இராமாயணச் சுருக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 15, 2022
பார்வையிட்டோர்: 18,572 
 
 

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சான்றிதழ்

பாலபோதினி உபபாட புத்தகம் IV – இராமாயணச் சுருக்கம்

1952 ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 29ந் திகதி வெளிவந்துள்ள இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையில் உதவி நன்கொடை பெறும் தன் மொழிப் பாடசாலைகளுக்கும், இரு பாஷைப் பாடசாலைகளுக்கும், ஆங்கில பாடசாலைகளுக்குமான ஒழுங்குச் சட்டத்தின் 19(A) -ம் பிரிவில் பிரசுரிக்கப் பட்டதற்கமைய இப்புத்தகம் ஒரு நூல் நிலையத்திற்குரிய புத்தகமாக உபயோகித்தற்கு வித்தியாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜீவானந்த நானாயக்கார செயலாளர்
பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபை
பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபை, மலாய் வீதி, கொழும்பு -2. 28, 9. 1965

பதிப்புரை

ராமாயணச் சுருக்கம் என்னும் இச்சிறிய நூல், பண்டிதை த. இராஜேஸ்வரி அம்மையாரால் எழுதப்பட்டது. பரந்துபட்ட இராமாயணம் என்னும் காவியத்தின் கதை, இளஞ்சிறார் மனதிலே எளிதிற் படியும்படியாக, இந்நூல் அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

இந்நூலை அச்சிட்டு வெளியிடும் பணியை ஏற்றுக்கொள்ளும்படி ஒரு பெரியார் எமக்குப் பணித்துள்ளார். அப்பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு இதனை எமது பதிப்பக மூலம் வெளியிடலானேம்.

இத்தகைய அநேக நூல்களைத் தமிழகம் எதிர்பார்த்திருக்கும் இக்காலத்தில், பண்டிதை இராஜேஸ்வரி அம்மையார் அவர்கள் இன்னும் பல நூல்கள் எழுதி உதவுவாரென எதிர்பார்க்கின்றோம்.

ஆசிரியர்களும் மாணவர்களும் இதனை அன்புடன் வரவேற்பார்கள் என்பதே எமது நம்பிக்கை.

வ. இ. தமிழ்நூற் பதிப்பகத்தார்
சித்திரை, 1947
பொருளடக்கம்

இராமாயணச் சுருக்கம்

நாடிய பொருள்கை கூடும்
ஞானமும் புகழு முண்டாம் வீடியல் வழிய தாக்கும்
வேரியங் கமலை நோக்கு நீடிய வரக்கர் சேனை
நீறுபட் டழிய வாகை சூடிய சிலையி ராமன்
தோள்வலி கூறு வோர்க்கே.

தேவர்கள் முறையிடுதல்

ஆதி காலத்திலே பூவுலகில் வாழ்ந்த இராவணன் முதலாய அரக்கர்கள் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகவும் துன்பமிழைத்து வந்தனர். தேவர்கள் முதலியோர் திருமாலிடஞ் சென்று “ஐயனே, அரக்கர்களுடைய கொடுமையோ

சகிக்க முடியாததாயிருக்கின்றது. ஆதலால் தாங்கள் திருவுளமிரங்கி அரக்கரை அழித்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று பிரார்த்தித்தனர்.

துஷ்டர்களை அழித்துப் பக்தர்களைப் பரிபாலிக்கும் திருமாலும் அவர்கள் மேல் அருள் கூர்ந்து, “பூவுலகிலே தசரதச் சக்கரவர்த்தியின் குமாரனாக அவதரித்து அரக்கர்களை அழிப்பேன். எமது ஆயுதங்களாகிய சங்கு சக்கரங்களும் ஆதிக்ஷேனாகிய படுக்கையும் எமக்கு இளையவர் களாகப் பிறந்து அரக்கர்களை அழிப்பதில் உதவி புரிவார்கள்” என்று கூறினார். தேவர்கள் மகிழ்ந்து விடைபெற்றுச் சென்றனர்.

இராமன் பிறப்பு

பரத கண்டத்திலே பல வளங்களும் பொருந்திய கோசல நாட்டிலே, அயோத்தி நகரிலே தசரதச் சக்கரவர்த்தி அரசு செலுத்தி வந்தான். அவனுக்குக் கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர் இருந்தனர். அரசனுக்கு வெகு காலமாகப் புத்திரர் இல்லாமையினாலே, புத்திரர் கிடைக்கும் பொருட்டு ஒரு பெரிய யாகஞ் செய்தான். அந்த யாகத்திலுள்ள ஓம் குண்டத்தினின்றும் ஒரு பூதம் பொன் தட்டிலே அமிர்தம் போன்ற பிண்டம் ஒன்றை ஏந்தி வந்து தசரதனுக்குக் கொடுத்துவிட்டு மறைந்தது.

தசரதன் அப் பிண்டத்தை மூன்று கூறாக்கித் தன் மனைவியர் மூவருக்கும் அளித்தான். பின் அதில் உதிர்ந்து எஞ்சியவற்றைச் சேர்த்தெடுத்து அதையும் சுமித்திரைக்கே கொடுத்தான்.

சிலகாலஞ்சென்றதும் கோசலை (திருமாலின் அவதார புருஷனாகிய) ஸ்ரீராமனைப் பெற்றெடுத்தாள். கைகேயிக்குப் பரதனும், சுமித்திரைக்கு இலட்சுமணன், சத்துருக்கினன் என்னும் இருவரும் பிறந்தார்கள்.

விசுவாமித்திரன் வருகை

புத்திரர்கள் யாவரும் அரச குமாரருக்குரிய வித்தைகள் யாவும் பயின்று, பலரும் பாராட்ட வளர்ந்தனர். இலட்சுமணன் இராமன்பாலும் சத்துருக்கினன் பரதன்பாலும் அதிக நேயம் உடையவராகி ஒருவரையொருவர் பிரியாது வளர்வாராயினர். தசரதனும் தன் மக்கள் அனைவர்பாலும் அன்புடையராயிருந்தும், இராமன்பால் அளவிறந்த காதலுடையவனாகி அவனைத் தன் உயிரினும் சிறந்தானெனவே மதித்து வந்தான்.

இங்ஙனமிருக்கையில், ஒருநாள் தசரதன் அரச சபையிலிருக்கும்பொழுது விசுவாமித்திரர் என்ற முனிவர் அங்கு வந்தார். அரசன் அவரை எதிர்கொண்டழைத்து உபசரித்து ஆசனத்தில் இருத்திப் பல முகமன் வார்த்தைகளைக் கூறினான். பின் முனிவரைப் பார்த்து, “தங்களுக்கு என்னாலாக வேண்டிய காரியம் எதுவும் இருந்தால் கட்டளை இடுங்கள்; நிறைவேற்றுகிறேன்” என்றான். முனிவர் அரசனை நோக்கி, ‘அரசனே! யான் ஒரு பெரிய வேள்வி செய்யப் போகிறேன். அவ் வேள்விக்கு அரக்கர்களால் இடையூறு நேராவண்ணம் பாதுகாப்பதற்காக உமது மகன் இராமனை என்னுடன் அனுப்புவாயாக” என்றனர்.

“இராமனை அனுப்புவாயாக” என்பதைக் கேட்டு அரசன் உள்ளம் திடுக்குற்றது. பாலியனாகிய தன் புத்திரனைக் கொடிய அரக்கர்பால் போர் செய்யும்படி அனுப்ப அவன் மனம் துணியவில்லை . எனவே அவன் முனிவரை நோக்கி, “கொடிய அரக்கர்களால் தங்கள் வேள்விக்கு இடையூறு ஏற்படாவண்ணம் பாதுகாக்க யானே வருகிறேன். சிறியவனாகிய இராமன் எதற்கு?” என்றான். என்றலும், முனிவர் கோபித்து எழுந்தார். தேவரும் முனிவரும் விசுவாமித்திரரது கோபத்தால் என்ன விளையுமோ என்று அஞ்சினர்.

அப்பொழுது தசரதனது குலகுருவாகிய வசிட்டர் விசுவாமித்திரரை அமர்த்தி அரசனை நோக்கி, “இராமன் விசுவாமித்திரருடன் செல்வதனால் அவனுக்கு அளவிறந்த நன்மையே ஏற்படும். அதனால் அவனை முனிவருடன் அனுப்புவாயாக” என்றனர். தசரதன் வசிட்டர் சொற்படியே இராமனையும் அவனுடன்கூட இலட்சுமணனையும் முனிவருடன் சென்று வேள்வி முடித்து வருமாறு அனுப்பினன்.

தாடகை வதம்

இவர்கள் போகும் வழியிலே தாடகை என்னும் கொடிய அரக்கி இவர்களை எதிர்த்தாள். இராமன் முனிவர் சொற்படி அவ்வரக்கியைக் கொன்று அப்பாற் சென்று வேள்வி நிலத்தை அடைந்தான். முனிவர் வேள்வி செய்யத் தொடங்கினார். அப்பொழுது அங்கு இடையூறாக வந்த அரக்கர்களை இராம லட்சுமணர் அழித்து முனிவரது வேள்வியைக் காத்தனர். வேள்வி இனிது நிறைவேறியது. முனிவர் மகிழ்ந்து அவர்களுக்குப் பலவித படைக்கலங்களையும் அளித்து மந்திரோபதேசமுஞ் செய்தார்.

பின்னர் ஜனக மகாராஜனது வேள்வியைக் காணும் பொருட்டு முனிவர் அவர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்வாராயினார்.

அகலிகை சாப விமோசனம்

மிதிலாபுரிக்குப் போகும் வழியில் இராமனது திருவடி ஒருபெரிய கல்லின் மேற் பட்டதும் அங்கு ஒரு பெண் தோன்றி அவர்களை வணங்கினாள். அப்பொழுது விசுவாமித்திரர், “இவள் கௌதம முனிவரது பத்தினியாகிய அகலிகை. ஒரு சாபத்தினாலே கல்லாகிக் கிடந்தாள். உனது புண்ணிய திருவடி தீண்டப் பெற்றதனால் இவளின் சாபம் நீங்கிற்று” என்று கூறி, இராமனைப் பாராட்டினார். பின் அகலிகையை அழைத்துச் சென்று கௌதமர்பாற் சேர்த்து அவரால் உபசரிக்கப் பெற்றனர்.

சீதை திருமணம்

மிதிலாபுரி மன்னனாகிய ஜனகனுக்குச் சீதை என்ற புத்திரி இருந்தாள். இவள் அழகிலும் ஒழுக்கத்திலும் மிகச் சிறந்தவள். பல அரசகுமாரர் சீதையை விவாகஞ் செய்ய விரும்பினர். ஆனால், ஜனக மகாராஜன் தம்மிடத்திலிருந்த ஒரு பெரிய வில்லை வளைக்கும் வீரனுக்கே சீதையைக் கொடுப்பதாகத் தீர்மானித்திருந்தான். இவ்வில்லு வீரபத்திர சுவாமிகள் தக்கனது வேள்வியை அழிப்பதற்காகக் கொண்டு சென்ற பெருமையை உடையது. இதுவரையில் யாரும் இவ் வில்லை வளைக்காதபடியால் சீதை இன்னும் கன்னியாகவே இருந்தாள்.

இராம லட்சுமணர் விசுவாமித்திரரோடு நகரைச் சுற்றிப் பார்த்து வரும்போது சீதை தனது அரண்மனை மேல் மாடியில் தோழியரோடும் நின்றாள். அவ்வழியே போகும் போது இராமன் பண்டை விதியின் பயனால் மேலே சீதையை நோக்கினான். சீதையும் அண்ணலை நோக்கினாள். நோக்கிய அளவிலே இருவர் உள்ளமும் ஒன்றுபட்டது. சீதைபால் இராமனும் இராமன்பால் சீதையும் காதல் கொண்டனர்.

அடுத்த நாள் முனிவர் இராம லட்சுமணர்களை ஜனகன்பால் அழைத்துச் சென்றார். அங்கு முனிவர் கட்டளைப்படி இராமன் சிவதனுசை இலேசாக எடுத்து வளைத்து முரித்தான். வில் முரிந்த ஒலியினால் உலக முழுதுமே திடுக்குற்றது. ஜனகன் மனம் மகிழ்ந்தான்.

தசரதனுக்கு ஜனகன் மணஓலை அனுப்பினான். பந்து மித்திரர்களுடனே சதுரங்க சேனை சூழத் தசரதன் மிதிலைக்கு வந்து சேர்ந்தான்.

மணவினைக்காகும் நல்ல நாளும் குறிப்பிடப் பட்டது. சீதையை அலங்கரித்து மண்டபத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

தான் முதலிற் கண்ட மங்கை சீதையே என்று அறிந்து இராமன் மகிழ்ந்தான். தன் உள்ளத்தை முன்னமே கவர்ந்த அண்ணலே வில் முரித்த வீரன் என அறிந்து சீதையும் மகிழ்ந்தாள். பல பேர் முன்னிலையில் இருவருக்கும் விவாகஞ் சிறப்புற நடைபெற்றது.

பரசுராமன்

விவாகம் முடிந்ததும் தசரதன் முதலியோர் இராமனையுஞ் சீதையையும் அழைத்துக்கொண்டு அயோத்திக்குப் புறப்பட்டனர். வழியில் பரசுராமர் என்னும் தவசிரேஷ்டர் கோபத்தோடு வருவதைக் கண்ணுற்றனர்.

இப் பரசுராமர் அரச குலத்தை அடியோடு வெறுத்தவர். இராமன் சிவதனுசை முரித்த செய்தி கேட்டு அடங்காத கோபத்தோடும் வந்தார். அவர் இராமனை நோக்கி, “முன்னமே சிறிது முரிந்திருந்த சிவதனுசை முரித்ததினால் நீ வீரனாக மாட்டாய். இதோ என் கையிலிருக்கும் வில்லை வளைத்து நாணேற்றி உன் வீரத்தைக் காட்டு’ என்றார். இராமன், ‘அப்படியே செய்கிறேன் எனது அம்புக்கு இலக்கு என்ன? நீ பிராமணனானபடியால் நான் உன்னைக் கொல்ல விரும்பவில்லை ” என்றான். பரசுராமர், “உனது அம்புக்கு என் தவமே இலக்கு” என்றார்.

இராமன் வில்லை வளைத்து அம்பு விடுத்தான். பரசுராமரது தவம் முழுவதும் இராமனது அம்புக்கு இரையாயிற்று. பரசுராமர் தமது தோல்வியை ஒப்புக்கொண்டார். இராமனை ஆசீர்வதித்துத் தமது இடஞ் சேர்ந்தார். இராமன் முதலியோர் அயோத்தியைச் சென்றடைந்து இனிது வாழ்ந்து வருவாராயினர்.

சிலகாலஞ்சென்றதும் பரதன் கைகேயியின் தந்தையின் விருப்பப்படி, தசரதன் இராமன் முதலியோரிடம் விடை பெற்றுக் கொண்டு கேகய நாடு சென்றான்.

மந்தரை சூழ்ச்சி

தசரதன் தனக்கு வயோதிபம் ஏற்படுவதாற் பண்டைய அரசர் செய்துவந்த முறைப்படி இராமனுக்கு மகுடஞ் சூடுவித்துத் தான் வானப்பிரத்தனாக நினைத்தான். தனது எண்ணத்தை வசிட்ட முனிவர், மந்திரி பிரதானி முதலியோரிடங் கூறி அவர்களது சம்மதத்தையும் பெற்றான். இராமனை அழைத்து தன் எண்ணத்தைத் தெரிவிக்க அவனும் தந்தை கட்டளைக்குச் சம்மதித்தான். அடுத்த நாளே நல்ல நாளாகையால் அன்றே பட்டாபிஷேகமும் நடத்தத் தீர்மானித்தனர். நகர மாந்தர் மகிழ்ந்தனர்.

இராமனது பட்டாபிஷேகச் செய்தியைக் கைகேயியின் தோழியாகிய மந்தரை அறிந்தாள். இவள் முதுகில் கூன் விழுந்திருந்ததனால் இவளைக் கூனி என்று அழைத்தனர். இராமன் சிறு வயதாயிருக்கையில் இவள் முதுகில் வில்லுண்டையால் அடிப்பதுண்டு. இவள் கைகேயியின் மேலும் பரதன் மேலும் உண்மையான அன்புடையவள்.

மந்தரை கைகேயியிடஞ் சென்று இராமன் பட்டாபிஷேகச் செய்தியைத் தெரிவித்தாள். இராமன்மேல் அதிக அன்பு கொண்டிருந்த கைகேயி, நற்செய்தி சொன்னதற்காக, கூனிக்குத் தனது கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றிக் கொடுத்தாள். அம் முத்துமாலையை எறிந்துவிட்டு மந்தரை கோபமுடையாளாகி இராமன் அரசாட்சி செய்வதாற் கைகேயிக்கும் பரதனுக்கும் அவமானம் உண்டாகும் எனப் பலபடக் கூறிக் கைகேயியின் மனதை மாற்றினாள்.

“முன்னொரு காலத்திலே போர்க்களத்திலே தசரத மன்னனுக்குச் சாரத்தியம் செய்து அவன் பகைவரை வெல்லச் செய்தாய். அப்பொழுது மன்னன் மகிழ்ந்து உனக்கு இரு வரங்கள் அளிப்பதாக வாக்களித்தான். நீ அவ்வரங்களைப் பின்னர் கேட்டு வாங்குவதாகச் சொன்னாய். அந்த வரங்களை இப்பொழுது கேள். ஒன்று: பரதன் நாடாள வேண்டியது; மற்றது: இராமன் பதினான்கு வருடம் வனவாசஞ் செய்ய வேண்டுமென்பது” என யுக்தியும் சொல்லிக் கொடுத்தாள்.

கைகேயி வரம் வேண்டல்

தசரதன்கைகேயியின் அந்தப்புரத்துக்கு வந்தான். அவள் அணிகலன்களின்றிப் பொலிவு இழந்து துக்கக் கோலத்தோடு இருப்பதைக் கண்டான். அவன் மிகவும் வருந்தி, அவளது துக்கத்துக்குக் காரணமென்ன என்று விசாரித்தான்.

கைகேயி தனக்கு முன்பு வாக்களித்த இருவரங்களையுங் கொடுக்கும்படி கேட்டாள். தசரதன் அப்படியே கொடுப்பதாகச் சத்தியஞ் செய்தான். கைகேயி, “வரங்களுள் ஒன்று: என் மகன் பரதன் நாடாள வேண்டும். மற்றது: இராமன் பதினான்கு வருடம் வனவாசஞ் செய்ய வேண்டியது” என்றாள்.

இவற்றைக் கேட்டுத் தசரதன் மனம் புண்ணானான். வேறு வரங்கள் கேட்கும்படி கைகேயியைக் கெஞ்சினான். அவள், “சொன்ன சொல் தவறுதல் மன்னனுக்கழகோ?” என்றாள். தசரதன் பின்னும் நயந்து வேண்டினான். கைகேயியின் மனம் மாறவில்லை . ஈற்றில் “எனது வாக்கை நிறைவேற்றும்பொருட்டு உன் வரங்களைத் தந்தேன். ஆனால் இராமனைப் பிரிந்து நான் உயிர் வாழேன்” என்றான். துக்கம் தாங்காது அங்கேயே மூர்ச்சித்து விழுந்தான்.

தந்தை சொல் தவறாத் தனயன்

கைகேயி இராமனை அழைத்து வரச் செய்தாள். அவனை நோக்கி, “உன் தந்தை பரதனை நாடாளும்படியும் உன்னைப் பதினான்கு வருடம் வனவாசஞ் செய்யும்படியும் பணித்தார்” என்றாள். தந்தை அரசாட்சியை ஏற்கச் சொன்ன போதோ, அன்றி இப்பொழுது வனவாசஞ்செய்யச் சொன்னார் என்று கைகேயி சொன்னபோதோ மனத்திலும் தோற்றத்திலும் இராமன் சிறிதும் வேறுபாடு அடைந்தானில்லை.

அவன் கைகேயியை நோக்கி, “அன்னையே, மன்னனால் இடப்பட்டதன்றி இக்கட்டளை தாங்களே செய்யினும் நான் நிறைவேற்ற மாட்டேனா? எனது தம்பி பரதன் அரசாள்வது யான் அரசு செய்வதற்குச் சமமன்றோ? இன்றைக்கே காட்டுக்குப் போகிறேன். விடை கொடுங்கள்” என்று வேண்டினான். கைகேயி காட்டுக்குச் செல்ல விடை கொடுத்து அனுப்பினாள்.

கோசலை முதலியோர் துயரம்

முடி சூடுவதற்குரிய ஆயத்தங்கள் யாவுமின்றிக் கோசலையிடம் இராமன் சென்றான். தந்தையின் கட்டளையைத் தெரிவித்தான். பரதன் நாடாள்வதனாற் கோசலை மகிழ்ந்தாள். ஆனால் இராமன் வனவாசஞ் செய்வதை அவளால் பொறுக்க முடியவில்லை . மன்னனிடம் விசாரிக்கலாம் எனக் கைகேயியின் அரண்மனைக்குச் சென்றாள்.

அங்கு சோகத்தால் மூர்ச்சித்துக் கிடந்த தசரதனைக் கண்டாள். வாய் திறந்து அரற்றினாள்.

அரச சபையிலிருந்த பெரியோருக்கு அழுகைக் குரல் எட்டியது. அரண்மனையில் அழுகைக் குரல் கேட்கும் காரணத்தை விசாரித்து வரும்படி வசிட்ட முனிவரை அனுப்பினர்.

வசிட்ட முனிவர் அங்கு சென்று வினவி உண்மையை அறிந்தார். கைகேயியை நயத்திலும் பயத்திலும் வேண்டிக் கொண்டார். கைகேயி மனம் மாறவேயில்லை . தசரதன் சோகத்தில் ஆழ்ந்தான். புத்திர சோகத்தால் மரணம் அடைவாய்” என்று முன்னர் முனிவர் ஒருவர் சபித்ததை அவர்களுக்கு எடுத்துரைத்தான். இராமன் வனம்போவது நிச்சயம் என்பது அறிந்தான். கைகேயியை நோக்கி, “இன்று தொடக்கம் நீ என் மனைவியல்ல” என்று மொழிந்து பின்னும் மூர்ச்சையானான்.

இராமன் நகர் நீங்கல்

இராமன் வனவாசம் செய்யப்போகும் செய்தியை இலட்சுமணன் கேள்வியுற்றான். கோப வயத்தனாகி இராமன் முடிசூடுவதற்கு இடையூறு செய்பவரை அழித்து விடுவதாகக் கூறி வீராவேசத்தோடு திரிவானாயினான். இராமன் அவனைக் கண்டு பலவகையாய்க் கூறிச் சமாதானப்படுத்தினான். இராமன் மொழியால் இலட்சுமணன் சினந் தணிந்தான். அவனை அழைத்துக்கொண்டு இராமன் சுமித்திரையிடஞ் சென்று விடைபெற்றான். இலட்சுமணன் தானும் இராமனுடன் காட்டுக்கேக விடை தரும்படி சுமித்திரையை வேண்டினான். ‘இராமனையே தந்தையெனவும் சீதையையே தாயெனவும் கருதி வாழ்வாயாக!” என்று கூறி சுமித்திரை இலட்சுமணனுக்கு விடைகொடுத்தாள்.

சீதையின் அரண்மனை சென்று இராமன் வனவாசஞ்செய்யப் போவதைக் கூறினான். சீதை தானும் கூட வருவேனென்றாள். “காட்டிலே வாழும் கடிய வாழ்வை நீ தாங்க மாட்டாய்; ஆதலால் இங்கேயே இரு” என்றான் இராமன். சீதை மனம் வருந்தி, “நீங்களில்லாத நாடு எனக்குக் காடாகும். நீங்கள் உள்ள காடே எனக்கு நாடாகும்” என்று கூறி மரவுரி தரித்துக் கணவனுடன் புறப்பட்டாள்.

நகர மாந்தர் புலம்ப, இராமன் சீதையோடும் இலட்சுமணனோடும் நகரைவிட்டு நீங்கினான். இராமன் நகரை விட்டு நீங்கினான் என்ற செய்தி செவியிற் பட்டதும் தசரதன் உயிரும் நீங்கிற்று.

வசிட்ட முனிவர் முதலானோர் தசரதனுடலைத் தைலத்திலிட்டுவைத்து, பரதனை அழைத்து வரும்படி ஓலை அனுப்பினர்.

கைகேயியும் பரதனும்

கோசல நாட்டிற்குத் திரும்பி வந்த பரதன் வழியிலே துர்நிமித்தங்களைக் கண்டான். நகரம் பொலிவிழந்திருப்பதைக் கண்டு மயங்கினான். கைகேயி பரதனைத் தன்பால் வரும்படி சொல்லியனுப்பினாள். பரதன் சென்றான். ‘நகரம் பொலிவிழந்திருப்பதற்குக் காரணம்

என்ன?” என்று வினவினான். “உனது தந்தை இறந்து விட்டார்” என்ற செய்தியைக் கூசாது தெரிவித்தாள் கைகேயி.

தந்தை விண்புக்க செய்தி கேட்டுப் பரதன் பெருந் துயரடைந்தான். பின் தன்னைத் தேற்றிக்கொண்டு, “இராமன் எங்கே?” என்று வினவினான். “இராமன் தனது மனைவியோடும் தம்பி இலட்சுமணனோடும் கானகஞ் சென்றான்” என்று கைகேயி கூறினாள். பரதன் தாயை நோக்கி, “எந்தை விண் சென்றது இராமன் வனஞ் சென்ற பின்னோ ? முன்னோ ?” என்றான். ‘இராமன் வனம்புக முன்னரே இறந்தான் மன்னன்” என்றாள். “அப்படியெனில், இராமன் வனம் புகவும் தசரதன் விண்புகவும் காரணம் யாதோ?” என்று பரதன் வினவ, கைகேயி, ‘நீ நாடாள வேண்டும்; இராமன் வனம்புக வேண்டும் என்னும் இருவரங்களையும் நான் மன்னன்பால் வேண்டினேன். மன்னன் அது தாங்காது உயிர் நீங்கினான்” என்றாள்.

கேட்டலும், பரதன் சோக வயத்தனானான். தன் தாயின் செய்கை கேட்டுக் கடுங் கோபங் கொண்டான். தன்னை ஈன்ற அன்னை என்றும் பாராது பலவாறு நிந்தித்தான். தன்னையும் நொந்து கொண்டான். கோசலைபாற் சென்று அழுதான். இராமனைத் திரும்ப அழைத்துவந்து அரசனாக்குவேன் என்று தீர்மானஞ்செய்து கொண்டான்.

தசரதன் ஈமக்கிரியை

தைலத்திலிட்டு வைத்த தசரதன் உடலுக்கு அந்திமக் கிரியைகள் செய்ய ஆயத்தஞ்செய்தனர். பரதன் கிரியைகள் செய்ய முற்பட்டான். வசிட்ட முனிவர் அவனை நோக்கி, “தசரத மன்னன் உன்னைத் தன் மகனல்ல வெனத் துறந்தான்”

என்றார். பரதன் மீளாத்துயரில் ஆழ்ந்தான். சத்துருக்கினனைக் கொண்டு கிரியைகள் யாவுஞ் செய்வித்தனர்.

தசரதனோடு அவனது பட்டமகிஷிகளல்லாத மனைவியரும் உடன்கட்டை ஏறி விண் சென்றனர். அயோத்தி நகர் துயரக் கடலில் ஆழ்ந்தது.

குகன்

நகரைக் கடந்த இராமன் முதலியோர், கங்கை நதியைக் கடந்து அப்பாற் செல்ல வேண்டி இருந்தது. கங்கை நதியிற் படகு செலுத்தும் குகன் என்பான் இராமன்பால் மிகுந்த நேயம் பூண்டவன். அவன் இராமனிருக்குமிடம் வந்து பழம் முதலியன கொடுத்து அவர்களைத் தரிசித்தான். “இதுவரை நாங்கள் நான்கு சகோதரர்களாக வாழ்ந்தோம். இன்றுதொட்டு உன்னோடு ஐவரானோம்” என்று குகன்பால் உரிமை பாராட்டினான் இராமன்.

பின் குகனது படகிலே இராமன் முதலானோர் கங்கையைக் கடந்து வனம் புகுந்து வசிப்பாராயினர்.

பரதனும் குகனும்

இராமனைத் திரும்ப நாட்டிற்கு அழைத்து வருவதற்காகப் பரதன் சேனைகளோடும், மந்திரி பிரதானியரோடும், தாய்மாரோடும் புறப்பட்டான். அவர்கள் கங்கைக் கரையை வந்தடைந்தனர். சேனையும் இவர்களும் வருவதைத் தூரத்திலேயே குகன் கண்டான். பரதன் இராமனோடு போர் செய்ய வருவதாகக் குகன் நினைத்தான். “இராமனைக் காட்டுக் கனுப்பியது மல்லாமல் இங்கும் சேனைகளோடு இராமர்பால் போர் தொடுக்க வந்திருக்கின்றான். இவனை நானே கொல்லுவேன்” என்று வஞ்சினம் கூறினான்.

இவன் கங்கைக் கரைக்குத் தலைவன்; வேடர் குலத்தவன்; தனது வேடர்களை அழைத்துப் போர் செய்ய ஏவ நினைத்தான்.

ஆனால், இப்பொழுது சமீபத்தில் வந்த பரத சத்துருக்கினர்களைப் பார்த்தான். இராமன் பிரிவால் வாடியிருந்த பரதன் போர் செய்ய வருவான் போலத் தென்படவில்லை. தோற்றத்திலும் அவன் ஸ்ரீ இராமனை ஒத்தி ருந்ததையும் சத்துருக்கினன் இலட்சுமணனை ஒத்திருந்ததையும் கவனித்தான்.

பரதனும் சுமந்திரன் முதலியோர்பால் விசாரித்துக் குகன் இராமன்பால் பிரியமுடையான் என்பதை அறிந்துகொண்டான். அவனைச் சந்திக்க வேண்டி நெருங்கினான். இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு அன்பு பாராட்டினர். பரதன் இராமனைத் திரும்ப

நாட்டுக்கு அழைத்துச் செல்லப் போவதை அறிந்து குகன், “தாயின் சொல்லைக் கேட்டுத் தந்தை கொடுத்த அரசைத் தீவினை என்று நினைத்துத் துறந்தாய்; கவலை கூடிய முகத்தோடு இராமனைத் தேடி வந்தாய். இப்படிக் குணமமைந்த உனக்கு ஆயிரம் இராமரும் நிகராவரோ?” என்று புகழ்ந்தான். பின் இராமன் முதலியோர் கங்கைக் கரையில் தங்கியிருந்த இடத்தைக் காட்டினான். இலட்சுமணன் துயிலாது கண் விழித்துக் காத்தமையையுங் கூறினான். பரதன் அது கேட்டு மனம் வருந்தினான். பின் படகுகளில் ஏறி அனைவரும் கங்கையின் மறுகரையை அடைந்தனர்.

பாதுகா பட்டாபிஷேகம்

கங்கைக் கரையை அடைந்த பரதன் முதலாயினோர் இராமனைக் காணச் செல்வாராயினர். இலட்சுமணன் இவர்களைத் தூரத்தே கண்ணுற்றுப் போர் செய்ய வருவதாக நினைத்துக் கோபங்கொண்டான். தானும் யுத்தத்துக்கு ஆயத்தங் கொண்டான். இராமன் அவனைப் பொறுமையாயிருக்குமாறு பணித்தான். பரதன் சமீபித்தான். அவனை இலட்சுமணன் கண்டு தான் கொண்ட எண்ணம் தவறு என்பதை உணர்ந்தான். பரதன் ஓடிச்சென்று இராமன் பாதங்களில் விழுந்து அழுதான்.

இராமன் முதலியோர் தசரதனது மரணத்தைக் கேள்வியுற்று அழுது புலம்பினர். பின் பரதன் இராமனை நாட்டுக்குத் திரும்பும்படி கேட்டான். இராமன், ”சொன்ன சொல் தவறேன். தந்தை கட்டளையை மீறேன்” என மறுத்தான். மந்திரி பிரதானிகள் யாவர் கூறியும் இராமன் இணங்கவில்லை.

ஈற்றில் பரதன், “நான் ஒருபோதும் முடிசூட மாட்டேன். தேவரீரது பாதுகை (மிதியடி)யையாவது கொடுத்தால் அதைச் சிம்மாசனத்து வைத்து அதன் கீழ் நானிருந்து நாட்டைப் பாதுகாப்பேன். பதினான்கு வருடங்கள் கழிந்ததும் தாங்கள் வரத் தவறினால் யான் நெருப்பில் விழுந்து உயிர் விடுவேன்” என்றான்.

இராமன் சம்மதித்துத் தன் பாதுகையை அளித்தான். பரதன் முதலியோர் இராமனாதியோரிடம் விடை பெற்றுக் கொண்டனர். பரதன், இராமன் பாதுகையைத் தலைமேற் சுமந்து சென்றான். அயோத்தி சென்று நந்திக்கிராமம் என்னும் ஊரிலே இராமன் பாதுகையை வைத்துத் தான் கீழிருந்து நாடு காப்பானாயினான்.

சூர்ப்பனகை

தண்டக வனத்திலே சீதையோடும் இலட்சுமணனோடும் வசித்து வந்தான் இராமன். அந்நாளிலே தசரதனது சிறந்த நண்பனாயிருந்த சடாயு என்னும் கழுகரசனைச் சந்திக்க நேர்ந்தது. சடாயு தன் நண்பரது புத்திரர்கள் பால் மிகவும் நேசம் பாராட்டினான்.

பின் இராமன் முதலாயினோர் பஞ்சவடி என்னுமிடஞ் சென்று இலட்சுமணனால் அமைக்கப்பட்ட பர்ணசாலையில் வசித்து வருவாராயினர். இராவணனது தங்கையாகிய சூர்ப்பனகை அவ் வனத்தில் வாழ்ந்து வந்தாள். இராமனது அழகைக் கண்டு அவன் மேற் காதல் கொண்டாள். மாயம் வல்ல அவ்வரக்கி ஒரு அழகிய பெண் வடிவெடுத்து வந்து இராமனை மயக்க முயன்றாள். இராமன் சிறிதும் மயங்கவில்லை .

சீதையெனும் அழகி அவர்களுடன் இருப்பதா லேயே இராமன் தன்னை விரும்பவில்லையென நினைத்தாள். எனவே, சீதையைத் தானே எடுத்துச் செல்ல முயன்றாள். இலட்சுமணன் இதைக் கண்டு சூர்ப்பனகையின் அங்கங்களை வெட்டி அவளை மானபங்கப்படுத்தினான்.

அவள் அலறி அழுதுகொண்டே சென்று தனது பந்துக்களான கர தூஷணர்களிடம் முறை யிட்டாள். அவர்கள் இராமன்பால் போருக்கு வந்து அவனுடைய அம்பால் மாண்டனர்.

இராவணன்

இராவணன் என்னுமரசன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன் வலிமை மிகுந்தவன். பத்துச் சிரங்களுடையவன். இறைவனிடம் பல வரங்களும் பெற்றவன். கும்பகர்ணன், விபீஷணன் என்னும் இரு தம்பிமார்களை உடையவன். கும்பகர்ணன் எந்நேரமும்நித்திரையில் ஆழ்ந்திருப்பவன். விபீஷணன் சிறந்த சற்குணம் படைத்தவன்.

இந்திரஜித்து முதலாகிய வலிமை மிகுந்த புத்திரர்களையும் உடையான் இராவணன். தனது பராக்கிரமத்தால் தேவர்களும் அஞ்ச இலங்கையை ஆண்டவன் இராவணன். மயன் என்னும் தேவதச்சனது அழகிலும், குணத்திலும் சிறந்த மண்டோதரி என்னும் பெண்ணைப் பட்டமகிஷியாகவுடையான். வேறு பல மனைவியர்களும் அவனுக்கிருந்தனர். இத்தகைய தனது தமையனாகிய இராவணனிடம் சூர்ப்பனகை போனாள்.

மாரீசன் வதம்

சூர்ப்பனகை தனக்கு இராமலட்சுமணர்கள் இழைத்த தீங்கைக் கூறினாள். மேலும், “அயோத்தி நகரை ஆண்ட தசரத புத்திரர்களாகிய இராம லட்சுமணர்களுடன் ஒரு அழகிய பெண்ணிருக்கிறாள். அவள் இராமனின் மனைவி; வருணிக்க முடியாத அழகுடையவள். சிறந்த அழகுடைய அப் பெண் இலங்காதிப் னாகிய உனக்கே தகுதியுடையவள் என்று எண்ணினேன். அவளை உன்னிடம் எடுத்துவர முயன்றபோது அந்த மனிதர்கள் எனது அங்கங்களை வெட்டி அவமதித்தனர்” என்று கூறி அழுதாள்.

அந்தக் கணமே இராவணன் சீதையை அபகரிக்கத் தீர்மானித்தான். தனது மாமனான

மாரீசனிடஞ் சென்று அவனை ஒரு பொன் மான் வடிவாகப் போய்ச் சீதை கண்ணிற் படும்படி உலாவ உத்தரவிட்டான்.

அங்ஙனமே ஒரு பொன்மானைக் கண்டு சீதை அதைத் தனக்குப் பிடித்துத் தர வேண்டினாள். இராமன், இலட்சுமணனைச் சீதைக்குத் துணையாயிருப்பக் கூறி, மானைத் தொடர்ந்து சென்றான். மான் கைக்கு அகப்படாது போகவே அரக்கரது வஞ்சனையாய் இருக்குமோவெனச் சந்தேகித்துத் தனது வில்லை வளைத்து அம்பைச் செலுத்தினான். அம்புபட்ட மாரீசன், “இலட்சுமணா!” என்று இராமனது குரல்போல அழைத்து விட்டு உயிர் துறந்தான்.

இராவண சந்நியாசி

மாரீசனது குரல் கேட்டுச் சீதை திகைத்தாள். தனது கணவனுக்கு ஏதோ தீங்கு நேர்ந்துவிட்டதாக நினைத்தாள். இலட்சுமணனைப் போய்ப் பார்த்து வரும்படி வேண்டினாள். இலட்சுமணன் சீதையைத் தனியாக விட்டுப் போக விரும்ப வில்லை. ‘இவையெல்லாம் அரக்கரது மாயை” எனக் கூறினான். ஆனால் சீதை பலவாறு வற்புறுத்தவே சீதையைத் தனியாகப் பர்ணசாலையில் விட்டுச் சென்றான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் இராவணன் ஒரு சந்நியாசி உருவத்தோடு சீதையிருந்த பர்ணசாலைக்கு வந்தான். சீதை உண்மையான சந்நியாசி என நினைத்து உபசரித்தாள். ஆனால் இராவணன் அவளைப் பர்ணசாலையோடு சேர்த்தெடுத்து ஆகாய வழியாகச் செல்லும் புஷ்பக விமானத்திற் கொண்டு இலங்கை நோக்கிச் செல்வானாயினான்.

சடாயு வதம்

சீதையை இராவணன் தூக்கிச் செல்வதை வழியிலே சடாயு என்னும் கழுகரசன் கண்டான். சடாயு இராவணனைத் தடுத்துப் போர் செய்தான். ஆனால் இராவணன் சடாயுவின் சிறகையரிந்து காயப்படுத்தினான். சடாயு குற்றுயிராக விழுந்து கிடந்தான். இராவணன் மேல்நோக்கிச் சென்றான். சீதை அழுது புலம்பினாள்.

இராம லட்சுமணர் துயரம்

பர்ணசாலைக்குத் திரும்ப வந்த இராம லட்சுமணர் சீதையைக் காணாது துணுக்குற்றனர். மனம் புண்ணாய் வருந்தினர். சீதையைத் தேடித் திரிவாராயினர். அப்பொழுது வழியிலே சிறகரியப்பட்டுக் கிடந்த சடாயுவைக் கண்டனர். (சீதை ஒரு பத்துத் தலை அரக்கனால் தூக்கிச் செல்லப்பட்டாள்” என்று கூறிச் சடாயு உயிர் துறந்தான்.

சடாயுவின் அந்தியக் கிரியைகளை இராம லட்சுமணர் செய்து முடித்தனர். பின் சீதையைத் தேடிக்கொண்டே சென்று ருசியமூக மலைச் சாரலையடைந்தனர்.

தமது தமையனாகிய வாலி என்பானுக்குப் பயந்து, தனது மந்திரியாகிய அனுமானுடன் அம்மலையிற் தங்கியிருக்கும் சுக்கிரீவன் என்னும் குரங்கரசன் அவர்களைக் கண்ணுற்றான். சுக்கிரீவனும் அனுமானும் அவர்களை அழைத்து உபசரித்தனர். அவர்கள் யாவரெனவும் அறிந்தனர். ”எனது மனைவியை அபகரித்து என்னையும் நாட்டினின்றும் ஓட்டினான் எனது தமையன் வாலி. யான் தங்களுக்கு அடைக்கலம்” என்று சுக்கிரீவன் இராமனுக்குச் சொன்னான்.

இராமன் சுக்கிரீவனுக்கு அபயமளித்து, நீதி தவறிய வாலியைக் கொன்று உன்னைக் காப்பாற்றுவேன். நீ போய் வாலியைப் போருக்கு அழை. அப்பொழுது யான் வாலியைக் கொல்வேன்” என்று சொன்னான்.

வாலி வதம்

சுக்கிரீவன் அவ்விதமே கிஷ்கிந்தைக்குச் சென்று வாலியை அறைகூவிப் போருக்கு அழைத்தான். தனது மனைவி தடுப்பவும் கேளாது வாலி வெளிவந்து சுக்கிரீவனுடன் பொருதினான். இராம லட்சுமணர் மறைந்திருந்து இவர்களைக் கண்ணுற்றனர்.

முதன்முதலில் வாலியினால் சுக்கிரீவன் தோற்கடிக்கப்பட்டான். சுக்கிரீவன் இராமனிடஞ் சென்று, “நீங்களெனக்குத் துணை செய்ய வில்லையே, யான் இளைத்துப் போனேனே” என்றான்.

“உனக்கும் உன் தமையனுக்கும் வேறுபாடு தெரியவில்லை; வேற்றுமை தெரியும்பொருட்டு இந்த மாலையை அணிந்து கொள்” என்று கூறி, ஒரு மாலையை அணிவித்துச் சுக்கிரீவனை மீண்டும் போர் செய்ய அனுப்பினான் இராமன்.

வாலி, சுக்கிரீவனை நிலத்திலறைந்து கொல்லப்போகும் சமயத்தில் இராம பாணம் வாலியின் மார்பைப் பிளந்து சென்றது. புறத்தே அம்பு ஊடுருவிப் போகாதவாறு தடுத்துக் கையினாற் பிடித்திழுத்து அம்பின் மேல் பார்வையைச் செலுத்தினான் வாலி. “இராமன்” என்ற பெயரைக் கண்டான்.

தன்முன் தோன்றிய இராமனை நோக்கி, “சூரிய குலத்து அரசனாகிய நீ நீதி தவறி விட்டாய். இருவர் யுத்தஞ் செய்யும்போது மறைந்து நின்று ஒருவர்மேல் அம்பெய்தல் தருமமா? நிராயுதன்மேல் அம்பு செலுத்துதலும் நீதியோ?” என்று வாலி வினவினான்.

“உனது சகோதரன் மனைவியை அபகரித்தாய். உன்னை மன்னிப்புக் கேட்ட உன் தம்பியை மன்னித்தாயல்லை. சுக்கிரீவனுக்கு யான் முன்னமே அடைக்கலம் கொடுத்தேன். யான் உன் முன் வந்திருந்தால் நீயும் என்பால் அடைக்கலம் புகுதல் கூடும். அப்பொழுது யான் சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமற் போகுமே” என்றான் இராமன்.

இவற்றைக் கேட்ட வாலி நல்லுணர்வு உதிக்கப் பெற்றவனானான். சுக்கிரீவனையும் தன் மகன் அங்கதனையும் இராமனுக்கு அடைக்கலம் கொடுத்தான். தானும் உயிர் நீங்கினான்.

அனுமான் இலங்கைக் கேகுதல்

சுக்கிரீவனுக்குப் பட்டாபிஷேகம் நிறை வேறிற்று. அதன்பின் வானர சேனைகள் சீதையைத் தேடிப் பல திக்குகளிலுஞ் சென்றன. சுக்கிரீவன் மந்திரியாகிய அனுமனும் சீதையைத் தேடிப் புறப்பட்டான். அனுமன் இராமன்பால் மட்டற்ற பக்தியுடையன். இராமன் அவனை அழைத்துத் தனது கணையாழி ஒன்றைக் கொடுத்து, <<சீதையைக் கண்டால் இந்தக் கணையாழியை அவளிடங் கொடு. சீக்கிரம் நான் வந்து அவளை மீட்பேனென்று சொல்” என்று கூறி அனுப்பினான்.

நினைத்த மாத்திரத்தே நினைத்த தோற்ற மெடுக்க வல்ல அனுமன் விசுவரூபமெடுத்துக் கடலைத் தாண்டி இலங்கை வந்து சேர்ந்தான். ஆங்குள்ள இடங்கள் தோறுஞ் சீதையைத் தேடித் திரிவானாயினான்.

அசோகவனத்தில் சீதை

இராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதை அரக்கியர் காவல் காப்ப அசோகவனத்திற் சிறை வைக்கப்பட்டாள். அங்கு அவளுக்குக் காவலாகிய அரக்கியர் நயத்திலும் பயத்திலும் இராவணனை மணஞ் செய்யும்படி வற்புறுத்தி வந்தனர். இராவணனும் இடையிடையே சீதையின்பால் வந்து அவளைத் தன்னை நேசிக்கும்படி வற்புறுத்தி வந்தான்.

சீதை துன்பக் கடலில் மூழ்கித் தவித்தாள். உலகம் முழுவதையும் தனது சொல்லினாற் சுடும் கற்பின் மிக்காளாயினும், அவ்விதம் செய்வது கணவனது ஆண்மைக்கு இழுக்காகும் என்று பொறுத்து வந்தாள். கணவன் தன்னை வந்து மீட்பான் என்ற நம்பிக்கை ஒன்றிலேயே தனது உயிரைப் போக்காது வாழ்ந்து வந்தாள்.

தரும நெறி தவறாத விபீஷணனென்பான் இராவணனுடைய தம்பி. விபீஷணனின் மகளாகிய திரிசடை என்பாள் சீதைக்கு ஆறுதல் மொழிகள் கூறித் தேற்றி வந்தாள். பல நாட்களாகியும் இராமன் வராதொழியவே சீதை மனமுடைந்தாள். இனி உயிரை மாய்ப்பதே தகுதி என்று தீர்மானித்தாள்.

அரக்கியர் யாவருந் துயிலுஞ் சமயம் பார்த்து அதுவே உயிர் விடத் தக்க சமயமென்று நினைத்து, ஒரு குருக்கத்திப் புதரை அடைந்தாள்.

இராவணன் முதலாய அரக்கர் பலரது அரண்மனை முழுவதிலுஞ் சீதையைத் தேடி அசோகவனத்தில் வந்து சேர்ந்த அனுமன் இதைக் கண்டான். கண்டு நெஞ்சம் துணுக்குற்றான். “யான் இராம தூதன்” என்று கூறிக் கொண்டே பிராட்டிக்கு முன்னே தோன்றினான்.

தாங்கள் இங்கு இருப்பது இராமன் அறியாததனாலேயே அவர் இங்கு இன்னும் வந்து தங்களை மீட்கவில்லை ” என்றான். பின் இராமன் கூறிய அடையாள வார்த்தைகளைக் கூறினான்.

அவன் கொடுத்த கணையாழியையுங் கொடுத்தான்.

சீதை மனம் மகிழ்ந்தாள். கணையாழியைக் கையில் வாங்கிக் கண்ணிலும் மார்பிலும் ஒற்றிக்கொண்டாள். இராமனைக் கண்டதே போன்று மனம் மகிழ்ந்தாள். அனுமனை நோக்கி, “நீ என்றும் சிரஞ்சீவியாய் வாழ்வாயாக” என்று அனுக்கிரகித்தாள்.

பின் தான் வைத்திருந்த சூளாமணியை அனுமனிடங் கொடுத்து அதை இராமனிடங் கொடுக்கும்படி பணித்தாள்.

அனுமன் தான் சீதையை இராமனிடங் கொண்டு சேர்ப்பிக்கக் கருதினான். ஆனால், சீதை தன் கற்புக்கும் இராமன் ஆண்மைக்கும் மாசு ஏற்படக்கூடிய அச்செய்கைக்கு சம்மதிக்க வில்லை .

சீதை அனுமனை நோக்கி, “யான் இங்கு இன்னும் ஒரு மாதம் உயிர் தரித்திருப்பேன். அதற்குள் என் கணவர் என்னை வந்து மீட்காவிடில் நான் உயிர் விடுவேன்” என்றுஞ் சொன்னாள்.

இந்திரஜித்தும் அனுமனும்

சீதையிடம் விடை பெற்ற அனுமன் இராவணனுக்குத் தன் வருகையைத் தெரிவிக்க வேண்டி அசோக வனத்தை அழித்தான். அனுமனை எதிர்க்கும்படி இராவணன் அனுப்பிய

பல வீரர்களையும், அவன் மகனாகிய அட்சய குமாரனையும் கொன்றான். பின் இராவணனது வீரப் புதல்வனான இந்திரஜித்து வந்து பொருதான்.

பிரம்மாஸ்திரத்தினாலே அனுமனைப் பிணித்து இராவணன் முன்னிலையிற் கொண்டு சென்றான். பிரம்மாஸ்திரத்தை அறுக்கும் வல்லமை உளனாயினும் இராவணனைக் காணும் விருப்பினால் அந்த அஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டாற்போலச் சென்று அனுமன் இராவணன் சபையைச் சேர்ந்தான்.

அனுமன் இலங்கையை எரியூட்டுதல்

தன் முன்னே கொணர்ந்து நிறுத்தப்பட்ட அனுமனை இராவணன் கோபத்தோடு நோக்கினான். “நீ யார்? இங்கு வந்த காரணம் யாது?” என்று வினவினான். அனுமன் இராவணனை நோக்கி, ‘வாலி என்னும் குரங்கரசனது மகனாகிய அங்கதன் அனுப்ப வந்த தூதன் யான்” என்றான்.

சிவபிரான் வீற்றிருந்த கைலையங்கிரியையும் அசைத்த இராவணன், முன்னொரு காலத்திலே வாலியின் வாலினாலே கட்டப்பட்டவன். இராவணன் அனுமனை நோக்கி, ‘வாலியின் சுகமெப்படி?” என்று வினவினான். அனுமன், இராமபிரானால் வாலி கொல்லப்பட்டுச் சுக்கிரீவனுக்கு இராச்சியம் அளித்த செய்தியைத் தெரிவித்தான். பின்னும் அவனை நோக்கி,

“எனது மன்னனாகிய சுக்கிரீவன் தனது நண்பன் இராமனின் மனைவியைத் திரும்ப அவனிடம் ஒப்புவித்து மன்னிப்புக் கேட்கும்படி சொல்லி அனுப்பினார்” என்றான்.

இதைக் கேட்டு இராவணன் மிகுந்த கோபமுற்றான். அனுமனைக் கொல்லும்படி அரக்கரை ஏவினான். இராவணனது தரும நெறி தவறாத தம்பியாகிய விபீஷணன், “தூதனைக் கொல்லுதல் கூடாது” என்று கூறித் தடுத்தான். எனவே, அனுமனது வாலிலே தீயைக் கொளுத்தி வாலைச் சுட்டு விடும்படி உத்தரவிட்டான்.

வலிமை மிகுந்த அனுமன் இராவணனை எதிர்த்துப் போர் செய்ய விரும்பினான். ஆனால், மிகுந்த வலிமை படைத்த இராவணனுடன் போர் தொடங்கில் போர் முடிய அதிக நாள் செல்லும். ஆயின் சீதை, ஒரு மாதத்திற்குள் இராமன் வந்து மீட்காவிடில் உயிர் விடுவேனென்று சொன்ன வார்த்தையை நினைத்து அமைதியாகவிருந்தான்.

அரக்கர்கள் அனுமனைக் கயிறுகளாற் கட்டி வாலிலே சீலையைச் சுற்றி எண்ணெயூற்றி நெருப்பைக் கொளுத்தி விட்டனர். அனுமன் ஒரு பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு மேல் எழும்பினான். அவனைக் கட்டிய கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்த அரக்கர்கள் கைகள் ஒடிந்து நிலத்தில் வீழ்ந்து இறந்தனர். அனுமன் இலங்கை நகர மாளிகைகளிலெல்லாம் தீயைப் பற்ற வைத்தான்.

அனுமனது வாலிலே தீக்கொளுத்திய செய்தியைக் கேட்டுச் சீதை வருந்தினாள். அனுமனைச் சுடாதிருக்கும்படி அக்கினி தேவனிடம் பிரார்த்தித்தாள். எனவே தீ அனுமனைச் சுடவில்லை . அனுமன் சீதையின் கற்பு விசேஷத்தினாலேயே அக்கினி தன்னைச் சுடவில்லையென்பதை அறிந்து கொண்டான்.

இலங்கை நகரம் முழுவதும் தீக்கிரையாயிற்று. அனுமனை அடக்க வந்த அரக்கர்கள் யாவரும் அனுமனாற் கொல்லப்பட்டனர். சீதையின் கற்பின் திறமையால் அவள் இருந்த அசோகவனத்தில் மாத்திரம் தீ பரவவில்லை . அனுமன் தனது வாலைக் கடலிலே தோய்த்து நெருப்பைத் தணித்தான். பின் அசோகவனம் சென்று சீதையிடம் விடைபெற்றுக் கொண்டு இலங்கையை விட்டுப் புறப்பட்டான்.

இராமன் முதலியோர் இலங்கைக்குப் புறப்படுதல்

மற்றைய வானர சேனைகள் வர முன்னரே அனுமன் இராமனிடம் போனான். அச்சமயத்தில் இராமன் சுக்கிரீவனோடு இருந்து சீதையைத் தேடிச் சென்றவர்கள் இன்னும் வரவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது, “கண்டேன் சீதையை” என்று கூறிக் கொண்டே அனுமன் அவர்கள் முன் வந்தான். ‘கற்பிற் சிறந்த சீதையைக் கண்டேன்! பொறையிற் சிறந்த பூமகளைக் கண்டேன்!

அன்பின் மிக்க அன்னையைக் கண்டேன்! என் பெரிய தெய்வத்தைக் கண்டேன்!” என்று கூறி அசோகவனத்தில் சீதையின் நிலைமையை விவரித்தான். தான் ஸ்ரீ இராமனின் கணையாழி

யைக் கொடுத்து அவளை மகிழ்வித்ததைச் சொன்னான். பின் சீதை கொடுத்த சூளாமணியைக் கொடுத்தான். இராமன் மனமுருக மயிர்க்கூச்செறிய அதைப் பெற்றுக் கொண்டான். பின் சீதை ஒரு மாதத்திற்குள் தன்னை மீட்கும்படி சொன்ன வார்த்தையை நினைந்து உடனே புறப்பட ஆயத்தஞ் செய்தனர்.

குரங்குச் சேனைகள் ஒருங்கு சேர்ந்து மலைகளையும் கற்களையும் கொண்டு அணைகட்டிக் கடலைக் கடந்தன. இராமன் இலட்சுமணன் முதலியோரும் கடலைக் கடந்து சென்று இலங்கையைச் சேர்ந்து பாடிவீடு அமைத்துத் தங்கினர்.

விபீஷணன் அடைக்கலம் புகுதல்

இராமன் முதலியோர் இலங்கை வந்த செய்தியை அரக்கர் கேள்வியுற்றனர். அறத்தின் வழி செல்லும் விபீஷணன் சீதையை இராமன்பால் அனுப்பும் படி பலவாறு இராவணனுக்குச் சொன்னான். இராவணன் அவன் வார்த்தைகளைச் சிறிதும் கேட்டானில்லை. இராவணனாலும் அவன் சபையினராலும் விபீஷணன் அவமதிக்கப் பட்டான். தருமமே தனக்கு உயிரென மதித்த விபீஷணன் தன் தமையனாகிய இராவணனைத்

துறந்து இராமனிடஞ் செல்ல நினைத்தான். அங்ஙனமே தமையனை விட்டுப் பிரிந்து இராமனிடஞ் சென்று அடைக்கலம் புகுந்தான். தனது பகைவனின் தம்பியாயிருந்தாலும் அண்டினோர்களை ஆதரிப்பதையே தனக்குச் சிறந்த குணமாக உடைய இராமன், அவனுக்கும் அடைக்கலம் கொடுத்தான். அனுமன் வாயிலாக விபீஷணனது நற் குணத்தைக் கேள்வியுற்றான். விபீஷணனை இலங்கை மன்னனாக்குவதாகக் கூறி அவனுக்கு அடைக்கலம் தந்து ஆதரித்தான். பின் யுத்த முறையின்படி இராவணனிடம் வாலியின் மைந்தனாகிய அங்கதனைத் தூதாக அனுப்பினார்கள். இராவணன் சீதையை விடச் சம்மதிக்கவில்லை. இராவணன் ஆதியோருக்கும் இராமன் ஆதியோருக்கும் போர் மூண்டது.

முதல்நாட் போர்

முதல்நாள் இராமருக்கும் இராவணனுக்கும் நடந்த யுத்தத்திலே இராவணன் தனது தேரையும் சாரதியையும் இழந்தான். தனது மணி மகுடங்கள் பத்தையும் இழந்தான். அப்பொழுது கருணா மூர்த்தியாகிய இராமன் அவனை நோக்கி, “இன்று போய் நாளை யுத்தத்துக்கு வா” என்று சொன்னான்.

அமரரும் அஞ்சும் ஆண்மை படைத்த இராவணன் தலை குனிந்து கால்நடையாகவே சென்று மாளிகையை அடைந்தான்.

கும்பகர்ணன் வதம்

இராவணனது தம்பியாகிய கும்பகர்ணனும் அறநெறியிற் சிறிது பற்றுடையான். எனவே, அவன் சீதையை விட்டுவிடும்படி இராவண னுக்குப் புத்தி கூறினான். ஆனால், இராவணன் சம்மதிக்கவில்லை . தனது தமையன் பொருட்டுப் போர்க் களத்திலே போர் செய்து உயிர் விடுதலே தகுதியென்று பொருகளம் வந்து பொருதான். இராமனுடைய அம்பால் அவனும் மாண்டான். இலங்கை அதிபன் மிகத் துயருற்றான். ஆனாலும் சீதையை விட மனம் இசைந்தானில்லை.

இந்திரஜித்து

இராவணனது வீரப் புதல்வனாகிய மேகநாதன் முன்னொரு காலத்தில் தேவர் தலைவனாகிய இந்திரனைப் பாசத்தாற் பிணித்து இந்திரஜித்து’ எனப் பெயர் பெற்றவன். இவன் போர்க் கோலம் பூண்டு புறப்பட்டான். விண்ணிலே மறைந்து நின்று கொடிய நாகபாசத்தை விடுத்தான். அந்நாகபாசம் இலட்சுமணனையும் வானர சேனையையும் பிணித்து விழுத்தியதும் பகைவர் இறந்தாரென்று இந்திரஜித்து மாளிகை திரும்பினான். ஆனால் அங்கு வந்த கருடன் வரவால் நாகபாசம் பிணிப்பற்று வீழ்ந்து அனைவரும் உயிர் பெற்றனர்.

மீண்டும் ஒருகால் இந்திரஜித்து விடுத்த மலரோன் படையால் இலட்சுமணனும் வானர வீரரும் சாய்ந்து விழுந்தார்கள். ஆனால் அனுமன் மலையை, சென்று கொணர்ந்தான். அம் மருந்தால் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர்.

இதை அறிந்த இந்திரஜித்து பகைவரை வெல்லு வதற்காக ஒரு வேள்வி செய்து முடிக்கக் கருதினான். தன் செய்கையைப் பகைவர் அறியாது அவர்களை ஏமாற்றக் கருதினான். சீதை போல ஓர் உருவம் அமைத்து அதனை அனுமனெதிரே வெட்டியெறிந்து அயோத்தியில் உள்ளாரையும் அழிப்பதாகச் சத்தியஞ் செய்து அத்திசை நோக்கிச் சென்றான். பின் அங்கு செல்லாது இலங்கையிலே புகுந்து நிகும்பலை யில் வேள்வி செய்யத் தொடங்கினான்.

சீதை வெட்டுண்ட செய்தியை அனுமனால் கேள்வியுற்ற இராமன் மிக வருந்தினான். ஆனால், விபீஷணன் அவை யாவும் அரக்கரது மாயை என்று தேற்றினான். வண்டு உருவம் கொண்டு சென்று பார்த்து, சீதை அசோகவனத்தில் அழியாதிருப்பதையும் இந்திரஜித்து வேள்வி செய்வதையும் அறிந்து வந்து சொன்னான்.

இலட்சுமணன் விபீஷணனோடும் வானர சேனையோடும் நிகும்பலைக்குச் சென்று இந்திரஜித்துடன் பொருதினான். தமையனான இலங்கை வேந்தனைத் துறந்து பகைவருடன் சேர்ந்த விபீஷணனை இந்திரஜித்து மனமார வெறுத்தான். போர்க்களத்திலும் விபீஷணனைப் பலவாறு தூஷித்தான். ஈற்றில் இலட்சுமணனது அம்பால் இந்திரஜித்து மாண்டான்.

இலட்சுமணனது அம்பால் அறுபட்ட இந்திரஜித்தின் தலையை அங்கதன் எடுத்து வந்து இராமன் முன்னே வைத்தான். சிறை இருந்த சீதையையே அடைந்தாற் போல இராமன் மனம் மகிழ்ந்தான். தேவர்களும் மகிழ்ந்தனர். இந்திரஜித்தின் தாயும் இராவணனின் பட்டத்தரசியுமான மண்டோதரி மைந்தனது தலையற்ற உடல்மேல் விழுந்து கல்லும் உருகக் கரைந்து அழுதாள். நாளைக்கு இலங்காதிபனுக்கும் இக்கதி நேரிடுமே என்று மனதில் மிக அஞ்சினாள்.

இராவணன் வதம்

தனது சுற்றத்தார் அனைவரையுஞ் சேனை களையும் தோற்ற இராவணன் மீண்டும் இராமன் முதலியோரோடு கடும் போர் செய்தான். ஈற்றில் இராமபாணத்தால் உயிர்துறந்து வீர சுவர்க்கம் புகுந்தான். இராவணன் இறந்து விழுந்ததை விபீஷணன் கண்டான். தருமத்துக்காகத் தமையனைத் துறந்தானாயினும் அவன் இராவணன்பால் மட்டற்ற பக்தியுடையான். இராவணனது உயிரற்ற உடலைப் பார்த்துக் கதறி அழுதான். ‘சிவன் இருக்கும் கைலையை அசைத்த தோள்கள் புழுதியிற் கிடக்கின்றனவே” என்று புலம்பினான்.

உயிரற்ற இராவணன் உடலை இராமன் கவனித்தான். அவனது முதுகிலே தழும்புகளைக் கண்டான். “இராவணன் சிறந்த வீரன் என்று நினைத்தோமே. இவனுக்கு முதுகில் தழும்பு ஏற்பட்டது எவ்விதம்?” என்று வியந்தான். அப்பொழுது விபீஷணன் ‘முன் இராவணன் திக்குவிஜயஞ் செய்த காலத்திலே எல்லாரையும் வென்றான். பின் தன்னேடு போர்செய்ய யாவரும் இல்லாததால் திக்கு யானைகளோடு போய்ப் பொருதினான். அவற்றின் கொம்புகள் இராவணனின் மார்பை ஊடுருவிப்போய் முதுகிலே தைத்து முரிந்து விட்டன. அந்தத் தழும்புகளே இவை” என்று கூறினான். இராமன் முதலியோர் இராவணனது வீரத்தை வியந்து பாராட்டினர். தேவர்களும் மகிழ்ந்து பாராட்டினர்.

இராவணனது மரணத்தை அவனது மனைவியர் அறிந்தனர். போர்க்களத்தே வந்து அழுது புலம்பினர். கற்பின் மிக்க அவனது பட்ட மகிஷியான மண்டோதரி இராவணன் இறந்ததை அறிந்தாள். போர்க்களம் வந்தாள். இராவணன் உடல் மேல் விழுந்து புலம்பினாள். பின் எழுந்து இராவணன் உடலைத் தழுவிக்கொண்டாள். உடனே அவளது உயிரும் நீங்கிற்று. அருந்ததி முதலாம் கற்பிற் சிறந்த மகளிரும் அவளது கற்பின் திறனை நோக்கி வியந்தனர்.

பின் விபீஷணன் இராவணனாதியார்க்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான்.

விபீஷணன் பட்டாபிஷேகம்

அரசனை இழந்த இலங்கைக்கு விபீஷணனை அரசனாக்கி முடிசூட்டத் தீர்மானித்தனர். இராமன் பதினான்கு வருடம் வனவாசஞ் செய்யும் வாய்மையைக் கடைப்பிடித்தல் காரணமாகத் தான் நகருக்குட் செல்லாது நகர்ப் புறத்தே தங்கி யிருந்தான். இராமனுடைய உத்தரவின்படி இலட்சுமணனும், அனுமன், சுக்கிரீவன் முதலாம் வானரரும் சென்று விபீஷணனுக்கு முடிசூட்டினர். தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்தார்கள்.

பெண்பிறந்தார், யான்பட்ட பெருந் துயரம் யார் பட்டார்?

பின் தேவ மாதர்கள் சென்று சீதையின் சடை பிடித்திருந்த கூந்தலைச் சீவிச் சிங்காரித்தனர். நல்லணி பூட்டிப் பட்டாடை உடுத்தி இராமனிடம் அழைத்துச் சென்றனர். தன்முன்னே வந்து நின்ற சீதையை இராமன் நோக்கி, ‘பெண்ணே , நாணமில்லாது இராவணனுடைய மனையிலே இதுவரை காலமும் உயிர்தரித்து வாழ்ந்துவிட்டு இன்று என் முன் வந்து நிற்கின்றாய். உன்னால் நீ பிறந்த குலத்துக்கும் புகுந்த குலத்துக்கும் இழிவு ஏற்பட்டதே. இராவணன் மாளிகையில் வசித்த உன்னைத் திரும்பவும் பெறுவதற்காக யான் போரில் இராவணனைக் கொல்லவில்லை. ஆனால், என் வீரத்துக்குப் பங்கம் ஏற்பட விடலாகாதென்றே இராவணனைக் கொன்றேன்” என்று கடுமையாக மொழிந்தான்.

வெகுகாலம் இராமனைப் பிரிந்து வாழ்ந்து, இப்பொழுது மகிழ்ச்சியோடும் ஆவலோடும் முன் வந்திருந்த சீதையின் காதில் இவ்வார்த்தைகள் நாராசம் போல விழுந்தன. இராவணன்

வைத்திருந்த சிறையில் வாழ்ந்த காலத்தும் ‘இன்னும் ஒரு முறையாவது இராமனின் திருவுருவத்தைத் தரிசிக்கலாம்’ என்ற நம்பிக்கை ஒன்றால் மாத்திரமே தன்னுயிர் தரித்திருந்த சீதை துயரக் கடலில் மூழ்கினாள். “பெண்ணாக உலகில் பிறந்தவர்களுள்ளே யான் படும் பெருந் துயர் யார்தான் பட்டார்” என்று நினைத்து மனம் புண்ணானாள்.

தனது கணவனால் துறக்கப்பட்டபின் உயிர்வாழ விரும்பாத சீதை, அக்கினியில் வீழ்ந்து உயிர்விடக் கருதினாள். இலட்சுமணனை நோக்கி அக்கினி மூட்டும்படி வேண்டினாள். இலட்சுமணன் நீர் மல்கும் கண்களோடு அக்கினியை மூட்டினான். சீதை அக்கினியை மூன்று முறை வலம் வந்து, “அக்கினியே, என் மனதிலாவது எனது கற்பிற்குப் பங்கமேற்பட நான் நடந்திருப்பேனாயின் என்னை எரிப்பாயாக” என்று கூறி அக்கினியுட் புகுந்தாள். ஆனால் சீதை அக்கினியாற் சிறிதும் துன்புற்றாள் இல்லை. குளிர்ந்த தடாகத்துளிருப்பாள் போன்று கொழுந்துவிட்டெரியும் அக்கினியின் நடுவிலே திகழ்ந்தாள். அப்பொழுது அக்கினி தேவன் இராமர் முன்னே தோன்றி, “இராமா, உனது மனைவி கற்புநெறி தவறாதவள். அவளுடைய கற்பாகிய அக்கினி என்னையுஞ் சுட்டு விட்டதே. அவளை இனிமேலாவது ஏற்றுக்கொள்.” என்று இரந்தான். இராமர் அப்படியே சீதையை அன்போடும் ஆர்வத்தோடும் ஏற்றுக்கொண்டு, “எனது மனைவி கற்பு நெறி தவறாதவள் என்பதை யான் அறிவேன். ஆனால் அவள் கற்பின் பெருமையை உலகுக்குங் காட்ட வேண்டியே இப்படி மொழிந்தேன்” என்று கூறினார்.

தேவர்கள் கிருபையால் சுவர்க்க லோகத்தில் இருந்த தசரதன் அங்கே வந்து தோன்றினன். மகனைத் தழுவி ஆசீர்வதித்து, ‘நீ விரும்பிய வரங்களைக் கேள்” என்றான். அப்பொழுது இராமன், “தந்தையே! நீங்கள் மனைவியல்ல வென்றும் புத்திரனல்லவென்றும் துறந்த கைகேயியும் பரதனும் எனக்குத் தாயுந் தம்பியுமாக வரந்தர வேண்டும்” என்றான். தசரதன், பரதன் உனக்குத் தம்பியாகும் வரத்தைத் தந்தேன். கைகேயி உன் தாயாகும் வரத்தை எப்படித் தருவேன்?” என்றான். அதற்கு இராமன், கைகேயியின் எண்ணப்படி நான் வனவாசஞ் செய்தமையினாலன்றோ தேவர்கள் துயர் தீரவும் இராவணன் மடியவுமாயிற்று. ஆதலால் கைகேயியை எனது தாயாக ஏற்க வேண்டும்” என்றான். தசரதனும் அப்படியே வரங் கொடுத்து இலட்சுமணன் சீதை முதலானோரைப் பாராட்டிச் சென்றான்.

பதினான்கு வருடம் முடியும் நாள் மிகச் சமீபித்து விட்டதால், அனுமன் அங்கதனோடு மற்றும் சில வானரப் பெண்களையுஞ் சீதைக்குத் துணையாகக் கொண்டு இராமலட்சுமணர் அயோத்திக்குப் புறப்பட்டனர். விபீஷணன் மனமில்லாது இராமன் முதலியோருக்கு விடை கொடுத்துவிட்டு இலங்கையில் தங்கினான்.

ஸ்ரீ இராமர் பட்டாபிஷேகம்

அயோத்தி நகரம் திரும்பிவரும் இராமன் முதலியோர் வழியிலே பரத்துவாச ரிஷியினது ஆச்சிரமத்தைக் கண்டு அவரால் உபசரிக்கப் பெற்றனர். பரத்துவாசர் இராமன் முதலியோரை அன்று அங்கு தங்கிச் செல்லுமாறு வேண்டிக் கொண்டார். அவர் வேண்டுகோளை இராமனால் மறுக்க முடியவில்லை. ஆனால் பதினான்கு வருடங் கழிந்ததும் தான் அயோத்தி சென்று சேராவிடிற் பரதன் உயிர்விடுவானே என்றும் அவன் மனம் கலங்கிற்று. எனவே அவன் அனுமானை உடனேயே அயோத்திக்குச் சென்று தாங்கள் வருஞ்செய்தியைப் பரதனுக்குத் தெரிவிக்கும்படி அனுப்பினான்.

இங்ஙனமிருக்க, அயோத்தியில் தமையன் வருடம் இன்றுடன் முடிகின்றது. இராமன் இன்னும் வரவில்லை. இனி மேலும் யான் உயிர் தரிக்க மாட்டேன்” என்று கூறிப் பெரிய அக்கினி மூட்டக் கட்டளையிட்டான். சத்துருக்கன், “நானும் உயிர் தரித்திருக்க மாட்டேன்” என்று தானும் அக்கினியில் விழ ஆயத்தமானான்.

தாயரும் சுற்றத்தாரும் மந்திரி பிரதானியரும் புலம்பப் பரதன் அக்கினியை வலம்வந்து விழ ஆயத்தமானான். அப்பொழுது, “பொறு! பரதனே! பொறு!, இராமன் வருகின்றான்” என்ற வார்த்தைகளுடன் ஆகாய மார்க்கமாக வந்து அனுமன் இறங்கினான். கொழுந்து விட்டெரிந்த அக்கினியை அனுமன் கண்டான். தான் சிறிது நேரஞ் சென்று வந்திருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய. விபரீதத்தை நினைத்தான். பின் அவர்களுக்கு ஸ்ரீராமன் பரத்துவாசர் ஆச்சிரமத்தில் தங்கியிருப்பதையுஞ் சீக்கிரத்தில் வருவாரென்பதையுஞ் சொன்னான். பரதனுடைய உத்தரவுப்படி நகர் முழுவதும் அலங்கரிக்கப் பட்டது. அயோத்தி நகரம் முழுவதும் குதூகலத்தில் ஆழ்ந்தது. பரதன், சத்துருக்கன் முதலியோர் நகரெல்லைக்குச் சென்று இராமனாதியோரை எதிர்கொண்டு அழைத்தனர். நல்ல தினத்திலே இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க
இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி யோங்க
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி.

– ஏழாம் பதிப்பு (மறுபிரசுரம்) – 1967 திருத்திய எட்டாம் பதிப்பு – 2005, வட – இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *