கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 1,478 
 

(2013ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 7-8 | காட்சி 9-11

ஒன்பதாம் காட்சி 

(பின்னணியில் தோட்டம் போன்ற அமைப்பு. மாலை நேரம். முல்லை நடன ஒத்தகைக்குத் தயாராகக் காலில் சிலம்பு அணிந்து கொண்டிருக்கிறாள். அருகில் மரகதம் நின்று கொண்டிருக்கிறாள்) 

முல்லை : என்ன… மரகதம். ஆழ்ந்த சிந்தனை…? 

மரகதம் : நான் தவறு செய்து விட்டேன். தேவி என்னை மன்னிக்க வேண்டும். 

முல்லை: மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நீ என்ன செய்தாயடி?… 

மரகதம் : தாங்கள் ஆடற்கலையில் மீண்டும் ஆர்வத்தை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காதலை மூட்டை கட்டி வையுங்கள் என்று சொல்லி விட்டேன். 

முல்லை : உன் நோக்கத்தில் பழுது இல்லை. 

மரகதம்: பழுது இருக்கிறது என்று மல்லிகையார் எனக்குச் சுட்டிக் காட்டி விட்டார். 

முல்லை: (சிரிக்கிறாள்) மல்லிகை… அவள் உலகம் தெரியாதவள். கோபக்காரி, பிடிவாதக்காரி. வெகுளிப் பெண். 

மரகதம் : அவர் உலகத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். ஆண்-பெண் உறவு பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள் இயற்கையின் நியதியை எனக்குப் புரிய வைத்தது… 

முல்லை : அப்பப்பா… என்ன தத்துவ ஆசிரியன் போல் பேச்சு. அதுவும் என் தங்கையின் வார்த்தைகளைக் கேட்டு..வியப்பு தாங்க முடியவில்லை. 

மரகதம் : நான் தங்களுக்குப் போட்டுக் கொடுத்த வட்டத்தை நானே அழிக்கிறேன். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதுதான் இயற்கை நியதி. நடந்ததை எல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்திடுங்கள். புலவரிடம் பேசுங்கள். அன்பைப் பொழியுங்கள். தங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள். தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். 

(மரகதம் முல்லையின் பாதம் பணிகிறாள்) 

முல்லை : (ஆத்திரத்துடன்) நீ சொல்கிறபடி ஆடுவதற்கு நான் என்ன தோல் பாவையா…? இரத்தமும் சதையும் உணர்ச்சிகளும் நிறைந்த மனுஷி… நீ நினைத்தால் ஒரு சமயம் காதலை மறந்திடுங்கள். உங்களுக்கு அந்த ஆட்டம் ஆடத் தெரியவில்லை என்பாய். சில நாட்கள் கழித்து எனக்கு ஞானோதயம் வந்தது. நான் சொன்னது தவறு என்பாய். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? 

மரகதம்: (எழுந்து நிற்கிறாள்) தேவி அன்றைய இறுக்கமான சூழலில் தாங்கள் உடைந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவ்வாறு பேசினேன். இன்று நிலைமை மாறியுள்ளது. 

முல்லை : அவர்களே தேடி வந்தாலும் திரும்பிப் பார்க்காதே என்றாய்… 

மரகதம் : தேவி… அன்றைய நிலைமையில் தங்கள் மனம் அமைதியடைய அப்படிப் பேசினேன். இன்று அவர்கள் இறங்கி வருகிறார்கள். தங்கள் தந்தையார் யார் என்பதும் தெரிந்து விட்டது. எல்லாம் கூடி வருகிற வேளை வந்து விட்டது. தாங்கள் மனம் மாறினால் போதும். அன்று பேசியதற்காக மன்னியுங்கள். 

முல்லை : எனக்கு நீங்கிய காதல் பித்து உங்களை எல்லாம் பிடித்து ஆட்டுகிறது போலும். ஆண் அரவணைப்பில் சுகம் காண நினைத்தால் உன் பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்யச் சொல். அல்லது காதலன் கிடைக்கிறானா பார் காதல் வலை வீசு… என் உயிரை வாங்காதே. 

(மல்லிகை மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறாள்.) 

மல்லிகை : மரகதத்திடம் இத்தனை கடுமை காட்டலாமா? அவள் வீட்டை நன்கு பராமரித்து வருகிறாள். அவள் இல்லாமல் நீயும் நானும் நாட்டியம் ஆட முடியாது. அடுப்பங் கரையில்தான் உட்கார்ந்து இருப்போம். அவள் உறுதுணையாக இருப்பதால்தான் மூவரும் நன்றாக வளைய வரமுடிகிறது. 

முல்லை : அதற்காகத்தான் அளவுக்கு மீறிய இடத்தை அவளே எடுத்துக் கொள்கிறாள். நீயும் அம்மாவும் அதற்குத் தலையாட்டுகிறீர்கள். 

மல்லிகை : அவள் தவறாகப் பேசக் கூடியவள் அல்லள். 

முல்லை : உனக்குத் தெரியுமா? பத்து நாட்களுக்கு முன்பு என்னிடம் காதலை மற கலையைப் பார் என்றாள். இன்று என்னை மன்னியுங்கள். பொண்ணரசி மல்லிகை ராணியார் எனக்கு உலகைக் காட்டி விட்டார். ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்று எனக்கு உயிரியல் பாடம் நடத்துகிறாள். இவளுக்கும் உனக்கும் பருவ வெறி வந்து விட்டது. நீ அந்த உருத்திரங்கண்ணனாரிடம் சிரிக்கச் சிரிக்க பேசியதைத்தான் நான் வீட்டு மாடத்திலிருந்து பார்த்தேனே … ஆண் துணை தேடி அலைகிறீர்கள். இவளுக்கும் ஒருவரைப் பார். 

மல்லிகை: நீ ஆத்திரத்தில் தகாத வார்த்தைகள் பேசுகிறாய். நல்லது சொன்னவர்களைத் தூற்றுவதா? எங்கள் இருவரையும் ஆண் துணை தேடி அலைகிறோம் என்பதா? 

முல்லை : நீ அவளுக்குச் சொன்ன வாழ்வியல் விளக்கங்களுக்கு எல்லாம் பொருள் அதுதானே… உன் நடத்தையும் அதைத்தானே நிரூபிக்கிறது. 

மல்லிகை: ஓர் ஆண் மகனிடம் பேசினால் உடனே காதல் என்று கூறிவிடுவதா? 

முல்லை : அதுதான் கண்டதும் காதல் என்பார்களே. 

மல்லிகை : காதல் இந்த நிமிடம் வரை இல்லை. அவர் வலிய வந்து தெரிவித்தால் நிராகரிக்க மாட்டேன். நீ புலவரை நட்டாற்றில் விடாதே. பிடித்த பிடியாக இருக்காதே. சில முடிவுகளை மாற்றிக் கொண்டால்தான் வாழ்க்கை இனிக்கும். சொல்வதைக் கேள். 

முல்லை : கெட்டி மேளத்திற்குத் தயார் ஆகிவிட்டாய். வாழ்த்துக்கள். 

மல்லிகை : உன் வாழ்த்து எனக்கு அவசியம்தான். உன் வாழ்க்கை அழைக்கிறது. கதவை சாத்தாதே. என்னையும் மரகதத்தையும் ஆத்திரம் தீரத் திட்டிக் கொள். உன் வசவுரைகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. காதலினால் நீ மனம் நொந்து உயிரைவிடத் துணிந்ததால், மரகதம் காதலை மறந்திடுங்கள் என்று சொல்லிவிட்டாள். நான் உன்னிடம் எப்போதுமே அப்படி சொன்னதில்லை நினைத்துப் பார். உன்னையே நினைத்து இயல்பு வாழ்க்கையை விட்டு விலகி நிற்பவருக்கு நீ கருணை காட்டித்தான் தீர வேண்டும். வீம்பு விபரீதத்தில்தான் கொண்டு விடும். 

முல்லை : சரி. இருவரும் போங்கள். உங்கள் முடிவுகளை என் மீது திணிக்காதீர்கள். நானே யோசித்து முடிவு செய்கிறேன். என்னைத் தனிமையில் விடுங்கள். 

மல்லிகை : வா மரகதம். 

(மரகதமும் மல்லிகையும் மேடையின் வலப்பக்கமாக செல்கிறார்கள். முல்லை உலாவிக் கொண்டே யோசிக்கிறாள். சற்று நேரத்தில் முல்லை என்று மரிக்கொழுந்து அழைக்கும் குரல் ஒலிக்கிறது. வருகிறேன் அம்மா என்று குரல் கொடுத்துக் கொண்டே மேடையின் வலப்பக்கமாகச் செல்கிறாள்) 

(மேடையின் இடப்பக்கத்திலிருந்து தளபதியும் தாமரையும் தாமரையின் கணவனும் வருகிறார்கள்) 

தாமரை : தளபதியாரே… அவரை அந்தத் திண்ணையில் அமரச் சொல்லுங்கள். இங்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? எனக்கு இருக்கிற தொல்லைகள் போதாது என்றா… 

தளபதி: தாமரை முகம் சுளிக்கலாமா…? அவருக்கு சித்த சுவாதீனம் நீங்கி தெளிவு பிறந்து விட்டது. ஏழுமலை சுவாமிகள் என்னிடம் அனுப்பி வைத்தார். 

தாமரை: தாங்கள் என்னிடம் அழைத்து வந்து விட்டீர்… தாமரையின் கணவன் வர்த்தமான தாசன்: (எழுந்து நின்று 

பேசுகிறார்) தாமரை என்னை மன்னிக்க வேண்டும். தவறுக்கு மேல் தவறு இழைத்து விட்டேன். 

தாமரை : இந்த ஒரு வார்த்தை போதுமா? நாங்கள் நான்கு பேர் பட்டபாடுகளை எல்லாம் போக்கி விடுமா? எங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்து விடுமா… 

தளபதியாரே… அவரது இல்லத்தில் சென்று சேர்த்திடுங்கள். அவருக்குத்தான் தெளிவு வந்துவிட்டதே. 
அவரே போகட்டும். பிள்ளைகளையும் அருமைப் பேரப் பிள்ளைகளையும் கொஞ்சி மகிழட்டும். 

தளபதி : தெளிவு பெற்றார் என்றபோதும் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அங்கு போய் விட்டுத்தான் வந்தார். 

தாமரை: அங்கு ஏற்கப்படவில்லை என்றதும் இங்கு அழைத்து வந்தீரா..நானும் இவரும் ஊரறியவா இல்லறம் நடத்தினோம்… 

தளபதி: தாமரையாரே! பழைய கதைகளையே பேசாதீர்கள். தங்களுக்கு ஒரு துணை வேண்டும். இவரை ஏற்றுக் கொள்ளுங்கள். இனிமேல், தங்களுடைய அரசு அலுவல்களை இவர் தடுக்க மாட்டார். 

தாமரை : தடுக்கத்தான் முடியுமா? சற்றுப் பொறுங்கள். நான் வீட்டின் உள்ளே போய் என் தங்கையிடம் பேசிப் பார்க்கிறேன். ஏனென்றால் அவள்தான் குடும்பத் தலைவி. அவளும் புதல்விகளும் ஏற்றுக் கொண்டால் நானும் ஏற்றுக் கொள்வேன். ஏற்க மறுத்தால் தங்கள் வீட்டில் தங்களுக்குப் பேச்சுத் துணையாக இருக்கட்டும். 

தளபதி: அய்யிய்யோ… தாங்கள் செல்லுங்கள். நல்ல முடிவோடு வாருங்கள். 

(தாமரை மேடையின் வலப்பக்கமாகச் செல்கிறாள். சில நிமிடங்கள் கழிகின்றன). 

தளபதி : நீர் காலில் விழுந்திருக்க வேண்டாமா? மனைவியின் காலில் விழுவதில் தவறு ஒன்றும் இல்லையே… 

வர்த்தமானதாசன்: நீர் சரியாகச் சொல்கிறீர். நான் செய்த கொடுமைகளுக்கு காலில் விழுவது தகும்.. 

தளபதி : சரி. சரி. வருகிறார்கள். ஏதாவது பேசி காரியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். அண்ணியுடனும் புதல்வி களுடனும் புது வாழ்வு வாழ நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. கோட்டை விட்டு விடாதீர்கள். 

வர்த்தமானதாசன் : தங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். மது அருந்தலாமா இதற்காகவே… 

தளபதி: குடியை கெடுத்தீர்… 

(தாமரை, மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை ஆகியோர் வருகிறார்கள். மரகதம் அவர்கள் பின்னால் வருகிறாள்). 

தாமரை : என்ன குடியைக் கெடுத்தார்?… 

தளபதி: குடி குடியைக் கெடுக்கும் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தங்கையார் என்ன சொன்னார்? 

தாமரை : தங்கை, நொந்துபோய் வந்திருக்கும் மாமனை ஏற்றுக் கொள் என்கிறாள். புதல்விகளையும் சம்மதிக்க வைத்து விட்டாள். அமைச்சரே வாருங்கள். பாருங்கள். 

(அறிமுகப்படுத்துகிறாள்) 

இவள், என் தங்கை மரிக்கொழுந்து, இவர்கள் நம்புதல்விகள் முல்லை, மல்லிகை. தந்தைக்கு பிள்ளைகளை அறிமுகப் படுத்தும் துரதிஷ்டம் எனக்கு. முல்லைதான் முதலில் பிறந்தாள். அடுத்து மல்லிகை பிறந்தாள். என் தங்கைக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. அக்கா-தங்கை என்று சொல்லி வளர்த்திருக்கிறாள். ஒருவருக்கொருவர் அளவற்ற பாசம் கொண்டவர்கள். இந்த இரட்டைப் பிறவிகளுக்கு சித்தி மீது கொள்ளைப் பாசம்… எங்கே மரகதம்… வா… இவள் மரகதம்… மரிக்கொழுந்து நம் மகள்களைக் காப்பாற்றினாள் என்றால் மூவரையும் இவள் காப்பாற்றினாள் என்று சொல்ல வேண்டும். நான் சுகவீனம் அடைந்தபோது என்னையும் பாதுகாத்தாள். 

மரகதம்: (நாதழுதழுக்க) பெரிய வார்த்தைகள் சொல்லாதீர்கள் அம்மா. நான் பணிப் பெண் மட்டுமே. 

(வர்த்தமானதாசன் கண்களில் கண்ணீர் பெருகுகிறது.) 

மரிக்கொழுந்து : தாமரை… அவரிடம் அழ வேண்டாம் என்று சொல். 

தாமரை : ஆனந்தக் கண்ணீர். அழுது தீர்க்கட்டும் மரிக்கொழுந்து.

மல்லிகை: தாமரை அம்மா…. 

மரிக்கொழுந்து : அம்மா என்று கூப்பிடேன். பெயர் சொல்ல வேண்டுமா… அக்கா உன்னை அம்மா என்று அழைத்து விட்டாள். 

தாமரை : பெற்றெடுத்த வயிறு குளிர்ந்தது… சொல் அம்மா மல்லிகை. 

மல்லிகை : அப்பாவுடன் நாம் எல்லோரும் இணைய வேண்டும் என்று நினைத்தது யார்? 

தாமரை : சுவாமிகள் அருள் கூர்ந்து திருவுள்ளத்தில் நினைத்திருக்கிறார். தளபதியார் நிறைவேற்றியிருக்கிறார்… 

மல்லிகை : அப்படியானால், நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் தளபதியாருக்கு மகிழ்ச்சி அப்படித்தானே… 

தளபதி : அப்படித்தான் அப்படித்தான். 

மல்லிகை : தளபதியார், எங்கள் நிபந்தனை ஒன்றை நிறை வேற்றினால்தான் தந்தையாரை உள்ளே அழைத்துச் செல்வோம் சொல்லி விடுங்கள். 

மரிக்கொழுந்து : நாட்டைக் காக்கிற படைத்தலைவரிடம் வாயாடாதே. 

மல்லிகை : நான் வாயாடவில்லை. 

தளபதி : என்ன நிபந்தனை… தங்கள் இருவருக்கும் இணையாக அந்த இரு இளம்புலவர்களை அழைத்து வர வேண்டுமா…? இப்பொழுதே போய் அழைத்து வருகிறேன். இருவருமே உங்கள் இருவருக்கும் பொருத்தமான இணைதான்… இப்பொழுதே போகிறேன். 

மல்லிகை: எங்கள் திருமணத்தை கவனிக்க இரண்டு அம்மாக்கள். போதாததற்கு அப்பாவைத் தாங்கள் அழைத்து வந்துவிட்டீர்கள். 

மரிக்கொழுந்து: வாயாடாதே என்று சொன்னால் அடங்க மாட்டாயா… மல்லிகை… 

மல்லிகை : பொறுங்கள். தாமரை அம்மா இந்த நிபந்தனையைப் பெரியவரான தாங்களும் அப்பாவும்தான் தளபதியாரிடம் சொல்ல வேண்டும். 

தாமரை : புதிர் போடாதே. என்ன என்று சொல். 

மல்லிகை : உங்களுக்கு எல்லாம் தோன்றவில்லை. எனவே சிறியவள் நான் சொல்கிறேன். தளபதியார்,எங்கள் சிற்றன்னையை மணப்பதாக வாக்குறுதி தந்தால் அப்பாவை ஏற்றுக் கொள்வோம். இல்லாவிட்டால், அவரது வீட்டிற்கே அழைத்துச் செல்லலாம். விட்டுவிட்ட பழக்கத்தைத் தொடர்வதற்கு ஒரு துணை கிடைக்கும். 

தாமரை : (முகம் மலர) அடடா, எனக்கு இது தோன்றவில்லையே. கள்ளி உன் சித்தி சம்மதிப்பாளா என்று கேட்க வேண்டாமா…? 

(மரிக்கொழுந்து அய்யோ என்ன இதெல்லாம் என்று கூறியபடியே ஓடுகிறாள்.) 

தாமரை : அவள் வெட்கத்தால் சம்மதம் கூறி விட்டாள். தளபதியார் சம்மதம் தர வேண்டும். 

தளபதி: யோசிக்க அவகாசம் வேண்டாமா? 

முல்லை : அவகாசம் தர மாட்டோம். உடன் பணிபுரிந்த அமைச்சருடன் குடித்துக் கொண்டு வாழ்வதா? நாங்கள் பார்த்து வைத்திருக்கும் துணையுடன் வாழ்வதா என்று முடிவு செய்திடுங்கள். சொல்லுங்கள் அம்மா. 

தாமரை : நீங்கள் இருவரும்தான் மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே. பதில் சொல்லுங்கள் தளபதியாரே… நல்ல முடிவைப் பகருங்கள். 

தளபதி : இறைவன் இதற்காகத்தான் இந்த அந்திப் பொழுதில் இந்தத் தோட்டத்தில் என்னை நிற்க வைத்திருக்கிறான் போலிருக்கிறது. சம்மதம் தருகிறேன். நான் ஏற்கனவே மணம் ஆனவன் என்பதை அவரிடம் கூறி விடுங்கள். சரி. நான் விடைபெறுகின்றேன். அழைத்துச் செல்லுங்கள் அமைச்சரை. வாழ்க வளமுடன். (செல்கிறார்) 

தாமரை : தளபதியார் எதுவும் பருகாமல் போகிறாரே… 

முல்லை : சிற்றன்னையுடன் திருமணம் முடிந்ததும் இங்கே கை நனைப்பார். தங்கள் தங்கையின் அன்பருக்கு ஆசை தீரப் பரிமாறுங்கள். போகலாம் வாருங்கள். அம்மா வாருங்கள். அப்பா வாருங்கள். (அனைவரும் செல்கின்றனர்) 

(திரை) 

பத்தாம் காட்சி 

(மாலை நேரம். பின்னணியில் அரண்மனை அறை போன்ற அமைப்பு. இரண்டு காவலர்கள் அறையைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எதிரும் புதிருமாக ஆசனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.) 

முதல் காவலன்: வைரவா. திடீர் என்று பாசறையை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

இரண்டாம் காவலன் : இது என்ன கேள்வி முத்து. இங்கு பாசறைக் கூட்டம் நடக்கப் போகிறது. 

வைரவன்: எதைப் பற்றி…? 

முத்து : இரகசியக் கூட்டம்தான் பாசறைக் கூட்டம். என்ன பொருள் பற்றிப் பேசுவார்கள் என்பது நம்மைப் போன்ற காவலாளிகளுக்குத் தெரியாது. அதிகாரிகளுக்கே கூட தெரியாது. 

வைரவன் : அரசருக்கே கூட தெரியாது என்று சொல்லி விடுவாய் போலிருக்கிறதே. 

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து நாம் முன்பு பார்த்த சீனர் வருகிறார். ஆசனத்தில் அமர்கிறார்.) 

முத்து: இங்கே பாரடா. இந்த சீனன் அரண்மனையில் நுழைந்தது மட்டும் அல்லாமல் பாசறை ஆசனத்தில் ஓய்யாரமாக உட்கார்ந்து விட்டான். 

வைரவன் : ஏனப்பா. இங்கெல்லாம் வரக்கூடாது. எழுந்திரு. சரி. வெளிநாட்டவர் மரியாதையுடன் சொல்கிறேன். எழுந்திருங்கள். 

(சீனர், தன்னுடைய குல்லாயையும் தாடியையும் கழற்றுகிறார்) 

முத்து: வைரவா… இது நம் நண்பன் செல்வம்… மன்னிக்கவும் உளவுத்துறை அதிகாரி செல்வனார்… 

செல்வம் : முத்து வைரம், நான் என்றுமே உங்கள் நண்பன் செல்வம்தான். 

முத்து: திருவிழாவில் சீன யாத்ரீகனாகச் சுற்றி வந்தது நீதானா… தாங்கள்தானா… நன்றாக இருக்கிறது தங்களுடைய ஒப்பனையும் வேடமும்… பழகிய எங்களுக்கே அடையாளம் தெரியவில்லை. 

செல்வம்: வைரவா… என்னை முன்புபோலவே விளியுங்கள். நான் என்றும் உங்கள் நண்பர்தான். 

முத்து : நண்பன் நண்பன் என்று சொன்னால் போதுமா? நாங்கள் காவலர்களாக இருக்கிறோம் என்றுதானே திருமணத்திற்கு அழைக்கவில்லை? 

செல்வம்: திருமணத்திற்கு அழைக்கவில்லை என்பதற்காக இப்படி எல்லாம் சிந்திக்கலாமா? 

முத்து: வேறு என்ன சொல்வார்கள்? என்ன இருந்தாலும் நீர் உளவுத்துறை அதிகாரி ஆகிவிட்டீர். எங்களை மதிப்பீரா…?

செல்வம் : புரியாமல் பேசாதீர்கள். என் பெற்றோர் உறவினர் கூட அருகில் இல்லாமல் தான் என் திருமணம் நடந்தது… 

முத்து: நம்பும்படியாக இல்லையே… 

செல்வம் : நம்பித்தான் தீர வேண்டும். எங்கள் அதிகாரி தாமரை அம்மா தாயகம் திரும்பியதும் வேகம் வேகமாக பல சம்பவங்கள் நடந்தன. அவரது கணவர் முன்னாள் தலைமை அமைச்சருக்கு சித்த சுவாதீனம் நீங்கி தெளிவு பிறந்தது. 

வைரவன்: அவர்தான் தாமரையின் கணவர் என்பதும் அவருக்குப் பைத்தியம் பிடித்திருந்ததும் எங்களுக்குத் தெரியவே தெரியாது. 

முத்து : ஊரில் யாருக்கும் தெரியாது. இவர் சொல்லித் தான் தெரிகிறது. 

செல்வம் : நின்று போன முல்லை-தாமோதரனார் திருமணம் கைகூடியது. மல்லிகை, உருத்திரங்கண்ணனாரைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள். தளபதியாரை மறுமணம் செய்து கொள்ள புதல்விகளின் வேண்டுதலால் மரிக்கொழுந்து இசைவு தெரிவித்தார். தாமரையின் சொந்தங்கள் எல்லோருக்கும் இணை கிடைத்து ஒரே பந்தலில் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மரிக்கொழுந்து வீட்டில் இருக்கும் மரகதத்திற்கும் அதே சுபவேளையில் திருமணம் நடத்த நினைத்த தாமரை, மரகதத்தைத் திருமணம் செய்துகொள்ளும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். 

முத்து: நீர் மரகதத்தைப் பார்த்து சொக்கிப் போயிருப்பீர். 

செல்வம்: ஆமாம். நான் அவளையே விழுங்குவதுபோல் பார்த்துக் கொண்டிருந்ததை தாமரையார் கவனித்துவிட்டார். அதனால்தான்… 

வைரவன் : திடீர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டாரா… 

செல்வம்: ஆமாம். 

முத்து: கிடைத்தது அதிர்ஷ்டப் பரிசு. மரகதத்தின் பெற்றோர்கள் சம்மதித்தனரா…? 

வைரவன்: இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்கும்போது செலவு இல்லாமல் திருமணம்… கசக்குமா? 

முத்து: சீர்வரிசையையும் தாமரையாரே கொடுத்திருப்பார்…

வைரவன் : இவர் சீரைப் பார்த்திருப்பாரா.. வரிசையைப் பார்த்திருப்பாரா… மரகதத்தின் பல்வரிசையை மட்டும்தான் பார்த்திருப்பார். 

செல்வம்: கிண்டலா? 

முத்து: நண்பர் என்றால் கிண்டல் செய்யத்தான் செய்வார்கள். தமக்கையார் போலிருந்து திருமணம் நடத்தியிருக்கிறார் தாமரையார். நீங்கள் எல்லாம் இருக்கும்போது எப்படி அவர் மீது மழை நேரத்தில் தாக்குதல் நடத்தத் துணிந்தார்கள்?

செல்வம் : அன்றைய அரசர், இன்றைய அரசர் இருவரிடமும் நன்மதிப்பு பெற்றவராக தாமரை இருந்ததால் சில பொறாமைக்காரர்கள் அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்து ஆட்களை ஏவிவிட்டார்கள். ஏவியது யார் என்று கண்டுபிடித்து விட்டார் தளபதி. தாமரையார்தான் மன்னித்து விடுங்கள். அரசர் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார். 

முத்து : சரி. அரசர் வரும்நேரம். நாங்கள் புறப்படுகிறோம். இரகசியக் கூட்டத்தில் நாங்கள் இருக்கக்கூடாது. 

செல்வம்: போய் வாருங்கள். 

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து அரசர் ராஜமாணிக்க வர்மன், அரசி அங்கயற்கண்ணி, தளபதி ஆகியோர் வருகிறார்கள். அமர்கிறார்கள். தாமரை மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறாள். செல்வம் எழுந்து நிற்கிறான்.) 

செல்வம் : மாமன்னர் வாழ்க. மாமன்னர் புகழ் ஓங்குக. 

தாமரை : மாமன்னருக்கு வணக்கம். வாழ்க பல்லாண்டு. 

அரசன்: அமருங்கள் இருவரும். செல்வம், மக்கள் நமது ஆட்சியில் மகிழ்ச்சியாகத் தானே இருக்கிறார்கள். 

செல்வம் : மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அரசே… நிறைவாக வாழ்ந்து வருகிறார்கள். உழவும் தொழிலும் வாணிபமும் சிறப்புற்று இருப்பதால் மக்கள் ஒற்றுமையாக நிம்மதியாக இருக்கிறார்கள். தங்களைப் போன்ற அரசர் இருக்கும் போது குறை ஒன்றும் இல்லை என்கிறார்கள். 

அரசி : அரசரே. தாமரையார் நான்கு திருமணங்களை நடத்தி வைத்துப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறார். 

அரசன் : தெரியும். அமைச்சர் வந்து விட்டாராமே. எப்படி இருக்கிறார் இப்பொழுது…? 

தாமரை : தெளிவாகி விட்டனர் மன்னா. 

அரசி : தங்கள் குடும்பம் ஒன்றானது பற்றி அறிந்து மன்னர் மட்டற்ற உவகை அடைந்தார். 

தாமரை : மன்னரின் அன்புக்கு நன்றி தெரிவிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. 

அரசன் : தளபதி. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் பொருள் புலம்பெயர்தல். சொல்லுங்கள். தாமரையாரே இது பற்றி தங்கள் திட்டம் என்ன? 

தாமரை : அரசே. நான் தங்களுக்கு அனுப்பிய ஓலைகளின்படி, நமது மக்கள் குடியேற கொங்கு நாட்டு பகுதிகளைத் தேந்தெடுத்துப் பேசி வந்திருக்கிறேன். 

அரசன்: கொங்கு நாடா…? மலையும் வனமுமாக இருக்குமே… 

தாமரை : அடர்ந்த வனப்பகுதிகளைத் தான் நமக்கு வழங்க முன் வந்திருக்கிறார்கள். கொங்கு நாட்டு ராணி கொங்கு மங்கையாருடன் நடந்த பேச்சு வார்த்தை சுமூகமாகத் தான் போயிற்று. பொன்னும் பொருளும் மட்டுமல்லாமல் நமது செண்பகத் தீவையும் அவர்களுக்குத் தந்துவிட வேண்டும் என்கிறார்கள். அதனால், பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டேன். 

தளபதி : இப்படிப்பட்ட பேரம் நமக்கு வேண்டாம் என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து. காட்டை நாடாக்க நாம் பணிகள் மேற்கொள்ளும் தருணத்தில் அவர்கள் இங்கு வந்து உரிமை கொண்டாடும்போது மக்களிடையே குழப்பம் ஏற்படும். 

செல்வம்: அதைத் தவிர்க்க முடியாது. 

அரசர் : நாம் புலம் பெயர்ந்து சென்றபின் கொடுத்துக் கொள்ளலாமே… 

செல்வம் : அவர்கள் கேட்கும் பொன்னும் பொருளுக்கும் மேல் தீவையும் ஒப்படைக்க வேண்டும் என்பது சரிப்படாது. தீவு நம் வசம் இருப்பதுதான் உகந்தது. 

அரசி : அரசர் நீர் என்ன சொல்கிறீர் என்று உம்மைப் பரிசோதிக்கிறார். தாமரையார் நம்முடைய அரசாங்கத் திற்காகப் பல நன்மைகளைச் செய்து வருகிறார். அவருக்கு அரசரின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசர், என்னை இந்தப் பாசறைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார் என்பதால் அடியேன் சில கருத்துக்களைக் கூற அனுமதிப்பார் என்று நம்புகிறேன். 

அரசன் : நீ சொல்லலாம். செவி மடுக்கிறோம் நாங்கள். 

அரசி : தங்கள் கட்டளையை சிரமேற் கொண்டு பல காரியங்களைச் செய்து வருகிற தாமரையார், புலம் பெயர்வதற்கான இடங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு வந்துள்ளார். அவர் பட்ட பாடுகள் ஒருபுறம் இருக்க, புலம் பெயர்தல் என்பது சாத்தியம்தானா என்று நாம் சிந்திக்க வேண்டும். வனங்களை அழித்து நாடாக்கி நாம் வாழப் போகிறோம். வனங்களை அழித்துத் தான் வாழ வேண்டுமா? என்பது என் கேள்வி. இப்படி மனிதன் நினைத்திருந்தால் நாடும் நகரங்களும் உருவாகியிருக்காது என்பது உண்மைதான். ஜீவராசிகளை அழித்து உருவானவை நமது வாழ்விடம். ஆனால், இங்கு நமக்கு ஒன்றும் குறை இல்லையே. இது நமது சொந்த பூமி பிறந்த மண் நம் தாய். இவளை விட்டு நாம் விலகி ஓட வேண்டுமா? ஆழிப்பேரலையால் ஆபத்து என்று அறிவியலாளர்கள் தெரிவித்திருப்பதற்காக அதனைக் குறைந்த அளவிலான சேதத்துடன் எதிர்கொள்வதற்காக ஆய்வாளர் குழுவை அமைத்து ஆராயச் சொல்வோம். பேரிடர் என்பது பேரழிவைத் தரும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்? தாமரையார் தவறாக நினைக்கக்கூடாது. 

தாமரை: சிந்திக்க வேண்டிய கருத்து அரசியாரே. என்னுடைய பணி வீணாவது பற்றி வருந்த வேண்டிய அவசியம் இல்லை. நாட்டுக்கு எது உகந்ததோ அதனை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. 

அரசி : நன்றி. தாமரை அவர்களே. செண்பகத் தீவு என்பதுதான் நமது பெருமை. மேலும், சமவெளியில் குடியேறினால் இதுவரை நமக்கு இருக்கும் பெருமை எல்லாம் போய் விடும். சமவெளியில் கால் பதித்து நாடாகி, படிப்படியாக நமக்கு என்று பெருமைகளை உருவாக்க வேண்டும் அல்லவா? இது நம் மண் என்பது நமக்கு உவகை தரும் எண்ணம். கோடை விழாவுக்கு எங்கிருந்தெல்லாமோ செண்பகத் தீவுக்கு சாரை சாரையாக பயணிகள் வருகிறார்கள்… செண்பகத் தீவுப் பொருள் என்று சமவெளி நாட்டுச் சந்தைகளில் கூவிக் கூவி விற்கிறார்களே… எனவே… 

அரசர் : புலம் பெயர்தலையே நினைக்கக்கூடாது என்பது அரசியாரின் கருத்து. தாமரையாரும் தளபதியாரும் இது பற்றி கூறலாம். 

தாமரை : அரசியின் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். செண்பகத்தீவு குடிமக்கள் என்பதுதான் நமக்குப் பெருமிதத்தைத் தரும். இந்தக் குளிர்ந்த காற்று. மண்மணம் ஆகியவை நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. அருகில் உள்ள தீவுக் கூட்டங்கள் நம்மை நிமிர்ந்து பார்த்து பொறாமைப் படும் நிலையில் நாம் உள்ளோம். 

தளபதி : அரசியார் கூறியதுபோல, இதுதான் நமது அடையாளம். நமது அடையாளத்தை விட்டு நாம் ஒதுங்க வேண்டிய அவசியம் என்ன? ஆழிப்பேரலை நம்மை அழிக்காமல் அருகில் நமக்காக காணாமல் போன புதிய தீவுகளை உண்டாக்கித் தரும் என்று நேர்மறையாகச் சிந்திக்கலாமே. 

அரசன் : உளவுத்துறையில் நுட்பமான திறமை பெற்ற தாமரையாரிடம் நான் புலம் பெயர்தல் குறித்த பணியை ஒப்படைத்தேன். அவருக்கும் ஆரம்பத்தில் இதில் விருப்பம் இல்லை. இந்த இரகசியப் பாசறைக் கூட்டத்தில் என்ன நேர்ந்தாலும் செண்பகத்தீவிலேயே இங்கேயே இருப்போம் என்று முடிவு செய்யப்படுகிறது. அறிவியல் அறிஞர்கள் கூறிய கருத்துக்கள் மக்கள் காதுக்கு எட்டி குழப்பம் ஏற்படாமல் இருக்க இந்தப் பாசறைக் கூட்டத்தின் முடிவுகள் இரகசியமாகக் காக்கப்பட வேண்டும். ஆழிப்பேரலை பற்றிய ஆய்வாளர் குழு உடனடியாக அமைக்கப் படுவதற்கான ஏற்பாடுகளைத் தளபதியார் மேற்கொள்ள வேண்டும். தளபதியார் தெரிவித்ததுபோல் நேர்மறை அணுகுமுறையில் நம்பிக்கையுடன் நமது பணிகளைத் தொடர்வோம் தொய்வில்லாமல். நம்மைச் செதுக்கிய செண்பகத் தீவிலேயே நாம் வாழ்வோம் இறுதி மூச்சு உள்ள வரை. நன்றி. விடைபெறுவோம் பிறகு சந்திப்போம். வணக்கம். 

அரசி : மாமன்னர் வாழ்க. வாழ்க. 

தளபதி / தாமரை/செல்வம் : மாமன்னர் வாழ்க. செண்பகத் தீவின் புகழ் ஓங்குக. 

(அனைவரும் கலைந்து செல்கிறார்கள்) 

(திரை) 

பதினொன்றாம் காட்சி 

(மரிக்கொழுந்து வீட்டுத் தோட்டம். மாலை நேரம்.) 

(உருத்திரங்கண்ணனாரும் மல்லிகையும் நின்று கொண்டிருக்கிறார்கள்.) 

உருத்திரங்கண்ணனார் : தென்றல் காற்று வீசுகிறது. அருகில் மல்லிகை… 

மல்லிகை : அதனால் புலவருக்குக் கிறக்கம் ஏற்படுகிறதோ?… எதையும் விசாரிக்காமல் புலவர் என்னைக் கடிமணம் புரிந்து கொண்டு விட்டீர்கள். 

உருத்திரங்கண்ணனார் : பள்ளத்தில் விழுந்து விட்டேன்… 

மல்லிகை : என்ன…? 

உருத்திரங்கண்ணனார் : இல்லை மல்லிகை. பள்ளத்தில் விழவிருந்த என்னை நீதான் தடுத்தாய் என்று சொல்ல வந்தேன்.என்னவோ… விசாரிக்காமல் என்று சொன்னாயே… 

மல்லிகை : எனக்கு சமையல் தெரியுமா? வீட்டு வேலைகள் தெரியுமா என்றெல்லாம் விசாரிக்காமல் திருமணம் செய்து கொண்டு விட்டீர்கள். தங்கள் பாடு இனி திண்டாட்டம்தான். 

உருத்திரங்கண்ணனார்: அப்படியா உணவுக்கு என்ன செய்வது? 

மல்லிகை : மரகதம்தான் துணை. 

உருத்திரங்கண்ணனார் : அவள்தான்… அவர்தான் செல்வனாருக்குத் துணைவியார் ஆகி விட்டாரே. 

மல்லிகை : வேளாவேளைக்கு செல்வனார் வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்வோம். 

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து புலவர் தாமோதரனார் வந்து நிற்கிறார். இவர்கள் பேசுவதைக் கேட்கிறார். முல்லையும் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறாள். தாமோதரனாரின் தோளைத் தட்டுகிறாள்.) 

முல்லை : அவர்கள் தனியாகத் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு என்ன செய்கிறீர்கள்?…ஒட்டு கேட்கிறீர்களா? 

தாமோதரனார்: நண்பா… திருமணம் ஆனதும் மனைவி மிரட்டுவாள் என்று நீ சொல்லவே இல்லையே… 

உருத்திரங்கண்ணனார் : எனக்கு மட்டும் முன்கூட்டியே தெரியுமா என்ன?… தாமோதரா… 

(தாமோதரனார் யோசிப்பதுபோல் நிற்கிறார்.) 

முல்லை: என்ன அத்தான் யோசனை? 

தாமோதரனார் : இல்லை. பெண்கள் பக்கமே திரும்பாமல் இருந்த என் மாமன் புதல்வர் உருத்திரங்கண்ணனாரை உன் தங்கை எப்படி மயக்கினாள் என்று நான் யோசிக்கிறேன்… 

முல்லை : மயக்கினாள் என்ற வார்த்தையை நான் ஆட்சேபிக் கிறேன். அவள் வளைத்துப் போட்டு விட்டது போல் கூறுகிறீர்கள்… 

தாமோதரனார் : உண்மை அதுதானே… 

முல்லை : என்ன…. 

தாமோதரனார் : சரி. புலவரை எப்படி வசீகரித்தாள் ஈர்த்தாள் என்று யோசிக்கிறேன். 

முல்லை: நீங்கள் யோசித்துக் கொண்டே இருங்கள். அவர்கள் தனிமையில் பேசிக் கொள்ளட்டும். வாருங்கள். 

தாமோதரனார் : நாம் பேசுவதற்கு வேறு இடம் இருக்கிறதா? 

முல்லை : இருக்கிறது. சமையலறை. நான் சமைக்கிறேன். நீங்கள் உடன் இருங்கள். ஒத்தாசை செய்யுங்கள். பேசிக் கொண்டிருங்கள். 

உருத்திரங்கண்ணனார் : நண்பா. நாம் மோசம் போய் விட்டோம். 

தாமோதரனார் : திருமணமே ஆகிவிட்டது. இதற்குமேல் வேறு என்ன மோசம்… முறைக்காதே முல்லை. நண்பன் என்ன சொல்கிறான் என்று கேட்போம். 

உருத்திரங்கண்ணனார் : இவர்கள் இருவரும் வாழ்நாளில் அடுப்பங்கரை பக்கமே சென்றதில்லை என்ற உண்மையை என் மனைவி இப்போதுதான் கூறுகிறாள். இவர்களுடன் எப்படி இல்லறம் நடத்தப் போகிறோம்? 

தாமோதரனார் : என் கொழுந்தியாளின் நேர்மையைப் பாராட்டுகிறேன். என் மனைவி அதைத் தெரிவிக்கவே இல்லை. சமையலறைக்கு வாருங்கள் உடன் இருங்கள் என்கிறாள். 

(மரிக்கொழுந்துவும் தளபதியும் வருகிறார்கள்.) 

மரிக்கொழுந்து : சமையல் உணவு பற்றி எல்லாம் கவலை வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லுங்கள் மருமக்களிடம். 

தளபதி : அதுதான் நீ கூறிவிட்டாயே… இளஞ்சோடிகள் மாலை நேரத்தில் ஏகாந்தமாகப் பொழுதைக் கழித்து விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடுங்கள். நாங்கள் போகிறோம் வா… போவோம். அவர்கள் பேசி மகிழட்டும். 

உருத்திரங்கண்ணனார் : தளபதியாரே. அரண்மனை இரகசியங்கள் அறிந்த உமக்கு ஓர் இரகசியம் தெரியவில்லை. 

தளபதி : என்ன…? 

தாமோதரனார்: நீர் இப்போது மாமனராகி விட்டீர். சொல்லாமல் மறைக்க முடியாது… 

தளபதி : சொல்லுங்கள். 

உருத்திரங்கண்ணனார் : எங்கள் மாமியார் தங்கள் துணைவியார் அவர்கள், சமையலறை பக்கம் சென்று பல வருடங்கள் ஆகி விட்டன… 

(தளபதி அய்யிய்யோ என்று மயங்கி விழுவது போல் நடிக்கிறார். மரிக்கொழுந்து வெட்கப்படுகிறாள். இளஞ்சோடிகள் சிரிக்கின்றனர்) 

(விளக்குகள் அணைந்து மீண்டும் ஒளிர்கின்றன) 

கட்டியங்காரன் தோன்றிப் பேசுகிறார் : போர் பற்றிய வழக்காடு மன்றம், மனித உறவுகள், மனித வாழ்வின் சில கூறுகள் ஆகியவற்றை ஒரு கற்பனை நாடகமாகப் புனைந்து கற்பனை மாந்தர்களாகத் தங்களிடையே உலா வரச் செய்தோம். மனித குலம் வன்முறைக்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்ட முனைந்தோம். சுவைத்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். அன்பு வாழ்க! அன்பு வெல்க! உலகம் அமைதித் தாயின் மடியில் தவழும் குழந்தைபோல் மாறும் காலம் தோன்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். நன்றி. வாழ்க வளமுடன். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு! 

(கைகூப்புகிறார்) 

(நிறைந்தது) 

– அமைதிப் புறா (நாடகம்), முதற் பதிப்பு: ஜூலை 2013, கௌரி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *