இரு ஜீவன்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 4, 2024
பார்வையிட்டோர்: 300 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அன்று பௌர்ணமி. பரந்த மணற்பரப்பில் நிலவொளி தவழ்ந்து கொண்டிருந்தது. அதன் இடையில் கருநிறமுள்ள யமுனை, நிலவொளியைக் கண்டு மயங்கியவள்போல் சாந்தமாய்ச் சென்று கொண்டிருந்தாள். டில்லி நகரிலுள்ள ஆயிரக்கணக்கான கோரி களும், ஸ்தூபிகளும் தலை தூக்கி நின்று அந்நிலவொளியைப் பிரதி பலிக்கச் செய்தன. சகல ஜீவராசிகளும் இயற்கையன்னையின் மடிமீது துயில்கொண்டிருந்தன. 

எங்கும் அமைதி நிலவியிருக்கும் அவ்விரவில் ஓர் அழகிய ளைஞன் அந்த யமுனையின் மணற்பரப்பிலே அமர்ந்திருந்தான் இயற்கையின் எழிலை அள்ளிப் பருகி இன்பக் கனவுகள் கண்டு கொண்டிருந்தான். அவனுக்கு வயசு இருபத்தைந்து இருக்கலாம். புன்னகை தவழும் அழகிய முகமும்,கருணை நிரம்பிய விசாலமான கண்களும் காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளத் தக்கனவாயிருந்தன. அவன் அணிந்திருந்த ஆடையும், உடை வாளும் அவன் அரசாங்கத்தில் ஏதோ நல்ல பதவியில் இருக்கிற னென்பதை எடுத்துக்காட்டின. 

‘ஜல் ஜல்’ என்ற பாதசரத்தின் ஒலி கேட்டுத் திடுக்கிட்டான் அவன். அடுத்த கணம் அவனருகில் வந்துகொண்டிருந்தது ஒரு பெண் உருவம். நிலவொளியில் அவளது முகத்தைக் கண்ட இளைஞன் திடுக்கிட்டான். 

“யார், தாங்களா? இராஜ்குமாரியா?…” என்று எழுந்து வணக்கம் செய்தான். 

“யார்? ராஜசிம்மனா? இந்த நள்ளிரவில் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்?” 

“ஒன்றும் இல்லை; வழக்கம்போல் இப்படி உலாவுவதற்காக வந்தேன்…..இன்று அதிகநேரம் தாமதித்துவிட்டேன் போலிருக் கிறது ……ஆனால்….. தாங்கள்……. இந்த இரவில்?” என்றான் தயக்கத்துடன். 

“ஏன்? நான் இங்கே வந்தது உமக்கு ஆச்சரியமாய் இருக் கிறதோ? நீர் மாத்திரம் இந்த இயற்கையின் அழகை யெல்லாம் பார்த்து ரஸிக்க வேண்டுமோ? எனக்கு அதில் கொஞ்சங் கூட விட்டு வைக்கமாட்டீர் போலிருக்கிறதே…” என்று குறும்புப் புன்னகையுடன் கூறி அவன் முகத்தை ஒருதரம் ஏறிட்டுப் பார்த்தாள். 

நில வொளியில் ஜாஜ்வல்லியமான அழகுப் பிரதிமையாய்த் தோன்றும் ராஜகுமாரியைக் கண்ட ராஜசிம்மனின் கண்கள் கூசின. தன்னிடம் இவ்வளவு ஹாஸ்யமாகப் பேசும் அந்த ராஜ் குமாரியின் கருத்து என்ன? தன்னந் தனியே அந்த இடத்தில் அவள் ஏன் வந்தாள்? தான் இங்கு இருப்பதை அறிந்து தான் வந்திருக்கிறாளோ?- அவன் சிந்தனை படர்ந்தது. அவன் அதன் முடிவைக் காணவில்லை. அவன் கண்கள் சாந்தமாய் ஓடிக்கொண் டிருக்கும் யமுனையை நோக்கிக் கொண்டிருந்தன். 

“தளகர்த்தரே, யுத்த களத்தில் எதிரிகளைத் துரத்தியடிக் கும் உமது வீரம் ஏன் இப்படிப் பதுங்கி ஒளிந்துகொண்ட  ே தோ என்னைக் கண்டு ஏன் இப்படிப் பயப்படுகிறீர்? நான் என்ன புலியா, சிங்கமா? என்னுடன் பேசுவதற்குப் பிடிக்கவில்லையா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள். 

தர்ம சங்கடமான நிலைமையில் தத்தளிக்கும் இளைஞன் சட்டென்று திரும்பினான். “மன்னிக்கவேண்டும், இளவரசியாரே! நான் தங்களைக் குறித்து அப்படியெல்லாம் நினைக்கவில்லை. தங்க ளிடம் பேசுவதில் எனக்கு யாதோர் ஆட்சேபமும் இல்லை’ என்று கூறி வணங்கினான். 

“ராஜபுத்திர வீரரே, நீர் என்னை ‘ நீங்கள், தாங்கள்’ என்று மரியாதை கொடுத்துப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது உங்களுக்குப் பிடிக்க வில்லையா?” என்றாள் குறும்பு நகையுடன். 

“இல்லை; இல்லை. தங்களை நான் அவ்விதம் அழைப்பது தகாது. நான் தங்கள் அடிமை என்பதை மறந்தீர்கள் போலும்!” 

“அடிமை என்னும் வார்த்தையை இனி என்னிடம் உபயோ கிக்கவேண்டாம். அது எனக்கு நரக வேதனையைக் கொடுக்கிறது. யாருக்கு யார் அடிமை? வீரரே, என் உள்ளத்தை நீர் நன்கு தெரிந்துகொள்ளவில்லை. அதிருக்கட்டும். நாளைத் தினம் என் அந்தப்புரத்திற்கு வாரும். உம்மிடம் சில விஷயங்களைக்குறித்துப் பேச விரும்புகிறேன்…… தங்களுக்கு வருவதில் ஒன்றும் ஆட்சேபம் இல்லையே?” என்று கூறி, அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். 

“இல்லை, இளவரசி. அவசியம் தங்கள் கட்டளைப்படியே வருகிறேன்.” 

“இப்பொழுதுதானே அந்தத் ‘தாங்கள், நீங்கள்’ எல்லாம் வேண்டாமென்று சொன்னேன்? மறுபடியும் என்னை வருத்துகிறீரே…” 

“இல்லை. இளவரசி இல்லை மும்தாஜ்.. நீ கூறியபடி அவசியம் வருவேன்” என்று கூறிச் சிரித்தான். அவளும் சிரித்தாள். 

“ஆஹா! இப்போதுதான் என் மனம் குளிர்ந்தது. வீரரே, இந்த இரவில் என் உள்ளத்தில் எதிர்பாராத சந்தோஷத்தை நிரப் பினீர். நாளை உம் வரவை எதிர்பார்த்திருப்பேன் …… மறக்க வேண்டாம்…….” என்று புன்முறுவலுடன் கொஞ்சிப் பேசிய வாறே அவ்விடத்தை விட்டு அகன்றாள். அவளுடைய ரூபத்திலும், பேச்சிலும் மயங்கிப்போன ராஜசிம்மன் அவள் மறையும்வரை யில் கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தான். 

டில்லி பாதுஷாவின் தளகர்த்தர்களில் ஒருவன் ராஜசிம்மன். தைரியத்திலும், வீரத்திலும், அழகிலும், பிற குணவொழுக் கத்திலும் அவனுக்கு அவன்தான் நிகர். பாதுஷா அவன் மீது அதிகமான பிரியமும் நம்பிக்கையும் வைத்திருந்தார். சந்தோஷ மாக இளம் மனைவி வாஸந்திகாவுடன் இன்ப வாழ்க்கை நடத்தி வந்துகொண்டிருந்தான். ஆனால் இன்று நடந்த சம்பவத்தால் அந்த இன்ப வாழ்க்கையில் இடி வீழ்ந்தது. அவன் அழகில் ஈடு பட்ட ஓர் ராஜகுமாரி அதை ஸ்வீகரித்துக்கொண்டாள். குண வொழுக்கத்தில் சிறந்த அவனது தூய உள்ளம், அழகே உருக் கொண்ட அந்த ராஜகுமாரியின்பால் இழுத்துச் செல்லப்பட்டது. 

மறுநாள் மாலை: இளவரசி மும்தாஜ் அறையில், அவளைத் தவிர யாரும் இல்லை. சிறந்த வாசனைத் திரவியங்களின் நறுமணம் அவ்வறை முழுவதும் பரிணமித்திருந்தது. ஊதுவத்தி, மட்டிப் பால் இவைகளின் புகை அங்கே பலவிதமான கோலங்களைப் புனைந்து கொண்டிருந்தது. மும்தாஜ் மஞ்சத்தில் சாய்ந்தபடியே சிந்தனா லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். புன்னகையும், கோபமும் அவள் வதனத்தில் மாறி மாறித் தோன்றலாயின. அவைகளுடன் போட்டியிடுவதுபோல், அவள் தலையில் அணிந்து கொண்டிருந்த ரோஜாமலர்கள் பலபலவென்று மஞ்சத்தில் உதிர்ந் தன சோகமும் வெறுப்பும் கலந்த பெருமூச்சு இடையிடையே தோன்றி வியாபித்திருந்த அமைதியைக் குலைத்தது. 

அடுத்த கணம் பணிப்பெண் மினாரி அங்கே தோன்றினாள். “பீகம், தளகர்த்தர் ராஜசிம்மர் வந்திருக்கிறார்…… தங்கள் ஆக்ஞை” என்றாள். 

மஞ்சத்தில் சாய்ந்திருந்த அவள் இதைக் கேட்டு எழுந்து நின்றாள்.”போ! உடனே அழைத்துக்கொண்டு வருவதற்கென்ன? கேட்டுக்கொண்டு நிற்கிறாய்? ஓடு. சீக்கிரம் அழைத்துவா”  என்று பணிப்பெண்ணை விரட்டினாள். பாவம்! பணிப்பெண் பீதியுடன் அங்கிருந்து ஓடினாள். 

ராஜகுமாரியின் வதனம் மலர்ந்தது. முன்பு படர்ந்திருந்த சோர்வும் சஞ்சலமும் எங்கே? ராஜசிம்மனை வரவேற்க அவள் உள்ளம் துடிததது. 

“உள்ளே வரலாமா?” என்று கேட்டுக்கொண்டே நுழைந்தான் ராஜசிம்மன். 

“ஆஹா! நீங்கள் இங்கே வருவதற்கு உத்தரவு ஒன்றும் வேண்டியதில்லையே! ஆமாம். ஏன் இவ்வளவு நேரம்?” என்றவாறு அவன் கையைப் பிடித்து அழைத்து வந்து மஞ்சத்தில் இருத்தினாள். 

ராஜசிம்மன் ஒரே மயக்கத்தில் ஆழ்ந்தான். ராஜகுமாரியின் பேரெழிலை அப்படியே பருகி விடுவான்போல் பார்த்துப் பரவச மடைந்தான். நறுமணம் கமழும் அவ்வறையின் மங்கிய விளக் கொளியில் கனவுலகத்தில் இருப்பவன்போல் தள்ளாடினான். ராஜகுமாரி மும்தாஜ் இன்பக் கடலில் ஆழ்ந்துவிட்டாள். சில்லென்று இரண்டு கோப்பைகளில் ஷர்பத்தை நிரப்பினாள். இருவரும் அதைக் குடித்தார்கள். தங்களை மறந்து அன்னி யோன்னிய தம்பதிகள்போல் பழக ஆரம்பித்துவிட்டனர். அன்றைய இரவு அவர்கள் இருவருக்கும் இன்ப இரவாகக் கழிந்தது. ஆனால், அதே சமயத்தில் ஓர் அழகிய இளநங்கை துக்கித்துப் புலம்புவது அவர்களுக்குத் தெரியுமா? 

3. 

மனோகரமான அறை, சலவைக் கற்களால் அமைந்த சுவர்கள்; அவைகளின் மீது அழகான சித்திரங்கள்; பளபளப்பான ரத்தினக் கம்பளம் ; தந்தத்தினாலான மஞ்சம்; அதன்மீது அழகிய மகமல் மெத்தைத் திண்டுகள். விதவிதமான பாத்திரங்களில் நறுமணம் கமழும் மலர்க்கொத்துக்கள் அந்த அறை முழுவதையும் வாசனையால் நிரப்பின. இவைகளுக் கிடையே கந்தர்வ மங்கைபோல் படுத்திருந்தாள் வாஸந்திகா. அவள் கண்கள் சிவந்திருந்தன. அழுதழுது அவள் முகம் வீங்கி யிருந்தது. பக்கத்தில் ராஜசிம்மன் உட்கார்ந்து அவளைத் தேற்றிக் கொண்டிருந்தான். 

“வாஸந்திகா, ஏன் இப்படி என் மனசைத் துன்புறுத்து கிறாய்? நான் சந்தோஷமாயிருப்பது உனக்குப் பிடிக்க வில்லையா?…… இதோ என்னைப் பார்!” என்று கூறி அன்புடன் அவள் வதனத்தை நிமிர்த்தினான். 

‘கணவனே தெய்வம்’ என்று வழிபடும் பெண்களில் அவளும் ஒருத்தி.தனக்குத் துரோகம் செய்த கணவனை அப்பொழுதும் அவள் தெய்வமெனவே நினைத்தாள். ஆதலின் அவன் அன்புடன் தேற்றியபொழுது உதாசீனம் செய்யாது எழுந்து உட்கார்ந்தாள். இதுவரை மறைந்திருந்த புன்னகை அந்த எழில் வதனத்தில் மலர்ந்தது. 

“ஆர்ய புத்திரா, தங்களையே துவரை நம்பியிருந்தேன். உலகத்தில் ‘என்னைவிடப் பாக்கியசாலி யார்’ என்று கூட இறுமாந் திருந்தேன். ஆனால் என்று சொல்லி நிறுத்திக்கொண்டாள். அதற்கு மேல் அவளால் பேசமுடியவில்லை. துக்கம் தொண் டையை அடைத்தது. 

“வாஸந்திகா, நீ என்ன சொல்லப்போகிறாய் என்பது எனக் குத் தெரியும். ஆனால், நான் என்ன செய்வேன்! அவளல்லவோ என்னை விரும்புகிறாள் ? நான் புறக்கணித்தால் என் கதி என்ன வாகும் என்பதை நீ அறிவாயா? பாதுஷாவுக்குத் தெரிந்தால் மரண தண்டனை கிடைக்கும். அப்புறம் உன் கதி என்னவாவது? யோசித்துப் பார்…… ராஜகுமாரி என்மீது உண்மையிலேயே ஆசை வைத்திருக்கிறாள். என்னை மணக்கவும் பிரியப்படுகிறாள். உனக்குச் சம்மதமானால் நீயும் அவளும் ஒன்றாயிருக்கலாம். ஆனா அவளிடம் விரோதித்துக்கொண்டால் நம் கதி அதோகதிதான். வாஸந்திகா, நீ கொஞ்சம் மனம் இரங்கவேண்டும்” என்று இறைஞ்சினான். 

இதைக் கேட்ட வாஸந்திகா மிகவும் கோபமடைந்தாள். அவளுடைய சாந்தம்,வணக்கம் எல்லாம் காற்றில் பறந்து விட்டன. 

“நீங்கள் ஒரு ராஜபுத்திர வீரர். க்ஷத்திரிய வம்சத்தில் உதித்த நீங்கள் இவ்வளவு கோழைத்தனமாகப் பேசுவது எனக்கே வெட்கமாயிருக்கிறது. கேவலம் ஒரு பெண்! அவள் ராஜ குமாரியானால் என்ன? அவளுக்கென்ன அவ்வளவு சுதந்தரம்? கடவுளுக்குச் சத்புத்திரனாகத் தோன்றுவது உங்கள் கடமை. ராஜகுமாரிக்கு நீங்கள் அடிமையல்ல. நீங்கள் ஏதோ அவளுடைய ஆசை வலையில் வீழ்ந்து மிரண்டுவிட்டீர்கள். அவள் வஞ்சகப் பாம்பு. உங்களைப்போன்று ஆயிரக்கணக்கான ராஜபுத்திரர்களை அவளுக்குத் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை முத்துமழை சொரிவாள்.நீங்கள் அதைத் தெய்விகம் என்று எண்ணி, என்னைப் புறக்கணிக்கப் பார்க்கிறீர்கள். பாதுஷாவின் தண்டனையையும் எதிர்பார்க்கிறீர்கள். இந்த ராஜ்யம் என்ன சாசுவதமா? பாதுஷா வின் எல்லையைத் தாண்டிக் கண் காணாத ஓர் ஊரில் ஒரு குடிசை யில் வாழ்க்கை நடத்தலாமே!… ஆர்ய புத்திரா, உண்மையில் உங்கள் சந்தோஷத்தையே நான் எதிர்பார்க்கிறேன். வேண்டாம், அந்த ராஜகுமாரியை நம்ப வேண்டாம். அவளை மறந்து விடுங்கள். அவள் ஒரு கொடிய சர்ப்பம்” என்று ஆவேசம் வந்தவள் போல் படபடத்துக் கூறினாள். 

“வாஸந்திகா, என் கண்மணி, தயவு செய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்…” என்று ஆரம்பித்தான் ராஜசிம்மன். 

“நீங்கள் சொல்வதை நான் என்றும் தட்டியதில்லை. ஆனால் இந்த ஒரு விஷயத்தில் நான் தங்களுக்கு மாறாக நடப்பது பற்றி மன்னிக்கவேண்டும். நான் உயிருடன் இருக்கும்வரையில் அந்த ராஜகுமாரி என்னும் விஷப் பாம்பிடம் ஒப்படைக்க மாட்டேன். ஆண்டவன் பிரித்தாலன்றி என்னையும் உங்களையும் யாரும் பிரிக்க முடியாது ‘” என்று அவள் கூறினாள். அவள் கண்கள் நீரைக் கக்கின. முகம் சிவந்தது. உதடுகள் படபடத்தன. 

ராஜசிம்மன் அப்படியே ஒடுங்கிவிட்டான். அவன் கண்களில் கண்ணீர்த் துளிகள் தேங்கியிருந்தன. அவன் மனம் குழம்பி விட்டது. உடல் வேர்த்தது. வாஸந்திகாவை ஏறிட்டு நோக்கவும் அஞ்சினான். அவன் நெஞ்சு படபடத்தது. இவ்விருவரில் யாரைத் துறப்பது? வாஸந்திகா கூறும் ஒவ்வொன்றும் உண்மை தான். இளவரசியை விட அழகில் எவ்வளவோ மடங்கு சிறந்தவள் வாஸந்திகா. ஒழுக்கத்தில் அவளைவிட இவள் பன் மடங்கு சிறந்தவள். ஐயோ! அவள் அழகு என்னைப் பைத்திய மாக்கி விட்டதே! ஏன் அவள் அந்த யமுனைக் கரைக்கு வந்தாள்? அவளைக் காணும்போதெல்லாம் என் நெஞ்சம் மதுவுண்ட வண்டு போலாகி விடுகிறதே !… அவள் என் மீது அபாரமான பிரேமை கொண்டிருக்கிறாள்….. என்ன மதுரமான பேச்சு! நான் என்ன செய்வேன்?……’ என்று மன வேதனைகொண்டு தவிக்கலானான். 

4

மறுநாள் காலையில் ராஜசிம்மன் புது மனிதனாகத் தோன்றி னான். வாஸந்திகாவுடன் அன்புடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் வழக்கமாகச் செல்லும் ராஜகுமாரியின் அந்தப்புரத்தை மறந்திருந்தான். தன் கணவன் இவ்வளவு சீக்கிரத்தில் திருந்தி விடுவான் என்று வாஸந்திகா எதிர்பார்க்கவில்லை. அவள் உள்ளம் அன்று சந்தோஷத்தில் பூரித்தது. 

“ஏன், உங்கள் மும்தாஜ் ராஜகுமாரியை மறந்துவிட்டீர் களா? பாவம்! அவள் நேற்றிலிருந்து தேடிக் கொண்டிருப்பாளே! நீங்கள் போகவில்லையா?” என்றாள் கேலிச் சிரிப்புடன்.

”வாஸந்திகா, இனி இந்த ஜன்மத்தில் இல்லை. நான் ஒரு பாவக் குழியில் விழவிருந்தேன். ஆனால் உன்னுடைய உதவியால் தப்பினேன். கண்மணி, உண்மையில் என்னைக் காக்க வந்த தெய்வம் நீ” என்றான். அவன் முகத்தில் என்றைக்கும் இல்லாத களையைக் கண்டாள் வாஸந்திகா. அந்த எழில் நிரம்பிய வதனத்தைப் பார்த்துப் பரவசமடைந்தாள். 

“ஆர்ய புத்திரா, நான் பூர்வ ஜன்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ! அதனால்தான் நான் உங்களை அடையப் பெற்றேன். இன்று என் உள்ளம் என்றும் இல்லாத ஆனந்தம் கொள்ளுகிறது” என்று கூறி முறுவலித்தாள். 

இருவருடைய சந்தோஷத்தையும் குலைத்தது ஒரு குரல் அப்பொழுது. 

”யார் அது?” என்றான் ராஜசிம்மன். கடிதம் ஒன்றைக் கையிலேந்திக் காவலன் ஒருவன் தோன்றினான். பாதுஷாவை உடனே காணவேண்டுமென்று கண்டிருந்தது அதில். 

ராஜசிம்மன் அதைச் சாதாரணமாகத்தான் நினைத்தான். ஆனால் வாஸந்திகாவுக்கு மனத்தை என்னவோ செய்தது. அவன் அவளை நோக்கி, “நான் ராஜசபைவரை போய் திரும்புகிறேன்… வாஸந்திகா, நான் போய் வரட்டுமா?” என்று கூறியபொழுது, அவள் சிந்தனை பலவிதத்தில் பல இடங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அவளுக்குச் சுய நினைவு வரும் போது ராஜசிம்மன் அங்கில்லாதிருப்பதை உணர்ந்தாள். உடனே ராஜசபையின் ஞாபகம் வந்தது. 

“திடீரென்று பாதுஷா நிருபம் அனுப்பியதன் மர்மம் என்ன? ‘” என்ற கேள்வி திரும்பத் திரும்ப அவள் மனத்தில் எழுந்து நின்றது. அந்தக் கேள்விக்குப் பதில் விளங்கவில்லை. 

பாதுஷாவின் அந்தரங்க அறையில், பாதுஷாவிற்கும் தளகர்த்தன் ராஜசிம்மனுக்கும் சம்பாஷணை நடந்து கொண்டிருந் தது. பாதுஷாவின் குரலில் கோபம் தொனித்தது. 

”ராஜசிம்மா, உன்னை நான் குணவான் என்று நினைத்தேன். நீ பெரிய ராஜத் துரோகி என்பதை இப்போது காட்டி விட்டாய்.”அவர் உதடுகள் துடித்தன. கோபம் கண்களில் நிரம்பியிருந்தது. 

“ராஜத் துரோகி” என்ற சொல்லைக் கேட்டதும் ராஜசிம்மன் நெருப்பை மிதித்தவன்போல் ஆகிவிட்டான். “அரசே, நான் என்ன குற்றம் செய்தேன்? ராஜத் துரோகியா நான்? நீங்கள் பேசுவது விபரீதமாயிருக்கிறதே! என்றான். 

“இளவரசியின் மனத்தையும்,மானத்தையும் கெடுத்த குற்றம். அந்தக் குற்றம் ராஜத்துரோகம் என்பதை நீ அறிய வில்லையா? அவளையே நீ மணந்தாக வேண்டும். இது என் ஆக்ஞை” என்றது பாதுஷாவின் கோபக் குரல். 

”அரசே, நான் நிரபராதி. எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள். நான் இளவரசியை எப்படி மணப்பது? மன்னிக்க வேண்டும்” என்றான். அவன் குரல் கம்மிவிட்டது. கண்களில் நீர் நிரம்பியது. 

“துரோகி, ராஜ ஆக்ஞையை மீறுகிறாயா? மணக்க மறுத்தாயானால் எனன தண்டனை கிடைக்குமென்பதை அறிவாயா?” 

“அறிவேன். எந்த விதமான தண்டனையையும் அனுபவிக்கச் சித்தனாயிருக்கிறேன். ஆனால் என் மனசிற்கு விரோதமாகத் தங்கள் ஆக்ஞையை ஏற்க மாட்டேன். என் சுதந்தரத்தை இழக்க மாட்டேன்,” அவன் குரலில் கம்பீரமும், வீரமும் தொனித்தன. 

பாதுஷாவின் கோபம் எல்லை கடந்தது. அந்தக் கோபத்தின் முடிவு ராஜசிம்மனுக்குக் காலனாகத் தோன்றியது. 

அரசர் ஆக்ஞையை மீறிய ராஜசிம்மனுக்குக் கிடைத்த தண்டனை மகா பயங்கரமானது. ஆம்! நீதியற்ற, கருணையற்ற, மரண தண்டனைதான். 

அன்று பௌர்ணமி. யமுனா நதி தீரத்தில் ஒரு வீரனின் சவம் அடக்கம் செய்யப்பட்டது. பாதுஷாவின் கொடிய சட்டத் தினால் ஒரு வீரன் அங்கு அநியாயமாகப் புதையுண்டான். அந்த வீரனின் சமாதிமீது விழுந்து ஓலமிடும் ஓர் இளம்பெண்ணின் குரல் வானத்தை எட்டியது. அவள் கண்கள் அழுதழுது ரத்தம் போல் சிவந்துவிட்டன. சாந்தமாகச் சென்று கொண்டிருந்த யமுனையும் அதைக் காணச் சகியாதவள் போல் கொந்தளித்து அலைகளை எழுப்பிக்கொண்டு சென்றாள். அமைதி நிறைந்த அந்த இரவில் துக்கித்துப் புலம்பிய ஒரு பெண்ணின் குரல் அந்தப் பிரதேசத்தைச் சுற்றி எதிரொலித்தது. 

“வாஸந்திகா!” என்றது ஒரு குரல். துக்கத்தில் புதைந் திருந்த வாஸந்திகா, அந்தக் குரல் கேட்டுத் திடுக்கிட்டாள். எதிரில் இளவரசி மும்தாஜ் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்கள் நீரைப் பொழிந்துகொண்டிருந்தன. 

சோதரீ ! வாஸந்திகா! என்னை மன்னிப்பாயா? நான் இதை எதிர்பார்க்கவில்லை; பாதுஷா இம்மாதிரி நியாயமற்ற முறையில் நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வாஸந்திகா! உன்னை மன்னித்தேன் என்று ஒரு வார்த்தை சொல்லேன்!” என்று மண்டியிட்டு வணங்கினான்.

எல்லையற்ற துக்கத்தை ஒரு நொடியில் அநுபவித்த வாஸந்திகாவின் மனத்தில் சாந்தத்திற்கு இடமில்லை.மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும் தன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு அவள் மன்னிப்பு அளிக்க விரும்பவில்லை. அந்த நிலவொளியில் வீரத்துடன் எழுந்து நின்றாள். கொந்தளிப்புடன் செல்லும் யமுனையைப் பார்த்தாள். திடீரென்று ஒரு வறண்ட புன்சிரிப்பு இதழ்க்கடையில் தோன்றி மறைந்தது. 

“தேவி! இந்த நீதியற்ற உலகத்தில் எனக்கு இனி வசிக்க இடமில்லை. உன்னிடம் வருகிறேன். பிரம்மாண்டமான உன் ஜலப்பிரவாகத்தில் எனக்கும் சிறிது இடம் கொடு” என்று கைகூப்பி வணங்கி யமுனையில் இறங்கினாள். கொந்தளித்துச் செல்லும் யமுனையும் அவளை ஸ்வீகரித்துக் கொண்டாள்.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *