கதவு சாற்றப்பட்ட அறையிலிருந்து வெளுத்துப்போய் வெளியில் வந்தான். சளித்துசளித்து விரயமாக்கிய எதிர்காலத்தை அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு வெதும்பி சிறிய துக்கத்துடன் உடல் சந்தோசத்துடன் தன்னை ஆக்கிரமணம் செய்த ப்ரக்ருதியை நினைத்தவாறு தன் நோயினறிவையும் எண்ணிக்கொண்டே தனது மனையை நோக்கி விரைந்தான்.
அதற்கு முந்தைய நாள் இரவின் விளிம்பில் மாலையில் துளிரிய புஷ்பத்தை மோந்த தருணத்தில் திரியொளியும் ஓரணுவும் தானும் ப்ராணத்தியாகிக்க ஆயத்தப்பட்டதை அவ்விரவு முழுதும் சப்தமித்த முனகலினொலி வரிந்துகொண்டு காட்டியது. அது நிசப்தம் களைந்த முழு இரவு.
அவன் பெயர் தயாள சாந்தன். நற்பேறுடைய தெய்வாங்கதனுடைய சச்சரவுக்கு வேறொன்றில்லாத ஒரே மகன். சிறுவயதில் தாயை இழந்தவன் என்பதால் தந்தையிடம் அதீத பாசத்தைக் கொணர்ந்தவன். தெய்வாங்கதன் மொகல் சாம்ராஜ்யம் உருவாக காரணமான தைமூர் தன் பரிவாரங்களை நிலை நிறுத்தி காலூன்றிய வலிமையான காலத்தில் தெற்கே செங்கோல் கிழித்த கோடு தாண்ட இயலாது பேரணை கட்டி தடுத்தாண்ட சோழர்கள் இருந்த இடத்தில் வாழ்ந்தவர். அப்போது சோழ அரசவையில் மூல மருத்துவர் தன்வந்திரியின் வழி வந்த பெருமக்களிடம் கற்றுத் தேர்ந்த வைத்தியர். அரசவம்சத்து சீக்காளிகளை தனது கைகளால் பிழிந்தெடுத்த மருந்து வகைகளாலும், மன சௌந்தர்யத்தாலும் நோய் நீக்கிவிடுவார். வயிற்றுலுள்ள சேய் முதல் சரம தசையிலிருக்கும் வயோதிகன் வரை அனைவருக்குள்ளும் இருக்கும் பிணியை விரட்டிவிடுவார். மற்ற பல காரணங்களினால் இதையும் சேர்த்து மன்னருக்கும், மக்களுக்கும் அவர் மீது தனித்த ஈடுபாடும் அன்பும் உண்டு. பொற்காசென்று குறைத்துவிடாமல் நிலபுலன்களை அவருக்கு மூன்றாம் ராஜேந்திரசோழன் பரிசளித்தான்.
கடைசியில் இவ்வத்தனையும் யாருக்கு சென்றுசேரும், அவர் புதல்வனுக்கு. இவ்வைத்தியருக்கென்று வந்து பிறந்த எவரையும் விட்டுவைக்காத தயாளசாந்தனுக்கு. தகப்பனிடம் மகனைப்பற்றி விசாரித்தால் “குலத்தை கெடுக்க வந்த கோடரிக்காம்பு” என்று வருத்தத்துடன் ஆத்திரத்தை வெளிப்படுத்துவார். ஆனால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்கமாட்டார்.
மாவணங்கு. தயாளனின் பால்ய நண்பன். அருகிலுள்ள கோவிலில் மலர் பறித்து உதவுவது அவனது நித்யப் பணி.
அவன் தயாளசாந்தனை திருத்துவதற்காக அவன் தந்தை கூறும் கருத்தினை ஒருமுறை சொல்லிக்காட்டினான்.
“இப்படி சொல்வதிலென்ன தவறாகிவிட்டது,வம்சத்தை சீரழிக்க வந்த கோடரிக்காம்பு தான் நீ.”
“நான் செய்வது தவறாகவே எனக்கு பட்டதில்லை.மன்னர்கள் மட்டும் ராமபுத்திரர்களா என்ன? என்னிடம் கேள் பட்டியலிடுகிறேன்.நண்பனிடம் சொல்லி வைக்கலாம் என்றால் இங்கும் அதே நிலைமை தான். இதற்கு பதில் அதோ உன் கோவிலில் காலடக்கி அமர்ந்துள்ளதே நந்தி அதனிடம் சொல்லிவிடலாம்”
“இதோ பார் தயாளா, நீ செயல்படுவது உன் மனதுகந்த காரியமாகவிருக்கலாம். ஆனால் உன் தந்தையின் மேன்மைக்கு இச்சிறுமைத்தன்மையை கொடுக்கும் செயல் கொஞ்சமும் சரிப்பட்டதல்ல. மேலும், அன்று நீ உழுத பாழ்நிலம்பற்றி என்னிடம் சிலாகிக்கும்பொழுதே உன்னை கழுவிலிறக்கி வேடிக்கைப் பார்த்திருக்க வேண்டும், ஹ்ம். வெட்கிக்கிறாளோ!!, மனத்துரோகமிழைக்கும் ஈனத்தேவரடியாளுக்கு
நாணம் என்ன வேண்டிக்கிடக்கிறது, உன் தன்மானத்தை இம்மியும் கூசாது என்னிடத்தில் வந்து இளிக்கவிடுகிறாய்” என மாவணங்கு கடிந்துகொண்டான்.
இது எப்பொழுதும் நடப்பதுதான், அனுபவமுரைப்பதும் அதற்கு இவன் வசை பாடுவதும் வழக்கமான, தான் எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதுபோல் முகமிறுகாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
2
மாவணங்கின் கோபம் நியாயத்திற்குரியதே. நிசுளாபுரியை சிற்றரசர்கள் ஆண்டுவந்தபோது, அங்கிருந்து ஏழு யோஜனை தூரமிருக்கும் ஊரின் பெயர் விராலகிரி. அங்கு நாட்டிய சாஸ்திரத்தினைப் பயின்றுகொள்ளும் மங்கையினம் உண்டு. அவர்களின் பணி பகலில் நாட்டியக்காரியாகவும், இரவில் வேசியாகவும் இருப்பது. இதனாலேயே பல தேசத்திலிருந்தும் பெருந்தனக்காரர்களும், பிற மொழியினத்தவரும் வந்து உடலின்பம் கழித்து செல்வார்கள். ஏனென்றால் பிறதேசத்து மங்கையரும் அங்கு பிழைப்புக்காக வந்து இதை குலத்தொழிலாக ஏற்றுக்கொள்வார்கள். அங்கு சென்றவுடன் பட்டியலிடா உபசரிப்புடன், சகல வசதிகள் கொண்ட அறையில் நாட்டியமரங்கேற அதை பலவான் தனவான் கனவான் அடலேறு ரசிக்க நடக்கும். முடிந்தவுடன் எல்லாவகை தானியங்களும், முழங்கை வழிவரும் நெய்பாண்டங்களும், பட்ச மாம்ச வகைகளும், இலை விழுங்க பரிமாறப்படும். ஜீரண எல்லையைக் கடந்த வாடிக்கையாளனின் மனம் கூனாமல் இசைந்துகொள்ள பயிற்சியளிக்கப்பட்ட பெண்கள் கூட்டம் வயதினடிப்படையில் வரிசைப்படுத்தப்படுவார்கள். அதில் நாட்டியமாடியவளைத் தவிர பிறருமிருப்பார்கள். அவர்களிலொருவரை சுயம்பு எடுத்து தனியறைக்குள் கும் கும் வாசனைதிரவிய, மங்கின ஒருமுக விளக்கொளி பிற இத்யாதிகளுடன் அனுப்பப்படுவாள். அதி சூரிய கிரணங்கள் விராலகிரியின் மேல்மண்ணைத் தொடும் வரை கால நிர்ணயம் உண்டு. அதுவே விருந்தாளிக்குரிய கால எல்லையாகும். அதை மீறி நாழிகையளவு கூட அவனுக்கு உரிமை கிடையாது. முரண் செய்தானோவனில் பீம சரீரத்தவர்களால் புடைக்கப்பட்டு வெளித்தள்ளப்படுவான்.
தயாளசாந்தன் இத்தகைய நிசுளாபுரியிலிருக்கும் விராலகிரியை தன் அபிமானஸ்தலமாக ஆக்கிக்கொண்டு ஒரு மண்டலத்துக்கு மும்முறையாக சென்றுவருவான். அவன் பார்ப்பதற்கு மார்விடைத்து, புஜம் தெறிக்க ஒரு பூரண ஆண்மகனாக இருப்பான். அதுமட்டுமின்றி சுயமாக அங்கு செயல்படும்படி மிக சுதந்திரமானவனாகவும், அக்கூட்டத்தினுடைய தலைவி கூட அவனை மரியாதை செய்யும்படி அவன் அவர்களுடன் ஒருவரோடொருவனாக பழகியதும் தயாளனை அவர்களிடத்திலிருந்து பிரிப்பது சுலபமல்ல என்பது உறுதியானது. பிறரை விட இவனொருவனுக்கு கிடைக்கும் உபசரிப்பு அளவில்லாதது. புதிதாக வரும் கன்னிப்பருவம் இவனிடம் புகலிடம் தேடும்படி தயாளன் அங்கு உயர்ந்துவிட்டான். பிணியும் மருந்தும் ஒருசேர முகரும் வைத்தியருக்கு சுரையும் பெண்ணின் மனமும் தெரியாமலா இருக்கப்போகிறது. அன்று சோமபானத்தின் வீச்சமடித்த உடம்பில் கூகையின் நறுமணமும் இணைந்துகொள்ள தள்ளாடியதொரு மனக்குளறலில் தெய்வாங்கதனுக்கு அனைத்தும் தெரிய வந்தது. மணமுடிக்க முயற்சித்தும் தயாளன் ஒத்துழைக்காததால் அதிலும் தோல்வியடைந்து அவனது தீய நடத்தையை எண்ணி பந்தத்திற்கு அடிமையுற்ற வயோதிக தந்தையாக அனைத்தையும் சகித்துக்கொண்டார்.
அத்தகைய மாபெரும் ஸ்த்ரீலோலனாகிய அவனுக்கு எதிர்மறையானவன் அவனது நண்பன் மாவணங்கு. அவர் தகப்பானார் மாவணங்கிடம் மன்னர் மக்களது காதில் விழாதவாறு அவனை மாற்றி ஆட்கொள்ளவேண்டும் என்று சாஸ்டாங்கிக்காத படி கேட்டுக்கொண்டார்.
மாவணங்கும் இயன்ற வரையில் அவன் விஷயத்தில் தீவிரமாக இருப்பேன் என்று காளிசத்தியம் செய்துகொடுத்தான். மேலும் நிசுளாபுரியிலே தோழன் காய்ச்சினவேந்தன் இருப்பதைப்பற்றியும், அவன் பிராபல்யமான அர்ச்சகனென்றும், வேதார்த்தங்களைக் கற்று அதன் படி வாழும் ஒரு இளைஞன் என்றும் அவனிடத்தில் தயாளனை அழைத்து சென்றால் ஏதேனும் சகாயம் கிடைக்குமென்றும் தெய்வாங்கதனிடத்தில் கூறினான். அவர் அதற்கு ஒப்புக்கொண்டு, செய்தியை பத்திரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் மாவணங்கோ முதலிலேயே ஒருமுறை தயாளனை அவன் தகப்பனாராகிய தெய்வாங்கதனறியாமல் இரண்டு இரவுகளில் விற்பயில பரதேச குருவை அணுகுவதாக கூறிவிட்டு காய்ச்சினவேந்தனிடத்தில் அழைத்துச்சென்றிருக்கிறான். அம்முறை தயாளன் புலாலுண்பதையும் சேர்த்து ஒரு குற்றமாக அவனிடம் சொல்லிவைத்தபோது அவனும் இது அவரவர் விருப்பம் இருந்தாலும் ஸ்த்ரீ சம்பந்தம் நல்லதல்ல என்று ஒரே வார்த்தையில் முடித்தாலும் சில ப்ரமாணங்களையும் தயாளனுக்கு எடுத்துக்காட்டினான். அதில் பிரயோஜனமே இருக்கவில்லை. தயாளன் மாவணங்கிடம் பேசுவதுபோலவே அவனிடத்திலும் பரிகசித்தும், அவனது கூற்றுகளை பகடி செய்தும் உலகறிய சிரித்தும் அவன் சந்திப்பை நிராகரித்து ஊர் திரும்ப மாவணங்கை எச்சரித்தான். இருந்தாலும், ஒவ்வொரு முறையும் மாவணங்கு அவனது தகப்பனாரை சந்திக்கும்போது அவர் தயாளனைப் பற்றிய விசாரத்தை அவனிடம் சொல்லி பிறரறியாமல் உதவும்படி கேட்டுக் கொள்வார்.இம்முறை அவரை சமாளிக்கவாவது பலன் தராத இக்காரணத்தை அவரிடம் சொல்ல வேண்டியதாயிற்று. மேலும் இவரிடம் முன்னொருமுறை சொல்லாமலிருந்ததும் தற்போது இதை பிரயோகிக்க வழி இருந்ததும் அவனுக்கு சமயமாய் ஆனது.
3
தற்போது மண்டலத்தின் இறுதிச்சுற்றில் தயாளனின் இருப்பின்மையை அறிந்த தெய்வாங்கதன் அவனுக்காக கடவுளிடம் வேண்டுவதை தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவனோ….!
மாளிகையமப்புடைய கட்டுமானத்தில் அவன் லகுவாக ஒவ்வொருவரையும் எதிர் நோக்கிக்கொண்டிருந்தான். அப்பொழுது குழுத்தலைவியிடமிருந்து ஒரு சேதி வந்தது. மேற்கத்திக்காரி ஒருத்தி வந்திருப்பதாகவும், மினுமினுத்த ஸ்பரிசங்கொண்டவளென்றும் இதுவரை ஆடவனறியாதவளென்றும் வந்த சேதியைக்கேட்டு அவனுடம்பின் ரோமக்கண்களனைத்தும் துடித்தன. அவனுக்குள்ளிருந்த மன்மதன் ரதியை நினைக்க ஆரம்பித்தது. சடுதியில் ஒப்புக்கொண்டவன் அவளை அழைத்துவருமாறும், மேற்படிக்கு பலவற்றை மனதில் வைத்திருப்பதாகவும் கூறினான். அடுத்த சில கால இடைவெளியில் அவள் அங்கு வந்து பூமாதேவியைத்தவிர வேறொன்றுமறியாதவளாக நாணத்தால் நனைந்து நின்றுகொண்டிருந்தாள். அம்மேற்கத்தி அவனுக்கு அவன் மனதில் உருவகித்த தோற்றம் சற்றும் மாறாமல் அதைவிட மேலாக இருந்தாள். அவன் நினைத்தும் பார்த்திராத இரவாக அமைந்தது அது. சூரியனின் கிரணங்கள் விராலகிரியைத் தொடும் விதிக்கு தயாளனுக்கு மட்டும் விலக்குள்ளதாகையால் அவன் அஸ்தமித்த நேரத்தில் தன் கௌபீனத்தை சரி செய்துகொண்டு அடுத்த மண்டலத்தை நோக்கி தன் நடையை புது உடல் சேர கற்பனை செய்துகொண்டே பிற்காலையில் ஊரையடைந்தவன் எதிரில் நதி நீராடிய மாவணங்கைப் பார்த்து அவ்வனுபவத்தை சொல்லும்போது கொஞ்சமும் மதிக்காமல் அம்மேற்கத்திக்காரியையும் அவனையும் வைதெறிந்தான்.
இவ்வாறு சென்றுகொண்டிருந்த நேரத்தில் தெய்வாங்கனுடைய கவலையை சிரமேற்றியபடி அவனை வழிக்குவரச்செய்து காய்ச்சினவேந்தனை இரண்டாவது முறை காண்பதற்கு மாவணங்கும், தயாளனும் சென்றார்கள். அன்றைய பூஜா கைங்கர்யத்தை முடித்தபடி வந்த காய்ச்சின -வேந்தனிடத்தில் கோவிலின் மரநிழலொன்றிலிருந்தபடி தான் வந்த காரியத்தை சுருக்கென சொல்லிவைத்தான் மாவணங்கு. தயாளன் அனைத்தையும் வானத்தினிடம் சொல்லியபடி வெறித்துக்கொண்டிருந்தான்.
சிறிது யோசித்த பிறகு பேச ஆரம்பித்தான் காய்ச்சினவேந்தன்.
“இருதயத்துள் வசித்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் அடியேன் இதை தெரிவிக்கிறேன். தயாளா, ஓருடலுடன்படிக்கையில் இக்காலத்துள் மட்டுமல்ல எக்காலத்துக்கும் அசௌகரியமோ தேகரோகமோ உன்னை அண்டாது. மேலுள்ளவனோட வாக்குறுதியிது. உன்னிடத்தில் சாஸ்திரார்த்தமெல்லாம் உரைப்பித்து கற்பக்கிருக விளக்குக்கு பிசுபிசுப்பு இல்லாமலானதொரு அசௌகர்யமே அடியேன் கண்டது. இருந்தாலும் உள்ளமடங்க கொணர்ந்த பாக்களினுடைய சுரத்தை சொல்கிறேன், கேட்டுக்கொள்வாயாக.
‘செம்பினாலியன்ற பாவையை பாவி நீ தழுவென மொழிவதற்கஞ்சி நம்பினான் உன் சரணடைந்தேன் நைமிசாரண்யத்துள்ளானே’-னு திருமங்கை மன்னன் பாடினது.
பேராத்மாவுக்கே அந்த சிந்தனையிருக்கும்போது நாமெல்லாம் அதை நினைத்துப்பார்ப்போமா? சொல். அப்படி செம்புருக்கின அனல் தகிக்கிற ஒரு பெண்ணோட உடம்பை யம கிங்கராதிகள் வலுத்து தேவரீரோட ஆலிங்கனம் செய்விக்க விரும்புவீரோ! அடியேனறியாதது.”
“அடியேனாக சொல்வதாகவிருந்தால் இத்தூரம் தாண்ட முடியாது. மீதம் தயாளனே தெரிந்ததுதான்.” என்று காய்ச்சினவேந்தன் தயாளனிடம் உரைத்தான்.
அவனோ மாமத யானையொன்றின் கர்வத்துடன் மடுவை மலை நோக்குவதுபோல் அவனைப் பார்த்தான்.
மாவணங்கு காய்ச்சினவேந்தனுக்கு நன்றியையும்,தெய்வசேவையையும் அவனுக்கு செய்வித்து இருவரும் ஊர் திரும்பினார்கள். வரும் தடமெங்கும் தயாளன் காய்ச்சினவேந்தனின் கருத்தினை நினைத்து மாவணங்கிடம் அங்கலாய்க்க ஆரம்பித்தான். கொதிக்கும் செம்புப்பாவையாம், கிங்கரனாம், நரகமாம்.. எக்காளமிட்டுக்கொண்டே அவன் வந்ததை மாவணங்கு ஏற்கனவே எதிர்பார்த்தவனாக எதுவும் பதிலுரைக்காமல் வந்தான்.
4
மாதங்கள் பல ஓடின. தயாளனுக்கு அவன் தூக்கத்தில் பல துர்சொப்பனங்கள் காண நேர்ந்தான். ஒரு முறை வியர்த்தம் தீராமல் திருவாலவட்டம் பிய்ந்துபோகும்படி வேகவேகமாக அசைத்தான். ஜன்னல்கதவுகளை எப்போதும் திறந்தே வைத்தான். மேலும், வேளைக்குத் தவறாமல் வரும் பசி அவனுள் காணாமல் போனது. இவ்வுடல் மாற்றங்களை அவன் முன்னெப்போதுமில்லாமல் இப்போது புதிதாக உணர்ந்தான். இதை யாரிடம் சொல்வது. தந்தையைத் தவிர சிறந்த மருத்துவர் வேறு யாரிருக்க முடியும். மாவணங்கைத் தவிர்த்து ஒரு நண்பன் இருக்கிறானா அவனுக்கு. இதை ஆழ யோசித்த பின் மெல்ல தந்தையிடம் கூறினான், பிறகு தன் சகாவிடம். தன் தந்தையிடம் தவிர்த்த ஒரு தகவலை இவனிடம் கூறினான். பல முறை உடற்தாகம் செய்தபோது இல்லாத ஒரு மாறுபட்ட தாக்கம், அம்மேற்கத்திய தேசக்காரியிடம் உடலிச்சையடைந்த பின் வந்ததாகவும் அவளது பூர்விகத்தையும் அவளைப்பற்றியும் தகவல் திரட்டும் படியும் நண்பனிடம் சொல்லிவைத்தான். தந்தையார் தன் மருந்தேடுகளுடன் தூரதேச மருத்துவர்களைத் தொடர்புகொள்ள விரைந்தார். அவருக்கு முழுவதும் இவனுக்கு வந்திருக்கும் இயல்பற்ற மாற்றத்தைப்பற்றின தெளிவு இல்லை. எனவே கடற்பயணம் மேற்கொண்டு விசாரித்துவர சென்றார். அதுவரை மகனை தனது தமக்கையினில்லத்தில் அவனைப்பார்த்துக்கொள்ளும்படி விட்டுச்சென்றார். மாவணங்கு வேறு ஏதாவது வழிகளில் இந்நோயைத் தீர்க்க இயலுமா என்று பார்க்க பல்லூர்ப்பயணம் செல்வதாக இமையளித்துவிட்டு அப்பரத்தையைப் பற்றி அறிய விராலகிரிக்கு புரவியேறி விரைந்தான்.
அன்று தமக்கையின் இல்லத்திலிருந்த தயாளனுக்கு தனக்கு நோய்மை பீடித்திருப்பதையும், அதுவும் மருந்தில்லா ஒரு உடல் நோய் எனவும் அழுதுகொண்டிருந்தான். குமட்டி குமட்டி வயிற்றைப் பிசைந்து பெருஞ்சத்தத்துடன் வெளியிலெடுத்தான்.ஆகாரமில்லாத அவனுடல் மெல்ல மெல்ல மெலிய ஆரம்பித்தது. குறையிருமல் வேறு பற்றிக்கொண்டது. அதில் குருதி தோய்ந்து வந்தது. தகித்துக் கொதித்தது உடல். தீராத பயத்திலாழ்ந்தான்.
மாவணங்கு முதல் நாள் அம்மாளிகைக்கு சென்று விசாரித்தபோது அக்கன்னிகை அவள் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டதாகவும், இனி எப்பொழுதும் அவளைக்காண முடியாது என்ற படியும் அவர்களின் தலைவி கூறினாள். மேலும் இங்கு நின்றமர நேர்ந்தால் விலாஒடிக்கப்படுமென்பது -போலவும் அவளின் குரல் தொனித்தது. மிகவும் சோர்ந்து கானகம் தாண்டி வந்து -கொண்டிருந்தவனுக்கு அன்று தொடங்கி மூன்றாவது நாள் அவனுக்குரிய தகவலை விராலகிரிக்கு வந்த பெருவணிகரிடம் பெற்றான். இந்நோய் மேற்கத்தியதேசத்தில் பரவுவதாகவும் அவனிடத்திலிருந்து அறிந்துகொண்டான்.
அவள் ஆடவரறியாத விலங்கினங்களறிந்த ஒருத்தி எனவும், அந்யோன்மாக வானராதிகளிடம் பழகி அவற்றை புணரும் ஒரு காட்டழகி என்றும் அப்பெருவணிகன் சொல்லி முடித்தான்.மேலும் அவளைப் புணரும் ஆடவனுக்கு வழியறியாத நோயொன்றுபற்றி சம்பந்தப்பட்டவனை இரையாக்கிவிடும் என்றும் சொல்லிமுடித்தான்.
தான் மேற்கிலிருந்து வருவதாகவும், இத்தகவலை அங்கு கேள்வியுற்றதாகவும் கூறினான். மேலும் இப்பேராபத்தைப் பற்றின விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது தன் கடமையென்றும் கூறிச்சென்றான்.
இத்தகவலையடுத்து உடனடியாக மாவணங்கு சோழதேசம் நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
இந்தப்பக்கம் பெரும் விரக்தியில் தெய்வாங்கதன் சீறியெழுந்தடங்கிய நுரை பொழிந்த அலையைக் கண்டுகொண்டே மகனை எண்ணி மனம் நோகியிருந்தார். அன்றிலிருந்து கடற்பயணத்தின் இரண்டாவது மாதத்தில் கிழக்கெல்லையைக் கடந்து அங்கு இளைப்பாறவிருந்த தருணத்தில் தெய்வாங்கதன் ஒரு திடுக்கிடும் செய்தியை கடலில் துணைப்படகின் துடுப்பு வீசுபவனிடம் கேட்டறிந்தார். மூன்று தினங்களுக்கு முன் மேற்குப் பக்கத்திலிருந்து வந்த பேரழகி அவள் தேசம் திரும்பிய கதையுடன் மாவணங்கு பெருவணிகனிடம் தொடங்கி முடித்து பெற்ற சேதியை அவரிடம் வார்த்தையுடன் வார்த்தையாக சொல்லிக்கொண்டே வந்தான். அத்துடன் அதனால் வரும் நோய்க்குரிய உடல் மாற்றங்களையும், பிற விளைவுகளையும் சொல்லிமுடித்தான்.
உடன் பிரயத்தனமாக தான் இன்றுவரை அறிந்த அனைத்து நோய்களைப் பற்றியும் அதன் தீர்வுகளைப்பற்றியும் குறிப்பெழுதி கடற்பயணத்தின் முடிவாகிய கரையடைந்தவுடன் தன்னையொத்த பல வைத்தியர்களிடத்தில் பயணக்களைப்பிற்கான ஓய்வென்பதே இன்றி கலந்துரையாடலானார்.
அவர் தன் மகனைப் பீடித்த நோயுடன் இதை ஒப்பு நோக்குகையில் தராசின் வில்லை செங்குத்தாக நின்றது.
அவர்களும் தெய்வாங்கதன் கூறிய அடையாளங்களை வைத்து பிணிக்குரிய மருந்தை தேடலாயினர். அதில் சிலருக்கு இது ஒரு பெரும் சவாலாக இருந்தது.
ஆய்வினிறுதியில் இது விலங்கிடமிருந்து, குறிப்பாக வாலுள்ள குரங்கினடமிருந்து மனித இனத்துக்குப் பரவக்கூடிய ஒரு விசித்திரமான நோய் என்றும் இதற்கு ஆகச் சிறந்த மருந்தாக கடலினாழத்தில் சந்திரகிரணங்களின் ஒளிபட்டு விளையும் ஒரு அரிய தாவரமும், பச்சைக்கண்ணுள்ள காட்டுப்பூனையின் உடலிலிருந்து கிடைக்கும் பச்சை நிறமாக இருக்கும் ஒரு திரவமும் கலந்த ஒரு வஸ்து எனவும் கண்டுபிடித்தனர். அப்பலதேசத்து மருத்துவ நிபுணர்கள் ஒன்றுகூடி இவ்வரியதொரு கண்டுபிடிப்பு வரும் நூற்றாண்டுகளின் எதிர்காலத்தில் மானுட உலகிற்கு மிகவும் பயன்படுமென்றும் ஆராய்ந்தறிந்தனர் . இதை காலம் தாழ்த்தாமல் செயலாற்றுவதற்கு பலரை அணுகி அனுமதி வாங்கி கடலோட்டிகளின் உதவியுடன் அவ்வரிய தாவரத்தை பெற்றுக்கொண்டனர். வனசஞ்சாரிகளை அணுகி காட்டுப்பூனையிடமிருந்து பச்சை நிற திரவத்தை வாங்கி வர ஒரு சிறு குழு சென்றது. அவர்களும் சென்ற இருபதாவது நாளில் அதை ஒரு பளிங்குபுட்டியிலடைத்து எடுத்துவந்தனர். தற்போது மருத்துவக்குழு தாவரங்களின் சக்கையும் அதில் அப்பச்சைநிற திரவத்தையும் சேர்த்து தன் பூரண உழைப்பால் ஒரு அதிசய மருந்தை கண்டுகொண்டனர். இதன் பலன் தெரிய அதற்குரிய நோயால் அவதியிலுழலும் ஒரு நோயாளனாகிய தனது மகனையே ஆய்வுக்கு எடுத்துக்-
கொள்வதாகவும் அதில் முக்கியஸ்தராக தன் முழு முயற்சியை செலுத்திய அனைத்து மருத்துவர்களையும் தன்னுடன் சோழதேச பிரயாணத்திலிணைந்து கொண்டு தன் இல்லத்திற்கு வருகை புரியவும் தெய்வாங்கதன் அழைத்து முடித்த அடுத்த நேரத்தில் அனைவரும் மறுக்காமல் தங்கள் மருத்துவப்பணியின் ஆதர்ச நேரத்திற்கான இப்பணியில் தாங்களும் முழு சிரத்தையுடன் தங்களுடன் இணைவதாக அவர்கள் தெய்வாங்கதனிடம் அறிவித்தனர்.
வாக்களித்தபடி தெய்வாங்கதனோடு அடங்கிய அத்தனிப்பெரும் மருத்துவக்குழு அவர்கள் நாட்டை வந்ததையடுத்தும்,தெய்வாங்கதன் அனுமதியில்லாமல் அரண்மனைக்குப் பணிக்கு வராதது குறித்தும் வியந்த மன்னர் அவனது இல்லத்துக்கே வரலானார். அப்போது மனுநீதிப் -பரம்பரையாளனான மன்னனறிந்தால் தன் மகனைக் கொன்றுவிடுவானென்ற காரணத்தினால் இத்தனை நாட்கள் மறைத்ததை இன்றும் வேறொரு காரணத்தைக் கூறி மறைத்தான். மேலும் மாவணங்கு தான் சென்று வந்த காரியத்தையும், கிடைத்த தகவலையும் கவலையுற்ற முகத்துடனும் அதே நேரத்தில் மெய்கூறாமைக்கு மன்னிக்கும்படியும் சொல்லி முடித்தான். அவர் குறுநகையுடன் தாமும் அச்சேதியறிந்ததை மாவணங்கிடம் உரைத்தார். இவ்விடைவெளியில் அவர்களது கப்பல் சுபமாக கரையடைந்ததையறிந்து மாவணங்கு தயாளனை அவனது தமக்கையினில்லத்திலிருந்து அழைத்துவர சென்றிருந்தான்.
இரவு கரையும் முதல் ஜாமத்தின் கடைசி நிமிடத்தில் போர்வையடக்கிய உடம்போடு குதிரை பூட்டப்பட்ட வண்டியில் மாவணங்குடன் தயாளன் அவனது வீட்டு வாசற்படியில் வந்திறங்கினான். அதைப் பார்த்த தகப்பனாரும், மற்ற வைத்தியர் பெரு மக்களும் அதிர்ச்சியில் விறைந்தனர். நோயின் வீரியத்தை எண்ணி இதை எக்காலத்திலும் கொடுக்கவிட்டுவிடக் கூடாது என்று அனைவரும் ஒரு நினைத்ததை அவர்களின் முகபாவம் தெரிவித்தது. நடைதளர்ந்த தயாளனை தோள்பிடித்து அழைத்து படுக்கையில் இருத்தினர். தயாளனது உடற்கோலத்தைக் கண்ட தெய்வாங்கதன் தனது மனப்பக்குவத்தையும் மீறி கண்களில் நீரழுந்த அழ ஆரம்பித்தார். மருத்துவர்கள் அவரைத் தேற்றினர். அவர் கண்டு மனமுடையுமளவுக்கு தயாளனின் உடற்சித்திரம் இருந்தது. ஊன் அழுத்தமாக உருகி எழும்புகள் புடைத்து வெளியில் தெரிந்தது. மாரெழும்புகள் அனைத்தும் ஒன்றொன்றாக எண்ணிக்கையிலடங்கும்படி கண்ணாடிப்பளிங்காக காணப்பட்டது. கன்னமொட்டி அதன் சதைகள் மறைந்துபோயிருந்தது. தலை மயிரிழந்து காணப்பட்டான். மொத்தத்தில் அவன் ஒரு அரூபியாக காட்சியளித்தான்.
இரவின் இரண்டாம் ஜாம முடிவில் வந்தவர்களனைவரும் தெய்வாங்கதனைத் தேற்றிவிட்டு கொண்டுவந்த அவ்வதிசய மருந்தினை திரைகட்டிய சூடு கொப்பளிக்கும் பாலில் கலந்து தயாளனுக்கு கொடுத்தனர். இதேமுறையில் மருந்தை குறைந்தது ஒரு மாத காலமாவது அவனுக்கு அளிக்கப்படவேண்டுமென்று மருத்துவர்களும் தெய்வாங்கதனும் நினைத்தனர். மேலும் அதன் வீரியம் குறையாமலிருப்பதற்கு அதை ஒரு மண்கலத்தில் வைத்து பாதுகாக்கவேண்டுமென்றும் அனுமானித்தனர். மேலும் அவனது ஆரோக்கிய உயர்வையும், நமது கூட்டு முயற்சியினது பலனையும் கண்டால் நிச்சயம் தெரியப்படுத்தும்படியும் மருத்துவர்கள் தெயவாங்கதனைக் கேட்டுக்கொண்டு கிழக்கே தங்களது தேசத்தை நோக்கி கப்பலேறினர்.
5
இவ்வாறு மருந்தளித்த நேரத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அவனுடலில் தீவிர தேற்றம் தெரிந்தது. அவனுக்கு பசி கிட்டியது. அசுரனாக மாற ஆரம்பித்தான். மருத்துவர்கள் ஊர் திரும்பிய இரண்டாவது மாதத்தில் மருந்து தீராத கணத்திலேயே தயாளன் பழைய நிலைக்கு வந்துவிட்டான். அவனுடல் கொழுத்த ஒரு பொருக்காக ஆயிற்று. கன்னத்தசைகள் உயிர்பெற்று அவன் அழகைக்கூட்டின. மிளிரும் கேசம் அவனுக்கு வந்தது. குறிப்பாக நெஞ்சம் விடைத்து பெரும் வீரனாக பழைய தோற்றத்தை அடைந்துவிட்டான் தயாளன். இக்காட்சிகளை முறையே நாள் குறித்து ஒவ்வொரு முறை அவன் முன்னேறிவருவதை கண்ட தெய்வாங்கதனும்,மாவணங்கும் பெருத்த மகிழ்ச்சியிலாழ்ந்தனர். வெகு முக்கியமாக தான் இதுவரை அறிந்திராத வருங்காலத்தை வதைக்கப்போகும் இவ்வதிசய பெருநோயின் அடையாளங்களையும், அதற்கான பதில் மருந்தையும் தெய்வாங்கதன் கண்டுபிடித்ததை எண்ணி மேலும் தானொரு மைல்கல்லை எட்டிவிட்டதாக தீராத சந்தோஷத்தில் திளைத்தத்தோடு மட்டுமில்லாமல் இதனை உடனே தனக்கு உதவி புரிந்த மருத்துவர்களிடம் தெரிவிக்குமாறு மாவணங்கை கிழக்கு நோக்கி கடற்பயணம் மேற்கொள்ள வைத்தார். அரசரிடம் தன் மகன் குணமான சேதியை மட்டும் சொல்லிவிட்டு ஒரு ரகசிய கண்டுபிடிப்புக்கான மகிழ்வை பெருவிருந்தொன்றுக்கு தயார்செய்து அதில் படரவிட்டார். அடுத்த சிலவினங்களை நினையாமல் தன் மகனுக்கு கட்டுக்கோப்பான முறையில் மணமுடிக்க ஆயத்தமானார். இம்முறை அவனும் தந்தையின் சொல்லுக்கு ஒப்புக்கொண்டான். மாவணங்கின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில் பெண் தேட ஆரம்பித்தார் தெய்வாங்கதன்.
இறுதியில் பழையாறு என்னும் ஊரில் தயாளனுக்கு பெண் கிட்டியது. அவனது பிதாமகர் திருமணத்திற்கான ஏற்பாட்டினை வெகு ஆடம்பரமாக செய்து கொண்டிருந்தார். தயாளனோ , மாவணங்கு திரும்பட்டும் எனவும் அவனில்லாமல் திருமணம் நடப்பது அசூயையாக இருக்கும் எனவும் தந்தையிடம் தெரிவித்தான்.
திருமணத்திற்கான நாள் கடந்து மாதங்களாயின. மாவணங்கு ஊர் திரும்பவில்லை. தெய்வாங்கனோ, அவன் வந்தவுடன் ஒரு விழாவினை வைத்துக்-கொள்ளலாமென்றும், அதற்கு முன் வைதீக சடங்குகளடங்கிய நிகழ்வினை முடித்துக்கொள்ளலாமென்றும் தயாளனிடம் கூறினார். மேலும் அதற்கு ஒரு வைதிகரையும் தேட ஆரம்பித்தார். மாவணங்கில்லாத குறையை அவனுக்கும் எனக்கும் நண்பனாகிய காய்ச்சினவேந்தன் இருப்பான் என்றும், அனைத்து வைதிக கார்யங்களை அவனே முன்னிருந்து நடத்த வேண்டுமென்றும் தந்தையிடம் கட்டளையிட்டான் தயாளன்.
அவன் கூறிபடி காய்ச்சினவேந்தன் வரவழைக்கப்பட்டான், பல ஊர் மக்கள் கூட, அனைத்து வாத்திய ஒலிகள் ஒலிக்க தயாளனின் திருமணம் காய்ச்சினவேந்தனின் மந்திரோபதேசங்களுடன், அரசனின் முன்னிலையில் கடவுளின் ஆசீர்வாதத்துடன் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.
தற்போது எட்டு மாதங்களாகியிருந்தன தயாளனுக்கு மணம் முடிந்து. இன்னமும் மாவணங்கு ஊர் திரும்பவில்லை. அப்போது ஒரு சமயத்தில் தயாளனின் பத்தினி ஒரு காட்சியைக் கண்டாள்.
இரவில் தலை போர்த்திய ஒரு உருவம் நடந்து தன் வீட்டையடைவதையும், அது வாசலை தவிர்த்து புறக்கடை வழியாக தனது அறையை அடைவதையும் பயந்துகொள்ளாமல் கண்டாள்.
அது தயாளன் தான் என்பதை மாற்றின்றி கண்டுகொண்டவள் அவனிடம் அதைப்பற்றிய பேச்சே எடுக்கவில்லை. அடுத்த நாள் சாயந்தர நேரமொன்றில் தனது மாமனாரான தெய்வாங்கதனிடம் அனைத்தையும் தெரிவித்தாள்.
அவர் கேள்வியுற்ற அடுத்த நாள் அவரது மதியூகத்தால் அவன் சென்று வரும் இடத்தை அறிந்து பேரிடி விழுந்ததுபோல் உணர்ந்தார்.
அது “நிசுளாபுரி, விராலகிரியின் மாளிகை.!”
முதல் வேலையாக தயாளனை வரவழைத்து எச்சரிக்க ஆரம்பித்தார்.
அவன் இசைகேடாக எதுவும் நடந்துவிடவில்லை என தன்னுடைய தவறினை மறைத்தான்.
அவர், அவனுடைய செயலை ஆதாரங்களுடன் விவரிக்க முற்படும் நேரம் வந்துவிட, அதற்கு அவன் ,”மாற்று மருந்துதான் நம்மிடம் இருக்கிறதே! பிறகு எதற்கு கவலைப்படுகிறீர்” என்று பேசிவிட தெய்வாங்கதனின் கண்ணின் நிறம் மாறியது, காதோரங்கள் சூடானது. உக்கிரமான கோபத்துடன் பரளினிடைகழியில் செருகப்பட்ட மரஉருளையின் மேல் வைக்கப்பட்டிருந்த அம்மருந்துக்கலயத்தை தரையிலடித்து உடைத்தார்.
அத்துடன் “இனி நீ என்னுடன் எக்காலும் பேசக்கூடாது, இப்படியே தொலைந்து போ , இனி எனக்கு மகனென்று ஒருவனிருப்பின் அது மாவணங்கு மட்டுமே” என்று சபித்துவிட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அன்றிரவே மாவணங்கைத் தேட கடற்பயணம் மேற்கொண்டு கிழக்கு நோக்கி புறப்பட்டார்.
ஆனால் அவனோ!
செம்பினாலியன்ற பாவையை தண்டனையாக தழுவுவேனோ இல்லையோ தற்போது இயல்பான இயற்கைப்பாவையைத் தழுவுவதை இன்றைய நாட்களில் விட முடியாது. அந்நோய் மீண்டும் வருமென்பதற்காக அதற்கான அருமருந்தை பெறவே தனது தகப்பனார் சென்றிருப்பதாக நினைத்தான். அவனது யூகத்தினடிப்படையில் தெய்வாங்கதன் திரும்ப வந்து -கொண்டிருப்பதாகவும், மீண்டும் அம்மருந்தை கொண்டுவருவதாகவும் நினைத்துக்கொண்டு, பலமுறை அவ்வியாதியுடன் மனைவியிடம் மட்டுமில்லாது வேசிகளோடும் கூடினான்.
அம்மண்டலத்தின் முதற்சுற்றில் இப்படி இருந்தான்.
கதவு சாற்றப்பட்ட அறையிலிருந்து வெளுத்துப் போய் வெளியில் வந்தான். சளித்து சளித்து விரயமாக்கிய எதிர்காலத்தை அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டு விட்டு வெதும்பி சிறிய துக்கத்துடன் உடல் சந்தோசத்துடன் தன்னை ஆக்கிரமணம் செய்த ப்ரக்ருதியை நினைத்தவாறு தன் நோயினறிவையும் எண்ணிக்கொண்டே தனது மனையை நோக்கி விரைந்தான்.
அதற்கு முந்தைய நாள் இரவின் விளிம்பில் மாலையில் துளிரிய புஷ்பத்தை மோந்த தருணத்தில் திரியொளியும் ஓரணுவும் தானும் ப்ராணத்தியாகிக்க ஆயத்தப்பட்டதை அவ்விரவு முழுதும் சப்தமித்த முனகலினொலி வரிந்துகொண்டு காட்டியது. அது நிசப்தம் களைந்த முழு இரவு.
அன்றிலிருந்து சில நாட்களில் அத்தகைய இரவொன்றின்
இரண்டாம் ஜாமத்தில் தயாளன் மீண்டும் அந்நோய் முற்றிப்போய் படுக்கையில் வீழ்ந்து இறந்துபோனான்.
காத்து அடக்கி ரகசியமாய் வைத்த இச்செய்தி, அக்குடும்பத்தினரின் மர்மமான தொடர் மரணங்கள் மட்டுமின்றி வேசிகள் சிலரின் மரணங்களும் கண்டு அதிர்ச்சியுற்ற ஊர் மக்களுக்கு அப்பெருவணிகன் மூலம் தகவல் பரவியது.
அந்நோயைப்பற்றியும், அதிலிருந்து காத்துக்கொள்ளும் வழியினையும், நோயின் விளைவுகளையும் பிரசங்கிகள் மூலம் மன்னருக்குப் பிறகு வந்த அரசாங்கத்தால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
தெய்வாங்கதன்,மாவணங்கு,மற்றவர்களைப் பற்றிய செய்திகள் மந்த வெளியில் சூன்யமாக இருப்பதினால் அவர்களை ஆழிப்பயணம் விழுங்கியதா அல்லது கொடிய பிராணிகளால் தாக்கப்பட்டார்களா அல்லது வேறு ஏதாவது என்று பல ரூபத்தில் உலாவ ஆரம்பித்தது.
இருந்தபோதிலும்,
தயாளன் மீண்டும் அந்நோய் முற்றி உயிர் துறந்ததும், அந்நோய் இந்நூற்றாண்டில் பலரையும் ஆட்கொண்டுவிட்டதும் தெய்வாங்கதனும், மாவணங்கும் அவர்களைத் தேடச்சென்ற மற்றவர்களும் இவ்வுலோக காலத்தின் இன்றைய நாள் வரை ஊர் திரும்பவில்லை மட்டுமே என்ற ஒரு காரணம் அந்நோய் கண்டவர்களைப் பார்க்க நேரும்போது கண் முன்னும் மனத்திலும் ஒரு வலியாக தோன்றி மறைகிறது.