சைவமும் சாரைப்பாம்பும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2024
பார்வையிட்டோர்: 159 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருநெல்வேலி நாகர்கோயில் நேடுஞ்சாலையில், வள்ளியூர் தாண்டி, காவல்கிணறு தாண்டி, உயரம் உயரமான முக்கை அரக்கர்களின் சுழல் வீச்சுக்களைத் தாண்டி, முப்பந்தரத்து இசக்கியம்மன் கோயில் தாண்டி, ஆரல்வாய் மொழிக் கோட்டை வாசல் ஓரம் சுப்பையாபிள்ளை சைவாள் காபி கிளப். காட்டுக்கம்புச் சட்டத்தில் தகரம் அடித்து,ஓம் எழுதி, வேலும் மயிலும் வரைந்த போர்டு காற்றில் ஆடிக்கொண்டு கிடக் கும். நெடுஞ்சாலையின் முக்கியமான முனைகளில் எல்லாம் பரோட்டா சால்னாக் கடைகள் இரவு பகலாய் கொள்ளிவாய் திறந்து கிடந்தாலும் அவருக்கும் வியாபாரம் ஆகிக்கொண்டுதான் இருந்தது.

சற்று நீளமாக இருந்தாலும் காய்கறிக் குப்பை கூளங்கள் போடாத, கடலைமாவும் கஞ்சித்தண்ணியும் கலக்காத பூசணிக்காய் சாம்பார். இஞ்சி, பச்சைமிளகாய் வாசம் வீசும் தேங்காய் சட்னி. மசாலா ரோஸ்ட், ஆனியன் ரவா,நெய் மசாலா என்கிற ஜிகினா வேலையெல்லாம் இல்லாமல் காலையில்இட்லியும் ரசத்தில் ஊறிய பருப்பு வடையும். அவியல், துவரன்,சாம்பார், ரசம், மோருடன் சோறு. சீசன் போல் நெல்லிக்காய், மாங்காய் அல்லது எலுமிச்சங்காய் ஊறுகாய். சாயங்காலம் பருப்பு வடை, உளுந்த வடை, தேநீர். இரவு புளித்தமாத்தோசை, பொரி கடைலை சட்னி, மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய்

காலை ஆறு மணிக்குக் கடை திறந்து இரவு ஒன்பது மணிக்கே அடைத்து விட்டாலும் வயிற்றைக் கெடுக்காத லாபம் வைத்து வடக்கூரில் ஒரு வீடு கட்டிக்கொண்டார். பெண்டாட்டி உருப்படிகளை அழிக்காமல் வைத்திருந்ததே பெரிசு. அவற்றை உருக்கியும் புதுக்கியும் பெண்ணுக்கு ஐம்பது பவுன் நகை போட்டார். பிள்ளை இல்லாத அத்தை வைத்து விட்டுப்போன மூன்று ஏக்கர் கடலை விளை இருந்தது. பெண்ணுக்கு கல்யாணச் செலவுக்கு என்று போட்ட சீட்டைப் பிடித்து அங்கே இங்கே புரட்டி கல்யாணச் செலவை ஒப்பேற்றினார். ‘ஒத்தைக்கு ஒரு பொட்டப் பிள்ளையைத் தூரா தொலைக்கு அனுப்ப கஷ்டமாகத்தான் இருந்தது.

வீடு வேறு கடை வேறு என்று ஒட்டில்லாமல் வைத்துக் கொண்டி ருந்ததால், சில நாள் வீட்டுக்குத் தகவல் சொல்லி கடையிலேயே முடங்கிக் கொள்ளவார். முடங்கிக் கொள்வதற்கும் காரணம் இருந்தது. காவல்கிணறு காத்தமுத்துத் தேவர், சுப்பையா பிள்ளைக்கு பால் அனுப்புகிறவர் மட்டுமல்லாமல் சேக்காளியும் கூட. சற்று நேரத்தோடு கடை அடைத்துவிட்டு இரண்டு பேரும் பனங்காட்டுக்குள் புகுந்து போவார்கள். சுத்தமான முதல் வாற்றுச் சாராயம். தேவருக்கு வறுத்த வெள்ளாட்டு இறைச்சி பிடிக்கும். சுப்பையா பிள்ளை நாஞ்சில் நாட்டுப் பக்கம் ஒதுங்கி இரண்டுதலைமுறை ஆகிவிட்டாலும் கல்லிடைக்குறிச்சி சுத்த சைவ வேளாள ரத்தம். பூண்டும் இஞ்சியும் சதைத்துப் போட்டு, தேங்காய் எண்ணெயில் வதக்கி, பெரிய வெங்காயம் நிறைய அரிந்து போட்டு, பட்டையும் பெருஞ்சீரகமும் மணக்கும் எலும்பில்லாமல் பிரித் தெடுத்த சந்துக்கறி வறுத்துக் கொண்டுவந்து நாடியைப் பிடித்துத் தாங்கிப்பார்த்தார் தேவர். ஒன்றும் நடப்பில்லை. ‘பத்து அம்பது முட்டை வாங்கி வச்சு ஆம்பிளேட்டாவது போட்டு கேக்கிறவாளுக்கு கொடும் யாண்ணு சொன்னதுக்கே சவத்து மனுசன் கேக்க மாட்டங்கான்’ என்று முனகுவார்.

பனங்காட்டில் பாழாய்க் காய்ந்துகொண்டிருந்து நிலா. ஆரல்வாய் மொழிக் காற்றில் அம்மி பறக்கும், குழவியும் கூடப் பறக்கும் என்பார் கள். சற்று அமர்ந்து பறந்துகொண்டிருந்தது காற்று. தேவர் நல்ல சுதியில் இருந்தார்.எஸ்.ஜி. கிட்டப்பா பாட்டொன்று – கோபியர் கொஞ்சும் ரமணா – சற்று கரகரப்பாகப் புறப்பட்டு வந்தது. காற்றுக்கு காவலாக ஈரிழைத் துவர்த்தைப் போர்த்திக்கொண்டு சுப்பையா பிள்ளை கூட நடந்துகொண்டிருந்தார். உடைமுள் குடைகள் வெயிலுக்குப்போலவே நிலவுக்கு நிழல் தந்துகொண்டிருந்தன. தேவர் சுடலைமாடன் கொண்டாடி. எந்தக் காட்டுக்குள்ளும் அவருடன் தைரியமாகப் போய் வரலாம். ஒரு கெட்ட மூதியும் குறுக்கே வராது.

‘என்னவே, மக வீட்டுக்குப் போயிட்டு வந்தேரா? பேத்தியா எப்படி இருக்கா?”

“அந்தப் பேச்சை எடுக்காதையும் தேவரே. ஒங்கரிச்சுக்கிட்டு வருகு…”

“என்னவே? என்ன திடீர்ணு? மருமகன் பணம் கேக்கானா?”

“கேட்டாலும் கேக்காட்டாலும் அவ்வோளுக்குத்தானே தேவரே? நான் போகச்சிலே கெட்டிச் செமந்துக்கிட்டா போகப் போறேன்?”

“பின்னே என்ன, வெறுத்தாப்பிலே பேசுகேரு?”


கோழி கூவியவுடன் எழுந்து குளித்து வெறுந்தேயிலை மட்டும் குடித்துவிட்டு,சாமான்கள் இருந்த பையையும் தூக்கிக்கொண்டு, கதிக்க நடந்து, வளைவில் நின்று, பஸ்ஸை கைகாட்டி நிறுத்தி ஏறினாலும்

மதுரை சேரும்போது பதினொன்றரை ஆகிவிட்டது.சுப்பையா பிள்ளைக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் கடையடைப்பு. மகள் வீட்டுக்குப் போய்விட்டு இரவுக்குள் மடங்கியாக வேண்டும். மரு மகனுக்கு சர்க்கார் வேலை. அவரும் வீட்டில் இருப்பார். பழங்கா நத்தத்தில் இறங்கி டவுன் பஸ் பிடித்து பெரியார் நிலையம் போய் அங்கிருந்து சிலைமான் போய்ச் சேரும்போது பன்னிரண்டரை மணி ஆகி விட்டது.

மருமகனும் பேத்தியும் மெய்மறைந்து திரைமலர் பார்த்துக் கொண்டிருந்தனர். மரியாதைக்காக மருமகன் சற்று பிருஷ்டத்தை அசைத்துவிட்டு அமர்ந்துகொண்டான். பேத்தி ஒடிவந்து ”ஆச்சி வரல்லியா தாத்தா” என்றாள். கையிலிருந்த பையைக் கீழே வைத்து விட்டு பேத்தியைக் கொஞ்சம் தூக்கிக் கொஞ்சிவிட்டு கீழே இறக்கினார். மசாலா மணம் மூக்கைத் துளைத்தது. மகள் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, “அம்மைக்கு காலு கொள்ளாமாப்பா?” என்றாள்.

சுப்பையாபிள்ளை பெண்டாட்டிக்கு இடதுகால் முட்டில் வீக்கம். சூலைக்கூறு என்று களக்காட்டு ஆசானிடம் உள்ளுக்கு கஷாயமும் காலுக்குப் பூச தைலமும் வாங்கிய பிறகு கொஞ்சம் குணமுண்டு.

“உங்களுக்கும் தேயிலை போடட்டா?” என்றாள் மகள்.

“அரைகப் போடேன்” என்றான் மருமகன்.

மருமகன் எழுந்து அடுக்களைக்கு ஒருதரம் போய்விட்டு வந்தான். காலில் செருப்பு மாட்டிக்கொண்டு வெளியே போனான். திரும்பி வரும் போது கையில் வாழை இலையும் பப்படக்கட்டும் இருந்தது. பையில் இருந்த முறுக்குப் பொட்டலத்தைப் பிரித்துக் கடித்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்து, ‘இது என்னட்டீ இடைத்தீவனம். சாப்பிடாண் டாமா?” என்றான்.

சுப்பையா பிள்ளைக்கு ‘வளவள வைக்கப் படப்பு’ என்று பேசும் பழக்கம் இல்லை. கல்யாணம் செய்து கொடுத்து நான்காண்டு ஆகிவிட் டாலும் மகள் வீடும் புதுசு, மருமகனும் புது ஆள். மருமகன் மரியாதை காரணமாகவோ அல்லது காபிக் கடை வைத்திருக்கும் இந்த ஆளிடம் என்ன பேசுவது என்றோ, வாயைக் கட்டிப்போட்ட நாயைப்போல உட்கார்ந்திருந்தான். சர்க்கார் ஜோலிக்காரர்கள் இப்படித்தான் இருப் பார்கள்போலும் என்று நினைத்துக்கொண்டார். அடுக்களைக்குப் போய் மகளிடம் ஏதும் பேசுவோமென்றால் சொந்த வீட்டிலேயே அடுக் களையில் நுழைந்து பழக்கமில்லை.

செவிட்டு ஊமைகளுக்கான செய்தி டி.வி. யில் தொடங்கியதும் அதை அணைத்துவிட்டு உள்ளே போனான் மருமகன். சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்குமேல் இறங்கினால் ராத்திரி ஒன்பது மணிவாக்கில் வீட்டுக்குப் போய்விடலாம் என்று நினைத்தார்.

காந்திமதிக்கு சிக்கலாக இருந்தது. திடீரென அப்பா வருவார் என எதிர்பார்க்கவில்லை. வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை வைகையாற் றில் கறிக்கடைக்கும் போய் வந்துவிட்டான் புருஷன்.

கல்யாணம் ஆன புதிதில் சில சமயம் வெளியே சாப்பிட்டுவிட்டு வருவான்.எப்படியோ தொலைந்து போகட்டும் என்றிருந்தாள். பிறகு பார்சல் வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் வைத்து எலும்பு கடிக்க ஆரம் பித்தான். அன்றெல்லாம் அவன் சாப்பிட்ட தட்டு தம்ளரைத் தொடவே பிடிக்காது அவளுக்கு.

பிறகொருநாள் சேம்பிலையில் பொதிந்து நிணநீர் சொட்டும். பார்சலைப் பிரிக்கையில் ‘சை’ என்றாகிவிட்டது காந்திமதிக்கு.

“இதெல்லாம் வீட்டுக்குள்ளே என்னத்துக்கு கொண்டாறையோ?”

“கடையிலே வாங்கினா திருப்தியா திங்கமுடியுமா?”

”எனக்கு இதை எப்படி வைக்கதுண்ணு தெரியுமா?”

“அதெல்லாம் நான் சொல்லித் தாறேன்”

முதல் முறை கழுவி, மசாலா அரைத்து, வறுத்துக் கொடுத்தபோது புரட்டிக்கொண்டு வந்தது காந்திமதிக்கு. அவனுக்கு சிரிப்பாக இருந்தது.

“எலும்பில்லாம ஒரு துண்டு திண்ணு பாரு.. பொறவு கண்டா விடமாட்டே.”

“எனக்கு ஒரு எளவும் திண்ணு பார்க்காண்டாம்.”

மூக்கில் நீர் ஒழுக அவன் சுவைப்பதைக் காண ஒரு மிருகத்தைப் பார்ப்பது போலிருந்தது.

உப்புக் கூடப் பார்க்காமல் வைத்திருந்தாலும் பக்குவம் வாய்த்து விட்டது காந்திமதிக்கு. விர்த்தியாகக் கழுவி, வசக்கி, குழம்பு கூட்டிப் போட்டு… அவள் தின்பதில்லை என்பதில் அவனுக்கு ஏதும் வருத்தம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை முழுப்பங்கும் தனக்கே கிடைக்கும் என்ற திருப்தியும் இருக்கலாம்.

ஒரு நாள் கழுவும்போது எலும்பே தட்டுப்படவில்லை. எல்லாம் நல்ல கட்டியான இறைச்சித் துண்டுகள்.

“இன்னாருங்கோ, இண்ணைக்கு என்னா எலும்பே இல்லை. எல்லாம் நல்ல துண்டா இருக்கு?”

“அது… அது எலும்பில்லாம போடச் சொன்னேன்.”

“இருந்தாலும் மருந்துக்குக்கூடப் போடாமலா தருவான்?”

கறி வைக்கும்போது வெந்து விட்டதா என்று அகப்பையில் எடுத்து, தட்டில் வைத்து அழுத்திப் பார்த்தபோது பெரிய அடுக்காகப் பிரிந்தது இறைச்சி.

“இது என்னது? இன்னைக்கு ஒரு மாரியால்லா இருக்கு! ஆட்டு இறைச்சிதானா?”

“வாயை வச்சுக்கிட்டு சும்மா இருப்பியா? இது பெரிய ஆடு.”

“பெரிய ஆடா?”

“ஆமாண்ணு.ஆட்டிறைச்சி எலும் போட எம்பத்தாறு ரூவாகிலோ. இது எலும்பில்லாம இருவத்தெட்டு ரூவாதான்”.

“அப்பம் இது ஆடில்லையா?”

“சத்தம் போடாதே… எல்லாக் கடையிலேயும் இப்பம் மாட்டி றைச்சிதான்.பேருதான் மட்டன். எல்லாம் ஒண்ணுதான், சயின் டிஃபிக்கா…”

“இது என்ன அநியாயம் செய்யியோ? இதையெல்லாம் கொண்டாந்து என்னைக் கறிவைக்கச் சொல்லுகேளே!’

”வச்சுத்தான் தரச் சொல்லுகேன். உன்னைத் திங்கச் சொல்லுகனா?”

மாதம் ஒரு நாள் என்று இருந்தது, வாரா வாரம் என்றாகிவிட்டது. காந்திமதிக்கு முழுங்கவும் முடியவில்லை,கக்கவும் முடியவில்லை. இந்தக் கொள்ளையிலே பிள்ளைக்கும் கொடுக்கலாம் என்கிறான்.

அப்பா வந்ததில் இருந்தே படபடப்பாக இருந்தது அவளுக்கு. குக்கர் இருந்ததனால் கட்டிப் பருப்பு வைத்து, ரசம் தாளித்து, உருளைக் கிழங்கு பொடிமாஸும் செய்து பப்படமும் வறுத்தாயிற்று.

“அப்பா! நீங்க சாப்பிடுங்கோ” என்றாள். ‘சாப்பிடலாமே! அவ்வோளைக் கூப்பிடு.”

“அவ்வோ பொறவு சாப்பிடுவா.”

“பொறவென்ன பொறவு… நேரம் காணாதா? கூப்பிடு.”

“இல்லே.. நேரமாயித்தான் அவ்வோ சாப்பிடவா”.

“கூப்பிடும்மா. கூட இருந்து சாப்பிட்டு எவ்வளவு நாளச்சு?”

சுப்பையாபிள்ளை சுடுசோற்றின் மீது கட்டிப்பருப்பு போட்டு நெய் ஊற்றி பப்படம் நொறுக்கிப் பிசைந்தார். சாப்பிட்டவாறே பக்கத்து இலை யைக் கவனித்தார். கருவாப்பட்டை, பெருஞ்சீரகம் மணக்க மருமகன் ஈடுபாட்டுடன் தின்றுகொண்டிருந்தான். சாப்பிட்டுக் கை கழுவியதும் சுவாரசியத்துடன் பல் குத்தினான். சுப்பையா பிள்ளைக்கு வேற்றுப் பிரதேச வாடை லேசாகத் தட்டியது.

மருமகன் இளங்கிடை உறக்கத்துக்குப் போய்விட்டான். பேத்தி இன்னும் மோர்ச் சோற்றை அளைந்துகொண்டிருந்தது. சாப்பிட்ட இலைகளை எடுத்துப் புற வாசல் தென்னை மூட்டில் எறிந்துவிட்டு, தட்டை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள் காந்திமதி. நாற்காலியை மகள் பக்கமாகத் திருப்பிப் போட்டுக்கொண்டு சுப்பையா பிள்ளை உட்கார்ந்தார்.

“பையிலே அம்மை சிறு பயத்தம்பருப்பு வறுத்து உடைச்சு வச்சிருக்காமக்கா, திருக்கார்த்தியலுக்கு… அவலிலே நல்ல கல்லு நாவிக் கிடச் சொன்னா. கோட்டயம் சர்க்கரையை எறும்பு வராத இடத்திலே மூடி வைக்கணுமாம். தேங்காநல்ல நெத்துக்காய். கிடந்தாலும் ஒண்ணும் செய்யாது…”

காந்திமதி மகளைப் பார்த்து, “சீக்கிரம் அள்ளித் தின்னுக்கிட்டு கை கழுவு மக்கா”’ என்றாள்.

கையை உதறிவிட்டு எழுந்த பேத்தியைக் கூட்டிக்கொண்டு போய்க் கை கழுவி விட்டு வாய் கொப்பளிக்கச் செய்து மேல்துண்டால் துடைத்து விட்டார். அது முன் வாசலுக்கு விளையாடப் போயிற்று.

காந்திமதியைப் பார்த்துக் கேட்டார் கூப்பையா பிள்ளை, “ஏன் மக்கா, நீ மாப்பிள்ளை சாப்பிட்ட இலையிலே சாப்பிட மாட்டயா?” ”அதுப்பா..இண்ணைக்கு ஞாயிற்றுக்கிழமை…”

“அவரு இலையிலே என்னமோ வச்சு சவைச்சுக்கிட்டே இருந் தாரே! அது என்னது?”

“மட்டனாமக்கா?”

காந்திமதி அப்பாவின் முகத்தைச் சற்று நேரம் பார்த்தாள். கண்கள் லேசாகக் கலங்கின. குரல் கம்மச் சொன்னாள்.

‘மாட்டிறைச்சிப்பா. சொன்னாக் கேக்கமாட்டங்காரு.”

சுப்பையா பிள்ளைக்கு புரட்டிக்கொண்டு வந்தது. விருட்டென எழுந்து புறக்கடைக்கு ஓடினார். தென்னை மர மூட்டில் போய் நின்று “ஒவ்…ஒவ்” என ஓங்கரித்து வாயால் எடுத்தார். மறுபடி மறுபடி புரட்டிய வாறு இருந்தது. கண்கள் சிவந்து போய்விட்டன. வாயில் இருந்து வெறி பிடித்த நாய்க்கு வருவதுபோல் எச்சில் வடிந்தது.

மகள் ஒடிவந்து முதுகைத் தடவி கொடுத்தாள். செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். வாயை நன்றாக உரசிக் கொப்பளித்து முகத்தைக் கழுவினார். துண்டால் துடைத்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மெதுவாக நடந்து நாற்கலியில் அமர்ந்தார்.

பாதி சாப்பிட்டுக் கிடந்த தட்டம் தம்ளரை எடுத்து கழுவிப் போட்டு அடுக்களையை ஒதுக்கிவிட்டு வந்து நின்றாள் காந்திமதி. அவள் கண்கள் பொங்கிப் பொங்கி வந்தன.

“உப்புப் போட்டு போஞ்சி போட்டுத் தரட்டாப்பா?”

“வேண்டாம்.”

”அம்மைக்கிட்ட சொல்லீராதப்பா…”

சுப்பையா பிள்ளை சற்று நேரம் வாசலைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தார். புன்னை மரத்தின் அடிமரத்தைப் பிளந்து தூக்கிக் கட்டியதைப் போல் வழியில் காணக்கிடைத்த மாட்டுத் தொடைகளை நினைத்தார். அடிக்கடி லாரிகளில் அடைசலாக நின்றுகொண்டு முகத்தை ரோட்டில் நீட்டிப் பார்த்துக்கொண்டு கேரளாவுக்குப் போகும் வத்தலும் தொத்தலுமான சோகவயப்பட்ட காளை மாடுகளையும் எருமைக் கடாக்களையும் நினைத்தார். அவரது பாட்டா கல்லிடைக்குறிச்சி ‘கடுவாய் நெல்லையப்ப பிள்ளையை நினைத்தார்.

மூன்று மணி வெயில் பழுத்துக்கொண்டிருந்தது. ராமேசுவரம் போகும் பஸ்களின் இரைச்சலும் தூசியும் கிளம்பிக் கிளம்பி அடங்கிய வாறு இருந்தது.

“ஒன் மாப்பிள்ளை முழிச்சிட்டாரா பாரு! சொல்லீட்டுப் புறப்படுகேன்.”

“அப்பா, இதை யாரிட்டையும் சொல்லாண்டாம்.”

“இல்ல மக்கா.”

அரைத் தூக்கத்தில் இறங்கி வந்த மருமகனிடம் சொல்லி, பேத்தியைக் கொஞ்சி முத்தம் கொடுத்து, கையில் ஐம்பது ரூபாய் நோட்டொன்றையும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.


தாங்க முடியாமல் குரல் கம்மச் சொல்லி முடித்தபோது, காத்த முத்துத் தேவர், தோளில் கைபோட்டு மெதுவாகத் தட்டிக் கொடுத்தார்.

“காலம் மாறிக்கிட்டிருக்கு வேய்… இதையெல்லாங் கூட்டாக்கக் கூடாது. வீட்டுக்காரியிடம் சொல்லிப் போட்டீரா?”

“இல்லை.”

“வேண்டாம். சொல்லாண்டாம். நீரு பழைய காலத்து மனுசன். நாட்டிலே என்னவெல்லாமோ நடக்கு.”

“இனி சவத்துப்பய வீட்டிலே போயி நான் என்னண்ணு தண்ணி குடிக்கவேய்?”

“எங்க வீட்டுக்கு வந்தா குடிக்கேரில்லா? அது மாதிரி நெனைச்சுக்கிடும்.”

“இருந்தாலும்…”

“என்ன இருந்தாலும்? காலம் எங்கயோ போயிட்டிருக்கு. போன வாரம் நம்ம பக்கத்துத் தோப்பிலே சாரைப்பாம்பைப் புடிச்சு தலையை வெட்டிமாத்தீட்டு, தோலை உரிச்சு,உப்பு மொளகாப் பொடி தடவி, பயக்க எண்ணெயிலே பொரிச்சுத் திங்கானுக…கூட்டத்திலே நம்ம பயலும் உண்டும். பேயன்னா வேனாவுக்கு மகனும் உண்டும். அவுரு உமக்கு சொக்காரன்தாலா! என்ன செய்ய முடியும் சொல்லும்? கேட்டா சீனாக்காரன் திங்கலியாம்பான். நாகலாந்திலே நாயைத் திங்காம்பான். தாய்லாந்திலே கொரங்குக்கு மூளையை சூப்புப்போட்டு குடிக்கானுவவோய்…”

“காந்திமதிக்கு நெலமையை யொசிச்சா…”

“அதைச் சொல்லும். நீரு, திண்ண சோத்தைக் கக்கீட்டு ஓடியாந் திட்டீரு. அந்தப் பிள்ளை எப்படியெல்லாம் சகிச்சிக்கிட வேண்டியதிருக்கு பாரும். நாளைக்கு பேத்தியா திம்பா… என்ன செய்வேரு? வேண்டாம்ணு தள்ளீருவேரா?”

சுப்பையாபிள்ளைக்கு ஒரே புழுக்கமாக இருந்தது.

காற்று நிறைமாத கர்ப்பிணிபோல அசைந்தது.

நிலவுக்கு எகத்தாளமாக இருந்தது.

– இந்தியாடுடே, இலக்கிய ஆண்டு மலர், 1995

நன்றி: https://nanjilnadan.com/2010/11/17/சைவமும்சாரைப்பாம்பும்/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *