கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 1,730 
 
 

  (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

  7 – 8 | 9 – 10


  9. முதல் கேள்வி

  புகாரின் மன்னன், தன் பூவிதழ்கள் மீது முரட்டுத்தனமாக முத்திரையொன்றைப் பதித்துவிட்டு வேகமாக நடந்துவிட்டதை எண்ணியும், இன்ப வேதனையால் தனது உதடுகளைத் தடவிக் கொண்டும், நந்தவனத்தில் நீண்ட நேரம் நின்றுவிட்ட கன்னரத்து இளவரசி, ரகசிய வழியாக அரண்மனையில் இருந்து தனது அறையை அடைந்த பிறகும், சுய நினையை முழுதும் அடையாமலே, “இந்த நாட்டுக்கு எதற்காக வந்தேன்? என்ன செய்து கொண்டிருக்கிறேன்?” என்று வினவிக் கொண்டாள். வினாக் களுக்கு விடைகாணாததால், மலர்விழிகளைத் தரையில் ஓடவிட்டு சிறிது நேரம் அந்த அறையில் உலாவினாள். பிறகு சென்று மஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டாள். 

  நலங்கிள்ளியால் இறுக்கிப் பிடிக்கப்பட்ட தனது உடல், வேதனையுடன் இன்பத்திலும் சிக்கிவிட்டதை எண்ணிப் பெருமூச்சு விட்டாள். “இதற்குத்தான் பெண்களை எந்த முயற்சிக்கும் அனுப்பக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் போல் இருக்கிறது?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். நலங்கிள்ளி தன்னை இறுக்கிப் பிடித்த பிறகு, தனது பலமெல்லாம் பறந்து, தான் துர்ப்பலமாகி விட்டதையும், தன் மனம்கூட அவன் பால் சென்று விட்டதையும் எண்ணிப் பெரும் அவஸ்தைக்கு உள்ளானாள். “தனது உதடுகளை எந்தத் துணிவில் என் உதடுகளில் டன் பொருத்தினார்?” என்று கேட்டுக் கொண்டு, சற்று எட்ட இருந்த தகளியிலும் சென்று உதடுகளைக் கவனித்தாள். அதில் முத்திரை அடையாளம் ஏதும் இல்லாததால், “நல்ல வேளை” என்று சிறிது சமாதானமும் அடைந்தாள் அவனி சுந்தரி. “எது நல்ல வேளை?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு, மெல்ல நகைக்கவும் செய்தாள் ஒரு முறை, மீண்டும் சென்று பஞ்சணையில் அமர்ந்தாள். 

  அவள் எண்ணங்கள் நாட்டை மறந்து, வந்த அலுவலை மறந்து, ஏதேதோ சம்பந்தம் இல்லாத விஷயங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. நலங்கிள்ளியின் கம்பீரமான உருவம். வேலைவிடத் தீட்சண்யமான கண்கள், திண்மையான மார்புப் பிரதேசம், இவற்றை எல்லாவற்றைப் பற்றியும் திரும்பத் திரும்ப மனம் எண்ணிப் பார்த்தது; மகிழ்ச்சியும் அடைந்தது. அந்த எண்ண அலைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வரவோ என்னவோ. அவள் அறைக் கதவு லேசாக இருமுறை தட்டப்பட்டது. 

  அதைக் கேட்டதும் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள், அவனி சுந்தரி. “கதவு திறந்து தானிருக்கிறது” என்றாள். கம்பீரத்தை வலுக்கட்டாயமாக தொனியில் வரவழைத்துக் கொண்டு. 

  கதவைத் திறந்து கொண்டு பூதலன் பூனைபோல் அரவம் செய்யாமல் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினான் மெதுவாக பிறகு “விஷயம் முடிந்துவிட்டது” என்று சொன்னான். 

  “அந்த வீரனின் சடலத்தை நெடுங்கிள்ளி மாளிகை முன்பாக எறிந்துவிட்டாயா?” என்று கேட்டாள் அவனி சுந்தரி. 

  “எறிந்துவிட்டது மட்டுமல்ல. அதன் விளைவை நின்றும் பார்த்தேன்” என்றான் பூதலன். 

  “நின்று பார்த்தாயா?” வியப்பு நிரம்பிய குரலில் வினவினாள் அவனி சுந்தரி.

  “ஆம், அவன் உடலை நெடுங்கிள்ளி மாளிகை முன்பு தொப்பென்று போட்டேன். வாயில் காவலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே மாளிகைச் சுவரின் நிழலில் மறைந்து நின்று ஒரு கல்லை எடுத்து ஒரு காவலன் மீது விட்டெறிந்தேன்…” இந்த இடத்தில் சொற்களைத் தொடராமல் நின்றான் பூதலன். 

  “பிறகு? அவனி சுந்தரியின் கேள்வியில் ஆவல் இருந்தது. 

  “காவலன் விழித்துக்கொண்டு நட்ட நடுவில் கிடந்த உடலைப் பார்த்ததும் அலறிப் புடைத்துக் கொண்டு இன்னொரு காவலனையும் எழுப்பினான். இருவருமாகச் சற்று நேரம் அந்த உடலைக் காட்டிக் காட்டி ஏதோ பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்களில் ஒருவன் மாளிகைக் கதவைத் தட்டித் திறக்கச் சொல்லி உள்ளே சென்றான். மறுவிநாடி… “

  “உறையூர் மன்னன் வெளியே வந்தான்.” 

  “ஆம் வந்து கீழே கிடந்தவனை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு இவனை யார் இங்கு போட்டது?” என்று வினவினான் வீரர்களை நோக்கி. 

  “வீரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த உடலைத் தூக்கி வருமாறு பணித்து, நெடுங்கிள்ளி உள்ளே சென்றுவிட்டான். இதுதானே கதை” என்று கதையை முடித்தாள் அவனி சுந்தரி 

  பூதலன் அவளைக் கூர்ந்து நோக்கினான், சில விநாடிகள். “இல்லை. அத்துடன் கதை முடியவில்லை” என்றும் கூறினான். 

  “பிறகு என்ன நடந்தது?” என்று வினவினாள் அவனி சுந்தரி. “உங்களுக்கு எது சம்மதமோ அது நடந்தது” என்றான்.

  “எனக்கு எது சம்மதம்?” சினத்துடன் கேட்டாள் கன்னரத்து இளவரசி. 

  “நெடுங்கிள்ளியை இந்த ஊரைவிட்டு விரட்ட நினைத்தீர்கள். அது நடந்துவிட்டது. அடுத்து அரை நாழிகைக்கெல்லாம், தனது புரவி மீது ஏறி வேகமாகப் பறந்துவிட்டான் உறையூர் மன்னன்” என்று கூறினான் பூதலன். அவன் குரலிலும் உஷ்ணம் இருந்ததைக் கவனித்தாள், அவனி சுந்தரி. 

  அதன் விளைவாக, அவனை ஏறெடுத்துப் பார்த்தாள் பல விநாடிகள். “இது உனக்கு இஷ்டமில்லை போலிருக்கிறது” என்று வினவினாள், பூதலளை நோக்கி. 

  “ஏன் இஷ்டம் எது என்பதல்ல கேள்வி” என்றான் பூதலன்

  “வேறு யார் இஷ்டம்?” 

  “தங்கள் தந்தையின் இஷ்டம்?” 

  “அதைத்தானே பூர்த்தி செய்கிறோம். இனி சோழ நாடு இரண்டுபட்டுவிடாதா?” என்று கேட்டாள், அவனி சுந்தரி சினத்துடன். 

  நகைப்புக்கே இடமில்லாதபடி பருத்திருந்த பூதலன் முகத்திலும் நகைப்பின் குறி நன்றாகத் தெரிந்தது. “இரண்டுபட்டு விடும். ஆனால் நலியாது, அழியாது” என்றான் பூதலன். 

  “ஏன்?” 

  “நெடுங்கிள்ளிக்கும் நலங்கிள்ளிக்கும் பகை மூளும். போர் மூளுமா என்பது சந்தேகம்.” 

  “சந்தேகமென்ன? நலங்கிள்ளியைக் கொலை செய்ய நெடுங்கிள்ளி முயன்றதை நிரூபித்து விட்டோம். ஆகவே இனி போர் தானே அவர்களுக்குள்’“ 

  “இருக்காது” 

  “ஏன்?” 

  “போர்களை விரும்பாதவர் ஒருவர் இருக்கிறார்” 

  “யார்?” 

  “அந்தப் புலவர்” 

  “கோவூர்க் கிழாரா?” 

  “ஆம்” 

  “ஆம்” என்ற சொல்லை மிக உறுதியான குரலில் கூறினாள் பூதலன். அத்துடன் நிற்கவில்லை அவன். “நீங்கள் நலங்கிள்ளியைக் காப்பற்றிய காரணமும் எனக்குப் புரியவில்லை” என்று சீறினான். 

  “கொலைக்கு உடந்தையாயிருக்கச் சொல்கிறாயா பூதலா?” என்று கேட்டாள், அரசகுமாரி. 

  பூதலன் இதற்குப் பதில் ஏதும் சொல்லவில்லை. “காரணம் கொலையைத் தடுப்பதாக மட்டுமிருந்தால் சரிதான்” என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே நடந்தான், கதவையும் மூடினான் வெளிப்புறமாக. 

  அவனி சுந்தரி பஞ்சணைமேல் பொற்சிலையென அமர்ந்திருந்தாள். பூதலன் தனது எண்ணங்களை நன்றாக எடை போட்டு விட்டதை உணர்ந்து கொண்டாள். “நான் என்ன தவறு செய்து விட்டேன். சோழ நாட்டைப் பிளக்க அனுப்பப்பட்டேன். பிளந்துவிட்டேன். புலவர் சொன்னாலும், நலங்கிள்ளி கேட்கவா செய்வார்? தமையனைக் கொன்றவன், தன்னைக் கொல்ல முற்பட்டவன், அவனை எப்படிச் சும்மா விடுவார்?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். அத்தனை சமாதானத்தைச் சொல்லிக் கொண்ட போதிலும், அதெல்லாம் நொண்டிச் சாக்கு என்பதைப் புரிந்து கொண்டாள். ஆகவே, புன்முறுவலுடன் பஞ்சணையில் படுக்கவே செய்தாள். படுத்தவள் உறங்கியும் விட்டாள். உறங்கிய வேளையில் ஏதேதோ கனவுகள் கண்டிருக்க வேண்டும். அவற்றின் விளைவாகச் சில சமயம் முறுவலும், சில சமயம் கடுமையும் அவள் முகத்தில் மாறி மாறி ஏற்பட்டன. 

  மறுநாள் காலை அவள் எழுந்தபோதும் இன்ப எண்ணங்களுடனேயே எழுந்தாள். அந்த எண்ணங்களுடன் காலைக் கடன்களை முடித்து நீராடி புத்தாடையும் புனைந்தாள், அன்று வழக்கத்துக்கு விரோதமாக நீண்ட நேரம் அலங்காரத்தில் நேரத்தைச் செலவிட்டாள். காதணிகளைப் பேழையில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு, அழகு பார்த்தாள் தகளியில். பூச்சரத்தைக் கூட சிறிது ஒய்யாரமாக ஒருபுறம் தொங்கவிட்டாள். சுட்டியைச் ஈற்றே இடம் மாற்றினாள்.”நன்றாக இருக்கிறதா? அவர் பார்த்தால் என்ன சொல்வார்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். 

  அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்த பூதலன், “மன்னர் பங்களைத் தமது அறைக்கு வரச்சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறார்?” என்று, வறண்ட குரலில் அறிவித்தான். 

  அவசர அவசரமாக, அரசன் அறையை நோக்கி நடந்த அவனி சுந்தரி, அந்த அறையில் மன்னன் மட்டும் இன்றிப் புலவரும் மாவளத்தானும் இருப்பதைக் கண்டு ஒரு கணம் திகைத்து, வாயிற்படியில் நின்றாள். 

  “உள்ளே வரலாம்” என்றான் நலங்கிள்ளி, சுரணையற்ற குரலில். 

  ஆவலும் அன்பும் ததும்பும் குரலை, அரசனிடம் இருந்து எதிர்பார்த்த அரசகுமாரிக்கு அவன் வறண்ட குரல் விசித்திரமாக இருந்தது, அதைப் பற்றி நினைத்தவண்ணம் உள்ளே நுழைந்த கன்னரத்து இளவரசியின் கையை, அந்த இருவர் முன்பாகவும் பிடித்து அழைத்துச் சென்ற நலங்கிள்ளி, அவளை ஒரு ஆசனத்தில் அமர்த்திவிட்டு, “புலவர்! உன்னுடன் பேச விரும்புகிறார்” என்று கூறவும் செய்தான்.

  அவனி சுந்தரி புலவரை ஏறிட்டுப் பார்த்தாள். புலவர் ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். “உன்னைச் சில கேள்விகள் கேட்க வேண்டும்” என்று கூறினார். 

  “கேளுங்கள்” என்றாள் அரசகுமாரி. 

  அவர் கேட்ட முதல் கேள்வியே அவளை அசர வைத்துவிட் து. அந்தக் கேள்வி பல கேள்விகளுக்கு விடையளித்துவிட்டது. 


   10. திருமண ஏற்பாடு

   புகாரின் கடலில் இருந்து சொர்ணபிம்பமாகக் கிளம்பிப் பிறகு அக்கினிப்பிழம்பாக மாறிவிட்ட கதிரவன், தன் கதிர்களில் சிலவற்றை அரசன் அந்தரங்க அறையின் சாளரத்தின் மூலமாக உள்ளே அடைப்பியிருந்ததால், அவை அவனி சுந்தரியின் மேலியின் ஒரு பகுதியில் தவழ்ந்து ஓடி, அவள் இயற்கையான அழகுக்கு மேலும் மெருகு கொடுத்திருந்தது. 

   அந்தக் கிரணங்கள் அவள் முகத்தில் படாமல், மார்பிலும் அதற்குக் கீழும் விழுந்திருந்தால், சேலையும் அணிகளும் உயர்ந்து நின்ற அழகுப் பீடங்களும் தனிப் பொலிவைப் பெற்றன. இவையெல்லாம் நலங்கிள்ளியின் மனதைப் பறித்து இழுக்கும், நிலைமை சாதாரணமாயிருந்திருந்தால். ஆனால் அறையில் நிலவிக் கிடந்த பெரு மவுனமும், சிணுங்கிக்கிடந்த மாவளத்தான் முகமும், புகார் மன்னனின் உணர்ச்சிகளை அடக்கி வைக்கவே, அவன் மனம் உணர்ச்சியற்ற வெறும் கல்லாயிருந்தது. இந்த நிலையில் அவனி சுந்தரியின் மனம் மட்டும் ஏதேதோ யோசனையில் திரும்பித் திரும்பி உழன்று கொண்டிருந்தது. நலங்கிள்ளி தன் கரங்களை தொட்டுப் பற்றி இழுத்து, புலவர் முன்பாகவும் தம்பி முன்பாகவும் அழைத்துச் சென்றது அவளுக்கு வியப்பாயிருந்தது. “பிறர் எதிரில் என்னைத் தொட இவருக்கு என்ன துணிச்சல்?” என்று உள்ளூர வினவிக் கொண்டாள் ஒரு முறை. “ஆனால் அவர் கையைப் பற்றியது சிறிது முரட்டுத்தனமாயிருந்தாலும், அதில் எத்தனை இன்பமிருக்கிறது?” என்று எண்ணத்தை ஓடவிட்டாள். இத்தளையிருந்தும், புலவர் மீது தனது கண்களை ஓடவிட்டு, அவர் கேள்வியை எதிர்பார்த்த வண்ணம், ஆசனத்தில் உட்கார்ந்திருந்தாள். 

   புலவர் சர்வசாதாரணமாக முதல் கேள்வியை வீசினார். “அவனி சுந்தரி! நீ நலங்கிள்ளியை மணக்கச் சம்மதிக்கிறாயா?” என்று வினவினார், ஏதோ வணிகனிடம் சரக்கைக் கேட்கும் தோரணையில். 

   எதற்கும் அசையாத அவனி சுந்தரியும் இந்தக் கேள்வியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். ஆகவே உடன் பதில் சொல்ல முடியாமல் மவுனமே சாதித்தாள். பிறகு சமாளித்துக் கொண்டு, “புலவர் கேள்வி விசித்திரமாயிருக்கிறது” என்று கூறினாள். கூறி விட்டு எட்டக் கையைக் கட்டிக் கொண்டிருந்த மாவளத்தானையும் நோக்கி, தனது மஞ்சத்தைப் பிடித்துக் கொண்டு நின்ற மன்னனையும் நோக்கினாள். அவள் பார்வையில் நாணமோ அச்சமோ இல்லை. அரசகுமாரியின் தைரிய தோரணையில் இருந்தது. சற்று அலட்சியமும் தினமுங்கூட இருந்தது. 

   அவள் பார்வையில் இருந்து உணர்ச்சிகளைக் கவனிக்கவே செய்தார் கோவூர் கிழார். இருப்பினும், சிறிதும் லட்சியம் செய்யாமலே சொன்னார்: “எனது இதயத்தில் விசித்திர உணர்ச்சிகள் ஏதுமில்லை. உண்மையை நிலைக்கச் செய்ய விரும்புகிறேன்” என்றார். “எந்த உண்மை?” என்று சீற்றத்துடன் கேட்டாள் அவனி சுந்தரி. 

   “நந்தவனத்தில் நேற்றிரவு நடந்த உண்மை” என்றார் கோவூர் கிழார்,சலனமற்ற குரலில். 

   அவனி சுந்தரி நலங்கிள்ளி மீது தன் நீள்விழிகளைத் திருப்பி னாள். நலங்கிள்ளியும் ஏதோ பேச முற்பட்டான். ஆனால், அவனை ஒரே பார்வையில் அடக்கிய புலவர், “இளவரசி! நலங்கிள்ளி என்னிடம் ஏதும் சொல்லவில்லை. என் சீடனொருவன் சொன்னான்” என்று விளக்கினார். 

   “தங்கள் சீடனா!” வியப்பு ஒலித்தது அவனி சுந்தரியின் குரலில். 

   “ஆம்” என்றார் புலவர். 

   “என்னை வேவுபார்க்க சீடர்களை வைத்திருக்கிறீர்களா?”

   “உன்னை வேவு பார்க்க அல்ல, மன்னனைக் கவனிக்க.” 

   “ஏன் அவருக்குத் தம்மைக் கவனித்துக் கொள்ள திறமை இல்லையா?”

   “போரில் திறமை உண்டு, வஞ்சகத்தில் கிடையாது.”

   “யார் வஞ்சகம் செய்தார்கள்?” 

   “உன்னைவிட அது யாருக்கும் தெரியாது!’ 

   அவனி சுந்தரி எரியும் விழிகளை நாட்டினாள் புலவர் மீது. “என்னை வஞ்சகி என்கிறீர்களா?” என்று, சீற்றம் நிறைந்த சொற்களை வீசினாள். 

   கோவூர் கிழார் அடக்கமாவே பதில் கூறினார். “உன்னை வஞ்சகி என்று நான் கருதியிருந்தால், புகாரின் ராணியாக்க நான் உடன்படமாட்டேன். நீ இஷ்டப்படும் பட்சத்தில் இந்தத் திருமணத்தை உடனடியாக முடிக்கத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார் புலவர் நிதானமாக. 

   “என் திருமணத்துக்கு என்ன அத்தனை அவசரம்?” என்று வினவினாள் அவனி சுந்தரி. 

   புலவர் சில விநாடிகள்தான் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு மெள்ளக் கூறினார்: “மகளே நிதானமாகக் கேள். நீ வந்ததில் இருந்து புகாரில் விளைந்திருக்கும் விவகாரங்கள் மக்கள் மனதைப் பெரிதும் கிளறியிருக்கின்றன. உன்னைப் பற்றி மக்கள் பலபடி பேசுகிறார்கள். கிள்ளிவளவனை, நீயும் நெடுங்கிள்ளியும் சேர்ந்து கொன்றுவிட்டதாகக் கூட வதந்தி உலாவுகிறது. இதைப் பற்றி நேற்றுப் புகாரின் தளபதியே என்னிடம் வந்து விசாரித்தார். புகாரின் படைவீரர்களிடையே வீண்வம்புகள் பல உலாவுகின்றன. இத்தனைக்கும் குற்றம் உன்மீது இல்லை. சந்தர்ப்பங்கள் விபரீத சூசனைகளுக்கு இடங்கொடுத்திருக்கிறது. “மன்னன் உடலை இவள் தானே கொணர்ந்தாள்; இவளைத் தொடர்ந்து நெடுங்கிள்ளியும் நிர்ப்பயமாகப் புகாருக்கு வந்திருக்கிறானே?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதை நீடிக்கவிடுவது அபாயம். உன் உயிருக்கும் அபாயம். புகார் மக்கள் கொதித்தெழுந்து நியாயம் கேட்டால், விசாரணையை மன்னன்கூடத் தடுக்க இயலாது. நீதி வல்லுனர் முன்பு நிறுத்தப்படுவாய். புரிகிறதா உனக்கு?” 

   புலவரின் சொற்களில் உண்மை நிரம்பியிருப்பதைக் கவனித்தாள் அவனி சுந்தரி. பிறகு கேட்டாள் “மன்னனை நான் மணந்தால், இந்தச் சந்தேகங்கள் எப்படிப் பறந்துவிடும்? அண்ணனைக் கொன்றவளை, அடுத்துக் கெடுக்க வந்தவளை, மன்னர் மணந்தார் என்றால், மன்னனிடமும் மக்களுக்கு வெறுப்பு உண்டாகாதா? அத்தகைய மனிதரை முடிசூட மக்கள் அனுமதிப்பார்களா?” என்று. 

   இந்தக் கேள்விகள் கோவூர் கிழாரையும் ஒரு உலுக்கு உலுக்கின. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “குழந்தாய்! உன் மனம் எனக்கு நன்றாகப் புரிகிறது. நலங்கிள்ளியை வீண் சந்தேகத்தில் இருந்து காப்பாற்ற முயலுகிறாய். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாதே. அந்தச் சந்தேகத்தை உடைத்தெறிய என்னால் முடியும்” என்று கூறினார். 

   “எப்படி?” 

   “என் சொல்லுக்கு மக்களிடம் மதிப்பு உண்டு. புகாருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எதையும் நான் செய்ய மாட்டேன் என்று மக்கள் நம்புகிறார்கள். தவிர என் சீடர்களும் மக்கள் நடுவில் உலாவுகிறார்கள். மன்னனை நீ காத்த செய்தியை மெல்லப் பரப்புவார்கள். மக்கள் மனது வெகுவிரைவில் மாறும். நீ இந்த நாட்டின் மன்னனைக் காக்க வந்த மகராசியாக உன்னைப் பாராட்டுவார்கள். நீ மன்னன் இதயராணியாக மட்டுமல்லாமல், மக்களின் இதயராணியாகவும் மாறுவாய். உன்னைக் கொல்ல இப்பொழுது துடித்து நிற்கும் வீரர்களின் வாட்கள் உன் பாதத்தில் வணக்கத்துடன் தாழும். மக்களின் சீற்றம், அன்புக்கும் பெருமைக்கும் இடம் தரும். அது மட்டுமல்ல…” 

   இங்குப் புலவர் சிறிது பேச்சை நிறுத்தினார், “வேறென்ன?” என்று வினவினாள் அவனி சுந்தரி. 

   “இந்த அரசுக்கும் இந்தத் திருமணம் நல்லது” என்றார்; புலவர். 

   “எப்படி?” 

   “நாட்டைப் பிளக்க நீ வந்தாய்”. 

   “ஆம்”

   “பிளந்துவிட்டது. நெடுங்கிள்ளி ஓடிவிட்டான் இரவோடு இரவாக. இனிப் போர் தொடங்குவான்”. 

   “ஆம்” 

   “அப்படி நிகழும் போரில், உன் தந்தை நலங்கிள்ளியின் பக்கமிருந்தால்…?” 

   “உறையூர் மன்னர் போரைத் தொடங்க அஞ்சுவார். அப்படிப் போரைத் தொடங்கினாலும், கன்னரப் படைகள் இணைவதால், புகாரின் படைபலம் அதிகப்பட்டுவிடும். அதன் விளைவு… “

   “நெடுங்கிள்ளியின் வீழ்ச்சி, உறையூரும் புகாரும் ஒன்றிப் பழைய பேரரசாகி விடும் சோழ நாடு” இதைச் சொன்ன புலவரின் கண்களில், கனவுச் சாயை விரிந்தது. 

   அதைக் கவனிக்கவே செய்தாள் அவனி சுந்தரி. கவனித்ததும் மெல்ல நகைத்தாள். 

   “ஏன் நகைக்கிறாய்?” புலவர் நிதானத்தைக் கைவிட்டுக் கேட்டார். 

   “புலவரே, சோழ நாட்டை இரண்டாக உடைக்க நான் வந்தேன். உடைத்தாகிவிட்டது. திரும்ப அதை ஒன்றாக்குவதால் செய்த வேலை அடிபட்டுப் போகுமே. இது அல்ல என் தந்தையின் நோக்கம்?” என்றாள் அவனி சுந்தரி. 

   “உன் தந்தையின் நோக்கத்தைப் பற்றி நான் கவலைப்பட வில்லை.” 

   “நான் கவலைப்படுகிறேன் புலவரே! உமக்கு மட்டுந்தான் நாட்டுப்பற்று உண்டா? எனக்குக் கிடையாதா? எனது நாட்டு நன்மை இந்த நாடு பிளவுபடுவதில் இருக்கிறது. அதைச் செய்ய ஆணையிட்டு வந்தேன் தந்தையிடம். அந்த வேலை முடிந்துவிட்டது. இனி எனது நாடு திரும்பப் போகிறேன்” என்று கூறினாள் அவனி சுந்தரி, 

   “உன்னை நாடு திரும்ப நாங்கள் அனுமதிக்காவிட்டால்?.”. என்று கேட்டார் புலவர். 

   “அனுமதிக்காமல் என்ன செய்வீர்கள்?” 

   புலவர் பதில் சொல்லவில்லை. 

   அதுவரை மவுனமாயிருந்த மாவளத்தான் பதில் சொன்னான், “காவயில் வைக்கப்படுவீர்கள்” என்று. 

   இதைக் கேட்ட அவனி சுந்தரி கலகலவென நகைத்தாள். “இளையவரே! என்னைக் காவலில் வைக்கக்கூடிய அரசு உலகத்தில் இனிமேல்தான் உண்டாக்க வேண்டும். முடிந்தால் சிறைப்படுத்திப் பாருங்கள்” என்று கூறிவிட்டு, மஞ்சத்தை விட்டு எழுந்திருந்தாள். கதவை நோக்கி நடந்து, அதைத் திறந்து, மீண்டும் அந்த அறையில் இருந்தவர்களைத் திரும்ப நோக்கி, “புலவரே புகாரின் மன்னனை நான் காதலிக்கவில்லை. அவர் நன்மையை முன்னிட்டுக் காதலித்ததாக நடித்தேன் நந்தவனத்தில். இதோ என் அறைக்குச் செல்கிறேன். திறமையிருந்தால் என்னைக் காவலில் வையுங்கள்” என்று கூறிவிட்டு, வெகு வேகமாக நடந்தாள் தன் அறையை நோக்கி. 

   அவள் சென்ற பின்பு, அறையில் இருந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கடைசியில், புலவரே சொன்னார் இளையவனை நோக்கி, “மாவளத்தான்! அவள் அறையைக் காக்கக் காவலரை அனுப்பு” என்று. 

   நலங்கிள்ளி உடனடியாகச் சீறி விழுந்தான். “அவள் என்னைக் காப்பாற்றியதற்குக் கைம்மாறா இது?” என்று. 

   “உன்னைக் காப்பாற்ற அவள் உன்னை நந்தவனத்துக்கு அழைத்துச் செல்ல அவசியமில்லை. முன்னதாக எச்சரித்து இருக்கலாம். நெடுங்கிள்ளிக்கு வேல் எறிய இடமளித்து, பிறகு தனது பூதத்தை விட்டு உன்னை ஏன் காக்க வேண்டும் அவள்?” என்று வினவினார் புலவர் 

   நலங்கிள்ளி பேச வகை இன்றி நின்றான். மாவளத்தான் வெளியே சென்றான், புலவர் ஆணையை நிறைவேற்ற. சற்று நேரத்திற்கெல்லாம், தன் அறை வாசலில் வாளை உருவி நின்ற இரு காவலரை நோக்கி, “நீங்கள்தான் காவலரா?” என்று கேலியுடன் வினவினாள், அவனி சுந்தரி. 

   பதிலுக்கு அவர்கள் தலையாட்டவே, மீண்டும் உள்ளே சென்றாள். அன்றிரவு நலங்கிள்ளிக்கு தூக்கமே வரவில்லை. நடுநிசிக்குப் பிறகு மெள்ள அவனி சுந்தரியின் அறையை நோக்கிச் சென்றான். அவனுக்குக் காவலர் வழிவிடவே, உள்ளே சென்று பஞ்சணையை நோக்கினான் ஆவலுடன். முகத்தில் இருந்த ஆவல் மறைந்தது. பஞ்சணை போட்டது போட்டபடி இருந்தது, அறையில் யாரும் இல்லை.

   – தொடரும்

   – அவனி சுந்தரி, ராணி முத்து, ராணி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

   Print Friendly, PDF & Email

   Leave a Reply

   Your email address will not be published. Required fields are marked *