கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 2,649 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

தெட்சண கைலாயத்திற் குடிகொண்டிருக்கும் கோண நாயகப் பெருமான் வீற்றிருக்கும் குன்றைத் தழுவித் தன் பால் போன்ற வெண்ணிற அலைகளால் அதன் அடிவாரத் தைக் கழுவிக்கொண்டிருந்த அந்தப் பிரமாண்டமான பெரிய பரவைக்கடலைப் பார்த்தபடி தன் உள்ளத்தில் ஆயிரமாயிரம் கற்பனைக் கோட்டைகளை ஒரே சமயத்தில் எழுப்பி அதற்கு உருவம் கொடுத்துக் கொண்டிருந்தான் தெட்சண கைலாயத்தின் மன்னாதி மன்னன் குளக்கோட்டன். 

அவன் பக்கத்தே மௌனமாக நின்று, அவன் சிந்தனை யைக் கலைக்க விரும்பாதவராய். அவனது மோன நிலையை ஊன்றி அவதானித்தபடியிருந்தார் அமைச்சர் கலிங்கராயர். சற்றுத்தூரத்தே தாழ்ந்த மணற்றிடர் ஒன்றின்மேல் தெட்சண கைலாயத்தின் சுற்றுப்புற இயற்கை அழகை இரசித்தபடி தன்னை மறந்து நின்றான் மன்னனது தேர்ச்சாரதி முகில் வண்ணன். 

சமுத்திரக் கரையில் நின்ற மன்னன் திடீர் என ஏதோ நினைத்துக் கொண்டவனாக மலையடிவாரம் வழியாக ஏறி மலை யின் உச்சியை நோக்கித் தன் நடையைத் துரிதப்படுத்தினான். அவனைப் பின்தொடர்ந்தார் அமைச்சர் கலிங்கராயர். அவ ருக்குச் சமீப காலமாக மன்னனைப் பற்றி ஒரே கவலை. மன்னரது அமைச்சராக மட்டுமன்றி அவரது அன்புக்குரிய தோழராகவும் பழகி வந்ததால் மன்னனின் இன்ப துன்பங் களில் பெரும் பங்கு தம்மைச் சாரும் என்பது அமைச்சர் கலிங்கராயரின் சொந்த அபிப்பிராயம். மன்னன்மீது அவ ருக்கு அப்படியொரு தனி அன்பு மலையில் உச்சிக்குப் போன மன்னனின் பார்வை அவரது மதிநுட்பத்திற்குரிய மந்திரி யாகிய கலிங்கராயர் மீது திரும்புகிறது. 

அவரது பார்வையின் உள்ளாந்தத்தைப் புரிந்துகொண் டவர் போல் அமைச்சர் மன்னனின் அருகிற் சென்று மரியா தையோடு அவனது ஏவலுக்காகக் காத்துநின்றார். மன்னன் அவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அமைச்சர் அவர்களே! கடந்த சில காலமாக என்னை ஏதோ ஒரு கவலை பீடித்து வருவதைத் தாங்கள் அவதானித்திருப்பீர்கள். தாங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆயினும் இதுவரை தாங்கள் அதுபற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காதது தங்களது பண்பையும் மதி நுட்பத்தையும் காட்டுகிறது. என் துன்பத்திற்கும் இன்னல் களுக்கும் காரணம் புரியாவிட்டாலும் என் கவலையைப் போக்கி என்னைப் பழையபடி கேலியும் சிரிப்பும் நிறைந்த மன்னனாக்கத் தாங்கள் அரும்பாடு படுவதையும் நான் உணர்கிறேன். அமைச்சரே! கடந்த சில மாதங்களாக என்னை வாட்டும் கவலை இன்னதெனத் தங்களுக்குப் புரிகிறதா?” என்று மன்னன் மனதில் உதித்ததை அமைச்சரிடம் கேட்டான். 

மன்னனுடைய பேச்சு மந்திரியின் மனதிற்குச் சிறிது கஷ்டமாகத்தான் இருந்தது. சோழநாட்டு அரண்மனையில் மன்னனுடன் சிறுவயதுமுதற் கொண்டே பேசிப் பழகி ஒன் றாக விளையாடித் திரிந்தவர்தான் அவர். வரராமதேவ சோழ மன்னர் தம் மகன், பட்டத்திற்குரிய இளவரசனாயி ருந்த குளக்கோட்டனை எவ்வளவு அன்பாகப் போற்றிப் பாதுகாத்து வளர்த்தார் என்பதை உடனிருந்து கண்டவர் அவர். “கலிங்கா! என் மகன் வளர்ந்தால் அவன் எல்லா விதத்திலும் என்னைவிடச் சிறந்த மன்னனாகத் திகழப்போகி றான். அவனுடைய பெயர் சோழவள நாட்டுக்கப்பாலுள்ள கடல்கடந்த நாடுகளிலெல்லாம் பரவப்போகிறது தெட் சண கைலாயத்தை இவன் தன் குடைக்குக்கீழ் அடக்கி அர சாள்வான். அவன் செய்யப் போகும் சாதனைகள் உலகம் உள்ளவரைக்கும் அவனை வாழ வைக்கப்போகின்றன. அவ னுக்கு இந்த விடயங்களில் உறுதுணையாக இருக்கவேண்டிய பொறுப்பு உன்னைச் சார்ந்ததாகும். நான் ஏன் இப்படிக் கூறுகிறேன் என்று நீ சிந்திக்கலாம்: என் கண்ணின் மணி போன்ற அருமைச் செல்வனுடன் ஒன்றாக விளையாடுபவன் நீ. அவன் வளர்ந்து அரசனாகியதும் அவனுக்கு மந்திரியா கும் வாய்ப்பு உன்னைவிட இந்தச் சோழ மண்டலத்தில் வேறு யாருக்குமே கிடைக்கமுடியாதது. கிடைக்கவும் கூடாது என்பது என் துணிவு. என் முடிபுகூட! அதனால் நான் இல்லாத காலத்தில் அவனுக்கு வேண்டியபோது வேண் டிய புத்திமதிகளைக் கூறி அவனை ஒரு சிறந்த மன்னனாக்கு வது உன் தலையாய கடமை,” என்று வரராம சோழ வேந் தர் கலிங்கராயன் சிறுவனாக இருந்தபோது கூறியது அவன் நினைவலைகளில் தட்டியது. அவர் ஒரு தீர்க்கதரிசி என்பது அவன் அபிப்பிராயம். அப்படியான ஓர் அன்புத்தந்தையை, கடல் கடந்து தெட்சண கைலாயம் வரை வந்து சுவாமி தரிசனம் செய்த ஒரு மகத்தான வீரனை, சோழநாட்டிற் செங்கோலோச்சிய மாபெரும் மன்னனை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் குளக்கோட்டனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது மந்திரிக்கு. 

அதனால் அவர் மன்னனைஏற இறங்கப் பார்த்துவிட்டு, கண்களில் நீர் மல்க, “பெரு மதிப்புக்குரிய மன்னவா! தங் கள்மேல் அளவற்ற அன்பும் பாசமும், ஒப்பற்ற மதிப்பும் வைத்திருந்த தங்கள் அருமைத் தந்தை, அண்மையில் இறை வனடி சேர்ந்துவிட்ட வரராமதேவ சோழ மகாராசாவினது பிரிவுத் துன்பந்தான் தங்களை வாட்டிக்கொண்டிருக்கிறது. இதைச்சொல்லித்தான் அறிந்து கொள்ளவேண்டுமா?’ என்று கூறியபோது மன்னன் அவர் தோளில் தட்டிக் கொடுத்தான். 

“உண்மைதான் அமைச்சரே! என் உயிருக்குயிரான அரு மைத் தந்தையைப் பறிகொடுத்துத் தவிக்கிறேன். அந்த மாபெரும் வீரன் என்னைப்பற்றி எத்தனையோ கனவுகள் கண்டு கொண்டிருந்தான். என் தந்தை மறைந்த துயரம் என்னை நாளாந்தம் அணுவணுவாகச் சிதைத்துக் கொண்டி ருக்கிறது. அந்த மகானுபவன் இந்தத் தெட்சண கைலாய நாதருக்கு ஓர் ஆலயம் எழுப்பவேண்டுமென ஆசைப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கும். அவர் இறப்பதற்குச் சில நாட்க ளுக்கு முன்னர் சூரியகுலத்து அரசர்களின் குருவாகிய வசிட்ட மாமுனிவரை அழைத்துவந்தார். அரசர் அவருடைய பாதங் களை வணங்கி அவரை ஓர் ஆசனத்தில் அமர்த்தி, எனது தாயாரையும் என்னையும் அழைப்பித்து அவரது பாதங்களை வணங்கும்படி கட்டளையிட்டார். 

“நான் அந்த மூதறிஞரின் பாதங்களை வணங்கியெ ழுந்த சமயம், அவர் எனது தந்தையை நோக்கி ‘அரசரே! கோணநாயகர் அருளால் உமக்குக் கிடைக்கப்பெற்ற புத்தி ரன் சாமுத்திரிகா நூல்களிற் சொல்லப்பட்ட முப்த்திரண்டு இலட்சணங்களும் அமையப் பெற்றவனாக இருப்பதனால், காலதாமதமின்றி அவனுக்கு முடிசூட்டி வைப்பாய்,’ என்று பணித்தார். அதனால் மிகுந்த சந்தோஷம் கொண்ட என் தந்தை குறித்த ஒரு சுப முகூர்த்தத்தில் வசிட்ட மாமுனி வரது திருக் கரத்தினாலேயே எனக்கு முடிசூட்டி வைத்தார். அந்த நவரத்தின கீரீடத்தைச் சுமந்த நாள் முதலாக என் மனதில் ஒரேயொரு இலட்சியந்தான் வேரூன்றியிருந்தது. 

“என் இலட்சியம் என் தந்தை இறந்த சில நாட்களில் மேலும் வலுப்பெற்றது. சில நாட்களுக்கு முன் சோழ மண் டலத்திலிருந்து சிவ ஸ்தலங்களுக்கு ஸ்தல யாத்திரை செய் யச் சென்ற பிராமணர் தெட்சண கைலாயத்திற்குச் சென்று கோணநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அங்கே படுத் துறங்கியபோது ஒரு பூதமானது அவ்வேதியனைத் தட்டி யெழுப்பியது. அது அவரிடம் ‘நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?’ என்று கேட்க, தாம் சோழ மண்டலத்திலிருந்து கோண நாயகரைத் தரிசிக்கும் பொருட்டு வந்தாரென அவர் கூற பூதமானது அவரை நோக்கிச் சோழ மண்டலத்தை அரசு செய்த வரராமதேவர் இவ்விடம் வந்து சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு போகும்போது, இம்மலையின் கீழுள்ள ஒரு கூவலிலே என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்படி ஏகப்பட்ட திரவியங்களை விட்டுச் சென்றுள்ளார். நீ சோழமண்டலம் திரும்பியதும் அவரது பிள்ளையிடம் இதைத் தெரிவிப்பாய் என்று கூறிப் போயிற்று. 

“அதன்படி அப்பிராமணன் வந்து எனக்கு நிகழ்ந்தன வற்றைக் கூற, நான் தங்களிடம் தெட்சண கைலாயத்திற் குப்போக வேண்டிய ஆயத்தங்களைச் செய்யும்படி பணித் தேன். தாங்களும் சிற்ப நூல் வல்லவர்களாகிய உலக்குரு ஆசாரி, சித்திரகுரு ஆசாரி, சதுர் வேதகுரு ஆசாரி, அட்சரகுரு ஆசாரி, வாமதேவகுருஆசாரி, எனும் ஐந்து ஆசாரிகளையும் அழைத்துக்கொண்டு, திரவியங்களையும் ஆயத்தப்படுத்தி, சேனை,தனங்களையும் எம்மையும் மரக்கலத்தில் ஏற்ற, நாமும் கோணநாயகர் அருளால் நற்சுகமே வந்து சேர்ந்தோம். 

“ஆயினும் இவ்வாலயத் திருப்பணி எவ்வித இடையூறு மின்றி என்காலத்திலேயே செவ்வனே நடைபெறவேண்டுமே என்றொரு தணியாத தாகம் என் உள்ளத்திலே உற்பத்தியாகி விட்டது. என் தந்தையார் மறைந்த கவலையைவிட அவர் எனக்கு விட்டுப் போயிருக்கும் இந்தத் திருப்பணியை நிறை வேற்றி முடிக்கவேண்டுமே என்பதுதான் எனக்கு அதிக கவலை யாக உள்ளது. பிறந்தவர்கள் எல்லோரும் என்றோ ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும். அதுதான் உலக நியதி யும் கூட. நானும் என்றோ ஒருநாள் இறக்கத்தான் போகி றேன். ஆனால் அதற்குமுன் என் தந்தை ஆரம்பித்துவைத்த இந்த ஆலயத் திருப்பணியை முடித்து அவரது ஆத்ம சாந் திக்காக உழைக்க வேண்டுமென்பதே என்னைத் தற்போது ஆட்கொண்டிருக்கும் கவலை” என்றான் மன்னன். 

ஆனால் அவர் வீணாகக் கவலைப்படுகிறார் என்பதுதான் மந்திரியின் எண்ணம். தன்னுடைய மகன் தெட்சண கைலா யம் வரை சென்று புகழ் பரப்பப் போகிறான் என்று வரராம தேவ சோழர் அன்று கூறியது பொய்க்கப் போவதில்லை என் பது மந்திரி அவர்களின் அசையாத நம்பிக்கை. அதனால் அவர் எதுவுமே பேசாமல் மன்னனை மகிழ்ச்சியுடன் பார்த்து நின்றபோது மன்னனே தொடர்ந்து பேசினான் – 

”அமைச்சரே! இந்தக் கோணநாயகப் பெருமானின் பெருமை பற்றிப் பலரும் பலவித கதைகள் கூறுகிறார்கள். தென்கைலை அரசன் இராவணன் தன் தாயாராகிய கைககி வழிபடுவதற்காக உத்தர கைலாயத்திற்குச் சென்று சிவபெரு மானை வழிபட்டு, ஒரு சிவலிங்கம் பெற்றதாகவும் ஆனால் அதை அவன் வைத்திருந்தால், பின்னர் அவனை வெல்லமுடியாது என்கிற உண்மையையுணர்ந்த தேவர்கள் விஷ்ணுமூர்த்தியிடம் முறையிட்டனர். விஷ்ணுமூர்த்தி வருண பகவானை அழைத்துத் தசக்கிரீவனுக்கு ஐலவாதை உண்டா கச் செய்யும்படி கட்டளையிட்டு, விநாயகரை வணங்கி, அவ் வேளையில் அந்த இலிங்கத்தைப் பெற்றுப் பூமியில் வைத்து விடும்படியும் வேண்டிக் கொண்டார். தசக்கிரீவன் சிவபெரு மானிடமிருந்து இலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு வரும் போது அவனுக்கு ஜலவாதை உண்டாகவே எதிரே பிராமணச் சிறுவனின் வடிவத்தில் வந்த விநாயகரிடம் கொடுத் துச்சென்றான். ஆனால் விநாயகரது நிபந்தனையின்படி அவர் மூன்றுதரம் தசக்கிரீவனை அழைத்தும் அவன் வராது போகவே அதைப் பூமியில் வைத்து மறைந்தார். 

“இராவணன் திரும்பிவந்து பார்த்தபோது, பிராமணச் சிறுவனைக் காணாது போகவே, அவன் சிறிது தூரஞ் சென்று பார்க்க. அங்கே ஒரு பெரிய ஆலயமும் அதனுள்ளே தான் கொண்டுவந்த இலிங்கமும் இருப்பதைக் கண்டு ஆச்சரிய மடைந்தான். அவன் திரும்பவும் ஓர் இலிங்கம் பெற்று வரு வதற்காக உத்தர கைலாயத்தை நோக்கிச்செல்லும்போது, விஷ்ணுமூர்த்தி வழியில் ஒரு வயோதிப வேடத்தில் வந்து அவன்யார் என்றும் எங்கே செல்கிறான் என்றும் கேட்டார். அதற்கு அவன்தான் இலங்காபுரியின் அரசன் என்றும் சிவலிங் கம் பெற்று வருவதற்காக உத்தர கைலாயத்துக்கு செல்வதாக வும் கூற அவ்வயோதிபர் இலங்காபுரியில் இருக்கும் தெட்சண கைலாயத்தில் சுலபமாக இலிங்கம் பெறலாம் என்று உபதே சித்தார். தசக்கிரீவனும் அவர்சொற்படி தெட்சண கைலா யத்திற்குச் சென்று கோணலிங்கப் பெருமானை நோக்கித் தவஞ்செய்தான். ஆனால் அவனுடைய வழிபாட்டிற்கு எது வித பலனும் கிடைக்காது போகவே அவன் கோபங்கொண்டு மலையடிவாரத்தில் இறங்கி மலையை அசைக்க முயன்றான். மலை அசையாது போகவே, தன்வாளால் அதில் ஒரு துண்டை வெட்டிப் பிளந்தெடுக்க முற்பட்டபோது. மலை அசைய, உமா தேவியாரும், தேவர்களும் பயந்து நடுங்கினர். உடனே சிவன் அவனை மலையுடன் வைத்துத் தன் கட்டை விரலால் நசித்தார். அதன்பின், நாரதரின் புத்திமதியின் பேரில் அவன் தன் இசையினால் அத்தண்டனையிலிருந்து விடுபட்டதாக ஒரு வரலாறு உண்டு. 

”ஆதிஷேடனுக்கும் வாயுபகவானுக்கும் இடையில் யார் பலசாலி என்கிற விவாதம் ஏற்பட்டபோது வாயு பகவான் தன் திறமையைக் காட்டப் பிளந்த மூன்று சிக ரங்களில் ஒன்றுதான் இந்தத் தெட்சண கைலாயம் என்பர். 

“விஷ்ணுவின் அவதாரமான இராமர் இராமாயணயுத் தத்தின்போது, இலங்காபுரிக்கு வந்து போர் செய்து தசக் கிரீவனைக் கொன்று சீதா பிராட்டியை மீட்டு விபீடணனை யும் அரசனாக்கி, கோண நாயகரையும் பிடியன்னமென்னடை யம்மையாரையும் வழிபட்டுச் சென்றதாகவும் கூறுவர். 

“இவ்வளவு பெருமையும் புனிதமும் புக்ழும் நிறைந்த இந்தக் கோணநாயகப் பெருமானுக்கு ஆலயம் எழுப்புவதற் கும் எமக்கு அவன் அருள் தேவையல்லவா? அதனாற்றான் இந்தப் பரந்த மலையில் நின்று இந்தப் புனித கைங்கரியத்தை நிறைவேற்ற, அவன் அருளை வேண்டி மனமுருகி நின்றேன். என் எண்ணம் நிறைவேறுமா அமைச்சரே?’” என்று அர சன் கேட்க, ‘கண்டிப்பாக இந்தக் கோணநாயகர் அருள் பாலிக்கத்தான் போகிறார் அரசே!” என்று அமைச்சர் அவனை வாழ்த்தினார். அமைச்சர் மன்னனுக்கு அளித்த ஊக் கமும் நம்பிக்கையும் திரும்பவும் மன்னனின் அதரங்களில் மறைந்திருந்த புன்னகையை மீட்டுக் கொடுத்தன. 

மன்னன் கம்பீர நடையுடன் மலையடிவாரத்திலிருந்து இறங்கித் தேரை நோக்கி நடந்கான். தேரில் ஏறி அமர்ந்து கொண்டதும் முகில்வண்ணன் குதிரையைத் தட்டி விட அந் தப் பரந்த தனிவழியெங்கும் குதிரையின் குளம்புச் சத்தமும் தேரோடும் ஓசையுமே பின் தங்கி நின்றன. 

மன்னன் அரண்மனையை அடைந்ததும் தன் அறைக்குட் சென்று சயனத்திற் சிறிதுநேரஞ் சாய்ந்தான். அவனது உள் ளத்தில் ஒரே உவகை கோணநாயகருக்கு கோவில் எடுக்க வேண்டும் என்கிற ஒரு சிந்தனைதான் அவன் உள்ளமெங்கும் நிறைந்திருந்தது. கோயிலின் திருவுருவப் படமொன்று அவன் உள்ளத்தில் பதிந்தது. சமுத்திரக் கரையில் இரண்டு கோயில்களும் மலை உச்சியில் ஒரு பெரிய ஆலயமும் தென் னாட்டுச் சிற்பமுறையைக் கொண்டு அமைக்க அவன் திட்ட மிட்டான். 

அமைச்சருக்கும் அன்று பெரிய நிம்மதி கடந்த பல நாட்களாக மன்னன் முகத்தில் மறைந்திருந்த காந்த சக்தி யும் மகிழ்ச்சியும் புன்னகையும் திரும்பப் பொலிந்துவிட்ட உவகையின் உந்தலினால் முகில்வண்ணனிடம் மன்னனது திட் டத்தை வெளியிட்டார்; முகில்வண்ணனுக்கு ஒரே மகிழ்ச்சி, அவனுக்கும் அந்த தெட்சண கைலாய மலைப்பகுதி மிகவும் பிடித்துப் போயிருந்தது. மன்னர் கோயில் திருப்பணியை ஆரம்பித்தால் தானும் நாளாந்தம் அந்த இயற்கைக் காட் சிகளைக் கண்டு இரசிக்க வாய்ப்பும் அவகாசமும் கிடைக்கும் என்ற மகிழ்ச்சிதான் அது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவன் ஓடோடிச் சென்று தன் மனைவி முல்லையிடம் கூறி னான். மனைவி முல்& மேல் அவனுக்கு அளவற்ற அன்பு. என்ன செய்தாலும் எதைக் கேள்வியுற்றாலும் அதை முதலில் மனைவிக்குக் கூறாவிட்டால் அவனுக்கு மன நிம்மதியே கிடைப்பதில்லை. 

முகில்வண்ணன் வீட்டுக்கு ஓடிச்சென்று மனைவியைத் தேடினான் ஆனால் அவள் வீட்டிலிருக்கவில்லை. அவள் எங்கே போயிருக்கலாம்? அவன் வீட்டைச் சுற்றித் தேடிப்பார்த் தான் அப்போதுதான் முல்லை எங்கோவிருந்து உள்ளே வந்து கொண்டிருந்தாள். முகில்வண்ணன் அன்று நேரத் தோடு வீட்டுக்கு வந்தது. அவளுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. 

“அப்போது ஜோதிடர் கூறியது சரியாகப் போச்சு” என்றாள் முல்லை. “என்ன முல்லை எங்கோ வெளியே இருந்து வருகிறாய். மன்னர் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார் என்றால் ஏதோ ஜோதிடர் சொன்னது சரிதான் என்று புதிர் போடு கிறாய் கொஞ்சம் விளக்கமாகவும் புரியும்படியுமாகத்தான் சொல்லித் தொலையேன்! அதற்கு முன் நீ இந்த வேளையில் எங்கே போயிருந்தாய் என்பதைக் கூறு!” என்று அதிகாரத்துடன் கேட்டான் முகில் வண்ணன். 

“ஏன் நான் வெளியே தனியாப் போயிட்டேன் என்று பயந்திட்டியாக்கும்! உனக்குள்ள கவலையில் எனக்குப் பங்கி கிருக்காதா என்ன? புருஷன் பெண்டாட்டியெண்டா ஒருவ ருக்கு வாற கவலைபற்றி மற்றவரும் அறிந்து பங்குகொள்வது தானே இல்வாழ்க்கை. ஆமாம்! எங்க மகாராசா தன் தந் தையின் பிரிவால் மிகவும் மனம் நொந்துபோயிருக்கிறார் என்றும் அரண்மனையே களையிழந்து காணப்படுவதாகவும் நீ சொன்னாயல்லவா? எனக்கு அதைக் கேட்ட நாள் தொடக் கம் ஒரே கவலை. மகாராசாவுக்கு ஒண்டெண்டால் அது உன்னைப்பாதிக்கும். அப்புறம் உனக்கே தாச்சுமெண்டால் என் னையும் பாதிக்கும். பிறகு மகிழ்ச்சி ஏது? நிம்மதியேது? எனக்கு உன்னைப் பாரிக்கிறபோதெல்லாம் மகாராசாட நெனைப்புத் தான் வரும். பாவம்! தாயையும் பறிகொடுத்து அதற்குள் தந்தையையும் பறி கொடுப்பதெண்டால்..? அவருக்கு அமைச்சரையும் உன்னையுந் தவிர ஓர் ஆறுதல் வார்த்தை சொல்ல, வேறு யார் உள்ளார்? காலாகாலத்தில் ஒரு கலி யாணத்தை செஞ்சு வைத்திருந்தாலும் குழந்தை குட்டி யென்று இப்போது வீடே கலகலப்பாயிருக்கும்”

“அங்கதான் தவறிருக்கு முல்லை. நானுந்தான் உன்னை ஆசையோடே கலியாணம் செஞ்சு வருடம் ஐந்து முடிஞ்சு போச்சு, இன்னும் எங்களுக்கே ஒரு பூச்சி புழுவைக் காண வில்லை நீ என்னடா எண்டால் இடைமறித்துக் குறும்பு செய்தான் முகில்வண்ணன். 

அவன் பேச்சு முல்லையின் உள்ளத்தைத் தொட்டது. ஏன். சுட்டதுங்கூட. அவனுக்கும் அது பெருங்குறைதான். ஆயினும் அதை வெளிக்காட்டாமல், “சும்மா போய்யா… எனக்கு நீயே இன்னும் கொழந்தையாயிருக்கியே இன்னும் ஒண்டைப் பெத்திட்டு நான் எப்படிச் சமாளிக்கிறது? இப்போதைக்கு எங்கடை சமாச்சாரத்தை மறந்திட்டு, மகாரா சாவோட காரியத்தைக் கவனிப்பம். பக்கத்துக் கிராமத்தில் யாரோ ஒரு நல்ல ஜோதிடர் வந்திருப்பதாக நீ நேற்றுச் சொன்னாயல்லவா. நான் என் தோழி கமலியையும் அழைச் சிட்டு அவரைப் பார்க்கத்தான் போயிருந்தன். 

“மகாராசாட நட்சத்திரம், இராசி, பிறந்த நாள் எல் லாம் சொல்லி அவரது திருமணத்தைப் பற்றிக் கேட்டன். கூடிய விரைவில் மகாராசாவுக்கும் ஓர் அரசிக்கும் (திரு மணம் நடந்தேறப் போகிறதென்று அவர் சொன்னார். எனக்கு ஒரே மகிழ்ச்சியாகி விட்டது. அந்த மகிழ்ச்சியில் கமலியைப்பற்றியே மறந்துவிட்டேன். அப்புறம்தான அவ ளோட சங்கதியைக் கேட்டம். மகாராசாவோட முடிந்த கையோட கமலியின் திருமணமும் நடைபெறுமாம். அதைக் கேட்டுப் போட்டு வந்த சமயந்தான் நீ கோயில் திருப்பணி யைப்பற்றிய செய்தி கொண்டுவந்திருக்கிறாய் அதுவும் நல்ல சகுனந்தான்” என்றாள் முல்லை. 

“உன்னை மனைவியாக அடைந்ததில் நான் மிகவும் பெரு மைப்படுகிறேன். ஆமா…ஏதோ நான் கொழந்தை எண்டு சொன்னாயல்லவா நீயும் எனக்குக் கொழந்தைதான்” என்று கூறிவிட்டி அவள் கையைப் பற்றினான் முகில்வண்ணன். 

அத்தியாயம்-2

சோழ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆசாரிகளும் சிற்பிகளும் தச்சரும் கோயில் அமைக்கும் திருப்பணி யில் ஈடுபட்டிருந்தனர் மலையடிவாரம் ஜனசஞ்சாரமாகக் காணப்பட்டது. உளிச் சத்தமும் கல்லுடைக்கும் சத்தமும் மரமறுக்கும் சத்தமுமாக ஒரே இரைச்சலாக இருந்தது. மலை யுச்சியின் கிழக்குப்புற எல்லையில் முல்லை மண் சுமந்து கொட் டிக் கொண்டிருந்தாள். அவள் நெற்றியெல்லாம் வியர்வை முத்துக்கள் அரும்பி நின்றன. முன்றானைச் சேலையால் வியர் வைத் துளிகளை ஒற்றிவிட்டு,அவள் மண் அள்ளிப் போடு வதில் மும்முரமாக ஈடுபட்டாள். கோணேசர் ஆலயத் திருப் பணிக்குத் தன்னால் இயன்றளவு சரீர உதவி செய்ய அவள் அரசரிடம் அநுமதி கோரி அந்தத் தொண்டைச் செவ்வனே செய்து கொண்டிருந்தாள். அரண்மனையில் ஓய்வு கிடைக் கும்போது, முகில் வண்ணனும் அவளுடன் சேர்ந்து கொள் வான். இருவரும் தம் உள்ளத்தையும் உடலையும் இறைவ னுக்கு அர்பணித்துத் தொண்டு செய்வார்கள். 

அன்று ஆலயத் திருப்பணிகளை மேற்பார்வை செய்வ தற்காக அரசர் வரும் நேரமாகிக் கொண்டிருந்தது. வாரத்தில் இரு முறை மன்னன் கோயில் திருப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கண்காணிப்பதற்குத் தன் தேரில் வந்திறங்குவான். அவனுடன் மந்திரி கலிங்கராயரும் வரு வார். முகில் வண்ணன் தேரோட்டி வருவான். தூரத்திற் கேட்டது. அவ் குதிரைக் குளம்புகளின் காலடியோசை வோசை மலையடிவாரத்தில் எதிரொலித்தபோது மூல்லையின் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றியது. இன்னும் சில நிமிட நேரத்தில் தன் கணவன் முகில்வண்ணனும் வந்துவிடுவான். அதன்பின் இருவருமாகச் சேர்ந்து ஆலயத் திருப்பணியில் ஈடுடபலாம் என்ற உவகையின் சாயல்தான் அந்த ஒளி. 

தேர், கோயிலை அண்மித்து விட்டது முல்லையின் உள் ளத்தில் ஒரே துடிப்பு. ஓடிச் சென்று தன் கணவனை வர வேற்க அவள் கால்கள் துடித்தன. ஆயினும் மன்னன் கூட வருகிறான் என்கிற அச்சமும் வெட்கமும் அவளுக்கு ஒரு தயக்கத்தைக் கொடுத்தன. அவளுடைய விழிகள் மன்னன் வந்துகொண்டிருந்த திசையை நோக்கின. மன்னர், அமைச் சர் பின் தொடர மலையுச்சியை நோக்கி நடந்து கொண்டி ருந்தார். அதைக்கவனித்த முல்லை தன் வேலையில் ஈடுபடத் தொடங்கினாள்.மன்னரும் அமைச்சரும் மலையின் உச்சிக்குச் சென்றுவிட்டடனர். இம்முறை முல்லையும் மண் சுமந்து கொண்டு மலையுச்சிவரை ஏறினாள். அப்போது மன்னருடைய பார்வை சுற்றுப் புறமெங்கும் சுழன்றது. அவர் அதரங்களிலே ஒரு நீண்ட புன்னகை மலர்ந்தது. கோயில் திருப்பணி வேலை கள் துரிதமாக முன்னேறிக் கொண்டிருந்ததே, அப்புன்ன கைக்குக்காரணம். 

கண்கள் நிறைந்த பூரிப்பில் பெருமிதத்துடன் நிமிர்ந்து நின்ற மன்னனின் பார்வை ஓர் ஓரத்தில் கூனிக் குறுகிய மண் கூடையுடன் ஒதுங்கிப் போய் நின்ற முல்லையின் மேல் விழுகின்றது. அவளை அழைத்து வரும்படி அவர் அமைச்சரி டம் கூற. அமைச்சர் அவளை அழைத்தார். அவள் மிருந்த மரியாதையோடு அச்சமுற்றவளாய் மன்னன் முன் காட்சியளிக்கிறாள். அவளுடைய ஒரு கரத்தில் கூடையிருக்க, மறு கரம் சேலைத் தலைப்பை இழுத்து மேலுடம்பை நன்றாகப் போர்த்துக் கொள்கிறது. 

“நீ மிகவும் களைத்துவிட்டாய் போலிருக்கிறது.பாவம்! கோணநாயகர் மீது உனக்கிருக்கும் அன்பையும் அபிமானத் தையும் பக்தி சிரத்தையையும் நான் மெச்சுகிறேன். இந்தக் கோயில் திருப்பணி திருவருளால் முடிவுற்றபின் உன் பெய ரால் இந்த ஆலயத்தைச் சுற்றி முல்லைக்கொடி படரவிடப் போகிறேன். அதை முகில்வண்ணனைக் கொண்டே செய்விக் கப் போகிறேன். உன் குணமும் நீ இந்த ஆலயத்திற்குச் செய் துள்ள மகத்தான சரீரத் திருப்பணியும் அதன் மணத்தில் என்றும், இந்தச் சுற்றுப்புறமெங்கும் திகழட்டும்” என்று குறும்புடன் கூறிய மன்னரை நன்றிப் பெருக்கோடு பார்த் தாள் முல்லை. அப்போது முகில்வண்ணன் அடிமேல் அடி வைத்து மெதுவாக அவ்விடம் வந்துசேர முல்லை நாணத் தால் முகம் சிவக்க அவ்விடத்தை விட்டு மெதுவாக நழுவிச் செல்ல முயன்றாள். 

அவள் அவ்விடத்தை விட்டுத் தப்பிச் செல்ல எத்தனிப் பதை அவதானித்த மன்னர் முகிலா! உன் மனைவியின் பெயர் இந்த ஆலயத்தில் என்றும் நிலைத்திருக்கும்படி இந்தச் சுற் றுப்புறமெங்கும் முல்லைக்கொடி நாட்டப்போகிறேன். அதன் நறுமணம் கோணேசரை என்றென்றும் ஆனந்த சாகரத்தில் ஆழ்த்திக் கொண்டேயிருக்கும். அந்தக் கைங்கரியத்தைச் செய்யும் பொறுப்பை உன்னிடமே ஒப்புவிக்கிறேன்” என்று முகில்வண்ணனைப் பார்த்துக் கூறிவிட்டு, திரும்பவும் கற்பனை யுலகிற் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டார். 

ஆகா! அற்புதமான திருப்பணி. இந்தப் பிரமாண்ட மான மலையுச்சியில் கோணநாயகருக்கு ஆலயம் எழுப்புவ தற்காக நான் ஏழேழு பிறவி யெடுக்கவும் சித்தமாயிருக்கிறேன். இந்த மலையுச்சியில் எழும்பிக் கொண்டிருக்கும் இந்த ஆலயம் வருங்காலத்தில் மக்களின் மனதைக் கவரப்போகி றது என்பதற்கு யாதும் ஐயமில்லை. மலையுச்சியில் இந்த ஆலயமும் அடிவாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோ ருக்கு இரண்டு ஆலயங்களும் கட்டி, முடித்தபின் நான் இன் னும் செய்ய வேண்டிய திருப்பணிகள் நிறையவுள்ளன. ஆல யத்திற் குடிகொள்ளும் எம்பிரானுக்கு எந்தவிதக் குறையு மிருக்கக்கூடாது; இருக்கவே கூடாது. என் கடைசி மூச்சு இருக்கும் வரை கோணநாயகருக்கு வேண்டிய அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்து விடவேண்டும். உலகம் உள்ள வரையும் இந்த ஆலயமும் அதன் புகழும் நிலைக்க வேண்டும். என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்ட மன்னன் அமைச்சரைப் பார்த்து “அமைச்சரே!” என்று விளித்தான். 

அமைச்சர் மன்னர் கூறப்போவதைச் செவிசாயக்க மரி யாதையோடு நிமிர்ந்து நின்றார்: “என் வாழ்க்கையின் பயனை நான் இப்போது தான் அடைந்து கொண்டிருக்கிறேன் போலத் தோற்றுகிறது. இந்த அற்புதமான காட்சியைக் கண்டு கழிக்க என் தந்தைக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது. கோயில் திருப் பணி முடிந்து கும்பாபிஷேக விழா முடியும் வரை நான் உயி ரோடு இருந்துவிடவேண்டுமே என்பதுதான் என் தற்போ தைய கவலை” என்று மன்னன் கூறியபோது அவர் குரல் கம்மியதை அமைச்சரால் உணர முடிந்தது. 

அவருடைய கவலையைப் போக்க எண்ணிய அமைச்சர் ”அரசே! தங்களுக்கு ஏன் வீண் கவலை…? தாங்கள் செய்து கொண்டிருப்பது தன்னலமற்ற புனிதமான ஆலயத் திருப் பணி. அதை இறைவன் நிச்சயமாக நிறைவேற்றி வைப் பார். தங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம்” என்று கூறியபோது அவ்வழியே வந்து கொண்டிருத்த முல்லையின் காற்சிலம்பு ‘கணீர் கணீர்’ என்ற ஓசை எழுப்பியது 

மன்னருக்கும் அமைச்சருக்கு மிடையே நடைபெற்ற சம்பாஷணையைச் செவிமடுத்துக் கொண்டிருந்த முகில்வண் ணன் அரசரைப் பார்த்து “அரசே ! தங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன். தங்கள் உத்தரவு வேண்டும்” என்று வாய் புதைத்து நின்றான். 

அவன் பேசிய தோரணையைக் கண்ட மன்னன் வாய் விட்டே சிரித்தான் “என்ன முகிலா.. பீடிகை பெரிதாக இருக் கிறது. முல்லையோடு சேர்ந்து நானும் மண் சுமக்கப் போகி றேன் என்று கேட்கப்போகிறாய் அவ்வளவுதானே.. !” என்று கூறிவிட்டுச் சிரிக்க முகில்வண்ணன் ‘”தங்கள் யூகம் பிழைத்துவிட்டது மன்னவா… முல்லைதான் தங்களிடம் ஏதோ பேசவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தது.அது தான் அவளைக் கூப்பிடட்டுமா என்று கேட்க வந்தேன்” என்றான். 

“இப்போதுதான் உன் மனைவி முல்லையோடு பேசிக் கொண்டிருந்தேன். அவள் அப்படி எதுவும் என்னிடம் கூற வில்லையே. நீ பக்கத்தில் இல்லாத சமயத்திற் கேட்கப் பயம் போலும்… பரவாயில்லை. அதோ அவள் போய்க் கொண்டி ருக்கிறாள். அவளைக் கூப்பிடு. அவள் என்ன் சொல்லப் போகி றாள் என்று கேட்போம். ஒரு வேளை உன்னைப்பற்றித்தான் முறையிடப்போகிறாளோ தெரியவில்லை” என்று சொல்லி விட்டு அரசன் சிரித்தான். முகில்வண்ணன் அரசனது ஆணைப்படி ஓடிச் 

சென்று முல்லையை அழைத்துவிட்டு, அவள் காதோடு காதாக “அரசருடைய திருமணம் பற்றி அவருக்கு ஒரு வார்த்தை நினைவூட்டிவை” என்று கூற அவள் நடுங்கி நான் மாட்டேன் ” என மறுக்க, முகில் வண் ணன் அவளை வற்புறுத்த, இப்படியே தகராறு செய்தபடி இருவரும் அரசன் அருகில் வந்து நின்றனர். 

“என்ன முல்லை, நீ என்னிடம் ஏதோ பேச விரும்பு வதாக முகிலன் சொன்னான்; எதுவாக இருந்தாலும் கேள். உனக்குச் செய்துதரச் சித்தமாயிருக்கிறேன்” என்றார். முல்லை தன் கணவனைக் கோபத்தோடு திரும்பிப் பார்க்க அவன் “பயமில்லாமல் அரசரிடம் உன் விருப்பத்தைக் கூறு” என்று அவளைப் பார்க்காமலே சொன்னான். 

“ஆமாம் முல்லை உனக்கு எந்தவித பயமும் தேவை யில்லை. இது தேவஸ்தானம். இங்கு அரசன் ஆண்டி என் கிற வேற்றுமைக்கே இடமில்லை. நீ கேட்கவேண்டியது எது வாக இருந்தாலுங் கேள். என்னால் முடிந்தவரை நிறை வேற்றி வைக்கிறேன்” என்று மன்னன் உறுதி கூற, மந் திரி கணவனையும் மனைவியையும் சந்தேகத்தோடு பார்த் கார். அரசருக்கு என்று தனியாக ஒரு பெரிய மாளிகை இருக்கும்போது இப்படிக் கோயில் ஸ்தலத்தில் வந்து அர சரை நச்சரிப்பது அமைச்சருக்கு அவ்வளவு பிடிக்கவில்லை. 

அமைச்சரின் பார்வையைப் புரிந்துகொண்ட முல்லை மேலுந் தாமதிக்காமல் ‘மன்னாதி மன்னரே…வந்து.. வந்து.. எங்கள் ஆசை. வந்து அதுதான் இந்தக் கோயில் திருப்பணி இன்னும் சில நாட்களில் முடிவடைந்து விடும். அதன் பின் பின்னர், தாங்கள்… ஆமாம். வந்து தாங்கள்..” என்று கூறவந்ததைக் கூறமுடியாமல் திணறினாள் முல்லை. 

“அதாவது, மகராசா திருமணஞ் செய்து அரசகுமாரி யுடன் இந்தக் கோணநாயகர் ஆலயத்தை வலம்வரவேண் டும் என்பது முல்லையின் ஆசை” என்று மிகுதியை முகில் வண்ணன் கூறி முடித்தபோது “சபாஷ் முகிலா…அதைத் தான் நானும் பலதடவை மன்னருக்குக் கூறவேண்டும் என்று நினைத்தேன். ஆயினும். அந்தத் துணிவு ஏனோ எனக்கு வர வில்லை. இப்போது இந்தத் தெட்சிணகைலையில் வாழும் எம் பெருமானே உன்வாயிலாகவும் முல்லையின் வாயிலாகவும் அர சருக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லி வைத்துவிட்டார். இனி அரசரை இந்த விடயத்தில் நான் தூண்டுவதில் எந்த வித ஆபத்தும் இருக்காது என்பது என் அபிப்பிராயம்” என்று கூறினார். 

அவர்கள் பேச்சைக்கேட்ட அரசர் வாய்விட்டுப் பலமா கச் சிரித்தார். “நீங்கள் மூவரும் சேர்ந்து திட்டமிட்டு மடக்கு வது போல, என்னை மடக்கிவிட்டீர்கள். முல்லைக்கு நான் வாக்குக் கொடுத்தது மெய். ஆனால், எனக்கு ஏற்ற ஒரு மங்கை நல்லாள் வந்து வாய்க்கவேண்டுமே…? இந்தப் புனித மான ஆலயத் திருப்பணி முடியும் வரை அவள் எனக்காகக் காத்திருக்கச் சம்மதிக்க வேண்டும் இந்தப் புனித கைங்க ரியத்தில் அவள் என்னுடன் தோளோடு தோள் நின்று உழைக்கவேண்டும். நீயும் முகிலனும் உழைப்பதுபோல்!” என்று அரசர் குறிப்பிட்டபோது முல்லை வெட்கத்துடன் தலைகுனிந்துகொண்டாள். ‘முகிலனுக்கு ஒரு முல்லை கிடைத் துவிட்டாள். ஆமாம்! எனக்குத் தகுந்த ஒரு பெண்ணை நீங் கள் எங்கே தேடப்போகிறீர்கள்?” என்று தொடர்ந்து மன் ளனே பேசியபோது, முகிலனும் முல்லையும் விடை சொல் லத்தெரியாமல் மௌனமாய் நின்றனர். 

ஆனால், அமைச்சர் ஏதோ சிந்தித்தபடி மன்னனைக் கடைக்கண்ணாற் பார்த்தார். ‘தாங்கள் விரும்புவதுபோல் சகல நற்குணங்களும் நிறைந்தவோர் இல்லத்தரசியை எல் லாம் வல்ல கோண நாயகப் பெருமான் வெகு விரைவில் தந்தருளுவார். மன்னவா!” என்று சற்றுத் துணிவுவரப் பெற்றவளாய் முல்லை கூறிவிட்டு அப்பாற் செல்ல, முகில னும் அவளைப் பின் தொடர்ந்தான். 

அவர்கள் செல்வதையே பார்த்து நின்ற மன்னன் தனக் குள்ளாகவே சிரித்துவிட்டு மிகவும் அந்நியோன்யமான தம் பதிகள் என்று அமைச்சரைப் பார்த்துக் கூறினார். 

“ஆமாம்! இருவரும் இணைந்த ஜோடிகள். அவர்கள் வேண்டுகோளை மன்னர் சிறிது ஊன்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் அவர்கள் சொன்னதுபோல் கோணநாயகர் அரு ளால் இன்னும் சில நாட்களில் இந்த ஆலயத் திருப்பணி முடிவடைந்து விடும். அதன் பின் தங்கள் திருமணம் நடந்தே ஆகவேண்டும். தங்களுக்கு அந்த விடயத்திலும் சிரமம் வைக்காமல் எல்லாவகையிலும் தங்களுக்கு இணைந்த ஜோடியான ஓர் அரசியையும் நான் ஏற்கனவே என் மனதில் வரித்து வைத்துள்ளேன். மன்னரது உத்தரவு இருந்தால், அதுபற்றி மேற்கொண்டு சிந்திக்கலாம்!” என்று அமைச்சர் கூற, மன்னன் வியப்பு மேலிடக் கேள்விக் குறியோடு அவ ரைப் பார்த்தார். 

“அமைச்சரே! தாங்கள் பெரிய புதிராகப் போடுகிறீர் கள். உங்கள் பேச்சை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இந்த ஈழத் திருநாட்டில் எனக்கு ஏற்ற மங்கை நல்லாள் அப்படி யாராக இருக்கமுடியும்…?” என்று அமைச்சரைப் பார்த்துக் கேட்டார் மன்னன். 

அமைச்சர் சிரித்தார். இந்த ஆலயத்திருப்பணி ஆரம் பித்தபின் மன்னருக்கு எதுவுமே ஞாபகத்தில் இருப்பதில்லை. உன்னாச்சிகிரி என்னும் குறிஞ்சி நாட்டை ஆண்ட மன்ன கயவாகுவின் அருமைச் செல்வி அரசி ஆடக சவுந்தரியைத் தான் குறிப்பிட்டேன் மன்னவா. அவருக்குத் தற்போது நாங்கள் திறைசெலுத்த வேண்டியவர்களாயுள்ளோம். ஆனால், அரசியாருக்கும் மன்னருக்கும் திருமண ஒப்பந்தம் நிறைவேறிவிட்டால், தட்சிணகைலையும் உன்னாச்சிகிரியும் இணைந்து விடும். அதன்பின் ஈழநாட்டின் பெருமையை எங் ஙனம் எடுத்தியம்ப முடியும்?” என்று அமைச்சர் கலிங்கரா யர் ஆசையை தன்மனதில் நெடுநாளாக வளர்ந்திருந்த வாய்விட்டு கூறியபோது அந்த மலையடிவாரம் அதிரும்படி யாக மன்னன் வாய்விட்டுச் சிரித்தான். 

“அமைச்சரே!, மிக்க புத்தியுடையவர் என நான் இதுவரை கருதி வந்த உங்கள் சிந்தனை இந்த விடயத்தில் மட்டும் சிறிது பிசகிவிட்டது. அதற்குக் காரணம் தாங்கள் என்மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பாகவும் இருக்க லாம். நான் வைதூலிய மதத்தைச் சேர்ந்தவன் என்பதும் சிறந்த சிவபக்தன் என்பதும் தாங்கள் அறிந்தவையே. அரசி ஆடகசவுந்தரியும் அறிந்திருப்பார்கள். முருகபக்தரான அவருக்குச் சிவபக்தர்களைப்பற்றி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை எனக் கேள்வி. நாங்கள் மிகுந்த சுயநலக்காரர் என் கிற தப்பபிப்பிராயம் அவருடைய மனதில் பதிந்துள்ளது. கோணேசர் ஆலயத் திருப்பணிபற்றி அறிந்தாலே அரசியார் எம்மீது கோபப்படக்கூடும் என நான் எண்ணிக்கொண்டி ருக்கும் வேளையில் தாங்கள் அவரையும் என்னையும் ஒன்று சேர்க்க நினைப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. அதை இப்போதைக்கு மறந்து விடுங்கள். முதலில் ஆலயத் திருப் பணி சிறப்புற நிறைவேறட்டும். அதன்பின் அவகாசம் இருந் தால் என் திருமணத்தைப்பற்றிச் சிந்திக்கலாம்” என்று மன்னன் அவருடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான். 

மலையுச்சியில் எழுந்துகொண்டிருந்த ஆலயத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டுச் சமுத்திரக் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ஆலயங்களைப் பார்வையிடுவதற்காக மன்னன் மலையடிவாரம் வழியே இறங்கிக் கொண்டிருந்தான். அங்கே எழுப்பப்பட்டிருந்த இரண் ; ஆலயங்களினதும் சிற்ப நுட்பங்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டே மன்னன் தேர் நிற்கும் இடத்திற்கேகி ஒன். அங்கே தேர்மட்டும் நின்று கொண்டிருந்தது. ஆனால் முகில்வண்ணனைக் காணவில்லை. அமைச்சர் முகில்வண்ணனை அழைத்து வருவதாகக் கூறிச் செல்ல எத்தனித்தபோது, அரசர் அவரைப் போகவிடாமல் தடுத்தி நிறுத்திவிட்டார். “அவன் தன் மனைவியோடு மகிழ்ச் சியாக ஆலயத் திருப்பணி செய்து கொண்டிருக்கிறான். அவ னைக் குழப்பவேண்டாம். அவன் ஆறுதலாக வரட்டும்” என்று மன்னர் கூறியபோது, அவருடைய பெருந்தன்மையை அமைச் சரால் வியந்து போற்றாமல் இருக்கமுடியவில்லை. 

அதற்கிடையில், அரசர் தேரடிக்கு வந்துவிட்டார் என் பதை எப்படியோ அறிந்துகொண்ட முகில் வண்ணன் ஓடோடிவந்து “மன்னிக்கவேண்டும் மகாராசா!” என்று மன் னிப்புக் கேட்டபோது, அரசர் சிரித்துவிட்டு “எதற்காக அப்பனே உன்னை மன்னிக்கவேண்டும்?” என்று குறும்பு செய்துவிட்டுத் தேரில் ஏறி அமரத் தேர் தூசியைக் கிளப் பிக்கொண்டு பறந்து சென்றது. 

அத்தியாயம்-3

ஆடக சவுந்தரிபற்றி அமைச்சர் கூறிய செய்தி மன்னன் குளக்கோட்டன் மனதில் ஒரு புதிய உணர்ச்சியை ஏற்படுத் தியிருந்தது. ஆயினும் அவன் அதை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை; தனக்குத் திருமணமாகப்போகிறதென்கிற மகிழ்ச்சி யைவிட கோணேசர் ஆலயத்திருப்பணிக்கு ஆடக சவுந்தரி யின் உறவு விளைவிக்கக்கூடிய நன்மை பற்றிச் சிந்தித்து ஆனந்தித்தான். ஆனால் கடலும் கடலும் சங்கமமாக முடி யாது என்னும் பேருண்மையையும் அவன் அறிந்திருந்தான். ஏதோ நடப்பது இறைவன் திருவுளப்படி நடக்கட்டும் என்று தன் எண்ணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியிட்டான். அவனு டைய சிந்தனை திரும்பவும் ஆலயத் திருப்பணியில் இறங்கிய போது, அமைச்சர் கலிங்கராயர் மன்னவரை நாடி வந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் என்றுமில்லாத திருப்தி யும் மகிழ்ச்சியுந் தென்பட்டன. அவருடைய இந்த மாற் றத்திற்குக் காரணம் அறியமுடியாத மன்னன்”என்ன அமைச் சரே! என்றுமில்லாதபடி இன்று தாங்கள் இவ்வளவு மகிழ்ச் சியாய்க் காணப்படுவதற்குக் காரணம் யாதாக இருக்கும் என்று சிந்திக்கிறேன்” என்றார். 

அரசரின் கேள்வி அமைச்சரைச் சிரிக்கவைத்தது. ‘கார ணமின்றி இந்தக்கலிங்கராயன் எதையுமே செய்யமாட்டான். அரசே! என் மகிழ்ச்சிக்குக் காரணம் கூறட்டுமா? அதைக் கேட்டால் என்னை விடத் தாங்கள் தான் அதிக மகிழ்ச்சி யடையப் போகிறீர்கள் ஆமாம்! கோணசர் ஆலயத் திருப் பணி மிகவுந் துரிதமாக முன்னேற்றமடைந்து கொண்டிருக் கிறது. இன்னும் சில நாட்களில் வேலைகள் யாவும் பூர்த்தி யாகிவிடும். ஆலயத்தின் அழகைக் கண் கொண்டு பார்க்க முடியாமல் இருக்கப்போகிறது. மன்னருடைய மன அபிலா ஷைபோல ஆலயம் அற்புதமாக அமைந்துவிட்டது தங்கள் அருமைத் தந்தை வீரராமதேவரின் கனவும் நனவாகி விட் டது’ என்று அவர் கூறி முடிப்பதற்குள், “அப்படியா அமைச்சரே! பெருமகிழ்ச்சியான செய்தி இந்த ஆலயத் திருப்பணி இவ்வளவு வெற்றிகரமாகவும் துரிதமாகவும் நடை பெறுவதற்கு ஒரு காரணம், தங்களுடைய பக்கபலம்தான் என்றால் அது மிகையாகாது. அதை வெறும் முகமன் என் றும் தாங்கள் கருதமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அது சரி அமைச்சரே! தங்கள் பேச்சு என் ஆவலைத் தூண்டுகி றது. அதனால் நான் உடனடியாகச் சென்று ஆலயத் திருப் பணியைப் பார்வையிட வேண்டும். முகில்வண்ணனிடம் நான் செல்வதற்குத் தேரை ஆயத்தப்படுத்தும்படி சொல்கி றீர்களா அமைச்சரே?” என்று மன்னன் தன் ஆர்வத்தை அடக்கமுடியாமற் கேட்டான். 

“ஆகட்டும் அரசே! இதோ உடனடியாகத் தாங்கள் கோணேசர் ஆலயத்திற்குப் போவதற்கான ஒழுங்குகளைச் செய்கிறேன்” என்று கூறிவிட்டு அமைச்சர் முகில்வண்ண னைத் தேடிச் சென்றார். 

சில நிமிட நேரத்தில் முகில்வண்ணன் ஓட்டியதேர் கோணேசர் ஆலயத்தைநோக்கி விரைவாகச் சென்று கொண் டிருந்தது. தட்சிணகைலையை அண்மியதும் சேய்மையில் இருந்தே கோயிலைப் பார்க்கக் கூடிய அளவுக்குக் கோபுர வேலைகள் முடிவுற்றிருந்தன. கோயிலை அடைந்ததும் மன்னன் தேரைவிட்டு இறங்கி நடந்து சென்றான். ஆலயத்தின் தோற் றத்தைக் கண்டதும் அவன் அகமும் முகமும் மலர, அப்ப டியே கைகுவித்து இறைவனுக்கு நன்றி செலுத்தினான். தன்னை மறந்து கூப்பிய கரங்களுடன் நின்றமன்னன் ஒரு சில நிமிடங்கள் விரைவாக நடந்து கோயில்வாயிலை அடைந்தான். தான் சென்ற வாரம் பார்த்ததன் பின்னர், கோயில் வேலை கள் மிகவும் துரிதமாக முன்னேறியிருப்பதை அவன் காணக் கூடியதாக இருந்தது. 

கோயில் வாயிலினூடே நுழைந்த அவன் கண்களிற் பட்ட மண்டபங்களும் கோபுரங்களும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. இவை மனிதனால் சிருஷ்டிக்கப்பட்டவை தானா என்ற ஐயப்பாடு கூட அவனுக்கு ஏற்பட்டது. ‘அப்பாடா! இன்னுஞ் சிலநாளில் ஆலயத் திருப்பணிகள் யாவும் பூர்த்தி யடைந்துவிடும். இனி அடுத்து நடக்கவேண்டியவற்றைக் கவ னித்தல் வேண்டும்’ என்று சிந்தித்தபடி அந்தப் பெரிய ஆல யத்தைச் சுற்றி அவன் வலம் வந்தான். அப்போது அந்தப் பெரிய ஆலயத் தொண்டு செய்வதற்கு ஏற்ற குடிகளாக அமர்த்த வேண்டும் என்கிற பெரியதொரு பிரச்சினை அவன் மனதில் எழுந்தது. உடனே அதற்கு விடையாகச் சோழவள நாட்டிலிருந்து ஒரு சில குடிகளை வரவழைத்து அவர்களைக், கோயிலுக்கு அண்மையிற் குடியேற்றுவது என்று திட்டமிட்டான். 

தன் எண்ணப்படி சோழநாட்டில் மருங்கூர் என்னும் கிராமத்திலிருந்து முதலில் முப்பது குடிகளைக் கொண்டு வந்து ஈழநாட்டில் குடியேற்றத் தீர்மானித்தான். இவர் களைத் தானத்தார் என்றழைப்பதோடு கோணலிங்கப் பெரு மானுக்கு முன்னர் ஆலத்தி எடுத்தல். நடனமாடல், பன்றி குற்றல், அதிகபட்டு அரசற்கீதல் முதலிய கடமைகளை அவர் களைக் கொண்டு செவ்வனே செய்யப் பணிக்கப்படல் வேண் டும் எனவும் முடிவு செய்தான். 

ஆலயத்திருப்பணி வேலைகள் ஒருபடியாக முடிவுற்றன. மன்னனுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி. தன்னுடைய காலத் தில் இப்படியான ஒரு புண்ணிய கைங்கரியத்தைச் செய்ய முடிந்ததே என்கிற திருப்தி. 

அரசர் ஆணைப்படி கும்பாபிஷேக விழா நடைபெறுவ தற்கு முன் அமைச்சர் கலிங்கராயர் மருங்கூருக்குச் சென்று முப்பது குடிகளைக் கொண்டுவந்து கோயிலுக்கு அண்மையிற் குடியேற்றினார். அரசன் அவர்களையெல்லாம் பார்வையிட்டு அவர்களில் ஒரு குடியினருக்கு இராயப் பட்டம் வழங்கினான். இன்னும் காரைக்காலுக்குச் சென்று வேறு குடிகளையும் கொண்டு வரும்படி பணித்தான். மந்திரி அவர்கள் அவன் சொற்படி காரைக்காலில் இருந்து கொண்டுவந்த குடிகளுக் குப் பட்டாடை நெய்தல் புட்ப பத்திரங்கள் எடுத்தல், விளக்கேற்றல், தீர்த்தம் எடுத்தல், நெற்குத்தல், சாணி மெழுகல், எரிதுரும்பு ஈதல், நடனப் பெண்களுக்கு முட்டு வகை கொட்டல், பாடல், சந்தனம் அரைத்துக் கொடுத் தல், ஏனைய ஆலயப் பணிகளைச் செய்தல் ஆகியவற்றை நிறைவேற்றும்படி கட்டளையிட்டான். 

இக் குடிகளிடையே எழும் பூசல் பிணக்குகளை விளங்கித் தீர்ப்பளிக்க மன்னனே மதுரை சென்று தனியுண்ணாப் பூபா லனையும் அழைத்துவந்து குடியேற்றினான். அடுத்துக் கோயி லுக்குப் பூசை செய்யப் பாசுபதர்களை நியமித்தான். இவர் கள் திருநீறு அணிந்து சிவலிங்க வழிபாடு செய்பவர்களாவர். கோயில் வருவாயில் எட்டுப் பங்கு இருப்பாகவும் இரண்டுபங்கு அர்ச்சகர்களுக்காகவும் பயன்படுத்தப்படவும் வேண்டிய ஆயத்தங்களைச் செய்தான். 

மன்னன் கோயில் தொழும்பு செய்தோர்க்கெல்லாம் நிலங்களை வாரி வழங்கினான். அவ்வருவாயைக் கொண்டு அவர்கள் வாழ்ந்தனர். கோயிலின் புறத்தே மலிநீர் வாவி யும் திருக்குளமும் அமைத்தான். கோயில் வீதியில் பாவநா சச்சுனையும் தேரோடும் வழியும் வெகு அழகாகவும் அற்புத மாகவும் அமைக்கப்பட்டிருந்தன. திருப்பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக அதன் வருவாயைப் பெருக்கும் வகை யில் இரண்டாயிர த்தெழுநூறுஅவணம் விளைவிக்கக்கூடிய தரை திட்டம் செய்யப்பட்டிருந்தது. 

கோயிலில் மும்முறை வழிபாடு நடக்கவும் நாள்தோறும் கறியமுது வழங்கவும் திட்டங்கள் அமைக்கப்பட்டன. அத் துடன் ஆண்டவன் முன்னிலையில் ஆடல் பாடல்கள் நடை பெறவும் வழிவகைகள் செய்வித்தான். அதற்காகவென்று நடனப் பெண்களும் பாடகர்களும் சோழநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டனர். இந்து வெளி என அழைக்கப்பட்ட நிலாவெளியிலும் கொட்டியாபுரத்திலும் இருந்து நெல், பால், தயிர், வெற்றிலை, பாக்கு முதலியன கோயிலுக்காக வரவழைக்கப்பட்டன. 

இப்படியாக மன்னன் குளக்கோட்டன் கோயிலுக்காகச் செய்த தொண்டுகளையுந் திருப்பணிகளையும் போற்றாதார் இல்லை என்றே கூறவேண்டும். அவனது இந்த அரும் பெருங் கைங்கரியத்தைப் பார்ப்பதற்காக, ஈழத்தின் பல திக்குகளி லிருந்தும் மக்கள் திரண்டு வந்து குவிந்தனர். கோயில் திருப் பணியும் ஒருபடியாக முடிவடைந்து கொண்டிருந்தது. குள மும் சுனையும் அமைக்கப்பட்டன. ஆயினும் மன்னன் மன தில் மட்டும் ஒரு பெருங் குறை இருந்துகொண்டே வந்தது. 

கோயிலைச் சுற்றிய தரையிற் குடியேறிய மக்களுக்கு உண்ண நெல் போதவில்லையே என்று சதா முறைப்பாடுகள் வந்துகொண்டேயிருந்தன. நீர் உயர நெல் உயரும் என்பார் கள். நீர் உயர்ந்தது. ஆனால் நெல் உயரவில்லை. இந்தக் குறை எதனால் ஏற்பட்டிருக்கும்? என்று தன்மனதைப்போட் டுக் குழப்பிய மன்னன் ஈற்றில் தன்னிடம் முறைப்பாடு கொண்டுவந்த அமைச்சரிடமே கேட்டு வைத்தான். அமைச்ச ருக்கு அவனுடைய கேள்வி புரிந்தது. ஆயினும், பதில்கூறத் தாமதித்தான். இவ்வளவு பெரியதொண்டைச் செய்த மன் னின் மனம் குழம்பக்கூடாதே என்கிற கவலை ஏற்பட்டது மந் திரிக்கு. அதனாற் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “அரசே, தாங்கள் ஏராளமான பொருள் செலவழித்துப் 

பல குளங் களையும் கால்வாய்களையும் வெட்டியுள்ளீர்கள். அப்படியிருந் தும் குளங்களிலிருந்து பெறப்படும் நீர் விவசாயத்திற்குத் திட்டமிட்டபடி போதவில்லை அதனால் நெல் செழிக்க வில்லை. குடிகளால் மகிழ்ச்சியாக வாழமுடியாவிட்டால், மன்னன் செய்துள்ள இந்த மாபெரும் திருப்பணியின் மகி மேைய மங்கிவிடும்” என்று விளக்கங் கொடுத்தார். 

மந்திரியின் பேச்சு மன்னரைச் சிந்திக்கத் தூண்டியது. விளைச்சலைப் பெருக்க என்ன வழிவகைகளைச் செய்யலாம் என்று எண்ணிப்பார்த்தான். தன் எண்ணத்தில் தோன்றிய படி இன்னும் பல குளங்களை வெட்டி நீர்த்தேக்கத்தைப் பெருக்கும்படி மந்திரியிடம் கூறினான். ஆனால் அரசருடைய யோசனையை மந்திரி அங்கீகரிப்பதாக இல்லை. சிறு சிறு குளங்கள் ஆயிரம் அமைப்பதைவிட ஒரு பெரிய குளமாக நீர்த்தேக்கம் எப்போதும் நிறைந்து நிற்கக்கூடிய வகையில் அமைந்துவிட்டால் கோயில் திருப்பணிக்கு எந்தவிதக் குறை யும் எதிர்காலத்தில் இருக்காது அரசே!” என்று அமைச் சர் தம் கருத்தை வெளியிட்டார். 

அவருடைய கருத்தை ஆமோதிப்பவர் போல் மன்னரும் மெளனமாக இருந்தார். ஆயினும் இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்கிற கவலைக் குறிகள் அவர் முகத்திலே தென்படவே செய்தன. மன்னன் தீவிரமாக யோசித்துக் கொண்டீருந்தபோது. “அரசே! தன்பலவெளிக்கு அண் மை யில் (தம்பலகாமம்) இரண்டு பெரிய மலைகள் உள்ளன. அந்த இரு மலைகளையும் பொருத்தி ஓர் அணை கட்டிவிட் டால் அதை ஒரு பெரும் குளமாக்கிவிடலாம். அதில் நீர்த் தேக்கம் எப்போதும் நின்றுகொண்டேயிருக்கும். இந்தத் தட்சிண கைலாயத்து வேளாண்மைக்கு குறைவின்றி நீர் கிடைக்கக்கூடிய வழி அது. ஒன்றுதான் என்று அமைச்சர் கூற, மன்னன் அதுபற்றிச் சிந்திப்பதாகக் கூறினான். 

அதற்கும் இறைவன் அருளும் ஆசியும் தேவை என்பது அவர் கருத்து. ஆகவே அன்று கோணேசர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யும் படி மந்திரியிடம் மன்னன் கூறினான். மன்னன் ஆலயத்தைச் சுற்றி வணங்கினான். கூடிய விரைவில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டு, தான் நினைத் துள்ள திருக்குள வேலையும் ஒரு தடையுமின்றிச் செவ்வனே நடைபெறக் கோணலிங்கரைப் பிரார்த்தித்தான். கோணநா யகரின் அருள் தனக்கும் பாலிக்கும் என்கிற நம்பிக்கையி ருந்தபோதும் அதை நிறைவேற்றி முடிக்க இறைவனின் அருளையும் ஆசியையும் நாடி நின்றான். 

அவன் பக்கத்தில் அமைச்சர் கலிங்கராயரும் எதிர்ப்புற மாக முகில்வண்ணனும் முல்லையும் நின்று கோணநாயகரை வணங்கினர். அரசன் தன்பிரார்த்தனையை முடித்துக்கொண் ட-தும் போவதற்கு ஆயத்தமானான். அப்போது முல்லை அவனருகே ஓடிவந்து “அரசே! ஆலயத் திருப்பணிகள் ஒரு படியாக முடிவடைந்து கொண்டிருக்கின்றன. இனி அரசர் இல்லறத்தில் ஈடுபட எவ்விதத் தடையுமிருக்கமுடியாது என எண்ணுகிறேன்….” என்று மரியாதையோடும் பணிவோடும் கூற, ‘நீ அதை மறக்கமாட்டாய் போல் இருக்கிறது எல்லாம் அவன் திருவுளப்படி நடக்கட்டும் முல்லை!” என்று சிரித்தபடியே கூறிவிட்டு விரைவாகச் சென்று தேரில் ஏறிக் கொண்டான். 

மன்னர் முல்லையிடமிருந்து சாதுரியமாகத் தப்பிவிட்டா லும், இம்முறை அமைச்சர் அவரை விடுவதாக இல்லை. எப்படியாவது மன்னன் மனதை மாற்றி அவரைத் திரும ணத்திற்கு உடன்பட வைத்துவிட வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்தார். அதனால் அரசரைப்பார்த்து ‘மன்னவா! முல்லைக்குத் தாங்கள் மிகவும் சாதுரியமாகப் பதிலளித்து விட்டீர்கள் தங்கள் கூற்றுப்படி எல்லாம் ஆண் டவன் சித்தப்படிதான் நடக்கும். ஆயினும் மனித முயற்சி யும் வேண்டுமல்லவா? தாங்கள் மட்டும் ‘சரி’ என்று ஒரு வார்த்தை கூறினால் நான் மிகுதியைச் செய்து முடித்துவிடு வேன்” என்று கூற, அரசன் ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு, “என்னை விடமாட்டீர்கள் போலிருக்கிறது. முதலிற் குளம் அமைப்பது பற்றிச் சிந்திப்போம். அதன்பின் வேண்டு மானால் திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம்” என்று கூற அமைச்சர் மௌனமானார்.

– தொடரும்…

– கோவும் கோயிலும் (நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 1980, நரெசி வெளியீடு, திருகோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *