சென்னையிலிருந்து புறப்பட்ட தன்பாத் எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த மாதப்பனுக்கு, தாம் போய்ச் சேர வேண்டிய இடம் விபரீதங்கள் நிரம்பியதாக இருக்கும் என்று உறுதியாகப்பட்டது. டாடா நகரில் இறங்கி, பிறகு கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள பிர்காம் நகருக்கு அவன் போக வேண்டியிருந்தது. ஜார்க்கண்ட் மாநிலக் காவல் துறையே திணறிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னையில், தாம் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும் என மாதப்பனுக்கு ஆயாசமாக இருந்தது.
தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு புகழ்பெற்ற துப்பறியும் நிறுவனத்தின், சென்னைக் கிளையில் பொறுப்பான பதவி வகிப்பவன்தான் மாதப்பன். அந்நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவரும் சென்னை கிளையின் பொறுப்பாளருமான மருதநாயகம், சிக்கலான இந்த ப்ரகாம் கேஸை அவன் வசம் ஒப்படைத்து இருந்தார்..
ஏற்கெனவே 2000ம் வருடம், பிப்ரவரி மாதக் கடைசியில் பிர்காம் வந்தது அவன் மனத்தில் நிழலாடியது. அப்போது அவனை அங்கு அனுப்பியதும் இதே மருதநாயகம்தான்.
“மாதப்பா! பிர்காம் கேள்விப்பட்டியிருக்கியா?’ என்று பேச்சை ஆரம்பித்தார் மருதநாயகம்.
“தெரியும் சார். அங்க ஒரு இரும்புச் சுரங்கம் தோண்டுறதுக்கு, தனியார் நிறுவனத்துக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்த விஷயம்தான் இப்ப பத்தி எரியுதே! அந்த பிர்காம்தானே? நாலு வருஷம் முன்னால இதே சமயத்துல அங்க துப்பாக்கிச் சூடெல்லாம் நடந்து ஏகப்பட்ட விவசாயிங்க சுட்டுக் கொல்லப்பட்டாங்களே? அந்த பிர்காம்தானே?’
“ஆமாம்பா! அங்கே இரும்புச் சுரங்கம் ஒண்ணு வரப் போகுது. அதுக்கு ஜனங்ககிட்ட இருந்து பெரிய அளவுல எதிர்ப்புக் கௌம்பியிருக்கு. நாலு வருஷமா போராடிக்கிட்டிருக்காங்க. ஆனா அவங்களுக்குள்ளாகவே சிலரை பணத்தாசை காட்டி சுரங்க கம்பெனி தன் பக்கம் இழுந்துக்கிட்டது. இன்னும் கொஞ்சம் பேருதான் எதிர்ப்புத் தெரிவிச்சுக்கிட்டு இருக்காங்க.’
“அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?’
“மாதப்பா! முதல்ல நீ அங்க ஒரு கூலித் தொழிலாளி மாதிரி போயி, ஜனங்களோட ஒண்ணா கலந்து பழகணும். அந்தச் சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பா இருக்கிறவங்கள அடையாளம் கண்டுபிடிக்கணும். அவங்ககிட்ட நைச்சியமா பேசி மெல்ல மெல்ல சுரங்கத் திட்டத்துக்கு ஆதரவா மாத்தணும். முடியாத பட்சத்தில் அவங்க சமுதாயத் தலைவர்களை கன்வின்ஸ் பண்ணனும்.’
“சார்! இதுக்கெல்லாம் அவங்க மசியலைனா…?’ என்று இழுத்தான் மாதப்பன். “அதைப் பத்தி நீ கவலைப்படாதே. அவங்களை என்ன பண்ணணும்னு கம்பெனிக்குத் தெரியும்!’ என்று சொல்லிவிட்டு மர்மமாகச் சிரித்தார் மருதநாயகம்.
“1996ல் நடந்த துப்பாக்கிச் சூடு மாதிரி எதுவும் இந்த 2000த்திலும் நடந்திராம பக்குவமா வேலையை முடிக்கணும்கிறது மேலிடத்து உத்தரவு.’
ரயில் வேகமெடுத்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்க, மாதப்பனின் மனது 2000ம் ஆண்டில் பிர்காமில் நடந்த நிகழ்ச்சிகளையே வட்டமிட்டது.
நெல்லையும் முட்டைக்கோஸையும் கொத்தமல்லியையும் பச்சைப் பசேலெனச் சாகுபடி செய்த விவசாயிகள், தங்கள் சொந்த மண்ணிலேயே அன்னியப்பட்டுப் போய், சுரங்கத் தொழிலாளர்களாகக் கூலிக்கு வேலை செய்து கொண்டிருந்தனர். சுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டு மஹுவா மர நிழலில் கயிற்றுக் கட்டிலில் தூங்கியவர்கள், இன்று புழுதிப் புயலுக்கு நடுவில் இரண்டே அறைகள் கொண்ட ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.
அந்தச் சூழ்நிலையில்தான் மாதப்பன் அங்கே சென்று சேர்ந்தான். அந்தப் பழங்குடி மக்களின் தலைவரான ஹோரோ ஷெராய் சொன்னால், அதைத் தட்ட மாட்டார்கள் என்று கேள்விப்பட்டு அவரை அணுகினான் மாதப்பன்.
மாதப்பன் ஹோரோ ஷெஹாயைப் பார்க்கப் போனபோது ஏறக்குறைய அந்தி நேரமாகிவிட்டிருந்தது. காற்று “ஊய் ஊய்’ என்று சுழன்றடித்துக் கொண்டிருந்தது. மழை வரும் அறிகுறியோடு இடிச் சத்தமும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது. சிறிய குடிசை வீட்டிலிருந்து வெளிவந்த ஹோரோ ஷெஹாய்க்கு சுமார் அறுபது வயதிருக்கும். கருத்த மேனி; மார்பு வரை தொங்கிக் கொண்டிருந்த அடர்ந்த வெண்மையான தாடி. ஒன்று கூடி நரைத்துப் போயிருந்த புருவங்கள். தீட்சண்யமான கண்கள். கூர்மையான நாசி எனப் பார்ப்பவர்கள் மனத்தில் அச்சம் கலந்த மரியாதையை ஏற்படுத்தும் தோற்றத்துடன் இருந்தார் ஹோரோ ஷேஹாய். தனக்கு ஓரளவு தெரிந்திருந்த அந்தப் பழங்குடி மக்களின் குர்மாலி மொழியில் மாதப்பன் அவருடன் உரையாடினான்.
“நீங்க சொன்னா உங்க ஜனங்க கேட்பாங்க. நிறைய பேருக்கு சுரங்கத் திட்டத்தின் மூலம் வேலை கிடைக்கும்,’ என ஆரம்பித்தான் மாதப்பன்.
ஹோரோ ஷேஹாயின் முகம் சினத்தைக் கக்கியது. “இப்பா நாங்க எல்லாம் வேலையில்லாமல் பிச்சை எடுத்துக் கொண்டா இருந்தோம்? நீங்க சாப்பிடுற அரிசியும் கோதுமையும் காய்கறிகளும் நாங்க போடுற பிச்சை,’ என உறுமினார். எவ்வளவோ தூரம் பேசிப் பார்த்தும் ஹோரோ ஷெஹாய் மசியவில்லை. கடைசியில் மாதப்பன் லேசாக மிரட்டும் தொனியில், “எப்படியும் மீதியிருக்கிற நிலங்களை சுரங்கத்துக்காக எடுக்கத்தான் போறாங்க. நீங்களாகப் பிரச்னை பண்ணாம கொடுக்கிறதுதான் நல்லது,’ என்றான்.
“இல்லாவிட்டால்?’
“அப்புறம் உங்க விருப்பம்,’ என்று சொல்லிவிட்டு மாதப்பன் புறப்பட எத்தனித்தபோது, ஹோரோ ஷேஹாயின் அடி வயிற்றில் இருந்து இடிமுழக்கம் போல் குரல் வெளிவந்தது.
“எங்களோட நிலத்தை எங்ககிட்ட இருந்து காணாம பண்ணிட்டு சுரங்கமா தோண்டறீங்க?’ என்று ஆரம்பித்த அவர், மாதப்பனுக்குப் புரியாத லிவுசுகோ என்ற மொழியில், “ஸக ரூபிஜலி வேஸ்மிலா டிஜ்கா ரம்பி கூட் வெராண்டி அமினுஷ்க் ப்முதே ரூபிஜலி வேஸ்மிலா வேஸ்மிலா,’ என்று சொல்லியபடி கீழே குனிந்து கைப்பிடி மண்ணை அள்ளி வானத்தை நோக்கி விசிறி எறிந்துவிட்டு குடிசைக்குள் போய்விட்டார்.
மாதப்பனுக்கு லேசாக கலக்கமாக இருந்தது. முழு விஷயத்தையும் மருதநாயகத்துக்குத் தெரியப்படுத்தினான். அடுத்த சில நாட்களிலேயே ஹோரோ ஷெஹாய் “ஒரு சாலை விபத்தில் இறந்ததாக’ செய்தி வந்தது. சுரங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மீது திருட்டு, போதைப் பொருட்கள் கடத்தல் எனப் பல வழக்குகள் பாய்ந்தன. ஒருவழியாக எதிர்ப்புகள் ஒடுக்கப்பட்டு பிர்காம் சுரங்கம் செயல்படவும் ஆரம்பித்து விட்டது.
எட்டு ஆண்டுகள் கழித்து, பிப்ரவரியின் கடைசி நாட்களில் மீண்டும் அதே பிர்காம் பயணம். மாதப்பனுக்கு லேசாக சலிப்பையே தந்தது.
தமது சூட்கேஸில் இருந்த அவர் கொடுத்த கோப்பினை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான் மாதப்பன்.
அந்தக் கோப்பின் மேல் “ரகசியம்’ என்று சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது.
ஏற்கெனவே ஒரு முறை அந்தக் கோப்பில் இருந்தவற்றைத் துப்புரவாகப் படித்து, தான் எடுத்து வைத்திருந்த குறிப்புக்களின் சுருக்கமான அட்டவணையை மறுமுறை படிக்கலானான் மருதப்பன்.
1. தேஷ்முக் பாண்டே; லையசன் ஆஃபீசர்; வயது 44. சொந்த மாநிலம் ஒரிசா. ஊர் ரெமுண்டா. மனைவி மற்றும் பள்ளிக்குச் செல்லும் 12 வயதான மகள். லேசாக மதுப் பழக்கம் உண்டு. காணாமல் போன நாள்: 27.11.2007, செவ்வாய்க் கிழமை.
2. சிவபாலன்; நில அளவையாளர்; வயது 36. தனிக்கட்டை. சொந்த மாநிலம் தமிழ்நாடு. ஊர் நாங்குநேரி. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. காணாமல் போன நாள்: 24.12.2007, திங்கட்கிழமை.
3. தேவகி அப்பச்சன்; விரிவாக்க ஆலோசகர்; வயது 40. விவாகரத்தானவர். சொந்த மாநிலம் கேரளா. ஊர் ஆலப்புழை. காணாமல் போன நாள்: 18.02.2008, வெள்ளிக்கிழமை.
“இதைச் சாதாரணமான மேன் மிஸ்ஸிங் கேஸ்னு அலட்சியமாக கையாள முடியாது மாதப்பா! இதில ஏதோ மர்மம் இருக்கு. உனக்குக் கொடுத்திருக்கிற வேலை இந்த மூணு சம்பவங்களும் எதேச்சையானதா அல்லது இந்த முணு சம்பவத்துக்குள்ளேயும் ஏதாவது தொடர்பு இருக்கானு கண்டுபிடிக்க வேண்டியதுதான் புரிஞ்சுதா?’
பிர்காம் போய், சுரங்கம் இருந்த பகுதியை அடைந்தபோது, எட்டு ஆண்டுகளில் நடந்திருந்த மாற்றங்கள், அவனை ஆச்சர்யப்படுத்தின. மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச பசுமையும் காணாமல் போயிருந்தது. பெரிய பெரிய எந்திரங்கள் ராட்சச ஒலியுடன் பூமியைத் தோண்டிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே லையாடா மற்றும் சைடன்பூர் மலைத் தொடர்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டிருந்தன. ஸ்வர்ணரோகா மற்றும் கீல் நதிகள் திசை திருப்பி விடப்பட்டிருந்தன. சால், பலாஷ், கம்ஹார், மூங்கில் போன்ற மரங்கள் எங்கே போனதென்று தெரியவில்லை.
தமக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கிய மாதப்பன் அன்றே தமது வேலையை ஆரம்பித்தான். காணாமல் போன மூவருடைய முழு விவரங்களையும் சேகரித்து, அவர்கள் தொடர்புடைய அத்தனை பேரிடமும் துப்புரவாக விசாரித்தான்.
மூவருக்கும் நிச்சயம் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன? என அவன் மனம் அலைபாய்ந்தது. காணாமல் போனவர்களுடைய சுய விவரங்களை அணு அணுவாக ஆராய்ந்தான்.
சுரங்கத்துக்கு அனுமதி அளித்த அரசு ஆணையை எதேச்சையாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவனுக்கு ஒரு பொறி தட்டியது. “அட இப்படியும் இருக்குமா?’ என்ற சந்தேகம், அவனுக்கு எல்லை மீறிய அதிர்ச்சியையும் கிலேசத்தையும் ஏற்படுத்தியது.
உடனடியாக அந்த மூன்று பேருடைய பயோடேட்டாவைம் மறுபடியும் பார்த்தான். அவன் நினைத்தது கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. அரசு ஆணை வெளியிட்ட தேதி 29.02.1996. காணாமல் போயிருந்த மூவரின் பிறந்த வருடங்கள் நேறாக இருந்தாலும் தேதியும் மாதமும் ஒன்றாக இருந்தன. மூவர் பிறந்ததும் – லீப் வருடத்தில் – பிப்ரவரி 29 அன்று என்பதை ஆவணங்கள் தெரிவித்தன. மாதப்பனின் மனத்தில் ஹோரோ ஷெஹாயின் முகம் ஒரு வினாடி தோன்றி மறைந்தது.
அந்தச் சமயத்தில் அவனது செல் ஃபோன் அலறியது.
“அப்பா! பிறந்தநாள் வாழ்த்துக்களை அட்வான்ஸா சொல்றேன்! நாளைக்கு பிப்ரவரி 29. உங்க பிறந்த நாள். மறந்துடாதீங்க. சீக்கிரமா வாங்கப்பா,’ என்ற மகன் ரத்னேஷ் குதூகலத்துடன் சொல்வதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் மாதப்பன்.
“காணாம போனவர்களைக் கண்டுபிடிக்க, பிர்காம் போன மாதப்பனுக்கு என்ன ஆச்சு? எத்தனை நாளாச்சு! ஒரு தகவலையும் காணோமே!’ என்று சென்னையில் பரிதவித்துக் கொண்டிருந்தார் மருதநாயகம்.
– நவம்பர் 2011