திருடன் வந்த வீடு!

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,880 
 

இரவு நேரம் தெரு மிக அமைதியாக இரந்தது. பகலிலேயே ஆர்ப்பாட்டம் இல்லாத தெரு. இரவில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. என்னால் தான் இந்த அமைதியை ரசிக்க முடியவில்லை. போன மாதமாக இருந்திருந்தால் கதையே வேறு! இப்படிப் பாதி ராத்திரி தூங்கமுடியாமல் தவிப்பது சமீபத்திய நிகழ்வு.

திருடன் வந்த வீடுஇரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டுக்குக் குடி வந்த பொழுது எனக்குத் தலை கால் புரியவில்லை. வீடு மிகவும் அழகாக இரந்தது மட்டும் காரணம் அல்ல. பக்கத்திலேயே கோயில். நடக்கும் தொலைவில் பல்பொருள் அங்காடி மற்றும் நூலகம், குழந்தை அருணை அழைத்துச் செல்ல சிறு விளையாட்டுத் திடல் என ஏதோ என் தேவைகள் எல்லாம் கேட்டுக் கேட்டு அமைத்தது போல் இருந்தது.

வீட்டுக்குக் குடி வந்த நான்கு வாரங்கள் ஆனபிறகு அருகில் இருந்த சீன மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அன்பாகச் சிரித்தாலும், கதவைத் திறக்கவில்லை. வலப் பக்க வீட்டில் லில்லி என்ற சீனப் பெண் தன் குடும்பத்தோடு வசித்தாள். அவளும் அவளது கணவரும் நன்றாகப் பேசினார்கள்.

குழந்தை அருமை தினமும் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டே தெருவில் நடந்து செல்வேன். மறுசுழற்சிக்கான பழைய பொருட்களை வாங்க சைக்கிளில் வரும் கராங்குனி தாத்தா, குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும் பணிப்பெண்கள், செல்ல நாய்களைத் தங்கள் குழந்தையைப் போல் நடத்தும் வட்டார வாசிகள் என்று எல்லா முகங்களும் பழக ஆரம்பித்தன. பலரைப் பார்த்துப் புன்னகைக்கும் அளவுக்குப் பழக்கம் நாளடைவில் வலுப்பெற்றது. அதிகாலையில் வாகனச் சத்தங்கள் இல்லாமல் பறவைகளின் இனிய அரவம் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். “ஒரு ராஜகுமாரி மாதிரி இருக்கேங்க’ என்று சொன்ன என்னைப் பார்த்த கணவர் ரவி, “இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா படல?’ என்றார். இருந்தாலும், என் குதூகலம் அவரை சந்தோஷப்படுத்தியது எனக்குத் தெரியாமலில்லை.

அப்பொழுதுதான் என் சிறிய அரண்மனைக்கு ஓர் அழையா விருந்தாளி ரகசியமாக வந்து போனான். பெரிதாக ஒன்றும் திருடு போகவில்லை. என் கைப்பையைத் திறந்து இருநூறு வெள்ளிப்பணமும் என் பழைய கைப்பேசியும் எடுத்திருந்தான். இருந்தாலும், என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி நடந்திருக்கும்? நாம் உறங்கும் பொழுது வீட்டுக்குள் ஒருவனது நடமாட்டமா? எங்களுடைய அஜாக்கிரதையா? இல்லை, அவனது சாமர்த்தியமா? ஏதோ வீடே களங்கப்பட்டு விட்டது போல் உள்ளுக்குள் துக்கம் பொங்கியது. சட்டென்று சுற்றி இருந்த அனைத்தும் அன்னியமாக மனத்துள் கலக்கத்தை ஏற்படுத்தியது.
காவல் நிலையத்துக்குப் போய் முறையாகப் புகார் கொடுத்ததும், வீட்டுக்கு போலீஸ் வந்தது. துப்புத் துலக்க கேள்விகள் பலவற்றைக் கேட்டனர். மாடிக்கும் புற வாசலுக்கும் சென்று ஏதேதோ சோதித்தனர். எங்கிருந்து வீட்டுக்குள் நுழைந்து எந்த வழியாக வெளியேறியிருப்பான் என்பதை ஓரளவுக்கு யூகித்தனர். பாதுகாப்புக்காகச் செய்ய வேண்டிய சில ஆலோசனைகளைச் சொன்னார்கள். “தனி வீட்ல இருக்கும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்கணும் லா,’ என்று அக்கறையுடன் கூறிவிட்டு, “திருடனைப் பிடிச்சிரலாம்!’ என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். அண்டை அயலில், “இதுவரை இந்தத் தெருவில் இதுபோல் நடந்ததேயில்லை, தெரியுமா?’ என்றார்கள். என் வருகைக்காகத்தான் திருடன் காத்துக் கொண்டிருந்தான் போலும்!

திருடன் வந்த முதல் நாள் தான் வீட்டில் பல சின்ன மராமத்து வேலைகள் செய்யவென்று ஏற்பாடு செய்திருந்தோம். ஒரு சீன ஆடவரும் இரண்டு இந்தியத் தொழிலாளிகளும் வந்திருந்தார்கள். “ஒரு வேளை விளக்குகளைச் சரிபார்த்த அந்த இந்தியர்களாக இருக்குமோ? ச்சே! நமக்குன்னு வச்சிருந்த புது காஃபி டிகாக்ஷன்ல காஃபி எல்லாம் போட்டுக் கொடுத்தேனே! யாரையும் இந்தக் காலத்துலே நம்ப முடியலையே,’ என்று புலம்பியது மனம்.

முதல் இரண்டு நாட்கள் தூக்கமே வரவில்லை. படபடப்பாக இருந்தது. ஆறு மணிக்கே எல்லா கதவுகளையும் பூட்ட ஆரம்பித்தேன். கதவுகளின் மேல் நாற்காலிகளைப் பாதுகாப்புக்குச் சாய்த்து வைத்ததைப் பார்த்து ரவி சிரித்தார்.

“கலா, நாம் இருப்பது ஒரு சிட்டி. இதெல்லாம் அப்பப்ப நடக்கத்தான் செய்யும். உங்க அண்ணா சிகாகோ போன சமயம் மக்கிங் நடக்கலையா? இதுக்குப் போய் இப்படிப் பயந்து சாகாதே,’ என்றார். கேட்கும் பொழுது தைரியமாகத்தான் இருந்தது. இரவானால் ஒரு பதற்றம். இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ இது மறைய?

வெளியே செல்வது குறைந்து போனது. பூட்டிய வீட்டைத் திறந்து கொண்டு நுழையும் பொழுது ஒரு சஞ்சலம். வெளியில் இருந்து வீட்டை பாற்க்கும்பொழுது இதுவரை மிகவும் பழகிய ஒருவர் வேற்றாளாக மாறியது போல் ஓர் உணர்வு. சாலையில் யாரையும் பார்த்துச் சிரிக்கத் தோன்றவில்லை. அவர்கள் என்னைப் பாவமாகப் பார்ப்பது போல் தோன்றியது. புதிதாக யாராவது சென்றால் “இவன் தான் திருடனோ, நம்ம வீட்டில் இன்னொருமுறை திருட வரலாமா என்று உளவு பார்க்க வந்து இருக்கானோ அல்லது என்னைப் பார்த்து உள்ளுக்குள் இளக்காரமாகச் சிரத்துக் கொண்டிருக்கிறானோ’ என்றெல்லாம் கற்பனை ஓடியது. பணிப்பெண்களைப் பார்த்தால் “ஒரு வேளை இவள் தான் யாருக்காவது தகவல் கொடுத்து நம்ம வீட்டுக்குத் திருடனை வரச் செய்தவளோ?’ என்று நினைத்தேன். ஒரு மாலை வீட்டுக்கு அருகே மழைக்கு ஒதுங்கியவனைப் பார்த்துப் பயந்து, பக்கத்து வீட்டு லில்லியின் கணவனை சீன மொழியில் அவனைத் துருவித் துருவி விசாரிக்க வைத்ததைப் பார்த்து ரவி கோபித்துக் கொண்டார்.

பக்கத்து வீட்டுப் பாட்டி அதிசயமாக என்னைக் கூப்பிட்டு இப்பவும் கதவை திறக்காமல் “திருடன் வந்தான்னு கேள்விப் பட்டேன். நீ வரதுக்கு முன்னாடி அந்த வீட்டுலே ஒரு சீனப் பெண்மணியும் அவளோட வேலைக்குப் போகாத மகனும் இருந்தாங்க. அவங்க மூணு கறுப்பு நாய்கள் வளர்த்தாங்க. ராத்திரி ஆனா ஏதேதோ பூஜை எல்லாம் செய்வாங்க. நீ உங்க கோயில் பூசாரியைக் கூப்பிட்டு ஒரு பூஜை செஞ்சா எல்லாம் சரியாகிவிடும்,’ என்றார்!

இரண்டே மாதத்தில் என் அரண்மனை சந்திரமுகி பங்களா ரேஞ்சுக்குச் சென்றதைப் பார்த்து ரவிக்குச் சிரிப்பு தாங்கவில்லை. “பைத்தியம்! இது முன்னாடி இருந்தவங்க என்ன செஞ்சா நமக்கென்ன? நீ தினம் கடவுளைக் கும்பிடறே இல்லை. அது போதும்’ என்றார்.

வீட்டுக்கு அலாரம் போடுங்கள் என்று நண்பர்கள் யோசனை சொன்னார்கள். அதைப் பொருத்த வந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என் பயத்தைப் பார்த்து “மோஷன் டிடெக்டர் அலார்ம்’ அதாவது யாராவது இரவில் நடந்தாலே அபாய அறிவிப்பொலி ஒலிக்கும்படி செய்து விட்டுச் சென்றார்கள். இரண்டே நாட்களில் அதன்மேல் ஒரு பல்லி ஓடியதால் அலார்ம் அலறி எங்கள் தெருவில் அனைவரையும் எழுப்பியது தனிக்கதை! அதனால் அதையும் எடுத்தாகிவிட்டது.
அன்றிலிருந்து இப்படித்தான் ஏதாவது கொஞ்சம் சத்தம் கேட்டால்கூட, தூக்கம் போய் விடும். ஜன்னலருகே நின்றபடி சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். ரவியின் தூக்கத்தைக் கலைக்காமல் மெதுவாக வீட்டுக்குள் நடைபோட்டுக் கொண்டிருப்பதும் வழக்கமானது.
அடுத்தநாள் காலை, போலீசிடமிருந்து திருடனைப் பிடித்துவிட்டதாகத் தகவல். உடனே காவல் நிலையத்தக்கு விரைந்தோம். அப்பொழுது சிறு சிறு திருட்டுகளைச் செய்து வரும் ஒரு சீன நடுத்தர வயதானவர் என்ற தகவல் மட்டும் சொன்னார்கள். கூடிய விரைவில் மற்ற தகவல்கள் தருவதாகச் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

“ஏங்க இரு நூறு வெள்ளியும், ஒரு ஓட்ட ஃபோனும் எடுத்ததுக்கு ஆறு சவுக்கடியாமே? பாவங்க! அவனுக்கு என்ன கஷ்டமோ? நாம வேணா இந்த முறை மன்னிச்சு விட்டுடுங்க அப்படின்னு எழுதிக் கொடுத்துடலாமா?’ என்று கேட்ட என்னைப் பார்த்த என் கணவர் சிரிக்க ஆரம்பித்தார்.

– ரம்யா நாகேஸ்வரன் (நவம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *