கல்யாணம்… இன்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 9,218 
 

தன் முன் இருந்த கணினியில் தான் செய்திருந்த ‘ப்ரோக்ராமி’ல் இருந்த பிழையைக் கண்டுபிடிக்க மிக மும்முரமாக ஆழ்ந்திருந்த ரிஷியின் கவனத்தைப் பக்கத்து ‘வொர்க் ஸ்டேஷனி’ல் இருந்த கீதா கலைத்தாள்.

“யேய்… ரிஷி… உன் மொபைல் இதோடு நான்கு தடவையாக தொடர்ந்து அடித்து விட்டது. பார்க்க மாட்டாயா?” என்றாள்.

ரிஷி அப்போதும் கணினித் திரையில் இருந்து கண்களை எடுக்காமல் “ஏதாவது வெட்டிக் காலாக இருக்கும்” என்றான்.

“ஸ்டுபிட்… வெட்டிக் கால் பண்றவன் திரும்பத் திரும்பப் பண்ண மாட்டான்,” என்றவள் தானே தனது சுழலும் நாற்காலியை நகர்த்திக் கொண்டு அருகில் வர, ரிஷியின் ஃபோன் மீண்டும் உதற ஆரம்பித்தது ‘ஸைலண்ட் மோடி’ல் இருந்ததால்.

கீதாவே ஃபோனை எடுத்துப் பார்த்தவள், “ஏதோ புது நம்பர், நீ சொல்ற மாதிரி வெட்டிக் கால்தானோ?” என்றவள் தானே அதை எடுத்து “ஹலோ” என்றாள்.

மறு முனையில் இருந்த வந்த பதிலைக் கேட்டதும், “ஓ… ஹாய்… ஹெள ஆர் யு… ஒன் மினிட்” என்று ஃபோனை ரிஷியிடம் கொடுத்தவள், “உன் ஃப்யான்ஸி… ஜான்வி…” என்றாள் நமுட்டுச் சிரிப்புடன்.

ரிஷி ஒரு விநாடி கீதாவை வெறித்துப் பார்த்தவன், “ஜான்வியா?” என்று ஃபோனை வாங்கிக் காதில் பொருத்திக்கொண்டு பேசினான்.

“ஓ… ஹாய்… ஹவ் ஆர் யு… ம்… ஐ ஸீ… அப்படியா… ஓகே… ம்… மே பி அட் ஸிக்ஸ் தேர்டி… ஆர் ஸெவன்… ஓகே… பை…” என்று ஃபோனை அணைத்து மேஜையில் வைத்தான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த கீதா கேட்டாள்.

“என்னவாம்… என்ன எல்லாம் ஒத்தை வார்த்தைலயே பேசின…?”

“பின்ன என்ன? சினிமா மாதிரி ‘ஃபோன்’ல டூயட்டா பாடுவாங்க..?” என்றவன், “என்னவோ மீட்பண்ணணுமாம்… சாயங்காலம் நுங்கம்பாக்கம் ‘காஃபி டே’க்கு வரச் சொன்னா..” என்று முடித்தான்.

“நீயென்ன பிராணி ரிஷி? அவனவன் கல்யாணம்னா குதிக்கிற போது, எப்படா ஒரு பெண் மாட்டுவாள் கடலை போடலாம்னு காத்திருக்கற காலத்தில உனக்காகப் பார்த்திருக்கிற பெண் தனியா கூப்பிட்டா அலுத்துக்கற மாதிரி பேசற…” என்றாள் கீதா ஆச்சரியத்துடன்.

ரிஷி அவளைப் பார்க்காமலே மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தவண்ணம் இருந்தவாறே பதில் சொன்னான்.

“நான் அந்த மாதிரி ஜொள்ளு டைப் இல்லன்னு உனக்கே நல்லாத் தெரியும். தெரிஞ்சுண்டே ஏன் இந்தக் கேள்வியக் கேக்குற…?” என்றான்.

கீதா, “உன் ‘பர்ஸனாலிடி’ல இருக்கிற திமிர்… ரோக்…” என்று கூறியபடி செல்லமாக அவன் தோளில் தட்டிவிட்டுத் தன் வேலைக்குத் திரும்பினாள்.

ரிஷியின் செவிகளில் இந்த விமர்சனம் கூட விழுந்ததா என்று தெரியவில்லை.

****

‘காஃபி டே’யில் இருந்த எட்டு மேஜைகளில் இரண்டு மேஜைகளில்தான் தலா இரண்டு பேர் (வெகு நேரமாக) அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஜான்வி இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸும், லூஸான டி-ஷர்ட்டும் அணிந்து தலையை அலர விரித்திருந்தாள். புதுமைப் பெண் என்பது காதில் கழுத்தில் கையில் அணிந்திருந்த ‘எதினிக் ஜ்வெல்லெரி’யில் இருந்து தெரிந்தது. லேசான மஸ்காராவும், உதட்டுச் சாயமும் சட்டென்று பார்த்தால் தெரியாது மாதிரி இருந்தது.

மணி ஆறரை.

அவள் ஒன்றும் ரிஷியைக் காணவில்லை என்ற பரபரப்பில் எல்லாம் இல்லை; தன் கையிலிருந்த ‘ஸ்மார்ட் ஃபோனி’ல் ஏதோவொரு ‘கேம்’ விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஏழு ஐந்துக்கு ரிஷி உள்ளே நுழைந்தான். ஆஃபீஸில் இருந்து நேராக வந்ததினால் ‘ஃபார்மல்’ அலுவலக உடையில் இருந்தான். முகத்திலும், கண்களிலும் சோர்வு தெரிந்த போதிலும், இளமையும், ‘டிஸைனர் ஸ்டப்பிளி’லும் அழகனாகவே இருந்தான்.

“ஹாய் ஜான்வி…”

“ஹாய் ரிஷி…”

இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். அத்துடன் ரிஷி லேசாக ஜான்வியின் தோளை அணைத்து லேசாகத் தழுவிக் கொண்டான். இருவரும் எதிரெதிராக அமர்ந்தனர்.

“ஸோ..?” என்றான் ரிஷி.

அதற்குள் ஜான்வி இரண்டு ‘ஸாண்ட்விட்ச், காபி’க்கு ‘ஆர்டர்’ செய்தாள். இதற்குப்பின் இருவரின் உரையாடலும் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தது.

“என்ன விஷயமாக என்னிடம் பேச வேண்டும்?” என்றான் ரிஷி.

ஜான்வி லேசாகச் சிரித்தாள். ஒரு நிமிஷ மௌனத்திற்குப் பின் பேசினாள்.

“நம் இரண்டு பேர் வீட்டிலும் என்னவோ நிறைய கலாச்சார ரீதியாகப் பேசி கல்யாணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள். ஜாதகம், முகூர்த்த நாள், ராகு காலம், மாசம், தேதி, சீர்… இத்யாதி..”

ரிஷியும் பதில் சொல்லாமல் புன்னகை செய்தான்.

“இதிலெல்லாம் உனக்கு உடன்பாடு உள்ளதா?” என்று கேட்டாள் ஜான்வி.

“எனக்கு இல்லை… ஆனால் எனக்கு இது எல்லாம் ஜஸ்ட் ஃபன்…”

“ஃபன்? யூ மீன் தமாஷ்?”

“யெஸ்… கல்யாணத்திலேயே நிறைய ஃபன் இருக்கே… விதவிதமான டிரஸ், ஊஞ்சல், மேளம், மாலை மாற்றல், நலங்குன்னு… அதுபோலத்தான்.”

ஜான்வி, “எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை…” என்றாள்.

“ஓ… கம் ஆன்… உன் பெற்றோரோ, என் பெற்றோரோ இதெல்லாம் தேவையில்லைன்னா விடுவாங்களா?” என்றான் ரிஷி சிரித்தபடி.

“எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை… ஜஸ்ட் வேஸ்ட் ஆஃப் டைம் அன்ட் மணி…”

“நீ என்ன ஆம்பிள மாதிரி பேசற…?” என்றான் ரிஷி வியப்புடன்.

ஜான்வி அவனை விழித்துப் பார்த்தாள்.

“ஏன் பெண்கள் ‘ராஷனலா’ யோசிக்க மாட்டாங்ககங்கறது உன் அபிப்பிராயமா?” என்றாள் கோபத்துடன்.

ரிஷி கைகளைத் தூக்கினான்.

“ஸாரி… ஸாரி… நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.”

ஜான்வி மௌனமாக இருந்தாள்.

“லுக் ஜான்வி, எப்படி இருந்தாலும் கல்யாணம் ஆன ஒரு மாசத்தில் நாம் யு.எஸ். போய்விடப் போகிறோம். அப்புறம் என்ன?” என்றான்.

ஜான்வி ஒரு விநாடி யோசனைக்குப் பின் புன்னகை செய்தாள்.

“ஓகே… நான் உன்னைக் கூப்பிட்டது இதற்கு அல்ல,” என்றாள்.

காபியைப் பருகியபடி ரிஷி பதில் தந்தான்.

“எனக்கும் தெரியும்… இதைச் சொல்ல நீ என்னைக் கூப்பிடவில்லை என்று…”

“குட்… நான் ‘யு.எஸ். அஸைன்மென்டு’க்கு எழுதிக் கொடுத்து விட்டேன். ஆனால், எனக்கு நீ போகப் போற கலிபோர்னியாவிலேயே ‘போஸ்டிங்’ கிடைக்கும்னு எதிர்பார்க்க முடியாது…” என்றாள்.

“ஐ நோ…”

“எனக்கு அநேகமாக ஸியாட்டிலில்தான் கிடைக்கும்னு நினைக்கிறேன்” என்றாள் ஜான்வி.

“நோ இஷ்யூஸ்… கூல்.”

“உன் அப்பா அம்மா நாம போன ஒரு மாசத்துக்கெல்லாம் ‘யு.எஸ். டிரிப்’ அடிக்கலாம்னு ‘ப்ளான்’ போட்டிருக்காங்க போல இருக்கே..?” என்றாள் ஜான்வி.

“யெஸ்… ஐ நோ…”

ஒரு விநாடிக்குப் பின் ஜான்வி சொன்னாள்.

“அது முடியாதுன்னு சொல்லிடு.”

ரிஷி அவளைக் கூர்ந்து பார்த்தான்.

“ஏன்…?”

“அவங்கதான் நீ ‘பாட்சிலரா’ அங்க இருந்தபோதே வந்து இருந்திருக்காங்க இல்ல… இப்ப வந்தா பிரச்சினைதான்.”

“……..”

“புரியலையா..? ஒரு ‘வீக் எண்ட்’ நான் கலிபோர்னியா வந்தா அடுத்த ‘வீக் எண்ட்’ நீ ஸியாட்டில் வரணும். நானே சும்மா சும்மா வரமுடியாது. வந்தாலும், இவங்கள உக்காத்தி வச்சு வேல செய்ய முடியாது.”

“ஐ அக்ரி…”

“நீ அங்க வந்தேன்னா இவங்க தனியா எப்படி உக்காந்திருப்பாங்க? அதனால நமக்கு பின்னால குழந்தை பிறக்கற அந்த மாதிரி சமயத்துல வரட்டுமே…?”

ரிஷி லேசாகச் சிரித்தான்.

“ஏன் அப்ப உங்க அப்பா அம்மா வரமாட்டாங்களா?” என்றான்.

“வரலாம்… ஆனா… ஆனா என் அம்மாவால அதெல்லாம் முடியாது. அவங்க இங்கயே வீட்டு வேலைக்கெல்லாம் ஆள் வச்சிட்டிருக்காங்க…” என்றாள் சலிப்போடு.

“ஓ… அவங்க பாங்க் மேனேஜர் இல்ல… மறந்துட்டேன்…” என்றான் ரிஷி.

ஜான்வி அவனை முறைத்துப் பார்த்தாள்.

“என்ன கிண்டலா… உங்க அம்மாவும்தான் வேலைல இருக்காங்க…”

“ஆனா அவங்க செய்வாங்க…”

“அப்ப அவங்களே வரட்டும்.”

“கூல், அந்த விவாதம் இப்ப எதுக்கு?” என்றான் ரிஷி.

“யெஸ்… சரிதான். நமக்கு 3 வருஷத்துக்குக் குழந்தைகள் வேண்டாம்… ஓகே?” என்றாள் ஜான்வி.

ரிஷி சிரித்தான். “கூல், யெஸ்… மா’ம்…”

ஜான்வியும் சிரித்தாள். “யு ஆர் ஸ்வீட்… ஆனால் கல்யாணம் ஆனப்புறம் ‘டிபிகல் இண்டியன்’ கணவனாக இம்சை பண்ணக்கூடாது. அப்பா கேக்கிறாங்க… அம்மா கேக்கிறாங்கன்னு..”

ரிஷி இப்போது பெரிதாகவே சிரித்தான். சுற்றிலும் இருந்த ஓரிருவர் இவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.

“ஓ… ஸாரி… ஸாரி…” என்று கைகளை உயர்த்தி அவர்களைப் பார்த்துக் கூறிவிட்டு ஜான்வியிடம் சொன்னான்.

“நெவர்… கவலைப்படாதே… எனக்குக் குழந்தைகள் மேல அவ்வளவு ‘ஃபேஸினேஷன்’ கிடையாது. என் ‘காரியர்’தான் முக்கியம்.”

“ஃபார் மீ டு…” என்றாள் ஜான்வி.

“குட்… ஸேம் வ்யூஸ்… இட்ஸ் அவர் லைஃப்…” என்றான்.

ஓரிரு விநாடிகள் மௌனத்தில் கரைந்தன.

“இந்த ‘வீக் எண்ட்’ ஏதாவது ‘ரிஸார்ட்டி’ல் போய்த் தங்கலாமா?” என்றான் ரிஷி.

ஜான்வி அவனை உற்றுப் பார்த்தபடி, “ஷ்யூர்…” என்றாள்.

***

மகாபலிபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்த அந்த மேல்தட்டு வாசஸ்தலம் ஒன்றில் இருந்த நீச்சல் குளத்தில் நீந்திக் குளித்தபின் தங்கள் அறையின் தனிமைக்குத் திரும்பிய ரிஷியும், ஜான்வியும் ஒருவரையொருவர் இறுக அணைத்துக் கொண்டு உதடுகளில் உதடுகளைப் பதித்தனர்.

கொஞ்ச நேரத்திற்குப் பின் கண்களை மூடிய சுகத்தில் இருந்த ஜான்வி சொன்னாள்.

“நான் சந்தித்த ஆண்களிலேயே நீதான் ‘ஆஸம்’…” என்றாள்.

“நானும் அதையேதான் சொல்ல வேண்டும். நான் உறவு கொண்ட பெண்களிலேயே நீதான் ஸூபர்…” என்றான் ரிஷி அவள் காதில் கிசுகிசுப்பாக.

****

கிட்டத்தட்ட அதே நேரத்தில் அடையாறில் இருந்த ஒரு வசதியான ஃப்ளாட்டில் ஜான்வியின் பெற்றோரும், ரிஷியின் பெற்றோரும் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

“கல்யாணத்தன்னைக்கே சாந்தி முகூர்த்தத்தையும் வைத்துக் கொள்ளலாம். நல்ல நாள்தான் என்று சாஸ்திரிகள் சொன்னார்…” என்றாள் ரிஷியின் அம்மா.

“ரொம்ப நல்லதாப் போச்சு…” என்றனர் ஜான்வியின் பெற்றோர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *