மனை விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 27, 2022
பார்வையிட்டோர்: 19,030 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இல்லற வாழ்வில் ஈடுபட்டு இன்பம் காணும் அந்தக் கட்டிளங் காளைக்கு எதனாலும் குறைவில்லை. அழகுப் பிழம்பாகத் திகழும் காதலியைப் பெற்றபின் அவனுடைய இன்பத்துக்கு வேறு என்ன வேண்டும்? உலகம் அறிய மனைவியாக அவளை ஏற்றுக் கொண்டான். அழகிய இல்லத்தில் அவளோடு வாழப் புகுந்தான். அறத்தை வளர்த்து இன்பக் கடலில் துளைந்தாடும் வாழ் விலே அவன் ஈடுபட்டான். தம் முன்னோர் ஈட்டி வைத்த பொருள் இருந்தாலும் தம் முயற்சியினாலே பொருளைச் சம்பாதித்து அறம் புரிவது தான் சிறப்பு என்பது தமிழர் கொள்கை. ஆகவே, அவன் அறமும் இன்பமும் நெடுங் காலம் இடையூறின்றி விளையும் பொருட்டுப் பொருள் ஈட்டி வர எண்ணினான். அறம் பொருள் இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருள்களிலும் நடுநாயகமாக நிற்கும் பொருள் இருந்தால் அறம் செய்யலாம்; இன்பமும் துய்க்கலாம். அந்தப் பொருள் இல்லாத வறியவர்கள், பிறருக்கு ஈயவும் இயலாது; தாமே இன்பம் துய்க்கவும் முடியாது. இவற்றையெல்லாம் அவன் நன்கு உணர்ந்தவன்.

வேற்று நாட்டுக்குச் சென்றால் நிறையப் பொருள் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. திரைகடல் ஓடியும் திரவியந் தேடும் உறுதிப்பாடும் உண்டு. ஆனால் ஒரே ஓர் எண்ணம் இந்த முயற்சிக்குத் தடையாக நின்றது; அது தான் பிரிவு.

அவனும் அவன் காதலியும் அன்றிற் பறவைகளைப் போலப் பிரிவில்லாமல் இணைந்து வாழ்கிறவர்கள் மலரும் மணமும் போல ஒருவரோடு ஒருவர் உள்ளம் ஒன்றி இசைந்து இன்ப வாழ்வு காண்கிறவர்கள். இப்போது அவன் அவளை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். பொருள் ஈட்டச் செல்லும் இடத்திற்கு அவளையும் அழைத்துச் செல்வது இயலாத காரியம். பிரிந்து தான் போக வேண்டும். போகாமல் இருந்து விடலாமென்றால், பொருள் இல்லாமல் இல்லற வாழ்க்கையில் ஒன்றும் செய்ய இயலாதே!

பிரிந்து செல்லத்தான் வேண்டும். எவ்வளவு விரை விலே பொருளைச் சம்பாதித்துக் கொண்டு வரலாமோ அவ்வளவு விரைவிலே வந்துவிட வேண்டும் என்று தான் அவன் நினைத்தான். இன்றியமையாத அளவுக்குப் பொருள் ஈட்டினால் போதுமே! கோடி கோடியாகக் குவித்து விட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இல்லை. ஆதலின் சிறிது காலமே அவளைப் பிரிந்திருக்க நேரும்.

ஆனாலும் அந்தச் சிறிது காலங்கூட அவர்கள் பிரிந் திருக்க முடியாதே! அவன் ஆடவன்; மனத்திண்மை படைத்தவன். பொருளீட்டும் முயற்சியில் ஈடுபடுவதனால் பிரிவுத் துன்பத்தை அவன் ஓரளவு மறந்திருக்கலாம். அவனுடைய காதலி பிரிவைச் சகிப்பாளா? ஒவ்வொரு கணமும் அவனைக் காணாமையாலே புழுவைப் போலத் துடிக்க மாட்டாளா?

பொருளோ இன்றியமையாதது; அதை சம்பா திக்கக் காதலியைப் பிரிந்து தான் செல்ல வேண்டும். பிரிவுத் துன்பமோ பொறுத்தற்கு அரியது. இந்த இசை கேடான நிலைமையில் என்ன செய்வது?

எப்படியோ ஒருவாறு அவளுக்குத் தன் காதல் புலப் படும்படி கொஞ்சினான் ; ஆறுதல் கூறினான்; தான் போக வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினான் ; புறப்பட்டு விட்டான். போய்ப் பொருள் தேடினான். சம்பாதித்தான் ; மறுபடியும் ஊர் வந்து சேர்ந்தான். அவளோடு இப்போது சேர்ந்து அனுபவிக்கும் இன்பம் முன்னைக் காட்டிலும் மிகுதியாக இருக்கிறது. நினைத்த காரியத்தை நினைத்த வண்ணம் நிறைவேற்றி வெற்றி கண்டு விட்டால், எத்தனை ஆனந்தம் இருக்கும் ! அவ்வளவு ஆனந்தம் அவளால் உண்டாகிறது. மேற்கொண்ட செயலை – வினையை – முடித்தாற்போன்ற இனிமையைத் தருபவள் அவள் ; செய்வினை முடித்தன்ன இனியோள். செய்வினையை முடித்துப் பயன் பெற்றவன் அல்லவா அவன்? ஆகவே அந்த இன்பத்தையும் இந்த இன்பத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பு அவனிடம் அமைந்தது.

***

இப்போது அவனுடைய உள்ளத்தில் சிறிது சபலம் தட்டியது ; மறுபடியும் வெளிநாடு சென்று சில காலம் தங்கி ஏதேனும் தொழில் செய்து பணம் சம்பாதித்து வரலாமா என்ற எண்ணம் தோன்றியது. பணம் எவ்வளவு இருந்தால் தான் என்ன? செலவழிக்கவா வழி இல்லை? இன்னும் பணம் சேர்த்து வந்தால், இன்னும் இன்பம் உண்டாவதற்கு ஏற்ற வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாமே என்ற விருப்பம் அவனுடைய நெஞ் சிடையே முளைத்தது.

‘அட பாவி நெஞ்சே! உனக்கு இன்னுமா சபலம்? முன்னாலே பட்ட துன்பங்களை யெல்லாம் அதற்குள் நீ மறந்து போனாயா? பொருளைச் சம்பாதிக்க மறுபடியும் போகலாம் என்று எண்ணுகிறாயே! போன தடவை படாத பாடு பட்டோம்; அதை எண்ணிப் பார்’ என்று அவன் நினைக்கிறான்; நெஞ்சு தான் நினைக்கிறது; ஆனாலும் அதை வேறாக வைத்துப் பேசுவது போல் அந்த நினைப்பு ஓடுகிறது.

‘நாம் போனோமே, அந்த வழி அழகிய சாலையும் சோலையுமாகவா இருந்தது? பூங்காவும் அடர்ந்த மரமும் நிழல் தர, போகும் இடங்களில் எல்லாம் மக்கள் உபசாரம் செய்ய, அழகிய காட்சிகளைக் கண்டு களித்துச் சென்றாலும் குற்றம் இல்லை. அந்தக் கண்ணராவிக் காட்சியை என்னவென்று சொல்வது!’

அவன் இப்போது இருந்த இன்பச் சூழலிலே அன்று அப்போது பட்ட பாட்டை நினைவுக்குக் கொண்டு வருகிறான்.

போன வழியெல்லாம் மரம் கருகி வளம் சுருங்கிய பாலை நிலம் அது. எங்கேயோ ஒரு மூலையில் வேப்ப மரம் ஒன்று ; வேறு எங்கோ ஓரிடத்தில் நெல்லி மரம் ஒன்று. பார்த்தாலே கண் எரிச்சலை உண்டாக்கும் அந்தச் சுரத்தில் நிற்கும் அந்த வேப்ப மரமாவது தழை அடர்ந்து வளர்ந்திருக்கிறதா? என்றைக்கோ தண்ணி ரைக் கண்ட அது ஏதோ புண்ணியத்துக்கு உயிரை வைத்துக் கொண்டிருக்கிறது. இலையே தெரியாமல் கிளை தெரிவதனால் அது நீளமாகத் தோற்றுகிறது. வளம் இல்லாமல் சதைப் பிடிப்பின்றிக் குச்சி குச்சியாக இருக்கும் கையும் காலும் உடம்பும் நீளமாகத் தோற்று வது இல்லையா? வானத்திலே அந்தக் கிளைகள் நிமிர்ந்து நிற்கின்றன. பரந்து படர்ந்து தழைத்து நிழல் தர அங்கே நீர் வளந்தான் இல்லையே! மேலெல்லாம் ஆகாசம் அதை முட்டுவது போல நிற்கிற வான் பொரு நெடுஞ்சினை களையுடையது அந்த வேப்ப மரம்.

அதன் அடிமரம் எப்படி இருக்கிறது? பொறுக்குத் தட்டின புண்ணைப்போலே பொரிந்து போய்க் கிடக்கிறது. பொரிந்த அரையையுடைய அந்த மரத்தின் வான் பொரு நெடுஞ்சினையின் மேல் ஒரு பறவை இருக்கிறது. அது குயிலும் அல்ல; கிளியும் அல்ல. குயிலுக்கும் கிளிக்கும் அங்கே பழமும் தளிரும் ஏது? பருந்தும் கழுகுமே அந்தப் பாலைவனத்தின் பறவைகள். வழிப்பறி செய்யும் கள்வர் கள் பிரயாணிகளை மடக்கிக் கொலை செய்வதும் உண்டு. அந்தப் பிணங்களைக் கொத்தி விருந்துண்ணும் பெருமை உடைய பறவைகளே அந்த நிலத்தில் வாழ முடியும். பருந்தும் கழுகும் பிணந்தின்னும் சாதி அல்லவா?

பாலை நிலத்துப் பிரஜையாகிய பருந்து ஒன்று வேப்ப மரத்தின் மேல் இருக்கிறது. அதற்கு அங்கே என்ன வேலை? அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க வந்திருக் கிறது. பிரசவ வேதனையோடு அந்த மரத்துக் கிளையில் தங்கியிருக்கிறது. அந்த வேம்யின் மேலே, ஈனும் பருந்து வருந்தி உறையும் காட்சியைத்தான் காணலாம். பிணந் தின்னும் பரம்பரை வளர இடம் கொடுக்கிறது, அந்த வேப்ப மரம்!

வேப்ப மரத்தின் கீழே என்ன இருக்கிறது? அடர்ந்து செறிந்திருந்தால் நல்ல நிழல் இருக்கும். இந்த மரத்திலோ பேருக்கு இலைகள் இருக்கின்றனவே ஒழிய, அவை தளதள வென்று தழைத்திருக்கவில்லை; அந்த இலைகளும் உருவம் சுருங்கிய சிறிய சிறிய இலைகள். மரத்தின் கீழே நிழல் படர்ந்தா இருக்கும்? புள்ளி புள்ளியாக நிழல் இருக்கிறது. பொரிந்த அரையும் வானைப் பொரும் நெடுஞ்சினையும் ஈனும் பருந்து உயவும் (வருந்தும்) நிலையும் உடைய அந்தப் பாலை நில வேப்ப மரத்தின் கீழே புள்ளி நிழல் தான் இருக்கிறது.

அட! அந்த நிழலுக்குக்கூட வெறித்துப் போனவர் கள் அங்கே இருக்கிறார்களே! எங்கே பார்த்தாலும் படை பதைக்கும் வெயில் காயும் போது அது புள்ளி நீழலாக இருந்தால் என்ன? நிழல் என்பதே அரிய பொருளாக இருக்கும் அந்தப் பிரதேசத்தில் எவ்வளவு குறைவாக இருந்தாலும் நிழல் நிழல் தானே?

வேப்ப மரத்தின் கீழே புள்ளியிட்டாற்போன்ற நிழலில் குழந்தைகள் விளையாடுகிறார்கள். பாலை நிலத்தி லும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தை கள் அவர்கள். பாலை நிலமாயிற்றே ; நீர் வளம் நிலவளம் இல்லாத அந்த இடத்தில் என்ன விளையும் ? எதைப் பயிர் செய்ய முடியும்? அங்கே உள்ள மனிதர்கள் எப்படிப் பிழைக்கிறார்கள்?

அவர்களும் உழவுத் தொழில் செய்பவர்களே; நிலத்தை ஏரால் உழுபவர்கள் அல்ல; வில்லும் அம்பும் கொண்டு, வழிப் போகும் மக்களைக் கொன்று அவர் களிடம் உள்ள பொருளைப் பறித்து அதைக் கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் தங்கள் வில்லையே ஏராகக் கொண்டு வழிப்பறியாகிய விவசாயத்தைச் செய்கிறவர் கள் ; வில்லேருழவர். கொலைத் தொழிலும் கொள்ளையிடு வதுமே அவர்களுடைய உத்தியோகம். அவர்களுக்கும் குழந்தை குட்டிகள் உண்டு. அவர்களுடைய குழந்தை கள் வேப்ப மரத்தடியில் விளையாடுகிறார்கள். அவர் களுக்குப் படிப்போ நல்ல பழக்கங்களோ இல்லை. கல்லாச் சிறார். அவர்கள் வட்டு ஆடுகிறார்கள்; தாயக் கட்டம் ஆடுவது போன்ற ஒரு விளையாட்டை ஆடுகிறார் கள். பாலை நிலத்தில் எங்கோ தனியே வளர்ந்திருக்கும் நெல்லிக்காயைப் பொறுக்கிக் கொண்டு வந்திருக்கிறார் கள். அதையே உருட்டி உருட்டி விளையாடுகிறார்கள். வேப்ப மரத்தடியில் கோடு கிழித்து அதிலே நெல்லிக் காயை உருட்டி விளையாடுகிறார்கள் அவர் கோடு கிழித்த இடம் பொன்னை உரைக்கும் கல்லைப் போலக் கறுப்பாகக் கரடு முரடாக இருக்கிறது. வில்லேர் உழவர்களுடைய கல்லாச் சிறார் வட்டு ஆடும் அரங்காக அந்த மரத்தின் அடி இருக்கிறது.

இடம் நினைத்தாலே அச்சந் தருவதாக இல்லையா? ஒரு பொருளாவது உள்ளத்திலே குளிர்ச்சியை, அழகைத் தருவதாக இருக்கக் கூடாதா? கைப்புக்கு இடமான வேம்பு; அதுகூட இலை சிறுத்து அடி மரம் பொரிந்து நிற் கிறது. அதன் மேலே பிணத்தை விருந்தாக அருந்தும் பருந்து. கீழே வில்லேருழவரின் கல்லாச் சிறார்!

வழிப்பறி செய்கிற வில்லேருழவர்கள் சேர்ந்து வாழும் சின்னச் சின்ன ஊர்கள் வழி முழுவதும் இருக்கின றன. வெப்பம் நிறைந்த முற்றங்களையுடைய ஊர்கள் அவை. புறத்திலே மாத்திரம் வெப்பம் அல்ல; உள்ளத்தே கூட வெப்பம் கொண்ட மக்கள் வாழும் இடங்கள் அவை. சுடுகாட்டுக்கும் அவற்றிற்கும் வேறுபாடு இல்லை.

***

இவ்வளவு கொடுமை நிறைந்த பாலை நில வழி காத லனுடைய அகக் கண்ணிலே வந்து நின்றது. ‘நாமா அந்த நிலத்தைக் கடந்து போனோம்!’ என்று அவனே மலைத் தான். நினைத்தாலும் நடுக்கந் தரும் இடம் அல்லவா அது? அந்த இடத்தின் வழியாக மறுபடியும் போய்ப் பொருள் ஈட்ட வேண்டுமென்று இந்த நெஞ்சு நினைக்கிறதே! என்ன பைத்தியக்காரத்தனம்!

சென்ற தடவை அவன் போனபோது அந்தப் பாலை வனத்தின் கொடுமையை நேரே கண்டிருக்கிறான். அதன் வழியே செல்லும் போது உண்டான துன்பம் கிடக்கட் டும். அப்போது அவன் உள்ளத்தே எழுந்த ஒரு பெரிய போராட்டத்தை ஒருவாறு வென்று மேலே சென்றான். அந்தச் செய்தியும் இப்போது அவனுக்கு நினைவுக்கு வரு கிறது.

வில்லேர் உழவர் வாழும் வெவ்விய முன் இடங்களை யுடைய சிறிய ஊர்கள் இடையிடையே இருக்கும் சுரத்தின் வழியே அவன் போய்க் கொண்டிருந்தான். அங்கே வெயில் கடுமையாக அடிக்கும் போது தான் மிக மிகத் துன் பம் உண்டாகும். ஆனால் இப்போது வெயில் தணிந்து கொண்டிருந்தது. மாலைக் காலம் வந்துவிட்டது. அந்தச் சமயத்தில் தான் அவனுக்கு அதிகத்துயரம் உண்டாயிற்று. அவனுடைய நெஞ்சத்தின் உரமெல்லாம் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டது. அவன் அப்பொழுது தன் மனையை நினைத்தான்; மனைக்கு விளக்காகத் திகழும் காதலியை நினைத்தான். இந்தப் பாலை நிலத்தில் தன்னந் தனியே நாற்புறமும் ஜீவனற்ற காட்சிகளே நிறைந்த இடத்தில் அவன் நிற்கிறான். அவன் தன் வீட்டில் இருந் தானானால் இந்த நேரத்தில் அவன் காதலி மனைக்கு அழகைத் தருகிற விளக்கை ஏற்றி அதை வணங்கிவிட்டு, அவன் முன் புன்னகை பூத்தபடி வந்து நிற்பாளே! தலையை அழகாக வாரிப் பின்னி மலரைச் சூடிக்கொண்டு நெற்றி யில் திலகம் இட்டு அந்த விளக்கைக் கையில் ஏந்திச் செல் லும் கோலம் இப்போது நினைத்தாலும் உள்ளத்தைக் கிளரச் செய்கிறது.

இன்று அங்கே தன் இல்லத்தில் அவள் எப்படி இருப் பாள்? அதை உன்னிப் பார்த்தான். அந்தச் சுரத்திலே அவன் உரன் மாயும்படி வந்த மாலைக் காலத்திலே அவன் நினைத்துப் பார்த்தான். இப்போது அவள் மனைக்கு மாட்சி தரும் திருவிளக்கை ஏற்றுவாள். ஆனால் தன் காதலன் அருகே இல்லாமையால் முகம் வாடி அப்படியே உட் கார்ந்துவிடுவாள். அந்த விளக்கைப் பார்த்தபடியே, அவர் எங்கே இருக்கிறாரோ!” என்ற சிந்தனையில் மூழ்கி யிருப்பாள்.

‘இந்த நேரத்தில் அவள் மனை மாண் சுடரை ஏற்றி அதன் முன்னே அமர்ந்து தன் நெஞ்சிலே படரும் நினைப் பில் ஈடுபட்டிருப்பாள்’ என்று அவன் எண்ணினான். அவன் அவளை நினைத்தான். அவள் அவனை நினைப்பாள். இப்படித் துன்பம் அடைவதைவிடப் பேசாமல் ஊருக்கே திரும்பிப் போய்விடலாமா என்று கூட அவன் நினைத்தான். ‘சீசீ! முன்வைத்த காலைப் பின் வைக்கவாவது! உலகம் ஏசாதா? ஊரார் ஏசமாட்டார்களா? காதலியே ஏளன மாகப் பார்த்துச் சிரிக்கமாட்டாளா? இத்தனை தூரம் வந்துவிட்டோம். எப்படியாவது நினைத்த காரியத்தை முடித்துக்கொண்டு பணமும் கையுமாகத்தான் ஊருக்குப் போகபேண்டும்’ என்று தீர்மானித்தான். ஆயினும் அவன் மனை விளக்காகிய காதலி மனையில் விளக்குக்கு முன்னே நினைப்பில் ஆழ்ந்திருக்கும் கோலத்தை எளிதில் அவன் உள்ளத்திலிருந்து அகற்ற முடியவில்லை. மனம் சுழன்றது; கலங்கியது; மயங்கியது; திரும்பிப் போகலாம் என்று சிதறியது.

கடைசியில் ஆண்மை வென்றது. உறுதியுடன் பாலை நிலத்தைக் கடந்து சென்றான். வேற்று நாட்டுக்குப் போய்ப் பொருள் ஈட்டி வந்தான். நினைத்த காரியத்தை நினைத்த படி முடித்து வந்தான். அதற்குரிய மனத் திண்மை அவனுக்கு இருந்தது. “எண்ணிய எண்ணியாங்கு எய்தும் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்’ என்பது எத் தனை உண்மை. அப்படி நிறைவேற்றினதால் வந்த இன்பந் தான் என்ன! அந்த மன நிறைவுக்கு ஒப்பு உண்டா? உண்டு. இப்போது அவனுடைய காதலி நினைத்த வினையை முடித்தால் வரும் இனிமையின் பிழம்பு போல இருக்கிறாள். அவளை மீட்டும். பிரிந்து செல்வதா?

***

பழங்கதை அவனுடைய உள்ளத்தே ஓடியது. நெஞ்சே. அன்று நான் பாலை நிலத்தில் நடு வழியில் என் உரனெல்லாம் மாயும் படி வந்த மாலைக்காலத்தில் வினை முடித்தாலன்ன இனியோளாகிய காதலி மனைக்கு மாட் மை தரும் சுடரொடு நின்று படரும் பொழுது இது என்று நினைத்து மயங்கினேனே! மறுபடியும் அந்த அவஸ் தைக்கு ஆளாக வேண்டுமா? பட்ட பின்பும் துன்பத்தை வலிய மேற்கொள்வார் உண்டோ ? நான் போக மாட் டேன்” என்று தன் நெஞ்சோடு அந்தத் தலைவன் பேசுகிறான்.

ஈன்பருந்து உயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டு ஆடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை,
உள்ளினென் அல்லனோ யானே, ‘உள்ளிய
வினை முடித் தன்ன இனியோள்
மனைமாண் சுடரொடு படர்பொழுது’ எனவே?

நெஞ்சே, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பருந்து இருந்து வருந்தும், வானை முட்டும் நீண்ட கிளை களையும் பொரிந்த அடியையும் உடைய வேப்ப மரத்தின் புள்ளி வைத்தாற்போன்ற செறிவில்லாத நிழலிலே. பொன்னை உரைக்கும் கல்லைப் போன்ற வட்டாடுதற் குரிய இடத்தை அமைத்து, கல்லாத சிறுவர்கள் நெல்லிக் காயாகிய வட்டுகளை வைத்துக் கொண்டு விளையாடுவதும், வழிப் போவோரைக் கொலை செய்யும் வில்லையே ஏராகக் கொண்டு முயற்சி செய்யும் ஆறலை கள்வர் வாழ்கின்ற வெம்மையையுடைய முன்னிடங்களைப் பெற்ற சிறிய ஊர்களை உடையதுமாகிய பாலை நில வழியில் வந்த என் மன வலிமையை அழியச் செய்கின்ற மாலைக் காலத்தில் நான் நினைத்துக் கவலையுற்றேன் அல்லவா, ‘நினைத்த காரியத்தை நிறைவேற்றினால் வரும் இனிமையைப் போன்ற இனிமையையுடைய நம் காதலி, நம் மனைக்கு அழகான விளக்கோடு நின்று கவலையோடு நம்மை நினைக் கும் பொழுது இது’ என்று?

மாலையில், எனவே, யான் உள்ளினென் அல்லனோ என்று வாக்கியத்தை முடித்துக் கொள்க.

ஈனுதல் – கருவுயிர்த்த ல் . உயவும் – வருந்தும். சினை – கிளை. பொரி அரை – பொரிந்த அடி மரம்; பொறுக்குத் தட்டிப் போன அடிமரம். புள்ளி நீழல் – ஒரே பரப்பாகச் செறிந்து கிடக்காமல் புள்ளி புள்ளியாக இருக்கும் நிழல். கட்டளை – பொன்னை உரைக்கும் கல். வட்டு அரங்கு – சூது காய்களை ஆடும் இடம் ; குண்டுகளை ஆடும் இடம். வில் ஏர் உழவர்- வில்லையே ஏராக உடைய உழவராகிய பாலை நில மறவர் . முனை – முன்னிடம். சீறூர்- சிறு ஊர். கரன் முதல் – பாலை நில வழியிடத்தில்; முதல் : ஏழாம் வேற்றுமை உருபு . உரன் – வலிமை; இங்கே மனத்திண்மை . உள்ளினென் – நினைத்தேன். வினை முடித்தன்ன – காரியத்தை நிறைவேற்றினாற் போன்ற . மனைமாண் – மனைக்கு மாட்சி தருகின்ற சுடர் – விளக்கு. படர் – நினைக்கும்.

‘முன் ஒரு காலத்துப் பொருள் வயிற் பிரிந்த தலைமகன், பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது’ என்பது இந்தப் பாடலின் துறை. ‘முன்பு ஒரு தடவை பொருள் ஈட்டுவதற்காகத் தன் காதலியைப் பிரிந்து சென்று மீண்ட தலைமகன், மறுபடியும் பொருள் தேட வேண்டுமென்று எண்ணிய நெஞ்சுக்குச் சொன்னது’ எனபது அதற்குப் பொருள். மணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தும் கற்புக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.

இதனைப் பாடியவர் இளங்கீரனார் என்னும் புலவர். இது நற்றிணையில் மூன்றாவது பாட்டு.

– மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *