(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழ் நாட்டின் மூன்று பிரிவுகளுள் ஒன்று சோழ நாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதனைக் ககந்தன் என்னும் சோழன் அரசாண்டான். அவன் காவிரிப்பூம்பட்டினத் தைத் தலைநகரமாகக் கொண்டிருந்தான். காவி ரிப்பூம்பட்டினம் துறைமுகமாகவும் விளங்கிற்று.
ககந்தன் ஒரு நல்ல அரசன். அவன் உயர்ந்த குணங்களை எல்லாம் பெற்றிருந்தான். குற்றங்கள் செய்யாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். குற்றங்களே ஒருவன் வாழ்வைப் பாழாக்கும் என்பது நம் – பெரியோர் கண்ட உண்மை.
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.
– திருக்குறள்.
குடி மக்களையும் எத்தகைய குற்றமும் செய் யாதிருக்குமாறு தடுத்தான். குற்றவாளி என் றறிந்தால் எப்படியும் தண்டித்தே தீருவான். குடிகளும் இவனிடத்தில் நன்மதிப்பு வைத்திருந்தனர். ஆதலினால் இவன் பெயரால் காவிரிப்பூம்பட்டினத்தையும் அழைக்கலானார்கள். பட்டினம் காகந்தி என்று அழைக்கப்பட்டது.
ககந்தனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் உண்டு. அறிவு நிறைந்த மக்கள் பிள்ளைகளைப் பெறுகின்றனர்; அறிவு குறைந்த விலங்குக் கூட்டங்களும் தம் இனத்தைப் பெருக்குகின்றன; பறவைக் கூட்டங்களும் மற்றவையும் அவ்வாறே செய்கின்றன. உலகத்தில் காணப்படும் எல்லா உயிரினங்களும் இத்தொழிலை அறிந்தோ அறியாமலோ செய்து வருகின்றன. இதில் சிறப்பு என்ன?
பெற்றோர் அறிவுடன் இருத்தல் வேண்டும். அவர்கள் பெறும் சிறுவர் பேரறிஞர் களாக விளங்குதல் வேண்டும். இல்லையேல் இக்குழந்தைகள் தம்மைப் பெற்றோருக்கு இழிவைத் தேடி வைப்பார்கள். “ஐயோ! இந்தப் பிள்ளையை எந்தக் கொடியன் பெற்றானோ? இவ்வளவு கொடுமைகளை இது செய்கின்றதே,” என்று ஊரார் இழிகுண மக்களைப் பேசுவதைப் பார்க்கின்றோம். ஊரார், ஊர் நடுவில் நின்று குலம் முதலியவற்றைப் பற்றிக் குறைசொல்லா ல் இருக்க வேண்டும் என்றால் அறிவுடைய பிள்ளைகளைப் பெறுதல் வேண்டும். அல்லது பிள்ளைகளைப் பெறாமல் இருத்தல் நல்லது. கெட்ட பிள்ளைகளைப் பெறும் பெற்றோர் தம் குலத்திற்குப் பழியையும் இழிவையும் பெற்று வைத்துக்கொண்டோராவர்.
நன் மக்களைப் பெற்ற பெற்றோர் உலகத் தோரால் நன்கு மதிக்கப்படுகின்றார்கள். அவர் களுக்குப் புகழ் சேர்கின்றது. ஏழேழு பிறப்புக்களிலும் அவர்களைத் தீமை தீண்டாது.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.
என்றனர் திருவள்ளுவர். “பிறரால் பழிக்கப் படும் தீச் செயல்களைச் செய்யாதவரும், நல்ல குணங்களையும் நல்ல செயல்களையும் உடைய வரும் ஆகிய மக்களைப் பெற்ற பெற்றோரை ஏழு பிறப்புக்களிலும் தீயவை தீண்டமாட்டா,” என பது இக்குறளின் கருத்து.
ககந்தன் நல்ல குணமுடையவன். ஆனால் அவன் பெற்ற பிள்ளைகள் தீய குணத்தின் உருவங்களாக இருந்தனர். ஒருவரேனும் அறிவுடையவராக இல்லை. அவர்கள் கண்ட கண்ட இடங்களில் திரிந்தார்கள். அவர்கள் கல்வியைக் கனவிலும் எண்ணியதில்லை. சுட்டுப் போட்டாலும் ஓர் எழுத்தும் அவர்களுக்கு வராது என்று ஆசிரியர்கள் கைவிட்டார்கள். இழிந்த மக்கள், திருடர், பொய் பேசுவோர், பிறர் மனைவியை விரும்புவோர், கொடியர், இப்படிப்பட்டவர்கள் இவர்களுக்கு நண்பர்கள் ஆயினார்கள். ஒருவகைக் கட்டுப்பாடும் இல்லாமல் அவிழ்த்துவிட்ட காளைகளைப்போல் திரிந்தார்கள்.
அவ்வூரில் மருதி என்றொருத்தி இருந்தாள்; அவள் அழகிற் சிறந்தவள்; அந்தணர் குலத் தில் பிறந்தவள்; திருமணம் ஆகப்பெற்றவள்.
அவள் நாள்தோறும் காவிரி ஆற்றுக்குச் சென்று நீராடி வருவாள். செல்லும் போது பல பெண்கள் ஒன்று கூடிச் செல்வார்கள். ஒரு நாள் காலை வேலைகளை முடித்துக்கொண்டு ஆற்றுக்குப் புறப்படக் காலமாயிற்று. ஆதலின் தனியாகச் சென்று நீராடித் தனியாக வந்து கொண்டிருந்தாள்.
ககந்தன் பிள்ளைகள் இருவருள் ஒருவன் காவிரிக் கரையோரமாக நின்று கொண்டிருந் தான். அவன் தனித்து வந்த மருதியைக் கண்டான். அவள் அழகில் ஈடுபட்டான். அவள் தனியே வந்ததாலேயே அவள் கற்பில்லாதவள் என்று நினைத்தான். அவள் அழகில் ஈடுபட்டான்; தன்னுடைய அறிவை இழந்தான்; தொலைவில் இருந்த அவன் நெருங்கி வந்தான்.
அருகில் வரவர அவனுடைய உள்ளத்தில் காமத் தீ குடிகொண்டது. அவளைப் பார்க்கப் பார்க்க அத் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது; எப்படியேனும் அவளைத் தன்னுடைய மனைவியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீய எண்ணம் அவனை மூடியது. ஆதலின் நெஞ்சில் அச்சம் இல்லாமல் அவளை மேலும் நெருங்கினான். அவனுக்குத் தெரிந்த பல இழிந்த சொற்களை இன்பமாகக் கூறினான்; அவள் ஒன்றும் பதில் சொல்லாது நடந்தாள்.
மருதி கற்புடையவள்; கணவனை அன்றிப் பிற ஆண்களைக் கண்ணெடுத்துப் பார்க்காதவள். வீதியில் நடந்து செல்லும் போது குனிந்த வண்ணமே செல்லுவாள். ககந்தன் மகன் அவளிடத்தில் பல சொல்லியும் அவை அவள் காதில் விழவில்லை. ஏன்? வீட்டிற்குப் போக வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் அவள் சென்று கொண்டிருந்தாள். ஆதலின் அத்தீய சொற்கள் அவள் காதில் விழவில்லை.
இளவரசனுக்கு மேலும் உள்ளத்தில் பலம் உண்டாயிற்று. ‘நான் நினைத்தது சரி. இவள் நல்ல நடக்கை இல்லாதவள். ஆதலால் தான் நான் சொல்லிய சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டாள். என்னோடு பேசுதற்கு வெட்கப்படுகின்றாள் போலிருக்கிறது. ஆதலால் தான் வாய்மூடிச் செல்கின்றாள். இவள் நேரில் சென்று இனிப் பேசுவோம்!’ என்று நினைத் தான். அவள் முன்வந்து நின்றான். கைகளை
ஆசையோடு நீட்டினான். “கண்மணியே! எங்குப் போகின்றாய்? என்னுயிர்க்கு நீயே துணைவி. வருக, நாம் கூடி வாழ்வோம்.” என்று பல இழிந்த சொற்களைப் பேசினான்.
இளவரசன் தன் நேரில் நின்று கை நீட்டிப் பேசியவற்றை மருதி கேட்டாள். முகம் சிவந்தது. கண்கள் நெருப்பை வெளிவிட்டன. உள்ளத்தில் அச்சம் தோன்றியது. “என்ன கொடுமை! என்ன கொடுமை!” என்று துன்பப்பட்டது அவள் உள்ளம். உடல் பதறிற்று.’ என்ன நேருமோ!’ என்று நடுங் கினாள். தன் முன்னே நிற்கும் அந்தப் பாழ் மகன் ‘தன்னைத் தொட்டுவிட்டால்!’ என்று நினைக்கவும் உடலெல்லாம் வேர்த்தது. மெது வாக நடந்து செல்லலாகாது என்று நினைத்து ஓடத் தொடங்கினாள். அரசன் மகனும் தொடர்ந்தோடினான்.
காவிரிப்பூம் பட்டினத்தில் பூத சதுக்கக் கோயில் என்று ஒரு கோயில் உண்டு.’அக்கோயிலில் சதுக்கப் பூதம் வாழ்ந்துவந்தது. அதன் கைகளில் பாசக் கயிறு இருந்தது. தவறு செய்வோரை அப்பூதம் பிடித்துக்கொள்ளும். பிறகு அவர்களைக் கொன்று விடும். அந்தக் கோயிலை மருதி கண்டாள். விரைவாக அதனுள் புகுந்தாள்.
ககந்தன் மகன் அக் கோயிலினுள் செல் லாது வெளியில் நின்றான். ஏன்? அவன் செய்தது தவறு. தவறுடையோரை அப்பூதம் கொன்றுவிடும். ஆதலின் அவன் உள் நுழைந்தால் அவனுக்குப் பெருந்துன்பமாகிய உயிரை இழத்தல் உறுதியாக நேரும். ஆகவே வேறு வழியில்லாமல் திரும்பினான்.
தலைமயிர் அவிழ்ந்து தோளின் மேல் கிடக்கின்றது; பெருமூச்சு வருகின்றது; உடல் துடிக்கின்றது; கண்கள் பரபரப்புடன் நோக்குகின்றன; கால்கள் தள்ளாடுகின்றன; நெஞ்சு படபட என்று அடித்துக் கொள்கின்றது. இந்தக் கோலத்துடன் மருதி சதுக்கப் பூதத்தின் முன்னே நின்றாள். பேசத்தொடங்கினாள்.
“சதுக்கப் பூதக் கடவுளே! நல்லோருக்கு உறவே! தீயோருக்குப் பெரு நெருப்பே! யான் கற்புடையவள் அல்லளா? எனக்குக் கற்பில்லையா? அந்தக் கொடியவன் என் முன்னே வந்து நின்று இழிந்த சொற்களைச் சொன்னானே! ஐயோ! என்னைத் தனக்கு மனைவியாக இருக்கும்படி அன்றோ சொன்னான்! ஆ! என்ன கொடுமை! எவ்வளவு கொடிய சொற்கள்! அச்சொற்கள் தங்கள் திருச்செவியில் விழவில்லையா? அதோ உயிருடன் செல்கின்றானே! அவன் ஏன் உயிருடன் வாழ்கின்றான்! கற்பு நிறைந்த என்னைக் குறைவு படுத்திய அவனைக் கொல்வது தங்களுடைய கடமை அல்லவா? இதைத் தவிரத் தங்களுக்கு வேறு என்ன வேலை இருக்கின்றது? ஏன் பேசாமல் இருக்கின்றீர்? அவன் எப்படி என்னை நினைக்கலாம். என்னுயிர்க்கணவன் நெஞ்சில் அல்லவோ நான் குடி இருக்கவேண்டும்? இக்கடையன் தன்நெஞ்சில் என் உருவத்தை எவ்வாறு கொள்ளலாம்? ஐயோ! இஃது நெறியோ! இது முறையோ! இது அறமோ! இதுவோ கடவுளாகிய தங்கள் செயல்! நான் கற்பில்லாதவளா? அல்லது தாங்கள் இல்லா தொழிந்தீரோ?” என்று கூறி அழுது அரற்றிக் கீழே விழுந்தாள்.
அவள் முன் சதுக்கக் கடவுள் தோன் றினார். “மருதி! மன மாசு அற்றவளே! அழாதே. நீ அந்தணர் குலத்தில் பிறந்தவள்! கற்புடையவள்! ஆயினும் சில தவறுகளைச் செய்திருக்கின்றாய். அத்தவறுதல்கள் உன் கற்பின் வன்மையைக் குலைத்துவிட்டன.”
“நம் தமிழில் மிகச் சிறந்த நூல் திருக் குறள் என்பது. அதனை இதுவரை படிக்காம லிருந்தாய். இனியேனும் படிப்பாயாக. அதன் கண்,
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
என்பது, பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது. இந்தச் சிறந்த பொருளுரையை நீ இகழ்ந்தாய். இதன் வழி நீ நடக்கவில்லை. எப்படி? தம் கணவனின் மிக்க தெய்வம் கற்புடைய பெண்களுக்கு வேறு இல்லை. அவனே அவர்கள் வணங்க வேண்டிய கடவுள்; அவனே கட்டளை இட்டால் அல்லாமல் வேறு கடவுளை வணங்கவும் கூடாது; வாழ்த்தவும் கூடாது; நீ தவறினாய்.”
“உன் கணவனை வணங்கினாய்; மேலும் வேறு கடவுளையும் வணங்கினாய். அப்படிச் செய்தற்கு உன் கணவன் விருப்பத்தையும் நீ பெறவில்லை. பிற கடவுளரைப்பற்றிக் கூறும் பொய்க் கதைகள் பலவற்றை இன்பத்துடன் கேட்டாய்; அவற்றையே மகிழ்ச்சியோடு படித் தாய்; மேலும் அளவிற்குப் பொருந்தாத விடு கதைகளில் உள்ளத்தை வைத்தாய். அவ்வளவோ! அந்தக் கடவுளரை ஒப்பனை செய்து வீதியிலே கொண்டுவந்து விழாக் கொண்டாடுகிறார்களே; அவ்விழாவிலும் கேளிக்கைக் கூத்துக் களிலும் மனம் கலந்து உடன் கலந்தாய்; இவற்றோடு எல்லாம் நீசேர்ந்தாய்; உன்னுடைய உண்மைக் கற்பை இழந்தாய்.
“உண்மைக் கற்பு என்பது எது? கற்பின் சுடும் தன்மையே அதுவாகும். உனக்குக் கற்பு இருக்கின்றது; அக் கற்புக்குச் சுடும் தன்மை ஒழிந்தது. சுடும் தன்மை இருந்தால் ககந்தன் மகன் உன்னைக் கண்கொண்டு பார்த்திருக்கமாட்டான்; நெஞ்சால் நினைத்திருக்கமாட்டான்; வாயால் சிலவற்றைப் பேசி இருக்கமாட்டான்; உன்னைக் கண்ட கண்கள் வெந்திருக்கும்; நினைத்த நெஞ்சம் நெருப்பாயிருக்கும்; பேசிய வாய் புகைந்திருக்கும்.
“மழை நின் ஏவலை ஏற்றுக்கொள்ளாது; காரணம், நின்கற்பு சுடும் தன்மையை இழந்த மையாலேயே. இனிக் கற்பு நெறியில் ஒழுங்காக இரு ; இழந்த வன்மையை மீட்டுக்கொள்; இன்று தொடங்கி ஏழு நாட்களுக்குள் அரசன் உன்னைத் தவறாகப் பேசியோனைத் தண்டிக்க வேண்டும். அவன் தவறினாலும் நான் தவற மாட்டேன். நான் கொன்றொழிப்பேன்; வருத்தமில்லாது வீட்டிற்குச் செல்,” என்று கூறிற்று.
ககந்தன் கண்போன்ற ஒற்றர்களை வைத்தி ருந்தான். அவர்கள் எங்கு எது நடந்தாலும் அவற்றை உடனே அரசனுக்கு அறிவிப்பார் கள். இளவரசன் நடக்கையை அவர்கள் வழியே அரசன் அறிந்தான்.
அரசன் உள்ளம் வெயிலில் இட்ட புழு வைப்போல் துடித்தது. உடனே அவனைக் கொல்லுமாறு கட்டளை இட்டான். “அவன் காவலாளருக்கு அகப்படாமல் ஓடிவிடுவான்; அல்லது அவர்களை மயக்கித் தப்பித்துக்கொள் வான். யானே இவனுக்குத் தண்டனையைத் தருவேன்,” என்றுரைத்துத் தன் கைவாளினால் கொன்று வீழ்த்தினான் ககந்தன்.
“அடாது செய்வோர் படாது படுவர்”
– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.