கலைஞனும் சிருஷ்டியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 14,903 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புத்ர, நத்தையின் வயிற்றிலும் முத்துப்பிறக்கலாம். இலக்கியம், சிற்பம், சித்திரம் போன்ற அருங் கலைகளும், ஓரோர் வேளை மக்களிற் கீழானவன் என்று மதிக்கப்படுபவர்களிடத்திருந்தும் பிறக்கின்றன. கலை ஞர்களும் இரத்தமும் – சதையும், உள்ளமும் – உணர்வும் கொண்ட மனிதர்களே. ஆசாபாசங்கள் அவர்கட்கும் உண்டு. அவைகளிற் சிக்குண்டு அவர்களும் தவறிவிடலாம். ஆனால் அதற்காக அவர்கள் கலாமேதையை மறுத்துவிட முடியுமா? ஏன், கிழக்கு நாட்டுச் சித்திரக் கலையின் பெருமைக்குச் சான்றாக, அக்கலையின் இலட்சியமாக மிளிரும் ‘சீகிரியா’ச் சித்திரங்களை எடுத்துக் கொள்வோமே. அதன் சிருஷ்டி கர்த்தாவைப் பற்றி இலங்கையின் பூர்வ சரித்திரம் ஓர் மாசுபடிந்த கதையைச் சொல்கிறது. ஆனால் அச்சித்திரங்கள் ‘அஜந்தா’ச் சித்திரங்களைப்போல அமரத்துவம் பெற்றவை என்பதை உலகமே ஒப்புக்கொள்கிறது. அந்தச்சித்திரங்கள் பிறந்த கதையைத்தான் இன்று உனக்குச் சொல்லப் போகிறேன்; கேள். கதை கேட்க முன் எழுந்து என் முன்னால் முகந்தெரியும்படியாக வந்திரு. விளக்கையுத் தூண்டி விடு.

***

மைந்த, ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னே அதுரதபுரத்து அரசமாளிகை என்றைக்கும் போலக் குதூகலமாகவே இருந்தது. வடக்கேயிருந்து படையெடுத்து வந்த பாண்டியர்களைத் துரத்தி, அவர்கள் படையெடுப்பின் போது அழிக்கப்பட்ட புத்த விகாரங்கள் எல்லாவற்றையுந் திருத்தி, நாட்டின் அபிவிருத்திக் காய்க்கடல் போலப் பரந்து கிடந்த காலவீவாக் குளத்தைக் கட்டி எல்லா வழிகளிலும் மக்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்ட தாதுசேன மன்னனின் அரண்மனையிற் குதூகலத்திற்குக் குறைவாகவா இருக்கும்?

மன்னனின் ஏக புத்திரி கருணாவதிதேவி தன் தந்தையின் படைத் தலைவன் வசபனைக் காதலித்து, தன் பிதாவின் அனுமதி பெற்று அவனையே மணந்து கொண்ட அந்த மன நிறைவில் இன்பத்தின் எல்லையையே கண்டு விட்டவள் போல அந்தப்புரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். மன்னனின் இளைய மைந்தன் முகலானன் தன் தந்தையில் மக்கள் வைத்திருந்த அபிமானத்தைக் கண்டு மனம் பூரித்துப் போய் அரண்மனை இன்னோர் புறத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஆனால்,மன்னனின் மூத்த மகன் காசியப்பன் மட்டும் அந்த அரண்மளையின் இன்ப நிறைவிற் பங்கு கொள்ள முடியாமல் மனம் குன்றிப் போய் ஒதுங்கிக்கொண்டிருந் தான். ஏன்? ‘அவன் அன்னை அரச குடும்பத்தவளல்லவாம். ஆகவே அவன் தாதுசேன மன்னனின் மூத்த மகனாக இருந்தும் அவனுக்கு அரசுரிமை கிடையாதாம்’.

பிறப்புரிமை மறுக்கப்பட்ட எவனுக்காவது நிம்மதி கிட்டுமா? அதுவும் சிந்திக்கத் தெரிந்த காசியப்பனால் நிம்மதியோடிருக்க முடியுமா? “நான் அரச குடும்பத்துப் பெண்ணிடத்திற் பிறக்காதது என் குற்றமா? அல்லது என் தந்தையின் குற்றமா? இந்தக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டியது நானா?” என்றெல்லாம் அவனுள்ளம் கேட்டுக்கொண்டிருக்கும். ஆனால், இந்தக் கேள்விகளின் நேரான பதிலை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. காசியப்பனின் மனம் வெந்து புழுங்கியது. இந்த ஏமாற்றத்தையும் மனமடிவையும் மறப்பதற்குக் காசியப்பனுக்கு ஒரே வழி தான் இருந்தது. அதுதான் கலை. இளமையிலே அவனோடு கூடிப் பிறந்து விட்ட சித்திரக் கலை!

அழகை ரசிக்கத் தெரிந்த அவன் ரசிக உள்ளமும், சிருஷ்டி தத்துவத்தைத் தெரிந்த அவன் பண்பட்ட மனமும், சித்திரக் கலையிலே லயித்து வெளியுலகையே மறந்தன.

காலம் கடந்தது. காசியப்பன் கைப்பழக்கத்தில், தேர்ந்த சித்திரக்காரனாகவே ஆகிவிட்டான்.

அரண்மனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. மன்னன் மகள் கருணாவதிக்கும் அவள் மாமிக்கும் இடையில் சாதாரணமாகத் தொடங்கிய துவந்த யுத்தம், மன்னனின் செங்கோலைக் கொடுங்கோலாக மாற்றி விட்டுத்தான் நின்றது! ஆம், தன் ஒரே மகள் மேல் வைத்திருந்த பாசத்தில், ‘அவளைக் கொடுமைப்படுத்தினாள்’ என்ற குற்றத்திற்காய்த் தாதுசேன மன்னன், வசபனின் அன்னைக்குக் கொலைத் தீர்ப்பே அளித்து விட்டான்! மன்னனின் நீதி போன போக்கைக் கண்டு மக்கள் திகைத்தனர்.

தன் தாய்க்கு வந்த கோர முடிவைக் கண்டு மனம் புழுங்கிச் சாம்பிய வசபன், பழிக்குப் பழியாக அரசனையே கொன்றுவிட வேண்டும் என்று தன்னுள்ளே சபதம் பண்ணிக்கொண்டான்.

வசபனுக்கு ஏற்கனவே காசியப்பன் அரசுரிமை தனக்கில்லையே என்று மனம் வெந்து கொண்டிருப்பது தெரியும். எனவே தன் சபதத்தை நிறைவேற்றக் காசியப்பனைக் கருவியாக்க முயன்றான்.

சாம்பருள் அக்கினிபோலக் காசியப்பன் மனத்திலே மறைந்து கிடந்த மண்ணாசை, வசபனின் துர்ப்போதனை என்ற காற்றுப் படக்கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. சாதாரணச் சைத்ரீகனாக இருக்கும் நான் இவ்விலங்கா புரியின் மன்னனாக மட்டும் ஆகி விட்டால் இத்தீவையே ஓர் கலைக்கூடம் ஆக்கிவிடலாமே என்ற எண்ணத்தில், வசபனின் துணையுடன் காசியப்பன் எவருமே தெரிந்து கொள்ள முடியாதவாறு தன் தந்தை யை ஓர் சுவருள் மூடிக் கட்டுவித்துக் கொன்றான்!

மைந்த! உனக்குத் துக்கமாயிருக்கிறதா? அல்லது சித்திரம் பிறந்த கதையைச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுக் கொலையும் சூழ்ச்சியுமான ஓர் கதையைச் சொல்கிறேன் என்று அலுத்துக்கொள்கிறாயா? நான் என்ன செய்யட்டும்? கதைக்குள் கதையாக வரும் இந்தக் கதை இல்லாவிட்டால் நான் சொல்ல எடுத்துக் கொண்ட கதைக்கு அத்திவாரமே இல்லாமற் போய் விடும். சரி; இனி ஒரே மூச்சில் நேரடியாக என் கதை யைச் சொல்கிறேன். நாடியைத் தாங்கிக்கொண்டிருக் கும் கையை எடுத்துவிட்டு நிமிர்ந்திருந்து கேள்.

***

நேய, நீதியிற் பிறழ்ந்த தாதுசேன மன்னன் மேல் மக்கள் வெறுப்படைந்திருந்தார்கள் என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா? ஆகவே மன்னன் மறைந்து விட்டபோது மக்கள் ஒன்றும் அதிகமாகக் கவலைப்பட வில்லை. தந்தையைக் காணாமல் முகலானனும் எங்கோ மறைந்து விடவே காசியப்பனையே மக்கள் இலங்கைக்கு அரசனாக்கினர். அவன் அரசனானதும் அரச கருமத்தின் பளுவைச் சுமக்கும் பொறுப்பில் தன் உயிர்போன்ற கலையையே சில நாட்களுக்கு மறந்து போனான்!

மாதங்கள் கடந்தன.

தாதுசேன மன்னன் கொலை செய்யப்பட்டு விட்டான் என்ற செய்தி எப்படியோ மக்களிடை பரவிற்று. காசியப்பன் நெஞ்சம் துணுக்குற்றது. இனந்தெரியாத பயம் அவன் மனதை உலுப்பத் தொடங்கியது.

அன்று சித்திரா பௌர்ணமி. வானத்து முகட்டிலே தேய்த்து மினுக்கிய வெள்ளித் தட்டைப்போலச் சந்திரிகை தொங்கிக் கொண்டிருந்தது. அரண்மனை நிலா முற்றத்திலே மன்னன் காசியப்பன் எதையோ யோசித்த வாறு நின்று கொண்டிருந்தான்.

ஆம்; நிலவு எல்லாருக்கும் சமமாகத்தான் காய்கிறது. என்றாலும் அது ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொருவிதமான எண்ணங்களைத்தான் கிளப்பிவிடுகிறது. இளைஞர்களின் மனத்திலே ‘அன்ன நடை, மின்னலிடை, கன்னல்மொழி’ என்று இன்பக் கனவுகளை எழுப்பும் அந்தப் பூரணை நிலவு இளைஞனும் சிறந்த ரசிகனுமான காசியப்பனின் மனதில் மட்டும் ஏதேதோ பயங்கர எண்ணங்களைத்தான் கிளறி விட்டுக்கொண்டிருந்தது.

அவன் கண்ணெதிரே சந்திரனின் ஒளி வெள்ளத்திற் பாலாபிஷேகம் பண்ணப்பட்ட கற்சிலைகளைப் போலக் காட்சியளித்துக்கொண்டிருந்த அநுரதபுரத்துக் கட்டிடம் ஒவ்வொன்றும் அவன் தந்தையின் சமாதிபோலவே தோன்றியது. அரண்மனையின் எதிரே இருந்த மகாவிகாரையிற் பூசைபண்ணிக் கொண்டிருந்த பிக்குகளின் பாலி மந்திர உச்சாடனத்தில்–ஏன், ‘முழவினில் வீணையில் முரளி யாழினில் தழுவிய குழலினில் சங்கில் தாரையில்’ என்ற எல்லாவற்றிலுமே சொல்ல முடியாத சோகம் ஒன்று இழைந்தோடுவது அவன் காதுகளிற் கேட்டது. தியானத்திலாழ்ந்திருந்த புத்த பகவானின் காலடியிற் கொட்டப்பட்டிருந்த புது மலர்களின் காற்றோடு வந்த மணத்தில், சாம்பிராணியின் வாசனையில் எல்லாம் பிரேத வாடை அடிப்பதை அவன் முகர்ந்தான். அவன் எதிரே தாதுசேன மன்னனே தோன்றி, “புத்ர! உன் தந்தைக்கா இந்தக் கோர முடிவைத் தர தீர்மானித்துவிட்டாய்?” என்று கேட்டான். “அப்பா” என்று கதறிக்கொண்டோடிய காசியப்பன் எதிரேயிருந்த தூணிலே தடாரென்று முட்டிக் கொண்டான்!

மைந்த, இவ்வுலகத்தையே இலகுவாக ஏமாற்றி விடலாம். ஆனாலும் எவனும் தன் மனச் சாட்சியைத் தானே ஏமாற்றிக்கொள்ள முடியாது. ‘தந்தையைக் கொன்று விட்ட மகாபாதகன் நான் ஆயிற்றே’ என்ற மனச்சாட்சியின் உறுத்தலில் காசியப்பன் அன்றைக்குப் போலவே ஒவ்வொரு நாளும் தன்னுள் அழிந்து கொண்டிருந்தான்!

தூணிலே முட்டிக்கொண்ட காசியப்பன் தன் நினைவு பெற்றுத் திரும்பினான். இரண்டாஞ் சாமப் பூசை முடிந்து தெருவிலே ஜனங்கள் கும்பல் கும்பலாகப் போய்க்கொண்டிருந்தனர். அவர்கள் நடையிலே ஒரு வருடத்துக்கு முன்னாலிருந்த வேகமில்லை… உயிரில்லை….

காசியப்பனின் மனக்கறங்கு சுழன்றது. இன்று நான் இவ்விலங்கைக்கு மன்னன். ஆனால் பிரஜைகள் யாராவது என்னிடம் அன்பாக இருக்கிறார்களா? மாதம் மூன்று மாரி தவறாமல் பெய்கிறது’ என்று கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்லிக்கொண்டிருக்கும் மந்திரிக்கு மட்டுமா நான் மன்னன்? அரசவையிலே, வயிற்றுச் சோற்றுக்கு மாரடிக்கும் கட்டியக்காரன் ‘ராஜாதிராஜ. ராஜமார்த் தாண்ட, ராஜகுலதிலக, ராஜ பராக்கிரம ராஜகம்பீர காசியப்ப மகாராஜா வருகிறார்’ என்று தொண்டை வறளக் கத்தினால் மட்டும் நான் மன்னனாகிவிட முடியுமா? தந்தையைக் கொன்ற பாதகன் என்பதைத் தெரி ந்த எந்தப் பிரஜையாவது என்னை மன்னன் என்று ஒப்புக்கொள்வானா?

நேற்றுச் சாயந்திரம் நான் வெளியே போய் வந்து கொண்டிருக்கையில் வயலிலே உழவன் ஒருவன் கால வீவாக் குளத்திலிருந்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான். அவனும் என்னைக் கண்டபோது முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு….

சை, பிரஜைகளை ஏன் சொல்ல வேண்டும்? என் சதையின் சதையான, இரத்தத்தின் இரத்தமான தம்பி. முகலானனே என்னோடு வாழக்கூடாதென்று கருதி இந்தியாவுக்கு ஓடிவிட்டானே. தங்கை கருணாவதியும் என் முகத்தில் விழிப்பதில்லையே…

காசியப்பன் எண்ணங்கள் திடீரென்று எதிர்காலத்துக்குத் தாவின . ‘இன்னும் சில நாட்களில் பிரஜைகளே குமுறியெழுந்து புரட்சி பண்ணி என்னைச் சிங்காதனத் திலிருந்து அகற்றுவார்கள். மணிமுடியும் செங்கோலும் போனாற் போகட்டும்; மக்களபிமானம் இல்லாதபோது இவை மட்டும் ஏன்? ஆனால் ஐயோ! எதிர்காலச் சந்த தியினர் தந்தையைச் சுவருள் வைத்துக்கட்டிக் கொன்ற மகாபாதகன் என்று என்னைச் சொல்வார்களே. சரித்திர ஏடுகளில் என் தந்தையின் இரத்தத்தையும் கண்ணீரையும் கொண்டல்லவா என் பெயர் எழுதப்படப் போகிறது……..’

இப்படி எண்ணிய போது காசியப்பனின் நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது. இனி மேல் எதையுமே எண்ணிப் பார்க்கத் திராணியற்றவனாய் மரத்துப்போய் நின்றான் அம்மன்னன்! சில நிமிடங்கள் அப்படி நின்றிருப்பான். மறுபடியும் அவன் சிந்தனை ஓடியது.

தந்தையைக் கொன்ற பாதகன் என்ற மாசைத் துடைக்க ஒரு வழியுமே எனக்கில்லையா? அந்த அவமானத்தை மிஞ்சி நிற்கக் கூடியதாக என்னால் எதையுமே விட்டுச் செல்ல முடியாதா?……’

அவன் இதயத்திற்குத்திட்டு நின்ற இக்கேள்விகளின் கனத்தில், அவற்றிற்கு விடையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், வெளியுலகமே ஓடாமல் உருளாமல் ஸ்தம் பித்து நின்றது! இலை அசையவில்லை. காற்றாடவில்லை…அந்த நிலைப்போடு நினைப்பாகக் காசியப்பனும் நின்றான். நின்றுகொண்டேயிருந்தான்.

சிறிது நேரத்தில் அவனுக்குள் அவனே அவனுக்காக எழுப்பிக்கொண்டவினாக்கட்கு விடை வந்தது. ‘ஆம்; காலத்தையுங் கடந்து புகழைத் தர வல்ல சக்தி கலை கட்குத்தான் உண்டு. எனக்குச் சித்திரக்கலை நன்றாக ‘கைவரும். அந்தக்கலையின் மூலம் நான் இறவாத புகழைத்தேடிக்கொண்டால்……….

வருங்காலச் சந்ததி என் சிருஷ்டிகளைக் கண்டு என்னைக் கலைஞன் என்று போற்றும். என் சிருஷ்டிகள் உயர்ந்தனவா என்று பார்க்கும் ரசிக நோக்கில் என்னை மறக்கும். என்னோடு ஒட்டியுள்ள மாசை மறக்கும். ஆம்; சித்திரக் கலையின் சிகரத்தையே நான் எட்டிப்பிடித்து விட்டால் என்னோடு ஓட்டிக்கொண்ட மாசு மறைந்தே தான் போகும்.’

பிரிய, கலைஞன் காசியப்பன் தீர்மானித்து விட்டான். அவன் மனத்தில் ஓர் அமைதி: புயலுக்குப் பின் ஏற்பட்ட ஓர் பூரண அமைதி நிலவிற்று. மகா விகாரையிலிருந்து நான்காம் சாமப் பூசை ஆரம்பமானதை அறிவித்துக்கொண்டிருந்த வெண்கல மணிகளின் நாதம் காற்றிலே தவழ்ந்து வந்தது. இதமான வைகறையின் குளுமையில், உள்ளமும் உணர்வும் புத்துணர்ச்சி பெற்றுவிட்டதைப் போன்றிருந்த மன்னனின் நம்பிக்கையினுதயம் போல வானச் சரிவிலே விடி வெள்ளி முளைத்தது, காசியப்பன் போய்ப் படுத்துக்கொண்டான்.

அடுத்த நாளிலிருந்தே மன்னன் பெரு முயற்சி செய்து சித்திரக் கலையின் நுணுக்கங்களையும் வர்ணச் சேர்க்கையின் இரகசியங்களையும் தெரிந்து கொண்டான்.

கடைசியாய்த் தன் சித்திரக் கலையைப் பிரயோகிக் கத்தக்கதாய் அநுரதபுரத்திற்குத் தென்கிழக்கே அடர்ந்த காட்டினுள் இருந்த ஓர் குன்றைத் தேர்ந்தெடுத்தான். அம்மலையைக் குடைந்து அதிலே அழகொழுகும் சித்திரங்களை எழுதி இரண்டு ஆண்டுகளிலே, சிங்கம் படுத்திருப்பது போன்ற தோற்றத்தினால் ‘சிகிரியா’ என்றழைக்கப்பட்ட சித்திரக்கூடம் காசியப்ப மன்னனின் மாசு துடைக்க வந்த ஆசைக்கனவு – பிறந்தது! காலத்தாற் சாகாத, காலத்தின் ஏலத்தால் மலியாத கீழை நாட்டுக் கலைக்கோவில் பிறந்தே விட்டது!

புத்ர, கதையும் முடிந்துவிட்டது. காசியப்பன் அன்றிரவு எண்ணியதைப் போலவே அக்குகையின் அமர ஓவியங்களைக் கண்ட எவனும் அந்தத் தேவமாதர்களின் வளைக்கரத்திலும், ஒடுங்கிய இடையிலும், திரண்ட மார்பிலும், பேசும் விழிகளிலும் தன்னை மறந்து அச்சித்திரங்களின் சிருஷ்டிகர்த்தாவைப் பாராட்டியே தீருவான். அச்சித்திரங்கள் காசியப்பனுக்கு மட்டுமல்ல இலங்கைத் தீவிற்கே இன்னமும் புகழையும் பெருமையையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. சரி, நேரம் போனதே தெரியவில்லையே. போய்ப் படுத்துக்கொள். நாளைக்கு வேறோர் கதை சொல்லுகிறேன்.

– வீரகேசரி-30-11-52

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *