கூப்பிட்றேன்..கூப்பிடுதேம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 8,499 
 

லெவல் 1

“கூப்பிடறேன்.. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு..

எப்போ ?-

கூப்பிடறேன் டா செல்லம்..வெயிட்…(ஸ்மைலி)

கட்டாயம் கூப்பிடுவீங்க தானே.

அய்யோ வீடியோ காலா, ஆடியோ காலா..கேட்கலையே.

கேட்டிருக்கனும்..எதுக்கும் தலையை வாரிட்டு இந்த அழுக்கு நைட்டியை மாத்திட்டு அவனுக்குப் பிடித்த வெளிர் மஞ்சள் நிற டாப் போட்டுக்கலாமா..

அய்யோ.. அவனாவது வீடியோ கால் பண்றதாவது..

இடியட்..

“கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா”

லெவல் 2

கூப்பிடுவார் கூப்டுவாரில்ல..ம்ம்

நேரமாகுதே.. கூப்பிடுவார்தானே! பாவம்.. வேலை அதிகமாக இருந்திருக்குமோ..வீட்டில யாராவது வந்திருப்பாங்களோ..

அப்படித்தான் இருக்கும்…

அய்யோ.. ஐந்து மணி நேரமா போனை வச்சிக்கிட்டு அதையே பார்த்துக்கொண்டு … கூப்பிடுதேன்னு சொல்லிட்டு இது என்னடா .. ப்ளீஸ்.. கூப்பிடு..

கூப்பிடுவான் தானே..

“கூப்பிட்றேன்..கூப்பிடுதேம்மா..”

லெவல் 3

அய்யோ.. கூப்பிட்டுட்டாரே…

ச்சோ.. அவரில்ல.. இது யாரு இப்போ பார்த்து கூப்பிடறது.. யுஏஸ் சிலிருந்து நண்பர் சிவா ரொம்ப நாளாச்சே பேசி.. எடுக்கவா..

வேண்டாம்.. சிவா க்கிட்டே பேசும்போது அந்த போன் வந்துட்டா.. ந்னோ.. ந்னோ..

வேண்டாம்.. இப்போ .. யாரு போனையும் எடுக்கப்போறதில்ல.. சாரி சிவா..

யு ஆர் மை பெஸ்ட் ஃப்ரண்ட்.. எதையும் நான் சொல்லாம கூட நீ புரிஞ்சிப்பே சிவா..

சாரி சிவா.. இப்போ அந்த போனுக்காக நான் காத்திருக்கேன்..ப்ளீஸ் சிவா..

போனில் சார்ஜ் இருக்கா…

இருக்கு இருக்கு…

போன் வரும் தானே…

வரும்.. பொறுமை பொறுமை..

“கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா”

லெவல் 4

“உன்னை ஒதுக்கி வச்சிட்டு என் வாழ்க்கையில என்ன இருக்குதும்மா..”

அய்யோ.. இந்த ஒற்றைவரி போதுமே.. உயிரை விட்டுடலாமே..

“கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா”

ஒதுக்கித்தான் வச்சிட்டாரோ..

வேண்டாதவளாகிவிட்டேனோ..

ஏன்?

வேணும்னா வந்து சாப்பிடவும்

வேண்டாம்னா தூக்கி வீசவும்

ஒதுக்கி வைக்கவும் ஒதுக்கியதை அள்ளி

குப்பையில் கொட்டவும் எழுதிட்டு

கிழித்துப்போடவும்

ச்ச்சே.. அப்படி எல்லாம் இருக்காது.

நள்ளிரவில் அழைத்தால்.. என்னசெய்வது?

ட்டேய்.. உனக்கென்ன அம்புட்டு துணிச்சல் இருக்கா?

போன் வைப்ரேஷனில்….

அழைக்கிறானோ..

அப்படியே சிறகை விரிச்சி பறந்திடனும்.

நேற்று அந்த ஜோடிப்புறாக்கள் முத்தமிட்ட அதே

ஜன்னலுக்கடியில் அவனை முத்தமிடனும்…

அவன் அவசரம் அவசரமா ‘பை’ னு சொல்வதற்குள்

அந்தச் சொற்களைத் தடவி தடவி அது வெளியில்

வராமல் முத்தங்களால் நனைச்சி.. ஹைய்..

‘ய்யேய்.. செல்ல முட்டாள்.. சாப்பிட்டீங்களா முட்டாள்?

செல்லம்… செல்லக்குட்டி.. என் தங்கம்.. என்

ஸ்டுபிட் செல்லம்…” ..ஹைய்ய்ய்ய்..

தோகை மெல்ல மெல்ல விரிகிறது.

மேகத்தைப் பார்த்து ஆட ஆரம்பிக்கிறது..

ஆண் மயில் அழகுதான்..

அந்த அழகுக்கு முன்னால் மேகம் ஒரு

உடைந்த துண்டு..

ஆடு மயிலே.. ஆடு…

ஆடுவாய் தானே… மழைமேகம் கருக்கொண்டு

காத்திருக்கிறது.. ஆடுமயிலே ..ஆடு..

“கூப்பிடுவான் தானே.. “

புரண்டு புரண்டு படுக்கிறேன்..

எட்டுதிசைகளிலிருந்து அதிர்வலைகள்..

“கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா”

லெவல் 5

மீனாட்சி… அடியே.. என் பச்சக்கிளியே..

உனக்கும் அவனைத் தெரியும் தானடி..

அவன் சொன்ன எல்லா சொற்களுக்கும் சத்தியத்தின் சாட்சியா நின்னவா நீ ஒருத்தி தானடீ..

நீ இப்போ சொல்லுடி.. எங்கிட்ட

கூப்பிடுவான் தானே…

பழைய சத்தியங்கள்

பழைய ஏற்பாடுகள்

புதிய சத்தியங்கள்

புதிய ஏற்பாடுகள்

எல்லா சத்தியத்திலும் சத்தியங்கள் ஏன்

சிலுவையில் தொங்குகின்றன?

‘நம்பு.. என்னை நம்பு.. செல்லக்குட்டீ..

அவசரப்படாதே .. பொறுமை பொறுமை..

என்னை நம்பு செல்லம்.. “

ஆமா எதை நம்புவது..?

நேற்று சொன்னதையா..நேற்றுக்கு முன் சொன்னதையா…போனப்பிறவியில் தாமிரபரணிக்கரையில் சொல்லிவிட்டுப் போனாயே.. அதை நம்பச் சொல்கிறாயா… எதை நம்புவது..?

பச்சைக்கிளி ஏன் என்னை விட்டு பறந்துப் போகிறது..? போ.. போய்விடு..உன்னைச் சாட்சியாக்கியது என் குற்றம்..போ.. பறந்துப் போய்விடு..

மீனாட்சியின் தோள்களில் அமர்ந்து கொள். அவளிடம் மறக்காமல் இந்தக் கதையை சொல்லிவிடு..அவளும் பெண்தானே..

எல்லா பிறவிகளிலும் அவனுக்காகவே பிறந்தவள்.. அவள் அறிவாள்..ஒரு முறை வந்துப் பார்த்தாயா..நீ நலம் தானா என்று கேட்டாயா கேட்டாயா…

சத்தியம்

சத்திய சோதனை

நேற்றைய சத்தியங்கள்

இன்றைய சத்தியத்தில் எரிந்துப் போகின்றன.

எல்லா சத்தியத்திலும் எரிவது ஒரே முகவரியாக

இருப்பது ஏன்?

இல்லை இல்லை..

இது அந்த சத்தியமல்ல..

இது வேறு சத்தியம்..

இதை மீற முடியுமோ..

மகளின் வாசனை வீசும் போதெல்லாம்

மனசின் வாசனையாய் ..

மீண்டும் மீண்டும் மலராதோ.. இந்த முகம்!

மறக்க முடியுமோ..

சொன்ன சொல் வெறும் சொல் என்று சொல்லி

இனியும் விலக்க முடியுமோ..

முடியுமோ.. முடியும் மோ..

“கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா”

லெவல் 6

நல்லா இருக்கியா நீ..

ரொம்ப நாளாச்சி.. உங்கிட்ட பேசி..

உங்க இட த்தில கொரொனா எப்படி இருக்கு?

பயம்மா இருக்குப்பா..

எங்க ப்ல்டிங்கில் ரெண்டு பாசிட்டிவ் கேஸ்

என்ன நடக்குதுனே தெரியலப்பா..

ஆமா.. பிரேமாவுக்கு போன் செய்தியா..

எப்படி இருக்காளாம்..?

என்ன லண்டன் ல மாட்டிக்கிட்டாளா

அடப்பாவமே

என்னமோடீ.. எல்லார்க்கிட்டேயும் பேசனும் போல

இருக்கு. அதுதான் உன் நம்பரைத் தேடி போன்

செய்தேன். டேக் கேர். ஐ லவ் யு

அய்யோ.. இந்த போனுக்கு என்ன ஆச்சு..?

அவரோட போன் மட்டும் ஏன் வரல..?

யார் யாரெல்லாமொ நீ நல்லாயிருக்கியானு

கேட்காங்க.. அவரு ஏன் கேட்கலை..

எங்க்கிட்டே பேசாமா இருக்கதுக்கு ஆயிரம்

காரணம் இருக்கலாம். ஆனா இப்போ இந்த

லாக்டவுண் டைமில்.. “ நீ நல்லா இருக்கியாடீ”

கேட்பதற்கு ஏன் தோனல..

“க்கூப்பிடறேங்க .. கூப்பிடறேன்..”

அவர் கூப்பிடுவார் தானே…

அந்த “யேய் என்ன செல்ல முட்டாளே”

அந்தக் குரல் கேட்கனும்..

கூப்பிடுவார் தானே..

“கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா”

லெவல் 7

மேடம்.. ப்ளீஸ்.. இந்த செல்போன்ல சார்ஜ் இருக்கானு பார்த்து சொல்லுங்களேன்..

அவரு கூப்பிடுவேன்னு சொன்னாரு..அதுதான்… கேட்கறேன். சார்ஜ் இருக்கில்ல.

அவரு கூப்பிடுவாரில்ல மேடம்.

“கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா”

இது என்னடா… காலையிலேயே சாவுக்கிராக்கியா இருக்கு…

போம்மா.. போ.. ரோட்டில வந்து நின்னுக்கிட்டு..

லெவல் 8

டாக்டர்.. இந்தம்மா.. கையில செல்போனை வச்சிக்கிட்டு ரகளை செய்றாங்க..கையிலிருந்து செல்போனை யாருக்கிட்டேயும் கொடுக்க மாட்டேங்கிறாங்க…

ப்ளீஸ்.. இவுங்களோட ப்பெரிய தொந்தரவா போச்சு..

ஆண்ட்டி..ப்ளீஸ்.. உங்க செல்போனை எங்கிட்ட கொடுங்க.. நான் இந்த டிராயர்ல வைக்கறேன்.

யாரும் எடுக்க மாட்டாங்க..

இப்போ இந்த சிஸ்டர் உங்களுக்கு கையில ஊசிப்போடுவாங்க.. வலிக்காது..

“டாக்டர்.. இது என்ன ஊசி..? இந்த ஊசிப்போட்டா எனக்குத் தூக்கம் வந்திடுமா… தூங்கிடுவேனா..நான் தூங்கும்போது.. போன் வந்துச்சுனா..

“கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா”

அய்யோ.. அவரு போன் பண்ணுவாருங்க..மாட்டேன்… ஊசி வேண்டாம்… நான் தூங்க மாட்டேன்..என்னைத் தூங்கச் சொல்லாதீங்க.. ந்னோ..தூங்கமாட்டேன்…”

ந் நோ… இது தூங்கறதுக்கில்ல… நீங்க பழைய மாதிரி ஆக்டிவ்வா இருக்கறதுக்குத்தான் இந்த ஊசி மருந்தெல்லாம்…

அப்படியா.. அப்போ சரி… நான் ஆக்டிவா இருக்கனும்..

லெவல் 0

ஆயிரமாயிரம் தேவர்கள்
முக்கடவுள்கள்
வேத முனிகள்
வித்தகர்கள்
சரித்திர புருஷர்கள்
சாணக்கிய வித்துக்கள்
கவிஞர்கள்
..
இவர்களின்
சந்திப்பில் எல்லாம்
பிறக்காதக் காதல்..
எம பாதகா..
உன்னைச் சந்திக்காமலேயே
ஏன் பிறந்ததடா ?
எப்படி வளர்ந்ததடா ?

உன்னைப் பார்க்க வேண்டும்
உன் குரல் கேட்க வேண்டும்
உன்னைத் தீண்ட வேண்டும்
அமுதமே நஞ்சான என் பிறவிக்கடலே
உயிர்க்காற்று
கண்ணிமைகளை
மூடவரும்
சொற்ப நேரத்தில்
சருகுகளின் தோட்டத்தில்
விறகுகளில் பூத்த
நெருப்புமாலையுடன்
வருகிறாய்.. வருகிறாய்..
இதோ நம் சந்திப்பு
யுகம் யுகமாய் காத்திருந்த சந்திப்பு
நடக்கப்போகிறது…
இதோ… இன்னும் கொஞ்ச நேரத்தில்…
மெல்ல மெல்ல அவள் கண்கள் மூடின..
அந்த நள்ளிரவில் அவள் போனிலிருந்து
வைப்ரேஷன்ன்ன்ன்ன்…

““கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா”

“கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா”

அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *