கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 25, 2023
பார்வையிட்டோர்: 2,213 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-16 | அத்தியாயம் 17-20

13.விசாரணை

தாமரைச்செல்விக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் காஞ்சியின் தலைவன் நீதிமண்டபத்தில் அறிவித்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் கசமுசாவென்று பேசிக்கொண்டாலும் அதைப்பற்றிச் சட்டை செய்யவில்லை பப்பகுமாரன். ஆனால் நீதிபதி மட்டும் முகத்தைச் சுளித்துத் தலைவனை நோக்கி, “இது நீதி மண்டபமா அல்லது சந்தைக் கடையா?” என்று எரிந்து விழவே, காவலன் நீதிமண்டபக் கட்டியங்காரனுக்குச் சைகை செய்ய, கட்டியங்காரன் எழுந்திருந்து, ”அமைதி! அமைதி!” என்று கூவினான். 

அமைதி ஏற்பட்டதும் எதிரே நின்ற முறைப்பிள்ளையை நோக்கி நீதிபதி, “இந்த வழக்கைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று வினவினார். 

முறைப்பிள்ளை மௌனமாக இருந்தான். 

“சரி சொல்” என்று நீதிபதி உத்தரவிட முறைப்பிள்ளை ஒருமுறை தாமரைச்செல்வியையும் நோக்கி, குமாரனையும் நோக்கிவிட்டுச் சிறிது நடுங்கினான், ஆனால் பேச்சு வராததால் மென்று விழுங்கவே, நீதிபதி: ”உம்… சொல் உனக்குத் தெரிந்ததை” என்று இரண்டாம் முறை அதட்டினார். 

அதற்குப் பிறகு தாமதித்தால் தன்னையும் பிடித்துச் சிறையில் போட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தால், “இவளை மணக்க வேண்டியவன் நான். ஆகையால் இவளுக்கு முறைப்பிள்ளை” என்று தடுமாறித் தடுமாறி வார்த்தைகளை உதிர்த்தான். 

”சரி. வேறு என்ன தெரியும் உனக்கு?” -நீதிபதி சற்றுக் கடுமையாகக் கேட்டார். 

“இவன் யாரையும் மதிப்பதில்லை” என்றான் முறைப்பிள்ளை அடுத்தபடியாக. 

நீதிபதி மேற்கொண்டு கேள்வி எதுவும் கேட்கவில்லை. காஞ்சியின் தலைவனை நோக்கினார். முறைப்பிள்ளைக்கு அருகில் நின்றிருந்த தலைவன், “இந்த வழக்கைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? அதைச் சொல்” என்று அதட்டியதுடன் அவன் தோளையும் இறுக்கிப் பிடித்தான். 

அதற்குப் பிறகு முறைப்பிள்ளை உளற ஆரம்பித்தான். “வழக்கு என்னவென்று நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லையே” என்றான் எல்லோர் காதிலும் விழும்படியாக. கூட்டத்தில் பெரும் நகைப்பு ஏற்பட்டதால் தலைவன் ஒரு முறை கூட்டத்தை உற்று நோக்கினான், சீற்றம் மிகுந்த கண்களால். அதன் விளைவாகக் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டதும் தலைவன் விசாரித்தான். “இவளுக்கும் நீதிபதியின் காவலர் தலைவனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொன்னாயல்லவா?” என்று கேட்டான் தலைவன். 

“ஆம் சொன்னேன். ஆனால் இந்த வழக்குக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?” என்று முறைப்பிள்ளை கேட்டான். 

“கேள்வி கேட்கவேண்டியவன் நான்” -தலைவன் அச்சுறுத்தும் வகையில் பேசினான். 

“நான் பதில் மட்டும் சொல்ல வேண்டுமா?” என்று கேட்டான் முறைப்பிள்ளை. 

“ஆம்” என்ற தலைவன், இவர்கள் இருவருக்கும் நெருங்கிய சம்பந்தமிருப்பது உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டான். 

முறைப்பிள்ளைக்கு அதுவரை இருந்த அச்சம் நீங்கி தைரியம் வந்துவிட்டதால், “நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்” என்றான். சபையில் லேசாக நகைப்பொலி ஏற்பட்டது. நீதிபதிகூடத் தமக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ளத் தமக்கு முன்னிருந்த பலகையில் முகத்தைக் குனிந்து கொண்டார். 

தலைவன் மேலும் விசாரிக்கத்துவங்கி, “எப்பொழுது பார்த்தாய்? எந்த இடத்தில் பார்த்தாய்?” என்று கேட்டான். 

“நான் மட்டும் பார்க்கவில்லை? தாங்களும் பார்த்தீர்கள். இன்னும் பலரும் பார்த்தார்கள்” -முறைப்பிள்ளை திட்டவட்டமாகச் சொன்னான். 

“நானா?’ தயக்கத்துடன் கேட்டான் தலைவன். 

“ஆம் தாங்கள்தான் மதுமண்டபத்தில் தங்களைச் சேர்ந்த வீரனொருவன் இவளைக் கையாள முயன்ற சமயத்தில் இவள் திமிறி, சேலையில் சில இடங்கள் கிழிய வெளியே ஓட முயன்றபோது, இவன்தான் அங்கு தோன்றி அவளைத் தனது கைகளால் தொட்டுத்தனது புரவியில் ஏற்றினான். பிறகு அவளைப் பிடித்தவனையும் கைகளில் குத்தி அவனைக் காயப்படுத்தினான். அவனைச் சூழ முயன்ற வீரர்களையும் கொன்றிருப்பான். தாங்கள் தலையிடாதிருந்தால், அவர்களையும் கொன்றிருப்பான்” என்று மேலும் ஏதோ சொல்லப்போன முறைப்பிள்ளையை ஒரு பார்வையால் அடக்கிய தலைவன், “இதை யார் கேட்டது உன்னை? இவளுக்கும் இவனுக்கும் உள்ள தொடர்பைப்பற்றிச் சொல்” என்று வினவினான். 

“உங்கள் முன்னாலே என் முறைப்பெண்ணை இவன் தொட்டுத் தூக்கித் தனது புரவி மேல் ஏற்றினான். பிறகு அவளைத் தனியாக அழைத்துக்கொண்டு மதுமண்டபத்திலிருந்து சென்றான். இது உங்கள் கண் முன்பே நடந்தது” என்றான் முறைப்பிள்ளை. 

முறைப்பிள்ளை அடிக்கடி தன்னையும் விசாரணையில் சேர்த்து இழுப்பதைப் பார்த்து இவனை மேற்கொண்டு விசாரித்தால் காஞ்சி மக்கள் நகைப்பார்களென்ற அச்சத்தால், “அது கிடக்கட்டும். இவர்களிருவருக்கும் நெருங்கிய உறவு உண்டு என்பதற்கு என்ன அத்தாட்சி?’ என்று தலைவன் கேட்டான். 

ஆனால் முறைப்பிள்ளை விடவில்லை. 

“இவன் மது மண்டபத்திலிருந்து என் முறைப் பெண்ணை தனியாக அழைத்துச் சென்றிருக்கிறான். தவிர அன்று இரவு முழுவதும் இவள் குடிசையிலேயே தனியாக இருந்திருக்கிறான். இது போதாதா?” என்று கேட்டான். 

அதுவரை வாளாவிருந்த குமாரன் எழுந்திருந்து “நீதிபதி அவர்களே! இவனை நான் ஒரு கேள்வி கேட்கலாமா?’ என்று வேண்டினான். 

“கேள்” -ஒற்றைச் சொல்லில் வந்தது நீதிபதியின் பதில். 

“முறைப்பிள்ளை!” என்று இன்பமான குரலில் துவங்கினான் குமாரன். 

”என்ன?” -முறைப்பிள்ளை பதில் சொன்னான். 

‘நானும் இவளும் தனியாகப் பெரிய மறவர் குடிசையில் இருந்தது உமக்கு எப்படித் தெரியும்” என்று வினவினான் குமாரன். 

“வேறு எப்படி இருக்க முடியும்?” என்று முறைப்பிள்ளை கேட்டான். 

“இவள் தனியாக இருந்திருக்கக் கூடாதா?” 

“இருந்திருக்க முடியாது!” 

“எப்படித் தெரியும் உமக்கு?” 

“பெரிய மறவரைத்தான் சிறையிலடைத்திருக்கிறார்களே!” 

“யார் சொன்னது?” 

“காஞ்சியின் தலைவர்தான் சொன்னார்.” 

“வேறென்ன சொல்லிக் கொடுத்தார்?” 

“இங்கு என்ன சொல்ல வேண்டுமென்பதை எல்லாமே சொல்லிக் கொடுத்தார்” என்று சற்றே இரைந்தே சொன்ன முறைப்பிள்ளை, காவலனை நோக்கி, “நான் சொன்னது சரிதானே?’ என்றும் வினவினான். 

இதைக் கேட்டதும் நீதிமண்டபத்தில் ‘கொல்’ என்ற சிரிப்பு பெரியதாக ஒலிக்கவே, கட்டியங்காரன் தனது பெரிய பூண் போட்ட கருங்காலி மரத்தடியைத் தரையில் மும்முறை தட்டி, “அடுத்து சிரித்து நீதிக்கு இடைஞ்சல் செய்பவர்கள் சிறை செய்யப் படுவார்கள். இவர் சாட்சியைத் தடை செய்பவர் யாருக்கும் தண்டனை கிடைக்கும்” என்று அதட்டவே சத்தம் அடங்கியது. 

முறைப்பிள்ளைக்கு அசட்டுத் துணிவு அதிகமாகிவிட்டதால் அவன் மேலும் சொன்னான்: ”இதற்கு வேறு சாட்சிகளும் இருக்கிறார்கள்” என்று. 

நீதிபதி தமது கண்களை முறைப்பிள்ளைமீது ஓட்டி, ”யார் அவர்கள்?” என்று கேட்டார். 

“என் முறைப்பெண்ணைச் சிறை செய்யச் சென்ற காவலர்” என்றான் முறைப்பிள்ளை. 

“அவர்கள் என்ன கண்டனர்?” என்று விசாரித்தார் நீதிபதி. 

“இந்தக் குமாரன் படுத்திருந்தான். குடிசைக்கு வெளியே…” 

“உம், சொல் மேலே.” 

“அவன் பக்கத்தில் இவள் நின்றிருந்தாள்.” 

“நின்றிருந்தால் தவறென்ன?” 

நீதிபதியின் கேள்வியால் குழப்பமடைந்த முறைப்பிள்ளை, “இரவில் இவனுடன் இவள் தனித்திருக்கலாமா?” என்று கேட்டான். 

“இவன் அவளைக் காத்து அழைத்துச் சென்றதாக நீயே சொன்னாயல்லவா?” -நீதிபதி கனிவுடன் கேட்டார். 

“ஆம்” என்றான் முறைப்பிள்ளை. 

“இவள் குடிசையை அடைந்தபோது இவள் தந்தை அங்கில்லை?”

“ஆம், அவரைத்தான் நாங்கள் பிடித்து வைத்து விட்டோமே.” 

“அப்படியிருக்க அவளைத் தனித்துக் குடிசையில் விட்டு வர முடியுமா? அதுவும் மீண்டும் அவளை யாராவது உபத்திரவம் செய்தால் அவளைக் காப்பதற்கு யாராவது வேண்டாமா?” 

“கண்டிப்பாக வேண்டும்.” 

“அப்படியிருக்க, முதலில் காத்தவன் அவளைக் காக்க குடிசையருகில் காவலிருந்தால் அது முறைகெட்ட செய்கை யாகுமா?” 

இதைக் கேட்டதும் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த முறைப்பிள்ளை காவலனை நோக்கி, “இதற்கு என்ன பதில் சொல்லட்டும்?” என்று வினவ, நீதிமண்டபத்தில் அனைவருக்கும் மறுபடியும் நகைப்பை நிறுத்த முடியவில்லை. நீதிபதி தமது முன்பிருந்த பலகையைத் தட்டி எச்சரிக்கை செய்த பின்பே சிரிப்பு அடங்கியது. 

“உன் சாட்சி போதும், இப்படி வந்துவிடு” என்றான் தலைவன். 

அந்த சாட்சி அப்புறம் சென்றதும் அத்துடன் வழக்கு முடிந்துவிடும் என்று நீதிபதி எதிர்பார்த்தார். ஆனால் அங்கு வேறொரு பூதம் கிளம்பியது. குமாரன் எழுந்து வந்து, “நீதிபதியவர்களே! நீதியை முன்னிட்டு நானும் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்” என்று விண்ணப்பித்துக் கொண்டான். 

“கேள்” என்றார் நீதிபதி. 

”இவளைச் சிறை செய்யக் காவலர் தலைவன் வீரர்களை அனுப்பினார்” என்று மெதுவாக விளக்கினான். “அவர்களைத் தடுத்துத் திருப்பியனுப்பியது நான்தான்” என்றான். 

“அது குற்றம்” என்றார் நீதிபதி. 

“இவளை விசாரணைக்கு அழைத்து வருவதாக நான் ஒப்புக் கொண்டேன். அழைத்து வந்தேன். யாரையும் சிறை செய்வதற்கு நீதிபதியின் காவலர் தலைவனுக்கு அதிகாரமுண்டு” என்றான் குமாரன். 

ஒப்புக்கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார் நீதிபதி. “அவர்களையும் தாங்கள் விசாரிக்க வேண்டும்” என்று குமாரன் கூறினான். 

இதைக் கேட்டதும் காஞ்சியின் காவலன் எழுந்து நின்றான். “அவர்களை எதற்கு விசாரிக்க வேண்டும்?” என்று கேட்டான் காவலன். 

“இவளைச் சிறை செய்ய வந்தவர்களுடன் இவளை அனுப்ப மறுத்தவன் நான். ஆகையால் காஞ்சித் தலைவன் உத்தரவை மீறியிருக்கிறேன். அது குற்றம். ஆகவே அவர்கள் என்னைப்பற்றி சாட்சி சொன்னால் உண்மை விளங்கும்” என்றான் குமாரன். 

“அவசியமில்லை” என்றான் காவலன். 

“அவசியமா? அவசியமல்லவா? என்பது நிதிபதி தீர்ப்பளிக்க வேண்டிய விஷயம். இது நீதி மண்டபம். நீதிபதியைத் தவிர வேறு யாரும் எந்த முடிவையும் செய்ய முடியாது” என்று திட்டமாக உரைத்த குமாரன், “அந்த வீரர்களில் யாராவது ஒருவன் வரட்டும்” என்றான். 

காஞ்சியின் காவலன் பெரும் சங்கடத்திலிருந்தான். அப்பொழுது நீதிபதி கேட்டார்: “அவர்களை விசாரிக்க வேண்டிய அவசியம்?’ என்று. 

“அவர்கள் காஞ்சி மண்டலத்தின் வீரர்கள் அல்ல!” என்று பெரிய அதிர்வெடியை எடுத்துவீசினான் குமாரன். 

நீதிபதி காவலர் தலைவனை நோக்கித் தமது கண்களை ஓடவிட்டார். காவலர் தலைவன் பேயறைந்தது போல் உட்கார்ந்திருந்தான். 

14.சிறையிருந்த காட்சி 

தாமரைச்செல்வியைச் சிறை செய்ய வந்தவர்கள் காஞ்சியின் வீரர்கள் அல்ல என்ற பெரிய அதிர்வெடியை குமாரன் போட்டதால் நீதிமண்டபத்தில் முதன் முதலாக ‘ஹா’ என்ற பிரமிப்பு ஒலியும், அதை அடுத்துப் பூரண அமைதியும் நிலவியது. அந்த அமைதி ஏற்படும்வரை பேயறைந்தது போல் உட்கார்ந்துவிட்ட காஞ்சி காவலர் தலைவன், அமைதி ஏற்பட்டதும் தனது அடக்கத்தை உதறி எழுந்து, “நீதிபதி அவர்களே! இது சுத்த அபாண்டம். காஞ்சியின் காவலர்களைத் தவிர வேறு யாரை நான் அனுப்ப முடியும்? குற்றவாளியைச் சிறைப் பிடிக்க?” என்ற கேள்வியொன்றை வீசினான் சபைமுன்பு. 

அந்தக் கேள்விக்கு குமாரன் என்ன பதில் சொல்லப் போகிறானோ என்பதை வழக்கைக் காண வந்தவர்கள் சிந்தித்திருக்கையில் குமாரன் நீதிபதியை நோக்கி, “அவர்கள் காஞ்சி மண்டல வீரர்களானால் அவர்களை சாட்சி சொல்ல அழைப்பதில் காவலர் தலைவருக்கு என்ன கஷ்டமிருக்க முடியும்?” என்று பதில் கேள்வியை வீசினான். 

நீதிபதி காவலர் தலைவனை நோக்கி, ‘ஆம்! சிறை செய்யச் சென்றவர்களில் யாராவது ஒருவன் வரட்டும் சாட்சி சொல்ல” என்றார். 

அப்பொழுதும் காவலர் தலைவன் மசியவில்லை. “அவர்களை வேறு வேலையாக வெளியூருக்கு அனுப்பியிருக்கிறேன்” என்றான். 

குமாரன் விடவில்லை. “நேற்றிரவுக்குள் அத்தனை அவசரமான வேலை என்ன இருக்கும்? அதுவும் இன்று விசாரணை இருக்கும் போது? இவளைச் சிறை செய்ய வந்தவர்களை வேறு ஊருக்கு அனுப்புவது எப்படி முறையாகும்? அது நீதிக்குக் களங்கம் செய்வதல்லவா?” என்று கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக வீசினான். 

“உனக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை” என்றான் தலைவன். 

“ஆனால் நீதிக்கு பதில் சொல்ல வேண்டும். நீதியை நிறைவேற்றவும், விசாரணைக்கு உதவவுந்தானே நாம் இங்கு கூடியிருக்கிறோம்?” என்று வினவினான் குமாரன். 

“தலைவரே! குமாரன் சொல்வதில் நியாயமிருக்கிறது. சிறை செய்ய முயன்றவர்களின் சாட்சி இதற்கு அவசியம். அவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கூறினார் நீதிபதி. 

“அதுவரை குற்றவாளி…?” என்று இழுத்தான் காவலர் தலைவன். ‘குற்றவாளியென்று நிரூபிக்கப்படும்வரை இந்தப் பெண் குற்றவாளியல்ல” என்றார் நீதிபதி. 

‘இவளை விசாரணை முடியும் வரை சிறையில் வைத்தால் என்ன?” என்று வினவினான் தலைவன். 

‘அத்தகைய முடிவு நிரபராதியைச் சிறையில் வைப்பதாகும். காஞ்சி மன்னன் நீதி அதற்கு இடந்தராது” என்று சுட்டிக்காட்டினான் குமாரன். 

அது நியாயம் என்று குறிப்பிட நீதிபதி தலை அசைத்தார். 

நீதிபதியின் மனப்போக்கைப் புரிந்துகொண்ட காவலர் தலைவன். “அதுவரை இவள் எங்கிருப்பாள்?” என்று வினவினான். 

“அவள் குடிசையில். என் பாதுகாப்பில்” என்றான் குமாரன். “ஐயோ, அது கூடாது” என்று கூவினான் முறைப்பிள்ளை. “என்னுடன் இந்தமுறைப்பிள்ளையும் இருக்கலாம்.” இதைச் சொன்ன குமாரன் முறைப்பிள்ளையை உற்று நோக்கினான். 

“நான் மாட்டேன். இவர்களிருவரும் என்னைக் கொன்றுவிடுவார்கள்.” என்று முறைப்பிள்ளை அலறினான். 

நீதிபதி காவலர் தலைவனை நோக்கி “நீங்கள் வெளியூருக்கு அனுப்பியிருக்கும் காவலர் வர எத்தனை நாளாகும்?” என்று வினவினார். 

“என்னால் திட்டமாகச் சொல்ல முடியாது.” காவலன் தலைவன் சங்கடத்துடன் பேசினான். 

இந்தச் சமயத்தில் நீதிபதியை நோக்கிய குமாரன், “எனக்கு உத்தரவு கொடுத்தால் சிறை செய்ய வந்த காவலரின் தலைவனை இரண்டே நாட்களில் நான் கொண்டு வருகிறேன்” என்றான். 

“உன்னால் மட்டும் எப்படி முடியும்?” என்று நீதிபதி கேட்டார். 

“அவர்களில் ஒருவன் மதுமண்டபத்தில் தாமரைச் செல்வியை தூக்கிக்கொண்டு ஓடி வந்தவன். அவனுக்கு ஒரு அடையாளம் இருக்கிறது” என்று குமாரன் சொன்னான். 

“என்ன அடையாளம்?” என்று தலைவன் கேட்டான். 

“அதை இப்பொழுது சொல்ல அவசியமில்லை.” -குமாரன் பதில் திட்டமாயிருந்தது. 

“ஏன்?” 

“தெரிந்தால் அவன் எச்சரிக்கையடைந்து விடலாம்.” 

“எப்படி எச்சரிக்கை அடைவான்? அவன்தான் ஊரிலில்லையே?” 

“ஊரில் இல்லை என்பதற்கு உங்கள் சொல்தான் சாட்சி.” 

“நான் பொய் சொல்கிறேனென்கிறாயா?” 

“அப்படி எதுவும் நான் சொல்லவில்லை.” 

“நீ சொன்னதற்கு வேறு என்ன பொருள்?” 

“உங்கள் உத்தரவை ஏற்று அவன் வெளியூர் போக முடியாது. போகும் நிலையில் அவன் இல்லை.” 

அடுத்து காவலர் தலைவன் குமாரனுடன் பேச்சுக் கொடுக்காமல் நீதிபதியை நோக்கி, “இவன் ஊகத்தை வைத்து நீதியைத் தள்ளிப்போட முடியுமா?” என்று கேட்டான். 

“இவன் ஊகம் பொய்யென்று தெரியும் வரை நாம் தீர்ப்புக் கூற முடியாது” என்ற நீதிபதி தாமரைச் செல்வியை நோக்கி, “தாமரைச் செல்வி! உன்மீது திட்டமான குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதுவரை நீ உன் குடிசையைவிட்டு எங்கும் போக முடியாது. சிறை யிலிருக்கும் உன் தந்தையையும் விடுதலை செய்கிறேன். உன்னுடன் அவரும் இருக்கலாம். அவர் மீதுள்ள வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. வழக்கு முடியும் வரை அவரும் நீயும் காஞ்சியைவிட்டு வெளியே செல்ல முடியாது. சென்றால் உடனடியாக நீதியை மீறிய குற்றத்திற்குத் தண்டிக்கப்படுவீர்கள்” என்று கூறி நீதிபதி தமது ஆசனத்திலிருந்து எழுந்து நீதி மண்டபத்தின் உட்புற அறைக்குச் சென்று விட்டார். 

அவர் சென்றதும் காவலர் தலைவனை அணுகிய குமாரன், “தலைவரே! இவள் தந்தையைச் சிறையிலிருந்து அனுப்பினால் நான் இருவரையும் அழைத்துச் சென்று அவர்களைக் குடிசையில் விட்டு விடுகிறேன்” என்றான் மிகவும் பணிவான குரலில். 

குமாரனை, தலைவன் கொலைப் பார்வையாய்ப் பார்த்தான். பிறகு தனது காவலன் ஒருவனை விளித்து “இவருடன் பெரிய மறவனை அனுப்பி வை’ என்று உத்தரவிட, குமாரன், தாமரைச் செல்வி பின்தொடர சிறைச்சாலையை நோக்கிச் சென்றான். 

அவர்கள் சென்றதும் முறைப்பிள்ளை காவலர் தலைவனிடம் ஓடிவந்து “மறுபடியும் அவள் அவனுடன் போகிறாளே!” என்று முறையிட்டான். 

காவலர் தலைவன் அவனை மிக இகழ்ச்சியாக நோக்கி, “இல்லாவிட்டால் உன்னைப் போன்ற முட்டாளுடனா வருவாள்?” என்று கூறிவிட்டுச் சென்றான் மண்டபத்துக்கு வெளியே. 

தாமரைச்செல்வியுடன் காவலனைத் தொடர்ந்த குமாரன் அன்றுதான் முதன் முதலாகக் காஞ்சியின் சிறைச் சாலையைப் பார்த்தான். சிறைச்சாலையின் சுவர்கள் மிகக் கெட்டியாயிருந்தன. நுழைவு வாயில் கதவும் நல்ல மரத்தால் செய்யப்பட்டுப் பின்புறத்தில் இரும்புக் கம்பிகளுடன் அடிக்கப்பட்டிருந்ததால் கதவை உடைப்பது குதிரைக் கொம்புதான் என்று தீர்மானித்தான் குமாரன். அதற்கும் இரண்டாவது வாயிலுக்கும் இருந்த இடைவெளியில் ஆயுதந்தரித்த வீரர்கள் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். இரண்டாவது வாயிலைத் தாண்டியதும் இருந்த சிறை அறைகள் நல்ல கெட்டிக் கம்பிகளால் பாதுகாக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஒரு வீரனை விளித்த குமாரன், “அந்தப் பெரிய மறவனை அழைத்து வா” என்று கூற, இரண்டு மூன்று அறைகளுக்கப்பாலிருந்த ஒரு அறையைத் திறந்து பெரிய மறவனை அழைத்து வந்தான் காவலன். 

பெரிய மறவன் நிலை பார்ப்பதற்குப் பரிதாபமாயிருந்தது. அவனால் நடக்க முடியாமல் திணறினான். அவனை செல்வி ஒருபுறமும் குமாரன் ஒரு புறமும் தாங்கி அழைத்துச் சென்றார்கள். அப்படிச் சென்றபோது ஒரு அறையின் முன்னே சிறிது நின்ற குமாரன் சட்டென்று மேலே நடக்கலானான். சிறைச்சாலைக்கு வெளியில் வந்ததும் தனது புரவியிலும், தாமரைச்செல்வியின் புரவியிலும் இருவரையும் ஏற்றி, “நீங்கள் செல்லுங்கள் குடிசைக்கு, பின்னால் நான் வருகிறேன்’ என்று கூறினான். 

தாமரைச்செல்வி தலைகுனிந்த வண்ணம் புரவியில் ஏறினாள். பெரிய மறவன் சிறிது நிதானித்து குமாரனை நோக்கி, “தம்பி! உனக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குழைந்த குரலில் கூறிவிட்டு, குமாரனால் புரவியில் ஏற்றப்பட்டு, மெதுவாகப் புரவியை நடத்தினான். 

சிறைச்சாலையை மீண்டும் உற்றுநோக்கி, அவர்கள் சென்றதும் கால்நடையாகவே நீதிபதி இல்லத்திற்குச் சென்ற குமாரன், வழிநெடுக சிந்தனையில் இறங்கிய வண்ணம் நடந்தான். நீதபதி இல்லத்தை அடைந்ததும் கொட்டடியிலிருந்து ஒரு புரவியை அவிழ்த்துக் கொண்டு செல்வியின் குடிசையை அடைந்தான். அப்பொழுதுதான் புரவியிலிருந்து தந்தையை இறக்க முயன்று கொண்டிருந்தாள் செல்வி. அதைக் கண்ட குமாரன், ‘செல்வி! நீ அப்புறம் போ” என்று கூறித் தனது புரவியை நோக்கிக் கையைக் காட்ட அது மெதுவாக முழங்கால்களை மடித்துப் படுத்தது. அதனால் சங்கடமின்றிப் புரவியிலிருந்து இறங்கியும் பெரிய மறவனால் நடக்க முடியாததால் அவரைப் பிடித்துக் குடிசை மேட்டில் அழைத்துப் போய் குடிசைக்குள் படுக்க `வைத்தான். பிறகு செல்வியை அழைத்து, “உன் தந்தைக்கு உள் காயம் நிரம்ப இருக்கிறது. இன்று ஒத்தடம் கொடு. பிறகு உன்னைச் சந்திக்கிறேன்” என்று கூறி நீதிபதி புரவியை அங்கேயே விட்டு விட்டு, தனது புரவிமீது ஏறி நீதிபதி இல்லத்திற்குச் சென்றான். 

அவன் அந்தப் பெரு மாளிகைக்கு வருமுன்பாகவே அங்கு வந்துவிட்ட நீதிபதி நிருபவர்மர், குமாரனைக் கூடத்திலேயே சந்தித்தார். “குமாரா! உண்மையாக உனக்குக் குற்றவாளியைத் தெரியுமா?” என்று வினவினார். 

“எசமான்! குற்றவாளியை உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் சாட்சியை எனக்கு மட்டுந்தான் தெரியும், மதுமண்டபத்தில் அவன் வயிற்றிலும் மார்பிலும் குத்தியிருக் கிறோன். என் குத்து படும் எவனுக்கும் உள்காயம் பலமாக இருக்கும். அவனால் சாதாரணமாக நடக்கவோ, வேகமாகப் புரவியேறவோ நாலைந்து நாட்களுக்கு முடியாது” என்றான். “அவனைப் பெரிய மறவன் குடிசையில் பார்த்தபோதே அவனுக்கிருந்த சங்கடத்தைக் கவனித்தேன்.” 

“அவனை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறாய்?” என்று கேட்டார் நீதிபதி. 

“கண்டுபிடித்து விட்டேன்” என்ற குமாரனை விசித்திரமாகப் பார்த்தார் நீதிபதி. 

“எங்கிருக்கிறான் இப்பொழுது?” என்று கேட்டார் வியப்பு நிரம்பிய குரலில். 

“சிறைச்சாலையில் ஓர் அறையில் இருக்கிறான். பெரிய மறவனை விடுவிக்கச் சென்றபோது பார்த்தேன். நான் பார்த்தது என்னுடன் வந்த காவலாளிக்குத் தெரியாது. என்னால் குத்துண்டவன் சிறை அறையில் சுருண்டு கிடந்தான். முனகிக்கொண்டு இருந்தான்” என்ற குமாரன், “காஞ்சியின் சரித்திரம் என்னையும் மீறிப் போகிறது” என்றான். 

“இப்பொழுது நீ போய் அவனை விடுவித்து அழைத்து வா, இங்கேயே விசாரிப்போம்” என்றார். 

“இப்பொழுது உடனடியாகப் போனால் சந்தேகம் ஏற்படும். இரவில் போவோம்” என்றான் குமாரன். 

“போவோம் என்றால்?” -நீதிபதி கேட்டார். 

“நாம் இருவரும்” என்ற குமாரன் அதற்குமேல் ஏதும் பேசவில்லை. 

அன்று இரவு முதிர்ந்ததும் நீதிபதியும் குமாரனும் சிறைச் சாலையை அடைந்து கதவுகளைத் திறக்கச் சொல்லி அந்த அறையை அடைந்தனர்.. அறையைக் காவலன் திறந்ததும் இருவருமே பிரமித்தனர். 

அந்த மனிதன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவன் மார்பில் ஒரு குறுவாள் செருகப்பட்டிருந்தது. 

15.பல்லவ பீட மர்மக் கதை 

குறுவாளொன்றால் மார்பில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சாட்சியைக் கண்டதும் நீதிபதி, குமாரன் இருவருமே அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டாலும், அந்த அதிர்ச்சியிலிருந்து முதலில் விடுதலையடைந்த குமாரன் சட்டென்று சாட்சியின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து அவன் கை நாடியைப் பரிசோதித்தான். நாடி மிக மெதுவாகவும் விட்டு விட்டும் துடித்துக் கொண்டிருந்ததால் சாட்சியின் வாழ்வு அடுத்த சில நிமிடங்களில் முடிந்து விடும் என்ற தீர்மானத்துக்கு வந்த குமாரன், அவன் அங்கியைத் தனது குறுவாளால் கிழித்து உட்புறத்தில் எதோ தடவிப் பார்த்தான். பிறகு கச்சையைத் தடவி அதிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து நீதிபதியிடம் கொடுத்து, “இது பத்திரமாக இருக்கட்டும்” என்றான் மிக மெதுவான குரலில். நீதிபதி அதைத் தனது கச்சையில் பத்திரப்படுத்திக் கொண்டார். குமாரன், நீதிபதி இருவருமே சிறைக்கதவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த தாலும், அவர்கள் அலுவல்களும் பேச்சும் மிக ரகசியமாக இருந்ததாலும், வெளியே நின்ற சிறைக் காவலனுக்கு உள்ளே நடக்கும் விஷயம் எதுவுமே தெரியவில்லையென்றாலும் அவன் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. நீதிபதிக்கு முன்பு நடக்கும் எதுவும் சட்ட சம்மதமென்பதாலும், அவரைத் தடுக்கத் தனக்கு உரிமையில்லை என்ற காரணத்தாலும் அவன் பேசாமல் சிறையைக் கவனிக்காமல் வேறு புறம் பார்த்து நின்று கொண்டிருந்தான். 

குமாரன் அந்த சாட்சியின் கச்சை முதலியவற்றை சோதித்து முடிந்ததும் அந்த மனிதன் உடல் ஒரு முறை உதறி நின்றது. அவன் காலம் முடிந்து விட்டதைப் புரிந்து கொண்ட நீதிபதி. குமாரன் பின்தொடர அந்த அறையிலிருந்து வெளியே வந்து காவலனை விளித்து, “இந்தச் சிறையிலிருந்தவனைக் கொன்றது யார்?” என்று விசாரித்தார். 

“எனக்குத் தெரியாது!” என்றான் காவலன். 

“எங்களுக்கு முன்பு இங்கு யாராவது வந்தார்களா?” என்று நீதிபதி இரண்டாவது கேள்வியை வீசினார். 

“இல்லை” என்றான் காவலன் திட்டமாக 

அப்படியானால் இந்தக் குறுவாளால் யார் இவனை குத்தியிருக்க முடியும்?” என்று நீதிபதி கேட்டார். 

”யாரும் குத்தியிருக்க முடியாது” என்றான் காவலன். 

‘இவனே தன்னைக் குத்தி மாய்த்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறாயா?” என்று வினவினான். 

“அப்படித்தானிருக்க வேண்டும்” என்றான் காவலன். 

அதுவரை வாளாவிருந்த குமாரன், “நீதான் இன்று இரவின் ஆரம்பத்திலிருந்து காவலிருக்கிறாயா?” என்று வினவினான். 

“இல்லை” -காவலன் தாமதித்துப் பதில் சொன்னான். “இரவில் இரண்டு காவலர் உண்டு. முதல் ஜாமக்காவலன் போனபிறகு நான் வந்தேன். இனி விடியும் வரை நான்தான் காவலன். 

“அந்தக் காவலன் வீடு செல்வதற்கும் நீ வருவதற்கும் இடையில் நேரம் உண்டா?” -குமாரன் வினவினான். 

“உண்டு. சில நாழிகைகள் இடைவேளை இருக்கும்.” 

“அந்த இடைவேளையில் ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பாளி?” 

“எதுவும் நேர முடியாது. சிறைச்சாலையைச் சுற்றிலும் பலமான காவல் இருக்கிறது. யாரும் நுழைய முடியாது.” 

அதற்குமேல் குமாரன் எதுவும் கேள்வி கேட்கவில்லை. நீதிபதி சைகை காட்ட குமாரன் அவருடன் வெளியே சென்றான். நீதிபதி குமாரனுடன் நேராகத் தமது இல்லத்தை அடைந்து மாளிகைக் கூடத்தில் அமர்ந்து கொண்டு குமாரனை உற்று நோக்கினார் சில விநாடிகள். பிறகு கேட்டார்: “தாமரைச்செல்வியைத் துரத்தி வந்தவனை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று சொன்னாயே?’ என்று. 

“ஆம் சொன்னனேன். அவன் கன்னத்தில் பெரிய வெட்டுக் காயம் இருந்ததைப் பார்த்தீர்களல்லவா?” என்று குமாரன் கேட்டான். 

“ஆம் பார்த்தேன்.” 

“அதுதான் அடையாளம்.” 

“எவ்வளவோ வீரர்களுக்கு அம்மாதிரி வெட்டுக்காயம் இருக்கலாம்.” 

“ஆனால் இவனுக்கு ஏற்பட்டிருப்பது வெட்டுக்காயம் போல் தோன்றினாலும் அது வெட்டுக் காயமல்ல.” 

“வேறென்ன?” 

“வெட்டுக்காயம் போல் ஆழமாகப் போடப்பட்ட சூடு. மாடு திருடும் குற்றவாளிகளுக்கு மாட்டுக்குப் போடும் சூட்டைப் போலவே போடப்படும் சூடு. இந்தப் பழக்கம் நீண்ட நாட்களாகச் சில இனத்தவரிடம் உண்டு.” 

குமாரனின் சொல்லைக் கேட்ட நீதிபதி நிருபவர்மர் திகைத்தார். அந்த மாதிரி தண்டனை கொடுக்கும் இனம் அவருக்கும் தெரியும். அந்த இனத்தவரில் ஒருவன் காவலர்க்குள் புகுந்திருப்பதும் அவன் காஞ்சியின் காவலர் தலைவன் கையாளாக இருப்பதும் பெரும் விந்தையென நினைக்கவும் செய்தார். “நீ சொல்வது சரியாயிருக்கும் பட்சத்தில் காஞ்சியில் ஒற்றர்கள் உலாவுகிறார்கள். பயங்கரமான ஒற்றர்கள்” என்று அச்சம் துளிர்த்த குரலில் சொன்னார். 

“அப்படித்தானிருக்க வேண்டும்” என்ற குமாரன் “எசமான்” என்று நீதிபதியை அழைத்தான். 

“நான் எசமானல்ல” என்றார் நீதிபதி வெறுப்புடன். 

“நான் தங்கள் காவலர் தலைவனல்லவா?” என்று வினவினான் குமாரன். 

“தற்சமயம் அப்படித்தான்” என்று பொறுப்பற்ற முறையில் பதில் சொன்னார் நீதிபதி. 

அந்த விவாதத்தைத் தொடரவில்லை குமாரன். சற்று சிந்தித்துவிட்டு “நீதிபதியவர்களே! சிறையில் மாண்டவனிட மிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொடுத்தேனே, அதைச் சற்று எடுத்துப் பாருங்கள்” என்று வேண்டினான். 

அந்தப் பொருளைக் கச்சையிலிருந்து எடுத்து விளக்கு வெளிச்சத்தில் பார்த்த நீதிபதி கல்லாய்ச் சமைந்து விட்டார். “இப்பொழுது புரிகிறது. தாமரைச்செல்வியை சிறை செய்ய வந்தவர்கள் காஞ்சியின் காவலர் படையைச் சேர்ந்தவர்களல்ல” என்று கூறினார். 

ஒப்புக்கொள்வதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த குமாரன், “இது தங்களிடமே இருக்கட்டும். பின்னால் சாட்சியம் தேவையாயிருந்தால் உபயோகப்படும்” என்றான். “இந்த கனமான செப்புக்காசு காஞ்சி மண்டல நாணயமல்ல. அதில் நடுவில் லேசாக இருக்கும் கீறலும் நம்முடைய செலாவணியைச் சேர்ந்ததல்ல. அது ஒரு அடையாளக் காசு” என்று கூறிவிட்டு, “நான் எதற்கும் போய் தாமரைச்செல்வியைப் பார்த்துவிட்டு வருகிறேன், தாங்கள் அனுமதியளித்தால்” என்றான் குமாரன். 

நீதிபதி சிந்தனை வசப்பட்டார். சிறிது சிந்தித்த பிறகு “காஞ்சி இப்பொழுதுள்ள நிலைமையில் நீ மிகுந்த எச்சரிக்கையுடனிருக்க வேண்டும், உனக்கும் ஏதாவது நேர்ந்தால் உன் தந்தைக்கு நான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று கூறினார். 

“என் தந்தையா?” -வியப்புடன் கேட்டான் குமாரன். 

”ஆம்” 

“அவரைத் தெரியுமா உங்களுக்கு?” 

“நீ இறந்தால் அவர் வந்து என்னைக் காரணம் கேட்க மாட்டாரா? அப்பொழுது தெரியுமல்லவா?” 

“அதற்குச் சந்தர்ப்பமிருக்காது” என்று திட்டமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்ட குமாரன், ‘நீதிபதி ஏதோ சந்தேகிக்கிறார்?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு வெளியே சென்று தனது புரவியைக் கொட்டடியிலிருந்து அவிழ்த்து சேணம் பூட்டிப் புறப்பட்டான், தாமரைச் செல்வியின் குடிசையை நோக்கி. அன்று அங்கு எதுவும் நிகழ காவலர் தலைவன் விடமாட்டா ரென்பது குமாரனுக்குத் திட்டமாகத் தெரிந்தாலும் கவலை யுடனேயே பயணம் செய்தான். 

அவன் தாமரைச்செல்வியின் குடிசையை அடைந்த போது மூன்றாம் ஜாமம் முடிந்து கொண்டிருந்தது. குடிசையில் விளக்கு ஏதுமில்லை. புரவியை மேட்டின் அடிவாரத்திலேயே விட்டு. குடிசை மேட்டில் ஏறிச் சென்று, குடிசை வாயிலில் நின்று, ‘செல்வி! செல்வி!’ என்று இருமுறை குரல் கொடுத்தான். 

செல்வி மெதுவாக எழுந்து குடிசைக் கதவைத் திறந்தாள். “நீங்களா!” என்று ஆச்சரியமும் ஆவலும் கலந்த குரலில் வினவினாள். 

“ஆம்” என்றான் குமாரன். 

‘இந்த வேளை கெட்ட வேளையில் இங்கு எதற்காக வந்தீர்கள்?” என்று வினவினாள். 

“உன்னைக் காண வேளையுண்டா செல்வி?” என்று விசாரித்த குமாரன் அவளைத் தனது கைகளால் வளைத்துத் தன்னிடம் இழுத்துக்கொண்டான். 

அவள் எந்தவித எதிர்ப்பையும் காட்டாதது மட்டுமல்லாமல், “தந்தை ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறார். காலையில்தான் எழுந்தி ருப்பார்’ என்று தனது ஆவலையும் மறைமுகமாகக் குறிப்பிட்டாள். 

ஆனால் அவன் மனம் காதலில் திளைக்கும் நிலையில் இல்லாததால் “செல்வி! தந்தையின் காயங்களை என்ன செய்தாய்?” என்று வினவினான். 

‘மருந்து போட்டிருக்கிறேன். உள்ளுக்குள் மதுவைச் சற்று அதிகமாகப் புகட்டியிருக்கிறேன். அவர் நன்றாக உறங்க” என்றாள் செல்வி. 

“அப்படி உறங்க வைக்கக் காரணம்?” 

“உங்களுக்கே தெரியும்.” 

“எனக்குத் தெரியாது.” 

“பொய் சொல்லாதீர்கள்.” 

“பொய்யில்லை. நான் இங்கு வந்ததற்குக் காரணம் நீ இல்லை.” 

“வேறு யார்?” 

“அதை நீதான் சொல்ல வேண்டும்” என்ற குமாரன், “கெட்டியான செப்புக் காசு, நடுவில் கோடு இழுத்தது, யாரிடம் கிடைக்கும்?” என்று வினவினான். 

“எனக்குத் தெரியாது. எனது தந்தைக்குத் தெரியும்” என்ற செல்வி அச்சம் நிரம்பிய விழிகளால் குமாரனை நோக்கினாள். ”அவர் அந்த ரகசியத்தை வெளியிட்டால் அவரை நீங்களே கொன்று விடுவீர்கள்” என்றும் சொன்னாள் துயரத்துடன். 

“எய்தவனிருக்க நான் அம்பை நோவதில்லை. உன் தந்தைக்கு என்னால் எந்தவித தீமையும் ஏற்படாது. ஆனால் அவர் விழித்த பின்பு அவரிடம் பேசுகிறேன்” என்றான் குமாரன். 

உள்ளிருந்து ஒலித்தது பெரிய மறவன் குரல்: “விழித்துக் கொண்டு தானிருக்கிறேன்” என்று. அந்தக் குரலை அடுத்து மெல்ல நகர்ந்து வெளியே வந்த பெரிய மறவன், “குமாரா! இனிமேல் உன்னிடம் மறைத்துப் பயனில்லை. நீ நாடி வந்த காஞ்சியின் பயங்கரமான உண்மையைச் சொல்கிறேன் கேள். அது பல்லவ பீடத்தின் கதை. பெரும் மர்மம் சூழ்ந்தது” என்று அந்த கதையை மெதுவாக அவிழ்க்கலானான். 

16.நானும் வருகிறேன்! 

தூங்குவதாக தான் நினைத்த தந்தை, தான் விழித்துக் கொண்டிருப்பதாக அறிவித்தவுடனே குமாரன் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட தாமரைச்செல்வி சற்று விலகி நின்றதும் பெரிய மறவன் நகர்ந்து நகர்ந்து வெளியே வந்து, ‘பல்லவ பீடத்தின் பயங்கரமான கதையைச் சொல்கிறேன்’ என்று துவங்கி யதும் அதிர்ந்தே போனான் பப்பகுமாரன். “நான் காஞ்சி வந்த காரணம் உங்களுக்குத் தெரியுமென்றா சொல்கிறீர்கள்?” என்று வியப்புடன் பெரிய மறவனைக் கேட்கவும் செய்தான். 

“ஆம். தெரியும்” என்றான் பெரிய மறவன். “நீங்கள் இங்கு வந்த முதல் நாளே மாடுகளில் போட்டிருந்த சூடுகளைப் பார்த்து சந்தேகப் பட்டதையும், மாடுகளில் பாதி களவாடப்பட்டதை உணர்ந்து கொண்டீர்களென்பதையும் தெரிந்து கொண்டேன். நீங்கள் என் பெண் கொலை செய்தவனை அவன் புரவியிலேயே வைத்துக் கட்டியனுப்பியதைப் பார்த்த பிறகே நீங்கள் காஞ்சியைப் பார்க்க வந்திருக்கும் சாதாரண மனிதரல்லவென்பதையும், ஏதோ காரியத்தை முன்னிட்டு பல்லவ மன்னரால் அனுப்பப்பட்ட ஒற்றனென்றும் தீர்மானித்தேன். 

பின்பு ஏற்பட்ட நிகழ்ச்சிகள் நீங்கள் பெரிய வீரனென்பதையும் தெளிவுபடுத்தியது. ஆகையால் எச்சரிக்கையாக இருக்கும்படி காஞ்சி நகர் காவலர் தலைவனையும் எச்சரித்தேன். அவன் உங்களைவிட்டு என் மீது சந்தேகப்பட்டான். போதாக்குறைக்கு மாப்பிள்ளை முட்டாளும் அடிக்கடி குறுக்கே புகுந்து நிகழ்ச்சிகளை குழப்பிக் கொண்டிருந்தான். எதற்கும் அஞ்சாத காவலர் தலைவன் காஞ்சியின் கள்ளுக்கடை விவகாரத்துக்குப் பிறகு உங்களைத் தீர்த்துவிடத் தீர்மானித்தான். 

நீங்கள் நீதிபதியிடம் வேலைக்கமர்ந்து விட்டதால் எதையும் செய்யத் தயங்கினான். அது மட்டுமல்ல, இந்த காஞ்சியை விழுங்கவே திட்டமிட்டான். அந்தத் திட்டத்துக்கு நீங்கள் பேரிடைஞ்சலாக வந்து சேர்ந்தீர்கள். உங்கள் ஒவ்வொரு நடிவடிக்கையும் அவன் திட்டத்துக்குப் பெரிய இடைஞ்சலாக வந்து சேர்ந்தது. உங்களை எப்படியாவது நீதி மூலமோ நீதிக்குப் புறம்பான வழிகளிலோ தீர்த்துவிட முடிவு செய்தான். நீங்கள் அடிக்கடி மாடுகள் திருட்டுப் போவது பற்றியும், கள்ளுக் கடையில் நடக்கும் விபரீதங்களைப் பற்றியும் சொல்லி வந்ததால் முழு விவகாரம் உங்களுக்குத் தெரியுமென்ற முடிவுக்கு வந்தான். ஆகவே என் மகளைச் சிறை செய்ய முயன்றான். அங்கு உங்கள் தலையீடு ஏற்பட்டது. இன்று விசாரணை விவரங்களை செல்வி சொன்னாள். ஆகையால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடனிருந்தாலொழிய உங்கள் உயிர் அரைக்காசுபெறாது. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இங்கு என் மகளைச் சிறை செய்ய வந்தவர்களில் ஒருவனை அவன் பிடித்து வைத்திருக்கிறான். அவன் விசாரணைக்கும் கொண்டு வரப்படமாட்டான்.” 

இந்த இடத்தில் குமாரன் குறுக்கிட்டு, “கொண்டு வர முடியாது” என்று தெரிவித்தான். 

“ஏன்?” -பெரிய மறவன் குரல் அச்சத்துடன் ஒலித்தது. 

”அவன் சிறையிலேயே கொல்லப்பட்டான்” என்று குமாரன் சொன்னான். 

அதிர்ச்சியடைந்த பெரிய மறவன், “கொல்லப்பட்டானா? தற்கொலை செய்து கொண்டானா?” என்று வினவினான். 

“தற்கொலை செய்து கொண்டதாக சிறைக்காவலன் சொல்கிறான். ஆனால் அது தற்கொலையாகத் தெரியவில்லை. அவன் வாயைக்கட்ட அவன் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது” என்று குமாரன் திட்டவட்டமாக அறிவித்தான். 

பெரிய மறவன் சிறிதுநேரம் சிந்தனைவயப்பட்டான். பிறகு மீண்டும் துவங்கி, “உங்களுக்கு காஞ்சியைப் பற்றிய பழைய கதை தெரியுமா?” என்று வினவினான். 

“தெரியாது.” 

“காஞ்சி மாநகரை முதலில் ஆண்டவன் இளந்திரையன் என்பவன். அவன் சமுத்திரத்தின் மூலம் வந்து திரைகளால் ஒதுக்கப் பட்டதால் அவனை திரையன் என்று முதலில் இங்கிருந்த காட்டுவாசிகள் அழைத்தார்கள். அவன் வயதை முன்னிட்டு இளந்திரையன் என்று அழைத்தார்கள். அவன் வளர வளர, பெரும் வீரத்தைக் காட்டினான். இங்கிருந்த காடுகளை அழித்துப் பெரிய பட்டணமாகக் காஞ்சியை மாற்றினான். மல்லை என்ற கடல் இதன் துறைமுகமாயிற்று. பெரும் வளர்ச்சியுற்ற இந்தக் காஞ்சி மண்டலத்தில் இருந்த திரையன் படை வடக்கிலும் விரிந்தது. ஆந்திர நாடு கூட இதன் வசமாயிற்று. அங்கும் பல்லவர் என்ற இனம் வலுத்தது. ஒரு உன்னத நிலையை அடைந்த பல்லவநாடு இளந்திரையனுக்குப் பிறகு வலுகுன்றியது. அடுத்து ஆண்ட அரசர்கள் வலுவில்லாததால் இதன் பெருமையும் குறைந்தது. ஆனால் இந்த நகரைச் சிறப்பு நகரமாக்கிய இளந்திரையன் முதுமை எய்தியதும், தனது மக்களிடத்தில் திருப்தியில்லாததால், தான் நிர்மாணித்த அரசபீடத்தை எங்கோ மறைத்து விட்டான். அதில் திரையன் எத்தனையோ மாணிக்கங்களையும் வைர வைடூரியங் களையும் புதைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். அதைக் கண்டுபிடிப்பவன் இந்த நாட்டை அரசாளுவான். அதற்குப் பிறகு பல்லவ ராஜ்யம் சாம்ராஜ்யமாகும் என்று இளந்திரையன் சொன்னதாகவும் ஒரு வதந்தி உலாவுகிறது” என்று சொன்னான் பெரிய மறவன். 

மேலும் சொன்னான்: “ஆகவே, அதைக் கண்டு பிடிக்க பல நாட்டு வீரர்களும் இங்குள்ளவர்களும் முயன்றார்கள். காஞ்சியின் காவலனும் அதைக் கண்டுபிடிக்க முயலுகிறான். முயன்று அதன்மீது அரசாளவும் திட்டமிட்டிருக்கிறான். ஆனால் பல்லவபுரியில் (பல்லாரியில்) இருக்கும் மன்னர்கள் அதை அனுமதிக்கிறார்கள். அவ்வப்பொழுது யாராவது ஒருவர் இங்கு வந்து அதைக் கண்டுபிடிக்க முயன்று உயிரை இழந்திருக்கிறார்கள். அவர்களைக் கொன்றவன் இங்குள்ள காவலர் தலைவன்தான். ஆனால் யாரும் அதைக் கண்டுபிடிக்க முடியாததால் வேறொரு யுக்தியைக் கையாள முயன்றான். சேர சோழ பாண்டியர்களை அடக்கிய கள்வர் (களப்பிரர்) கூட்டத்தை இங்கு படையெடுக்கச் செய்தால் அவர்களோடு தான் சேர்ந்து இந்தக் காஞ்சியைக் கைப் பற்றலாம் என்று முடிவு செய்து அவர்களுடன் நட்பு கொண்டான். அவர்கள் மாடுகளைத் திருட ஏற்பாடு செய்தான். அவற்றுக்கு அடையாள மாகச் சூடு போட ஏற்பாடு செய்தவனும் இவனே. மாடுகள் திருட்டுப் போனதை சாக்காக வைத்துக் கொண்டு கள்வர்கள் அடிக்கடி காஞ்சி நகர்ப்புறங்களில் படையெடுக் கிறார்கள். அதற்கு இந்தக் காவலன் தகுந்த நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. எடுத்த ஓரிரண்டு சமயங்களில் தோல்வியடைந்து திரும்பியதாக அறிவித்தான். நீதிபதி அதை ஒப்புக்கொள்ளாமல் பல்லவ புரியிலுள்ள மன்னருக்கு ஓலை அனுப்பினார். அதற்குப் பதிலில்லை. ஆனால் நீங்கள் வந்தீர்கள். அதனால் மன்னர் உங்கள் இங்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்பினோம். காவலர் தலைவன் என்னிடம் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தான். அவன் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டான். அவன் உத்தரவால் பலமுறை நான் கள்வர்கள் பசுக்களைத் திருடிவந்தேன். அதையும் நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள். இதனாலும், தாமரைச் செல்வியை நீங்கள் நீதிமண்டபத்தில் வாதாடி அழைத்து வந்ததாலும் நானும் உங்களுடன் சேர்ந்தவனென்று என்னைத் தீர்த்துக்கட்ட முயலுகிறான். ஆனால் அது முடியாது. முடிந்தாலலும் அதில் இறங்க மாட்டான். காரணம், பல்லவபீடம் இருக்கும் இடம் ஓரளவு எனக்குத் தெரியும். அதன் மீது உட்காரத் தகுதியுள்ளவர் வரும்வரை நான் அந்த இடத்தைக் காட்ட மாட்டடேன். அதனால் தான் என்னை விட்டு வைத்திருக்கிறான்” என்று கதையை முடித்தான். 

“அதை எனக்குக் காட்டினாலென்ன?” என்று வினவினான் குமாரன். 

“அதிருக்குமிடம் திட்டமாக எனக்குத் தெரியாது. ஊகந்தான். அந்த ஊகம் தவறில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதில் உட்காரத் தகுந்தவருக்குத் தான் காட்டமுடியும்” என்று திட்டமாக அறிவித்தான் பெரிய மறவன். 

“நான் தகுந்தவனல்லவென்று உமக்கு எப்படித் தெரியும்?” என்று குமாரன் கேட்டான். 

“களப்பிரர்களை முறியடித்துக் காஞ்சியை காப்பாற்றுபவர்தான் அதில் உட்காரமுடியும். களப்பிரர் எழுச்சி வெகுசீக்கிரம் ஏற்படும். அதை நீங்கள் சமாளித்துவிட்டால் அந்த பீடத்தின் மீது நீங்கள் அமரலாம்” என்று கூறிய பெரிய மறவன் சிந்தனை வயப்பட்டான் 

நீண்ட நேரம். “எதற்கும் நாளை நீதிபதியைக் கேட்டுவிட்டு உங்களுக்குப் பதில் சொல்கிறேன். நாளை இரவு இரே நேரத்துக்கு இங்கு வாருங்கள்” என்று சொன்னான் சிந்தனைக்குப் பிறகு. 

இதைக் கேட்டு பெருவியப்படைந்தான் குமாரன். 

“நீதிபதியை ஏன் கேட்க வேண்டும்? அவருக்கும் இந்த ரகசியம் தெரியுமா?” என்று வினவினான், வியப்பு குரலிலும் விரிய. 

“இந்தக் காஞ்சியில் இப்பொழுது நேர்மையானவர் நீதிபதி ஒருவர்தான். அவர் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் எது சொன்னாலும் சரியாயிருக்கும்” என்ற பெரிய மறவன் குடிசைக்குள் சென்று ஒரு செப்புக் காசை எடுத்து வந்து, “உங்களைக் கள்வர் யாராவது எதிர்த்தால் இதைக் காட்டுங்கள்” என்றான். 

அந்தச் செப்புக் காசு சிறையில் இறந்தவன் மடியிலிருந்த காசு போலிருந்ததைக் கண்டு ஒரு கணம் பிரமித்த குமாரன், அதை மடியில் மறைத்துக் கொண்டான். “நாளை இரவு வருகிறேன்” என்று கூறியதும் பெரிய மறவன் மீண்டும் நகர்ந்து உள்ளே சென்று படுத்துக் கொண்டான். “நான் வருகிறேன் தாமரைச்செல்வி” என்று கூறிய குமாரனின் கையொன்றைத் தனது கையால் பிடித்தாள் தாமரைச்செல்வி. அடுத்து அவள் குமாரன் அரவணைப்பில் இருந்தாள். அவள் இதழ்கள் அவன் இதழ்களை சிறைப்படுத்திக் கொண்டன. சிறிது நேரம் கழித்து அவளிடம் பிரியா விடை பெற்றுச் சென்ற குமாரன் நீதிபதியின் மாளிகையை அடைந்து தனது இருப்பிடத்திற்குச் சென்று உறங்கினான். 

முதல் நாள் இரவு நீண்ட நேரம் விழித்துக் கொண்டிருந்ததால் மறுநாள் காலையில் கதிரவன் உதித்து நான்கு நாழிகைக்குப் பிறகு விழித்துக்கொண்ட குமாரன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நீராடி, புத்துடை புனைந்து, நீதிபதியை அவரது கூடத்தில் சந்தித்தான். 

நீதிபதி அவனைக் கூர்ந்து நோக்கினார். பிறகு அவனை அருகில் வரச் சொல்லி, “குமாரா, இன்றிரவு உன்னுடன் நானும் வருகிறேன்” என்றார். 

“எங்கு?” என்று பிரமித்துக் கேட்டான் குமாரன். “பல்லவ பீடத்தைத் தரிசிக்க” என்று சகஜமாகச் சொன்னார் நிருபவர்மர்.

– தொடரும்…

– பல்லவ பீடம், பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *