மத்துல கலியாணம் நடக்காது ! ” என்று கோபப்பட்டாள் பார்வதி.

இனிமேலும் பார்வதியுடன் தர்க்கம் செய்தால் எழுந்து உள்ளே போய்விடுவாள் அவளுடன் ஒத்துப்போய் தன கருத்தைச் சொல்லி அவளைத் தன்பக்கம் இழுக்கலாமென்று நினைத்துக்கொண்ட ஏகாம்பரம்……

” சரி. உன் யோசனைப்படியே வர்றேன். இதை எப்படி செய்யலாம்ங்குறே..? ” என்றார் கனிவாக.

” அதையெல்லாம் யோசிக்கலாமலா இருப்பேன்.! ”

” சரி சொல்லு..? ”

” நான் சின்னவள் சங்கீதாவைத் தனியே அழைச்சி இதைப் பத்தி பேசினேன். அவளும் ஆரம்பத்துல உங்களாட்டம் தான் யோசனைப் பண்ணினாள் அப்புறம் நான் எடுத்துச் சொன்னதும்.. சரிம்மா ! என்னால அக்காவுக்குத் திருமணம் நடக்கும்ன்னா நிச்சயமா நான் இதுக்குச் சம்மதிக்கறேன்னு சொல்லிட்டா..” சொன்னாள் .

‘ ஆள் முன்னேற்பாடெல்லாம் செய்துவிட்டு தன்னிடம் வெறும் அனுமதி மட்டும் வாங்க வந்திருக்காளே… ‘ – என்று நினைத்த ஏகாம்பரம்……

” இது மாதிரி நாம ஏமாத்துறது கட்டிக்கிறவனுக்குத் தெரிஞ்சா பின்னால இவளோட வாழ்க்கை வீணாகிடாதா..? ” கேட்டார்.

அப்போது கல்லூரி விட்டு வீட்டின் உள்ளே நுழைந்த சங்கீதா…

” தெரிஞ்சாதானேப்பா ! அப்படியே தெரிஞ்சாலும் நீ இவளைத்தானேய்யா பாத்திட்டுப் போனேன்னு அடிச்சி சொன்னா நம்பாமலா போயிடுவாங்க..? ” என்றாள் சர்வசாதாரணமாக.

” இது பேசுறதுக்கு வேணுமின்னா நல்லா இருக்கும் சங்கீதா. ஆனா நம்மளோட சாமர்த்தியம் எதிரிக்கும் இருக்கும் என்கிறதை நினைச்சுப் பார்க்கணும். மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிஞ்சி போய் அவமானப் படுறதைக் கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பார் ” என்றார்

” ஆமா ..! இப்படி ஏறுக்குமாறா குதர்க்கமா பேசியே காரியத்தைக் கெடுங்க. இப்படி துணிஞ்சி செய்தாலென்னன்னு தைரியமா நிக்காதீங்க. நம்ம பொண்ணு வாழணும் என்கிற கவலையே கிடையாது. ! ” பார்வதி கோபப்பட்டாள் .

” இதோ பார் பார்வதி ! எனக்கும் அந்த எண்ணம் இருக்கு. நாம இப்படி செஞ்சது தெரிஞ்சி போனா அதன் பின் விளைவுகள் ரொம்ப பயங்கரமாய் இருக்கும். எனக்கென்னமோ நம்ம பொண்ணைக் கட்டிக் கொடுக்கணும் என்கிறதுக்காக நாம எப்படி வேணுமின்னாலும் நடந்துக்கிறது கொஞ்சமும் நல்லதாப்படலே ” என்றார் தீர்மானத்துடன் .

” அப்பா ! நீங்க அனாவசியமா பயப்படுறீங்க . வர்றவனுங்க என்ன யோக்கியதையில வர்றானுங்க. அம்பது பவுன் போடுறீயா, அறுபது போடுறீயா , வரதட்சணையா லட்சம், அடுத்து… டூ வீலர் , போர் வீலர் வேணுமின்னுதானே வர்றானுங்க. அவனுங்களும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம பொண்ணு கொடுத்தா போதும்ன்னு யோக்கியமா வந்தால் நாமும் யோக்கியமா நடக்கலாம். அது இல்லாம அவனுங்க அடாவடி அயோக்கியத்தனமா வந்தா நாமும் அப்படி நடக்கிறதுல என்ன தப்பு..? ” கேட்டாள் சங்கீதா .

கல்லூரி படிப்பு படிப்பவள் , இளம் ரத்தம் வேறு இப்படித்தான் பயமில்லாமல் புரட்சிக்கரமாய் பேசுவாள். ! என்று ஏகாம்பரத்துக்குள் பட்டாலும் அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகப் பட்டது.

இருந்தாலும் விசயம் தெரிந்து…. மாப்பிள்ளை மணவறையில் குதிப்பது, சம்பந்திகள் காரசாரமாக பேசுவது, திருமணத்திற்கு வந்தவர்கள் தலைக்குத்தலை பேசுவது அதனால் தான் அவமானப்பட்டு , கூனிக் குறுகி நிற்பதை நினைக்க அவருக்குள் நடுக்கம் வந்தது.

கடவுளே.. ! இது என்ன சோதனை. இதற்குத் தீர்வு..? – நினைத்து கலங்கினார்.

அதே சமயம் இவர்கள் பேச்சு அனைத்தையும் அடுக்களையிலிருந்து கேட்ட அவர் முதல் மூத்த பெண் சியாமளா அவர்கள் முன் வந்தாள் .

” அம்மா ! சங்கீதா ! வர்ற வரனுங்க அடாவடியாய் வரதட்சனைக் கேட்டு அயோக்கியதனமா வர்றாங்க என்கிறதுக்காக நாமும் அப்படி நடக்கிறது நல்லா இல்லே. மேலும் இப்படி ஆள் மாறாட்டம் செய்து நான் நல்லவிதமாக வாழ்ந்தாலும்… இது என் தங்கை போட்ட பிச்சைன்னு உறுத்தும். அந்த உறுத்தல், மன உளைச்சலோட வாழுறதைவிட விட வாழாமல் இருக்கறது நல்லது. அம்மா ! நல்லவனோ கெட்டவனோ .. என் அழகு, முதிர்ச்சியைப் பார்த்து என்னை கட்டிக்கிறவனாய்ப் பார்த்து கட்டிக் கொடுங்க. இதுதான் என் முடிவு ! ” சொல்லி சென்றாள் .

பார்வதி சங்கீதா திக் பிரமை பிடித்து நிற்க …..

ஏகாம்பரம் நிம்மதி மூச்சு விட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *