கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 3,287 
 
 

(1983ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மல்லிநாதர் இல்ல வழக்கம் | ஜலதரங்கம்

ஓம்ஸ்தலா என்ற ஒண்டாலாவுக்கு வந்ததும் வராததுமாகத் தன்னைத் தலையில் நீர் ஊற்றி மூழ்க வைத்ததற்கு சந்திரமதி கூறிய காரணத்தைக் கேட்டதும் வியப்பே அடைந்தான் சத்ருஞ்சயன்.

“உங்கள் தலையில் நீர் ஊற்ற எந்த விநாடியில் தந்தை உத்தரவிட்டாரோ அந்த விநாடியில் நீங்கள் அவரது சீடராகிவிட்டீர்கள். எந்தப் புதுச் சீடனும் எங்கள் வீட்டுக்குள் நுழையுமுன்பாக நீராடிப் புத் தாடை புனைந்துதான் நுழைய வேண்டும். நுழைந்ததும் எங்கள் வீட்டு வீட்டு முன்னறையில் இருக்கும் சாளக் கிராமத்தை வணங்க வேண்டும். அப்பொழுது முதன் முதலாக உங்களுக்கு மாற்று மந்திரோபதேசம் செய்யப் படும். அந்த நிமிஷம் முதல் நீங்கள் மல்லிநாதரின் சீடராக ஏற்றுக் கொள்ளப்படுவீர்கள். அப்புறம் இந்த ஊரில் உங்களை யாரும் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டார்கள். நீங்கள் இஷ்டப்படி இந்தக் கோட்டை யில் எங்கும் உலாவலாம்,” என்று சொன்னாள் சந்திரமதி.

இதைச் சொன்ன சந்திரமதி புதுச் சீடனைச் சற்று ஏறெடுத்துப் பார்த்தாள். அவள் அளித்த காவிப் பட்டை இடையில் அணிந்து மேலே ராஜபுத்திரர் களுக்கான முப்புரி நூல் மட்டுமே தெரியும்படியாக நின்ற அந்த வாலிபனின் அகன்ற மார்பையும், கரிய சருமத்தையும், மார்பில் தெரிந்த சில தழும்புகளையும், நீண்ட வலுவான விரல்களையும் பார்த்த சந்திரமதி, வாள் வித்தைக்கு அவன் புதியவனல்லன் என்பதைப் புரிந்து கொண்டாள். நீண்ட நேரம் அவனைத் துருவிப் பார்ப்பது சரியல்ல என்ற உணர்வு ணர்வு ஏற்படவே திடீரெனத் திரும்பிய சந்திரமதி, “வாயிற் பக்கமாக வாருங்கள், அங்கே தந்தை இருப்பார்” என்று சொல்லி விட்டு வேகமாக உள்ளே நடந்தாள்.

அவள் கண்ணுக்கு மறையும் மட்டும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சத்ருஞ்சயன் தனது ஆடை களை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பிழிந்து தோளில் போட்டுக் கொண்டு, வீட்டைப் பக்க வாட்டில் சுற்றி வாயிற்புறமாக வந்தான். அங்கு அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த மல்லிநாதர் முதன் முதலாக அவன் பெயரை உச்சரித்தார் “சத்ருஞ்சயா!” என்று.

சத்ருஞ்சயன் மறுபடியும் ஆச்சரியத்தின் வசப் பட்டான். அதுவரை தனது பெயரைச் சொல்லா திருக்கும்போது அவர் எப்படிப் பெயரைத் தெரிந்து கொண்டார் என்பது அவிழ்க்க முடியாத புதிராய் இருந்தது அந்த வாலிபனுக்கு. “குருநாதா! என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று வினவினான்.

“உன் தந்தையின் பிரதாபத்தை நீண்ட நாளாக நான் அறிவேன்,” என்றார் குருநாதர்.

“என் தந்தையின் பிரதாபத்தையா?” என்று ஏதும் புரியாமல் கேட்டான் புதுச் சீடன்.

மல்லிநாதர் சிரித்துவிட்டுச் சொன்னார்: “சிறு வனே! ராஜபுத்திரர்கள் சாதாரணமாக ஒரு மனைவி யோடு நிற்பதில்லை. குறைந்த பட்சம் இரண்டு மூன்று மனைவிகளையாவது அடைவார்கள். ஆனால் உன் தந்தை, தாய் இறந்து போனதும் வேறு யாரையும் திரும்பிப் பார்க்கவும் மறுத்தார். உன்னை வளர்த்து ஆளாக்குவதிலேயே முனைந்தார். இப்பொழுது வித்தை கற்க என்னிடம் அனுப்பியிருக்கிறார்.உன் தந்தைக்கு மேவாரைத் தவிர வேறெதுவும் தெரியவும் தெரியாது. எனக்கு ஒரு பெண் இருப்பதுகூட அவருக்குத் தெரியாது. சந்திரமதி யாரோ என்று நினைத்துக் கொண்டிருப்பார்,” என்று விளக்கிய மல்லிநாதர் மெதுவாக நகைத்து, “அவருக்கு ஒரே பிள்ளை, சத்ருஞ்சயன் என்று பெயர். மாவீரன் என்று ஊரெல்லாம் சொல்லக் கேள்விப்பட்டேன். ஆகை யால் நீ வித்தை பயில வந்திருப்பதாகக் கூறுவதுகூட எனக்கு விந்தையாயிருக்கிறது. சரி வா, உள்ளே போகலாம்.” சத்ருஞ்சயனை உடன் வரும்படி சைகை காட்டி உள்ளே புகுந்தார்.

அந்த வீடு முன்கட்டில் பார்ப்பதற்குச் சிறியதா யிருந்தாலும் அங்கிருந்த கூடம் மிகப் பெரியதாக இருந்தது. அங்கே போர்க் கருவிகள் பலவும் மூலை களிலும் பக்கச் சுவர்களிலும் சாத்தப்பட்டிருந்தன. அதன் ஒரு மூலையின் கோடியில் மட்டும் சிறு விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் சிறு பெட்டகம் இருந்தது.

“சத்ருஞ்சயா அந்தப் பெட்டகத்தைத் திற” என்று மல்லிநாதர் உத்தரவிட, மெதுவாக அதை நோக்கி நடந்து சென்று சத்ருஞ்சயன் பெட்டகத்தைத் திறந் தான். பெட்டகத்துக்குள் வைர வைடூரியங்கள் இருந் தன. “குருநாதா! இவற்றை என்ன செய்யட்டும்?” என்று கேட்டான்.

“வைரக் கற்களை நீக்கிவிட்டு அடியிலிருக்கும் சாளக்கிராமத்தை எடு?” என்றார் மல்லிநாதர்.

வைரங்களையும் வைடூரியங்களையும் நீக்கிய சத்ருஞ் சயன் அவற்றின் அடியில் பளபளவென்று இருந்த சாளக்கிராம மூர்த்தியைக் கையில் எடுத்துக் குருவை நோக்கி நடந்தான். அவன் அவரை நோக்கியதும் உள்ளிருந்து கூடத்துக்குள் சந்திரமதி நடந்து வந்தாள் ஒரு தட்டுடன்.

அந்தத் தட்டில் ஒரு வட்டிலில் நீரும் உத்தி ரணியும் இருந்தன. சந்தனம் ஒரு பக்கத்தில் வைக்கப் பட்டிருந்தது. உதிரி புஷ்பங்களும் காணப்பட்டன.

“சத்ருஞ்சயா, சாளக்கிராம மூர்த்தி மீதும் வாயி லும் சந்தனத்தை வைத்துவிடு. பிறகு அதைப் பெட்ட கத்தில் வை?” என்று தூரத்திலிருந்தே உத்தரவிட்டார்.

குரு சொன்னபடி சத்ருஞ்சயன் செய்தான். “சந்திரமதி! உத்திரணியில் நீரெடுத்துக் கொடு அவனிடம். அவன் ஆசமனம் சமர்பிக்கட்டும் மூர்த்திக்கு,” என்றார்.

“அச்சுதா, அனந்தா, கோவிந்தா” என்று சொல்லி மும்முறை உத்திரணியால் நீரை எடுத்து ஸ்வாமி முன்பு காட்டிய பிறகு அந்த நீரை வட்டிலில் ஊற்று வது சாளக்கிராம ஆசமனம். க்ஷத்திரிய வழக்கப்படி அந்த ஆசமனம் செய்து முடித்த சத்ருஞ்சயனை நோக்கி, “அடுத்து புஷ்பங்களை எடுத்து அர்ச்சனை செய்,” என்று கூறினார். “அர்ச்சனைக்குப் புஷ்பத்தை அவன் கையில் கொடு சந்திரமதி” என்று மீண்டும் உத்தரவிட்டார்.

சந்திரமதி திகிலடைந்து தந்தையைத் திரும்பிப் பார்த்தாள். அவர் முகத்தில் புன்முறுவல் இருந்தது. “மகளே! சொன்னபடி செய்” என்றார் கண்டிப்புடன். அதற்குமேல் ஆட்சேபனை சொல்லாமல் தனது இடது கையால் தட்டைப்பிடித்துக் கொண்டு, வலது கையால் புஷ்பங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க, தூரத்திலிருந்தவாறு அர்ச்சனை மந்திரங் களை மல்லிநாதர் ஓத, புஷ்பார்ச்சனை செய்தான் சத்ருஞ்சயன்.

அர்ச்சனை முடிந்ததும் தீபாராதனை காட்டிய போது ஹயக்ரீவ மந்திரத்தை இரந்து சொன்னார் மல்லிநாதர். அது முடிந்ததும், “சத்ருஞ்சயா! இப் பொழுது நீ பூஜை செய்திருப்பது ஹயக்ரீவமூர்த்தியை. கூழாங்கல்லைப் போலிருக்கும் அந்த மூர்த்திதான் ஹயக்ரீவர். நேபாளத்தில் கண்டகி நதியில் இருந்து நானே எடுத்து வந்தேன். ஹயக்ரீவர் வித்தைக்கு அதிபதி. அவரை பூஜை செய்ததாலும் நீ சற்று முன்பு ஏற்றிய ஜ்வாலை அணையாமல் நின்றதாலும், நீ அவர் கருணைக்குப் பாத்திரமாகப் போகிறாய். மூர்த்தியைத் தண்டனிட்டுப் பெட்டகத்தை மூடிவிட்டு வா. இன்று உன் குருகுலவாசம் தொடங்கிவிட்டது,” என்றார்.

அது முடிந்ததும் சந்திரமதி தந்தையை வணங்கினாள். “இரண்டு பேருமே வணங்குங்கள்” என்று மல்லிநாதர் உத்தரவிட சத்ருஞ்சயனும் சந்திரமதிக்கு அருகாமையில் மண்டியிட்டுக் குருநாதரை வணங் கினான்.

அடுத்து அவனுக்கு வேறு உடை கொடுத்து உண வும் அளித்தார் மல்லிநாதர். உணவை சந்திரமதி பரி மாறுவாள் என்று எதிர்பார்த்த சத்ருஞ்சயன் ஏமாற்றமே அடைந்தான். பூஜைக்குப் பின் சந்திரமதி அவன் இருந்த இடத்தில் தலைகாட்டவே இல்லை.

மல்லிநாதரே இரண்டு கலங்களில் உணவைப் பரிமாறி சீடனுடன் தானும் உட்கார்ந்து சாப்பிட்டார். கலங்களையும் அவரே எடுக்க முற்பட்டபோது சத் ருஞ்சயன் அவரைத் தடுத்து கலங்களை அவரிட மிருந்து பிடுங்கிக் கொண்டு கிணற்றுப்புறம் சென்று தட்டுகளை அலம்பிக் கொண்டுவந்தான். அவனே இருவர் உணவருந்திய இடத்தையும் துடைத்தான்.

“இதெல்லாம் நீ எதற்காகச் செய்ய வேண்டும்?” என்று மல்லிநாதர் கேட்டார்.

“குருவுக்குச் சீடன் பணிவிடை செய்தால்தான் வித்தை வரும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்,” என்றான் சத்ருஞ்சயன்.

“குரு எப்படி இருந்தாலும் நீ பணிவிடை செய்வாயா?” என்று கேள்வியைத் தொடுத்தார் மல்லிநாதர்.

“கண்டிப்பாகச் செய்வேன்,” என்றான் சீடன்.

மல்லிநாதர் எதற்கோ நகைத்தார். பிறகு அவனைப் படுத்துக் கொள்ளச் சொன்னார். “உம்… வாளைக் கொடுங்கள்” என்று கேட்டான் சத்ருஞ்சயன்.

“எதற்கு?” குருநாதர் கேட்டார்.

“அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்தால் தான் எனக்குத் தூக்கம் வரும். அதைப் பிரிந்து படுத்ததில்லை,” என்றான் சத்ருஞ்சயன்.

“இன்னும் சில தினங்களுக்கு உனது வாளை மறந்துவிடு. என்னிடம் நூற்றுக்கணக்கான வாட்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை எடுத்துக்கொள்” என்றார்.

“என் வாளை ஏன் மறக்க வேண்டும்?”

“அதில் சலூம்ப்ரா முத்திரை பொறிக்கப் பட்டிருக்கிறது.”

“அதனால் என்ன?”

“நீ சிறைப்படுவாய்” என்ற மல்லிநாதர், “சத்ருஞ்சயா! கோட்டை வாயிலில் காவலர் தலைவன் விறகுக் கட்டை சோதனை செய்தபோது உன்வாளைப் பார்த்து விட்டான். ஆனால் பார்க்காதது போல் பாசாங்கு செய்தான். நீ மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காவலர் தலைவனும் ராஜபுத்திரன். மிகக் கூர்மையான புத்தியை உடையவன்,” என்று எச்சரித்தார்.

அதைக் கேட்டுக் கொண்டு குருவைப் பணிந்து தனக்குக் காட்டிய சிற்றறையில் படுத்துக் கொண் டான். ஆனால் அவனுக்கு உறக்கம் கொள்ளவில்லை. அன்றைய நிகழ்ச்சிகளையெல்லாம் நினைத்துக் கொண்டே புறக் கண்களை மூடியதால் மனக்கண் நன்றாகத் திறந்தது. அதில் தோன்றினாள் சந்திரமதி. அவள் அவனை நோக்கிப் புன்முறுவல் கொண்டாள். அவன் மனத்தின் மீது தனது பூங்கால்களால் நடந்தாள். பிறகு மனத்தோடு மனமாகப் படுத்து விட்டாள். அவள் பூவுடல் தன் மனத்தில் பூராவாகத் தோன்றியது சத்ருஞ்சயனுக்கு. அந்த நினைப்பு தகாத நினைப்பு என்று எண்ணிய சத்ருஞ்சயன் புறக் கண்களைத் திறந்து எழுந்தும் உட்கார்ந்து கொண்டான்.

“சத்ருஞ்சயா! என்ன காரியம் செய்தாய்? உன் மன்னனுக்குப் பெண் எடுக்கச் சென்ற நீ அந்தப் பெண்ணை நினைப்பதும் மகிழ்வதும் சரியா? அவள் ராஜபுதனத்து வாரிசு அல்லவா?” என்று அவன் மனம் கேட்டது.

அடுத்து அவன் தந்தை அவன் மனக்கண்ணி தோன்றி, “உன்னை நான் அனுப்பியது எதற்காக? செய்ய முயல்வது என்ன?” என்று சீறினார்! ‘இல்லை இல்லை. அவளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’ என்று மனத்திலேயே கூறினான் சத்ருஞ்சயன்.

அப்பொழுது சந்திரமதி பக்கத்தில் இருப்பதாக தோன்றியது சத்ருஞ்சயனுக்கு. அதுவும் கனவென் நினைத்தான். ஆனால் கனவல்ல அது. பக்கத்து அறையிலிருந்த சந்திரமதி உண்மையாகவே வெளியிட்ட நகைப்பு அவன் காதுகளில் ஜலதரங்கம்போல் மிக இன்பமாக ஒலித்தது.

– தொடரும்

– சந்திரமதி (குறுநாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *