கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 1,416 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

5 – 6 | 7 – 8 | 9 – 10


7.கரும்பும் வேலும்

அவனி சுந்தரியின் வேண்டுகோள் அத்தனை விபரீதமாக இருக்கும் என்று எதிர்பாராததால், நலங்கிள்ளி பிரமை பிடித்துப் பல விநாடிகள் நின்றுவிட்டான். இத்தனைக்கும் அவள், “இன்று இரவு நீங்கள் என்னை அரண்மனை நந்தவனத்தில் சந்திக்க வேண்டும்” என்று மட்டும்தான் கேட்டாள். அண்ணன் சடலம் தீக்கு இரையான மூன்றாம் நாளே, தான் ஒரு பெண்ணுடன் இரவில் நந்தவனத்தில் நடமாடினால், அது வழக்கத்துக்குத்தான் ஒத்து வருமா, அல்லது பண்பாட்டுக்குத்தான் ஒத்துவருமா என்று எண்ணினான். எண்ணியதன்றி, அதை வாய்விட்டுக் கேட்டான் நலங்கிள்ளி, “இது முறையாகுமா, அவனி சுந்தரி” என்று. 

அவனி சுந்தரியின் அழகிய கண்கள் மேலெழுந்து, அவனைத் துணிவுடன் கூர்ந்து நோக்கின. “இதில் முறைகேடு என்ன இருக்கிறது?” என்று வினவினாள் அவள், பவழ இதழ்களை மெள்ளத் திறந்து. 

“நீ ஒரு பெண்…” தடுமாறினான், நலங்கிள்ளி.

“ஓகோ! அதைக் கண்டு பிடித்து விட்டீர்களா?”  என்று பதில் கேள்வி கேட்ட அவள் இதழ்களில், குறுநகை விரிந்தது. 

“அதுவும் அழகானவள்” என்றான் மீண்டும் நலங்கிள்ளி, அவள் குறுநகையில் கலந்து கிடந்த விஷமத்தை நோக்கியும்கூட.

“பாராட்டுதலுக்கு நன்றி” என்றாள் அவள். 

மேற்கொண்டு ஏதும் பேசத் தெரியாமல் திணறி நின்றான். நலங்கிள்ளி. ஆகவே, சிறிது நேரம் அப்படியும் இப்படியும் அறையில் உலாவிவிட்டு, மீண்டும் அவள் எதிரே வந்து நின்று கொண்டான்.”அவனி சுந்தரி! விளையாட இது சமயம் அல்ல, இடமும் இதுவல்ல” என்று சற்று கடுமையுடன் கூறினான். 

அவனி சுந்தரியின் கண்களில் விஷமக்களை அள்ளித் தெறித்தது. “அதனால்தான் சொல்லுகிறேன், இன்று இரவு நந்தவனத்தில் சந்திக்கலாம் என்று” அவள் சொன்ன சொற்களிலும், விஷமம் ஊடுருவி நின்றது. 

அதை நலங்கிள்ளி கவனிக்கத் தவறவில்லை என்றாலும், சமயம் வோயிருந்தால், அவன் மனநிலை வேறாயிருந்தால், அவனும் சொற்போர் தொடுத்திருப்பான். ஆனால் அன்று, அந்த அறையில் மிக நிதானத்துடன் அவளுக்குப் பதில் சொன்னான். “அவனி சுந்தரி! இது சோழர்களின் புராதனமான தலைநகர். இங்கு சில சம்பிரதாயங்களை மன்னர்கள் கடைப்பிடித்துத்தான் ஆக வேண்டும். அந்த சம்பிரதாயப்படி இந்த அரசு எங்கணும் பதினாறு நாள் மக்கள் துக்கம் கொண்டாடுவார்கள். “மன்னன் எவ்வழி. அவ்வழி குடிகள்” என்பது மற்றைய நாளில் உண்மையென்றாலும், இந்த விஷயத்தில் மக்கள் எப்படியோ அப்படித்தான் மன்னனும் நடக்க வேண்டும். ஆகவே, இரவில் நான் உன்னை நந்தவனத்தில் சந்திப்பதை யாராவது பார்த்துவிட்டால் ஏற்படக் கூடிய கொந்தளிப்பை யாரும் சமாளிக்க முடியாது” என்று நிதானமாகவும். திடமாகவும், உள்ள நிலையை எடுத்துக் காட்டினான், புகாரின் புது மன்னன் நலங்கிள்ளி. 

அவனி சுந்தரியும் அதுவரை அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று அவனை நெருங்கினாள். “இப்பொழுது நாம் இருவரும் இங்கு தனித்திருக்கும் நிலையைக் காவலர் பார்த்து இருந்தால் என்ன நினைப்பார்கள்? அதுவும் சற்று முன்பு…” இங்கு பேச்சுக்களைத் தேக்கினாள் கன்னரத்து இளவரசி. அவள் முகம் குங்குமப் பூவாகச் சிவந்தது. 

“சற்று முன்பு என்ன செய்துவிட்டேன்?” என்று வினவினான் நலங்கிள்ளி ஏதும் புரியாமல். 

அவனி சுந்தரி முகத்தை நிலத்தை நோக்கித் தாழ்த்தினாள். “என் மேலாடையைத் தூக்கிவிட்டீர்கள். பிறகு எனது கையைப் பிடித்து விரல்களைப் பிரித்தீர்கள்” என்று சொல்லிக் கொண்டே போனவளை, அவசரமாக இடை மறித்தான், நலங்கிள்ளி. “அடடே! தவறாக நினைக்காதே. நீ உள்ளே வரும்போதே மன்னர் கிள்ளிவளவர் முத்திரை மோதிரம் உன் கைவிரலில் இருந்ததைப் பார்த்தேன். அதைச் சேலை மறைத்திருந்தது. அதை நான் கவனித்துவிட்டேன் என்பதைக் காட்டவே சேலையை… உம், மேலே சற்றுத் தூக்கி விரல்களைப் பிரித்து மோதிரத்தைக் காட்டினேன்” என்று சமாளித்தான் சங்கடத்துடன். 

“நீங்கள் அத்தனை சிரமப்படுவானேன்? அவனி சுந்தரி உன் இடது கைவிரலைக் காட்டு என்று உத்தரவிட்டிருக்கலாமே…” என்றாள், அவனி சுந்தரி பதிலுக்கு. 

“ஆம்,ஆம்,அப்படிச் செய்திருக்கலாம்” 

“செய்யவில்லை.”

“ஆம், ஆம், செய்யவில்லை.” 

“அந்த நிலையில் நம்மை யாராவது பார்த்திருந்தால்?”

“தவறாக நினைப்பார்கள்.” 

“நினைத்தால் கொந்தளிப்பு ஏற்படுமே?”

“ஆம்,ஆம்,ஏற்படும்.” 

நலங்கிள்ளி இந்தக் கடைசி வார்த்தைகளைச் சற்று அச்சத்துடனேயே உச்சரித்தான். அவன் அச்சத்தைப் போக்க அவனி சுந்தரி கூறினாள். “அஞ்சாதீர்கள் மன்னவா! நம்மை இங்கு யாரும் பார்க்கவில்லை” என்று. 

“எப்படித் தெரியும் உனக்கு?” என்று நலங்கிள்ளி வினவினான் பிரமிப்புடன். 

“கோவூர் கிழார் வரச் சொன்னதாகக் கூறி, இந்த அறை வாயிலில் இருந்த காவலரை அனுப்பிவிட்டேன்” என்ற அவனி சுந்தரி, புன்முறுவல் கொண்டாள். 

“என் உத்தரவில்லாமல் அவர்கள் எப்படிச் சென்றார்கள்?” என்று கேட்டான், நலங்கிள்ளி சினத்துடன். 

“இதற்கு அவர்கள் கீழ்ப்படிந்தாக வேண்டும் அல்லவா?” என்று, தன் கையில் இருந்த மோதிரத்தைச் சுட்டிக் காட்டினால் அவனி சுந்தரி. மேலும் சொன்னாள்: “இதைக் காட்டி இதன் ஆணையாக அவர்களைப் புலவர் பெருமான் மாளிகைக்குச் செல்லப் பணித்தேன். அவர்கள் சென்றதும், தங்கள் தம்பி செல்லும் வரையில் காத்திருந்தேன். பிறகு உள்ளே வந்தேன். ஆகவே நாள் இங்கு வந்தது உங்களுக்குத் தெரியும். பகிரங்கமாக அரசர் முத்திரை மோதிரத்தைக் காட்டி வந்திருப்பதால், புலவர் பெயரைக் கூறி இருப்பதால், தவறான எந்த ஊகத்துக்கும் இடம் இருக்காது. இப்பொழுது நிம்மதியடைந்ததா உங்கள் மனம்?” என்று கேட்டாள். 

அவள் முன்னேற்பாடுகளைக் கேட்ட நலங்கிள்ளியின் வியப்பு பல மடங்கு உயர்ந்தது.”சரி இங்குதான் இப்படி ஏற்பாடு செய்து விட்டாய். நந்தவனத்தில் சந்திப்பதை எப்படி மறைப்பாய்?” என்று வினவினான், வியப்பு சொற்களிலும் ஊடுருவி நிற்க. 

அவனி சுந்தரி தங்கு தடங்கல் இல்லாமல் சொன்னாள், “நாம் சந்திக்கப் போவது இரவில்” என்று. 

“இரவில் காவல் இல்லையா அரண்மனையில்?” என்று வினவினான் நலங்கிள்ளி. 

“உண்டு. ஆனால் இரண்டாவது ஜாமத்தில் மாறுகிறது; குறைகிறது” என்று விளக்கினாள் கன்னரத்து இளவரசி. 

“அதைக் கவனித்துவிட்டாயா?” ஆச்சரியம் தாங்க முடிய வில்லை நலங்கிள்ளிக்கு. “உண்மையில் இவள் வேவுகாரிதான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். 

அவன் சிந்தனையில் ஓடிய எண்ணங்கள் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆகவே சொன்னாள் அவள்: “வேவுகாரி யாரை வேவு பார்க்கிறாளோ அவர்களிடமே வந்து விஷயங்களை விளக்க மாட்டாள்” என்று. 

இதைக் கேட்ட நலங்கிள்ளி, சற்று வெட்கமே அடைந்தான். அந்தப் பெண்ணை தான் சந்தேகித்தது எத்தனை தவறு என்பதைப் புரிந்துகொண்டான். ஆகவே “மன்னித்துவிடு இளவரசி. மேலே சொல்” என்று கூறினான். 

அவள் மேலும் சொன்னாள், “அரசே! இரண்டாவது ஜாமம் காவல் மாறியதும், நீங்கள் நகர சோதனைக்குக் கிளம்பும் ரகசிய வழியாக, அதே தோரணையில் முக்காடிட்டு நந்தவனத்துக்கு வந்து சேருங்கள். நான் நந்தவனத்தின் பளிங்கு மண்டபத்தில் உட்கார்ந்திருப்பேன். அப்பொழுது நிலவும் கிளம்பிவிடும். பனிங்கு மண்டபத்திடம் வந்ததும் என் தோளைத் தொட்டு அசக்குங்கள். நான் திமிறுவேன். நீங்கள் என்னை விடாப்பிடியாகப் பிடித்து, பக்கத்திலுள்ள வாவியின் பளிங்குப் படிகளின் மேல்படி யில் உட்கார வையுங்கள். பிறகு என் தோளைப் பிடித்த வண்ணம் நீங்களும் அமருங்கள் என் பக்கத்தில். அப்பொழுதும் பலவந்தமாக என் கையைப் பிடித்துக் கொண்டிருங்கள். பிறகு எதையாவது மெள்ளப் பேசுங்கள் என் காதுக்கருகில்.” 

இந்தச் சொற்களை அவள் மிக சகஜமாகவும், வெட்கமின்றியும் சொன்னதில், அவள் தன்னை காதலுக்கு அழைக்கவில்லை என்றும், வேறு ஏதோ முக்கிய காரணத்தை முன்னிட்டு அந்த நாடகத்தை ஆட அழைக்கிறாள் என்றும் புரிந்து கொண்டான் நலங்கிள்ளி, அந்த நாடகம் அவன் மனதுக்கு மிகவும் பிடித்திருந்தாலும், பிடிக்காததுபோல் பாசாங்கு செய்து, “சரி அவனி சுந்தரி! உன் சொற்படி வருகிறேன், நந்தவனத்துக்கு இரவு இரண்டாம் ஜாமத்தில்” என்று கூறினான். 

அத்துடன் அவனி சுந்தரி அவனிடம் விடைபெற்றுச் சென்றாள். அவள் செல்ல அறைக் கதவைத் தானே திறந்து விட்டுத் திரும்பிய நலங்கிள்ளி, ஆழ்ந்த யோசனையின் வசப்பட்டான். 

அவன் மனதில் ஏதேதோ கேள்விகள் எழுந்து நடமாடின. கேள்விகள் மட்டுமல்ல; சென்ற மூன்று இரவுகளில் நடந்த செயல்களும்கூட வலம் வந்தன. அண்ணன் சடலத்தைப் பூதலன் தூக்கி வந்தது முதல் நடந்த பல சம்பவங்களை நினைத்துப் பார்த்த நலங் கிள்ளி, ஏதோ பெரும் மர்மமும், தீங்கும் தன்னையும் தனது நாட்டையும் சூழ்ந்திருப்பதாக நினைத்தான். அவனி சுந்தரியை மட்டும் அவனால் எடைபோட முடியவே இல்லை. அவள் சூழ்ச்சிக் காரியா, அல்லது தனக்கு உதவுவதற்காகவே முனைந்துள்ள நலத்தின் வடிவமா? அரண்மனையில் இருந்து நான் நகர் சோதனைக்குச் செல்லும் வழியின் மர்மத்தை எப்படி உணர்ந்து கொண்டாள்? அது கிடக்க, அவள் தன்னை நந்தவனத்துக்கு அழைப்பது நெடுங்கிள்ளியிடம் சிக்கவைக்கவா? அல்லது வேறு காரணத்திற்காகவா? இப்படிப் பலபடி சிந்தித்துப் பார்த்தும் திட்டமாக ஏதும் விளங்கவில்லை நலங்கிள்ளிக்கு. 

அன்று பொழுது முழுவதையும் இப்படியே கழித்த நலங்கிள்ளிக்கு, அன்று மாலை இன்னொரு வியப்பும் காத்திருந்தது. 

புலவர் கோவூர் கிழார் அரண்மனைக்கு வந்து, அவனைத் தனிமையில் சந்தித்து “மன்னவா! அவனி சுந்தரி எதைச் சொன்னாலும் மறுக்காமல் செய். அவள் உன் நலனுக்குத்தான் சகலமும் செய்கிறாள்” என்று கூறினார். 

நலங்கிள்ளிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “புலவரே! இரண்டு நாளில் மாறிவிட்டீர்களே?” என்று னேவினான். 

“என்ன மாறிவிட்டேன்?” என்று கேட்டார் புலவர்.

“இவளை, இந்த நாட்டைப் பிடிக்க வந்த சனியன் என்று நீங்களே சொன்னீர்கள்?” 

“ஆம்” 

“இப்பொழுது அவள் சொல்கிறபடி நடக்கச் சொல்கிறீர்கள்.”  

“ஆம்” 

“சனியனை நம்பலாமா?” 

“சோதிட சாஸ்திரப்படி நல்லது செய்யும் சனியனும் உண்டு?” 

“அப்பேர்ப்பட்ட சனியன் இது!”

“அப்படியெல்லாம் அவளைப் பற்றிச் சொல்லாதே!” என்று கடுமையுடன் சொன்னார் புலவர். 

மெதுவாக நகைத்தான் நலங்கிள்ளி. “சரி,சரி. புலவரே விழுந்துவிட்டார், இளவரசியின் வலையில்” என்றான், சிரிப்பின் ஊடே . 

“யார் வலையிலும் நான் விழவில்லை. சொன்னபடி செய்” என்று கூறிப்போய்விட்டார் புலவர் பெருமான். 

மெள்ள இரவு வந்து இரண்டாவது ஜாமமும் வந்தது. நலங்கிள்ளி நகர் சோதனை உடை உடுத்தி, முக்காடிட்டு, இடுப்பில் குறுவாள் ஒன்றைச் சொருகிக் கொண்டு, ரகசிய வழியாக நந்தவனத்துக்கு வந்து சேர்ந்தான். 

அங்கு அவனி சுந்தரி பளிங்கு மண்டபத்தில் உட்கார்ந்திருந்தாள். நிலவில் இன்னொரு நிலவாக அமர்ந்திருந்த அவள் அழகை, நலங்கிள்ளி சிறிது நேரம் பருகினான். பிறகு தனது முக்காட்டை நீக்கிக் கொண்டு அவளை நோக்கி நடந்தான். அடுத்து அவள் சொன்னபடி இருவரும் நாடகம் நடத்தினார்கள்.பளிங்கு வாவிக்கு இழுத்துச் சென்று, படிகளில் உட்கார வைத்துக் கொண்டு,அவள் இடையில் தன் கையைச் செலுத்தி இழுத்து, “கரும்பு தின்னக் கூலி தேவையில்லை இளவரசி” என்று, அவள் காதுக்கருகில் குனிந்து சொன்னான். 

அதுதான் அடையாளம் போலிருக்கிறது. சற்று எட்ட இருந்த புஷ்பச் செடிகளின் குவியலில் இருந்து எழுந்த ஒருவன், பெரும் வேலொன்றை எடுத்து, நலங்கிள்ளியை நோக்கிக் குறி வைத்துக் கையை உயர்த்தினான். 


8.சங்கடப் பரிசு 

செடி மறைவில் இருந்து தன்னை நோக்கி ஒருவன் வேலெறியத் தொடங்கியதை அறியாமல் இருந்த நலங்கிள்ளி, அவனி சுந்தரியின் இணையற்ற அழகிலும் நந்தவனத்தின் இன்பச் சூழ்நிலையிலும் சிக்கிக் கிடந்ததால், தன் கண்ணுக்கு எதிரே பளபளத்த பளிங்குத் தடாக நீரையே பார்க்கச் சக்தியிழந்து இருந்தானாகையால், பின்னால் நடக்க விருந்ததைப்பற்றி நினைக்கக் கூடத் திராணியில்லாமல், அவனி சுந்தரியின் இடையில் தனது கரத்தைச் செலுத்தியதும், அவள் நகைக்கவே செய்தாள். 

அந்த நகைப்பு நலங்கிள்ளிக்கு எரிச்சலைக் கொடுத்ததால் “எதற்கு நகைக்கிறாய்?” என்று வினவினான், கடுப்புடன் அவளை நோக்கி, ஆனால் இடக் கையை மட்டும் அவன் அழகிய இடையில் இருந்து நீக்கினான் இல்லை. 

அவனி சுந்தரி அவனைத் திரும்பிப் பார்க்காமல், எதிரே யிருந்த வாவி நீரை மட்டும் பார்த்துக் கொண்டு சொன்னாள், “நீங்கள் முறை தவறி நடக்கிறீர்கள்” என்று. 

“என்ன முறை தவறி நடந்துவிட்டேன்?” என்று வினவினான் நலங்கிள்ளி. 

“நீங்களே சொன்னீர்கள், அரண்மனையில் பதினாறு நாட்கள் வரை காலமான மன்னனுக்குத் துக்கம் கொண்டாட வேண்டும் என்று” என்று. அவனி சுந்தரி சுட்டிக் காட்டினாள். 

“ஆம் சொன்னேன்.” 

“இந்தக் குளத்துப் படிகளுக்கு வந்ததும், என்னைப் பலவந்தமாக உட்கார வைத்துக் கையைப் பிடித்துக் கொள்ளும்படிதான் நான் சொன்னேன்”. 

“ஆம் சொன்னாய்” 

‘நீங்கள் கையைப் பிடித்துக் கொள்ளவில்லையே”. 

அப்பொழுதுதான் புரிந்தது நலங்கிள்ளிக்கு அவள் இடையில் தான் கையைச் செலுத்தியிருப்பது. அவசர அவசரமாகக் கையை இழுத்துக் கொண்டான். அதைக் கண்ட அவள் மெல்ல நகைத்தாள். “இங்கு வருவதே தப்பென்று கூறினீர்கள். வந்ததும் உங்கள் செய்கை துக்கத்துக்கு நேர் விரோதமாக இருக்கிறது. அரண்மனைக் காவலரில் யாராவது இந்த நிலையில் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும்?” என்று கேட்டாள். 

நலங்கிள்ளி சங்கடத்தால் அசைந்தான். கையைப் பிடித்துக் கொண்டு, “உன்னுடன் இங்கு உட்கார்ந்திருந்தால் யாரும் எதுவும் நினைக்க மாட்டார்களாக்கும்?” என்று சீறவும் செய்தான் 

“அதற்கே தவறாக நினைத்தால், இடையில் நீங்கள் கையை அனுப்பி அணைத்தால் என்ன நினைப்பார்கள்? ” என்று கேட்டாள் அவனி சுந்தரி. 

கொஞ்ச நஞ்சம் இருந்த நிதானத்தையும் அவள் பேச்சினால் கைவிட்டான் நலங்கிள்ளி அதன் விளைவாக, மீண்டும் அவள் இடையில் கையைச் செலுத்தித் தன்னை நோக்கி அவளை இழுத்தான் பலவந்தமாக. “இப்பொழுது என்ன சொல்கிறாய்?” என்று கேட்கவும் செய்தான். 

“நான் போலிப் பலவந்தம்தான் செய்யச் சொன்னேன். உங்கள் பலவந்தம் உண்மையாகவே இருக்கிறது. கிள்ளிவளவர் உங்களை மன்னிப்பாராக” என்றாள் அவனி சுந்தரி. 

ஆனால் நலங்கிள்ளி, கிள்ளிவளவனைப் பற்றியோ துக்கத்தைப் பற்றியோ நினைக்கும் நிலையில் இல்லை. அவள் இடையைச் சுற்றிச் சென்ற கை மன்மேலும் இறுகவே செய்தது. அந்த இறுக்கல் அவளுக்கும் தேவையாகவே இருந்தது. அத்தகைய ஸ்பரிசத்தை அதுவரை அறியாதவளும், வீராங்கனையுமான அவனி சுந்தரி, உணர்ச்சிப் பெருக்கால் துடித்தாள். அதன் விளைவாக, அவனது வலது கையைத் தன் கையால் பிடித்துக்கொண்டாள். விரல்களுடன் விரல்கள் பின்னி விளையாடின. முகங்கள் பரஸ்பம் திரும்பி நோக்கின. கண்கள் ஒன்றையொன்று கவ்வின. நேரம் சிறிது நீடித்திருந்தால் என்ன நேரிட்டிருக்குமோ சொல்ல முடியாது. அந்தச் சமயத்தில் ஏற்பட்ட பெரும் முனகல் அவர்கள் இன்ப நிலையைச் சரேலெனக் கிழிக்கவே, இருவரும் பிரிந்து உட்கார்ந்தார்கள் சட்டென்று. 

அவனி சுந்தரி அடுத்த விநாடி எழுந்திருந்து, மன்னனையும் எழுந்திருக்கும்படி கூறினாள். எழுந்திருக்க இஷ்டமில்லாத நலங் கிள்ளி “எதற்கு?” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தான். 

அப்படி அவன் விழுந்ததன் காரணத்தைப் புரிந்து கொண்டதால், அவனை நோக்கிப் புன்முறுவல் கொண்ட அவனி சுந்தரி “வாருங்கள். அந்த முனகல் என்னவென்று பார்ப்போம்” என்று கூறிச் செடிகளின் மறைவிடத்தை நோக்கி நடந்தாள். அவளைப் பின்தொடர்ந்து நலங்கிள்ளி, செடி மறைவில் இருந்த காட்சியைக் கண்டு பிரமித்துப் போனாள். அங்கு வேல் வீரனொருவன் கையில் வேலுடன் கீழே விழுந்து கிடந்தான், மூர்ச்சையாக. அவன் பக்கத்தில் பூதலன் நின்று கொண்டிருந்தான் அசட்டையுடன். கீழே விழுந்த வீரன் நிலையைப் பார்த்த அவனி சுந்தரி, “பூதலா! இவனைக் கொல்ல வேண்டாம் என்று சொன்னேனே” என்று கடிந்து கொண்டாள், பூதலளை நோக்கி. 

”கொல்லவில்லை. மூர்ச்சையாகியிருக்கிறான். இத்தனைக்கும் வேலெறிய முற்பட்ட சமயத்தில் கழுத்தை மாத்திரம் லேசாகத் தான் பின்புறத்தில் இருந்து பிடித்தேன், சுத்தப் பூஞ்சையாயிருக்கிறான்” என்று பூதலன் அலுத்துக் கொண்டான். 

நலங்கிள்ளிக்கு விஷயம் ஏதும் புரியாததால், அவனி சுந்தரியை நோக்கித் திரும்பி, “இது என்ன? என்று விசாரித்தான். 

“இன்று உங்களைத் தீர்த்துக் கட்டும்படி நெடுங்கிள்ளி என்னி டம் கூறியிருந்தான்…” என்று இழுத்தாள் அவனி சுந்தரி. 

“உன்னிடமா?” இந்தச் சொல் மிக வியப்புடன் உதிர்ந்தது நலங்கிள்ளியிடமிருந்து. 

“ஆம்”

“அப்படியானால்?”

“நெடுங்கிள்ளி சொன்னபடி உங்களை நந்தவனத்துக்கு அழைத்து வந்தேன். உங்களிடம் அகப்பட்டுத் திணறினேன். அவன் அனுப்பியிருந்த வீரன் உங்கள் மீது வேலைக் குறிவைத்தான்…” அதற்கு மேல் ஏதும் சொல்லவில்லை, அவனி சுந்தரி. இருந்தாலும் புரிந்து கொண்டான் நலங்கிள்ளி. 

“அவன் சொன்னதையும் செய்தாய். அது நடக்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்தாய். எதற்காக அவனி சுந்தரி?” என்று வினவினான் நலங்கிள்ளி. 

அவனி சுந்தரி உடனடியாகப் பதில் சொல்லவில்லை மன்னனுக்கு. “பூதலா! இவனை நெடுங்கிள்ளியின் அரண்மனை வாசலில் எறிந்துவிடு. கொல்லாதே. ஆனால் விழிக்காதபடி பார்த்துக் கொள்” என்று கட்டளையிட்டாள் பூதலனை நோக்கி. 

அதலன் அவளை நோக்கித் தலையை அசைத்துவிட்டுக் குழந்தையைத் தூக்குவது போல் அந்த வீரனைத் தூக்கிக் கொண்டு நடந்தான். அவன் சென்ற பிறகு, மன்னனை நோக்கித் திரும்பிய அவனி சுந்தரி, “இன்றுடன் உங்கள் ஆபத்து தீர்ந்துவிட்டது. உங்கள் நாட்டுக்கு ஆபத்து தொடங்குகிறது” என்று கூறிப் பெரு மூச்சும் எறிந்தாள். 

“விளக்கமாகச் சொல்” என்று கேட்டான் நலங்கிள்ளி. 

“தனது கொலை முயற்சி பலிக்கவில்லை என்பதை இன்று இரவு புரிந்து கொள்ளுவான் நெடுங்கிள்ளி. அவன் முயற்சி உங்களுக்கும் தெரிந்து விட்டதைப் பறைசாற்றவே இந்த வீரனை நெடுங்கிள்ளி தங்கியிருக்கும் அரண்மனைக்கு எதிரில் எறியச் சொன்னேன். இவன் மூர்ச்சையுற்ற நிலையைக் கண்டதும் வேல் எறி படலம் முடிந்து விட்டதை அறிந்து, பறந்து விடுவான் தனது நகருக்கு நெடுங்கிள்ளி. தந்திரத்தால் தனது ஆசை பலிக்காதவன். நேர் எதிர்ப்பால் அதைப் பூர்த்தி செய்து கொள்ள முயலுவான். உங்கள் மீது வெகுசீக்கிரம் போர் தொடுப்பான்” என்று விளக்கினாள் அவனி சுந்தரி. 

அதைக் கேட்ட நலங்கிள்ளி, சீரிய சிந்தனையில் இறங்கினான். பிறகு சொன்னாள்: “நீ வந்த காரியம் நிறைவேறிவிட்டது” என்று.

“என்ன காரியம் அது?” சர்வ சாதாரணமாகக் கேட்டாள் அவனி சுந்தரி. 

“சோழ நாட்டைப் பிளக்கும் காரியம்” என்றான் நலங்கிள்ளி. சொல்லிப் பெருமூச்சும் விட்டான். 

அவனி சுந்தரி நகைத்தாள். “இத்தனை நாள் நீங்களும் நெடுங்கிள்ளியும் ஒன்றுபட்டு இருந்தீர்களா? இல்லை. கிள்ளி வளவரும் நெடுங்கிள்ளியுந்தான் இணைபிரியாதிருந்தார்களா? ஒருவேளை கிள்ளிவளவர் தம்பியிடம் அப்படி நேசம் வைத்திருந்தாலும், அதை குளமுற்றம் முறித்துவிட்டது. நான் இங்கு வரு முன்பே உங்கள் நாடு பிளந்துவிட்டது” என்று சுட்டிக் காட்டினாள் நகைப்பின் ஊடே. 

அவள் சொன்னது அனைத்தும் உண்மை என்பதை நலங்கிள்ளி உணர்ந்து கொண்டானானாலும், அதை இன்னொரு நாட்டு இளவரசியிடம் ஒப்புக் கொள்ள மனமில்லாததால், பெருமூச் செறிந்தான். அதைக் கண்ட அவனி சுந்தரி, “நெடுங்கிள்ளியின் தூதன் வேல் முதுகில் பாயாதது வருத்தம் போலிருக்கிறது மன்னருக்கு?” என்று ஏளனத்துடன் வினவினாள். 

அதைக் கேட்ட அவளை, நீண்ட நேரம் உற்று நோக்கினான் நலங்கிள்ளி. அவள் விழிகளெனும் கூர்வேல்கள் அவனை நேரிடையாகவே தாக்கி அசைத்தன. அவள் பவள அதரங்கள் அவனை நிலை குலையச் செய்தன அவள் உருவம் முழுவதற்கும் மெருகு கொடுத்த நிலவு அவன் மதியைச் சொல்லவொண்ணா நிலைக்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தது. இந்த அஸ்திவாரங்களில் இருந்து விடுவித்துக்கொள்ளச் சற்று அவளை விட்டு நகர்ந்து, அப்படியும் இப்படியும் நடந்தான். 

“மன்னர் உத்தரவை மீறி இந்த நந்தவனத்துக்குள் வருபவர்களுக்குப் புகாரில் தண்டனை உண்டென்று கேள்வி” என்று மயக்கம் தரும் ஒளியில் சொன்னாள் அவனி சுந்தரி. 

”ஆம்” என்று சீறிக்கொண்டு, அவளை நோக்கித் திரும்பினான் நலங்கிள்ளி. அடுத்த விநாடி அவளைச் சரேலென்று இருகைகளாலும் நெருக்கிப்பிடித்து உதடுகளில் பலவந்தமாக முத்திரை ஒன்றையும் வைத்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு மிக வேகமாக அரண்மனையை நோக்கி நடந்தான் புகாரின் மன்னன். 

அவன் போகும் வேகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றாள் அவனி சுந்தரி, நீண்ட நேரம் ஏதோ காரணமாக அவள் கை அவள் இதழ்களைத் தடவியது. “தண்டனை நன்றாயிருக்கிறது மன்னவா!” என்று மெள்ள முணுமுணுத்தாள். ஏதேதோ இன்ப வேதனைகளில் சிக்கிய வண்ணம், தனது இருப்பிடத்தை அடைய அரண்மனையின் ரகசிய வழியை நோக்கி நடக்கலானாள்.

– தொடரும்

– அவனி சுந்தரி, ராணி முத்து, ராணி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *